கிட்டே போய் அண்ணாந்து பார்த்ததும் பிரமிப்பு !. 140 அடி உசரமாம். விஸ்வரூபம் எடுத்தது போல் நெடுநெடுன்னு நிக்கறான். முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உலகில் பெரிய முருகன் என்று பதிவாகிட்டான். பெரியது எதுன்னு அவ்வையை இப்போ கேட்டிருக்கணும். பத்துமலை முருகனென்று பதில் வந்திருக்கும்:-)
இவனும் வந்து சரியா ஏழு வருசம் ஆகி இருக்கு. 2006 இல் பிரதிஷ்டை. மொத்தம் பதினஞ்சு சிற்பிகள் . எல்லோரும் மூணு வருசமா உழைச்சதின் பலன். தமிழகத்தின் திருவாரூரில் இருந்து தியாகராஜன் என்னும் தலைமைச் சிற்பியும் குழுவினருமா வந்திருந்து இவனை உருவாக்கி நிக்கவச்சுட்டாங்க. இவர் ஏற்கெனவே மலேசியாவில் பல கோவில்களின் கட்டுமானத்தில் பணி செய்தவரே. போன பதிவில் பார்த்த அந்த அம்பதடி ஆஞ்சநேயரும்கூட இவர் கைவண்ணமே! 'பெரிய'முருகனுக்கு 1550 கன டன் காங்க்ரீட் . தாய்லாந்துலே இருந்து 300 லிட்டர் தங்கக் கலவை இப்படி எல்லாம் அதிக அளவில் பயன்படுத்தி இருக்காங்க. மொத்தம் ரெண்டரை மில்லியன் ரிங்கிட் செலவு.
சிலையின் திறப்பு விழாவுக்கு, ஏற்கெனவே தங்கமாலையுடன் ஜொலிக்கும் முருகனுக்கு பொன்நிற மஞ்சள் சாமந்திப்பூ மாலை சூட்டுனாங்க பாருங்க, அதுவே பதினைஞ்சாயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள ஒரு டன் எடையுள்ள பூமாலை. ஆயிரம் கிலோவைத் தூக்கிக் கழுத்தில் போட மனிதக்கைகளால் முடியுமோ? இயந்திரக்கைகளுக்கு அந்தபாக்கியம் கிடைச்சுருக்கு. அந்த க்ரேன் என்ன புண்ணியம் பண்ணியதோ! 2006 வது வருச தைப்பூசம் , என்றும் மனதில் நின்னுபோச்சு நம்ம மலேசிய மக்களுக்குன்னே சொல்லலாம்.
மலையேறலாம் என்று இந்தப்பக்கம் வந்து நின்னதும் மலைத்தேன்! 272 படிகள். என்னால் முடியுமான்னு எனக்கே கவலை. நல்லவேளையா 16 படிகளுடன் பகுதிபகுதியா இருக்கு கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மாநாபா,தாமோதரா, ஹரி, ராமா, க்ருஷ்ணா, கோபாலா, வாசுதேவான்னு ஒவ்வொரு படிக்கும் சொல்லி மெள்ள ஏறினதும் ஒரு செக்மெண்ட் முடிஞ்சுரும். ஒருநிமிச ரெஸ்ட். அடுத்த செட் படிக்கட்டில் கால் வைக்க இடையில் பத்தடி சமதரை. திரும்பி நின்னு கண்ணில் பட்டதையெல்லாம் க்ளிக் க்ளிக்.
நானும் ஒருவழியா 17 முறை 16 நாமம் ஜெபிச்சு மேலே போய் குகைக்குள் காலடி வச்சேன். ஒரு 25 நிமிசத்துலே ஏறிட்டேனேன்ற (தற்)பெருமையுடன் கண்ணை ஏறிட்டால், மயிலுடன் நிற்கும் முருகன் ,'என்னம்மா முட்டிவலி எப்படி இருக்குன்னு சிரிச்சுக்கிட்டே வரவேற்கிறான்.
என் கண்பார்வை இருக்கும் அழகுக்கு பாம்பு கண்ணுலே பட்டுட்டாலும்...... எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கி வச்சேன். சட்டை கிடக்கு! என்ன தைரியம் பாருங்களேன் அந்தப் பாம்புக்கு! மயில் நிற்கும் பாறைக்கு அடியிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்கு! முருகன் இருக்கான்,பார்த்துப்பான் என்ற தைரியமோ!!!!
