Friday, August 23, 2013

மாமனும் மருமகனும் இப்படி மலையையே பிடிச்சுக்கிட்டா (மலேசியப் பயணம் 9)

முந்திக் காலத்துலே கிராமங்களில்  பார்த்தீங்கன்னா..... ஒரு தெரு முழுசுமே அடுத்தடுத்து சொந்தக்காரங்களாவே இருப்பாங்க. கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு நினைச்ச காலம்!

அப்படித்தான்  இங்கேயும்  மருமான் வீட்டுக்குப் பக்கத்துலே  மாமனும் அவர் மச்சானுமா,  வேண்டப்பட்டவங்க எல்லோரும் கூட்டணி அமைச்சுக் கிடக்குறாங்க.

இன்னிக்குக் காலையில் அறையிலேயே ப்ரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கிட்டு எட்டுமணிக்கெல்லாம் ரெடியாகிக் கீழே வந்து  நம்ம ஹொட்டேல் வாசலில் டெக்ஸிக்குக் காத்திருந்தோம். ஹொட்டேல் பணியாளர் நமக்கு அதிகம் செலவில்லாத டெக்ஸி கிடைக்க அரும்பாடு பட்டார். ப்ளூ டெக்ஸி வேணவே வேணாமுன்னு அவருக்கு ஒரு அபிப்ராயம். கடைசியில்  ப்ளூதான் கிடைச்சது. மீட்டர் போடறேன். பயப்படாம ஏறுங்கன்னார்  அப்துல் ரெஹ்மான்.

வயசு சொன்னபோது ஆடிப்போயிட்டேன், எழுபது ப்ளஸ்.  இந்தியாவிலிருந்து  அவர் அப்பா இங்கே வந்து செட்டில் ஆனப்பப் பிறந்தவராம். குடும்ப வியபாரத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்துருக்கார். பிள்ளைகள் இப்போ தலையெடுத்து வியாபாரத்தைக் கவனிச்சுக்கறாங்க.  இந்தியாவில் இருந்து  கோவில், பூஜை சம்பந்தப்பட்டப் பொருட்களை இறக்குமதி செஞ்சு விக்கறாங்க. இந்து சமய சம்பந்தப்பட்ட சாமான்கள் பெயரெல்லாம் தண்ணிபட்ட பாடு.  தாத்தா காலத்து வியாபாரமாம். மகள் இப்போ  யுனிவர்சிட்டியில்  படிக்கிறாங்க. மற்ற பிள்ளைகள் எல்லோருமே கல்லூரிப்படிப்பை முடிச்சவங்கதானாம். இவர்தான் வேலையிலிருந்து  ரிட்டயர் ஆகிட்டாலும் பொழுது போகலை,  டாக்ஸி பெர்மிட் இருக்கே, அது சும்மாக்கிடக்கும் நேரத்துலே நாம் ஒரு நாலைஞ்சு மணி நேரம் ஓட்டிக்கலாமேன்னு  வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காராம். அதிகாலை ஓட்ட ஆரம்பிச்சு ஒரு பத்து பதினொன்னுக்கு முடிச்சுக்கிட்டு  வீட்டுக்குப் போயிருவேன்னார். வீடு கூட இங்கே பத்துமலைக்குப்போகும் வழியில்தானாம்.  வாழ்க்கை நல்லாவே போய்க்கிட்டு இருக்கு பிரச்சனை இல்லைன்னார்.

ஒரு இருபத்தியஞ்சு நிமிசத்துலே கோவிலாண்டை கொண்டு விட்டார். சிட்டி விட்டு வெளிவரும்வரை கொஞ்சம் ட்ராஃபிக் ஜாம் இருந்துச்சு. அதுக்குப்பின்.....  ஆஹா, பேஷ் ரகம் சாலை!  'திரும்பிப்போக வெயிட் பண்ணனுமா'ன்னார். ' நன்றி. ஆனால் எவ்ளோ நேரம் இருக்கப்போறோமுன்னு  முடிவு செய்யலை. நாங்க வேற வண்டி பார்த்துக்கறோமு'ன்னோம். 'டெக்ஸி நிறையக் கேப்பாங்கதான். முப்பதுக்கு மேலே கொடுக்காதீங்க'ன்னுட்டு  நம்மிடம் 24 ரிங்கிட் வாங்கிக்கிட்டார்.  இதுலே கோவில் வளாகத்துக்குள்ளே வண்டி கொண்டுவந்து நிறுத்த அங்கே வசூலிக்கும் சார்ஜ் உட்பட எல்லாமே சேர்த்துதான் .

