Friday, February 08, 2008

நான் டக்ளஸாமே!!

கூடத்துக்குள்ளே போகும் கூட்டத்தில் ஏறக்குறைய கடைசியா நின்னுக்கிட்டு இருந்தோம், மலேசியாவிலிருந்து வந்த ஒரு பத்திரிக்கையாளருடன் பேசியபடிக் கையில் ஒரு ஆரஞ்சுப் பழச்சாறு உள்ள கோப்பையுடன். முன் வரிசையில் நிற தோழி , 'நீங்க டக்ளஸ்' என்றார். 'டக்ளஸா?'ம்ம்ம்ம்ம்ம் ஓஓஓஓ டக்ளஸ்.
எனக்கு ஒரே மகிழ்ச்சி.


டக்ளஸ் ரொம்பக் குறும்புக்காரன், அது இப்போ. பிறந்தப்ப ரொம்ப மெலிஞ்சு, பிழைக்கமாட்டான் என்ற நிலையில் இருந்த அவனை வேணாமுன்னு அவுங்க அம்மா தள்ளிட்டாங்க. வச்சுக் காப்பாத்தமுடியாதுன்னு அந்தம்மா கொண்டுவந்து சுனிதாகிட்டேக் கொடுத்துருக்காங்க. ஒரே ஒரு ஊசி போட்டாப் போதும். சரியான ஆள்கிட்டே பொறுப்பை ஒப்படைக்கணுமுன்னு தெரியாதவங்க அந்த அம்மா.அதோ....அந்தக் கர்ட்டன்மேலே ஏறி ஒளிஞ்சு விளையாடுறவனைப் பாருங்க.
'கடமை தவறிய சுனிதா' வீட்டுலேதான் இந்த ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். மீ(க்)காவைப் பார்த்தும் பயமே இல்லை. இந்த மீகாவையும்தான் பாருங்களேன்....
பார்வை நமக்குத்தான் கொஞ்சமாக் குலை நடுங்க வைக்கும்.ஆனால் அந்தப் பொடியன்கிட்டே மட்டும் என்ன பொறுமை,என்ன விளையாட்டு. வாலைச் சுருட்டிக்கிட்டு இருக்குது போல!


மீ(க்)கா & டக்ளஸ்


ஒரு மனுசனுக்கும், மிருகத்துக்கும் ஒரே இடத்துலே ஒரே சமயம் அடிபட்டா, சுனிதா ஓடி உதவுவது மனிதனுக்கல்ல.
ரூபிதனிவீட்டுக்குப் போனதும் ரூபிதான் முதல்லே வந்தது. அக்கம்பக்கம் நடக்கும் போட்டிகளில் பங்கெடுத்து சிலபல பரிசுகளை வென்றவள். அதுக்கப்புறம் வந்த கரிஷ்மாவுக்கு நீலக்கண்ணு.
பங்கெடுக்கும் போட்டிகளில் வெற்றிதேவதை இப்ப இவள் பக்கம்தான். பாருங்களேன், இந்த தேவதை எப்படி கட்சித் தாவல் செஞ்சுட்டாளுன்னு.கரிஷ்மா


