Friday, August 02, 2013

கோலாகலமான ஊர் (மலேசியப் பயணம் 1)

ரொம்பவே அழகான  பன்னாட்டு விமானநிலையம் என்று கேள்விப்பட்டதால் ஆவலோடு காத்திருந்தேன்.  ஏர் ஏசியா போய் இறங்குன இடத்தைப் பார்த்தால்  அழகுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத இடம். என்ன ஆச்சுன்னு கண்ணை ஓட்டுனா... LCCT (Low cost carrier terminal)

புது விமான நிலையம் கட்டுனதும் பழைய டெர்மினலை இப்படி மலிவு விலை சமாச்சாரமா ஆக்கிட்டாங்க.  ஏணியை வச்சு ஆட்களை இறக்கி  நடந்து போங்கன்னு விரட்டாத குறை.  கூரை போட்ட பெரிய  நடைபாதையில்  நடக்க ஆரம்பிச்சோம். ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் இருக்குமுன்னு நினைச்சேன். நல்லவேளை தலைக்கு மேல் கூரையாவது கிடக்கு. இல்லேன்னா அடிக்கிற வெயிலுக்கு  'பாலி கனாங் சாரி'யில் வைக்கும் ஒரு பொருளாக மாறிவிடலாம்.

எந்தவிதமான படிவமும் நிரப்பத்தேவை இல்லை என்பது ஒரே ஆறுதல்.  பாஸ்போர்ட் பார்த்து ஸ்டாம்ப்  பண்ணிடறாங்க. அம்புட்டுதான்!!!!  ரயில் இருக்காமே அதுலேயே போகலாமுன்னு விசாரிச்சால்.... அதுக்கு அந்த அழகான இன்ட்டர்நேஷனல் டெர்மினலுக்குப் போகணுமாம்.  இங்கிருந்து  ரொம்ப தூரமில்லை. ஜஸ்ட் 20 கிலோ மீட்டர்.  அங்கிருந்து 63 கிமீ  பயணம் கோலாலம்பூர் நகரத்துக்குள் நுழைய.

பேசாம இங்கிருந்தே  போகலாமுன்னா  68 கிமீ.  டாக்ஸியில் போகலாம். ஆனால்..... சீப் ஏர்லைன்ஸில் வந்துட்டு இதுக்கெல்லாம் அனாவசியமா செலவழிக்கலாமான்னு யோசனை:-) வாயில் இருக்கு வழின்னு  தமிழில் விசாரிச்சால் பஸ் இருக்கு.  அதுக்கு ஆளுக்கு  ஒன்பது ரிங்கெட்தானாம்.  இப்போ டாக்ஸியில் போய் என்ன வெட்டி முறிக்கப் போறோம்?  கொஞ்ச நேரத்துலே இருட்டப்போகுது. பேசாம பஸ்ஸில் போகலாம் என்று முடிவு செஞ்சேன்.

கோபாலைப் பொறுத்தவரை  கே எல் அனுபவம் உள்ள ஒரே ஆள் நம்ம குடும்பத்தில் நான் மட்டுமே!  அப்போ... (காலம்:  ப.மு )எப்போ?  சரியாப் பத்து வருசத்துக்கு முன் ஒருமுறை  சிங்கையில் இருந்து கே எல்லுக்கு  நியூஸித் தோழியுடன் பஸ்ஸில் வந்திருந்தேன். தோழி  வீட்டில் மூன்றுநாள் தங்கி  இன்னொரு பஸ்ஸில் சிங்கை திரும்பினதோடு மலேசியப்பயணம் முடிஞ்சிருந்தது. அந்த மூன்று நாட்களும் தோழியின்  உறவினர்களையும் நண்பிகளையும்  சந்திச்சதோடு சரி.  ஏர்ப்போர்ட் பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்கலை. ஆனால் கோபாலுக்கு என்னமோ நான் மலேசியாவை அதிலும் கே எல்லை இண்டு இடுக்கு விடாமல் சுத்திப் பார்த்துட்டேன்னு ஓர் எண்ணம்.  பாவம்,வெள்ளந்தி!!
!
இது என்னோட ரெண்டாவது வருகை மலேசியாவுக்கு.  ஒரு முறை சிங்கையில் இருந்து  மகளுடன் ஜோஹூர் பாரு வரை போய், அடுத்த  ஒரு மணி நேரத்தில் அலறியடிச்சுக்கிட்டு சிங்கை திரும்பின  சரித்திர சம்பவத்தை  விருப்பமுள்ளவர்கள் இங்கே வாசிக்கலாம்:-)



