Wednesday, August 07, 2013

வேர்க்காத ரயிலும் வேகாத வடையும்! (மலேசியப் பயணம் 3)

ஆளுக்கு  ஒன்னு அறுபது கொடுத்து டிக்கெட்  வாங்கிக்கிட்டு மோனோ ரயில் ஸ்டேஷனுக்குள் நுழையறோம்.  பரவாயில்லை. சுத்தமாகத்தான் இருக்கு. எந்தப் பக்கம் போகணும் என்ற தகவல்கள் விளக்கமா இருக்கு.

எதிர்ப்பக்கம் போகும்  வண்டி  ஓசைப்படாமல் வந்து , நின்னு, புறப்பட்டது. ரெண்டு பெட்டிகள்தான். ரெண்டையும் இணைச்சுருக்காங்க. நம்ம சிங்காரச்  சென்னையிலும் இந்த ரயில் வரப்போகுது என்பதால் கவனிச்சுப் பார்த்தேன்.

இங்கே குவாலா லம்பூருக்கு  மோனோ ரயில் வந்து  இந்த  ஆகஸ்ட் மாசம் 31 தேதிக்கு சரியாப் பத்துவருசம் ஆகுது. பொதுவா முக்கியமான நிகழ்வுகள் இந்தத் தேதிக்குதான் ஆரம்பிக்கும்.  அது என்ன அதிர்ஷ்ட நாளான்னா...... அப்படித்தான் சொல்லணும். ஆகஸ்ட் 31,மலேசிய நாட்டின் சுதந்திரத் திருநாள்.



நகரின் வடக்கு, தெற்காக ரயில்பாதை.  மொத்தம் 11 ஸ்டேஷன்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சால் இரவு பதினொன்னரை வரை ஓட்டம்.  பீக் அவரில்   அஞ்சு நிமிசத்துக்கு ஒன்னு.   மற்றநேரங்களில்  பனிரெண்டு நிமிசத்துக்கு ஒன்னு. 244 நபர்கள் ஒரே சமயம் பயணிக்கலாம். ஆனால் இருக்கைகள் 48 நபர்களுக்கு  மட்டுமே.  மற்றவர்கள்  எல்லாம் ஸ்டேண்டிங். வயசானவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்  இருக்கை ஒதுக்கீடுன்னு தனியா இல்லை என்றாலும்  மக்கள்ஸ் புரிதலோடு அவுங்களுக்கு இடம் கொடுத்துடறாங்க.



மொத்தம் பத்து ரயில் வண்டிகள்   தினம் போய் வந்துக்கிட்டு இருக்கு.


இதுவரை  விபத்தே நடக்கலைன்னு நினைச்சுடக்கூடாது. மோனோ ரயில் பாதை அமைச்சு அதைப் பொதுமக்கள் பயனுக்குத் திறந்து விடுமுன் சோதனை ஓட்டங்கள்   ஒரு வருசமா  நடந்துக்கிட்டு இருந்த சமயம் அது.   ரயிலில் இருக்கும்   13.4 கிலோ எடையுள்ள  ஸேஃப்டி வீல்  கழண்டுக்கிச்சு. நேரா கீழே விழுந்தது அங்கே அகஸ்மாத்தா நடந்து போய்க்கிட்டு  இருந்த  மனிதர்  தலையில்.   இவர்   டேவிட் செல்லையா என்ற ஒரு தமிழ்காரர். (போச்சுடா..... தலையில் விழுந்தாலும் அது தமிழ்த்தலையா இருக்கணுமா!) இவர்  ஊடகவியலாளரும் கூட!  மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்,  ரயில் கம்பெனி மேலே வழக்கு தொடுத்தார்.


இப்படிப்பட்ட ஒரு விபத்து  நடக்கணுமுன்னா ஆறு வித இணைப்பு  அகற்றப்படணும். யாரோ 'விஷமிகள்' போல்ட்டை கழட்டி இருக்காங்க:( ரயிலில் இருந்த 23  பாதுகாப்பு சக்கரங்களையும் பரிசோதிக்கத் தவறிய மோனோ ரயில் கம்பெனி, தங்கள் தவறை உணர்ந்து  பாதிக்கப்பட்ட டேவிட் செல்லையாவுக்கு  ஒரு பெரும் தொகையை  நஷ்ட ஈடாக் கொடுத்து  நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை செட்டில் செஞ்சுக்கிட்டாங்க.