எப்ப வண்டி வேணுமுன்னாலும் கூப்பிடுங்கன்னுட்டு  அவர் ஃபோன் நம்பர் பெயர் உள்ள டெக்ஸி சிட் கொடுத்தார். இங்கே இதுக்குன்னே அச்சடிச்சு விக்கறாங்க போல. நாம் சந்திச்ச டெக்ஸிக்காரர்கள் எல்லாம்  பெயர் எழுதுன கார்டைக் கொடுத்துக்கிட்டுதான் இருந்தாங்க. ஆனா நம்ம அப்துல் ரெஹ்மான்  தனி விஸிட்டிங் கார்டுல்லே அச்சடிச்சு வச்சுருக்கார்!  My 1 Taxi services!

வண்டியை விட்டு இறங்குனதும்  ஒரு  பார்வையிலேயே  வலதுபக்கம் வானுயர்ந்த முருகனும் இடதுபக்கம் ஆனந்த நிலைய விமானமும் பளிச் பளிச்.

முதலில் மலை ஏறுவதா இல்லே  கீழே அடிவாரக்கோவிலான்னு மனம் நினைக்கும்போதே  கால்கள் தானாக  அடிவாரத்தின் இடதுபக்கம் போக ஆரம்பிச்சது. அம்யூஸ்மெண்ட் பார்க்  வளாகத்துலே இருக்கமோன்னு நினைக்கும் வகையில் அழகான கல்பாவிய தரையும் வெட்டி ஒழுங்குபடுத்தப்பட்ட புல்தரைகளுமா ஜொலிக்குது.  இடக்கோடியில்  நம்ம நேயுடு,  கமான் ஹியர்ன்னார். வளாகம் முழுசும் அவர் வழித்தோன்றல்கள் இங்கும் அங்கும் தாவி ஓடுவதும் அழகுதான்.

நாம் பாலியில் பார்த்த  அதே Macaque இனம் தான். ஆனால்  எதையெடுத்தாலும் பிடுங்கிக்கொண்டு ஓடாமல் கொஞ்சம் பண்பட்டவையா இருக்கு.  மெல்லிய ப்ளாஸ்டிக் பை மட்டுமே  அதன் பார்வையில் படும்.  ப்ளாஸ்டிக்  ஒழிப்பு உலகம் முழுசும் நடந்துச்சுன்னால்.....   வேற வகைப் பைகளுக்கு  மாத்திக்குமுன்னு நினைக்கிறேன்.


இங்கிருக்கும்  கோவில்வரிசையில்  மிகவும் சமீபத்தில் லேட்டஸ்ட்டா வந்தவர்  இவர்தான்.  அம்பதடி உசரம். நெஞ்சப் பிளந்து காமிக்கிறார், தன் இஷ்டதெய்வமான ராமனையும் சீதையையும். இவரைக் கடந்தால் இவருக்கான கோவில் ஒன்னு பச்சை நிறத்தில்.  2011 ஆம் வருசம் நவம்பர் 27 மஹாகும்பாபிஷேகம் நடந்துருக்கு. கூப்பிய கரங்களுடன்  மூலவரும் உற்சவரும் வெற்றிலை மாலையெல்லாம்போட்டுக்கிட்டு அருள் பாலிக்கிறாங்க.

கும்பிட்டுத் திரும்பி வந்தால் அடுத்து  பெருமாளும் தாயாரும். தான் திருப்பதி வெங்கடாசலபதின்னு காமிக்க  ஒரு பத்து படிகளுக்கு மேலேறிப்போகும் உசரத்தில்.  கிழக்கு நோக்கிய பெருமாளும் தெற்கு நோக்கிய தாயாரும்.  இங்கே பட்டர் ஒருத்தர் இருந்து  அர்ச்சனை செய்து பிரசாதம் (லட்டு) கொடுத்தார்.