பஸ் டிக்கெட்டை வாங்கிக்கிட்டு  பஸ் ஸ்டாண்டைத் தேடி பத்து நிமிசம் அலைஞ்சு  கண்டுபிடிச்சோம்.  விமானநிலயத்தின் உள்ளும் புறமும் ஏகப்பட்ட கூட்டம்! கொஞ்ச நேரத்தில் ரெட் பஸ் ஒன்னு வந்துச்சு. அதுதானான்னா அது தான்:-) ஏறி வசதியான இருக்கை   பார்த்து உட்கார்ந்தோம்.  நகரத்துக்கு வரும் சாலை அருமையா இருக்கு.  ரெண்டு பக்கமும் ஒருவித பனை மரங்கள்  பெரிய அளவில் நட்டுவச்சுருக்காங்க. இதிலிருந்து வரும் கொட்டையில் இருந்துதான் பாமாயில் எடுக்கறாங்க.  ஏற்றுமதிக்கான பொருள் என்பதால் எக்கச்சக்கமா ஜேஜேன்னு இருக்கு. விமானம் கீழே  இறங்க ஆரம்பிச்சதுமே இதுதான்  தெரியுது!


கே எல் செண்ட்ரல் வர ஒன்னேகால் மணி நேரமாச்சு. இங்கிருந்து  நாம் புகிட்  பின்டாங் என்ற  பேட்டைக்குப் போகணும்.  நம்ம மலேசியத்தோழி  'சென்ட்ரலில்  இருந்து  புகிட் பின்டாங் போக பதினைஞ்சு ரிங்கெட்க்கு மேலே கொடுக்காதீங்க'ன் னு  சொல்லி இருந்தாங்க. டாக்ஸிக்காரங்க  ரெண்டு மூணு பேர் சொல்லிவச்சமாதிரி  முப்பது வெள்ளின்னதால் வேறவழி இல்லாம  ஒரு டாக்ஸி பிடிச்சோம்.  டிரைவர் கதிர். அவரிடம் பேச்சுக் கொடுத்தப்ப...  முதலில் கழுத்துலே இருக்கும் சங்கிலியைக் கழட்டி வச்சுருங்கன்னார்.  திருடர்கள் அதிகமாம்.  சரின்னு தலையாட்டிட்டு,  தோழி இப்படி பதினைஞ்சுக்கு மேலே கொடுக்க வேணாமுன்னு சொன்னதைச் சொன்னால்....  'அப்படின்னா அவுங்களே வந்து உங்களைக் கூட்டிட்டு போகலாமுல்லே'ன்னார்!  நல்ல பதில். நல்ல ஐடியா. ஆனால் இதுக்காக அவுங்க நியூஸியில் இருந்து  வரணுமா, இல்லையா!

பார்க் ராயலில் செக்கின் செஞ்சப்ப  சிட்டி வியூ வேணுமுன்னால்.....  ஸ்விம்மிங் பூல் வியூதான் இப்போதைக்கு இருக்குன்னுட்டாங்க.  வேற  அறை காலியானால் நாளைக்கு மாற்றிக்கலாமாம். நமக்கு  19 வது மாடி என்பதால்   பிரச்சனை இருக்காதுன்னு  இருந்துட்டேன். (மொத்தம் 21 மாடி இருக்கு) இந்த ஏரியா ஷாப்பிங் பிரசித்தமாம். எல்லாமே 'காலெட்டும்' தூரத்தில்!  ரெண்டு நிமிச நடையில் ஒரு பெரிய ஷாப்பிங் ஆர்கேட். அதன் மாடியில்  மோனோ ரயில் ஸ்டேஷன்.

