Monday, February 13, 2012

தீபத்திருவிழா ச்சீன ஸ்டைலில்

தை அமாவாசைக்கும் சீனர்களுக்கும் என்ன தொடர்புன்னு ...... பார்த்தால் அன்னிக்குத்தான் அவுங்களுக்கு புதுவருசப் பிறப்பு நாள். அடுத்து வரும் பதினைஞ்சாம் நாள் புதுவருசத்தின் முதல் பவுர்ணமி. இதுவும் அவுங்களுக்கு ரொம்ப விசேஷமான திருவிழா நாள். கொஞ்சம் யோசிச்சால்..... அட! நமக்கும் புது வருசத்தில் வரும் பவுர்ணமி விசேஷம் தானே! சித்திரை மாசம் வரும் சித்ரா பவுர்ணமி உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்து கொண்டாடும் நாள் ஆச்சே! ( இடையில் வந்த புதுவருசம் நாள் எதுன்ற குழறுபடிக்குள் இப்பப் போகலை. பஞ்சாங்கக் கணக்குப்படி காலம்காலமா கொண்டாடும் தமிழ்வருசப்பிறப்பு சித்திரை ஒன்னுதான்)தேவதை


சீனர்கள் சந்திரக் காலண்டர் பயன்படுத்தறாங்க. நம் இந்தியாவிலும் (தமிழ்நாடு, கேரளா, குஜராத், இன்னும் சில மாநிலங்கள் நீங்கலாக) பெரும்பாலும் சந்திரக் காலண்டர்தான். இந்த வருசம் ஜனவரி 23க்கு சீனப்புது வருசம் பொறந்து ஃபிப்ரவரி ஏழுக்கு லேண்டர்ன் ஃபெஸ்டிவல் கொண்டாட்டம் சீனாவிலும், வியட்நாமிலும் கோலாகலமா நடந்து முடிஞ்சுருக்கு. ஆனால்.....
எங்க ஊருலே எதுக்கெடுத்தாலும் வீக் எண்ட் வரணும். அப்பதான் கொண்டாட்டங்கள்.(சவ அடக்கம் மட்டும் வீக் எண்டில் இருக்காது.இனிமேல் வேலை செய்யாம இருப்பவர்களை ஒரு வேலைநாளில்தான் புதைக்கவோ எரிக்கவோ செய்வாங்க)


