Friday, August 16, 2013

சந்தைக்கடையில் பச்சைப்புட்டு (மலேசியப் பயணம் 6 )

ப்ளூ டெக்ஸியில் ஏறி  நாலே நிமிசத்தில் மார்கெட்டில் இறங்கினோம்.  ஒன்னரை கி.மீட்டர். ஏழுவெள்ளி.  அதெப்படி?  ஏன்னா இது ப்ளூ டெக்ஸி.  மீட்டர் ஆரம்பமே ஆறு.  ரெட் டெக்ஸியை விட இது ரெண்டுமடங்கு அதிகம். அதுக்குப்பிறகு கி.மீட்டருக்கு ஒரு வெள்ளி ரெண்டிலுமே!

இந்த ப்ளூ வண்டி கொஞ்சம் பெருசு & புதுசு.  ரெண்டு வகை இருக்குன்றதை இப்பத்தானே கண்டு பிடிச்சோம்:-))))

  ஆரம்பத்தில்  ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள், இறைச்சி மீன்கள்  இப்படி விற்கும் வெட் மார்கெட் என்று சொல்லப்படும் வகை  மார்கெட் இது.  ப்ரிட்டிஷார் ஆண்ட பகுதிகளில் இப்படி ஒன்னு கட்டாயம்  இருக்கும் . நம்ம மூர் மார்கெட் யாருக்காவது நினைவு இருக்கோ?

அங்கே முன்புறக் கட்டிடத்தில்  பழைய  அண்ட் புதிய சாமான்கள் கொட்டிக்கிடக்கும் . ஒரு காலத்துலே புடவைக்கடை  பர்ச்சேஸ் முடிஞ்சதும் நேரா 'பஸ்' புடிச்சு மூர்மார்கெட் ஓடுவோம்.  அங்கே புத்தம்புது  தோல் செருப்புகள் நம்ம புடவையின் கலருக்கேத்தமாதிரி மேட்சிங்கா அஞ்சு ரூபாய்க்கும் குறைந்த விலையில் கிடைக்கும். ஆக்ஸெஸரீஸ்க்கு  அலைஞ்ச காலக்கட்டம் அவை:-)  அதிகநாள் உழைக்காதுதான். ஆனால்  அதே கலரா எப்பவும் கட்டப்போறோம்? பேஸிக்கா ஒரு பத்து கலர் இருந்தா சமாளிச்சுடுவொம்லெ:-))))

பழைய புத்தகங்கள் வேட்டையும் எனக்கு அங்கேதான். ஒரு முறை  பழைய பதிப்பு பாரதியார் பாடல்கள் வசனக்கவிதை உட்பட முழுத்தொகுதி, ரெண்டே ரூபாய்க்குக் கிடைச்சதாக்கும்!

அதே மூர்மார்கெட்டின் பின்புறக் கட்டிடத்திற்கு  எப்பவாவது போய்ப் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன்.  பெரிய பிரம்புக்கூடைகளில்  கோழிக்குஞ்சுகள் முதல்  வான் கோழி வரை  உயிருடன் வச்சு விற்பாங்க. கிளிகளும், புறாக்களும் இன்னும் பலவித பறவைகளும் விற்பனைக்கு உண்டு.  லவ்பர்ட்ஸ்  பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கேன்.வளர்க்க ஆசைதான்.... ஆனால்... ஹாஸ்டல் வாழ்க்கையில் .....   ஹூம்..... வேற வழி?

1888 வது ஆண்டு  பெருகி வரும்  ஊர் மக்கள் தொகைக்கு ஏற்ற படி, வெள்ளீயச்சுரங்கத்தில்  வேலை செய்ய இங்கே குடிவந்த குடும்பங்களுக்கான  சந்தை இது.  கூட்டம் பெருகப்பெருகத் தேவைகளும் கடைகளும் பெருகிவரவே அதுக்குத் தகுந்தாப்லெ  மரக்கட்டிடத்தை இன்னும் விரிவாக்கினாங்க. மாடியெல்லாம் கூட வந்துருச்சு. 1930களில் இதோ இப்போ நாம் பார்க்கும்  இந்த நிலையில் இருந்துச்சு. 1970 வது வருசம் கட்டிடத்தை இடிச்சுட்டு வேற மாதிரி கட்டிக்கலாமுன்னு   ஒரு எண்ணம்  வந்தப்ப, பாரம்பரியக் கட்டிடங்களின் அருமை தெரிஞ்சு அவற்றைக் காப்பாற்ற உருவான ஹெரிடேஜ்  சொஸைட்டி இதை இடிக்கக்கூடாதுன்னு போராடிக் காப்பாத்துனது ஒரு சரித்திரம்.