அடுத்த விபத்து 2005 இல்  ரப்பர் டயர்  வெடிச்சதால் ஏற்பட்டது. ரெண்டு பெண்மணிகளுக்கு கையிலும் காலிலும் அடிபட்டது.  இரவு எட்டரை மணி என்பதால் ரயிலில் கூட்டமில்லை.வெறும் முப்பது நபர்கள்தான்.

மூணாம் விபத்து போனவருசம் ஆகஸ்ட் 11, 2012லே நம்ம டுன் சம்பந்தன் ஸ்டேஷனுக்குச் சமீபம். ப்ரேக்டவுன் ஆனதும் பவர் சப்ளை நின்னு போயிருக்கு.183 பயணிகள்.  ஏஸி வேலை செய்யாமப்போய்...... மூச்சு முட்டத்துடங்கி, கடைசியில்  ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைச்சுருக்காங்க பயணிகள்.  பாவம்....ரெண்டு மணி நேரம்  பொறியில் அகப்பட்ட எலிகளா ஒரே அவஸ்த்தை:(   விபத்தை ஆராய்ஞ்சு,   பவர் சப்ளையில்  கோளாறுன்னு கண்டு பிடிச்சாங்க.


இது நடந்து ஆறே நாளில் நம்ம புகிட் பின்டாங் அருகில்  இன்னொரு ப்ரேக் டவுன்.200 பயணிகள். நல்லவேலையா ஏஸி வேலை செஞ்சது. அரைமணி நேரத்தில்  பழுதை சரி செஞ்சுட்டாங்க.

இப்ப எதுக்கு விபத்துக்களைப் பற்றிய விஸ்தரிப்பு?  நம்மூருக்கும்  மோனோ ரயில் வரப்போகுதில்லையா?  அதனால்  என்ன மாதிரி விபத்துக்கள் நடக்கலாமுன்னு  தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லதுன்னுதான். என்னதான் கவனமா இருந்தாலும் விபத்துகள் நேருவது  சகஜம்தானே? அதுவும் பவர் சப்ளை சீராக இல்லைன்னா?

நாமும் டுன் சம்பந்தன்  ஸ்டேஷனில் இறங்கி வெளியே சாலைக்கு வந்தோம்.  ரயிலுக்குள்  ஏஸி சில். வெளியே வேகாத  வெயில்!  நல்லவேளை  நடைபாதைக்கு மேற்கூரை போட்டு வச்சுருக்காங்க.  நடைபாதை நடைபாதையாகவே இருக்கு என்பது சிறப்பு.  கொஞ்ச தூரம் போனதும்  சாலைகள் சேரும் மையப்பகுதி.  இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதை  உடனே  உறுதிப்படுத்துச்சு! சென்னை வாசனை ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு:(

நாற்சந்தி மூலையில் பூமாலைக் கடைக்காரரிடம் சரவணபவன் எங்கே இருய்க்குன்னு விசாரிச்சால்  இடதுபக்கம் கை காமிக்கிறார். கிட்டவா தூரமான்னால்..... தூரம்தானாம்:(  வேற எதாவது  நம்ம உணவுக்கடை  இருக்கான்னா.. இந்தப்பக்கம் காவேரி இருக்குன்னு கை காமிச்சார். நாம் இப்போ வந்த சாலையின் மறுபக்கத்தில் பிரியும் தெரு.  அடடா  குதிரைக் கண்பட்டை போட்டுருந்தோம்:-)



இங்கே பொதுவா ஸ்பெல்லிங் பிரச்சனையே  இல்லை.  polis,  Kedai, Teksi, Restoran, Sentral  இப்படி எல்லாம் படு சிம்பிள் , யூ ஸீ!


சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப்போய் காவேரியை நோக்கி நடந்தோம். 1986 ஆண்டு ஆரம்பிச்சதாம். ஆச்சே  27  வருசம்.

அட! வடை! வெப்ப விளக்கு போட்ட கண்ணாடிப்பொட்டியில்  இட்லியும்  வடையும் 'ஹை'ன்னுச்சு.  மனசின் குரல், 'ஆசையை அடக்கு'.

