குறுகலா இருந்த சர்ச்சின் முன்பக்கத்து வழியாக் காரைக்கொண்டுப்போய் பின்பக்கம் நிறுத்துன இடத்தில் கொஞ்சம் தள்ளி ஒரு தகர மறைப்போடு Dடன்னி இருந்துச்சு. ரொம்பப் பழைய சர்ச். சின்னச்சின்ன ஜன்னல்கள், வலமும் இடமுமா ரெண்டு வாசல். வெவ்வேற வடிவில் இருந்த வெறும் கற்களை வச்சே கட்டி இருக்காங்க. இடப்பக்கம் சின்ன வாசலும் வலப்பக்கம் பெரிய கதவுகளுமா இருக்கு.
வண்டி வருவதைப்பார்த்து ரொம்பவே சிரிச்ச முகத்தோடு எங்களைப் பார்த்த கேமெராக்காரர் மாப்பிள்ளை பொண்ணு பேரைச்சொல்லி அந்தக் கல்யாணத்துக்குத்தானே வந்துருக்கீங்கன்னு விசாரிச்சார். ஆமான்னதும் அவருக்கும் நிம்மதி, சரியான இடத்தில்தான் இருக்கோமுன்னு! கிறைஸ்ட்சர்ச்காரர். மணப்பெண்கள் மாப்பிள்ளைகள் என்ற பெயரில் கல்யாணப்படப்பிடிப்புகள் நடத்தும் வியாபாரமாம். பெயர் ஜெஃப்.
வீடியோக்காரர் சும்மா இருக்காரேன்னு நம்ம கெமெராவைக்கொடுத்து நம்மை ஒரு படம் எடுங்கன்னதும் சந்தோஷமாத் தலையாட்டிக்கிட்டே பரபரன்னு புல்சரிவில் இறங்கிப்போய் லாங் ஷாட்டில் பின்னணியில் முழு சர்ச்சும் இருப்பது போல ஒன்னு, மிட் ஷாட்டா ஒன்னு, க்ளோஸ் அப் ஒன்னு க்ளிக்கினார். ஒவ்வொரு க்ளிக்குக்கும் ஒன் டூ த்ரீ சொல்லி சரியாக ஃபோட்டொக்ராஃபர் என்று உறுதிப்படுத்தினார்.
ரெண்டு கிறைஸ்ட்சர்ச்காரர்கள் சேர்ந்தால் பேசும் பொதுவான டாபிக் இப்பெல்லாம் எர்த்க்வேக் என்பதால் நாங்களும் நியதியைப் பின்பற்றினோம். கண்கள் மட்டும் குன்றின்கீழே பதிச்சிருந்தேன். இன்னும் கல்யாணப் பார்ட்டிகளைக் காணோம். இந்தச் சர்ச்தானான்னு மனசுக்குள்ளே ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருக்கு.
அப்ப ஒரு கார் மலையேறிவந்து நம்ம வண்டிக்குப் பக்கத்தில் நின்னுச்சு. ஒரு வயசானவர் இறங்கிவந்தார். கழுத்துப்பட்டியைப் பார்த்ததும் 'பூஜாரி'ன்னு தெரிஞ்சது. ஃபாதர் ப்ரையன் ஃபென்னஸ்ஸி. பொண்ணுமாப்பிள்ளைப் பெயரை ஒருக்கா விசாரிச்சதும் இதே சர்ச்சுன்னு நிம்மதி வந்துச்சு. நேத்து உள்ளே அலங்காரம் எல்லாம் செஞ்சுட்டுப் போனாங்க. சாவி அவுங்ககிட்டேதான் இருக்குன்னார். மணி ரெண்டேகால் ஆகுது இன்னும் யாரும் வரலையேன்னார். பொண்ணு ஹாஃப் இண்டியன். அதான் எங்க வழக்கப்படி நேரம் கடைப் பிடிக்கிறாங்கன்னேன்:(
கோவிலுக்கு வயசு எம்பது. உள்ளே பூசைகள் எல்லாம் நிறுத்தியே கனகாலமாச்சாம். எதாவது விசேஷமுன்னா மட்டும் பயன்படுத்தறாங்களாம். அதுவும் இந்தச் சர்ச்சைப் பத்துன விஷயம் தெரிஞ்ச ஆட்கள் வந்து கேட்டுக்கிட்டாங்கன்னா........
