Friday, February 10, 2012

கடவுளின் 'கெம்ப்புக் கம்மல்'

'என்ன இருந்தாலும் 'அந்த வீட்டு' ப்ளம், பேரிக்காய்க்கு ஈடில்லை'ன்னு சொல்லிக்கிட்டே கடையில் இருந்து வாங்கியாந்த ப்ளம் பொதியை அவிழ்த்து பழக்கிண்ணத்தில் கொட்டினார் கோபால்.

எல்லாம் ப்ரெஷா அப்பப்பப் பறிச்சுத்தின்னா ருசியே தனிதான். ஆனா வீடு மாத்திக்கிட்டு வந்துட்டமே! ஒன்னு கிடைச்சால் ஒன்னு கிடைக்காதுன்றதுதான் உலக நியதி. வாங்க என்னோடு. படு ப்ரெஷா பறிச்சுத்தாரேன்''னு சொல்லித் தோட்டத்தின் மூலைக்கு நடையைக் கட்டுனேன்.
நம்ம வீட்டுச் செடியில்...........

இந்தச்செடிகள் அங்கே இருக்குன்னு கூட எனக்குத்தெரியாது இங்கே வீடு கட்டி வந்தப்ப. பக்கத்து வீட்டு ஏய்மி, ஐலா க்ரூப் நம்மைப் பார்க்க வந்த ஒரு நாள், ஹைன்னு சொன்ன அடுத்த நொடியில் பாய்ஞ்சு தோட்டத்துப்பக்கம் ஓடுதுங்க. என்னதான் இருக்கு அங்கேன்னு நானும் கூடப்போய்ப் பார்த்தால்...... அட! ராஸ்பெர்ரி! சோகையா ஒரு ஏழெட்டு பழங்கள் இருக்கு. இந்தச் செடியைத்தான் களைன்னு நினைச்சுக்கிட்டுச் சீவித் தள்ளி இருக்கார் நமக்கு 'வேண்டப்பட்டவர்'!

இந்த வீட்டு(மனை)க்கு நாம்தான் புதுசே தவிர அடுத்த வீட்டில் ஆறேழு வருசமா வாசம் செய்யும் ஜோனதான் & ஸிஸ்டர்ஸ்க்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் எய்மி & ஐலா ரெண்டு பேரும் பிறந்ததே இந்தப் பக்கத்து வீட்டில்தான். நம்ம வீடு கட்டும் சமயம் வேலி எல்லாம் பழுதாகி உடைஞ்சு ஒன்னும் மறைவாக இல்லாததால் பசங்களுக்கு ஜாலியா இருந்துருக்கு:-)

கோடை காலம் பாதி கடக்கும்போது ராஸ்பெர்ரி பழுக்கத் தொடங்கும். நானும் தினசரிக் கடமைகளில் ஒன்னா செடியாண்டை போய் நின்னு பழுத்துத் தொங்குவதை லபக்குவேன். ஃப்ரெஷ் ஃப்ரூட் சாப்பிடணுமுன்னு டாக்குட்டர்கள் சொன்னதைக் கேக்கணுமா இல்லையா? பதிவு ஒன்னு போட்டு பதிவர்கள் வயிறு எரிஞ்சு நல்லா இருங்கன்னும் வாழ்த்தினாங்க அப்போ!


ரெண்டு சம்மருக்கு நாமும் இங்கே இல்லை. நிலநடுக்கம் காரணமா என்னன்னு தெரியலை, ஐலா குடும்பமும் வேற எங்கியோ வீடு மாத்திக்கிட்டுப் போயிட்டாங்க. ராஸ்பெர்ரி விஷயத்தை எப்படியோ மறந்து (!) போயிருந்தேன். கடையில் புது சீஸன் வரவு பார்த்துட்டு வீட்டுக்கு ஓடிவந்தால் நிறையப் பிஞ்சுகளும் அங்கங்கே ஒன்னுரெண்டு பழங்களுமா இருக்கு! நல்லவேளை...... குடித்தனக்காரகளிடமிருந்து தப்பிப் பிழைச்சுருக்கு!