1980 இல் புது ஏரியாவில்  ஃப்ரெஷ் மார்கெட் ஒன்னு கட்டி முடிச்சதும்  இங்குள்ள வியாபாரிகளை அங்கே  அனுப்பிட்டாங்க. இந்தக் கட்டிடத்தை சீரமைச்சு, மலேசிய கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள் ,  குடிசைத்தொழிலா நடக்கும்  பத்தீக் டிஸைன்கள் இப்படிப் பிரத்யேகப்பொருட்களுக்கான  மார்கெட்டா மாத்திட்டாங்க.  புது ஓனர் இன்னும் பத்து மில்லியன் ரிங்கிட்ஸ் செலவு செஞ்சு அக்கம்பக்கத்து  இடங்களையெல்லாம் வாங்கி  நல்லா விஸ்தரிச்சுட்டார்.
 Kasturi walk இல் ஒரு வாக்:-)

மார்கெட்டின் பின்புறம் உள்ள பெரிய ஹாலில் ஆர்ட் கேலரி, பக்கவாட்டு திறந்த வெளியின் மற்ற  பக்கத்தில் இருக்கும் வரிசைக்கடைகளின் இடைவெளியில்   அலங்கார மேற்கூரை  (விதவிதமான  காற்றாடி(பட்டங்கள்) வடிவில் டிஸைன் செஞ்சவை) போட்டு  அந்த இடத்துக்கு கஸ்டூரி வாக் என்ற பெயர் சூட்டி,     உணவுக்கடைகள் இப்படி ஏகப்பட்ட அமர்க்களம்.


காலை 10 மணி முதல்  இரவு பத்துவரை தினமும் திறந்து வைக்கிறாங்க.  தினமும் இரவு ஒன்பது முதல் கலைநிகழ்ச்சிகள் வேற நடத்தறாங்க. பார்க்கவேண்டிய முக்கிய இடங்களில் ஒன்னு என்று இப்போ சுற்றுலாத்துறை ரொம்பப் பெருமையுடன் இதை விளம்பரப்படுத்துது!

பசார் சேனி க்குள் நுழைகிறோம்.  'ஹோ'வென்று பரந்து விரியும் ஹால். இடதுபக்கம்  கண்ணை இழுத்தது குட்டி இந்தியா. அதுக்குப் பக்கத்தில்  குட்டி கஷ்மீர். போச்சுடா.....   இனி குட்டி ம.பி, குட்டி உ.பி, குட்டி குஜராத்ன்னு ஆரம்பிச்சுருவாங்க  போல:(

ஒரு கடை எங்கே முடியுது, இன்னொன்னு எங்கே ஆரம்பிக்குதுன்னு தெரியாம தொடர்ச்சியா  ஒருபக்கம் ஓடும் கடைகள்.  நடுப்பகுதியில்   நடப்பதற்கு இடம் விட்டுத் தீவுகள் போல் தனித்தனியாகக் கடைகள்.  கடையைக் கட்டும்போது எப்படி மூடி வைப்பாங்களோ?

வாசனைத் தைலங்கள், துணி பொம்மைகள், மரச்சிலைகள், துணிமணிகள், காஸ்ட்யூம் நகைநட்டூஸ்  இப்படி ஏராளம்.

சிறுதீனியாக் கொறிக்க  கடலைகள், வற்றல்கள் இப்படி இன்னொரு பக்கம்.