நேத்தும் முந்தாநேத்துமா ரெண்டு நாட்களில் சனி ஞாயிறுலே ( 2012 ஃபிப். 11 & 12) மாலை அஞ்சு முதல் இரவு பத்துவரை எங்கூர்லேன்னு முடிவாச்சு. அதுக்கு மூணு நாளைக்கு முன்பே ஏற்பாடுகளும் அலங்காரங்களும் தொடங்கினாங்க. போன வருசம் நகர மையத்தில் நடத்தவிருந்த திருவிழாவுக்கு அலங்கரிக்க ஆரம்பிச்ச சமயம்தான் இந்த பாழப்போன பூகம்பம் வந்து எல்லாத்தையும் பாழடிச்சது. அப்ப அப்படியே விட்டுட்டுப்போன அலங்காரங்கள் இன்னைக்கும் அங்கேயே கிடக்கு. எல்லாம் ரெட் ஸோன் பகுதி என்பதால் உள்ளே புகுந்து அப்புறப்படுத்தக்கூட அனுமதி இல்லை:(
எங்கூர்லே இருக்கும் ஹேக்ளி பார்க் ஊருக்கு நடுவிலே 74 ஏக்கரில் பரந்து உக்கார்ந்துருக்கு பாருங்க, இதுதான் எங்களுக்கெல்லாம் இப்போதைய புகலிடம். அதுலே ஒரு மூலையில் திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடம் கிடைச்சது. சட்னு 'நடுக்கம்' வந்தால் மரம் பெயர்ந்து விழுந்தால் உண்டு. தடதடன்னு இடிஞ்சு விழ காங்க்ரீட் கட்டடம் ஏதும் இல்லை. சடசடன்னு மரம் சாயறதுக்குள் திறந்தவெளியா இருப்பதால் ஓடித் தப்பிச்சுக்கலாம். (இந்தக் காரணத்தால் சர்ச்சுகளில் கிறிஸ்மஸ் சர்வீஸ்கூட வெளியே மைதானத்துலே நடத்துனோம்)
சனிக்கிழமை நண்பர் ஒருவரின் குழந்தைக்கு முப்பத்தியொன்றுன்னு மாலை போயிட்டு அங்கிருந்து நேரா ஹேக்ளி பார்க்குக்கு வண்டியை விட்டோம். ஒரு கிலோ மீட்டருக்கு முந்தி இருந்தே சாலையை ரெண்டு பக்கமும் அடைச்சுக்கிட்டு வண்டிகளை நிறுத்தி இருக்காங்க. இடிஞ்சு விழுந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தினதால் காலி மனைகளா இருந்த ஒரு இடத்தையும் விட்டுவைக்காம கார்கள் நிறைஞ்சுருக்கு. விழாத்திடலுக்குப் பக்கத்தில் எப்பவும் ஒரு தாற்காலிக கார்ப்பார்க் ஏற்பாடு செய்யும் வழக்கம் இங்கே உண்டு. ஆனால்....ஓசி இல்லை. காசு கொடுக்கணும். மூணு டாலர்தான். அதுவும் எதாவது தர்ம காரியங்களுக்குச் செலவிடுவாங்க. அங்கே ட்ராஃபிக்கை ஒழுங்குபடுத்த, காசு வசூலிக்கன்னு எல்லாத்துக்கும் தனியாத் தன்னார்வலர்கள் வந்து வேலை செஞ்சு கொடுப்பாங்க. கொடுக்கும் காசு தருமத்துக்குப் போகட்டுமுன்னு அங்கே போனா கார்பார்க் நிறைஞ்சு போச்சு இடமில்லைன்னு சொல்றாங்க.
இன்னொரு வட்டம் போட்டு சாலை ஓரப் புல்தரையில் இருட்டில் 'கண்டுபிடிச்ச' இடத்தில் வண்டியை நிறுத்திட்டு சாலையைக் கடந்து பார்க்குக்குள் கம்பி தாண்டிக் குதிச்சு 'விக்குவிக்கு' நடந்து நாங்க போனபோதே மணி ஒன்பதரை ஆகிப்போச்சு.
மரங்களிலும் தோரணங்களிலும் சிகப்புப் பூசணிக்காய் போல விளக்குகள் தொங்குது. வரிசையா கும்மாச்சி டெண்டுகளில் சாப்பாட்டுக்கடைகள். பாதிக்கூட்டம் அங்கேதான். பார்க்கில் அங்கங்கே அலங்காரம். வழக்கமா இருக்கும் சேவல், குரங்கு, குதிரை, முயல், பன்றி, எலின்னு 12 சீன ஸோடியாக் மிருகங்களைத்தவிர( இந்த பனிரெண்டை வச்சே காலத்தை ஓட்டிடறாங்க இல்லே!!!!) இந்த நியூஸி நாட்டை வளப்படுத்தும் பசுமாடு, செம்மறி ஆடுகள், ஷீப் டாக், பெங்குவின் இவைகளைப் பெருமைப்படுத்தி கவுரவிக்கும் வகையில் அலங்கரிச்சு அதுக்குள்ளே விளக்குகள் பொருத்தி வச்சுருந்தாங்க.
அங்கங்கே ஜெனெரேட்டர்களை வச்சு அலங்கார விளக்குகளை எரிய விட்டவுங்க கொஞ்சம் விளக்குகளை உசரமா வச்சு நாம் நடக்கும் இடங்களுக்கு வெளிச்சம் காமிச்சிருக்கலாம். இருட்டு வீட்டிலே குருட்டெருமைகளாத் தடவித்தடவி நடக்கும்படியா இருந்தா நல்லவா இருக்கு? புல்தரை என்றபடியால் விழுந்தாப் பரவாயில்லைன்னு நினைச்சுட்டாங்களோ என்னவோ!