இருக்குற வேலை பத்தாதுன்னு இப்ப தினமும் அறுவடை வேலை வேற! Dடூ திங்க்ஸ் இன் ஸ்டைல்''ன்னு சொல்றது போல பறிச்சதை அழகா மேசையில் வைக்கன்னே குட்டியா ரெண்டு கிண்ணம் (மாடர்ன் டிஸைன்) வாங்கினேன். கொய்த்து கழிஞ்சு அதுலே ரொப்பிடலாம். 'சண்டே மார்கெட்'டில் கன்னு விக்கறாங்க, ஒன்னு பத்து டாலர்ன்னு! அடடா..... நம்ம செடிகளை அப்படியே அம்போன்னு விட்டுவைக்காம இனியாவது 'பராமரிக்கணும்'! புத்தி கொள்(ளாத) முதல்.

வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக 'B' ஃபோலிக் ஆஸிட், மங்னீசியம், காப்பர், இரும்பு நிறைய இருக்கும் இந்தப் பழங்களில் எனக்குத் தெரிஞ்சு மூணு வகை, நல்ல பிங்கிஷ்சிகப்பு, கருப்பு, அப்புறம் இந்தக் கருப்பும் சிகப்பும் சேர்ந்த ஒரு வகை பர்ப்பிள். இயற்கை என்னும் கடவுள் டிஸைன் செஞ்ச கெம்ப்புக்கல் கம்மல்ன்னு வச்சுக்கலாம். எங்க பெத்த( peddha) அம்மம்மா இதைப்போல ஒரு கம்மல் வச்சுருந்தாங்க(ளாம்). சின்னஞ்சிறு சிகப்பு முத்துக்களை அணைச்சுப்பிடிச்சாப்புல இருக்கும் பழத்தைத் தொட்டு லேசா இழுத்தால் அப்படியே கழண்டு சின்னதா தொப்பி மாதிரி கையில் விழுந்துரும். ஒரு பழம் சுமார் 4 கிராம் எடை இருக்கும். ( ஆஹா..... அப்ப ஜோடிக் கம்மல் ஒரு பவுன்!!!)
பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான நோய் நிவாரணியாக இந்த இலைகளை எடுத்து தேநீர் தயாரிச்சுக் குடிக்கலாம். மாதாந்திரப் பிரச்சனையை ஒழுங்கு செய்யும் ஹெர்பல் டீ!

இந்தச் செடிகளை எப்படிப் பராமரிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு 'எஜுகேஷனல் டூர்' போயாகணும். அதுவும் ஒரு நல்ல நாளில் வாய்ச்சது. தினசரியில் வந்த 'Pபிக் யுவர் ஓன்' விளம்பரம் பார்த்துட்டுப்போனோம். வீட்டில் இருந்து ஒரு 20 நிமிட் ட்ரைவில் கண்ட்ரி வந்துருது. விலாசம் தேடிக் காம்பவுண்டில் நுழைஞ்சு காரை நிறுத்தினால் கண் முன்னே ராஸ்பெர்ரிச் செடிகள் காய்ச்சுக் குலுங்கி புதர்களா ஆள் உயரத்துக்கு நிக்குது.

இங்கெல்லாம் விதைக்காமக் கொள்ளாம அறுக்க மட்டும் (அருவாளை எடுத்துக்கிட்டு) போகலாம். கடை போட்டுருந்த கட்டிடத்தில் ஏற்கெனவே பறிச்சு வச்சதைப் பொதிகளாப் போட்டு வச்சுருக்காங்க. நாம் பிக் பண்ண வந்த விவரம் சொன்னதும் சிரிச்ச முகத்துடன் ரெண்டு குட்டி வாளிகளை எடுத்து நீட்டிய விற்பனைப் பெண் சொன்னாங்க, 'ஒருத்தர் குறைஞ்ச பட்சம் ரெண்டு கிலோ பறிச்செடுக்கணும். விலை கிலோவுக்கு ஒன்பது.'

