Monday, May 19, 2014

ஊர் சுற்றியதில் நமக்குக் கிடைச்ச கோவில்களில் சில.

 சாயங்களில் என்ன  வேண்டாத  ரசாயனம்  இருக்கோ.....இளம் தோலுக்கு  இப்படியெல்லாம் பூசி வச்சா நல்லதில்லைன்னு சொன்னதும், தாய்க்குலங்கள்,  தலையைச் சொறிஞ்சுக்கிட்டு கை நீட்டறாங்க.  அடுத்த வருசம் அரிதாரம் பூசிக்க ரெடியா இன்னும் சிலர் இடுப்பில்.  பாவம் பிஞ்சுகள்:(   அதிலும்  நீலகண்டனை,  நீலவண்ணக் கண்ணனாக்கி புலித்தோலும்  உடுத்தி விட்டுருக்காங்க.   ஹரனும் ஹரியும் ஒன்னுன்னு  நினைச்சுக்கிட்டேன்.  அடிக்கும் வெயிலில் உறுத்தும் அலங்காரங்களுடன்.........  சின்னப்பிஞ்சு ஒன்னு க்ரீடம்  சூடி இருந்தது  ரொம்ப அழகு!கோவில்கடைகளைப்போலவே கரையில் இருந்து விதவிதமான கடைகள். பயணிகள் நடமாட்டம்  இங்கே எப்போதுமே  இருக்கு என்பதால் என்னவோ விற்பனை  நடந்துகிட்டுத்தான் இருக்கு. கரையை ஒட்டியே இருக்கும் கோட்டைக்குள் போகணும் என்று தோணலை. நம்ம வெங்கட் நாகராஜ் அதைப்பற்றியெல்லாம் விலாவரியா எழுதி இருக்கார். நூல் பிடிச்சுப்போகலாம்.  ரொம்ப சுவாரஸ்யம்:-)


படே ஹனுமான் ஜி கோவிலுக்கு வந்திருந்தோம்.  ட்ரைவர் குமாரிடம்  அக்கம்பக்கம் இருக்கும் கோவில்களுக்குப் போயிட்டு அப்புறம் ஊருக்குள் போகணும் என்றுசொல்லி இருந்தோம். கோவிலில் இப்போது தரிசன நேரம் இல்லை.  ஆனாலும் எட்டிப் பார்க்கவிட்டாங்க. மாலை ஆரத்திக்கான அலங்காரங்கள்  நடந்துக்கிட்டு இருக்கு.   படே ஹனுமான் கொஞ்சம் பாதாளத்துலே இருக்கார்!  மாடியில் பால்கனியில் இருந்து  கீழே முற்றத்தை எட்டிப் பார்ப்பதுபோல் ஒரு அமைப்பு.


படுத்திருக்கும் ஹனுமன் என்று சொல்றாங்க.  ஆனால்  எனக்கென்னவோ  இவர் முற்றத்தில்  மல்லாந்து  கிடந்த கோலம்தான்!    20 அடி நீளம், 8 அடி அகலமுமான,  ப்ரமாண்டமான சிலையைக் கீழே கிடத்திதான் வச்சுருக்காங்க.  ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு இருந்தவரைக் கண்டு பிடிச்சுருக்காங்க.  நகர்த்த முடியாமல் அங்கேயே கோவிலை எழுப்பி இருக்காங்கபோல! பெரிய கதையுடன் வீர முத்திரை காமிக்கிறாராம்.  ஒரு கால் தூக்கி ஓடுவது போல ஒரு போஸ்.    நல்ல பெரிய உருவம் என்றாலும்  அலங்கரிக்கும் ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாப் போவதால்  முழு உருவமும் ஒரே சமயம் தெரியலை:(  மேலும் இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை:(  சுட்டபடம் ஒன்னு போட்டுருக்கேன், பாருங்க.   கரையில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருந்தாலும் நதியில்  வெள்ளப்பெருக்கு வந்தால்  இந்தக் கோவிலையும் விட்டு வைக்காதாம்!


கோவில்கடைகளுக்கிடையில் ஹெல்த் ஃபுட் கடை ஒன்னு இருந்துச்சு. முளைகட்டிய பயிறுகளும், ஸாலட் கீரை, பொடியாக  அரிஞ்ச  முட்டைக்கோஸ், தக்காளி வகையறாக்களுடன்  ஒரு கிண்ணம் பத்து ரூபாய் என்றார் கடைக்காரர்.  பார்க்க ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்.

