Friday, May 02, 2014

கொஞ்சம் தூங்க விடுங்கப்பா..........

வண்டி நிறுத்தம் வந்தபோது நம்ம கைலாஷைக் காணோம். சுத்திமுத்திக் கண்களை ஓட்டினால்,  கண்களில் வெற்றி மின்ன, ஓட்டமும் நடையுமா வந்துக்கிட்டு இருக்கார். கண்டு பிடிச்சுட்டாராம் நம்ம பெரும் ஆளின்  கோவிலை!  பக்கத்துலேதான் இருக்குன்னார்.  துள்ஸிக்கு பைபை சொல்லிட்டுக் கிளம்பினோம்.

சின்னச் சின்ன சந்துகளாய் தெருக்கள்.  கொஞ்சநேரம்  சரியான இடம் தெரியாமல் வட்டம் போட்டுக்கிட்டே இருந்தோம். தெருக்களின்  அகலம் ரொம்பவே  குறைவு. எதிரில் வண்டி வராதவரை தப்பிச்சோம்.  ஆனா..  பாருங்க ஒரு வண்டி வந்தே வந்துருச்சு.  கைலாஷ் ரிவர்ஸ் எடுக்கறார். எனக்கோ திக் திக்.  ரெண்டு பக்கமும் ஒரு காலடி இடைவெளி மட்டுமே!

எதிர்வண்டி போனதும் நாங்க முன்னேறினோம். அங்கிருந்து பிரியும் ஒரு சின்னசந்தின் நுழைவுக்கு எதிரில் வந்தவுடன் வண்டியை நிறுத்தினார். நாங்க இறங்கிப்போகணும். கார்க் கதவைத் திறந்தால் காலடி எடுத்து வைப்பது சந்துக்குள் . அடுத்த பக்கம் இன்னொரு கதவைத் திறக்க  இடம் இல்லை. என்னைத் தொடர்ந்து இறங்கிய கோபால், தன்னுடைய வழக்கபடி என்னை முந்திக்கிட்டு விடுவிடுன்னு முன்னாலே  நடக்கறார்(!)  ஐயோ.... ஏன் இவ்ளோ அவசரடி?

போனவேகத்தில் சட்னு ஒரு இடத்தில் நின்னு  மேலே தலை தூக்கிப் பார்த்து இதுதான் கோவில் போலன்னார்.  எது?   சின்ன வாசல். தலையில் திருமண்ணும் சங்கு சக்கரச் சின்னங்களும். எஸ் யூ ஆர் ரைட்:-)

வாசலுக்குள் தலை நீட்டினால் வரவேற்கும் வாழைகள். குலை தள்ளி நிற்குதுகள்.  வாழைக்கூட்டத்தை  கடந்து வீடு போல ஒன்னு நம் வலப்பக்கம்.  வாசலுக்கு எதிரா, கண்ணுக்கு  நேரா மாடிப்படி. சட்னு மேலேறினோம். தனியார் கோவிலா இருக்குமோ?


ஸ்ரீ ஜகத்குரு  ராமானுஜ் காஷிபீட், ஸ்ரீ போகி சயன் திவ்யதேஷ்.  ஸ்ரீ ஜகத்குரு ராமானுஜாச்சார்ய  ஸ்வாமி யதிராஜாச்சார்யஜி மஹாராஜ்னு எழுதிய போர்டு.  இந்த இடமே ராமானுஜ நகராம்.

பண்டிட்ஜி ஒருத்தர் மாடியேறி வந்தார். கூடவே ஒரு சின்ன பண்டிட்டும்:-) பெரியவரின் தலை அசைப்பில், மூடி இருந்த  சந்நிதித் திரையை திறந்து விட்டார் சின்ன பண்டிட்.



 அனந்தன் குடை பிடிக்க, கிடக்கிறான் அங்கே, நம்ம ரங்கநாதன்! நாபன் இல்லை,  நாதனாக்கும் கேட்டோ!  காலடியில் ஸ்ரீதேவி.  முன்னே ஒரு சின்ன மேடையில்  சின்னதா  ஸ்ரீதேவி பூதேவி சகிதம் உற்சவர் !

பெருமாள் இங்கே போக சயனம் என்பதால்  'வேண்டும்' பக்தர்களுக்கு  இக உலக சுகங்களை வாரி வழங்குவார்! (ஆனால் சனம் வந்து போறமாதிரி தெரியலையே!)  தீர்த்தம் கிடைச்சது.  படம்? நோ ஒர்ரீஸ். எடுத்துக்கோன்னுட்டார் பெரிய பண்டிட்.  அபூர்வமா  தரிசனத்துக்கு ஆட்கள் வந்துட்டாங்கன்ற திகைப்பு அவர் முகத்தில்.

