Wednesday, May 21, 2014

காணாமல் போன கல்யாணப்பொண்ணு !

ஒரு பத்து நிமிசப்பயணம். சக்தி பீடக்கோவில் ஒன்னு இருக்கு.  அலங்கார வளைவு முக்கியமான சேதி ஒன்னைச் சொல்லுது. ஸ்ரீ அலோபி சங்கரி சக்தி பீட் மந்திர் என்று 'தமிழில்' எழுதி இருக்கு!!! இந்தியாவில் ஏகப்பட்ட மொழிகள் இருக்க அவைகளில் தமிழை மட்டும் எடுத்துக்கிட்டு இங்கே  எழுதுவானேன்!!

தெற்கத்தி மக்களையெல்லாமே மத்ராஸின்னு சொல்வதன் காரணம் இப்ப லேசா எனக்குப் புரியுது. தென்னிந்தியாவில் நான்கு விதமான மொழிகள் இருக்குன்றதே வடக்கர்களுக்கு  அந்தக் காலத்தில் தெரியாம இருந்திருக்கலாம். விந்தியமலைக்குத் தெற்கே  இருப்பது முழுசும் மத்ராஸ். அங்கத்து மக்கள் மத்ராஸிகள், இப்படி சிம்பிளா புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க போல.  இல்லைன்னா....  காசி ராமேஸ்வரம் புண்ணிய யாத்திரை வருபவர்கள்   மத்ராஸ் வழியாகவே வரணும் என்பதாலும்  ராமேஸ்வரத்தில் எல்லாமே தமிழாக  இருப்பதாலும் கூட  இருக்கலாம். நம்மாட்களுக்கும் காசி யாத்திரை போகும்போது இடம் தெரியணுமேன்னு கூடத் தமிழில் எழுதி இருக்கலாம். எப்படியோ அங்கே தமிழ் எழுத்துக்களைப் பார்த்ததும் மனசுக்கு மகிழ்ச்சிதான் என்பதே உண்மை.


உள்ளே சிம்பிளான  கோபுரம்! 


சக்தி பீட தலங்களில் ரொம்பமுக்கியமானதுன்னு இந்தக்கோவிலைச் சொல்றாங்க.  தக்ஷயாகம் முடிஞ்சு வேள்வியில் இறந்துபோன  சதிதேவியின் உடலைச் சுமந்துக்கிட்டு சிவன் கோபம் தாங்காமல்  உலகைச் சுத்திக்கிட்டு இருந்தார். எவ்ளோநாள் இப்படி தங்கையின்  இறந்த உடலுடன்  சுத்துவார் என்ற  துக்கம் தாங்காமல்,அண்ணன் மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால்  உடலைத் துண்டுகளாக்கி பல  இடங்களில்   தெறித்து விழுந்துச்சுன்ற புராணக் கதையை உங்களுக்குப் பலமுறை சொல்லி இருக்கேன். மொத்தம் அம்பத்தியோரு  துண்டுகளா ஆகிப்போச்சு.  சிவன் கையில் இருந்த உடல் விருக்ன்னு  சிதறிப்போய் முழுசுமாக் காணாமப்போன இடம் இதுதான் என்பதால்   ரொம்ப முக்கியமான கோவில் என்ற வகையில் வருது. அப்படியும் கைவிரல் துண்டுகள் இங்கே விழுந்துச்சுன்னும்  சொல்றாங்க.

அலோபி பாக்  ( இங்கெல்லாம்  பாக்  Bagh என்பது பகுதி இல்லைன்னா  தோட்டம் என்னும் பொருளில்) என்னும்  பெரிய வளாகத்துக்குள் கோவில் இருக்கு.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. நாம் போன சமயம் கோவில் மூடி இருந்துச்சு. சும்மாச் சுத்திப் பார்க்கையில் பக்கவாட்டுக் கதவு ஒன்னு திறந்திருக்க அதன் வழியா உள்ளே போய்ப் பார்த்தோம்.

கோவிலில் சேர்ந்த  பூஜித்த மலர்கள், ப்ரசாத தொன்னைகள் இப்படி எல்லாத்தையும்   ரகவாரியாப் பிரிச்சுச் சுத்தமாக்கிக்கிட்டு இருந்தாங்க சிலர்.  அழுகும் குப்பைகளைத் தனியாப் பிரிச்சு  அதுக்கேற்றமாதிரி அப்புறப்படுத்துவது ரொம்ப நல்ல சமாச்சாரம்.