நினைவுப்பொருட்கள் கடைகள் நிறைஞ்ச பகுதியைக் கடந்து ஒரு பத்துப்படிகள் போல கீழே இறங்கினோம். வெளிச்சத்தில் இருந்து வந்துருக்கோம். உள் இருட்டு கண்ணுக்குப் பழக ரெண்டு நிமிசம் ஆச்சு. நல்ல பெரிய இடமாத்தான் இருக்கு. குகையைச் சுத்திக் கண்ணை ஓட்டுனால் உள்சுவர்களுக்கு ஒட்டுனாப்போல இடும்பன் சந்நிதி. இன்னும் சில படைவீடுகளின் காட்சிகள். கொஞ்சதூரத்தில் மூலஸ்தானம் என்று போட்ட அம்புக்குறி. மஞ்சளா மின்னும் விளக்கின் பளீர்.
சின்னதா கருவறையும் முன்மண்டபமுமா கச்சிதம்.
அர்ச்சனை சீட்டு வாங்கப்போனால்..... மூணு வெள்ளி, சில்லறையாக் கொடுங்கன்றார் கவுண்ட்டர்காரர். கோவில்களில் சில்லறை மாத்துமிடம் கோபாலுக்கு நல்லாவேத் தெரியும். நேரா குருக்கள் கிட்டேபோய் அம்பதுக்கு ஒத்தை வெள்ளியா கைநிறையக் கத்தையா வாங்கிக்கிட்டு வந்தார்.
சீட்டு வாங்கிப்போய் குடுத்துட்டு அர்ச்சனையை கேட்டும், பார்த்தும் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். கற்பூர ஆரத்தி காமிச்சு விபூதி ப்ரஸாதம் கொடுத்தார் குருக்கள். குட்டியூண்டு குகைக்குள் நிற்கும் வேலாயுதர் ஸ்வாமி அருள் பொங்கப் பார்க்கிறார். மன நிறைவுடன் நின்றேன்.
நாம் ஒன்னும் (வழக்கம்போல்) வாங்கிப் போகலைன்னாலும் ஒரு வாழைப்பழம், தேங்காய் மூடி ஒன்னு, வெத்தலை பாக்கு கிடைச்சது. வாழைப்பழத்தை மட்டும் கையில் எடுத்துக்கிட்டு மற்றவைகளை கோபாலின் கைப்பையில் போட்டேன். நல்ல ராசியான பை. லலிதா ஜுவல்லரியில் கோபால் எனக்கு வைர ஒட்டியாணம் (!!!) வாங்கியபோது இலவசமாக் கிடைச்சது:-)))(இது என்ன ஒட்டியாணக் கதைன்னு தெரிஞ்சுக்க விருப்பமுன்னா 'என்னங்க வாங்கிறலாமா? 'போய் பாருங்க)
கையில் இருந்த பழத்தைப் பார்த்ததும் கிட்டே வந்த செல்லத்துக்குக் கொடுத்தேன். அதில் அவன் பெயர் எழுதி இருக்கு:-)
இன்னொரு நாலு வரிசைப்படிகள் மேலே போகுதேன்னு பார்த்தால் அங்கே வள்ளி தெய்வானையோடு முருகன் இருக்கானாம். முப்பத்தியஞ்சு படிகள். ஏறிப்போனால் பளீர்ன்னு இருக்கு குகை. அண்ணாந்து பார்த்தால் ஓப்பன் சிஸெமீன்னு பெரிய துவாரத்தில் ஆகாயம் தெரியுது.
குகையில் இயற்கையாக அமைஞ்ச மேல் திறப்பு. இதுவும் பெரிய இடமே! இங்கும் இடதுபக்கமா முன்மண்டபதோடு ஒரு கருவறை. சந்நிதியில் வள்ளி தேவானை சமேதரா சிரிச்சமுகத்தோடு நிக்கறான். மனைவிகளை விட்டுட்டு தனக்கு மட்டும் சந்தனக் காப்பு. நல்லா இருக்குடா நியாயம்?
இங்கும் தரிசனம் சூப்பரா அமைஞ்சது. கோபால் எழுந்து போனவர், கைநிறையக் கற்பூரக்கட்டிகளுடன் வந்து ' இந்தாம்மா, கொளுத்து'ன்றார். எதுக்கு இவ்ளோன்னால் அப்படித்தான் தர்றாங்கன்றார். ஏற்கெனவே எரியும் கற்பூரக்கூட்டத்தில் இதையும் சேர்த்தேன். அப்புறம் நெய் விளக்கு ஒன்னை ஏத்தி,ஏந்திக்கிட்டு வர்றார். நாலுபேரைப் பார்த்துப் படிக்கணும்தான், அதுக்காக.....