 மேற்கண்ட ரெண்டு கோவில்களிலும் ஏகாந்த ஸேவை லபிச்சது. பெருமாள் சந்நிதிக்குமுன் இருக்கும் கம்பித்தடுப்பையொட்டி நின்னு தலையை இடப்பக்கம் திருப்பினால் தாயார்  சந்நிதி. ரெண்டுபேரோடும் ஒரே நேரத்தில் பேசக்கொள்ள நல்ல சௌகரியம் நமக்கு.  தாயாரே, பெருமாளே..... இன்னிக்கு 39 ன்னு சொன்னேன்.பிரகாரம் சுற்றி வரும்போது இருந்த உண்டியல் இவர் திருப்பதிசாமிதான்னு அடிச்சுச்சொல்லுது:-))))


பெருமாள் சந்நிதிக்கு முன் செல்லம் போல பெரிய திருவடி.  கோபால் அவருடைய வழக்கம்போல் ஒரு தூணுக்குப் பக்கத்தில் அமர்ந்து  'சிவனே'ன்னு  இருந்தார். தியானமுன்னு நினைச்சுக்கலாம்தான்:-)

பெருமாளும் தாயாரும் இங்கே கிளை தொடங்கியது  2007 ஆண்டு. அந்த ஆண்டு சுதந்திர தின ஸ்பெஷல்(ஆகஸ்ட் 31) திறப்பு விழா. ஆச்சு  ஆறு வருஷம்.  வேற சந்நிதிகள்ன்னு பிக்கல்பிடுங்கல் இல்லாம  ஜாலியா ரெண்டு பேரும் நிம்மதியா இருப்பதைப்போல் எனக்கு ஒரு தோணல். ஆண்டாள் கூட இல்லைன்னா பாருங்களேன்!

கிளம்பும் சமயம் ஒரு குழந்தையும் தாயும்   இன்னொரு பெண்மணியும் வந்தாங்க.  நெய் விளக்கேத்திக் கையில் ஏந்தி சுத்தி வரும் பழக்கம் இங்கெல்லாம் இருக்கு போல. குழந்தை, சூடு தாங்காமலோ என்னமோ விளக்கைக் கீழே போட அது உடைஞ்சு நெய்யெல்லாம் பளிங்குத்தரையில் சிதறிவிழ. அம்மா கடுஞ்சொல் சொல்லி, தரையைத் துடைக்க பேப்பருக்கு அல்லாடினாங்க:( குழந்தை முகம் கோணி அழத் துவங்க.......   ப்ச்.  எதுக்குப்பா இதெல்லாம்?(


படிகளில் இறங்கித் தரைக்கு வந்தால் அங்கொரு  அழகான சின்ன அளவான குடும்பம், ரெண்டு குழந்தைகளுடன் .  நம்மை  க்ளிக்கித்தாங்கன்னு  கேமெராவைக் கொடுத்தேன். சின்னப்பேச்சில் , அவுங்க சுற்றுலாவுக்காக  யாழ்பாணத்துலே இருந்து வந்ததாச்  சொன்னாங்க. நிலமை எப்படின்னு கேட்டதுக்கு இப்பப் பரவாயில்லையாம்.

மேலே இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி, அடியில்  அழகான  ஒரு தடாகம். செயற்கை நீரூற்றுகள்  தண்ணீரை  மேலே பீச்சியடிக்குது.  இதையொட்டிய  கட்டிடத்தின் பால்கனியில்  சிவனும் பார்வதியுமா சிட்டிங்.  சிட் அவுட் என்பதை சரியாப் புரிஞ்சுக்கிட்ட ஜோடி.  இதோ வரேன்னுட்டு


அடுத்த வீட்டுக்குப்போனோம். வழிநெடுக வரிசையா ஆறு (படை) வீடுகள்.  'அங்கே 'இருக்கும் அதே திருக்கோலங்களில் இங்கே(யும்) சின்னச்சின்ன  வெள்ளை மாடங்கள் அழகாத்தான் இருக்கு.