ஐயோ..... நாலு கிலோவை வாங்கி என்ன செய்வது? ஒரு வாளியைத் திருப்பிக் கொடுத்துட்டுத் (இது முதல் தப்பு) தோட்டத்துக்குள்ளே நுழைஞ்சோம். வாளிக்குள் ஒரு ப்ளாஸ்டிக் பை வச்சு லைனிங் பண்ணியிருந்தாங்க.
முக்கியமா நமக்குச் செடிகளை எப்படிக் கட்டி வச்சுருக்காங்கன்னு பார்த்துக்கணும். பழங்கள் கனத்தாலே செடிகள் தாழ் பணிஞ்சு தரை தொழுது பழங்கள் எல்லாம் பழுத்து பாதி மண்ணோடு போயிருது நம்ம வீட்டில். திராட்சைத் தோட்டத்தில் திராட்சைக் கொடிகளை அப்படியே இணைச்சு இணைச்சு கம்பங்களினூடே ஓடும் கம்பிகளில் வளைச்சு விட்டுருப்பாங்க பாருங்க அதே டெக்னிக் இங்கே. செடிகள் வளரும்போதே வளைச்சுக் கட்டிவிட்டு நல்லா மூத்து பெரிய கயிறுகளா ஒன்னோடொன்னு பிணைஞ்சு கிடக்கு. இங்கேயும் கனம் தாங்காமல் வளைஞ்சுதான் கிடக்குன்னாலும் லேசாப் பிடிச்சுத் தூக்கினால் அடியில் கொத்து கொத்தாய்ப் பழங்கள்.. கீழே குனிஞ்சு பார்த்தால் தரைப்பக்கமா எக்கச் சக்கம்!
வழியில் நடக்க பாதை விட்டு ரெண்டு பக்கமும் நீள நெடுகச் செடிகளை நட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே நம்மைப்போல மக்கள்ஸ் பழம் பறிச்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் முக்கால் மணி நேரம் படு மும்முரமா இருந்தோம். வாய்க்கும் கைக்கும் வாளிக்குமா பழங்கள் அலுங்காமல் குலுங்காமல் பயணம் செய்யுது.

வாளியைத் தோட்டக் கடைக்குக் கொண்டு போய்க் கொடுத்ததில் அதே ப்ளாஸ்டிக் பையோடு எடுத்து எடை போட்டு 2.2 கிலோ இருக்குன்னு 20 டாலர் வாங்கிக்கிட்டாங்க. அந்தப் பையை வாங்கி காரில் வச்சுக்கிட்டு (தவறு நம்பர் ரெண்டு) வீட்டுக்கு வந்துட்டோம். வெய்யிலில் நின்னு வேலை செய்ததில் களைப்பாகி பழப்பையை அப்படியே அடுக்களை மேடையில் வச்சுட்டு ( தவறு எண் மூன்று) ஓய்வெடுக்கறேன்னு கணினியில் கொஞ்ச நேரம் மேய்ஞ்சுட்டு நேரம் போக்கினேன்.

அப்புறம் பழங்களில் கொஞ்சத்தை மகளுக்கு அனுப்பிடலாமேன்னு பையைத் திறந்து பார்த்தால்.............. பார்த்தால்......................

பழங்களோட கனம் தாங்காமல் அவைகளே ஒன்னோடொன்னு நசுங்கி முக்கால் கூழா மாறி இருக்கு:( பையோடு தூக்கி வந்த (நம்) கையை என்னதான் செய்வது? பெரிய தாம்பாளத்தில் பரத்தி கொஞ்ச நஞ்சம் ஒழுங்கான 'உருவத்தோடு' இருந்தவைகளை மட்டும் லேசா பொறுக்கி ஒரு சின்ன ட்ரேயில் மகளுக்கு எடுத்து வச்சேன். மீதிக்கூழை ஒரு நாலைஞ்சு பங்காப் போட்டு ஃப்ரீஸர் பையில் எடுத்து வச்சு உறைய விட்டேன். இனி அதுக்கு எதாவது வழி பண்ணனும். பறிச்சவுடன் அலுங்காமக் கொள்ளாம எடுத்து உறைய வச்சால் ரொம்ப நாளைக்குப் பயன்படுத்திக்கலாம்.