அதிர்ஷ்டக்காசு

ஹாங்காங், சீனா வங்கிகள் அவுங்கவுங்க வாடிக்கையாளர்களுக்குன்னு ரெண்டு பெரிய கூடாரங்களை அமைச்சு விருந்து கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. எங்க பேங்கும் இருக்கே....... நம்மகிட்டே காசைப் பிடுங்கறதில் கில்லாடி...ஹூம்.....
பெருசா ஒரு மேடை அமைச்சு அதில் கலை நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருக்கு. என் ஃபேவரிட்டான லயன் டான்ஸ் எல்லாம் சாயங்காலமே விழா ஆரம்பிக்கும்போதே நடந்து முடிஞ்சுருக்கும். இப்போ யாரோ சிலர் உசுரைக்கொடுத்துப் பாடிக்கிட்டு இருந்தாங்க. இது இல்லாம அங்கங்கே சின்னச் சின்ன மேடை அமைப்புகளில் உள்ளூர் சீனர்கள் பங்கெடுக்கும் வெள்ளைக்காரப் பாட்டுக் கச்சேரிகள். ஒரு மேடை அமைப்பில் பயங்கர இருட்டு. அதில் ஆட்டம் போடவைக்கும் பாட்டுகள். யாருக்கு முகம் தெரியப்போகுதுன்னு பாடறவங்களும் கேக்கறவங்களுமாய் (காட்டுக்கத்தலாய்)அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
விக்டோரியா சதுக்கத்தில் வளைஞ்சு போகும் ஏவான் நதியில் ஓட்டும் படகுகள் எல்லாம் நகரையே புரட்டிப்போட்ட நில நடுக்கம் காரணம் இடம் மாறி ஹேக்ளி பார்க்காண்டை ஓடும் நதிக்கு (அதே ஏவொன் நதிதான்) வந்துருக்கு. படகுத்துறையிலும் கொஞ்சம் விளக்கைப்போட்டு இருக்கும் ரெண்டு படகுகளை அலங்கரிச்சுருந்தாங்க.
வழுக்கைத் தலையுடன் தாடிவச்ச ஒரு சிலை(?)யைப் பார்த்துட்டு 'இவர் கன்பூஷியஸ்ஸா'ன்னு கேட்ட கோபாலுக்கு, 'தெரியலை கன்ஃப்யூஸிங்கா இருக்கு'ன்னு சொல்லிவச்சேன். கடைசியில் இவர் நீண்ட வாழ்வுக்கான சாமியாம். காட் ஆஃப் லாங் லைஃப். கையில் ஒரு சுரைக்குடுக்கை போல ஒன்னு வச்சுருக்கார். அதுலே அமிர்தம் இருக்காம். காலம் கிடக்குற கிடப்பில் நீண்ட ஆயுள் யாருக்கு வேணும்? க்வாண்ட்டிடியா முக்கியம்? க்வாலிட்டி இல்லையோ????
ஆயுள்சாமி

மறுநாள் கடற்கரைக்குப் போயிட்டு வரும்போது ஒரு நடை பகலிலும் பார்க்கலாமுன்னு போனோம்.மணி அஞ்சரைதான்,கார்பார்க் முக்கால்வாசி காலியா இருக்கு. சின்னதா ஒரு சுத்து சுத்திட்டு பெரிய மேடையில் நடந்த லயன் டான்ஸையும் இன்னும் சில நடனங்களையும் பார்த்துட்டு வந்தோம்.
எங்கூரு மக்கள் எளிமையானவங்க. ச்சும்மாப் புல்தரையில் உக்கார்ந்தே நிகழ்ச்சிகளைப் பார்த்து அனுபவிச்சுருவோம். ஊர் முழுக்க எங்கே வேணுமாலும் புல்தரையில் தைரியமா உக்கார்ந்துக்கலாம். அவ்வளவு சுத்தம். தெருவோரங்களும் நடைபாதைகளுமே படு சுத்தம்தான்.
கலை நிகழ்ச்சிகளுக்காக சீன அரசு கலைக்குழுக்களை அனுப்பி வச்சுருக்கு. ஏஷியன் வங்கிகளும். சீன அரசும், எங்கூர் சிட்டிக் கவுன்ஸிலும் சேர்ந்து செலவைப்பங்கு போட்டுருக்காங்க. நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர் ரெண்டு மூணு சீனச் சொற்களைச் சொல்லிக் கொடுத்தார். அப்பப்ப கொஞ்சம் நக்கலும். சீனாவில் சின்ன ஜனத்தொகையா ஒரு 54 மில்லியன் இருக்கும் ஊரின் கலைக்குழுன்னார். (எங்க நாட்டின் மொத்த ஜனத்தொகையே 4 மில்லியந்தான்) இலக்கணம் எல்லாம் தேவை இல்லை. ஒலி உச்சரிப்பு மட்டும் ரொம்ப முக்கியம். ஹா......வ் கேன் can, ஹா....வ் டிங்(ting)
இரவில் ட்ராகன்
பகலில் ட்ராகன்