அஞ்சு ரிங்கிட்டுக்கு  பத்து நிமிசம்  உங்க பாதங்களைக் கடிச்சுக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட மீன்கள் ரெடி:-)

ம்யாவ் டிஸைன்ஸ்க்குன்னே ஒருகுட்டிக்கடை.  வாவான்னு அது கை ஆட்ட, இவர் பைபை எனச் சொல்லிக்கிட்டே என்னை இழுத்துக்கிட்டுப் போயிட்டார். கடிகார டிஸைன்ஸ் ச்சும்மா எட்டிப் பார்த்தேன்.

நிர்மலா சாரி என்ற பெயரில் ஒரு  காஸ்மெடிக்  கடை!


பித்தளை மாடும், அம்பாரி யானையும் அழகோ அழகு! ஜஸ்ட் க்ளிக். அம்புட்டுதான்:(

மாடியில்  படீக் டிஸைன்ஸ்லே நான் தேடுவது கிடைக்குமான்னு பார்க்கப்போனேன்.  சில வருசங்களுக்கு முன் நம் சென்னை வாழ்க்கையில் நம்ம அல்ஸாமால் இருக்கு பாருங்க அங்கே பேஸ்மெண்ட்டில் ஒரு லினன் ட்ரெஸ் கிடைச்சது.  படீக் &  பூத்தையல்.  மலேசியத் தயாரிப்பு. அது போல வேறொன்னு கிடைக்குமான்னு என் தேடல். (காரணமே இல்லாம நான் ஷாப்பிங் போகமாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? )


ஒரு சில உடைகள் அழகாத்தான் இருக்கு. மகளுக்கு வாங்கலாமுன்னா   முன் அனுமதி இல்லாம எடுத்தோமுன்னா தொலைஞ்சோம்.  அவளுக்குக் காமிச்சுட்டு வாங்கலாமுன்னு  கோபாலின் ப்ளாக்பெர்ரியில் படம் எடுத்து  மகளுக்கு அனுப்பிட்டு பதில் வரட்டுமுன்னு  மற்ற கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.

அங்கங்கே கைத்தொலைபேசியை வச்சே அட்டகாசமான படம் எல்லாம் எடுக்கறாங்க இல்லே?  நம்ம கோபாலின் கைப்பேசி தனித்தரம். என்னதான் படு அழகான காட்சியும் லைட்டிங்ஸுமா அமைஞ்சிருந்தாலும் அது த்ராபையாத்தான் எடுக்கும். (செட்டிங்ஸ் சரி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்)  அதுலே எடுத்து அனுப்பிய படங்களுக்கு  கொஞ்ச நேரத்தில் எதிர்பார்த்த  பதில் வந்தது..... வாங்கவே வாங்காதேன்னு!  எப்படியோ  மிஷன் வெற்றி:-)))))

24 கடைகளில் கொட்டிக்கிடக்கும் படீக் வகைகளில் என்னிஷ்டம்போலவும் கிடைக்கலைதான்.  அதுக்காக.....  போனால் போகட்டுமுன்னு (கோபாலின் வற்புறுத்தலுக்காக) ஒரு டாப் மட்டும் வாங்கிக்கிட்டேன். இதே தளத்தில் மூணு  ரெஸ்ட்டாரண்டும் இயங்குது. எல்லாம்  சீனச்சாப்பாடு வகைகள்.

ரெஸ்ட்ரூம்  வசதிகளுக்கு  அரை வெள்ளி ஒரு நபருக்கு.

பின்பக்கக் கட்டிடத்தில்  ஆர்ட் கேலரி அனெக்ஸ்ன்னு  நிறைய படங்களை  காட்சிக்கு வச்சுருக்காங்க. என் கண்ணைக் கவர்ந்தது வண்ண மணல்  பாட்டில் அலங்காரம். அட்டகாசமான  வண்ணங்களில்  மிருதுவான பொடி மணல்களின் குவியல். மெல்லிசான  ஃபுனல் வச்சுருக்காங்க. வரைய ஆர்வம் இருந்தால்  வண்ண ஓவியங்களை நாமே பாட்டிலில் அடைச்சு வாங்கிக்கலாம்.  என்ன ஒரு அற்புதமுன்னு வா பிளந்து பார்த்துட்டு க்ளிக்கிட்டு வந்தேன். பாட்டிலை ஸீல் செஞ்சு கொடுத்துடறாங்க. அதுக்கப்புறம் எப்படி ஆட்டினாலும்  ஓவியங்கள் நகர்வதில்லை!!!!!