நம்ம அறையில்  இருந்து பார்த்தால்  ரயில் நிலையம் கண்ணுக்குத் தெரியுது.  ஹொட்டேல் வாசலையொட்டியே  ரயில்கள் போறதும் வாரதுமா  ஓசைப்படாம ஓடுவது  பார்க்கவே ஒரு அழகு.


கொஞ்சம்  தலையை கீழ்நோக்கிச் சாய்ச்சால்  நீச்சல்குளம்!  பார்வையை நேரா செலுத்தினால்  கே எல் டவர்.
ப்ரெஷப் செஞ்சுக்கிட்டு  சாப்பாட்டைத் தேடி வெளியே போனோம்.  நம்மூர் சாப்பாடு ஏகத்துக்கும் இருக்கும் ஊரில்  பார்க் ராயலின் வெள்ளைக்கார மெனு யாருக்கு வேணும்?

பக்கத்து ஷாப்பிங் ஆர்கேட்  ஃபுட்கோர்ட்டில்  ஏகப்பட்ட உணவுக்கடைகள். ஆனால் மருந்துக்கும் இந்திய உணவு இல்லை. கால்வலிக்கும்வரைத் தேடிப்பார்த்துட்டு  தாய் உணவை வாங்கி உள்ளே தள்ளிட்டு  அங்கே இருந்த சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைஞ்சோம். ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கிட்டுச்  சும்மா ஒரு ரவுண்டு வந்தால்  பழங்கள் பகுதியில் மாம்பழம்!  பெருசா இருக்கு.  ஒன்னு வாங்கிக்கலாமுன்னா நறுக்கித் தின்ன கத்தி இல்லை.   நறுக்கித் தரமுடியுமான்னு  கேட்டதும் நோ ஒர்ரீஸ்ன்னு அழகா நறுக்கி  பேக் பண்ணிக் கொடுத்தாங்க.

ஆஹா ஆஹா....சர்வீஸ் என்றால் இது!

இரவில் கே எல் எப்படி இருக்குன்னு  அறையிலிருந்தே பார்த்து மகிழ்ந்தோம்.  தொலைக்காட்சியில்  எதோ தமிழ் நிகழ்ச்சி  போய்க்கிட்டு இருந்தது.  நாளைக்குக் கதை நாளைன்னு  படுக்கையில் விழுந்தோம்.

குவாலா லம்பூர்   Kuala Lumpur  என்பதை செல்லமா கே எல் என்று சுருக்கிட்டாங்க.  தமிழிலும்  கோலாகலமா இருக்கட்டுமேன்னு  கோலாலம்பூர் ஆகி இருக்கு போல!

கோலாலம்பூர் என்பதன் பொருள் என்னவாம்?   It means "Muddy confluence" (of two rivers, the Klang and the Gombak) விக்கியண்ணன் சொல்றார்.

வெள்ளீயச் சுரங்கம் (Tin mining )  காரணமா  1857 ஆண்டு உருவான சின்ன ஊர் இப்போ  மலேசிய நாட்டின் மிகப்பெரிய நகரமாவும், தலைநகராவும் வளர்ந்துருக்கு.  ஜனத்தொகை  நகரில் மட்டும்  ஏறக்குறைய 1.7  மில்லியன்.  பெரிய ஊரா இருந்து  நகரம் என்ற அந்தஸ்து கிடைச்சது  1972 இல்தான்.