மாடிக்கோவில் முழுசும்  மார்பிள் தரையும்  மூலவர் சந்நிதிக்கு ரெண்டு பக்கமும்  சின்ன  சந்நிதிகளுமா இருக்கு.   நம்ம சென்னை ப்ளாட்டுகளில் பூஜை அறைன்னு ஒரு குட்டி இடம் காமிப்பாங்க பாருங்க, அதே சைஸில்  இந்தப்பக்கம் மூணு, அந்தப்பக்கம் மூணுன்னு ஆறு  சந்நிதிகள்.

 ஆழ்வார்களை ஆறு ப்ளஸ் அஞ்சா பிரிச்சு ரெண்டு சந்நிதிகளில்.  ஆண்டாளம்மாவுக்குத் தனி சந்நிதி.  ஸ்ரீ ராமானுஜருக்கு இன்னொரு தனி சந்நிதி. தாயாருக்கும் பெருமாளுக்குமா இன்னொரு தனிச் சந்நிதி.  நம்ம ஆஞ்சிக்கும் ஒன்னு இருக்கு! எல்லாமே  அந்த சின்ன இடத்தில் அடங்கிருச்சு.





ஆஞ்சிக்கு, வாலை மொத்தமா சுருட்டி அடக்கியாச்சு:-)


கோவில் அளவுக்கேத்த மாதிரி குட்டியா ஒரு பெருமாள் குடை!

ரங்கனுமே  சின்ன சைஸ்தான். பாம்போடு சேர்த்து பத்தடி இருப்பானோ?  எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாம,  'போதுண்டா  சாமி  .... என்னைக் கொஞ்சம் நிம்மதியாத் தூங்க விடு' என்கிறாப்போல  வலக்கையைக் கன்னத்துக்கு அண்டை கொடுத்துக் கிடக்கான். உண்மைதானே....   ஒருநாளைப்போல  அர்த்தராத்ரி ஒன்னரைக்கெல்லாம் எழுப்பி  சுப்ரபாதம் கேளுன்னு நிர்பந்திச்சால் அவந்தான் என்ன செய்வான்,பாவம்:(  அதான்  தெற்கே  இருந்து வடக்கே ஓடி வந்துருக்கான்.!  தொந்திரவு வேணாமுன்னு வந்தவன், பரிவாரங்களைக்கூட்டி வருவானோ?   கால் அமுக்கிவிட மனைவி மட்டுமே துணைக்கு! பதுமமும் வேண்டாம், பிரம்மனும் வேணாமுன்னு   நாபனா இல்லாமல் நாதனா வேஷங்கட்டி இருக்கான்.

அலங்காரப்ரியனை 'அம்போ'ன்னு  பார்த்ததில்,  மனசுக்கு 'ஐயோ'ன்னு  இருந்தது உண்மை:(

நீ தாய்ச்சுக்கோடா.....  நான் போயிட்டு வர்றேன்னு கிளம்பினேன்.  படிக்குப் பக்கத்தில் நின்னுருந்த பெரிய பண்டிட் அஸ்ஸி நதி அங்கேதான் இருந்ததுன்னார்.   இருந்ததா.... அப்டீன்னா இப்போ நதி எங்கே?   கைகாட்டிய திசையில் வெறும் மணல்பரப்பு.  அந்தர்வாஹினியா போயிருக்கு இப்ப சமீபத்தில்:(  திரும்ப வரவான்னு கூட கேக்கமுடியாது இனி. அந்தப் பகுதிகளில் புதுக் கட்டிடங்கள் கட்டிக்கிட்டு இருக்காங்க.

ப்ரஸாதமா ஆளுக்கொரு தூத் பேடா கொடுத்தவர், பெயர் என்னன்னு விசாரிச்சார்.  கோபால், துளசின்னதும்  கோபால், கோபால் என்றவர்.... ஸர்நேமுக்காக  நம்ம முகத்தைப் பார்த்தார். கண்ணில் கேள்விக்குறி.  'சௌத்  மே ஆஜ்கல்   ஸர்நேம்  மனா  ஹை'ன்னேன்.

சொந்த பந்தங்களை எதிர்பாராம சந்திச்சது போல்  இருக்கு!  அதிலும்  ரங்கனோடு, ஆண்டாளையும்  நம்ம ராமானுஜரையும்  பார்த்த திருப்தி எனக்கு!  தூமணி பாடிட்டுத்தான் வந்தேனாக்கும்:-)


திடீர்னு தமிழைக் கேட்டதில் அவளுக்கும் புல்லரிச்சுப்போச்சு:-)

நம்ம  சிவகுமார் பண்டிட்டை  பார்த்தால், இவர் நாபன்  இல்லை, நாதன் என்று சொல்லணும்.