உள்வேடிக்கை போதும்னுன்னு வெளியே கஸ்டூரி வாக்கில் நடந்தோம். சின்னதும் பெருசுமா  நடுவில்  ஏகப்பட்ட தீனிக்கடைகள்.  எலெக்ட்ரிக் புட்டு  பார்த்தேன். மூங்கில்குழாய் புட்டு ட்ரெடிஷனல். அரிசிமாவு, பனை வெல்லம்,  தேங்காய்த்துருவல்,  பாண்டன் நிறமும்மணமும். (Pandan.  Screw pine  என்று சொல்லப்படும் ஒருவித தாழை வகை.  கேக்குகளிலும்  சீன மலேசிய உணவு வகைகளிலும் இந்த மணமுள்ள எஸ்ஸென்சைப் பயன்படுத்துவார்கள்.)

ஒரு  15 செமீ நீளம் வரும் உருளையில்  தண்ணிர் சேர்த்துப் பிசறின அரிசி மாவு பனைவெல்லாம் முக்கால்வாசி வரை நிரப்பி வச்சு அதன்மேல்  பாண்டன்  மணம்  கலந்ததேங்காய்ப்பூவை நிரப்பி வச்சுக்கறாங்க. பிறகு ஒரு பெரிய ட்ரே மாதிரி ஒன்னு. அதில்  9 X 7   ன்னு 63 வட்ட துவாரங்கள்.  இந்த மூங்கில் உருளைகள்  அந்த துவாரத்தில்  சக்ன்னு  உக்கார்ந்துக்குது.  ட்ரேயின் அடிப்பாகத்தில் மின்சாரம் மூலம் கொதிக்கும் வெந்நீர். அதில் வரும் நீராவியின் மூலம் அஞ்சே நிமிசத்தில்  சின்னதா அழகான 63 பிட்டு உருளைகளிலும் குழாப்புட்டு தயார்!







தயாரிப்பை கொஞ்சநேரம் நின்னு பார்த்துட்டு ஒரு செட் புட்டு வாங்கினோம்.  ஆறு   புட்டு பிட்டுகள் ஒரு செட்டில்! இன்னொரு கடையில்  நறுக்கி வச்ச  ராக்ஷச சைஸ் கொய்யாப் பழங்கள் ஒரு ட்ரே 1.20க்கு வாங்கிக்கிட்டோம்.  கோபாலின் கைப்பை எல்லாத்துக்கும் சௌகரியமா இருக்கு:-)

தாகமா இருக்கேன்னு  இன்னொரு ஸ்டாலில் ஆளுக்கொரு இளநீர்.  அம்மாம்பெரிய சைஸும் உள்ளே இருந்த இளம் தேங்காயுமாக  வயிறு ஃபுல்.  இனி லஞ்சுக்கு இடமில்லை:(  ஆனாலும் எதிர்வரிசைகளில் இருந்த உணவுக்கடைகள் ஒன்றில் அம்மும் கூட்டத்தைப் பார்த்து என்னதான்  சமையலுன்னு  தெரிஞ்சுக்கப்போனேன். ' யம்மா...... இவ்ளோ பெரிய மீன் தலையா?' என்றார் கோபால். எவ்ளோ பெருசா இருந்தாலும் எனெக்கென்ன பயம் ?க்ளிக் க்ளிக்.


 என்னை வசீகரிச்சது அங்கே இருந்த டேக்ஸாக்கள்.  ஹப்பா..... எவ்ளோ நாளாச்சு இந்தப் பாத்திரங்களை எல்லாம் பார்த்தே!  பாத்திரம் மட்டும் அழகல்ல  ..... அவை இருந்த சுத்தமும் நேர்த்தியும் இன்னும் அழகு. பளிச்சுன்னு துலக்கி  அளவான தட்டு மூடலுடன் அதற்கான கரண்டியுமா  ஜம்முன்னு உக்கார்ந்துருக்கு.  கரண்டியிலோ தட்டிலோ இல்லை அது இருக்கும் இடத்திலோ குழம்பின் சுவடு கூட இல்லை! (ஒரு வேளை காலியோ? ச்சீ.... இருக்காது! இருக்கவும் முடியாது )


மற்ற ஷாப்பிங் மால்களுக்குப் போகணுமுன்னா இலவச பஸ்ஸில் கொண்டு போய் விடறாங்க.