நியூஸியில் பொதுவா கல்யாணங்கள் வருசத்துலே ஆறுமாசம் மட்டுமே நடக்குது. வசந்தம் & கோடையில் மட்டுமே கல்யாண சீஸனாம். அது ஒரு ஆறுமாசம்தானே? சனிக்கிழமையா வேற இருக்கணுமாம் கல்யாணம் நடத்த. அப்படிப் பார்த்தா ஒரு 26 சனிக்கிழமை. இங்கே பலபிரிவுகளில் சர்ச்சுகள் ஏகப்பட்டது இருந்தாலும் 'ஆகி வந்தவை'கள் என்ற வகையில் அதிகமாத் தேறாதாம்.
மேற்படி பாரா தோழியின் முதல்மகள் கல்யாணத்துக்குப் போய் வந்து எழுதுனது. முழு விவரத்துக்கு இங்கே:-)
கல்யாண சீஸனில் பிஸியான்னு ஃபாதரைக் கேட்டேன். ஆமாம். இந்த வருசம் இது ரெண்டாவது கல்யாணமுன்னார்!!!!!
கொஞ்ச நேரத்தில் அரக்கப்பரக்க வண்டியில் இருந்து இறங்கி சரிவில் மூச்சுவாங்க மேலே ஏறிவந்தாங்க தோழி. கையில் சர்ச்சின் சாவி. கதவைத் திறந்து உள்ளே போனோம். சின்னதா அடக்கமா இருக்கு. 120 பேர் உக்காரும் வசதி. உசரே இருக்கும் ரெண்டு மூணு ஜன்னல் மூலமா மெல்லிய வெளிச்சம். வெளிப்பக்கம் கம்பிவலை போட்டு வச்சுருந்தாங்க. ஜன்னல் கண்ணாடிகளில் யேசுகிறிஸ்துவின் வாழ்க்கையின் சில சம்பவங்கள்!
நடுவில் நடைபாதை வச்சு ரெண்டு பக்கமும் உக்கார வரிசையா பெஞ்சுகள். பெஞ்சின் முனைகளில் வெள்ளையா ஒரு ரிப்பன் கட்டிவிட்டுருக்காங்க. அலங்காரம் அம்புட்டுதான்! (அதான் கலர்ஃபுல்லாக்க நாங்க இருக்கோமே!)
உள்ளே முழுக்க முழுக்க மரத்தரை. பெஞ்சுகள் எல்லாம் ரொம்ப இழைக்காம, கோணமாணயாப் பார்க்கக் கொஞ்சம் கச்சாவா இருக்கு. (ஃப்ளின்ஸ்டோனின் ஸ்டோன் ஏஜ் !) எங்கேயும் இரும்பு ஆணிகள் பயன்படுத்தலையாம். மர ஆணிகளே வச்சுப்பிடிப்பிச்சு இருக்காங்க. சுவர்களில் அங்கங்கே பெயர்கள் செதுக்கி வச்சு வருசங்கள் போட்டுவச்சுருக்கு. 1850 முதல் 1858 வரை! கூடவே பெயர்களுக்குப்பக்கத்தில் அறுபதாயிரம்., இருபத்தியஞ்சாயிரம், லட்சத்து அம்பதினாயிரமுன்னு எண்கள் வேற ! கோவில் கட்டி எம்பது வருசம்தான் ஆச்சுன்னா..... இந்த வருசங்கள் எல்லாம் என்னன்னு தெரியலை. ஒருவேளை இந்தக் குடும்பங்கள் நியூஸிக்குக் குடிபெயர்ந்த காலங்களா இருக்குமோ? கொஞ்சம் ஆராயவேண்டியது இருக்கு!!!
இதுக்குள்ளே ஃபாதர் அங்கியை அணிஞ்சுக்கிட்டு வாசலில் வந்து நின்னு வரவேற்புக்கு தயாரானார். மாப்பிள்ளையின் குடும்பம் வந்து சேர்ந்தாங்க. சம்பந்தியம்மா...... லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் வருவதுபோல ஒரு உடுப்பில்!!!!! (தமிழ்ப்பட மாமியார்கள் மனசுலே நிற்பதால்.... எனக்கு பகீர்ன்னு இருந்துச்சோ)
சம்பந்தியம்மா (கருப்பு உடையில்)
கோபால் போய் பெரிய கதவை விரியத் திறந்து வச்சார். விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமா வந்து சேர்ந்து சர்ச் நிரம்பியது. பஸ் வந்துருச்சுபோல. சரியா ரெண்டரைக்கு மாப்பிள்ளை உள்ளே வந்தாச்சு. மாப்பிள்ளையின் பாட்டி பத்து நிமிசத்துக்கு முன்னாலேயே வந்துட்டாங்க. பழுத்த வயசு. 95! தனியாத்தான் வசிக்கிறாங்க. கைத்தடியின் உதவியால் நடந்தாலும் நல்ல செயலாத்தான் இருக்காங்க. பையர் பொண்ணைப் ப்ரப்போஸ் செஞ்சதும் பாட்டிக்கு ஃபோன் செஞ்சு அடுத்த வருசம் கல்யாணம் வச்சுருக்கேன். நீங்க கட்டாயம் வர்றீங்கன்னு சொன்னாராம். சரின்னு சொல்லிக் கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டாங்க!!!!