கோவிலுக்குள்ளே  புள்ளையார்,  சிவன் இப்படி பல சந்நிதிகள் இருந்துச்சு.  நடுவில் மூலவர் உள்ள கருவறையில்  ஒரு பளிங்கு மேடையும் அதில் ஒரு மரத்தொட்டிலும் மட்டும்.அலங்காரம் எல்லாம் அந்த மரத்தொட்டிலுக்கே! சாமின்னு எந்த சிலை உருவமும் இல்லை.  ஏன்?

இதுக்கும் ஒரு 'சரித்திரம்' கிடைச்சது.  கல்யாணம் முடிஞ்சு   மாப்பிள்ளை வீட்டுக்குப் புதுப்பொண்ணை டோலியில்  தூக்கிக்கிட்டுப் போறாங்க கல்யாண வீட்டுக்காரர்கள்.  காட்டு வழி. இதைக் கடந்தால்தான் ஊர்.  காட்டுலே கொள்ளைக்காரர்கள் காத்திருந்து  மக்களையெல்லாம் கொன்னு போட்டுட்டு,  நகைநட்டோடு பொண்ணு உக்கார்ந்திருக்கும் டோலியை நோக்கி ஓடிப்போய் திரையைத் தூக்கினால்.... டோலி...   காலி !!!  ஏற்கெனவே சதி தேவி காணாமப்போன கதையை இவுங்களும் காலங்காலமாக் கேட்டுருப்பாங்கதானே?  பயம் வந்துருச்சு.  டோலியில் வந்ததே சதிதேவிதான்னு  நினைச்சு  அதே டோலியையே சாமியாக்கிக் கும்பிட ஆரம்பிச்சாங்க(ளாம்)!

டோலி என்ற பல்லக்கு போல் இல்லாமல்  நம்மூரில் மரச்சட்டத்தோடு குழந்தை தொட்டில் பழங்காலத்துலே இருந்துச்சு பாருங்க,  அப்படி இருக்கு இங்கே!    சரி. நம்புனாத்தான் சாமி. நம்பிக்கையே வாழ்க்கை.  நாங்களும் கும்பிட்டுக்கிட்டோம்.

வலையில் சுட்ட படங்கள்  ரெண்டு இத்துடன். படம் எடுக்கக்கூடாதுன்றது  கேமெராவுக்குத்தான் போல். மக்கள் இப்பெல்லாம் செல்லில் புடிச்சுடறாங்க.

மேலே படம்: கோவில் வாசல் முகப்பில்  கோடி காமிக்குது.  கோவில் வளாகத்துள் கடைகள் வழக்கம்போல்!


அடுத்து நாம் போன இடம்  மஹரிஷி  ஶ்ரீ பரத்வாஜரின் ஆஷ்ரம்.  ரிஷியின் ஆசிரமத்தைச் சுற்றி மற்றவர்களுக்கான தங்கும் குடில்கள்  அந்தக் காலத்தில் இருந்திருக்கும் என்பதைப்போல்   தெருவிலிருந்து  ஆசிரமம் இருக்கும் சந்துக்குள் போகும்போதே  சந்தின்  ரெண்டு பக்கமும் ஒட்டியொட்டி  வீடுகள். சொல்லி வச்சது போல் எல்லா வீடுகளிலும் முன் அறை/ஹால் கோவில்களாவே இருக்கு.  திண்ணையில் உக்கார்ந்து  பேசிக்கிட்டு இருக்கும் பெண்கள், உள்ளே வந்து சாமியைப் பாருங்கன்னு  கூப்பிடறாங்க.  வீடுகளின் முகப்பும் வளைவு அலங்காரத்தோடு நல்லாவே இருக்கு.

சந்துப்பாதையில்  நேரா இருக்கும் ஆசிரமக்கோவிலுள்  நுழைகிறோம்.  ராமர் வனவாச   காலத்தில் சீதையும்  லக்ஷ்மணனுமாய் சித்ரகூடம் போகும் வழியில் இங்கே வந்து தங்கினாராம்! அபிஷேகம்செய்ய வசதியாக  பளிங்கில் தொட்டி போல் கட்டி அதுக்குள்ளே சிவலிங்கம். அவருக்குப் பாம்பு குடை பிடிக்க நந்தி எதிரில் உக்கார்ந்திருக்கு.

சிவனையொட்டியே இந்தப் பக்கம் பரத்வாஜரின் சிலை.   சுத்திவர சுவரை யொட்டியும் சில சிலைகள். காளி,  அஷ்டபுஜ  சிம்ஹவாஹினி,  ஹனுமன், கைக்குழந்தையோடு  இன்னொரு சாமி(சக்தி?) இப்படி. பராமரிப்பு ஒன்னும் சுகமில்லை. சுமாராத்தான் இருக்கு.

இதைவிட  வரும்வழியில் பார்த்த  தனியார் வீடுகளில் சாமி அலங்காரம் எவ்வளவோ தேவலைன்னுதான் சொல்லணும்.