பகல் நேரம் பார்த்ததுக்கும் இரவில் பார்த்ததுக்கும் அவ்வளவா வித்தியாசம் இல்லை. ஆனால் படங்களில் கொஞ்சம் வித்தியாசம் இருந்துச்சு.
சேவல் இரவில்

சேவல் பகலில்


இந்த ரெண்டு நாளுக்குமா பத்து மணி நேர இலவசப் பொழுது போக்கு. ஒன்னுமில்லாம மனம் சுணங்கி இருக்கும் எங்க மக்களுக்கு எதையும் விட மனசில்லை. நல்ல கூட்டம்தான். லட்சம் பேருக்கு மேலே வந்து பார்த்துருப்பாங்க.

ஹா....வ் ஜில!!!!!!

PIN குறிப்பு: படங்களை அங்கங்கே பதிவில் தூவி விட்டுருக்கேன்.. இதே திருவிழாவைப் பற்றிய அஞ்சு வருசத்துக்கு முந்திய இன்னொரு பதிவு இங்கே!
23 comments:

said...

Pictures are beautiful. Nice post teacher..
Cheers
Subha

said...

சீனப்புது வருஷ கொண்டாட்டங்களை நாங்களும் ரசிக்கும் படி மிக அழகாக பதிவிட்டிருக்கீங்க.படங்கள் எல்லாம் ரொம்ப அற்புதமாக இருக்கு, மேடம்.

said...

தங்களுக்கு விருதொன்று காத்திருக்கு என் "தாமரை மதுரை" தளத்தினிலே!!

said...

சீனப்புது வருஷ கொண்டாட்டங்களை எங்க கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திட்டீங்க டீச்சர்.....

மக்கள் எல்லாம் எளிமையா புல் தரையில் அழகா உட்கார்ந்திருக்காங்க.....

said...

Nice Pictures... Thanks for some nice information...

said...

// காலம் கிடக்குற கிடப்பில் நீண்ட ஆயுள் யாருக்கு வேணும்? க்வாண்ட்டிடியா முக்கியம்? க்வாலிட்டி இல்லையோ????//

க்வா க்வா என்று அந்தக் காலத்துலே பத்தும் பதினாறும் பெற்றது போய், இப்ப‌
க்வா அப்படின்னு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு அப்படின்னு இருக்கறவங்க,
அந்த ஒண்ணு க்வாலிடி இல்லாம போயிடர போது,
மனசு தவிச்சு நிக்கறாகளே !!

என்னத்த சொல்வீங்க...

மீனாட்சி பாட்டி.

ஆமாம். ஆமாம்.

சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com

said...

படங்களும் பகிர்வும் ரொம்ப சுவாரஸ்யம்.

சேவல் இரவிலும் பகலிலும் நல்லவே வித்தியாசம்:)!

said...

\\தெரியலை கன்ஃப்யூஸிங்கா இருக்கு'ன்னு//
:)அதானே..

குவாலிட்டி நல்லா இருக்கும் பட்சத்தில் குவாண்டிட்டி நிறைய இருந்தா தப்பே இல்லை..

said...

அழகழகான படங்களையும், சின்னச் சின்ன விஷயங்களையும் நீங்க தெளிவாப் பகிர்ந்திருக்கிற அழகையும் பார்க்கும்போது, நாங்களும் நேரிலே வந்து கலந்துகொண்டதைப் போலவே உணர்வு உண்டாகிறது. ரொம்ப நன்றி மேடம்.

said...