சரி, வாங்க .... கொஞ்ச நேரம் இப்படி சந்நிதி முன்மண்டபத்துலே உக்கார்ந்து கால்களுக்கு ஓய்வு கொடுத்துக்கிட்டே குகைக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேட்டுக்குங்க. பரீட்சைக்கு வரும் பகுதி இது:-)))
வெறும் நானூறு மில்லியன் ஆண்டுகள் வயசுதான் இந்த பத்துமலையில் இருக்கும் சுண்ணாம்புக்கல் குகைகளுக்கு. ஆதியில் பழங்குடி மக்கள் பயன்படுத்திக்கிட்டு இருந்துருக்காங்க. அவுங்க காலத்துக்கு முன்னேயே வௌவால்கள் குகைமுழுக்கச் சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருந்துருக்குங்க.(இப்பவும்தான், ஆனால் எண்ணிக்கை குறைஞ்சு போயிருக்கு)
மலையைச்சுத்தி ஏராளமான ரப்பர் தோட்டங்கள். மலையை ஒட்டியே ஓடும் ஆறு ஒன்னு இருக்கு. Batu river. சில பல ரப்பர் தோட்டங்களுக்கு பத்து எஸ்டேட், பத்து வில்லேஜ் எஸ்டேட் ன்னு ஆற்றின் பெயரையே அடையாளமா வச்சுருந்தாங்க. அதுவே பக்கத்தில் இருந்த மலைக்கும் பெயராச்சு. Batu என்ற பெயரை தமிழில் எழுதும்போது ஒரு சங்கடம். பது, படு என்றால் சரியான உச்சரிப்பு வர்றதில்லை. வேற வழி இல்லாம நானும் பத்து என்றே சொல்லிக்கிட்டுப் போகப்போறேன்:(
ரப்பர் எஸ்டேட் ன்னு சொன்னதும் அங்கே வேலை செய்ய இந்தியாவில் இருந்து இங்கே கொண்டுவரப்பட்ட தமிழர்களின் நினைவு வராமல் இருக்காது இல்லையோ?
ஈயச்சுரங்கம் காரணம் ஏராளமான சீனர்களும் (1860)வந்து சேர்ந்துருந்தாங்க. சாப்பாட்டுக்கான காய்கறித் தோட்டம் போட்டுக்கறதிலே அவுங்க கில்லாடிங்க. எங்க கிறைஸ்ட்சர்ச்சில் கூட சீனர்கள் வந்த பிறகுதான் நமக்குப் பரிச்சயமான வெள்ளைப்பூசணி, பாவக்காய்,சுரைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், சில கீரைவகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. ஹாட் ஹௌஸ் வச்சு விளைவிக்கறாங்க!
தோட்டத்துக்கு உரம் போட வௌவால் எச்சங்களைச் சேகரிக்க இந்த சுண்ணாம்புக் குகைகளுக்குள்ளே வந்துட்டு போயிருக்காங்க. ஆனால் இடத்தைப் பற்றி 'மூச்' விடலை. குன்றின் மேலே ஏறிப்போக வழி? மரத்தின் வேர்கள், செடி கொடிகளைப் பிடிச்சுக்கிட்டு மெள்ளமெள்ள ஏறிப்போகணும்.
ரப்பர் தோட்ட வெள்ளைக்கார முதலாளிகளில் இயற்கை நேசிகளா இருந்த சிலர் அக்கம்பக்கம் குன்றுகள் காடுகளில் எல்லாம் சுத்திப் பார்த்தபோது வெள்ளைக்காரர் வில்லியம் ஹோர்னடே (1878) இந்த குகை சமாச்சாரத்தை வெளியே சொல்லி இருக்கார். ரப்பர் தோட்ட தொழிலாளிகள் தங்கள் ஓய்வு நேரத்தில் வௌவால் பிடிக்க வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. அப்படியே அடிவாரத்துலே இருக்கும் குட்டையிலும் மீன் பிடிச்சுக்கிட்டுப் போறதுதான். இந்தக் குட்டைதான் இப்ப பெரிய தடாகமா இருக்கு. படம் போன இடுகையிலிருக்கு. பார்வதி பரமசிவன் பால்கனியில் இருந்து பார்க்கிறாங்களே அதே தடாகம்தான்.
கோலாலம்பூருக்கும் இந்த குன்றுக்கும் இடைவெளி அதிகம் ஒன்னுமில்லை. வெறும் எட்டு மைல்தானாம். காயாரோகணம் என்றவர் கனவில் மாரியம்மா வந்து, மகனுக்கு ஒரு கோவில் இந்த குகையில் கட்டுன்னு சொல்லி இருக்காங்க. மலையைத் தேடிக்கிட்டு வந்து பார்த்திருக்கார். கீழே இருந்து பார்க்கும்போது குகையின் வாசல் ஒரு வேல் போல இருந்துருக்கு.