மூணு மாசத்துமுன்னே வீட்டுலே ஒரே டென்ஷன். கரிஷ்மா பிள்ளையாண்டிருக்காள். குழந்தை பிறக்கும் சரியான நேரம் ஆனானப்பட்ட மகாதேவனுக்கே ( கடவுள்) தெரியாதாம். அப்படி இருக்க சாதாரண மனுசங்களுக்கு?க்ளோஸ்ட் சர்க்ய்யுட் கேமெரா, பிரசவ வலி கண்டு துடிக்க ஆரம்பிச்சவுடன் அலறும் அலாரம் இப்படி ஏகப்பட்ட நவீன சமாச்சாரங்களை வாங்கி எல்லா ஏற்பாடும் கச்சிதமாச் செஞ்சு வச்சது சுனிதாதான். ராத்தூக்கம் சரியா இல்லாம நடுநடுவில் ரெண்டொருமுறை கரிஷ்மா அறைக்குப்போய்ப் பார்த்துவரும் வழக்கமும் சேர்ந்துக்கிச்சு.
ஒரு சுபயோக சுபதினத்தில் 'என் குழந்தை பிறந்தாச்சு'ன்னு இ-மெயில் வந்துச்சு. எனக்கும் மன நிம்மதியாச்சு.
சுனிதாவும், நண்பர் ஹெய்டனும் நம்ம வீட்டுக்கு வந்தவுடனே, நம்ம கோபாலகிருஷ்ணன் பயந்து பதுங்கி ஒளிஞ்சுக்குவான்.இப்ப என்ன திடீர்ன்னு சுனிதா புராணம்? அது ஒன்னுமில்லை. சுனிதாவுக்குக் கல்யாணம். இது 'நிச்சயமாயி' ஒன்னரை வருசம் ஆச்சு. இவ்வளவு நாள் ஏன்னு கேட்டால்.............. கோயில் கிடைக்கலை!இது என்னடா கோவிலுக்கு வந்த கிராக்கி?வசந்தம் & கோடையில் மட்டுமே கல்யாண சீஸனாம். அது ஒரு ஆறுமாசம்தானே?
சனிக்கிழமையா வேற இருக்கணுமாம் கல்யாணம் நடத்த. அப்படிப் பார்த்தா ஒரு 26 சனிக்கிழமை. இங்கே பலபிரிவுகளில் சர்ச்சுகள் ஏகப்பட்டது இருந்தாலும் 'ஆகி வந்தவை'கள் என்ற வகையில் அதிகமாத் தேறாதாம்.
சுனிதாவின் அம்மாதான் எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சுச் செஞ்சாங்க. எந்த விழாவையும் நினைவில் இருக்கும்படியாச் செய்ய சில சின்ன நுணுக்கங்களைப் பார்த்துக் கவனிச்சா 200 மடங்கு வெற்றிதான். இதை அனுபவிக்க எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைச்சது.கல்யாணப்பொண்ணுக்குப் பிடிச்ச கலர் பிங்க் என்பதால் பத்திரிக்கை முதல், விருந்து மேசையின் நடுவில் வைக்கும் அலங்காரப்பூத்தொட்டி வரை பிங்க்கோ பிங்க்!ஒரு எட்டுவருசத்துக்கு முன்னே, என்னிடம் தமிழ் கற்றுக்கொள்ள வந்த இரண்டு மலேசியப் பெண்களில் ஒருத்தர்தான் சுனிதாவின் அம்மா. எழுத்துக்கூட்டிப் படிக்கவும், எழுதவும், இன்னும் சொன்னா நல்லாப் பேசவும்(??) சொல்லித் தந்தாச்சு. பாடங்கள் முதல் ரெண்டு வருசம்தான். அப்புறம் எல்லாமே ப்ராக்டிக்கல் க்ளாஸ்:-))))
அழைப்பிதழிலேயே தெரிஞ்சுரும் பொண்ணும் மாப்பிள்ளையும் என்ன தொழில்ன்னு.
அதான் paw prints அங்கங்கே போட்டுருந்ததே. ரெண்டு பேரும் 'வெட் நரி'கள்:-))))


கீருபடிப்பு வெற்றிகரமா அருமையான ரேங்க்கோட முடிஞ்சதும், தெற்குத்தீவின் தென்கோடியில் உடனே வேலை கிடைச்சது. கிராமப்புறங்களில் வேலை செய்ய ஆரம்பிச்சால்தான் நல்ல அனுபவம் கிடைக்குமாம். சுனிதா, விசேஷப் படிப்பா மாடுகளை எடுத்துருக்காங்க. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலேயே கன்னுக்குட்டிகளுக்கான சீஸன் தொடங்கிருமாம். ஆள் பயங்கர பிஸி. வேலை பார்க்கும் வட்டாரத்தில் ரொம்ப நல்ல பேர் கிடைச்சிருக்கு. வைத்தியம் பார்த்துக்க வந்த ஒருத்தர் ஒரு yak கன்னுக்குட்டியைப் பரிசாக் கொடுத்துருக்கார். அதோட பெயர்தான் பேட்ஸ்மேன்:-)))) ( இங்கே பரிசோதனை வளர்ப்புக்காக அவர் நேபாளத்தில் இருந்து இந்த வகையை இறக்குமதி செஞ்சாராம் பலவருசங்களுக்கு முன்னே)
நாங்களும் சுனிதா ஹெய்டன் வீட்டுக்கு ஒரு நாள் போகணும். காரில் ஒரு ஏழரை மணி நேரப்பயணம். mini zoo மாதிரி இருக்காம் வீடு:-))))