பாட்டியம்மாகூட ஒரு நாள் இந்தப்பக்கம் ரைடு வந்தபோதுதான் இந்தச் சர்ச் கண்ணுலே பட்டுருக்கு. மனசை இழுத்துப் பிடிக்குதேன்னு இதையே கள(னா)மா முடிவு செஞ்சுட்டாங்க மணமக்கள்.
மணப்பெண்ணை அப்பா கூட்டிவரும் ஐதீகம். காத்திருந்தோம். அதுவரை அக்கம்பக்கத்து விருந்தினருடன் சின்னப்பேச்சில் ஈடுபட்டிருந்தோம். புடவையைப் பார்த்ததும் ஓவர்ஸீஸ் கெஸ்ட், எக்ஸ்டெண்டட் ஃபேமிலின்னு புடவைகளுக்கும் ப்ரவுண் முகங்களுக்கும் ஏகப்பட்ட மரியாதை கேட்டோ:-))))
தோழிக்கு உறவினர்களும் நண்பர்களும் உலகம்பூராவும். முதல்மகள் கல்யாணத்துலே பயங்கரக்கூட்டம். இந்த முறை கொஞ்சம் எண்ணிக்கை குறைவுதான்.
மலேசியத்தோழியின் வளையோசை:-)
கல்யாணவீடுகளுக்கே களைகட்டும்விதமா இருக்கும் டும்டும் பீப்பீ எல்லாம் இல்லாம ஒருவித அமைதி(எங்கள் பேச்சுச் சத்தத்தைத்தவிர) அங்கே. பொண்ணு தன் பெயருக்கேத்த விதமாப் பண்னிப்பிட்டாளே! சாந்தி நிலவ வேண்டும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுண்டாள் நம்ம ஷாந்தி (ஷேண்ட்டி) ஏற்பாடு இப்படின்னு தெரிஞ்சுருந்தால் நம்ம வீட்டில் இருந்து நாதஸ்வர ஸிடியைக் கொண்டு போயிருக்கலாம். இந்தச் சர்ர்சில் பியானோ கூட இல்லைப்பா:(
நேரம் போகப்போக ஃபாதருக்கே.ஒருமாதிரி இருந்துச்சு. கண்ணைப் பார்த்தேன். அடுத்தது காட்டிய பளிங்கு. மாப்பிள்ளையும் மாப்பிள்ளைத் தோழர்களும்(Groomsmen) ஆல்டர் முகப்பில் 'அச்சனுடன்' இருந்தார்கள். எல்லோருடைய கவனமும் பெரியகதவு வாசலில். சட்டென்று ஒரு அமைதி. ஃப்ளவர் கேர்ள்ஸ் உள்ளே வர்றாங்க. ஒரு கேர்ளுக்கு வயசு 13 மாசம்! தத்தித் தத்தி நடக்கும் மழலை தரையில் என்னவோ பார்த்துட்டுச் சட்ன்னு குனிஞ்சது:-)))))
ஃப்ளவர் கேர்ளும் ப்ரைட்ஸ்மெய்டும்:-)
அடுத்து ஒருவர் பின் ஒருவராக Bridesmaids. இது என்னப்பா ஒரு வெள்ளைக்காரச் சொல்? அழகா தோழிப்பெண்கள் என்று சொல்றதை விட்டுட்டு.......brideswomen, bridesfriends ....... நல்லா இருக்காதா?