  பாருங்க, ஆதி சேஷன் எப்படிகுடை பிடிக்கிறார்ன்னு!!!!!



குளிர்காய முழு மரத்துண்டை தினம் கொஞ்சம் எரிச்சுக்குவாங்க போல!   இளஞ்சூட்டுத்தூக்கம்  இதுகளுக்கும் வேண்டித்தான் இருக்கு பாருங்க.
ஆனந்த பவனம் எட்டிப் பார்த்தோம். இன்று (திங்கள்) விடுமுறை நாளாம். உள்ளே ம்யூஸியம், ப்ளானடோரியம் எல்லாமிருக்கு. தரைத்தளம் பார்க்கணுமுன்னா  ஃப்ரீ.பார்க்கணுமுன்னா பத்து ரூபாய். தோட்டத்தில் எதோ ஹிஸ்ட்டாரி'கல்' கல் இருக்கு.என்னன்னு தெரியலை?

ஊருக்குள்ளே அங்கே இங்கேன்னு சின்னச் சின்னக் கோவில்கள் ஏராளம். அநேகமா எல்லாத் தெருக்களிலும் ஒவ்வொன்னு.  நடராஜர் கோவில் கூட இருக்கு!


ப்ராச்சீன் வேணி மாதவ்  மந்திர் பார்க்கணும்.  கோவிலுக்குப் பின்னால்  கார் நிறுத்திக்கச் சொன்னாங்க.  கவனமாப்போகணும். குறுக்கும் நெடுக்குமாக் குழந்தைகள்  கவலை இல்லாமல் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.

பழைய வீடு போலஒரு அமைப்பு.  கோவில் திறக்கும் நேரம் காலை 5 முதல் பகல் 12. மாலை 4 முதல் இரவு 10.

ப்ரயாகையில் மட்டும் மொத்தம் 12  மாதவ் மந்திர்கள் இருக்காம். எல்லாத்திலும்  ரொம்ப ஃபேமஸ் இந்த வேணி மாதவர்தான்  என்றதும் நமக்கு மனசுக்குள் அற்ப மகிழ்ச்சி.


சைதன்ய மஹாப்ரபு வந்து தரிசித்த கரும்பளிங்கு மூர்த்திகள் கருவறையில்.


நாமும் வணங்கிவிட்டுக் கிளம்பினோம். இந்தக் கோவிலுக்கு நேரெதிரா  சிவன் கோவில் கொண்டிருக்கார்.  'மச்சான்ஸ்' ஜாலியா ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக்கலாம்.

இதுக்கிடையில் ராமர்  சித்ரகூடம் போகும் வழியில் இந்தக் கோவிலுக்கு வந்திருந்தார்னு  கோவிலில் ஒரு பக்தர்  உணர்ச்சிகரமாச் சொன்னார்.  அட ராமா.......  த்ரேதாயுகத்து ராமர்,   த்வாபர யுகத்துக் கண்ணன் கோவிலுக்கு  வந்துட்டாரா...........  எல்லாம் கலியுகம் கேட்டோ !!பக்தி  கண்ணையும் கருத்தையும்   மறைக்குதுன்னு  நினைச்சுக்கிட்டேன்.

நம்ம ஹொட்டேலில் அலஹாபாத்  ஹோலி சிட்டின்னு கொடுத்த ப்ரோஷரில்  இருந்த  கோவில்கள் எல்லாம் பார்த்தாச்சுன்னதும், அறைக்குத் திரும்பலாமான்னார் கோபால்.   இன்னும் சில பார்க்குகளும் கோட்டைகளும் பாக்கி இருக்குதான்..............   ஆனாலும் மறுநாள் நீண்ட பயணமொன்னு காத்திருப்பதால்  ஓய்வெடுக்கலாமுன்னு  ஹொட்டேலுக்குத் திரும்பிவந்துட்டோம்.

மாடிக்குப்போகும் வழியில்    ஜன்னத் இருக்கு!  ஹொட்டேல் பார்.   நமக்கு   அந்த சொர்கம் தேவை இல்லை. என் சொர்கம் இப்போதைக்கு வேற ஒன்னு. அதுக்குத் தனிக் காசு கட்டணும்.  மணிக்கு 100 ரூ.  ஒரு நாளைக்குன்னா  500. வரிகள்  தனி. அதுக்கு ஒரு 61 ரூ.   எங்க ரெண்டு பேருக்கும் ஒரு மணி நேரம் போதாது என்பதால்   ஒரு நாளைக்குன்னு எடுத்துக்கிட்டோம்.   வலை உலகில் என்ன  ஆச்சோ என்னவோ!!!!