உக்காந்து யோசிச்சதில் ஐஸ்க்ரீம் செஞ்சு பார்க்கலாமேன்னு....... செய்முறைகளை எல்லாம் படிச்சுப் பார்த்து அதை மனசில் வச்சுக்காம மறந்துட்டுச் சொந்த சாகித்யமா செஞ்சு (புதுசா வாங்கின) குச்சி ஐஸ் மோல்டில் ஊத்தி உறைய விட்டேன். ரெண்டு நாளில் மகள் வந்த சமயம், ராஸ்பெர்ரி ஐஸ்க்ரீம் இருக்கு(!) வேணுமான்னு கேட்டு எடுத்துக் கொடுத்தேன். மனசு 'திக் திக்' அம்மாளு ஐஸ்க்ரீம் & காஃபி connoisseur. நல்லாதான் இருக்குன்னு திருவாய் மொழி காதில் விழுந்ததும்தான் நிம்மதி ஆச்சு. ஃப்ரோஸன் யோகர்ட் மாதிரி இருக்குன்னு ஒரு எக்ஸ்ட்ரா காமெண்ட். தைரியமா நானும் ஒன்னு தின்னு பார்த்தேன். கொஞ்சம் நறநறன்னு விதை நாக்குல் கடிபடுது. அட ராமா............. ராஸ்பெர்ரி விதைகள் இவ்வளவு கெட்டியாவா இருக்கு!!!! வாழ்க்கைக் கல்வியில் புதுப் பாடம் படிச்சாச்சு.
அடுத்த முறை ஐஸ்க்ரீம் செய்யும்போது செய்முறையைக் கொஞ்சம் விரிவாக்கிக்கணும்.எப்பப் பார்த்தாலும் ஐஸ் க்ரீம்தானான்னா..... ஆமாம்.ஆமாம். ஜாம் செய்யலாமுன்னா..... சர்க்கரை ஏகப்பட்டது சேர்க்கணும். பை(PIE) செய்யணுமுன்னா.... வெரி லாங் ப்ராஸஸ்::( ச்சீஸ் கேக் செய்யலாமுன்னா..... ஏகப்பட்ட கொலஸ்ட்ரால். ச்சீச்சீ..... உடம்புக்கு ஆகாது:(


சரி போனாப்போட்டுமுன்னு ராஸ்பெர்ரி மஃப்பின்ஸ் செஞ்சேன். வால்நட் டாப்பிங்ஸ். நல்லாவே வந்துச்சு. (சாதாரண மஃப்பின் செய்யும்போது உறைய வச்ச பழங்களையோ இல்லை ஃப்ரெஷா இருக்கும் பழங்களையோ அங்கங்கே முழுசாப்போட்டும் பேக் செய்யலாம். நமக்குக் கிடைச்சது கூழாச்சே! ) ஆனா செஞ்சு வச்சுக்கிட்டு தின்ன ஆளைத் தேடவேண்டி இருக்கு. ஸோ.... இப்போதைக்கு ஐஸ்க்ரீம்தான் பெஸ்ட். கோடை காலம் வேற பாருங்க:)
இந்த முறை உறைய வச்ச ராஸ்பெர்ரிகளை வெளியே எடுத்து வச்சு ஒரு மணி நேரம் கழிச்சு ப்ளெண்டரில் போட்டு அரைச்சு வடிகட்டுனதில் விதைகள் எல்லாம் மேலே தங்கிருச்சு. யம்மாடி....... எள்ளு சைஸில் இவ்வளவு விதைகளா?