ப்ரைட்ஸ் மெய்ட்ஸ்
தோ...... ஃபிலிப் மகளைக் கூட்டிக்கிட்டு வர்றார். பொதுவா கல்யாணப்பெண் நுழையும்போது ஆர்கனில் வாசிக்கும் சம்பிரதாயப்பாடல் 'ட......டட்டடா..... ட....டட்டடா.........' இல்லாம வெறிச்ன்னு இருந்துச்சு. ஜனங்களுக்குத் தாங்கலை கேட்டோ! கெமெரா இல்லாத கைகள் லேசா தட்டி ஒரு ஒலி எழுப்புச்சு. (பேசாம ஒரு சிடி ப்ளேயராவது வச்சு இந்த ம்யூஸிக் போட்டுருக்கலாம்) மணி மூணு. அரைமணி(தான்) லேட்.
அப்பா மணமகளை கைப்பிடிச்சு அழைச்சு வர்றார். முதல்மகள் கல்யாணத்துலே இருந்தமாதிரி அவ்வளவா உணர்ச்சி வசப்படலை! பழகிப்போச்சோ:-))))
பைபிள் வசனங்கள் மூணு, பெண்ணின் மாமாபொண்ணு, மாப்பிள்ளையின் தங்கை, கல்யாணத்தை நடத்தும் ஃபாதர்னு மூணுபேரால் வாசிக்கப்பட்டன. தலா ரெண்டு நிமிஷம். கல்யாண உறுதி மொழிகளை விவரிச்சார் ஃபாதர். பொண்ணும் மாப்பிள்ளையும் ஐ டூ, ஐ வில் சொன்னதும் ஆசீர்வதிச்ச மோதிரம் அணிவித்தல். ஜெபம். ஆசிகள் வழங்குதல்.. அரைமணியில் முடிஞ்சது.
ஐ டூ .....ஐ வில்
சர்ச் உள்ளே மேலே தொங்கும் சரவிளக்கைத்தவிர வேற ஒளி இல்லை. எடுக்கும் படங்கள் எல்லாம் சுமாராத்தான் இருக்கு. நாம் ப்ளாஷ் போட்டால் எதிரில் இருப்பவங்களுக்குச் சங்கடமாச்சேன்னு அடக்கி வாசிக்கவேண்டியதாப் போச்சு. எப்படியும் வீடியோ எடுக்க ஒரு ஒளிவெள்ளம் பாய்ச்சுவாங்கல்லே, அதில் குளிர்காயலாமுன்னா..... அப்படி ஒன்னும் விளக்கே யாரும் பிடிக்கலை:( இந்தியாவில் வீடியோக்காரருடன் ஒருத்தர் விளக்கேந்திப்போவாரே...ஏன் இங்கே இல்லை?
இந்த அழகில் படம் எடுக்கன்னே நடுப்பாதை ஓரமா இருந்த நான் வயசான ஒரு தம்பதிகளுக்கு இடம் கொடுக்கவேண்டியதாப் போச்சு. வேற வழி இல்லாமல்....கேமெராவை கோபாலிடம் கொடுத்தேன்.
மூணரைக்கு சர்ச்சைவிட்டு வெளியேறின மணமக்களுடன் மக்கள்ஸ் எல்லோரும் வாசலில் குழுமினோம். மணமக்களை பத்துவிநாடி கட்டிப்பிடிச்சுக் கைகுலுக்கி வாழ்த்தினோம். கெமெராக்கள் கிளிக்கின. கல்யாணப்படங்கள் எடுக்க இன்னொரு ஃபோட்டாகிராஃபர் பெண்மணி வந்துருந்தாங்க. சரிவான புல்வெளி வசதியா காலரி அமைச்சுக் கொடுத்துச்சு.
ஃபாரீன் டெலிகேட்ஸ்:-))))
மற்ற விருந்தினர்களுடன் ஹலோ ஹலோ சுகமா எல்லாம் கேட்டு நாலு வருசத்து இடைவெளி விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். மொத்தம் அஞ்சு புடவைகள். வெய்யில் பளிச்சுன்னு காய்ஞ்சது. டபுள் டெக்கர் பஸ்ஸில் வந்தவங்க எல்லோரும் கிளம்பி மாப்பிள்ளை வீட்டுக்குப் போகணும். அங்கேதான் ரிஸப்ஷன் & டின்னர்.