போன சனிக்கிழமை மத்தியானம் மூணரைக்குக் கல்யாணம். ரொம்ப அழகான அளவான சர்ச். முதல்முறையா அங்கே போனோம். கத்தோலிக் பிரிவைச் சேர்ந்தது. கோபால் பல்பொடி விளம்பரம் தான் சட்ன்னு நினைவுக்கு வந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்ட்ராலியா, இங்கிலாந்து ,அமெரிக்கான்னு உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்துருக்காங்க மக்கள்ஸ். எல்லாம் பொண்ணின் அம்மா பக்கத்து உறவினர்கள். இதுலே விசேஷம் என்னன்னா புடவைகள்தான். மலேசியத்தமிழர்கள் ஆச்சே. கலர் ஃபுல் மலேசியா! பொண்ணோட அப்பா இங்கத்துக்காரர். அவர் பக்கத்து உறவினர்களுக்கு வெள்ளைக்கார உடைகள். அந்தப் பக்கமா என் பார்வையைப் பிடிச்சுத் தள்ளவேண்டியதா ஆச்சு.
மணமகனுடன் நம்மாளு

திருமண விழா நிகழ்ச்சி நிரல்கள் இளம் ரோஜா வண்ணத்தில் அச்சடிச்சு இருந்துச்சு. முகப்பில் ரெண்டு பெங்குவின்கள் வெள்ளைக்கார பாரம்பரிய கல்யாண உடைகளில். கடைசிப் பக்கம் ஜிகேவின் சொந்தங்களின் காலடிகள்.
அளவான நிகழ்ச்சி. ஒரு மணி நேரத்தில் 'ஐ வில், ஐ டூ' எல்லாம் சொல்லி
பதிவேடுகளில் கையெழுத்துப்போட்டாச்சு.வெளியே சர்ச்சின் முன் வாசலில் ஒரு முக்கால்மணிநேரம் வாழ்த்துச் சொல்றதும், விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆகறதுமுன்னு இருந்தபின், விருந்து நடக்கும் இடத்துக்கு புறப்பாடு.


சிலசமயம் சனிக்கிழமைப் பகல் பொழுதுகளில் சில சர்ச்களின் வாசலில் இப்படிக் கல்யாணக் கூட்டத்தைப் பார்த்திருக்கோம். ஒரு பத்து இருபது பேர் இருந்தாவே பெரிய கல்யாணமுன்னு சொல்வாங்க. அதிலும் ஒரு புடவையைக்கூட மருந்துக்கும்(?) கண்டதில்லை. (இதுக்குத்தான் நம்மளைக் கூப்புடணும் என்றது.)
கேக் ஷாப் நடத்தும் ஒரு இந்தியத் தோழி செய்த கேக்
விருந்து இங்கே ஒரு ஹோட்டலில் ஏற்பாடு. இது நம்ம வீட்டருகில் என்றதால் நாங்க நேரா வீட்டுக்கு வந்துட்டு, நம்ம ஜிகே சாருக்குச் சாப்பாடு கொடுத்துட்டு, உடுப்பு மாத்திக்கிட்டு கொஞ்சம் மெதுவாத்தான் விருந்துக்குப் போனோம். சாப்பாட்டுக்கு முந்தி தீர்த்தாடனம் நடக்குது. கோபாலும் இந்த புது வருசம் எடுத்த முடிவின்படி நோ குடி:-)
உட்புறத் தோட்டத்தில் எல்லாரும் ஊத்திக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் ஒரு க்ளாஸ் ஆரஞ்சுப்பழ ரசம் எடுத்துக்கிட்டோம். உறவுகளையெல்லாம் அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது, நிறையப்பேருக்கு என்னை 'டீச்சர்' என்று தெரிஞ்சிருக்கு:-))))
சாப்பாட்டுக்குக் கூடத்துக்குள்ளே போறப்பதான் 'நீங்க டக்ளஸ்' ன்னு தோழி சொன்னாங்க. ஹாலின் கதவுக்கருகில் யார்யார் எந்த மேசைன்னு ஸீட்டிங் லிஸ்ட் வச்சிருந்தாங்க. மீகா, மிலி, டக்ளஸ், கரிஷ்மா, ரூபி, பேட்மேன், கீரு இப்படி 18 பெயர்களோடு 18 வட்ட மேசைகள். ஒரு மேசைக்குப் பத்து ஆட்கள்.
நான் குறிப்பிட்டச் சின்னச்சின்ன கவனங்கள் இங்கேதான் வருது.அந்தந்த செல்லங்களின் படங்களோடு கூடிய மேசை ஸ்டேண்ட்.