அப்போ இருந்த கேப்டன் யாப் ஆ லோய் (Kapitan Yap Ah Loy, founder of modern Kuala Lumpur. செங்கற்சூளைக்கு ஐடியா கொடுத்து அதுக்குன்னு இடம் பார்த்து ஒதுக்கியவர் இவரே)) என்றவருக்கு உதவியாளாரா இருந்தவர்தான் இந்தக் காயாரோகணம். நல்ல செல்வாக்கோடு இருந்துருக்கார். காடுகளை அழிச்சு தோட்டம் வைக்க ஏராளமான ஆட்கள் தேவைப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு வந்து உழைப்பாளிகளை, வேலைவாய்ப்பு இருக்குன்னு சொல்லி மலேயாவுக்குக் கூட்டிப்போனவர் இவர்தான். நம்ம கோலாலம்பூர் மாரியாத்தா கோவில் கட்டிய தம்புசாமி இந்த காயாரோகணத்தின் மகன்தான். மகாமாரியம்மன் கோவிலை செங்கல் கட்டிடமாக் கட்ட அடிக்கல் நாட்டுனது காயாரோகணம்தான். கோவில் வளர்ந்ததைப்பார்க்கக் கொடுப்பினை இல்லாமல் போச்சு.
அப்பாவின் கனவில் மாரியம்மா வந்து சொன்னதை அடிக்கடி நினைச்சுக்கிட்டு இருந்த தம்புசாமி, தகப்பன் மறைஞ்ச ரெண்டாவது வருசம் 1888 முதல்முறையா சுண்ணாம்புக்கல் குகைக்கு ஏறிப்போய்ப் பார்த்தார். கூடவே போனது கந்தப்பத்தேவர் என்ற குடும்ப நண்பர். கோவில் ஒன்னு எழுப்பவேண்டியதுதான் என்ற எண்ணத்தோடு வேல் ஒன்றை நட்டு வழிபாடு ஆரம்பிச்சு இருக்காங்க. முருகன் வந்துட்டான் என்ற சேதி தெரிஞ்ச அக்கம்பக்கத்துத் தோட்டத்தொழிலாளிகள் வர ஆரம்பிச்சது அப்போதான்.
மூணாம் வருசம் 1891 இல் முதல்முறையா தைப்பூசம் கொண்டாட்டம். அக்கம்பக்கத்து மக்கள் வந்து கலந்துக்கிட்டாங்க. குகைக்கு பது கேவ்ஸ் என்ற பெயரும் ஆச்சு. குகையில் ஹிந்து சாமி வழிபாடு நடக்குதுன்னதும், கோலாலம்பூர் நகர(!) கலெக்டர் ஜியார்ஜ் துரை, அந்த வேலைப் பிடுங்கிப்போடச் சொல்லி உத்தரவு போட்டார்.
சாமி மேலே கை வைக்க விடுவமான்னு தமிழாட்கள் கூட்டம் குமிஞ்சது. கலெக்ட்டருக்கு எதிரா கேஸ் போட்டுட்டாங்க. அப்போ நம்ம தம்புசாமி, புகழ்வாய்ந்த வெள்ளைக்கார வக்கீல் டேவிட்ஸனுக்கு உதவியாளராவும் மொழிபெயர்ப்பாளராவும் இருந்தார். வழக்கு நீதிமன்றத்தில் நடந்துச்சு. வெற்றி, கடைசியில் முருகனுக்கே!
முருகன் ஒரு இடுகையில் அடங்கமாட்டேன்றான். பதிவின் நீளம் கருதி பாக்கியை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.
தொடரும்......:-)
26 comments:
முருகா...
ஒரு திரு முருகன்
வந்து உதித்தனன் உலகம் உய்ய!!
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் - எழுந்தே உனைத்
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன் - தொழுதே உருகி
அழும் போதும் வேலும் மயிலும் என்பேன் - அடியேன் உடல்
விழும் போதும் வேலும் மயிலும் என்பேன் - என் காதலனே!
--------
ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித்
தீ்து புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!
--------
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்!
இந்துக்கடல் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம்!!
(வருவான் வடிவேலன் திரைப்படப் பாடல்)
ரொம்ப அழகா, மலையேறி, பத்துமலை முருகன் கிட்ட கூட்டிப் போனீங்க!
மிக்க நன்றி துளசி டீச்சர் & கோபால் சார்!
நீங்க ரெண்டு பேரும், அந்த வள்ளி-முருகன் போலவே,
"ஆதர்ச தம்பதிகள்" என வாழ்ந்து,
வாழ்வெனும் பயணத்துக்குள்ளேயே, இன்னும் பல இன்பப் பயணமெல்லாம் போகணும், பலருக்கும் அன்பு செய்யணும் -ன்னு வாழ்த்துறேன்!