நாங்க கிளம்பி டிமரு மோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். பிடிச்சது ஒரு பெருமழை! மறுபடியும் வேஷம் மாறி மழை நிக்கக் காத்திருந்தோம். மாப்பிள்ளை வீடு மோட்டலுக்குப் பக்கம்தான் இருக்கு. ஒரு 12 நிமிஷ ட்ரைவ். விலாசம் தேடிக்கிட்டே போனப்பத் தகவல் பலகை பளிச்:-)
பெரிய பண்ணை. வண்டிகள் நிறுத்த பார்க்கிங் போர்டெல்லாம் வச்சு ஜமாய்ச்சுருக்காங்க. ஒரு பக்கம் பெருசா துணிக் கொட்டகை. Jazz இசைக்குழு வாசிச்சுக்கிட்டு இருக்கு. சிறுதீனிகள் தட்டைக் கையிலேந்திய மங்கையர் குறுக்கும் நெடுக்கும் நடமாட விருந்தினர்கள் கோப்பை ஏந்திய கைகளுடன் அங்கங்கே சின்னச்சின்ன முடிச்சுகளா தங்களுக்குள்ளேயே அறிமுகம் செஞ்சுக்கிட்டு அளந்துக்கிட்டு இருக்காங்க.. பப்பத்து ஆட்கள் அமரும்வகையில் வட்ட மேசைகள் பதினொன்னு.( இந்தக் கொட்டாய் (marquee) எனக்கு ரொம்பப்பிடிச்சது. ஆனால் இதுக்கான வாடகையைக் கேட்டால் மயக்கம் வந்துரும்!)
டான்ஸ் ஃப்ளோர்!!!!
கொட்டகையின் முன்பக்கம் ஒரு மேசையில் நடுநாயகமா ஒரு சின்ன ப்ரீஃப் கேஸ். "விஷ்ஷிங் வெல்". என்ன பரிசு வாங்கணுமுன்னு தலையை உடைச்சுக்க வேணாம். எவ்ளோ கொடுக்கலாமுன்னு தலையைப்பிச்சுக்கிட்டால் போதும்:-) இதுக்கு ரெண்டு பக்கமும் மாப்பிள்ளை வீட்டில் பொண்ணு வீட்டில் கடந்த மூணு நாலு தலைமுறைகளில் நடந்த கல்யாண ஃபோட்டோக்கள். இன்னாருடைய எள்ளு, கொள்ளு,பேரன்/பேத்தி. மகன்/மகள் இப்படி வம்சம் சொல்லுது.
மொய்????????
ஒரு கூடை நிறைய வளையல்கள். அவ்வாறா எண்ணிவச்சு ரிப்பன் முடிஞ்சவை. (மணமகளின் விருப்பப்படி இண்டியன் டச்!!!) யார்யார் எந்த டேபிள்ன்னு போட்டுவச்ச தகவல்கள் ஒரு பக்கம். விருந்தினர் வருகையையும் வாழ்த்துகளையும் பதிவு செய்ய ஒரு கெஸ்ட் புக்.
தமிழில் எழுதுன்னு கோபால் வற்புறுத்தியதால் தமிழில் வாழ்த்தினேன்:-) (பொண்ணோட அம்மா எழுத்துக்கூட்டி வாசிச்சுச் சொல்லட்டும். நாந்தான் ரெண்டு வருசம் அவுங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்!)
டின்னருக்கான நேரம் வந்துச்சு. கிறைஸ்ட்சர்ச்லே இருந்து வந்த கேட்டரிங் கம்பெனி. சகிக்கலை:( டிஸ்ஸர்ட் வரட்டும் அதுலே பசியாறலாமுன்னு காத்திருந்தோம். இதுக்கு நடுவில் மணமகள், மணமகன், பெஸ்ட் மேன், பெண்ணின் தந்தை இப்படி ஸ்பீச்சஸ். எல்லோருமே மெனெக்கெட்டு 'நகைச்சுவை'யோடு தயாரிச்சுக் கொண்டு வந்துருந்தாங்க. அடுத்து கல்யாணக் கேக் வெட்டினாங்க. நிகழ்ச்சிகளை ஒருங்கிணைச்சது எங்கூர் பத்திரிகையாளர் ஒருவர். (இங்கே ஒரே ஒரு டெய்லி பேப்பர்தான் இருக்கு. த ப்ரெஸ்) எங்கூர் நிலநடுக்கத்தில் இவுங்க இருப்பிடம் போயிருச்சு. அப்போ தங்க இடம் கொடுத்தது இந்த மணமக்கள்தான். அதான்......இப்ப......... நன்றிக்கடன்:-)
டிஸ்ஸர்ட் வந்துச்சு..... இதுவும் சொதப்பல்.... தோழி வந்து சாப்பாடு சரியே இல்லைன்னு மன்னிப்புக் கேட்டாங்க. மோட்டல் அறை ஃப்ரிட்ஜ்லே வச்சுட்டு வந்த புளியோதரையை நினைச்சுக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டேன். மறுநாள் இங்கேயே ஒரு பார்பிக்யூ வேற ஏற்பாடு செஞ்சுருக்காங்க. அதுக்கு 'ஜகா' வாங்கிக்கணும். தோழியிடம் ஒரு மன்னிப்பு கேட்டு வச்சுக்கிட்டேன். (ரெண்டு வேளைப் பட்டினி தாங்காது கேட்டோ!)