கூட்டம் நெரியும் காசியில், ஏகாந்த சேவை லபிச்சது பாருங்களேன்!!!

ௐ நமோ  நாராயணாய!

 தொடரும்...........:-)


PINகுறிப்பு: பதிவில் சொல்ல விட்டுப்போச்சு. பெருமாள் கோவிலில்  மூலவர் முன் எப்போதும் இருக்கும் பெரிய திருவடி இங்கே மிஸ்ஸிங்!  அவருக்கு ஊருக்குள் வர தடா!  கதை தெரியுமோ?  ராமேஸ்வரத்தில், இருக்கும்  ஜோதிர்லிங்கத்தை காட்டிக் கொடுத்தாராம் கருடர்.


ராமராவண யுத்தம் முடிஞ்சு  ஸ்ரீ ராமர்   ராமேஸ்வரத்துக்கு மீண்டும் வந்துட்டார். ஆனால்  அவருக்கு ப்ரம்மஹத்தி  தோஷம் பீடிக்குது. என்ன இருந்தாலும் ராவணன், பிறப்பில் அந்தணன். சப்தரிஷிகளில் ஒருவரான புலஸ்திய மஹரிஷியின் பேரனாக்கும், கேட்டோ!  (சுத்தி வந்து பார்த்தால் ராமனும் ராவணனும்  சொந்தக்காரங்களால்லே இருக்காங்க!!!!) அவனைக் கொன்ற  பாவத்தைத் தீர்க்க சிவனை வழிபடணும் என்று பெரியவர்களின் உபதேசம் கிடைக்குது.

நான் கொண்டு வரேன்னு ஹனுமன் புறப்பட்டு காசிக்குப்போறார்.  அங்கே  எங்கே பார்த்தாலும்  சிவலிங்கங்களே!  லக்ஷக்கணக்கில் கொட்டிக்கிடக்கு. எது உண்மை? எது ரிப்ளிகான்னு தெரியாமல் தவிச்சு நின்ன நொடியில் கருடர் ஒரு லிங்கத்தைச் சுற்றிப் பறந்து  சேவிக்கிறார். ஓஹோ.... இதுதான்  அசல் னு தெரிஞ்சுக்கிட்ட ஆஞ்சி, அதைக் கிளப்பிக்கிட்டு தெற்கே பறக்கறார்.

காசிக் காவலர்  காலபைரவருக்கு கோபமான கோபம்.அதெப்படி என்னாண்டை  பெர்மிஷன் வாங்காமத் தூக்கிண்டு போகலாமுன்னு  அனுமன் மேல் சாபம் (தீச்சொல்- நன்றி ஜெ.மோ) விடப் பார்த்தார்.  மற்ற தேவர்கள் எல்லாம், வேணாம். இது ஸ்ரீ ராமனுக்காகத்தான் கொண்டு போறார்னு விஷயத்தை விளக்குனதும் கோபம் தணிஞ்சு 'கொண்டுபொய்க்கோ' என்றவர்,  நாவில் நிற்கும் சாபம் வீணாப்போயிருதேன்னு  உண்மை லிங்கத்தைக் காட்டிக்கொடுத்த  கருடருக்கு இனி உனக்கு காசியில் இடம் இல்லைன்னுட்டார்னு  ஒரு புராணக் கதை.  

காலபைரவர், நம்ம கூர்க்கா மாதிரி. கத்தியை வெளியே எடுத்தால் ரத்தம் பார்க்காம திரும்ப உள்ளே வைக்கமுடியாதாமே!

கருடர்  லிங்கத்தைச் சுத்தும்போது பல்லியும் உச்சுக்கொட்டிச்சாம். அதனால் அதுக்கும் ஊருக்குள் வரத் தடா!



18 comments:

said...

துளசிக்கு இல்லாத அனந்தசயனமா. இந்த மாதிரி ஒரு பக்தையை யாரும் பார்க்க முடியுமா. எளிமையான இனிமையான சேவையைக் கொடுத்துவிட்டார் ஸ்வாமி. எனக்கும் மனம் நிறைந்தது. சர்நேம் மனாஹை.அப்டிப் போடுடான்னானாம்.பெண்பாரதி நீ வாழ்க.

said...

தேடி தேடி அருமையான தரிசனம் கிடைத்தது- எங்களுக்கும். மிக்க நன்றி.

said...

அப்பா!!! மங்களகரமா பெருமாள் பதிவு :)))
காசியில் ஏகாந்த சேவை !! அருமை :))

said...

வாங்க வல்லி.

எதோ அவன் தயவு! சிவகுமார் சாஸ்த்ரி மூலம் சேதி சொன்ன கருணை!

சூப்பர் தரிசனம்தான். மனசு நெகிழ்ந்து போச்சு.