என்னடா, சின்னப் பையன், பெரியவங்களைப் போயி வாழ்த்துறானே -ன்னு தப்பா எடுத்துக்க வேணாம்!:)
மனசு நிறைஞ்சிச் சொன்னதால், வாயில் அப்படியே வந்துருச்சி!!
படங்களும், பத்துமலைக் கதையும், ரசித்துப் படித்தேன்!
அப்பவே முருகன் வழக்காடித் தான் நிக்க வேண்டி இருந்துச்சா? பாவம் டா நீயி!:)
//மொத்தம் ரெண்டரை மில்லியன் ரிங்கிட் செலவு//
பொதுவா, எனக்குத் தெய்வங்களிடத்தில் ஆடம்பரம் பிடிக்காது!
1008 குடம் பாலாபிஷேகம், லட்சத்து எட்டு தேங்காய் உடைத்தல்...
செய்யறவங்க அலங்காரம் செஞ்சா, நகையே இல்லீன்னாலும்..
சந்தனக் காப்பு முடிஞ்சி, அவன் இதழோரம் லேசா வழிச்சி எடுப்பாங்க!
அப்போ, அவன் இதழ்க் கோட்டோரம் ஒரு நகை தெரியும் பாருங்க..
அந்தப் புன்னகையே ஆயுசுக்கும் போதும்-டா!
இத்தனை உயர முருகன் சிலை என்பது (ரெண்டரை மில்லியன் செலலில்), ஒரு நாட்டில், ஒரு இடத்தில் இருந்தால் மட்டும் போதுமானது! தொன்மத்தின் பெருமை என்ற அளவில், வள்ளுவர் சிலை நிக்கலையா? அது போல!!
அதையே காப்பியடிச்சி, ஊருக்கு ஊரு, கட்டினாத் தான் துன்பம்:(
திருச்செந்தூரில் இதை விட உயரமாக் கட்டப் போறதா ஒரு சேதி வந்துச்சி!
அதற்காகும் செலவை, கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளுக்கும்.. Engg/ Medical ன்னு ஏழைப் பிள்ளைகளுக்கு மட்டுமென்றே தனிப் பல்கலைக்கழகம் திறக்கலாம்! இப்படியொரு கல்லூரி இதுவரை இல்லவே இல்லை;
திருப்புகழை Digitize செய்யலாம்; சாகும் நிலையில் உள்ள தமிழிசை/தமிழ்ப் பண்களை வாழ வைக்கலாம்! இன்னும் எத்தனையோ!
வெறும் கோபுரம் கட்டினால், நூறு பேர்
கூடச் சேர்ந்தாப்புல, அதன் நிழலில் நிக்க முடியாது!
திருவரங்கக் கோபுரத்தைத் தான் சொல்லுறேன்!
திருச்செந்தூர் கோபுரம் இன்னும் மோசம்!
அம்புட்டு செலவில் கட்டிப்புட்டு, இன்னிக்கும் மூடியே தான் இருக்கு! வருசத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் திறப்பாங்க!
ஏதோ "ஆகமக் கோளாறாம்" - கட்டி முடிச்ச பொறவு சொல்லுறாங்க!:(
ஆனா, பத்து மலையில் அப்படியெல்லாம் இல்லை!
Special Darshan, 1000 Rs Ticket, காசு குடுத்தாக் கிட்டக்க பார்க்கலாம், இல்லாட்டி எட்ட இருந்து பார் போன்ற "தர்ம-நியாயங்கள்" எல்லாம் இல்லாம, அமைதியான குகைகள்! அமைதியான ஆலயம்! வாழ்க!!
//மறுபடி கேசவா, நாராயணான்னு ஆரம்பிச்சு இன்னொரு 16 படி//
ரொம்பக் குறும்பு டீச்சர் ஒங்களுக்கு:)
திருத்தணியில் போய் கோவிந்தா
திருப்பதியில் போய் அரோகரா
- போடுவீங்க போலிருக்கே!:))
தப்பில்லை! எப்படி அழைத்தால் என்ன?
"தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே" - என்பது ஆழ்வார் வாக்கு!
திவ்ய தேச யாத்திரையில், "முக்கண் அப்பா"-ன்னு அவரே பாடுவாரு!:)
//சட்டை கிடக்கு! என்ன தைரியம் பாருங்களேன் அந்தப் பாம்புக்கு!//
சூப்பர் படம் டீச்சர்!