 ரெஸ்டோரன்னில்  வாடிக்கையாளர் யாருமே இல்லை.  மணி ஒன்பது. வர்றவுங்க வந்துட்டுப் போயிருக்கலாம். தனக்கு ஒரு இட்லியும் வடையும்  வாங்கிக்கிட்டு,  ரவா தோசைக்கு  சொன்னார் கோபால்.  நான் ஒரு சாதா ரோஸ்ட். சட்னி, சாம்பார் ஐட்டங்களுக்கான  தூக்குவாளிக்கொத்து ஒன்னு வந்து மேசையில் உக்கார்ந்தது. ஹைய்யோ! எவ்ளோ நாளாச்சு இதையெல்லாம் பார்த்து!  நம்மூரில்,  கூடுதலாக் கொஞ்சம் சாம்பார் கேட்டால் சின்ன ப்ளாஸ்டிக்  கிண்ணத்துலே இல்லே கொண்டாந்து தர்றாங்க!(எனக்கு வெறும் தோசையே போதும்.  காரமா இருக்குன்னு  சாம்பார் சட்னிக்குத் தடா.)


உனக்கு வடை பிடிக்குமே, ஒன்னு வாங்கிக்கன்னு  வற்புறுத்துனார் இவர்.  வாடிக்கையாளரைப் பார்த்த அதீத ஆர்வத்தில் சூடாப்போட்டுக் கொண்டு வரேன்னு பரிமாறும் நபர் உள்ளெ ஓடுனார்.  பார்த்தால் மொறுமொறு வடை!  ரெண்டாவது விள்ளலில் தெரிஞ்சு போச்சு,  வேகாமக் கிடக்கு:(  ரொம்பச் சூடான எண்ணெயில் போட்டால்  இப்படித்தான்  ஆகும்.

அசடு வழிஞ்ச பணியாளர், வேற ஒன்னு போட்டு எடுத்து வரேன்னார்.   நோ சொன்னேன்.  கோப்பியா தேத்தண்ணியான்னவருக்கு   ரெண்டாவதைச் சொன்னேன்.  பியர் மக் போல் உள்ள பெரிய கண்ணாடி மக்கில் ஆளுக்கு அரை லிட்டர் வந்துச்சு.  சும்மாச் சொல்லக்கூடாது..... நல்ல சுவை. அதுக்காக  500 மில்லி  அதிகமில்லையோ?  பாலுக்கு இங்கெல்லாம் பவுடர்தான்:(  ஃப்ரெஷ் பாலையெல்லாம்  சிங்கைக்கு  ஏற்றுமதி செஞ்சுடறாங்க போல!

கல்லா காதுக்கெட்டும் தூரத்தில்.  வேகாத வடைக்குக் காசு  வாங்கிக்கலை.  எங்கிருந்து வர்றீங்கன்னார் அவர்.  ஊரிலே இருந்துன்னார்  இவர்.  இந்த ஊர்  சமாச்சாரம் நமக்கு ஃபிஜியிலேயே பழக்கம்.   அங்கும் தமிழர்களுக்கு  ஊர் என்றால் அது தமிழ்நாடுதான்.

'எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா'ன்னார் கல்லாக்காரர். 'இன்னும் இல்லை. நேத்து ராத்திரிதான் வந்தோம்.  முதலில் 'பசியாறிட்டு'ப் போகலாமுன்னு  இங்கே வந்தோம்' என்றேன். எனக்கும் ஏகப்பட்ட மலேசிய நண்பர்கள் இருக்காங்கல்லே:-)

பக்கத்துலே  ரெண்டு தெரு தள்ளிப்போனா ஒரு பெரிய கோவில் இருக்கு. நல்லா இருக்குமுன்னார்.

முருகனாம்!  ஓக்கே!

அப்பதான் ஞாபகம் வந்துச்சு.....  பூமாலைக் கடைக்காரர் இருக்காருன்னா பக்கத்தில் கோவில் இருக்கணுமே! என்ன கோவிலுன்னு விசாரிக்காம விட்டுட்டமே:(

ஆனால்  பூக்கடைக்கு  எதிரால்லே  இப்ப போய்க்கிட்டு இருக்கொம்!

தொடரும்....:-)


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


32 comments:

said...

அங்கஏயாவது மெட்ரோ வந்தபிறகு ஆபத்து. இங்கோ வருவதற்கு முன்னாலியே களப்பலியாக எத்தனை உஓ உயிர்கள். வேகாத வடையைத் துளசிக்குக் க்டுத்தவர்க்குத் தண்டனையாக ஆயிரம் வேகாதவடையைக் கொடுக்கச் சொல்லலாம்.

said...