நாப்கின் சுருட்டிவச்சு அதில் அந்த இடத்துக்கு வரும் ஆட்களின் பெயரை பிங்க் ரிப்பன்லே, குட்டி இதயத்தோடு க்ளிப் செஞ்சு வச்சுருந்தாங்க. மேசையில் பிங்க் நிறப் பூக்கள் பிங்க் நிற வாளிவடிவத் தொட்டிகளில். இதய வடிவில் பிங்க் நிறத்தாளில் இருக்கும் சாக்லேட், இள ரோஜா நிற கப் கேக் ன்னு எல்லாத்திலும் சூப்பர் கவனம்.
ஒருத்தர் பை நிறைய டிஸ்போஸபிள் கேமெரா கொண்டுவந்து ஒவ்வொரு மேசைக்கும் ஒண்ணு கொடுத்துட்டுப் போனார். போட்டோகிராஃபர் ரெண்டுபேர் இருந்தாலும், மக்கள் பார்வையில் நிகழ்ச்சி எப்படி இருக்குன்னு நாம் எடுக்கற படங்கள் சொல்லிருமாம். கேமெராவை வச்சு, எதிரில் இருப்பவர்களை ஆளாளுக்கு கிளிக் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.
சர்ச்சிலும் ஒரு வயசான( என்னைவிடவும்!) வெ.பெண்மணி இதுபோல ஒரு கேமெரா வச்சுக்கிட்டு, 'ஐ வாஸ் டோல்ட் டு டேக் பிக்சர்ஸ் ஆஃப் ஹேப்பனிங்க்ஸ்' னு சொல்லிக்கிட்டு இருந்தது இதுக்குத்தானா? எனக்கு இப்பத்தான் புரியுது. அந்தம்மாதான் இந்தக் கல்யாணப்பொண்ணு உலகில் 'தலைகாட்டுனப்ப, முதல்முதலில் தாங்கிப்பிடிச்ச மருத்துவத்தாதி'யாம். ஆஸ்ட்ராலியாவில் இருந்து வந்துருக்காங்க.
விவரம் தெரிஞ்சதும் எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு. தோழிக்கு நண்பர்கள் வட்டம் பெருசு. அதை மதிக்கவும் தெரிஞ்சிருக்கு. நாமும்தான் எத்தனையோ பேரை வாழ்க்கையில் சந்திக்கறோம். எல்லாரோடும் தொடர்பை விடாம வச்சுக்கிட்டு இருக்கோமா?
சர்ச்சிலே ஒவ்வொரு இருக்கைவரிசையில் நடுப்பாதையை நோக்கும் பலகையில் க்ரீம் கலர் சாட்டின் ரிப்பனில் ரெவ்வெண்டு பிங்க் ரோஸ் வச்சது முதல், கல்யாணப்பெண்ணின் கையிலுள்ள பூச்செண்டுவரை தயாரிப்பு தோழியேதான்.