நாட்டில் மன்னராட்சி  இருந்தாலும்  ஜப்பானியர்கள்  பிடியில் ஒரு மூணு வருசம் எட்டுமாசம் இருந்துருக்கு! (1942 -1945)

அதுக்குப்பிறகு  நாட்டில் தேர்தல் நடத்தி  நிர்வாகப்பொறுப்பை ஏற்று நடத்த மந்திரிசபை  உருவாக்குனாங்க. ஆனாலும் மன்னர்தான் தலை!  (சுருக்கமாச் சொன்னா ப்ரிட்டிஷ் அரசு இயங்குவதைப்போல)  1957  ஆகஸ்ட் 31க்கு சுதந்திரநாடாகப்  பிரகடனம் ஆச்சு.

நாட்டின்  எல்லா  சாலைகளின் விரிவமைப்பு வேலைகளுக்கும்,  ரப்பர்  தோட்டங்கள், சுரங்க வேலைகள் இப்படி  உருவான பொருளாதாரத்துக்கும்  இங்கேவந்து உழைச்ச   இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் பங்கு  மகத்தானது.

 கொஞ்சம் கொஞ்சமா   நமக்குக் கிடைச்ச  விவரங்களைப்  போகப்போகச் சொல்லலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு.

தொடரும்..........:-)




32 comments:

said...

அழகான ஊரில நம் ஊர் வாடை அடிக்கிறதே.:(
இவங்க பாம் வளர்த்து நமக்கு ஆயிலைக் கொடுக்கிறாங்க.செழிப்பான நாடுதான் போல.

said...

படங்கள் அருமை... மலேசியாவின் அழகு அருமை...

said...

மலேசிய படங்கள் அருமை...

said...

கலர்ஃபுல் மலேஷியாவின் அழகை ரசிக்கக் காத்திருக்கோம்.

said...

புது விமான நிலையம் கட்டுனதும் பழைய டெர்மினலை இப்படி மலிவு விலை சமாச்சாரமா ஆக்கிட்டாங்க. ஏணியை வச்சு ஆட்களை இறக்கி நடந்து போங்கன்னு விரட்டாத குறை. கூரை போட்ட பெரிய நடைபாதையில் நடக்க ஆரம்பிச்சோம். ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் இருக்குமுன்னு நினைச்சேன். நல்லவேளை தலைக்கு மேல் கூரையாவது கிடக்கு//

ஆமாங்க மலேஷியர் ஏர்லைன்சுக்கு மட்டுந்தான் புதிய இன்டர்நேஷனல் ஏர்போர்ட். லோ காஸ்ட்னா அவ்வளவு கேவலம். நம்ம ஊரு பஸ் ஸ்டான்ட் மாதிரி, சுத்தமே இல்லாம, கசகசன்னு...

நாங்க போறப்பல்லாம் மருமகன் கார்ல வந்து பிக்கப்பண்ணிருவாரு. அவர் ஒரு தரம் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சி.. இடைபட்ட நேரத்துல லோக்கல் சைனி டாக்சிக்காரங்கக் கிட்ட படாதபாடு பட்டுட்டோம். ஆனா போன தடவ போனப்போ அந்த தொல்லை அவ்வளவா இல்லை. இப்போ டாக்சி பிக்கப் ஏர்போர்ட்டுக்குள்ள இல்லன்னு மருமகன் சொன்னார்.

said...

வாயில் இருக்கு வழி

குறுங்கவிதையோ?

said...

மலேசியா பயணக்கட்டுரை ஆரம்பம் அருமை. படங்கள் அழகு. தொடர்கிறேன்.

said...

//ரொம்பவே அழகான பன்னாட்டு விமானநிலையம் என்று கேள்விப்பட்டதால் ஆவலோடு காத்திருந்தேன்//

அந்நியன் படத்தில், "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாட்டில் காட்டப்படும் Airportஐப் பாத்து ஏமாந்துட்டீங்களா டீச்சர்???:)

எங்க அம்மாவும் இப்படித் தான் ஏமாந்து போனாங்க:)

//LCCT (Low cost carrier terminal)//
இது சிங்கையிலும் உண்டே?
ஆனா, அம்புட்டு மோசமா இருக்காது!