வேகாத வடை.... :((((

இங்கே மெட்ரோவிலும் சில தடங்கல்கள்/விபத்த்துகள்..... ஆனாலும் மெட்ரோ பயணம் நன்றாகத் தான் இருக்கிறது. Peak Hour கும்பல் தான் “யக்” சொல்ல வைக்கும்! :)

said...

எதுகையும் மோனையுமா அழகா பெயரை வெக்கிறீங்களே. அருமை.

வேகாத வடை மேல நீங்க ஒரு கேஸ் போட்டிருக்கலாம். சுடச்சுட எண்ணெய்யில் தள்ளியும் வடை வேகவில்லை. அதுக்கு ஆயிரம் வெள்ளி குடுக்கனும்னு :)

மோனோரெயிலை நெனச்சாத்தான் யோசனையா இருக்கு. மலேசியாவுலயே இப்படின்னா.. நம்மூர்ல. ம்ம்ம்.. முருகனே துணை.

வழி காட்டும் தெய்வம் ஒங்களுக்கு வழி காட்டியிருக்கானே. :)

said...

நடைபாதைக்கு மேற்கூரை போட்டு வச்சுருக்காங்க. நடைபாதை நடைபாதையாகவே இருக்கு என்பது சிறப்பு.

வேகாத வடைதான் கடுப்பு ..!

said...

(வேகாத) வட போச்சே....

said...

மோனோ ரயில் மிகச் சில நகரங்களில் மட்டுமே இருக்கிறது. எல்லா இடங்களிலுமே விபத்துகள் தொடர்கதைதான் என்று எங்கோ படித்தேன். மெட்ரோ போல வெற்றிபெறாத, கைவிடப்பட்டுவரும் டெக்னாலஜியே மோனோ.

said...

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் டீச்சர்:)

ஒரு Teksi புடிச்சி சரவண பவனுக்கே போயிருக்கலாமே?
ஆனா அங்கேயும் பால் பவுடர் தான்:(

வாய் விட்டுக் கேக்கோணும்; அப்போ பால் கலந்த காபி கெடைக்கும்! வாயில் உள்ளது காபி:)

ஜலான் மஸ்ஜித்-இந்தியா-ல ஒரு சரவண பவன் இருக்கு!
அங்கிட்டு தான் அம்மா-அப்பா-நான் சாப்பிட்டது!

அதில்லாம நீங்க போறதா இருந்த துன் சம்பந்தன் KL Central பக்கமும் இன்னொரு சரவண பவன் இருக்கு;
நானும் ஒரு டாக்சி டிரைவர் பையனும் சாப்பிட்டது:)

எதுக்கு Taxi Guy கூடவெல்லாம் போயி சாப்புடறேன்?-ன்னு நினைக்கறீங்களா?:)
மலேசியப் பல்கலையில், சில நூல்கள் தேடிச் சென்றேன் (முதல் உலகத் தமிழ் மாநாடு); அதனால் அம்மா-அப்பாவை அலைய விடலை; நான் மட்டும் சென்றேன்...

அப்போ, இந்த டாக்சிப் பையன் (ராகவேந்திரன்)...
"எதுக்கு சார், ஊர் சுத்திப் பாக்காம, இங்கிட்டு வரீங்க?" -ன்னு யதேச்சையாக் கேட்க..
நானும் சிலப்பதிகார ஆய்வுக் கட்டுரை-ன்னு சொல்ல..

பையன், "தேரா மன்னா, செப்புவது உடையேன்" -ன்னு கண்ணகி வசனத்தைத் தட்டுத் தடுமாறிச் சொல்ல ஆரம்பிச்சான்:)

மீதியை நான் முடிச்சி வைக்க...
I was so happy to see him; He was so happy to see me!
"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே...
கண்ணகி என்பது என் பெயரே என"
-ன்னு நான் முடிக்க.. படக் -ன்னு கையைப் புடிச்சிக்கிட்டான்;

"சார், ரொம்ப நல்லா இருக்கு சார், தமிழைக் கேட்க! இப்படியெல்லாம் படிக்க ஆசை, தொழிலு தான் இப்படி ஆகிப் போச்சு" -ன்னு அவன் சொல்ல..
Thatz when, we had dosa & coffee in Saravana Bhavan!:)

சில டாக்சிக்களில்
சில மனிதர்கள்:)

said...