 கோவிலுக்குள் புள்ளையார்  அட்டகாசமான அலங்காரத்தில் இருக்கார். குருக்கள் தீபாராதனை காட்டி விபூதி  கொடுத்தார். அடுத்த சந்நிதியில்  மதுரை மீனாக்ஷி. கருவறை சுற்றியுள்ள வெளிப்ரகாரத்தில்  மீனாக்ஷி கல்யாண கோலம்,    ஒருதலையில் ரெட்டையானைகள் இப்படி  அழகழகான சிற்பங்கள். எல்லாம் சுதைச்சிற்பங்களே. தலவிருட்சம்,வாகனங்கள் எல்லாம்  இருக்கு.   நடராஜர் ஆடிக்கிட்டே இருக்கார்.
 மாடிப்படிகளில் ஏறிப்போனால்  யானைகள் வரவேற்கின்றன, மாடியில் அக்கடான்னு தனியா இருக்கார் லிங்கரூபத்தில்  சிவன். அவருக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் இருந்தாலும்  எதிரே கைப்பிடிச்சுவர் தாண்டி  ரொம்பவே அழகான பெரிய நந்தி ஒன்னு  கம்பீரமாக் காலை மடிச்சுப்போட்டு  உக்கார்ந்துருக்கு.  சந்நிதியைச் சுற்றிவர முடியும். ஒருபக்கசுவர் முழுசும் பனிபடர்ந்த  ஹிமயம், வரைஞ்சு வச்சுருக்காங்க.
பசங்கதான்  சுவாதீனமா மாடிக்குத் தாவி வந்து பக்தர் ஒருவர் கையிலிருந்த பையைப் பிடுங்கிக்கிட்டுப் போச்சுங்க.

படிகளிறங்கி கீழே வந்தோம்.  முருகனும் வள்ளியும் தேவயானையும், புள்ளையாரும், சிவனும் பார்வதியும்,மதுரை மீனாக்ஷியும்,  மயிலோடு நிற்கும் முருகனுமா தகதகன்னு மின்னும் உற்சவர்கள் தனித்தனி மாடங்களில் சுவரோரமாக நின்னு அருள்பாலிக்கிறாங்க.
ஆச்சு... எல்லோரையும் தரிசனம் செஞ்சு முடிச்சாச்சு. முருகா,ஹியர் ஐ கம்!

தொடரும்...........:-)
32 comments:

said...

அடிவாரக் கோவிலில் முதலில் மனத்தைக் கவர்வது 'பளிச்' சுத்தம். பெருமாளின் உண்டியல் பளிங்குத் தரையில் நிழலுடன் பிரமாதம்!

சிற்பங்களும் கோவிலும் கண்ணைக் கட்டுகிறது.

மலை மேலே ஏற ரெடி!

said...

Muruga...
I will not come to you!
You come to me! please da

said...

:)
டீச்சர், எனக்கு இந்தப் பதிவு ரொம்ப பிடிச்சிப் போச்சி!
சிரிச்சிக்கிட்டே எழுதறேன் after a long time; நேரம் அதிகாலை 04:30:)

//மருமான் வீட்டுக்குப் பக்கத்துலே மாமனும் அவர் மச்சானுமா//

ஒரு பொண்ணுக்கு இதுல பெரிய சந்தோசம் தெரியுமா?
* ஆசையா, புருசன் கூடவும் இருக்கணும்!
* அதே சமயம் அம்மா-அப்பா கூடவும் இருக்கணும்!
= முடியுமா?

மாமியார் வீட்டில், "வீட்டோட மாப்பிள்ளையா" இரு -ன்னு சொன்னா, "ஆண்"மகனுக்குக் கெளரவக் குறைச்சல் -ன்னு உலகம் சொல்லும்!
ஆனா அதே உலகம், "வீட்டோட பொண்ணா" இரு-ன்னு போற்றும்; அது கெளரவக் குறைச்சல் கிடையாதாம்:)

அதுக்குத் தான் வள்ளி என்ன பண்ணா?
* ஆசை முருகன் கிட்டக்கவே இருப்பா
* அதே சமயம், அப்பா திருமால் வீடும் அக்கம் பக்கத்துலயே இருக்கும்
எப்ப வேணும்-ன்னாலும் போய்ப் பாத்துக்கலாம்:)

Hey vaLLi, me also, like you only!:)
-------------

எங்க மாவட்டத்தில் உள்ள வள்ளிமலையில், முருகன்-வள்ளி சந்நிதியில், தீர்த்தமும்/ சடாரியும் கூட உண்டு!

said...