2009 இறுதியில் ஒரு சிங்கை-மலேசியப் பயணம்;
அம்மா-அப்பாவுக்காக மட்டுமே! என் மனசெல்லாம் வேற எங்கேயோ..

அம்மா முகத்தில் கொஞ்சம் சிரிப்புக்காகக் கூட்டிப் போனேன்;ஆனா, LCCT இல் அவங்களை, நடையோ நடை -ன்னு நடக்க வுட்டுட்டாங்க!

said...

//ரெண்டு பக்கமும் ஒருவித பனை மரங்கள் பெரிய அளவில் நட்டுவச்சுருக்காங்க. இதிலிருந்து வரும் கொட்டையில் இருந்துதான் பாமாயில் எடுக்கறாங்க//

இதனால் வந்தது தான், அண்மையில் இத்தனை "புகை" களேபரமும்:)

பாம் ஆயில் (பனை எண்ணெய்), உணவு மட்டுமல்ல; Bio Diesel ஆகவும் பயன்படுது; அதான் கிழக்காசியச் சந்தைகளில் சக்கைப் போடு போடுது!

பனை எண்ணைய் = சங்கத் தமிழிலேயே உண்டு!

பனை மரம் = தமிழ் நாட்டின் "பெரும் தொன்மங்களில்" ஒன்று!
தமிழ்க் கடவுள் முருகனை விடத் தொன்மையானது!

பனை மரத்தைப் பாக்கும் போதெல்லாம், ஏனோ தெரியல, ஒரு இனம் புரியாத பாசம் வரும்!

(எங்கள் வாழைப்பந்தல் கிராமத்துக்கு அருகில் உள்ள செய்யாறில் தான், ஞான சம்பந்தர் ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினார் -ன்னு சொல்லும் சைவத் தமிழ் இலக்கியங்கள்)

said...

//மாம்பழம்! பெருசா இருக்கு. ஒன்னு வாங்கிக்கலாமுன்னா நறுக்கித் தின்ன கத்தி இல்லை//

ஞானப் பழத்தையெல்லாம் நறுக்கக் கூடாது; அப்படியே ஒழுக ஒழுகத் திங்கணுமாம்:))

//வெள்ளீயச் சுரங்கம் (Tin mining ) காரணமா 1857 ஆண்டு உருவான சின்ன ஊர் இப்போ மலேசிய நாட்டின் மிகப்பெரிய நகரமாவும்//

Batu Caves முருகன் போலவே Tin Mines Resort-உம் ரொம்ப பிரபலம்! போனீங்களா டீச்சர்?

Tin க்குத் தமிழில் "தகரம்" ங்கிற பேரை விட,
"வெள்ளீயம்" -ங்கிற பேரு ரொம்ப நல்லா இருக்கு:)
நல்ல தமிழ்ச் சொல்லை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி டீச்சர்!:)

said...

அடுத்து வந்துவிட்டோம் மலேசியா :) சுற்ற வருகின்றோம்.

said...

படங்கள் அழகு... அருமை...

said...

அடுத்த பயணத் தொடர்.....

மகிழ்ச்சியுடன் நாங்களும் தொடர்கிறோம்....

said...

சிறப்பா ஆரம்பிச்சுருக்கீங்க !! விஸ்தாரமா இருக்கும் போல தெரியுது . ஆவலோடு காத்துருக்கோம் .

said...

படம் 4 அருமையான கோணம். மற்ற படங்களும் அழகு. தொடருகிறோம்.

said...

மறுபடியும் ஒரு தொடர் பதிவு, மறுபடியும் ஒரு அழைப்பு.... என்ன பண்ண சொல்றீங்க? எனக்கு உங்களையும் தருமியையும் விட்டா யாரும் இல்லையே...

said...

வாங்க வல்லி.