மூணு கோர்ஸ் டின்னர். சிக்கன், லேம்ப்ன்னு இருந்துச்சு. நம் 'ராமனாதன் சொல்படி' (டாக்குட்டர் சொன்னாக் கேட்டுக்கணும்) சைவத்தைப் புறக்கணிக்க முடியுதா? ஃபில்லோ பேஸ்ட்
டரின்னு உள்ளே மரக்கறிகள் வச்சது நமக்கு.
மணப்பெண்ணின் தந்தை

விருந்து முடிஞ்சதும் நடனம் ஆரம்பமாச்சு. அன்னிக்குப் பகல் 12 மணியளவில்தான் கோபால் ஸ்பெயினில் இருந்து வந்தார். பயணக்களைப்பு.
கண் இமைகள் அப்படியே ஒட்டிக்கிட்டு வருது. தள்ளாட்டம். இனிமேத் தாங்காதுன்னு கிளம்பிட்டோம். ( எனக்கு வேற அந்த வகை நடனம் ஆடத்தெரியாது. தவறிப்போய் அங்கே நின்னு பரதநாட்டியம் ஆடிட்டேன்னா?)
வரவேற்பில் மணமகன் ஹெய்டனோட பேச்சு சூப்பர். டச்சிங் டச்சிங்.
சுனிதாவோடு இருந்த எட்டு வருச நட்பை முடிச்சுக்கிட்டு மனைவியா ஆக்கிக்கிட்டேன்னு சொன்னார்:-)))))
சம்பந்தி வீட்டுலே கேட்டுருக்காங்க, நாங்களும் கல்யாணச்செலவைப் பங்கு போட்டுக்கறோமுன்னு. பொழைக்கத்தெரியாத ஆளுங்கப்பா:-)))))
அதெல்லாம் வேணாம். எங்க பொண்ணு கல்யாணத்துக்கு நாங்களே நடத்திக்கொடுக்கறதுதான் முறைன்னு தோழி 'அடிச்சு'ச் சொல்லிட்டாங்க.
பர்ஃபெக்ட் வெட்டிங் நடத்திய தோழியை, இனி வரும் கல்யாணங்களுக்கு வெட்டிங் ப்ளானரா ஆக்கிரணும். கைவசம் தொழில் இருக்கு. ஒன்னரை வருச உழைப்பு வீண்போகலை. உள்ளூர் நிலவரம் பார்த்தா.....இது ஒரு பிரமாண்டமான கல்யாணம்.மணமகனின் மாமியார் & கட்டுரை ஆசிரியர்:-)மணமக்கள் நீடூழி வாழ்ந்து அருமையான இல்லறம் என்ற நல்லறம் காண பதிவர்கள் சார்பில் அன்போடு வாழ்த்துகின்றோம்.36 comments:

Anonymous said...

சந்தோஷமான மணவாழ்க்கைக்கு புதுமணத்தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.
//இந்தக் கல்யாணப்பொண்ணு உலகில் 'தலைகாட்டுனப்ப, முதல்முதலில் தாங்கிப்பிடிச்ச மருத்துவத்தாதி'யாம். ஆஸ்ட்ராலியாவில் இருந்து வந்துருக்காங்க// ஆச்சரியமாத்தான் இருக்கு. நேத்துப்பாத்தவங்களையே மறக்கற உலகத்தில இப்படியா

said...

குடியும் குடித்தனமுமா இருந்த நம்ம கோபால் இப்படி ஆகிட்டாரே!! அதான் அது இல்லாமலேயே கண் இமைகள் மூடி தள்ளாடிக்கிட்டு இருந்தார் அப்படின்னு சொல்லிட்டீங்களே!! ஒக்கே ஓக்கே!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

எனக்கும்கூட கேட்டதும் ஒரே ஆச்சரியமாத்தான் இருந்தது.

28 வருசம் கழிச்சும் மறக்கலை பாருங்க. மறக்கரது இருக்கட்டும்.....தொடர்புலே இருந்துருக்காங்க பாருங்க. அதுவே கிரேட்!!!!

said...

வாங்க கொத்ஸ்.

பாவம்ங்க அவர். 14 மணி நேரம் பயணம்,சிங்கைக்கு. நடுவில் 12 மணி நேர ப்ரேக் இருந்தாலும் நம்ம ஷாப்பிங் லிஸ்ட் அதைவிடப்பெருசா அனுப்பி இருந்தேனே. அதுக்கு அல்லாடிட்டு, மறுபடி 11 மணி நேரப் பயணம் இங்கைக்கு. வரும்போதே தூங்கிட்டு வந்துறணுமுன்னு ஸ்டேண்டிங் ஆர்டர் வேற இருந்துச்சுல்லே. அதான் ...........

said...