அடுத்து நடனம். டான்ஸ் ஃப்ளோர்ன்னு சின்னதா சதுரக்கற்கள் பாவிவச்சுருக்காங்க. இதுக்கு வாசிக்கன்னு தனி இசைக்குழு வேற! . ஒரு காஃபியைக் குடிச்சுட்டு ஆடறவங்க ஆடட்டுமுன்னு ..... கிளம்பினோம். நம்ம ஜெஃப் வாசலில் வீடியோ கெமெராவுடன் நின்னு மணமக்களுக்கு எதாவது சொல்லுங்க. நான் ஒன் டு த்ரீ சொல்வேன்னார். 'பசிக்குது'ன்னு சொல்லலாமா? ச்சீச்சீ..... வேணாம். 'நல்லா இருங்க'ன்னு சொல்லிட்டு வந்தோம்.
தொடரும்.........................:-)
Tuesday, February 28, 2012
குகையில் கல்யாணம், கொட்டாயில் சாப்பாடு:-)
Posted by துளசி கோபால் at 2/28/2012 10:12:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
நன்னா இருக்கு, கேட்டோ!
உங்க பக்கத்துலயே நின்னு எல்லாத்தையும் பாத்த மாதிரி ஒரு ஃபீலிங் டீச்சர்! ரசிச்சுப் படிச்சேன்!
மண மக்களுக்கு நல்வாழ்த்துகள், திருமண வர்ணனை அருமை, அருகில் இருந்து பார்ப்பது போல் படங்களுடன் கலக்கல்.
மணமகளின் அக்காவுக்கு வாழ்த்து சொல்லி இருக்கோம், முந்தைய பதிவில்.
:)
//சகிக்கலை:( டிஸ்ஸர்ட் வரட்டும் அதுலே பசியாறலாமுன்னு காத்திருந்தோம்.//
அட பாவமே !! இதுக்குத்தான் இது போல திருமணங்களுக்குச் செல்லும்போது
கொஞ்சம் உஷாரா முன்னமேயெ, தலைப்புலே ஃபிரிட்ஜிலேந்து கொஞ்சம்
புளியோதரை எடுத்து ஒரு சின்ன பொட்டலம் கட்டி, முடிஞ்சுக்கிட்டு வந்திருந்தீங்கன்னா,
நீங்களும் ஒரு வாய் போட்டுகினு, அவருக்கும் " ஆழி மழைக்கண்ணா !! ஒன்று நீ கை கரவேல் ! "
என்று ஒரு வாய் கொடுத்திருக்கலாம் !!
மீனாட்சி பாட்டி.
http://kandhanaithuthi.blogspot.com
ஆஹா.... சுவையாக இருந்தது விவரங்கள்...
சாப்பாடுதான் கொஞ்சம் சொதப்பிட்டதோ.... அதான் புளியோதரை இருந்ததே..... அதை ருசித்தேன்... :))
Mr. & Mrs. Gopal look superb together.
Article is humorous with many details, with ur usual style madam
மொய்யெழுதியாச்சு...
அந்தப் பழைய சர்ச்சு ரொம்பவே அழகாருக்கு.. ஹாரி பாட்டர் படத்துல வர்ற மாதிரியான அமைப்பு.
நாதஸ்வர இசை, ப்யானோ இல்லாட்டிப் போகுது. அட.. ஒரு சம்பந்திச் சண்டை கூட இல்லாத கல்யாணமா!! ஆச்சரியமா இருக்கு :-))
ஓ சூப்பரா இருக்கு..
மாப்பிள்ளைபொண்ணும் சூப்பரா இருக்காங்க..
கல்யாண வீட்டை சொல்லவே வேணாம் கலர்ஃபுல்லாக்கத்தான் நீங்க இருந்திங்களே..
கல்யாண கவரேஜ் சூப்பர்.படங்கள் அழகாக இருக்கு.