அடுத்து நம்ம சங்கரமடம் கோவில்வழியாப்போனோம். கோவில் திறக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும். இப்போ மணி மூணுதான்.  ஸ்ரீ ஆதிஷங்கர் விமான் மந்திர் என்றுபோர்டு வச்சுருக்காங்க. அஞ்சு நிலைகளும் குட்டியான  தென்னிந்தியவகை கோபுரமுமா பார்க்கவே நல்லா இருக்கு. 130 அடி உயரக் கட்டிடமாம்.

மன்காமேஷ்வர் கோவிலுக்கு அடுத்த விஸிட். ஆதிசங்கரர் தன் கைப்பட ஸ்தாபிச்ச  சிவலிங்கம் என்றுசொல்றாங்க.  தனியா ஒரு சந்நிதி யில் ஜகத்குரு  சங்கராச்சார்யா ஸ்வாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி  ஜி மஹராஜ்  என்று  ஒரு படம் பூமாலைகள் அலங்காரத்தோடு. எனக்கு நம்ம பக்கத்து காமகோடி பீடாதிபதிகளைத்தான் தெரியும் (!!)  என்பதால்  இவர் யாரோன்னுதான் இருந்துச்சு.  யமுனை ஆற்றை ஒட்டியே சரஸ்வதி படித்துறையில் இருக்கு இந்தக் கோவில். சின்னசின்னதா  தனித்தனியா  மண்டபம் போல் சந்நிதிகள்.

திங்கள்கிழமை இங்கே தரிசனம் ரொம்ப விசேஷம் என்பதால் கொஞ்சம் கூட்டம் இருந்துச்சு. தெரியாமல் நாமும் திங்கட்கிழமை வந்துருக்கோம் பாருங்களேன்!  மூலவர் பெயரிலேயே அவர்  சக்தி தெரிஞ்சுருது. நம்ம மன இச்சைகளைப் பூர்த்தி செஞ்சுரும்  ஈஸ்வரன்.


ஒரு தொட்டியில் வாழைக்கன்றுகள் சில. நடுவில் ஒரு பூக்குவியல். தலச்செடியோ  என்னவோ தெரியலை. அங்கேயும்  பக்தர்கள் நின்னு வணங்கிட்டுப்போறாங்க. (தலவிருட்சம் தனியா  கம்பி வேலிக்குள் இருக்கே!)

இன்னிக்கு கோர்ட் லீவா என்ன? நிறைய வக்கீல்களை இங்கே பார்க்க முடிஞ்சது!  வட இந்தியக்கோவில்களில் நாமே மூர்த்தங்களைத் தொட்டு சாமி கும்பிடலாம் என்பதால்  பக்தர்கள் பால், கங்கை நீர், மலர்கள் இப்படிக் கொண்டு வந்து அபிஷேகம் செஞ்சு வணங்கிட்டுப் போறாங்க.  காலையில் இருந்து  பூஜிக்கப்பட்ட மலர்களின் குவியல் வெளியே  நிறையவே இருக்கு.


நகருக்குள் போனப்ப  ஒரு  பேனரில் நவக்ரஹ மந்திர்னு எழுதி இருந்ததைப் பார்த்துட்டு அங்கே போனோம்.  பெரிய வளாகம்! மாடர்ன் கோவில்.  புத்தம் புதுசுன்னுதான் சொல்லணும்.  2012 லே திறந்துருக்காங்க.  பதர்சட்டி ராம்லீலா கமிட்டியின் கைங்கர்யம். இந்த ஏரியாவையே ராம்பாக் (Rambagh ) என்றுதான் சொல்றாங்க. அலகாபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரொம்பக்கிட்டே இருக்கு.  ரெண்டே நிமிச நடை!

இந்த வளாகத்துக்குள்ளே அட்டகாசமான  கெஸ்ட் ஹவுஸ் கூட கட்டி விட்டுருக்காங்க.  வாசலில் வீணையுடன் சரஸ்வதி உங்களை வரவேற்கிறாள்.

ஸ்ரீ ராமருக்கு ஒரு கோவிலும்,  க(ட்) டூ ஷ்யாம் பாபாவுக்கு  ( Khatu Shyam Temple ) ஒரு கோவிலும்  நவகிரகங்களுக்கு ஒரு கோவிலுமா   இருக்கு இங்கே.  ராஜஸ்தானில் இந்த  Khatu Shyam Temple ரொம்பவே புகழ் வாய்ந்ததாம்.  இவர்  பீமனின் பேரன். பாரதப்போரில் பாண்டவர் சார்பில் போரிட்டார். அப்போ இவர் கழுத்து துண்டிக்கப்பட்டு ராஜஸ்தானில் சிகார் என்னும்  மாவட்டத்தில் போய் விழுந்துச்சாம்.  ரொம்பவே  பராக்ரமமும் தெய்வீகசக்தி படைச்சவருமா இவர் இருந்ததால் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் கடவுளா  வழிபடறாங்க.

