Saturday, February 16, 2008

ப்ரிவ்யூவுக்குப் போனோம்



அக்பருக்கு இந்து மனைவி உண்டா, இல்லையா? அப்படி இருந்துருந்தா அவுங்க பெயர் என்ன? ஜஹாங்கீரின் மனைவி பெயர்தான் அக்பரின் இந்து மனைவி பெயரா? இப்படியெல்லாம் சரித்திரக் குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்க.......

ஜோதா அக்பருக்கு ப்ரிவ்யூக்குப் போகும்படியா ஆச்சு எங்களுக்கு. சரித்திர டீச்சருக்குச் சரித்திரப்படத்தைப் போட்டுக் காமிக்கணுமா இல்லையா?சரி. நம்ம பார்வையில் படம் எப்படி?

பிரமாண்டமான போரில் ஆரம்பிக்குது படம். சின்னப்பையன் ஜலாலுதீனுக்குப் பட்டம் கட்டி போரில் தோற்ற மன்னரின் தலையை வெட்டச் சொல்றார் அவரோட கார்டியன் கம் சேனாபதி பைரம் கான்.
இளகிய மனமுள்ள ஜலாலுதீன் வேணாமுன்னு மறுக்கவும், அந்தக் கத்தியை எடுத்தே, எதிரித் தலையைத் துண்டாடுறார்.

ஜலாலுதீன் மொஹம்மத் தன் ராஜ்ஜியத்தை விரிவாக்கிப் போகும்போது அவர் ஆட்சிக்கு உட்பட மறுத்தாங்க சில ராஜபுத்திர அரசர்கள். சிலர் சரின்னு சம்மதிக்கிறாங்க. இதன் காரணமா, ஜோதாபாய்க்கு சின்னவயசில் நிச்சயம் செய்த திருமணம் நின்னு போச்சு. மாப்பிள்ளைவீட்டார் வேணாமுன்னு போயிட்டாங்க.

ஜோதாவின் அப்பா, ஜலாலுதீனின் உதவி கேட்டு வர்றார். உதவிக்குப் பதில் உதவியா தன் பொண்ணைக் கட்டிக் கொடுக்கறேன்னு சொல்றார். இங்கதான் கொஞ்சம் உதைக்குது. ராஜபுத்திரர்களைப்பற்றி முந்தி எங்கியோ கொஞ்சம் படிச்சதில் அவுங்க வீரம், நேர்மை, மத சம்பிரதாயங்களில் அவுங்களோட பற்றுன்னு மனசுலே ஒரு 'படம்' இருந்துச்சு. இப்ப என்னன்னா.....ஒரு தகப்பனே வேற்றுமதக்காரருக்குத் தன்மகளை மணமுடிக்கத் தரேன்னு சொல்றாரே.......

ராஜ்ஜியமுன்னு வரும்போது நீதி நியாயங்கள் மாறிப்போகுதோ என்னவோ? அது இருக்கட்டும். இப்ப 'கதை'க்கு வருவோம்.....

கல்யாணமுன்னு சொல்லி ரெண்டு பகுதியையும் சேராத ஒரு பொது இடத்துக்கு(அப்படித்தான் இருந்துச்சு) வந்து சேர்ந்தாங்க. பொண்ணு ஒரு கூடாரத்தில் இருக்கு. அப்பாகிட்டே சொல்லுது நான் மணமகனை 'ரெண்டு கேள்வி'கேக்கணும். அதுக்கப்புறம்தான் கட்டிக்கச் சம்மதமா இல்லையான்னு சொல்வேன்னு.

ஜலாலுத்தீன் செய்தி கேட்டுப் பொண்ணைப்பார்க்க வர்றார். பொண்ணு கேட்கும் ரெண்டு நிபந்தனை, ஒண்ணு, கல்யாணம் கட்டுனாலும் மதம் மாறாம இப்படியே இருப்பேன். ரெண்டு, என்கூடவே என் சாமியையும் கொண்டு வருவேன். அதுக்கு ஒரு பூஜை ரூம் ( கோயில்னு சொல்லுது) கட்டிக்க அனுமதி வேணும்.

பொண்ணோட தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டுன ஜலால் ( செல்லமா இப்படிச் சொல்லிக்கறேன். முழுப்பெயரும் நீளமா இருக்கு) சரின்னதும் அங்கேயே 'அக்னி வளர்த்துச் சம்பிரதாயமா அக்னியை வலம்வந்து (ஸாத்ஃபேரே) கல்யாணம் முடிஞ்சுருது. முதலிரவு....பாட்டு வருமுன்னு பார்த்தா...ஊஹும்...... பொண்ணுக்கு இஷ்டமில்லாம அவளைத் தொட மாட்டேன்னு ஜலால் சொல்றார். மறுநாள் அதிகாலையில் அவர் அவசர அரசாங்க அலுவல்னு தில்லிக்குப் போயிடறார்.