ஆனா பாவம் நீங்க பசியோட திரும்பினத்துதான் கஷ்டம்.புளியோதரை சாப்பிடீங்களா? அதை சொல்லரத்துக்குள்ள தொடரும் போட்டு விட்டீங்களே?
நல்லா இருங்க' அருமையான வாழ்த்துடன் சிறப்பான குகையில் கல்யாணம், கொட்டாயில் சாப்பாடு:-)"பகிர்வுகள்...
உங்க விவரிப்பில் கல்யாணம் ஜோரா நடந்திருக்குன்னு தெரியுது.....
சத்தமே இல்லாம கல்யாணமா!!!!!!!!!!!
என்ன சாப்பிட்டாலும் நமக்கு ஒரு தயிர்சாதத்துக்கு ஈடாகுமா....
வாங்க பழனி கந்தசாமி.
வளெரே நன்னி கேட்டோ!
வாங்க கணேஷ்.
நீங்க எல்லோரும் கூடவே வர்றதே எனக்கு ஒரு தெம்பு;-)
வாங்க கோவியாரே.
அக்காவை வாழ்த்தினதோடு நில்லாமல் தங்கையையும் வாழ்த்தியதற்கு நன்றிகள்.
அந்த அக்காதான் இந்தக் கல்யாணத்தில் ப்ரைட்ஸ் மெய்டுகளில் ஒருவர். அவருடைய மகள்தான் ஃப்ளவர் கேர்ள்!
நம்ம பக்கத்துக் கல்யாணங்களில் நாம் பொண்ணுக்கோ, இல்லை மாப்பிள்ளைக்கோ இவ்ளோ நெருங்கிய சொந்தமுன்னா..... இப்படியா? அட்டகாசமான புடவைகளிலும் நகைநட்டுக்களிலும் ஜொலிச்சுக்கிட்டுக் கெத்தாத் திரிவோம்ல:-))))
வாங்க மீனாட்சி அக்கா.
வெள்ளைக்கார விருந்துகளில் வெஜிடேரியன் சாப்பாடுன்னு கேட்டுட்டா....நடுங்கிடறாங்க. ஃபிலோ பேஸ்ட்ரின்னு ஒன்னு ஸ்டேண்டர்ட் ஐட்டம் போல. அக்கா கல்யாணத்துலேயும் அதேதான் விளம்புனாங்க. ஆனா அது நல்ல பெரிய ஹொட்டேலில் நடந்ததால் சாப்பிடும் விதத்தில் செய்ஞ்சுருந்தாங்க.
நான்வெஜ் மக்களுக்கும் அவுங்க சாப்பாடு நல்லா இல்லேன்னு ஒரே புலம்பல்.
அடுத்த கல்யாணத்துக்கு உங்க ஐடியாவைத்தான் ஃபாலோ செய்யப்போறேன். ஹேண்ட் பேக் வேற எதுக்கு? :-)))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
சாப்பாடுதான் இந்தக் கல்யாணத்துக்கு திருஷ்டி பரிகாரம்:-))))
வாங்க மோகன்குமார்.
இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கல்யாணப்பொண் லேட் பண்ணி இருந்தால் எங்க அறுவதாம் கல்யாணத்தை அங்கே(யே) நடத்திக்கிட்டு இருப்போம்:-)
வாங்க அமைதிச்சாரல்.
மணமக்கள் மோதிரம் மாத்திக்கிட்டதும் கேண்டில் ஸெரிமனின்னு ஒன்னு. சம்பந்திகள் இருவரும் சேர்ந்து ஒரு பெரிய மெழுகுவத்தியைக் கொளுத்துனாங்க. வீட்டுக்கு விளக்கேத்த மருமகனும் மருமகளும் வந்துட்டாங்கன்னு சிம்பாலிக்காச் சொல்றது:-)
மாப்பிள்ளையின் அம்மா ஒரு ஃப்ளோரிஸ்ட். மலர் அலங்காரம் முழுசும் அவுங்களே செஞ்சாங்க. அதுலே மல்லிப்பூ வைக்கலைன்னு தோழியைக் கிளப்பிவிட்டு சண்டை எப்படிப்போடணுமுன்னு நாந்தான் அவுங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்:-))))))
வாங்க கயலு.
அதெல்லாம் கலக்கிப்புடுவொம்லெ:-)))))
வாங்க ராம்வி.
Dதானே Dதானே மெய்ன் லிக்கா ஹை கானே வாலாக்கா நாம் என்று எழுதுவது மட்டுமில்லாம kabh, kabhi கப், கபின்னு கூட எழுதிவைப்பான் போல!