ஒரு தலை ரெண்டு உடல் யானை.. அட்டகாசம். எடுத்திருக்கும் கோணமும் ஜூப்பரு.

said...

தமிழ்க் கடவுள் இரண்டு பேர்
= திருமால்
= முருகன்

தமிழ்த் தொன்மம் சொல்வதும் அஃதே;
பின்னாள் கலப்பால்/ கதைகளால், எல்லாம் தலை கீழ் ஆயிருச்சி:(

சங்கத் தமிழுக்கு இரண்டு பெரும் "மரபுகள்"!
* முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்!
* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்!

தொல்காப்பியர் காட்டும் மிகச் சிறந்த வரிகள்: "மாயோன் மேய மன் பெரும் சிறப்பின், தாவா விழுப் புகழ்"

முருகனுக்குத் திருப்புகழ் போல்..
திருமாலுக்கு விழுப்புகழ்!!
--------

* தமிழ் இலக்கணத்தின் முதல் திணையே = முல்லை தான்! (மாயோன்)
* பின்பு வருவது = குறிஞ்சி (முருகன்)

ஏன் இப்படிச் செஞ்சாரு தொல்காப்பியரு?
அவருக்கு, ஒன்னை விட இன்னொன்னை ஒசத்தியாக் காட்டணும்-ன்னுல்லாம் கிடையாது! இளங்கோ அடிகளைப் போல பொதுவானவர்! உண்மை மிக்கவர்!

ஏன்னா...
* முல்லை = கார் காலம்
* குறிஞ்சி = குளிர் காலம்
மழைக்கு அப்பறம் தானே குளிர் வரும்?

* முல்லை = (காத்து) இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
அவனுக்காகவே காத்திருந்து, பின்பு புணர்வதில் உள்ள சுகம் தெரியுமா?:)

இப்படி எல்லாமே இயற்கை!
இயற்கை வழிபாடு தான் சங்கத் தமிழில்! மாயாஜாலப் புராணக் கதைகள் கிடையாது!

எதுக்குச் சொல்லுறேன்-ன்னா= வள்ளி!

* வள்ளி = முல்லை நிலத்துக்கு உரியவள்!
* வள்ளி = பின்பு குறிஞ்சி நிலத்துக்குச் சென்றவள்!

said...

வள்ளி = முல்லை நிலத்துக்கு உரியவள்-ன்னு சொன்னேன்-ல்ல?

வள்ளிச் செடி, கொன்றை மரம், மயில் கூட முல்லையின் கருப்பொருள் தான்!
அது எப்படிக் குறிஞ்சி முருகனுக்கு ஆகி நின்றது?

அதான் இயற்கை வழிபாடு!
காடும் மலையும் பக்கத்துப் பக்கத்து இருப்பது!
காடு=முல்லை; மலை=குறிஞ்சி

* காட்டின் மூத்த குடிகள் நடுகல் = மாயோன் (திருமால்)
* மலையின் மூத்த குடிகள் நடுகல் = சேயோன் (முருகன்)

இப்படிப் பக்கத்துப் பக்கத்து மக்கள், கொடுக்கல் வாங்கலாக, இரு மரபுகளும் அண்மித்து இருந்த சங்க காலம்!
அதான் காட்டின் வள்ளியும், குறிஞ்சிக்குப் போனாள், முருகனுக்கு ஆனாள்!

சங்கத் தமிழைப் பொருத்த வரை:
* விஷ்ணு வேற, திருமால் வேற!
* ஸ்கந்தன் வேற, கந்தன் வேற!
புராணம் பின்பு வந்தது! இயற்கை முன்பு வந்தது!!