அதான் லஞ்சு வேண்டாமுன்னா ....  அறைக்குப்போய் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமேன்னு  டெக்ஸி தேடினால் அங்கே நின்னுக்கிட்டு இருந்த நாலைஞ்சு டெக்ஸிகளும்  லஞ்ச் டைம் ஓய்வாம்.  பக்கத்துலே  ரயில் நிலையம் இருக்கான்னா..... பசார் சேனி நிலையம் இருக்குன்னாங்க.  மெள்ள அங்கே நடந்து போய்  புகிட் பின்டாங் ஸ்டேஷனுக்கு  தானியங்கி டிக்கெட் மிஷீன்லே டிக்கெட்டை வாங்கிக்கிட்டு  மேலே படிகளேறிப்போய் பார்த்தால் அது மோனோ ரயில் இல்லை. லைட் ரயில். அதுலே ஏறினதும் அடுத்த ஸ்டேஷன் சென்ட்ரல்.  அவ்ளோதான் . அதுக்கு மேல்போகாது!


என்னடா  இதுன்னு  வெளியே  பாதி தூரத்தில் இருக்கும்  தகவல் உதவிப் பணியாளரிடம் கேட்டால்.....  வெளியே ரயில் நிலையத்தைக் கடந்து போய்  அரைக்கிலோ மீட்டர் நடந்தால் மோனோ ரயிலுக்கான சென்ட்ரல் ஸ்டேஷன் வருமாம். தொலையட்டும் நடந்தே போகலாமுன்னா.... இந்த ஸ்டேஷனை விட்டு வெளியே போகணுமுன்னா நம்ம கையில் இருக்கும் டிக்கெட்டை  அதற்கான  ஸ்லாட்டில் போட்டால்தான்  நம்மை வெளியே விடும்.  அப்புறம் அங்கே போய்  இன்னொரு டிக்கெட் வாங்கினால்தான் உள்ளெயே போக முடியும்.

எல்லாத்துக்கும் சேர்த்து டிக்கெட் கொடுக்கும் மிஷின் இருக்கு. ஆனால் சரியான  கோஆர்டிநேஷன்  komutersக்கு  இல்லையேன்னு கடுப்பு.  இவரோ துடிக்கிறார். வா வெளியே போய்  டெக்ஸி பிடிக்கலாமுன்னு. நான் சில சமயங்களில்  பிடிவாதமா அடம் பிடிப்பேன். இப்ப அப்படி ஒன்னு. இடும்பியோடு முப்பத்தியொன்பது வருசம் வாழ்ந்ததால்  பழக்கப்பட்டுப்போன  இவர்தான் பாவம்.


 வெளியே போகாமல் வேறென்ன வழி இருக்குன்னு விசாரிச்சால், நாம்  திரும்ப இதே லைட் ரயிலில் ஏறி  வந்தவழியே போய்  Hang Tuah ஸ்டேஷனில் (இங்கே இண்ட்டர் சேஞ்ச் கனெக்‌ஷன் இருக்கு.  மேல் மாடியில் ஒரு ரயிலும், மாடியில் ஒரு ரயிலுமா ஓடுது) மோனோ ரயிலுக்கு மாத்திக்கலாம் என்றார்கள்.

அப்படியே Hang Tuah ( தருமிக்கு: இவர்  15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  legendary Malay warrior) போய் இறங்கி இன்னொரு மாடியேறி நம்ம மோனோ ரெயில் பிடிச்சு  புகிட் பின்டாங் வந்து அறைக்குப் போனோம்.  லேட் லஞ்சுக்குப் பிட்டும் கொய்யாப்பழமும்:-)

கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு  நாலுமணி போல கிளம்பலாம். சரியா?

தொடரும்...............:-)





18 comments:

said...

பட்னக்கள் கண்ணை பறிக்குது, குழாப் ப்ட்டு, மீன் தலை, தேக்சான்னு..., ம்ம்ம் அசத்துங்க

said...