மணமக்கள்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

//ரெண்டு பேரும் 'வெட் நரி'கள்//

ரசித்தேன்...

இனிமேல் துளசி தளம் வரும்போது துளசி மேடம் முகம் வரும்..இப்போதுதான் உங்கள் புகைப்படம் பார்க்கிறேன்...

said...

\\பாச மலர் said...
//ரெண்டு பேரும் 'வெட் நரி'கள்//

ரசித்தேன்...

இனிமேல் துளசி தளம் வரும்போது துளசி மேடம் முகம் வரும்..இப்போதுதான் உங்கள் புகைப்படம் பார்க்கிறேன்...\\

ரீப்பிட்டேய்ய்ய்

said...

டீச்சரம்மா..

கொல்றீங்க போங்க..

சுவையான தகவல்கள்..

ஆமா அது யாருங்க டீச்சர்.. போட்டோல மணமகனோட மாமியாரோட, கண்ணாடி போட்டுக்கின்னு 'சிரிமாவோ பண்டாரநாயகா' மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கிறது..?

தெரியலையே..

said...

//உறவுகளையெல்லாம் அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது, நிறையப்பேருக்கு என்னை 'டீச்சர்' என்று தெரிஞ்சிருக்கு:-)))) //

தெரியவில்லை என்றால்தான் டீச்சர் ஆச்சர்யம்,தெரியாது என்றால் தான் பிரச்சினையே!! (நந்தாவில் கருணாஸ் சொல்வாரே ஊர் அறிஞ்ச ஜட்ஜ் ஐயாவீட தெரியாதுன்னே சொல்றேன்னு அதுபோல ஆகிவிடும்)

said...

//தவறிப்போய் அங்கே நின்னு பரதநாட்டியம் ஆடிட்டேன்னா?)//

டீச்சர் இதுபோல ஒரு விபரீத முடிவை நீங்க இனி கனவில் கூட நினைக்க கூடாது!!!:))

said...

//மணமக்கள் நீடூழி வாழ்ந்து அருமையான இல்லறம் என்ற நல்லறம் காண பதிவர்கள் சார்பில் அன்போடு வாழ்த்துகின்றோம்.///

நானும் ஒரு தபா !!!
சொல்லிக்கிறேன் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ்க வாழ்க வளமுடன்!!!

said...

மணமகனும் மணப்பொண்ணும் யார் என்ற குழப்பம் இன்னும் இருக்கு.
:)) இரண்டு பேரும் 'ஜம்' னு இருக்கிங்க.

கடைசி போட்டோவைப் பார்த்தேன்.

நியூசியில் கோல்கேட் கிடைக்குது என்று தெரிந்தது.

said...

//கோவி.கண்ணன் said...
மணமகனும் மணப்பொண்ணும் யார் என்ற குழப்பம் இன்னும் இருக்கு.
:)) இரண்டு பேரும் 'ஜம்' னு இருக்கிங்க.

கடைசி போட்டோவைப் பார்த்தேன்.

நியூசியில் கோல்கேட் கிடைக்குது என்று தெரிந்தது.//

ரிப்பீட்டேய் !!!

ஹி ஹி ஹி நான் சிரிச்சதை டீச்சர் கிட்ட சொல்லிடாதீங்க கோவி, அப்புறம் அடிப்பாங்க:)

said...

வாங்க குமார்.

மணமக்களுக்கு உங்க வாழ்த்தைச் சொல்லியாச்சு. உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னாங்க.

said...

வாங்க பாசமலர்.

புகைப்படம் நிறைய பயணப் பதிவுகளில் வந்துருக்கே.

என்ன இப்ப இன்னும் கொஞ்சம் இளைச்சுட்டேன்.....


( இப்படிச் சொல்லிக்க ஆசையா இருக்கு. ஹும்....)

said...

வாங்க கோபி.

பாசமலருக்குச் சொன்னதுதான். உங்க ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு:-)))

said...

வாங்க உண்மைத்தமிழன்.


நாடு இருக்கும் நிலையில் இந்த உதா'ரணம்' தேவையா???????

said...

வாங்க குசும்ப்ஸ்.