முன்பே, "கந்து/கந்தன்" பதிவில் சொன்னது போல்...
= "கந்து" என்னும் நடுகல்லில் படரும் "வள்ளிக்" கொடி!
= முருகனும் வள்ளியுமாய், குடி காத்த முன்னோர் மரபு போற்றுதல்!

மாயோன் நிறமும் = கருப்பு
வள்ளியின் நிறமும் கருப்பே
அவள், சேயோனுக்கு ஆகி நின்றாள்!

இப்படி, பெண் மனதுக்கு..
* காதல் கணவன் ஒரு புறம்
* அன்பு அப்பா-அம்மா ஒரு புறம்
இப்படிச் சங்கத் தமிழிலே இயைந்து நிற்பவள் வள்ளி!

said...

//மீட்டர் போடறேன். பயப்படாம ஏறுங்கன்னார் அப்துல் ரெஹ்மான்//

பாருங்க, ஒரு "அப்துல்" தான் ஒங்களை அப்பா கிட்ட கூட்டிப் போயி, அவன் கிட்டயும் கூட்டிப் போயிருக்காரு:)

கோபால் சார்: நீங்க என்ன போஸ்?
நீங்க முருகன் இல்லை கேட்டோ? நீங்க கோ-பாலன், மாயோன்:))))
-----------

All photos sooper teacher!
* அந்த பச்சை மா மலையில் நடு நடுவே பாறையின் வண்ணம்!
* அதன் கீழே, அழகான பெருமாள் கோயில்!

அந்தப் பெரிய திருவடிக்குப் பக்கத்துல, தட்டில் வச்சி இருக்கும் காமாட்சியம்மன் விளக்கு அழகோ அழகு!

//அடியில் அழகான ஒரு தடாகம். செயற்கை நீரூற்றுகள்//

அதான் பத்து மலையின் சரவணப் பொய்கை!
அதன் நுழை வாயிலில், அழகான ஒரு குழந்தை முருகன், கன்னத்தில் கை வச்சிக்கிட்டுச் சிரிக்கும் சிற்பம்! பாத்தீங்களா டீச்சர்?

* பொய்கை = இயற்கையா அமைவது
* குளம் = செயற்கையா வெட்டுவது

சரவணப் பொய்கை = இயற்கையா அமையும் மலைகளில்!
சுனைகளும் உண்டு, வள்ளி மலையில்!
------------

சிவபெருமான் திருமணக் காட்சிச் சிற்பங்கள் ரொம்ப அழகா இருக்கு!

ஆனா அதை விட அழகு: Last but one photo! அந்தத் தனி முருகன்...

பாக்கப் பாக்க என்னமோ பண்ணுது

said...

//வழிநெடுக வரிசையா ஆறு (படை) வீடுகள்//

அந்த ஆறுபடை மண்டபங்கள், கீழ்ப் பத்து மலைக்கே ஒரு தனி அழகு!

* ஆறுபடைகளில், முருகன் Chair போட்டு உட்கார்ந்து இருப்பது = திருப்பரங்குன்றத்தில் மட்டுமே!
* மற்ற எல்லாப் படைவீடுகளிலும், நிற்பான்!!

பழனியிலும் அமர்ந்த திருக்கோலம் தான்! (கீழே = திருவாவினன்குடி)

ஆனா மேல இருக்குற ஆண்டி முருகனே Famous ஆகி விட்டதால்,
கீழே உண்மையான படைவீட்டுக் கோயில், பின்னுக்குச் சென்று விட்டது!

ஐந்தாம் மண்டபத்தில் = திருத்தணி முருகனா?
* திருத்தணி மட்டுமே ஐந்தாம் படைவீடு அல்ல!
* குன்று தோறாடல் என்பதே ஐந்தாம் படைவீடு! அதில் திருத்தணியும் ஒன்னு!

திருத்தணி -ன்னாலே, ஏதோ, மாம்பழக் கோவம் தணிஞ்ச இடம் -ன்னு நினைச்சிட்டு இருக்காங்க! புராணக் கதையால் வந்த வினை:)

ஆனா, அந்தத் "தணிஞ்ச" வேற!