//மகளுக்கு வாங்கலாமுன்னா முன் அனுமதி இல்லாம எடுத்தோமுன்னா தொலைஞ்சோம்.//

ஆஹா!! இது இண்டர்னேஷனல் விதிமுறை போலிருக்கே(எல்லாம் அனுபவம்தான்)

வாங்குறோமோ இல்லையோ.. சும்மா சுத்திப் பார்க்கற சுகமே தனிதான் :-))

said...

பல அழகிய புகைப்படங்களுடன் உங்கள் அனுபவத்தை அழகாக பதிவு செய்திரு்க்கிறீர்கள். இந்த இடங்களை எலலாம் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி

said...

பச்சைப் புட்டு எங்கப்பா? வெள்ளையாதானே இருக்கு:)
ஓ!அந்த யானையும் மாடும் என்ன அழகு இரண்டு வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம்.தேக்சா படு க்ளீன். துடைத்துத் துடைத்துவச்சுப்பாங்களோ?
சென்னைல(மதராஸ்ல) ஒரு ரூபாய் நெக்லஸ், இரண்டு ரூபாய் செருப்பு,
ப்ளௌஸ் தைக்க ஒரு ரூபாய். இதெல்லாம் 65இல் அனுபவித்தவள் நான்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.
படங்கள் சூப்பர்.க்ளீன் அண்ட் க்ளியர்!!

said...

எல்லா வீட்டு மகள்களும் இப்படித்தானா? இன்டெர்நேஷனல் விதிமுறை எங்கள் வீட்டில் மாறும். நான் என்ன வாங்கினாலும் என் பெண், மாட்டுப்பெண் இருவருமே சந்தோஷமாக போட்டுக்கொள்ளுவார்கள்.
எனக்கும் அந்த தேக்சாக்கள் பிடிச்சிருக்கு.

அப்பாடா! மலேசிய பயணம் up to date!

said...

அம்பாரி யானை கொள்ளை அழகு !! என் பெரிய பொண்ணுஇதை பாத்தாள்னா விட மாட்டா . but should be costly, right .பக்கத்துலயும் பின்னாடி யும் புத்தர் தெரிறார் . அது ஒரு closeup இருக்குமா ..... இன்னும் படிக்கலை . யானையாரை பாத்ததும் இதை அனுப்பிட்டேன் படிச்சுட்டு வரேன்

said...

எலெக்ட்ரிக் bamboo குழா புட்டு taste எப்பிடி ?

purple டிரஸ் நல்ல இருந்தது , அந்த blue துப்பட்டாவும் .

மூர்மார்கெட்டுக்கு நானும்சின்ன வயசுல school படிக்கறப்ப புக் வாங்க போய் இருக்கேன் . accessories லாம் கிடைக்கும்னு தெரியாது. .நீங்க அப்போ சென்னைல படிச்சீங்களா இல்ல வேல பாத்தீங்களா .. எங்கனு சொல்லுங்க ப்ளீஸ் .

said...

மூங்கில் குழாய் புட்டு சுவையாக இருந்திருக்குமே.
சில காலங்களுக்கு முன் இதுபோல நீண்ட குழாயில்தான் புட்டு செய்வோம்.இப்போது ஸ்ரெயின்லெஸ் குழாயில் செய்கின்றோம்.

மாடும்,யானையும் அழகாக இருக்கு.

said...

பயணத்தொடரில் பச்சை புட்டு மனம்கவர்ந்து விட்டது.
காலத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து அசத்திவிட்டார்கள். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

said...

வாங்க ராஜி.

நான் பெற்ற இன்பம் வகைதான்:-)

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வீட்டுவீட்டுக்கு வாசப்படியும் கதவும்:-)

நிறைய நேரம் விண்டோ ஷாப்பிங் தான்ப்பா.

said...

வாங்க வியா பதி.

முதல் வருகைக்கு நன்றி.

சமய சந்தர்ப்பம் வாய்த்தால் நேரிலும் சென்று கண்டுமகிழ வேண்டியவைகளில் இதுவும் ஒன்று.

said...

வாங்க வல்லி.