பதிவில் சொல்ல விட்டுப்போன விஷயம் ஒன்னு உண்டு.

காசியில் கருடன் பறப்பதில்லை. கூடாதுன்னு அவர்க்கொரு சாபம் உண்டு. கால பைரவர் கொடுத்த சாபம்.

அதனால்தானோ என்னவோ.... இங்கே பெருமாளுக்கு முன் பெரியதிருவடி மிஸ்ஸிங்!!!

said...

வாங்க குமார்.

நம்மைத் தேடி 'அவன்' அனுப்பிய சேதியால் அல்லவா தரிசனம் கிடைச்சது!

நலமா? எங்கே ரொம்ப நாளாக் காணோம்?

said...

வாங்க சசி கலா.

அன்றைக்கு சனிக்கிழமை வேற. பெருமாள் மனம் இரங்கிக் கூப்புட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

அவனருள் அனைவருக்கும் வேணும் என்று ப்ரார்த்தித்தேன்.

said...

ராமாயணக்கதை பிரமாதம்.

said...

நட்புகளே!

கருடர் கதையை இப்போது பதிவில் சேர்த்துருக்கேன்.

விருப்பமுள்ளவர்கள் மீண்டும் வந்து பயனடைவீர்:-))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

இனிது இனிது ஏகாந்தம் இனிதுன்னு ஔவையார் பாடியிருக்காங்க.

நாதனைக் கண்டேனடின்னு நீங்களும் பாடலும். ஏகாந்த நாதன்.

ஆண்டவனை இப்படித் தனிமையில் சந்தித்து உரையாடுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமானது.

ஒண்டிக்கு ஒண்டி பேசுறது சுகம்.

said...

பத்ர புஷ்பம் இல்லாத பெருமாளைக் காண வியப்பாக உள்ளது. ஏகாந்த சேவையைக் காண எங்களுக்கும் கொடுத்து வைத்திருக்கிறதே தங்கள் தயவால். நன்றி டீச்சர்.

said...

Pulatshya is a rishi, but not a saptha(7) rishi. They are Athri(1), Brughu(2), Kuthsa(3), Vasistha(4), Gowthama(5), Kasyapa(6) & Angirasa(7). I also heard that there are no crows in Kashi and the pindams are offered to cows.
The jyothirlingam in Rameshwaram is made of sand by Seetha. Hanuman when he saw siva, he immersed in meditation and lost time and as muhurtam approached and no sign of hanuman, Sita made a sand lingam at Rama's request.
There was an exception of Garuda's presence in Kashi. During the terrorist Aurang Aziz's regime, Saint Kumara Gurparar went from Madurai to Delhi and he went to the Aruangaziz's court on a lion. The emperor was asked Guruparar what he want and the saint asked for land that will be circled by a Garuda in Kashi. The emperor laughed saying there is no eagle in Kashi. But the eagle came and circled and the emperor gave the land and Saint Kumara Guruparar established Kashi Matt.

said...

நல்ல தகவல். காசி முழுவதுமாக இப்படி சிறியதும் பெரியதுமாக பல கோவில்கள்.....

ஒவ்வொன்றையும் பார்க்க ஒன்றிரண்டு நாட்கள் போதாது தான்.....

படங்கள் வழமை போலவே சிறப்பு....

said...

வாங்க ஜிரா.

நாம் இப்படி ஏகாந்தம் இனிமைன்னா 'அவர்'தனிமையிலே இனிமை காணமுடியுமா?'ன்னுட்டா என்ன செய்வது:-))))

said...

வாங்க கீத மஞ்சரி.

எனக்கு அலங்காரம் இல்லாத பெருமாளைப் பார்த்தால் துக்கம் தொண்டையை அடைச்சுரும்:(

ஆனாலும் அபூர்வ தரிசனமாத்தான் அமைஞ்சது இல்லே?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க Strada Roseville,

சப்தரிஷிகள் என்று நான் கேள்விப்பட்டவர்கள், அத்ரி, அங்க்ரீசர், அகஸ்தியர், கௌதமர், ஜமதக்னி,பரத்வாஜர், வசிஸ்ட்டர் ஆகியோரே.

உங்கள் புதுத் தகவலுக்கு நன்றி.

குமரகுருபரர் & சிங்கம் உண்மையிலேயே இப்போதுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

பலவிஷயங்கள் பின்னூட்டங்களில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

விளக்கமாச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.



said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வடக்கே பெருமாளைப் பல சிறிய, பெரிய கோவில்களில் பார்த்தாலும், கிடந்தவனைப் பார்த்தது இதுவே முதல் முறை!!!

இன்னும் என் வியப்பு போகலையாக்கும்

said...

ஏகாந்த சேவை எமக்கும் கிடைத்தது.