பொண்ணு மாமியார் வூட்டுக்குப்போகுது. ஆக்ரா கோட்டை. பொண்ணோட கூடவே சில தோழியர் சேடிப்பெண்கள் போறாங்க. அங்கே மாமியார் எல்லோரையும் அறிமுகப்படுத்தும்போது ஒரு பெரியம்மாவையும் அறிமுகம் செய்யறாங்க. ஜலாலின் செவிலித்தாய். அந்தம்மா முகமே வில்லத்தனமா இருக்கு. இந்தம்மா என்னவோ குருத்தக்கேடு காமிக்கப்போகுதுன்னு என் மனம் சொன்னது சரியாப்போச்சு. எத்தனை சினிமாப் பார்த்துருக்கோம். இதைக் கணிக்கத்தெரியாதா?

முழுக்கதையையும் சொல்லப்போறதில்லை. எப்படியும் நீங்க பார்க்கத்தான் போறீங்க. அப்ப நீங்களே புரிஞ்சுக்கலாம்.

பேரரசர் ஜலாலுத்தீன் மொகம்மத் தன்னுடைய கருணையின் காரணம் மக்களால் மிகப்பெரியவர் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். அக்பர் என்ற பட்டப்பெயர் கிடைக்குது ( இனிமேப்பட்டு அக்பர்னு சொல்றேனே)

அக்பரா வரும் ஹ்ரித்திக் ரோஷன் நல்லாவே அவர் பாகத்தைச் செய்யறார். அந்த உடையலங்காரத்தில் நெடுநெடுன்னு ஒரு 'பீன்போல்' போல குச்சியா இருக்கார். காலை மடிச்சு அரியாசனத்தில் (தொழுகைக்கு உட்காரும் விதத்தில்) உட்காருவது அருமை. திருமணம் முடிஞ்சு முதல்முறை மனைவியைச் சந்திக்கும்போது ஒரு மாகாணி விநாடி முகத்தில் வரும் புன்னகை சூப்பர்.

சின்னவயசுப் பாடப்புத்தகத்தில் குண்டு முகத்துடன் கையிலொரு பூவை வச்சிருக்கும் அக்பர் படம் மனசில் பதிஞ்சதால் இந்த ஒல்லி அக்பரை மனசு ஏத்துக்கலை. சரி. வயசானதும் கொஞ்சம் சதை போட்டுருப்பார்னு சமாதானப் படுத்திக்கிட்டேன். (இவரோட கைகளைக் குளோஸ் அப் காமிக்கும்போதெல்லாம் அந்த ஆறாவது விரல் தெரியுதான்னு பார்ப்பது ஒரு பழக்கமாப் போச்சு) அக்பருக்கு ஜோதி பாய்னு ஒரு இந்து மனைவி இருந்தாங்க. தீன் இலாஹின்னு ஒரு புது மதத்தை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக ஏற்படுத்தினார்ன்னும் அந்தப் பாடப்புத்தகத்தில் இருந்துச்சே.


ஜோதாவா வரும் ஐஸ்வர்யா (ராய்)பச்சன் அவுங்களுக்குத் தந்த பகுதியை நல்லாத்தான் செஞ்சாலும் என்னவோ மிஸ்ஸிங். வயசு தெரிய ஆரம்பிச்சுருக்கோ? இல்லை அந்தக் கால மேக்கப்னு என்னவோ செஞ்சுருக்காங்களோ? பழைய ஐஸ்வர்யாவின் பளிங்கு போன்ற ஜொலிக்கும் (எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. 'ஹம் தில் தேச்சுகே சனம்' படத்தில் இருப்பாங்க பாருங்க அப்படி) அழகு காணாமப் போயிருக்கு. நளினம் நாசூக்கு எல்லாம் அப்படியே இருக்கு. ஆனாலும்....................

இன்னொரு ராஜ்புத் இளவரசனா வரும் (இவர்தான் ஜோதாவுக்குக் கத்திச்சண்டையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் பாய்சா(ப்) முகம் மட்டும் எங்கியோ பார்த்த நினைவு. ராஜ் பப்பரின் முகச்சாயல் இருந்துச்சோ. அப்புறம் தெரிஞ்சது அவர் பெயர் 'சோனு சூட்'னு.