சிட்னி தோழிகள் கூட்டம் தமிழ் சொல்லித்தாங்கன்னு கேக்கறாங்க இப்ப:-)))))

'தெரிஞ்சதை'த்தானே ஆடமுடியும்!

வாழ்த்துகளுக்கு மணமக்கள் சார்பில் நன்றி.

said...

வாங்க கோவியாரே.

புடவைக்கு வெய்யில் காமிக்கக் கிடைச்ச வாய்ப்பை விடமுடியுமா?

அதான் ஜம்ஜம்:-)))

நோ கோல்கேட். நாமெல்லாம் இன்னும் தேசிகள்தான். வீக்கோ வஜ்ரதந்தி:-))))

said...

கோபால் பல்பொடி விளம்பரம் தான் சட்ன்னு நினைவுக்கு வந்தது//


நாங்க கோபால் ....பல்பொடி பார்க்கும்பொதெல்லாம் நினச்சுக்கறோமே:)))
உண்மையாவே மிக்க சிரத்தையோட உழைச்சு இவ்வளவு செய்து இருக்காங்க.

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

said...

டிச்சர்,
மணமக்களுக்கு வாழ்த்துகள்.

//சுனிதாவுக்குக் கல்யாணம். இது 'நிச்சயமாயி' ஒன்னரை வருசம் ஆச்சு//

கோயிலுக்காக இவ்வளவு காத்திருப்பா?
கொஞ்சம் அதிகம்தான்.

ஒரு சந்தேகம்.

அதென்ன நீங்க ரெண்டு பேரு மட்டும் கருப்பு கண்ணாடியில்!

said...

வாங்க வல்லி.

சிரத்தையே ஒரு தியானம் போலத்தான் இல்லே?

வேற கவனம் சிதறாமல் செய்வது வெற்றிக்கு ஒரு வழிதான். நானும் இதுலே இருந்து ரொம்ப விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்ப்பா.

said...

வாங்க ஆடுமாடு.

வாழ்த்துகளுக்கு அவுங்க சார்பில் நன்றி.

கோயிலுக்குக் காத்திருப்பு தெர்ஞ்சு எனக்குமே ஆச்சரியமாத்தான் போச்சு.
இப்ப இளைஞர்கள் கல்யாணத்துலே நம்பிக்கை இல்லைன்னு சொல்லிச் சேர்ந்து வாழ்வது அதிகமா இருக்கு. பலர்,கோயில் கல்யாணம் வேணாமுன்னு 'சிவில் வெட்டிங்' செஞ்சுக்கறாங்க. அதை நடத்தி வைக்க அதிகாரபூர்வமா சிலருக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துருக்கு. நம்ம இந்திய நண்பர் ஒருத்தர் இந்த சிலரிலே இருக்கார்.

சாஸ்த்திர சம்பிரதாயமாக் கல்யாணம் செஞ்சுக்கவும் இந்தக் கால இளைஞர்கள் பலர் விரும்பறாங்கன்றதும் ஒரு செய்திதான்.


கறுப்புக் கண்ணாடி? ரெண்டு பேரும் (டொமஸ்டிக் ப்ளைண்ட்?)
:-)))))))))

அது ஒண்ணுமில்லை. நாங்க பயன்படுத்துறது ஃபோட்டோக்ரோமிக் லென்ஸ் கண்ணாடி. அதுதான் கொஞ்சம் வெய்யிலுன்னாலும் கறுப்பாயிரும்.


இன்னொண்ணு,
என்னை 'டிச்'பண்ணவேணாம். நீட்டியே கூப்புடலாம்:-)

said...

ஒரு சூப்பர் கல்யாணத்தைப் பார்த்த திருப்தி துளசி அக்கா.

said...

ஆகா ஆகா - அருமையான கல்யாணத்தை நேரிலே பாத்த மாதிரியே இருக்கு - நேர்முக வர்ணணை. சூப்பர் நகைச்சுவை கலந்த வர்ணணை. சின்னச் சின்ன செய்திகளைக் கூட விட்டு விடாமல் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.