வள்ளிமலைக் காடு = வள்ளியின் ஊர்
திருத்தணிகை = வள்ளிமலைக்குப் பக்கம் தான் (Eastern Ghats)

* வள்ளிமலை முல்லைப் பெண்ணை,
* திருத்தணிகை குறிஞ்சிப் பையனுக்கு,
* கல்யாணம் கட்டி வச்ச இடம் = திருத்தணிகை:)

தணிகை
= அவன் "ஆசை" தணிஞ்ச இடம்
= அவன் "தாகம்" தணிஞ்ச இடம்
:))

திருத்தணி-ன்னா, கல்யாணத் தலம் -ன்னே பலருக்கும் தோனுவதில்லை!
இனி, தோனட்டும்!

அவனுக்கும் - அவளுக்கும்:
* ஆசை ஆசையா மணம் புணர்ந்த இடம் = தணிகை!
* அவனே அவனே -ன்னு வாழ்க்கை பூராக் காத்திருந்து = அவனையே அடைஞ்ச வள்ளி வாழ்க!

with love,
your ravi

said...

கோபால் சார் போலவே...
நானும் அவனும் = http://goo.gl/PFylrM

said...

மலை மேலே ஏற ரெடி...@

said...

மனசு நெறஞ்சு போச்சு !!!. முருகனும் பிள்ளையாரும்
ஹனுமனும் , பெருமாளும் , தாயாரும் . பதிவு நெடுக தெய்வீகம் நெறஞ்சு இருக்கு .
துளசியும் கோபாலும் கண்ணுக்கு அழகு . Ask somebody to ... திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க துளசி .

said...

நாங்களும் உங்களுடன் வந்து நன்றாக தரிசனம் செய்து விட்டோம். அடிவாரக் கோவிலை.
படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.
அடுத்து முருகனை தரிசிக்க வருகிறேன்.

said...

நல்ல படங்கள். இந்தியாவில சாமிய படம் எடுக்க விடமாட்டானுங்க. சாமி கண்ணைக் குத்தீடுமாம்?

said...

நான் எழுத வந்ததை ரஞ்சனி அம்மா எழுதிட்டாங்க.

said...

படங்களும் தகவல்களும் அசத்தல். இனி எப்போது போனாலும் முன்பே போனது போன்றதொரு மாயையின் பிடியில் மாட்டிக்கொள்வோம் யாவரும். மனம் நிறைக்கும் பதிவுக்கு நன்றி டீச்சர்.

said...

//ஆச்சு... எல்லோரையும் தரிசனம் செஞ்சு முடிச்சாச்சு//
நாங்களும் தான். படங்கள் வெகு அருமை.

said...

வாங்க ரஞ்ஜனி.

ஆஹா... ரெடியா!!

கையில் எதாவது ப்ளாஸ்டிக் பை இருந்தால் அதைச் சுருட்டி கண்மறைவா வச்சுக்குங்க. குரங்கன்ஸ், ப்ளாஸ்டிக் ஒழிப்புலே பிஸியாக்கும் கேட்டோ:-)))

said...

வாங்க கே ஆர் எஸ்.

அவன் மனசுக்குள்ளே (மட்டும்) தானாய் வருவான். சிலா ரூபமுன்னா...நாம்தான் (தேடி) போகணும்.

அம்மா வீடு அடுத்தாப்லே இருந்தால் யாருக்குத்தான் மகிழ்ச்சி கூடுதலா இருக்காது?

எனக்கிருந்தால்...... வெறுஞ்சோறுதான் நம்ம வீட்டுலே ரைஸ் குக்கரில் போடுவேன். மீதி எல்லாம் அங்கிருந்து:-)))

அம்மா.....உன் கைப்பக்குவம் எனக்கு வராதுன்னு அப்பப்ப ஒரு சொல். அசட்டு அம்மாக்களுக்கு..... அது போதுமே:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

யானையார் நம்மை விட்டு வைப்பாரா:-))))

said...

கே ஆர் எஸ்,

சூப்பர் படம். அதென்னவோ அவனைப் பார்த்த்தும் நமக்கும் அதே போஸ் ஒட்டிக்குதே:-)))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலம்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பிடலாம்.