பாம்பு சட்டை உரிப்பது, அதுவும் மலைகளில், ஒரு இயற்கை நிகழ்வு தான்! நம்மூருல அதுக்கு மக்கள் பல புராணங்களை உருவாக்கீருவாங்க:)
//கோவில்களில் சில்லறை மாத்துமிடம் கோபாலுக்கு நல்லாவேத் தெரியும்.
நேரா குருக்கள் கிட்டேபோய் அம்பதுக்கு ஒத்தை வெள்ளியா கைநிறையக் கத்தையா வாங்கிக்கிட்டு வந்தார்//
கோபால் சார், You are very intelligent!:)
//லலிதா ஜுவல்லரியில் கோபால் எனக்கு வைர ஒட்டியாணம்//
No doubt Gopal sir, Once again, You are very intelligent!:)))
//குகையில் இயற்கையாக அமைஞ்ச மேல் திறப்பு//
ஆமாம் டீச்சர்!
அந்த வான வெளி சூழ் குகை!
மூலத்தானத்தில் இருந்து, சற்று இன்னும் மேலேறிச் செல்லும் படிகள்!
குகைக்குள் சிலு சிலு -ன்னு ரொம்ப நல்லா இருக்கும்!
குகையின் அழகே
குகனின் அழகு!
சந்தனக் காப்பு அவனுக்கு மட்டும் தானா? டேய், fair and lovely எல்லாம் இப்ப ஆம்பிளைங்க தான் போட்டுக்குறாங்க! நீயுமா டா?:))
------
//கே எல் வந்த தமிழ்ச்செல்வன் நண்பனானார்:-)
பள்ளிக் கூடத்துலே தமிழ் சொல்லித் தர்றாங்களாம்! அப்படிப்போடு என் ராஜா!//
ஹிஹி!
அவனுக்குச் சொன்ன பத்து மலைக் கதையை, நானும் ஒளிஞ்சிருந்து கேட்டுக்கிட்டேன்; இனி பிட் அடிச்சீற வேண்டியது தான்!:)
Batu என்றால் பாறை -ன்னு பொருள்!
Batu Caves = பாறைக் குகை!
சுண்ணாம்புப் பாறைகள் இருக்கு-ல்ல?
-----
டீச்சர், இன்னோன்னு சொல்லட்டுமா?
உங்கள் புகைப்படங்கள் பாக்கும் போது, மனசு "திக்"-ன்னு ஆயிருச்சி:(
பத்து மலையில் முன்பு இருந்த வேல் வழிபாட்டைக் காணோம்:((
மூலஸ்தானம் -ன்னு சொன்னீங்க பாருங்க!
அந்தப் போட்டோவை மட்டும் பாருங்க!
சிலையின் கீழ் ஒரு வேல் மட்டும் நிக்குது பாருங்க!
முன்பு, (நான் அம்மா-அப்பாவோடு சென்ற 2009இல் கூட)...
கல்லால் ஆன இயற்கையான வேல் போன்ற உருவம் தான் = மூலவர்!
இதோ படம்: பத்து மலை - மூலத்தானத்து முதல்வன் - வேல் வழிபாடு!
இப்போ, உங்க புகைப்படம் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன்!
ஆகம ரீதியா, உருவ வழிபாடு ஆகி விட்டது போலும்!
யார் சொல்லி மாத்துனாங்களோ, முருகனுக்கே வெளிச்சம்:(
டீச்சர்,
இந்தப் பத்து மலை முருகன் சந்நிதியில் தான், நான் ஒரு "பொய்" வேலை செஞ்சேன்! தப்பு தான்:(
அம்மா-அப்பாவோடு சென்றிருந்த போது...
I had to play a trick on my murugan...
மதியம்... கோயில் நடை சாத்தும் நேரம்! நல்ல மழை வேறு!
அம்மா அப்பாவால் வேகமாக ஏற முடியவில்லை! 300 படிகள்! மழையில் வழுக்குது வேறு!
நான் மட்டும் ஓடோடிச் சென்று, சன்னிதியில் திருப்புகழ் பாட...
திருப்புகழ் என்பதால், அர்ச்சகரால் நடைசாத்த முடியலை! அதற்குள் அம்மா அப்பா மெல்ல வந்து விட்டார்கள்!
தரிசனம் ஆன பிறகு, நான் அவரிடம் உண்மையைச் சொல்லி, மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்!
ஆனால் அவரோ... இன்னொரு முறை பாட முடியுமா தம்பி?-ன்னு கேட்க...
------------
வாழ்வின் முக்கியமான காலகட்டம் அந்தத் தருணம்...
அப்போ எனக்கு முருகன் மேல் ஆயிரம் கோவம்...
அன்பில் விளைந்த பூசலுக்குப் பாவம் அவன் என்ன பண்ணுவான்?