//polis, Kedai, Teksi, Restoran, Sentral இப்படி எல்லாம் படு சிம்பிள்//

ஹிஹி; ஆங்கில இலக்கண வாத்திகள் ஒங்களை ஒதைக்கப் போறாங்க:))

//வேகாமக் கிடக்கு:( ரொம்பச் சூடான எண்ணெயில் போட்டால் இப்படித்தான் ஆகும்.//

வடையின் தத்துவமே அதானே டீச்சர்!
வெளியே பொரிந்து, உள்ளே வேகாமப் போயீரும்!

ரோட்டோரப் பஜ்ஜி கடைகளில், அடுப்பை மூட்டி, சிறுந் தீயில் வைக்கிறது, இதுக்காகத் தானே!

//ஏஸி வேலை செய்யாமப்போய்...... மூச்சு முட்டத்துடங்கி, கடைசியில் ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைச்சுருக்காங்க பயணிகள்//

பெங்களூரிலும் இப்படி ஆச்சாம்!
பயணிகளைப், "பய"ணிகள் ஆக்காம இருந்தாச் சரி;

said...

//இப்ப எதுக்கு விபத்துக்களைப் பற்றிய விஸ்தரிப்பு? நம்மூருக்கும் மோனோ ரயில் வரப்போகுதில்லையா? அதனால் என்ன மாதிரி விபத்துக்கள் நடக்கலாமுன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லதுன்னுதான்//

Chennai Mono Rail -க்கு ஒங்கள Ambassadorஆப் போட்டுறலாம்:)

முன் கூட்டியே, எவையெல்லாம் இயங்காமல் போக வழியுண்டு? அதுக்கு மாற்று என்ன? -ன்னு வரைவுத் திட்டம்/ Machine Design-இல் சேர்ப்பாங்க!
பொறியியலில், இதுக்கு FMEA ன்னு பேரு (Failure Mode Effects Analysis)

பாருங்க, டீச்சர் மலேசிய ரயிலுக்கே ஒரு FMEA பண்ணிட்டு வந்திருக்காங்க!:)
----

//பக்கத்துலே ரெண்டு தெரு தள்ளிப்போனா ஒரு பெரிய கோவில் இருக்கு. நல்லா இருக்குமுன்னார். முருகனாம்! ஓக்கே!//

"வேர்க்காத ரயிலும், வேகாத வடையும்" - போல
அடுத்த பதிவின் தலைப்பு...
"ஓடாத மயிலும், ஓசிப் பய முருகனும்"

:)))
ஐயோ அடிக்க வராத முருகா..
எனக்கு ஒரே ஒரு மலேசிய நண்பர் தான் இருக்காங்க! அது u only honey:)

said...

தமிழர் பகுதின்னு இல்லை. பொதுவாவே கோலாவுல சுத்தம் கொஞ்சம் கம்மிதான். நம்ம ஆளுங்க பகுதியில கொஞ்சம் ஜாஸ்தியாருக்கும்னு வேணும்னா சொல்லலாம்.

said...

நடைபாதை நடைபாதையாகவே இருக்கு என்பது சிறப்பு. - நச்!

வேகாத வெயிலில் வேகாத வடையா? - அடப்பாவமே!

படங்களுடன் அசத்தல்+ எச்சரிக்கைத் தகவல்கள் - நன்றி டீச்சர்.

said...

வடைப்பிரியைக்கு வேகாத வடையைக் கொடுத்தவரை என்ன செய்யலாம்..

எங்கூர்லயும் மெட்ரோ வரப்போவுது. எச்சரிக்கைத்தகவல்கள் எங்களுக்கும் பயன்படும்.

said...

மோனோ ரயில் informationக்கு நன்றி !! கொஞ்சம் பயத்தோட தான் பயணிக்கணும்போல ...

said...

வேகாத வடை வெளியே வெய்யிலில் வைத்தால் வெந்திருக்குமே :))
அட வடபோச்:(


said...

அங்கும் தெருவில் குப்பைகள்! காரணம் நம் மனிதர்கள்:(!

said...

வாங்க வல்லி.

ஆசை அறுமின் அறுமின் என்று ஆயிரம் முறை சொன்னாலும் கேட்காதவளுக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்கணுமுன்னு இருக்கு.

ஆசை அறுமின் ஆசை அறுமின்.... உ, வடையோடாயினும் ஆசை அறுமின்.