வெற்றிவேல் முருகனுக்கு...... அரோஹரா...

சண்டிகர் முருகன் கோவில் செகரட்டரி நினைவுக்கு வரார். எல்லா நார்த்தீஸ்களையும் ஹர ஹர ஹர ஹரா போலோன்னு ,அவர்கள் வாயிலே இருந்து(ம்) அரோஹராவை வராவழைச்சுருவார்

said...

வாங்க சசி கலா.

திருஷ்டி..... அப்டீங்கறீங்க?

நீங்களே நம துளசிதளத்துக்கு திருஷ்டி சுத்திப் போட்டுருங்கப்பா!

said...

வாங்க கோமதி அரசு.

ரசித்தமைக்கு நன்றி.

கெட் ரெடி. இதோ படியில் கால் வச்சாச்சு:-)

said...

வாங்க பழனி கந்த சாமி ஐயா.

இங்கேயும் சிங்கை,பாலி எல்லாம் படம் எடுத்தால் சாமி இன்னும் பவர்ஃபுல்லா ஆகிருது.

இந்தியாவில் மட்டும்தான் கொஞ்சம் வீக்:(

க்ளிக்குனா ஆகம விதிப்படி சாமியின் சக்தி குறைஞ்சுருமாம்:(

அதுவும் கெமெராவைப் பார்த்தவுடன், டிக்கெட் வாங்கியாச்சான்னு ஆளாளுக்கு நாட்டாமை வேற!

said...

வாங்க ஜோதிஜி.

ரஞ்ஜனி க்ரேட்!!!

said...

வாங்க கீத மஞ்சரி.

சரியா எழுதி இருக்கேனான்னு டபுள் செக் பண்ணிக்கலாமே!

ரசித்தமைக்கு நன்றிப்பா.

said...

வாங்க வேல்.

முதல் வருகையோ?

வேலாயுதன் உங்களையும் இங்கே கூட்டி வந்துட்டான் போல!

வாங்க, எல்லோருமா மலை ஏறலாம்.

said...

நான் உங்க ரெண்டு பேருக்கும் சொன்னேன் !!!! அதுவும் நானே இப்போ பண்ணிட்டேன் (ரெண்டு கையால் எடுத்து தலைல நெட்டி ...)என் பெரியபொண்ணுக்கு skypela பாத்து செய்வேன் .அவ எத்தனை நெட்டிமுறி யுதோ அத்தனை திருஷ்டி போச்சினு என்னை கலாட்டா செய்வா.If you feel this is not related to the padhivu you need not publish .

said...

பரீட்சைன்னு எல்லாம் பயமுறுத்தறீங்களே. ஒரு சந்தேகம் கேட்டுக்கறேன்.

அனுமன் நெஞ்சைப் பிளந்தா ராமர் மட்டும்தானே இருக்கணும் அது என்ன இங்க சோடியா இருக்காரு?

அடியேன் சந்தேகத்தை ஆயிரம் பொற்காசுகள் எல்லாம் கேட்காமத் தீர்த்துவையுங்க ரீச்சர், தீர்த்து வையுங்க!

said...

அனைத்து தெய்வங்களும் ஓரிடத்தில் அருமையாக இருக்கிறது.

யாழ்ப்பாணம் நம்ம ஊரு :)ஆட்களை கண்டுகொண்டு நலம் விசாரித்து விட்டீர்கள். மகிழ்ச்சி.

said...

வந்திட்டோம் அட சூப்பர். இன்னும் என்னன்னவோ இருக்கே அங்கே விட்டுட்டமே துள்சி ஜி.. :)

கோபால்ஜியின் போஸ் எல்லாம் சூப்பர் :)

said...

வாங்க தேனே!

முருகனை அப்படிச் சும்மா விட்டுற முடியுதா?

இந்தப் பதிவோடு தொடர்ந்தே இன்னும் ரெண்டு பதிவுகளை அடுத்தடுத்து எழுத வச்சுட்டானேப்பா!

நேரம் இருந்தால் பாருங்களேன்!