மத்தபடி ஏகப்பட்ட பாத்திரங்கள். ரொம்ப நாளா இந்தி சினிமா உலகில் கவனம் வைக்காததால் யார் என்னன்னே தெரியலை. கூட்டமான கூட்டம்.

கோட்டை கொத்தளங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு. எல்லாம் சரித்திர சம்பந்தமுள்ள இடங்கள். இவ்வளவையும் கட்டிக்காப்பாத்திப் பழுதில்லாமப் இளைய தலைமுறைக்கு வச்சுட்டுப்போக வேண்டியது நம்ம மக்களுடைய கடமை. இதுபோல ஒண்ணைக் கனவிலாவது கட்ட முடியுமா? அந்த சமையலறையும், அடுப்பும், பாத்திரமும் பிரமாண்டம்.....ஹைய்யோ..........

போர்க்காட்சிகள் அருமையா எடுத்துருக்காங்க. பானிப்பட் யுத்தம் எப்படி இருந்துருக்குமுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆக்ரா கோட்டையில் ராணியின் படுக்கையறைன்னு ஒண்ணு காமிக்கிறாங்க. அட்டகாசம்.

போர்ன்னு சொன்னதும் யானைப்படையைச் சொல்லலைன்னா நான் என்ன துளசி? ஏராளமான யானைகள். ஆங்..... மறக்கறதுக்கு முந்தி சொல்றது. நம்ம ஜலாலுக்குக் 'டைம் பாஸ்' என்னன்னா முரட்டு யானைகளை அடக்கிப் பழக்குவதாம்!

அக்பர் காலத்து நகைநட்டெல்லாம் மனசுலே அப்படியே பதிஞ்சதுன்னு நான் சொன்னா அது ஒரு பெரிய பொய். என்னவோ இருக்கு.

வசனங்களில், இந்து முஸ்லீம் ஒற்றுமையை முக்கியமா மனசில் வச்சு எழுதுனமாதிரி இருக்கு. அதுவும் இந்தியாவில் பிறந்த முஸ்லீம்கள் இதைத் தங்கள் சொந்தநாடாத்தான் நினைக்கிறாங்கன்னு (வலியுறுத்திச்)சொல்றாங்க. இது என்னவோ நிஜம்தான். பலர் இப்படித்தானே இருக்காங்க.

இன்னொண்ணு, மதிப்புக்கு உரியவர்கள் குற்றம் செஞ்சா, அவுங்களைத் தண்டிக்கறது எப்படின்னா...... 'மெக்காவுக்குப் போ'ன்னு அனுப்புவது. ஒருவேளை இறைவன் சன்னிதியில் தங்கள் குற்றங்களை மனமாற ஒப்புக்கொண்டுக் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கறதுக்குன்னு நினைக்கிறேன்.

இவ்வளோ சொல்லி நம்ம ரெஹ்மானைச் சொல்லைன்னா எப்படி? ராஜ்புத் நாட்டுப்பாடல் ரெண்டு மூணு இருக்கு. ஒரு சூஃபி பாட்டு நல்லாவே இருக்கு. முதல் முறை கேட்கும்போதே மனசில் பதிவதுபோல ஒண்ணும் இல்லை. ஆனா ரெஹ்மானோட பாட்டெல்லாம் ஒயின் மாதிரி கொஞ்சம் ஊறணும் இல்லை?

உண்மையான சரித்திரம் அடங்கிய படமுன்னு சொல்லாம, சரித்திர நாயகனை வச்சுப் பின்னப்பட்டக் கற்பனைக் கதைன்னு சொல்லி இருக்கலாம்.
*

ப்ரீவியூலே படம் முடிஞ்சதும், கையைப் பிசைந்துகொண்டு நிக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன், மெயின் டிஸ்ட்ரிப்யூட்டர் எல்லார்கிட்டேயும் 'படம் ரொம்ப நல்லா இருக்கு'ன்னு ஆறுதலாச் சொல்லலாமுன்னா அங்கே யாரையும் காணோம்.