அதென்னப்பா... கொஞ்சம் சின்ன சைஸ் வடையா இருக்கப்டாதோ? ராக்ஷஸ சைஸ்ன்னா இப்படித்தான் ஆகும்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எல்லோரும் வரிசையில்போய் முட்டி மோதாமலிருந்தால் மெட்ரோ பயணம் நல்லாவே இருக்கும்.

said...

வாங்க ஜிரா.

நம்ம மக்கள்ஸ் கொஞ்சம்சுய ஒழுங்கைக் கடைப்பிடிச்சால் நம்மூரும் தானே வழிக்கு வந்திரும்தான்.

ஆனால்.... சுதந்திரமென்பதை ரொம்பவே தப்பாப் புரிஞ்சு வச்சுருக்காங்களே ஆரம்பம் முதல்:(

said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ஹாஹா ஹாஹா!!!

நடைபாதை சிறப்பு, வேகாத வடை கடுப்பு!!!!


உங்கள் பதிலை மிகவும் ரசித்தேன்.

said...

வாங்க வழிப்போக்கன் யோகேஷ்.

நலமா? ரொம்பநாளா நம்ம பக்கம் காணோமே!

வட போனால் போகட்டும். வேகாத யக் நமக்கெதுக்கு:-)

said...

வாங்க சரவணன்.

கொம்யூட்டர்களுக்கு வசதியா எதாவது செய்யதானே வேண்டி இருக்கு?

நகரங்களில் போக்குவரத்து பெரும் பிரச்சனைதான்:(

பார்க்கலாம் நம்மூரில் எப்படி நடத்தப்போறாங்கன்னு!

said...

" பாலுக்கு இங்கெல்லாம் பவுடர்தான்:( ஃப்ரெஷ் பாலையெல்லாம் சிங்கைக்கு ஏற்றுமதி செஞ்சுடறாங்க போல!"

சாப்பாட்டு கடைகளில் மில்க் பவுடர் பாவிப்பதில்லை. கட்டுபடியாகாது. சிங்கபூரிலும் மலேசியாவிலும் பாலுக்கு பதிலாக டின் மில்க் தான் பாவிப்பார்கள்.

சில கடைகளில் பசும் பால் கேட்டால் கடைகளில் விற்க்கும் pasteurized milk ஐ சூட்டாக்கி தருவார்கள். சில நாட்டுபுற கடைகளுக்கு சென்றால் சுத்தமான பசும் பால் கிடைக்கும்

said...

வாங்க Ethicalist E,

முதல் வருகைக்கு நன்றி.

டின் பாலா? அதான் கெட்டியான டீயா!!!

தகவலுக்கும் வருகைக்கும் நன்றி.

மில்க் மெய்டில் டீ போட்டுக் குடிச்சாலும் சுவையாகவே இருக்கும்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

தேரா மன்னா வாசிச்சதும் கொசுவத்தி ஒன்னு பத்திக்கிச்சு.

ஃபிஜி போன புதுசு. ஊர்க்காரவுகளை வந்து சந்திப்பதில் உள்ளூர் மக்களுக்கு ஆர்வம் அதிகம்.

கோவையில் இருந்து ரொம்ப வருசங்களுக்கு முன்னே அந்தூர் நபரைக் கல்யாணம் செஞ்சு செட்டில் ஆன சாரதா அக்கா நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க. அக்காவின் கணவர் ஃபிஜியின் முக்கிய வியாபாரமான சுகர் கார்பொரேஷனின் பெரிய உத்தியோகஸ்தர்.

அக்கா ஃபிஜி போன கையோடு தன் தங்கைகள் மூவரையும் மெள்ள மெள்ளக் கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. அதுலே ஒரு தங்கை நம்ம பேட்டையில் இருக்காங்க.
அக்கா, தங்கைகள் எல்லோரும் அங்கே டீச்சர் உத்தியோகத்தில்.

முந்தியெல்லாம் அங்கே பள்ளிக்கூடத்தில் டீச்சர் வேலைக்கு மக்களை இந்தியாவில் இருந்துதான் அதுவும் சங்கம் பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டில் இருந்துதான் கொண்டு வருவாங்க.

பெரிய தங்கைக்கு ஆணும், பெண்ணுமாய் ரெண்டு பிள்ளைகள். மூத்த பெண் பெயர் குந்தவி. ரெண்டாவது மகன்? என்னை கேட்டாங்க .... பெயர் என்னவா இருக்குமுன்னு? சரியா ஊகிச்சேன் ராஜராஜன். பொன்னியின் செல்வன் வாசகர் வட்டம்:-))))

என்னவோ சொல்ல வந்து எங்கியோ போயிட்டேன் பாருங்க.....