சர்க்கரையும் ஃபுல் க்ரீம் மில்க் பவுடரும் சேர்த்து இன்னும் கொஞ்சம் ப்ளெண்ட் பண்ணி ஃப்ரீஸரில் வச்சாச்சு. ஐஸ்கிரீமாவும் சாப்பிடலாம் இல்லேன்னா இந்த ஐஸ்க்ரீமையே இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி ராஸ்பெர்ரி மில்க் ஷேக்காவும் குடிச்சுக்கலாம். டூ இன் ஒன்:-)

பதிவர் சந்திப்பு ஸ்பெஷலா வச்சுக்கலாமா?



23 comments:

said...

ஜோடிக்கம்மல் க்ளோஸ் அப்பில் அழகோ அழகு.

ராஸ்பெர்ரி ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், மஃப்பின்ஸ் வித் வால்நட் டாப்பிங்ஸ் எல்ல்ல்லாமே யம்ம்ம்மி யம்ம்ம்மி:)!

நன்றி.

said...

'Close up'ல்! Pl note your honour:)! Feb PiT கடைசித் தேதி 20!

said...

அட படங்கள் பாக்கும்போதே சாப்பிடணும்னு தோணுது...

இன்னிக்கே கிளம்பிடவா....

said...

கம்மல் அழகா இருக்குது. போட்டிக்கு அனுப்புனா தங்கத்தைத் தட்டிட்டு வந்துரும். அவ்வளவு ஜோர் :-)

ஐஸ்க்ரீம், மஃபின்ஸ், மில்க்ஷேக்ன்னு மாணவர்களைப் பார்த்துப் பார்த்து கவனிச்சுக்கும் டீச்சருக்கு ஒரு ஸ்பெஷல் "ஓ" :-))

said...

படங்கள் பாக்கும்போதே சாப்பிடணும்னு தோணுது//Correct

said...

ரெண்டு கம்மல் ,ஒண்ணு மூக்குத்தி:)
என்ன கலர். என்னா சிவப்பு.!!

கூழானாலும் ஐஸ்க்ரீம் செய்பவருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்:)

said...

எங்களுக்கும் ஒரு எஜுகேஷனல் டூர்' சென்ற மாதிரி நிறைய பாடங்களும் படங்களும் கிடைத்தன்..

நன்றிகள்.. பாராட்டுக்கள்..

said...

கம்மல் சூப்பரா இருக்கு....

ஐஸ்க்ரீம், மஃப்பின்ஸ், மில்க் ஷேக்.....சூப்பர் டீச்சர்.
சாப்பிட ஆளைத் தேட வேண்டாம்...நாங்க வந்துடறோம்....

படங்கள் எல்லாமே அழகு.

said...

//பதிவர் சந்திப்பு ஸ்பெஷலா வச்சுக்கலாமா?//

அதுக்கெல்லாம் நேரமில்லை. அடுத்த ஃப்ளைட் பிடிச்சு
வர்றதா ப்ளான் பண்ணிட்டோம். அது சரி,
சென்னை டு க்ரைஸ்ட்சர்ச் டேரக்ட் ஃப்ளைட்
உண்டா, இல்லை !! சிங்கப்பூர் வழியாத் தான் வரணுமா ?

மீனாட்சி பாட்டி.

said...

இப்போதைக்கு டீச்சருக்கு வணக்கம் ;-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அழகை நீங்கள் ஆராதிப்பது எனக்குத் தெரியாதா?

இன்னும் நல்லதா எடுக்கமுடியுமான்னு கேமெராவும் கையுமாத் தோட்டத்தைச் சுற்றிவருகிறேன். இந்த முறை இருத்தலின் அடையாளமாகவேனும் ஒரு படம் அனுப்பத்தான் வேணும்.

நினைவூட்டலுக்கு நன்றி மை லார்ட்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா...கிளம்பி வாங்க. இன்னும் ரெண்டு பழப்பொதிகள் ஃப்ரீஸரில் இருக்கு:-))))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

//.....மாணவர்களைப் பார்த்துப் பார்த்து கவனிச்சுக்கும் டீச்சருக்கு....//

இல்லையா பின்னே? கத்திக்குத்து நினைச்சால் பயமாத்தான் இருக்கு.