அம்மா-அப்பாவுக்குச் சொல்லாம ஏதோ தப்பு பண்ணப் போறோமோ? -ன்னு மனசில் ஒரு எண்ணம்!
தப்பில்லை! செய்து விடு -ன்னு அதே மனசும் சொல்லுது;
இந்தச் சூழலில், அர்ச்சகரோ, பாடச் சொல்றாரு...
அம்மா அப்பாவைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, கண்ணில் தண்ணி தண்ணியா ஊத்துது!
ரெண்டு கையுமே தாளமாக்கி, ஒலி எழுப்பி, அந்தத் திருப்புகழைப் பாட...
குறை தீர வந்து குறுகாயோ?
கொடிதான காதல் மையல் தீர,
குறை தீர வந்து குறுகாயோ?
இரு நிலம் மீதில் எளியனும் வாழ
எனது முன் ஓடி வர வேணும்!
எனது முன் ஓடி வர வேணும்!
------------
மூலத்தானத்து வேலில் இருந்து, சிவந்த நூலினைக் களைஞ்சாரு!
தாளந் தட்டும் என் கையைப் பிடித்துக் கொண்டாரு அர்ச்சகர்..
அந்தக் காப்புக் கயிற்றைக் கட்டி விட்டு..
வேலின் மேலிருந்த மாலையை எடுத்து, எனக்கே எனக்காய்ச் சூட்ட..
முருகா...
மங்கலக் காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்!
உன் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்!
விழியில் பெருகுவதை துடைத்துக் கொண்டேன்..
அம்மா-அப்பா ஒன்னுமே புரியாமல் விழிக்க..
மறுபடியும் தீபம் காட்டி.. திருநீறு குடுத்து..
நடையைச் சாத்தவே இல்ல.. நான் சொன்ன திருப்புகழைப் பேப்பரில் எழுதித் தரச் சொன்னாரு! எழுதிக் குடுத்தேன்!
அவரும் பாடத் துவங்க:
"அகரமும் ஆகி, அதிபனும் ஆகி - அதிகமும் ஆகி அகமாகி...
இரு நிலம் மீதில், எளியனும் வாழ - எனது முன்னோடி வர வேணும்!"
எனது முன்னோடி வர வேணும்!
முருகா
எனது முன்னோடி வர வேணும்!
(இதுகு மேல எழுத முடிலீக, நிப்பாட்டிக்குறேன்..
மனசு நெறஞ்சு போச்ச்சு துளசி . முருகன் கொள்ளை அழகு . நன்றி நன்றி . போட்டோவை யும் நீங்க எழுதினதையும் படிச்சுட்டா நேரில் பாத்தா திருப்தி வந்துடுது .(with all the kutti kutti details.மழை வந்தா தண்ணி தேங்குமோ )போன்றவை நேரில் பாத்தா மாதிரியே தோண வைக்கும் .
KRS அவர்களின் பின்னூட்டம் அருமை . அவரின் வார்த்தைகள் நானும் வழி மொழிகிறேன் . பால் அபிஷேகம் தேங்காய் உடைப்பது ( இங்க சென்னைல ரொம்ப மோசம் , தெரு முக்கு பிள்ளையார் இருக்கும் எல்லா இடத்துலயும் தேங்காயை தெருவுக்கு தெரு ஒடச்சு வேஸ்ட் ஆகுது. யாரும் முன்ன மாதிரி தேங்காய் பொறுக்கறது இல்ல போல ) என் எண்ணமும் சந்தன காப்பு போறுமே என்பதுதான் .அபிஷேக பணத்தை பணம் தேவைபடற வங்களுக்கு கொடுத்து உதவலாம் என்று தோணும் .
நான் அப்படித்தான் செய்யறேன் .சாமி கோவிச்சுக்காதுன்னு நெனைக்கறேன்.
2005 டிசம்பர்ல போனது ஞாபகத்துக்கு வருது. எங்கப்பம் அழகே அழகு. அப்பதான் தங்க நிற முருகு ரெடியாகிகிட்டு இருந்தத ஞாபகம் இருக்கு.
பரிட்சை போர்ஷன்ஸுன்னு சொல்லிட்டீங்க கவனமா குறிச்சுக்கறேன்.
அருமை... அருமை... ரசித்தேன்... வாழ்த்துக்கள் அம்மா....
உங்களோடவே நாங்களும் பயணித்த மாதிரி தெளிவான படங்களும், வர்அனையும் மிக அருமைம்மா!!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். இங்கே ரத்தினகிரி,பழநி மலை தரிசனம் செய்தேன். இன்று மலேசிய முருகன். அழகு=முருகன். உங்கள் படங்களும் மிக அருமை அம்மா.