மருத்துவச்சி, செல்லங்களின் பெயரில் மேசைகள், தீர்த்தாடணம், கோபாலின் தள்ளாட்டாம் ( நோ-குடி), கோபால் பல்பொடி விளம்பரம், அருமையான புகைப் படங்கள், டீச்சர்னு எல்லோருக்கும் தெரிந்திருப்பது ( 3 மாதம் படிச்சதுக்கே டீச்சர் பட்டமா ), etc etc etc etc etc - எனக்குப் பொறுமை இல்ல

ஆடுமாடு டிச்சர்னு கூப்பிட்டா - டிச் பண்ண வேணாம் - நீட்டீயே கூப்பிடுங்கன்னு சொன்ன இளமைக் குறும்பு பிடிச்சிருக்கு

said...

வாங்க குமரன்.

கல்யாணத்து வந்ததுக்கு நன்றி:-)

said...

வாங்க சீனா.

பொறுமையாப் படிச்சு, ஒவ்வொண்ணையும் குறிப்பிட்டுப் பின்னூட்டம் போட்டுட்டு, இப்படி //எனக்குப் பொறுமை இல்ல// சொன்னா என்ன அர்த்தம்??:-)))))

ஆமாம். ரெண்டுவருசம் தமிழ் சொல்லிக் குடுத்தா டீச்சர் இல்லையா?

said...

//ஆமாம். ரெண்டுவருசம் தமிழ் சொல்லிக் குடுத்தா டீச்சர் இல்லையா?
//

நிச்சயம் டீச்சர் தான் - ஒத்துக்கறேன்

said...

குடும்பத்தலைவிகள் நிறைய பேர் இன்னைக்கி என்ன சமைக்கறதுன்னு தெரியாம குழும்புவாங்க..அதே மாதிரி பதிவர்கள்ல நிறைய பேர் இன்னைக்கி எதப்பத்தி எழுதலாம்னு தெரியாம திண்டாடுவாங்க.

ஆனா நீங்க அப்படியில்ல. எந்த சப்ஜெக்ட வச்சின்னாலும் அழகா கோர்வையா எழுதி முடிச்சிடறீங்க. அதான் துளசி ஸ்டைல் போல.

வழக்கம்போலவே நல்லாருக்கு:-)

இப்பல்லாம் பின்னூட்டம் போடற அளவுக்குத்தான் டைம் கிடைக்கிது:(

said...

சீனா,

//நிச்சயம் டீச்சர் தான் - ஒத்துக்கறேன்//


ம.பா. தானே சொல்லவச்சாங்க:-))))

அது........

said...

வாங்க டிபிஆர்ஜோ.

ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!!!!

ஆணி அதிகமாப் போச்சோ?

said...

அருமையான பதிவாக அமைந்துவிட்டது!

படங்களுடன் வெளியிட்டது அழகை இன்னும் கூட்டியிருக்கிறது!!

மணமக்கள் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் வாழ இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

வாங்க ஜோதி பாரதி.

முதல்முறையா வந்துருக்கீங்க. நலமா?

மணமக்கள் சார்பில் நன்றிங்க.

said...

super varnanai about the marriage .
nice feeling .

said...

வாங்க சசி கலா.

சுநிதாவின் தங்கை கல்யாணத்துக்கும் போன வருசம் போயிட்டுவந்து எழுதியும் ஆச்சு:-)

போன வருசக் கடைசி நாளில் வெட்நரிகள் வீட்டில்தான் சுத்திக்கிட்டு இருந்தோம்.

இன்னும் சில செல்லங்களும் புதுசாச் சேர்ந்துருக்கு. பேட்மேன் சந்திப்பும் ஆச்சு:-)

எழுதிட்டேன். பார்த்துக்குங்க.

said...

உங்கள் விவரணம் அருமை! அதுவும் டக்ளஸ், மீகா எல்லாம் சோ...ஸ்வீட்..

அந்த பிரசவம் பார்த்த மருத்துவரக் கூட விடலை....அந்த விஷயம், நம் எல்லோரையும் யோசிக்க வைக்கின்றது.. தங்கள் தோழி மிகவும் அருமையாக நடத்தியிருக்கின்றார். சுனிதா மிக அழகாக இருக்கின்றார். கல்யாண ஆல்பம் சூப்பர்.....7 வருடம் ஆகின்றது போல....