ராச்சாப்பாடு   அறைக்கு  வரவழைக்கப்பட்டது.

தொடரும்..............:-)






11 comments:

said...

அளவிற்கு மீறினால் எல்லாமே கண்ணையும் கருத்தையும் மறைக்கும்...! சரித்திரத்தை அறிந்தேன் அம்மா... நன்றி...

said...

இலஹாபாத் நகரில் மொத்தம் 12 வேணி மாதவ் மந்திர்.... அனைவருமே தங்களது தான் பாரம்பரிய மிக்கது என்று சொல்கிறார்கள்!

நாங்களும் ஒரு ப்ராசீன் வேணு மாதவ் மந்திர் சென்றோம் - என்னுடன் வந்தவரின் உறவினர் தான் அங்கே மஹாராஜ்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சைதன்யா மஹாப்ரபு வந்த கோவில் என்று இதை நம்ம இஸ்கான் தான் நடத்துது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... அப்ப ப்ரஸாதம் எல்லாம் பலமாக் கிடைச்சிருக்குமே!!!!

said...

குறுக்கும் நெடுக்குமாக் குழந்தைகள் கவலை இல்லாமல் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.//

குழந்தை பருவம் கவலை இல்லா பருவம் அல்லவா!
விளையாடி களிக்கட்டும்.


said...

அடுத்த கட்டத்தை ஆரம்பிக்கலாமா. வேணி மாதவன் வேணு மாதவனோ இல்லை கருங்குழல் கண்ணனோ. அங்க பிராசீன் என்றால் இங்க கோவில் எல்லாமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லிவிடுகிறார்கள்.நான் தஞ்சாவூர் சுற்றி இருக்கும் புதுக் கோவில்களைச் சொல்கீறேன். விளையாடும் குழந்தைகள் அழகு.

said...

விந்தியத்துக்கு கீழ இருக்குறவங்கள்ளாம் மதராசிங்கதான். பெங்களூருக்குப் போன புதுசுல கூட வேல செஞ்ச தோழி கீழ விழுந்து கால ஒடிச்சிக்கிட்டா. அவளைப் பாக்க வடக்க இருந்து அப்பாம்மா வந்திருந்தாங்க. அவங்களுக்கு கன்னடான்னு கூட சொல்ல வரல. கன்னட் கன்னட்னே சொன்னாங்க. தெருவுல நாய் கொலச்சப்போ.. அந்த நாயெல்லாம் கன்னட்ல கொலைக்குதான்னு கேட்டாரு அவ அப்பா.

இராமயண பாரதக் காலக் குழப்பம் இருக்கு. பல ஆராய்ச்சியாளர்கள் பாரதம்தான் முதல்ல நடந்திருக்க முடியும்னு பலதை வெச்சு முடிவுகட்டுறாங்க. எங்கயோ படிச்சேன். மறந்து போச்சு.

said...

வாங்க கோமதி அரசு.

உண்மைதான்.

கள்ளமில்லாக் குழந்தைப் பருவத்துலேயே இருந்திருக்கக் கூடாதான்னு கூட பல சமயம் தோணி இருக்கு!

said...

வாங்க வல்லி.

ஆயிரம் ரெண்டாயிரம் எல்லாம் சகஜமப்பா:-))))

சரியாச் சொல்லுங்க, ஆயிரமா ரெண்டாயிரமான்னு பட்டரைக் கேக்கத் தோணுதே!!!

வடக்கில், வம்பு வேணாமுன்னு எல்லாமே ப்ராச்சீன்:-)))

said...

வாங்க ஜிரா.

கன்னட்லே குலைக்கும் நாயை எனக்கும் பார்க்கணுமே:-))))

பாரதம்தான் முதலில் என்றால் ராமன் விஸிட் செஞ்சதெல்லாம் க்ருஷ்ணன் கோவில் என்று மாத்தினால் ஆச்சு:-)))

ராமனுடைய ஜாதகம் என்று சுந்தரகாண்டத்தில் போட்டுருக்காங்க. அதை வச்சு கிரகங்கள், கோள்கள் அந்தந்த நிலையில் இருக்கும் காலத்தைக் கணக்குப்போட்ட அறிஞர்கள் அஞ்சாயிரம் வருசம் முந்தி இப்படி இருந்துச்சுன்னு சொல்றாங்க.

நம்பற மாதிரித்தான் இருக்கு.

கடலின் அடியில் புதையுண்டு போன த்வார்காவில் கண்ணன் காலம் பற்றி எதாவது குறிப்பு கிடைக்குமான்னு பார்க்கணும்.

said...

"காணாமல்போன கல்யாணப் பெண்ணு" பலகதைகள் கண்டுகொண்டோம்.