எங்களுக்கும் கிடைத்தது அருமையான தரிசனம். படங்களும் பகிர்வும் வழக்கம் போல் சிறப்பு.
பத்துமலை முருகன் தரிசனம் மிக அருமையாக இருந்தது.
உங்களுக்கு நன்றி.
படங்கள் எல்லாம், மிக அழகு.
வாங்க கே ஆர் எஸ்.
//என்னடா, சின்னப் பையன், பெரியவங்களைப் போயி வாழ்த்துறானே -ன்னு தப்பா எடுத்துக்க வேணாம்!:)
மனசு நிறைஞ்சிச் சொன்னதால், வாயில் அப்படியே வந்துருச்சி!!//
வாழ்த்த வயசு ஒரு பிரச்சனையே இல்லை. மனசு இருந்தால் போதுமுன்னு நான் எப்பவும் சொல்வது
இதுக்குத்தான்.
சாமி எதுவும் கேக்கலை. நாம் கொடுத்தா அதுக்கு நிறையப்போகுது? கொடுக்கறவன் அவனால்லே இருக்கணும்?
தங்கத்தகடு போர்த்தும் வேலையெல்லாம் எனக்குச் சரியாத் தெரியலை. பரிசரம் எல்லாம் சுத்தமா வச்சால் போதுமே! அதுலே இல்லாத சந்தோஷமா?
பாலும் அப்படித்தான். குடங்குடமா அவன் தலையில் ஊத்தலாமா? ஒரு சாஸ்த்திரத்துக்கு சின்னதா செம்புலே எடுத்து தலையில் அபிஷேகம் செஞ்சுட்டு பாக்கியை, பாலுக்கு அழும் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாமே!
இப்பவும் மூலவர் சந்நிதியில் ஒரு வேலிருக்கு. அது கல் வேல் இல்லை தங்கவேலாக்கும்!
நடை சாத்தறாங்களா என்ன? ஆனாலும் நன்மைக்காக ஒரு சின்ன பொய் சொன்னால் தவறில்லைன்னுதான் தாடிக்காரரும் சொல்லி இருக்கார்.
எல்லாப் பின்னூட்டங்களுக்கும் நன்றீஸ்.
பதிவின் அழகே பின்னூட்டங்கள்தான்:-)
வாங்க சசி கலா.
உண்மை.சாமி இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டால்.... அது சாமியே இல்லையாக்கும் கேட்டோ!!!
இங்கேயும் தைப்பூசத்தன்னிக்கு உடைக்கும் தேங்காய்கள் பத்துமலையின் உசரத்தோடு போட்டி போடுதே!
வாங்க புதுகைத் தென்றல்.
அடடா.... 2005 ஆ? புதியவர் அதுக்கு அடுத்தவருசம்தானே கண்ணு திறந்தார்!
இன்னொரு சான்ஸ் கிடைச்சால் விட்டுடாதீங்க!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க ராஜி.
ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.
வாங்க வேல்.
வேலாயுதர் முன்னே இப்பவும் 'தங்க' வேல் இருக்கார்.
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி.
ரசித்தமைக்கு நன்றிப்பா.
வாங்க கோமதி அரசு.
முருகனே அழகு. அதான் அவன் சார்ந்த இடங்களில் எடுத்த படங்களும் அழகா அமைகின்றன.
ரசனைக்கு நன்றிகள்.
எவ்வளவு டிடெயில்ஸ் துளசி. உண்மையாவெ மழை பெய்தது என்றால் என்ன செய்வாங்களோ.
கண்ணபிரான் பின்னூட்டங்களால் மனம் நிறைகிறது. முருகனும் ஜொலிக்க்கிறான்.
குகைக்குள்ள எப்படித்தான் இத்தனை அழகு செய்தார்களோ. முருகனுக்கு ஏற்ற இடம். படியேறினவிதம், கோபால் கற்பூரம் கொளுத்தச் சொன்ன அழகு, நெய்விளக்கு மற்றும் படங்கள் எல்லாமே சூப்பர் உழைப்பைக் காட்டுகின்றன. நன்னிங்கோவ்.
பத்துமலை கண்கொள்ளாத தர்சனம்.
தலவரலாறு, கோயில் அமைப்பு இயற்கையாக அமைந்த குகைவெளி என அழகாக விரிவாக தந்துள்ளீர்கள். சந்தணக்காப்பு ரசித்து படித்தேன். நன்றி.
வணக்கம் அம்மா
உங்க மூலமா மலேசியா முருகன் தரிசனம் கிடைச்சாச்சு :)
உழைப்புக்கும்,பகிர்தலுக்கும் கோடானகோடி நன்றிகள்!
இரம்யா
Post a Comment