இவரைப்பத்திக் கொஞ்சம் விசாரிச்சதில்........  ஒரு  அமேஸிங் ஸ்டோரி கிடைச்சது.  சுருக் இங்கே:-)

இவர் பெயர்  Barbarika.  தவமிருந்து அக்னி தேவனிடம் மூன்று அஸ்த்திரங்கள் வாங்கியவர்.  பாரதப்போருக்கு  இந்த மூணு அஸ்திரங்களுடன் மட்டும் வர்றார்.  அப்போ ஸ்ரீ க்ருஷ்ணர் இவரை பரீக்ஷை பண்ணனுமுன்னு  இவருடைய சக்திவாய்ந்த மூணு அஸ்த்திரங்களைப் பற்றி விசாரிக்க, இவரும்  முதல்  அஸ்த்திரம்  இவர்  என்னென்னவற்றை  அழிக்க நினைக்கிறாரோ அதைப் போய் வட்டமிட்டு குறிச்சு வச்சுரும். ரெண்டாவது அஸ்த்திரம் காக்க நினைப்பதை வட்டம் போட்டு குறிக்கும். மூணாவது   அழிக்கப்போட்ட வட்டத்தில் உள்ளதை முற்றிலும் அழிச்சுரும் என்றிருக்கார். இது உண்மையான்னு  சோதிக்கணுமுன்னு க்ருஷ்ணனுக்குத் தோணி இருக்கு.

 எதிரில் உள்ள அரசமரத்தைக் காமிச்சு இதன் இலைகளை ஒன்னுவிடாமல்  அழிக்க உன் முதல் அஸ்த்திரத்தால் குறிச்சு வை  என்றார்.
அஸ்த்திரம் விடுமுன் கண்மூடி த்யானிக்கும்போது , க்ருஷ்ணர், நைஸா ஒரு இலையை மட்டும் கிள்ளித் தன் காலடியில் ஒளிச்சு வச்சுக்கறார்.  அம்பு விட்டதும் அது  மரத்தின் இலைகளைப் பூராவும்  மார்க் செஞ்சுட்டு, க்ருஷ்ணரின் பாதத்தை வட்டமிடுது.  இதைப் பார்த்த  Barbarika, காலை எடுங்க. கீழே ஒரு இலை இருக்கணுமுன்னு சொல்ல,  வேற வழி இல்லாமல் க்ருஷ்ணர் காலைத் தூக்கவேண்டியதாப் போச்சு.  அஸ்த்திரத்தின்  பலம் என்னன்னும்  புரிஞ்சுருது அவருக்கு.

இப்படிப்பட்ட மாவீரனை  களப்பலியாக்கலாமுன்னு நினைச்சு  (நம்ம பக்கங்களில்  இதே சிச்சுவேஷனில் அரவானை களப்பலி ஆக்குன கதை உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கும்தானே?)  'பாண்டவர் வெற்றிக்காக உன் தலையைத் தியாகம்செய்'ன்னு கேட்டதும்  'சட்'னு தலையை வெட்டித் தந்துட்டாராம்!!! அதான் கேட்டவர்க்கு கேட்டபடி அருள்வார் என்பது!

இவருடைய அஸ்த்திரம் வட்டமிட்டதால்  கொஞ்சம் பலம் இழந்த அந்தப் பாதத்தில்தான்  க்ருஷ்ணரின் மறைவுக்குக் காரணமான  ஜராவின் அம்பு தைத்ததுன்னும்  சொல்றாங்க.  எப்படியெப்படி  கதைகளை பிணைச்சுருக்காங்கன்னு பார்த்தால்  நெஜமாவே ஆச்சரியமாத்தான் இருக்கு!  மகாபாரதம் ரியலி க்ரேட்!!!

ஸ்ரீ ராமர் கோவிலைச் சுத்தி ஹனுமனுக்குச் சிலைகள் வச்சுருக்காங்க. அந்தக்கூட்டத்தில் ஒரு கரடிக்கும் (ஜாம்பவான்!)  சிலை இருக்கு. ராமாயணக்காட்சிகள் சுவர்களில் புடைப்புச் சிற்பங்களா சூப்பரா இருக்கு.


வளாகத்தின் இடதுபுறம் கட்டிடவேலை நடக்குது.  அதன் மாடிக் கூரைக்குமேல்  கங்கை, ஆகாயத்தில் இருந்து இறங்கும் ஸீன் கட்டிட நீளத்துக்குச் செஞ்சு வச்சுருக்காங்க. 'கங்கா அவதாரண்'   இளைய தலைமுறையைக் கோவிலுக்கு வரச்செய்யணுமுன்னா கொஞ்சம் மாடர்ன் சமாச்சாரங்கள் வேணும்தானே!