லேசா இளம்பச்சை பூசிய தேங்காய்ப்பூக்கள் தூவி இருக்காங்க. கேமெரா பழி வாங்கிருச்சு. சோம்பல் படாம அடுத்த முறை எஸ் எல் ஆரைத் தூக்கிக்கிட்டுப் போகணும் போல!

ஆமாம்..... இப்பவும் மூர்மார்கெட் இருக்கா? சென்னை வரும்போது சேர்ந்து போகலாமா?

said...

வாங்க ரஞ்ஜனி.

ஹைய்யோ!!! கொடுத்து வச்ச மாமியார் நீங்க!

முன்பு ஒரு பயணத்தில் மருமகள் மெச்சிய மாமியாரைப் பார்த்து அதிசயிச்சேன்.

புண்ணீயாத்மாக்கள் நீங்கெல்லாம்.

மலேசியாவில் இன்னும் சில பதிவுகள் இருந்துட்டுத்தான் கிளம்பணும் நீங்க:-)

said...

வாங்க சசி கலா.

பித்தளை மாடு & யானை விலையைக்கூடக் கேக்கலை. என் கூடவே பயணத்தில் வந்த என் வீட்டு புத்தர் முகத்தில் கலவரம் உண்டாக்குவானேன்னுதான்:-)

புட்டு வழக்கமான சுவையுடன்தான். பனைச்சர்க்கரைதான் வித்தியாசமான ஒரு சுவை தந்தது.

ஏகப்பட்ட கேள்விகளை இப்பவே கேட்டுட்டால் நேரில் சந்திக்கும்போது என்ன பேசுவது?

ஆகட்டும் பின்னொருக்கில், கேட்டோ?

said...

வாங்க மாதேவி.

கேரளத்தில் கீழே வீட்டு அம்மாவும் மூங்கில்குழலில்தான்.

நான் ஒரு புட்டுக்குடம் வாங்கி அதை பூனாவில் கொடுத்துட்டு வந்துட்டேன். அப்புறம் குக்கர் மேல் வைக்கும் புட்டுக்குழாய் ஒன்னு வாங்கி அதை நியூஸியில் வச்சுட்டு இந்தியா போய் சண்டிகரில் இன்னொரு குக்கர் புட்டுக்குழாய் வாங்கி அதுவும் சரிப்படலைன்னு மதுரை மீனாட்சி கோவில் அருகே புட்டுக்குடமும் குழாயுமா ஹிண்டாலியத்தில் வாங்கி வந்தேன்.

ஆனால் இப்ப புட்டு அவிப்பது எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரின் ஸ்டீமரில் வச்சு.

முறைகள் வேறு, ருசிகள் ஒன்னு:-)

said...

வாங்க கோமதி அரசு.

நமக்கு என்ன வேணுமுன்னு சீனர் நல்லாவே உக்கார்ந்து யோசிக்கிறாங்களே:-))))

said...

நீங்க பார்த்த கஸ்தூரி வாக் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தீக்குளிச்சிடுச்சு. இப்போ தேமேன்னு கெடக்கு. சுற்றிலும் வேலி போட்டு வச்சிட்டானுங்க. அப்புறம் அந்த வெட் மார்க்கெட், ஜாவானியர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சீனர்கள் அந்த இடத்தை ஆல்கிரமித்த போது அவர்கள் வசம்தான் சகலமும். கட்டிடம் என்னவோ வெள்ளைக்காரன் கட்டியதுதான். வியாபாரிகள் மெஜாரிட்டி சீனர்கள். ஒருக்காலத்தில் அந்தப்பக்கம் போக முடியாது. ஒரே உவ்வேதான். அங்கேயே கொழி வாத்துகளை கழுத்தை வெட்டி, சுடுநீரில் போட்டு முக்கி, ரெக்கையை பிய்த்து தருவார்கள். அழுக்குத் தண்ணியும் துர்நாற்றமும் மிகுந்த ஏரியா. அதற்குள் எனக்குத் தெரிந்து வியாபாரம் செய்த ஒரு சில தமிழர்களில் என் வகுப்பு நண்பன் அன்பழகனின் அப்பாவும் ஒதுவர். காய்கறி வியாபாரம். மறக்க முடியா நிகழ்வுகள்