வாங்க சுபாஷினி.

முதல் வருகை!!!!!!

நல்லா இருக்கீங்களா?

ரசிப்புக்கு நன்றிகள்.

மீண்டும் வருக.

said...

வாங்க ராம்வி.

அலங்காரங்கள் பலதும் 'அன்று வந்ததும் அதே நிலா' ஸ்டைல்தான்:-)

ஒரு நாலைஞ்சுதான் புதுசு.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க சந்திரவம்சம்.

விருது பெற்று மகிழ்ந்தேன். அன்பால் அடிமையாக்கிட்டீங்களே!

said...

வாங்க கோவை2தில்லி.

நடந்தது நடந்தபடி.......


பள்ளிக்கூடப்பசங்க பஸ்ஸுக்குக் காத்திருக்கும்போது அப்படியே நடைபாதையில் உக்கார்ந்துக்கும். வந்த புதுசுலே 'அய்ய'ன்னு இருக்கும் எனக்கு. யூனிஃபார்ம் பாழாக்கிடாதான்னு....
அப்புறம் பார்த்தால் நடை பாதைகள் படு சுத்தமா இருக்கு.

ஊரிலிருந்து வந்த கணேச மாமா( தோழியின் மாமனார்) உங்க ஊருலே தெருவோரம் இலைபோட்டுச் சாப்பிடலாம் என்பார். ஆனால் மண் சோறுதான் சாப்பிட முடியாது. தரைச்சோறுதான்:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும் கொஞ்சம் சேர்த்த தகவல்களைப் பதிவில் சேர்க்க விட்டுப்போச்சு. அடுத்த வருசத்துக்குன்னு எடுத்து வச்சுருக்கேன்:-))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

க்வாலிட்டியோடு வாழ்க்கைன்னால் க்வாண்ட்டிட்டி ஓக்கேதான். ஆனால்....

ரெண்டும் சேர்வது கொஞ்சம் அபூர்வம் இல்லையோ! கடைசிவரை நினைவும் நடமாட்டமும் இருக்கணும்.

பதினாறிலும் பாதி தேறினால் உண்டு. குடும்பத்திலேயே நிறையப் பார்த்தாச்சுக்கா.....

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இரவில் ஃப்ளாஷ் போடலைன்னாக்கூட சிகப்பு மட்டும் ஓடியே போயிருதே!!!!!

உங்க வகுப்புலே ஒரு விளக்கம் சொல்லுங்களேன்.

said...

வாங்க கயலு.

உண்மைதான். ஆனால் 'படைச்சோன்' எல்லாத்துக்கும் ஒரு 'லிமிட்' வச்சுப்புட்டானே!!!!!

said...

வாங்க கீதமஞ்சரி.

'கண்ணு பார்த்தா கை செய்யணுமாம்.' எங்கபாட்டியின் வாக்கு. அதைத்தான் இப்போ கை தட்டச்சிருது:-)

said...

அடா அடா அடா என்ன அழகான வேலைப்பாடுகள். ஒளிரும் சேவல். தீப்பிடித்த டிராகன், வெளிச்சப் பெங்குயின், அடாடா!

இதெல்லாம் போட்டோலயாச்சும் பாக்கக் குடுத்து வெச்சிருக்கு :)

said...

வாங்க ஜீரா.

ஒரு சீனப் புத்தாண்டு சமயம் சீனாவுக்கோ இல்லை குறைஞ்சபட்சம் சிங்கைக்கோ போகணும். அங்கெல்லாம் இன்னும் அட்டகாசமா இருக்குமுல்லே????

ரசிப்புக்கு நன்றி.

said...

சீனப் புதுவருட கொண்டாட்டம் அழகிய படங்களுடன் மகிழ்விக்கின்றது.

said...

வாங்க மாதேவி.

கொண்டாட விரும்பும் மனசுக்கு நன்றி.
நாளைக்கு ஒரு விழா கொண்டாடிடலாம். மறக்காமல் வாங்க:-)

said...

/க்வாண்ட்டிடியா முக்கியம்? க்வாலிட்டி இல்லையோ????/
எனக்குப் பிடிச்சது இந்த பன்ச்தான்!!!!