மூணுமணிக்கு ஆரம்பிச்ச படம் (நடுவில் ஒரு 10 நிமிச இடைவெளி) முடியும்போது சரியா ஏழடிக்க ஏழு நிமிசம். படத்தோட நீளத்துக்குச் சற்றும் குறைவில்லாம கடைசியில் ஓடும் டைட்டில். ஒருத்தரையும் விடாம படப்பிடிப்பு நடந்த இடம் ஒண்ணு விடாம, க்ரெடிட் போய்க்கிட்டே இருக்கு. இவர் என்னடான்னா 'போதும் பார்த்தது எழுந்து வா'ன்னு கத்திக்கிட்டு இருக்கார். நானா? ஊஹும்..... சுபம் போட்டாத்தான் எந்திரிப்பேன்னு கண்டிஷனாச் சொல்லிட்டேன். இவர்தான் குறுக்கு நெடுக்குமா பூராத் தியேட்டர் ஹாலையும் அளந்துக்கிட்டு இருந்தாரா...... ஒரு வேலை கொடுக்கலாமுன்னு மொத்தம் எத்தனை இருக்கைன்னு எண்ணி வையுங்கன்னேன்:-)


மொத்தம் 106 இருக்கை இருக்கும் தியேட்டரில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான். படம் போட்டவருக்கு வெறும் முப்பது டாலர்தான் முதல் ஷோவுக்கான வரவு. ஹூம்...பாவம் அந்தப் பையன். இதுதான் பகல் மூணுமணிக் காட்சி. இப்ப ஏழுமணிக்கு இன்னொரு காட்சி இருக்கே.
வெளியே நிற்கும் கூட்டத்துக்கு படம் நல்லா இருக்குன்னு சொல்லி மனசை ஆத்திக்கணும்.

சுபம். வெளியே வந்து பார்த்தா ஈ, காக்கை இருக்கணுமே........ நொந்து போயிட்டோம். இந்த காம்ப்ளெக்ஸில் எட்டு தியேட்டர் இருக்கு. ஒரு வேளை வேற எண் தியேட்டரில் அடுத்த ஷோ இருக்கோ என்னவோ? கார்ப் பார்க்கில் வண்டியை எடுக்கும்போது, கொஞ்ச தூரத்தில் ஒரு இந்திய இளம் ஜோடிகள் கையில் ஒரு குழந்தையோடு கட்டிடம் நோக்கிப்போறாங்க. குழந்தை ஓடியாட நிறைய இடம் இருக்கு. போங்கன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே வீடு வந்தோம்.

இது எங்கூரு தியேட்டருக்குள்ளே வச்ச விளம்பரம்.

59 comments:

said...

//குழந்தை ஓடியாட நிறைய இடம் இருக்கு. //

எப்படி இப்படியெல்லாம்? :-))

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க விமர்ச்னம. ஐஸ்வர்யா ராய்க்கே வயசாயிடுச்சா? அப்ப எனக்கும் வயசாயிடுச்சுன்னு ஒத்துக்கதான் வேணும். :-((

said...

//மொத்தம் 106 இருக்கை இருக்கும் தியேட்டரில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்.//

ரஜினிக்கு அப்புறம் உங்களுக்கு தான் ஸ்பெஷல் ஷோவுக்கு உண்டான பாக்கியம் கிட்டியிருக்கு ;-)

சிட்னியின் வந்திருக்கு, நாளைக்கு போகலாம்னு இருக்கேன். ஆனால் படத்தின் நீளத்தைப் பார்க்கும் போது ஒரு விடுமுறை நாளைச் சாப்பிட்டிரும் போல இருக்கு.

உங்க விமர்சனமே படம் பார்த்த நிறைவை கொண்டு வந்திருக்கு.

said...

வாங்க ஸ்ரீதர்.

//ஐஸ்வர்யா ராய்க்கே வயசாயிடுச்சா? ....//

ஏங்க? அவுங்களும் மனிதப்பிறவிதானே?

இல்லையா?:-))))))

said...

துளசி, அதெப்படி இப்படி ஒரு அருமையான நுணுக்கமான சின்னச் சின்ன செய்திகளைக் கூட விட்டுடாமே - விமர்சனம் எழுதுறீங்க - அய்யொ இந்தக் கலை என் கிட்டே இல்லியே - ம்ம்ம்ம் - பாராட்டுகள்

said...

வாங்க பிரபா.

ஆமாங்க. அநியாயத்துக்கு நீளம். கத்தரிக்கோலைக் காணோமுன்னு எடிட்டர் பேசாம இருந்துட்டாரோன்னு இருக்கு.

said...

வாங்க சீனா.

சின்னச்சின்ன விஷயங்களில்தாங்க சுவாரசியமே இருக்கு:-)

"ச்சின்னச் சின்ன ஆசை "

பாட்டுக் கேட்டதில்லையா?

said...

வாங்க டெல்ஃபீன்.