இந்த பனை எண்ணெய் மட்டும் பில்லியன் டாலர் பிஸினெஸ். பயங்கர ஏற்றுமதி. போனவருசம் உற்பத்தி 1,385,607 டன்! நாட்டுக்கு நல்ல வருமானம் சம்பாரிச்சுத் தருது! ரப்பரை விட வருமானம் அதிகமா இருக்கு! ரப்பர் 15 பில்லியன். பனை எண்ணெய் 50 பில்லியன்!!!!

நம்மாட்கள் இருக்கும் ஊரில் நம்ம வாசனை அடிக்காதா என்ன:-))))

said...

வாங்க சங்கவி.

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க இன்றையவானம்.

ரசித்தமைக்கு நன்றி

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரொம்ப எதிர்பார்க்காதீங்க. கொஞ்சூண்டுதான் (!!) சொல்வேன்:-))))

said...

வாங்க டி பி ஆர் ஜோ.

நீங்களும் கஷ்டத்தை அனுபவிச்சீங்களா!!! பஸ் ஸ்டாப் கூட வெளியே ரொம்ப தூரத்தில்தான்.

கணினி தொடர் பதிவு எழுதணுமுன்னு யோசிச்சால் அது பாட்டுக்கு 28 வருசம் பின்னே ஓடுது. கொஞ்சம் டயம் தாங்க. எப்படியும் எழுதிருவேன். நல்ல டாபிக். விடமுடியுதா என்ன:-)

said...

வாங்க ஜோதிஜி.'

குறுங்கவிதை???? பதிவின் நீளம் பார்த்தும் இப்படி நினைச்சுட்டீங்களே:-)))))

said...

வாங்க கோமதி அரசு.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

தனியா ஏமாறலை என்பது கொஞ்சம் மன ஆறுதல்:-)))))

பனையில் இது வேறமாதிரியான பனை. நுங்கு கிடையாது:(

Tin Mines Resort போகலை.ஜென்டிங் கூடப் போகலைன்னா பாருங்க. நெவர் மைண்ட்.நெக்ஸ்ட் டைம்:-)

ஞானப்பழம் கடிச்சுத் திங்க நியூஸ் பேப்பர் இல்லையே அறையில்! கார்பெட் பாழாகிருமே என்ற பயம்தான். ஆனாலும் இது ரொம்பவே பெருசு. ஆசை இருந்தாலும் வயித்துலே இடம் வேணாமா?

said...

வாங்க மாதேவி.
கூடவே வர்றீங்க. அதுக்கே ஸ்பெஷல் நன்றீஸ்ப்பா.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்தமைக்கு நன்றி

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் போகலைன்னா உடம்பே வெலவெலத்துப் போகுது. போய் வந்து அதை எழுதலேன்னா.... அம்புட்டுதான். மனசு பதைக்க ஆரம்பிச்சுருதே:-))))

said...

வாங்க சசி கலா.
பயந்துட்டீங்களா? விஸ்தரிப்பைச் சுருக்கியும் இப்படித்தான் வருது:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஜன்னலில் எட்டிப் பார்த்து க்ளிக்கியது. இறக்கையை வெட்ட முடியலை! ஆனா.... நீங்க பாராட்டுனதும் மகிழ்ச்சியா இருக்கு!

said...

இறக்கை அப்படத்துக்குக் கூடுதல் அழகு:)!

said...

அடடா! நான் இன்னும் பாலித்தீவிலேயே இருக்கேனே! நோ ஒரிஸ்! அங்கேயும் இங்கேயுமா படிச்சுட்டு வரேன்!

ஏர்போர்ட்டுல இறங்கினதுலேருந்து மலேசியப் பயணம் களை கட்டிருச்சு.

அடுத்த பகுதிகளைப் படிக்கப் போறேன்!

said...

வாங்க ரஞ்ஜனி.

நிதானமாக வாங்க.இன்னும் மலேசியாவில்தான் சுத்திக்கிட்டு இருக்கேன். சட்னு கிளம்பும் உத்தேசமில்லை:-))))