வாங்க இராஜராஜேஸ்வரி.
கல்யாணத்தில் வந்து கலந்துகிட்டதுக்கு நன்றிகள்.
வாங்க கோவை2தில்லி.
எல்லாம் தெரியாத்தனம்தான்:-))))
ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நானே கொஞ்சம் சமைச்சுக் கொண்டுபோய் கொடுத்திருப்பேன்.
தயிர்சாதம் வேற ஃபிரிட்ஜுலே இருந்துச்சு:-)
குகைக் கல்யாணம் நன்றாக இருந்தது.
கொட்டாய் சாப்பாடுதான் சொதப்பிவிட்டதே.
உங்கள் வர்ணனை அருமை அம்மா.
வாழ்த்துகள்.
மணம்க்களை விட்டு மத்தவங்க போட்டோக்களில் பதிவர் ஜோடிதான் கண்ணைப் பறிக்குது:)
ஏம்மா அந்த மாமியார் ப்ளாக் உடுத்தினாங்க.??/பொண்ணோட அக்காவைக் காணொமேப்பா.
சர்ச் சூப்பர்.சாரல் சொல்கிறாப்போல பாட்டர் மூவீ டின்னர் சீன் தான் ஞாபகம் வந்தட்து.;)
என்ன இருந்தாலும் நம்ம ஊரென்ன. சாப்பாடு என்ன.அடிச்சுக்க ஆளே கிடையாது. பொண்ணோட புகுந்தவீட்டுப் பாட்டி வெரி ஸ்வீட்.
மாப்பிள்ளை பெண்ணும் நல்ல ஜோடி. வளர நன்னி துளசிமா.
வாங்க மாதேவி.
எல்லாம் கல்யாணப்பெண்ணின் ஏற்பாடு. அவுங்க கேட்டரிங் ஒப்பந்தம் போடுமுன் ட்ரையலுக்கு போய்ச் சாப்பிட்டப்ப ரொம்ப நல்லா இருந்துச்சாம்:(
அப்ப என்ன மூடுலே இருந்தாங்களோ!!!!!
வாங்க ரத்னவேல்.
வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றிகள்.
வாங்க வல்லி.
கண் தேவலையா? கணினி முன் ரொம்ப நேரம் இருக்காதீங்க.
அந்த சூப்பர் 'ஜோடி'யின் அன்பு உங்களுக்கான ஸ்பெஷல்:-)
நியூஸி நாட்டுக்கான கலர் கருப்பு என்பதால் இங்கே நல்லது கெட்டது எல்லாத்துக்கும் பொதுவா இருக்கு.
நானும் கருப்பு அணியும்போது..... கொஞ்சம் யோசிச்சேன். ஆனால்..... சம்பந்தியம்மா....கொஞ்சம்கூட யோசிக்கலை போல:-))))
சொல்ல விட்டுப்போச்சு வல்லி.
அந்த ப்ளவர் கேர்ளைத் தூக்கி வச்சுருக்கும் ப்ரைட்ஸ் மெய்டுதான் அக்கா!
அம்மாவும் பெண்ணுமா கல்யாணத்துலே 'பங்கெடுத்து'க்கிட்டாங்கப்பா:-))
Lord of the rings மாமியார் உடை / நம் நாட்டு மாமியார் பற்றிய உங்கள் ஞாபகம்....நான் ரசித்த பலவற்றுள் முதலிடம் பிடிக்கிறது..
வாங்க பாசமலர்.
ஒரு வருசமா உக்காந்து யோசிச்சு அந்த உடையைத் தேர்வு செஞ்சுருக்காங்க சம்பந்தியம்மா!!!!!
அந்தப் பாட்டி ரொம்ப ஸ்வீட்....இப்பவும் இருக்காங்களா? இருந்தா சென்சுரி போட 2 கம்மி!!!!
ம்ம்ம் விவரணங்கள் வழக்கம் போல...ஆனால் சுனிதாவின் கல்யாணம் வேறுமாதிரி இருந்தது இல்லையோ....கல்யாணத்தில் வேறுபாடுகள் உண்டோ....
என்ன இருந்தாலும் நம்மூர் புளியோதரைதான் கை கொடுக்குது....அது சரி முன்னாடியே தெரிஞ்சுதான் கொண்டு போயிருந்தீங்களோ.....சூப்பர்!
Post a Comment