சாரதாக்கா நம்ம வீட்டு வந்து நாங்கெல்லாம் ஜோராய் கதை அளந்துக்கிட்டு இருக்கோம். அப்ப எதோ பேச்சில்..... 'சிவகாமி...நான் உனது ...' ன்னு அவுங்க ஆரம்பிச்சதும் சிதம்பரனே. எனச் செப்புமுன் இருவரும் ஓருடலாயினர் என்று முடிச்சு வச்சேன்.

சாரதாக்காவுக்கு சந்தோஷம் தாங்கலை! அப்படியே கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க.

இந்த சிவகாமி சிதம்பரம் எபிஸோடு எதுலே வருதுன்னு இப்போ நினைவுக்கு வரலை:(

பள்ளிக்கூடக் காலத்தில் பாடத்தில் வாசிச்சதுதான்.

இன்னொன்னு சொல்ல விட்டுப்போச்சே... ஃபிஜியில் தமிழ்நாட்டுலே இருந்து யார் போனாலும் அவுங்களுக்கு உடனே அக்கா, மாமா, அத்தை, மாமி, அண்ணன் இப்ப்டி எதாவது சொந்தமோடுதான் நட்பே ஆரம்பிக்கும்.

இந்தக்கணக்கில் எனக்கு அங்கே ஏகப்பட்ட அண்ணன்கள், அக்காக்கள், அம்மாக்கள் உண்டு. ஒரு நாய்னா கூட இருந்தார்.

ச்சும்மா வாயோடு சொல்லும் உறவு இல்லை. குடும்ப நல்லது கெட்டதுக்கு விட்டுடாம வந்து கையோடு கூப்புட்டுப் போவாங்க.


அப்புறம் மாரியம்மன் கோவில் பூசாரி கூட எங்களுக்கு புஜாரி நய்னாதான்.

said...

வாங்க டி பி ஆர் ஜோ.

தமிழன் தனித்துவமானவன் என்பதை எப்படி பொய்யாக்கலாம் சொல்லுங்க:(

said...

வாங்க கீத மஞ்சரி.

போற போக்கில் 'கண்டதை, கண்டபடி' சொல்லிக்கிட்டே போறேன்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதே அதே. சூஷீச்சால் துக்கமில்லை. கேட்டோ:-)

said...

வாங்க சசி கலா.

எதில்தான் பயமில்லை? நடப்பது நடக்கட்டும் நாராயணன் செயல் என்று இருந்தாலும் நாமும் சூதானமா இருக்கணுமுல்லே?

said...

வாங்க மாதேவி.

வெயில் வச்சுருந்தால் வடவத்தல் கிடைச்சிருக்கும்:-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தமிழனின் தனி உரிமையை பின்னே எப்படிக் காட்டுவது?

இவ்ளோ சொல்றேனே..... ஒரு முறை நியூஸியில் ஒரு இடத்தைப் பார்வையிட ரியல் எஸ்டேட் மூலம் போயிருந்தேன். அப்ப நம கடைக்கு இடம் தேடி அலைஞ்ச காலக்கட்டம்.

ஒரு சீன உணவுக்கடையின் புழக்கடையைப் பார்த்துட்டு, இனிமேல் சீன உணவகம் பக்கமே தலை வச்சுப் படுக்கக்கூடாதுன்னு தீர்மானிச்சது அப்போதான்:( யக் யக்

said...

மெட்ரோ ரயில் பற்றிய தகவல்கள் மிகவும் தேவையானவை. நாங்களும் அதில் பிரயாணம் செய்ய தயாராகி வருகிறோமே!

இத்தனை நாள் குப்பை இல்லாத, மனிதர்கள் இல்லாத இடமாகப் பார்த்த கண்களுக்கு, குப்பையைப் பார்த்ததும்தான் ஆனந்தமே வந்தது!

said...

வாங்க ரஞ்ஜனி.

நியூஸிக்கு அதுவும் எங்கூருக்கு ( உங்கூருக்கு எங்கூர் தங்கை உறவு உண்டு தெரியுமோ?) வர்றதா இருந்தால் ஒரு வாரம் குப்பைகளை விடாமல் தரிசிச்சுட்டு வாங்க. இல்லேன்னா ஹோம்ஸிக்காப் போயிரும்:-)