குருகுல காலம் எல்லாம் மாறிந்தி:(

said...

வாங்க சமுத்ரா.

நீங்களும் பேசாமக் கிளம்பி வாங்க. பதிவர் சந்திப்பு(லே) வச்சுக்கலாம்:-)

said...

வாங்க வல்லி.

சின்னச் சின்ன மூக்குத்'தீ'யாம்! சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்!!!!

பட்டம் ஒன்னும் வேணாம். கைவசம் ஐஸ்க்ரீம் செய்யும் தொழில் இருக்கு. இந்தியா வந்தால் பிழைப்புக்கு ஆகாதா?
என்ன ஒன்னு நீங்கல்லாம் வாங்கணும். இல்லைன்னா.....ஐ.....'ஸ்க்ரீம்' :-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்க்கை முழுதும் கல்விதானேப்பா!

பாராட்டுகளுக்கும் கூடவே தொடர்வதற்கும் நன்றி.

said...

வாங்க கோவை2தில்லி.

ஃபேமிலி டிக்கெட் விலை கொஞ்சம் மலிவு:-)))))

கிளம்பி வாங்க!

said...

வாங்க கோபி.

அட! பதிவை வாசிக்கலை என்பதை இவ்ளோ நாசுக்காக் கூடச் சொல்லலாமா:-))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

டைரக்ட்டா சிங்கை வழிதான் வரணும்.

இங்கிருந்து போகும்போது அதேநாள் இரவு சென்னைக்குப் போயிடலாம். கனெக்டிங் ஃப்ளைட் இருக்கு.

ஆனால் சென்னையில் இருந்து வரும்போது ஒரு பகல் சிங்கைத்தங்கல் இருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃப்ளைட்டுன்னால்.

சிங்கையிலும் நம்மபதிவர்கள் ஏராளம். அங்கே ஒரு சந்திப்பு வச்சுக்கிட்டு இங்கே வந்துடலாம்.
(அப்பாடா..... பதிவுலக நட்புகள் தரும் பரிசுகளைக் கொண்டுவர ரெண்டுபேர் கிடைச்சுட்டாங்க:-))))))

said...

எனக்கு எல்லா பெர்ரிகளிலும் ராஸ்பெர்ரி தான் ரொம்ப பிடிக்கும். கடையில பாத்தா உடனே வாங்கிக்கிட்டு வந்திருவேன். கடிச்சுத் தின்ன ரொம்ப பிடிக்கும். இல்லாட்டி மில்க் ஷேக்.

இங்கே எங்க ஊர்ல ஸ்ட்ராபெர்ரி தோட்டம் தான் நிறைய இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய் நாங்களும் நிறைய பறிச்சுக்கிட்டு வந்து ஜாம் செஞ்சு நீ எடுத்துக்கோ நீ எடுத்துக்கோன்னு எல்லாருக்கும் குடுத்தோம். :-)

said...

அப்படியே முழுவதுமாக சாப்பிட்டுவிட்டேன்.

சுவையோ சுவை.

said...

என்ன அழகு! பழங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் அழகுதான்.

ராஸ்பெர்ரியின் சிவப்பு நிறம் ஒரு மாணிக்கக்கல்லைப் போல இருக்கிறது. லேசான புளிப்பும் தித்திப்பும் கலந்து சுவை தரும்.

ஐஸ் கேக்கு எல்லாமே அட்டகாசமா இருக்கு.

அந்த மஃபினை அப்படியே எடுத்துச் சாப்டனும் போல இருக்கு. எல்லாரும் இதைச் சொல்வாங்க. :)

சரி. ஒங்களுக்கு நளி பட்டம் வேணுமா? பீமி பட்டம் வேணுமா? சொல்லுங்க :)

said...

நல்ல அனுபவம், அருமையான பதிவு. செடியில் இருந்து நேராக பறித்து பழம் நழுவி வாயில் விழும் ருசியே தனி தான்,