ராம் ஷ்யாம் கோவில்கள் அமைஞ்ச கட்டிடத்தின்  மாடியில் இருக்கும் நவகிரகக்கோவிலை நாம் போய்ப் பார்க்கலை. சாயங்காலம் திறப்பாங்கன்னு காவல்காரர் சொன்னார். நமக்குத்தான் நிக்க நேரமில்லையே:(

பொழுது சாயுமுன் வேறென்ன கிடைக்குதுன்னு பார்க்கலாம்.

தொடரும்................  :-))))


11 comments:

said...

நம்மூர் சாமிகளும் வடக்கத்திச் சாமிகளும் வேற வேற போல. அந்த ஊர் சாமிக்கேல்லாம் சக்தி நெறைய போல. மக்கள் தொட்டா தீட்டெல்லாம் ஆக மாட்டேங்குதே! என்ன இருந்தாலும் வடக்கத்திய சாமிக்கு துடி சாஸ்திதான்.

பார்பாரிக்கா கதை நல்லாத்தான் இருந்துச்சு. எத்தனையெத்தனை கதைகள் இப்படி மகாபாரதத்தைச் சுற்றி. என் மண்டைக்குள்ள கூட ஒரு கற்பனை இருக்கு. எழுத முடியுதான்னு பார்ப்போம்.

said...

ஆம். மகாபாரதத்தின் கிளைக்கதைகள் பிணைக்கப்பட்ட விதம் பிரமிப்புதான்.

வேடமிட்டு வெயிலில் நிற்கும் அசெளகரியம் தாண்டி குழந்தைகள் முகத்தில் ஒரு பெருமிதம். அழகு.

said...

குழந்தைகள் பாவம் :(
இராமாயண புடைப்பு சிற்பங்கள் அழகு .:)

said...

பார்பாரிகா என்ன அர்த்தமாக இருக்கும். கிருஷ்ணர் கூட களப்பலி கேட்பாரா. காக்க வந்தவனே கேட்கலாமா. பகீரதன் சீன் தேஎடினேன் ராமனும் பொன் மானும் கிடைத்தது. குகன் உடன் ஐவரானொம்ம் காட்சியும் சூப்பர்.

said...

இலஹாபாத் நகரிலும் காசி போலவே பல கோவில்கள்..... ஒரு நாளில் எல்லாவற்றையும் பார்ப்பது கடினம் தான்.....

என்னுடைய பதிவுகளுக்கும் இங்கே சுட்டி கொடுத்ததற்கு நன்றி......

said...

வாங்க ஜிரா.

கற்பனையை சீக்கிரம் எழுதுங்க.காத்திருக்கோம்.

மஹாபாரதக் கதை விஜய் டிவியில் பார்க்கும்போது மனசுக்குள் வேறமாதிரி எழுதலாமான்னு கை துடிக்குது எனக்கு.

அக்னியில் பிறந்த த்ரௌபதி, அஸ்தினாபுரி அரசவையில் துரியோதனனிடம் கண்ணீர் மல்க வீர வசனம் பேசாமல்,

'மூடா துரியோதனா, எரிந்து போ'ன்னு சொல்லி இருந்தா..... அவன் சாம்பலாக ஆகி இருப்பானே!

பாரதம் அதோடு க்ளோஸ். இல்லே?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வருகைக்கு நன்றி.

குழந்தைகள் மனதில் இன்னும் கள்ளம் புகவில்லை. அதான் அப்படி ஒரு அழகு!

said...

வாங்க சசி கலா.

ரசனைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க வல்லி.

நானும் க்ருஷ்ணன் களப்பலி கேட்ட முறை (ஆங்கிலச்சொல்) பார்பாரிக்காவா இருக்கேன்னு நினைச்சேன்.

கேக்கக்கூடாதுதான்..... கேட்டுட்டானே:(

கர்ணனிடமிருந்து புண்ணியம் கேட்டு வாங்குனதும் கொடிய செயல் இல்லையோ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மை. எத்தனைன்னுதான் பார்க்க முடியும் ஒரு அரை நாளில்:(

ஆனாலும் அந்த 12 மாதவ் பார்க்கலையேன்னு மனசு அடிச்சுக்கிட்டதே!

said...

பாண்டவர் வெற்றிக்காக உன் தலையைத் தியாகம்செய்'ன்னு கேட்டதும் 'சட்'னு தலையை வெட்டித் தந்துட்டாராம்!!! அதான் கேட்டவர்க்கு கேட்டபடி அருள்வார் என்பது!//

இன்னும் அவர் நிலைத்து நிற்கிறார் அல்லவா?
கண்ணன் அவரை இறவா புகழ் அடைய செய்து விட்டாரே!