நூத்துக்கு நூறா? ரொம்ப தயாளா இருக்கீங்களே:-)))

ஹிந்திப் படங்கள் இப்ப கொஞ்சம் நல்லாவே வந்துக்கிட்டு இருக்கு.

நல்ல கதைகளைத் தெரிவு செய்யறாங்க. குடும்பப்பாட்டு வச்சுக்கிட்டுப் பிரிஞ்சுபோனவங்க ஒண்ணு சேர்ந்தகாலம் எல்லாம் அங்கே மாறிப்போச்சு.

அறுவாள், ரத்தம் எல்லாம் நம்மத் தமிழ்ப்படத்துலே இன்னும் சுத்திக்கிட்டு இருக்கு.

இந்தப் படத்துலே வெளிநாட்டுக்கான ப்ரிண்டுன்னு சப்டைட்டில் ஆங்கிலத்துலே கீழே ஓடிக்கிட்டு இருந்தது ஒரே சல்லியமா இருந்துச்சு.

வசனத்தை கேட்டாப்போதுமுன்னு மனசு நினைச்சாலும், கண்ணு என்ன் எழுதி இருக்குன்னு பார்த்துக்கிட்டே இருக்கு.

said...

அந்த படத்தில் இருப்பது தான் ராணி படுக்கையா?
நான் ராஜாவாக இருந்தாலும் அந்த படுக்கையில் படுக்க பயமாகத்தான் இருக்கும்.போன 10 நிமிடங்களில் தூங்க எதுக்கு இவ்வளவு அலங்காரம்!!
ராஜா/ராணிக்கு அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது போல..

said...

துள்சி! காதலர்தினத்தை ஒட்டி உங்கள் இருவருக்கு மட்டும் ஸ்பெஷல் ஷோவா? கொண்டாடுங்க...!!
படம் பற்றி மும்பையும் சென்னையும் திமிலோகப் படுது...நீங்க ஈ ஓட்டிக்கிட்டே பாத்தீங்களாக்கும்.

said...

வாங்க குமார்.
//ராஜா/ராணிக்கு அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது போல..//

அது எப்படி வரும்? நாட்டுமக்களைப் பற்றி பின்னே யார் கவலைப்படுவா?

நமக்கு....பதிவைப்போட்டோமா, பின்னூட்டம் பார்த்தோமான்னு நிம்மதி வந்துருது. அதான் உடனே தூக்கம்:-))))

said...

வாங்க நானானி.

அந்த ஈ இருந்துருந்தாக்கூட,ஓட்டிக்கிட்டேக் கொஞ்சம் நல்லா இருந்துருக்கும். அதுவும் இல்லைங்க. கொஞ்சம் பயமாப்போயிருச்சு.அவ்ளோ பெரிய இடத்தில் ஜிலோன்னு இருந்துச்சு.

கடைசி ரெண்டு வரிசைகள் மட்டும் டபுள் ஸீட் சோஃபா. நல்லாக் காலை மடிச்சுச் சப்பணம் போட்டுக்கிட்டு உக்காந்தோம்:-)

said...

கடைசி ரெண்டு வரிசைகள் மட்டும் டபுள் ஸீட் சோஃபா. நல்லாக் காலை மடிச்சுச் சப்பணம் போட்டுக்கிட்டு உக்காந்தோம்:-)//
hmm படம் பார்த்தாலும் இப்டில்ல பார்க்கணும் .:)

ஒவரா விளம்பரம் கொடுக்கிறதனால இதைப் பார்க்கணும்னு தோணலை

ஐஷ்வர்யா ராய் வயசு ஆச்சே.இன்னும் பழைய மாதிரியே இருக்க முடியுமா.:)
இருந்தாலும் ஒண்ணோண்ணா பார்த்து அழகா வரிசைப் படுத்தி விமரிசனம் செய்திட்டீங்க.
படம் பார்த்த மாதிரியே இருக்கு.

said...

//மொத்தம் 106 இருக்கை இருக்கும் தியேட்டரில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான். படம் போட்டவருக்கு வெறும் முப்பது டாலர்தான் முதல் ஷோவுக்கான வரவு. //

//ஆனா ரெஹ்மானோட பாட்டெல்லாம் ஒயின் மாதிரி கொஞ்சம் ஊறணும் இல்லை///
:-))

ஆஹா..ம்ம்ம்

கத்ஹ்டிரிக்கோலை தொலச்சிட்டாரா.. ஹா ஹாஹா

ஹ்ரிடித்தி என் டி டீவிக்கு குடுத்த பேட்டியில ஐஸ் பத்தி தான் பேசினாரே த்விர படத்தை பற்றி ஒன்னும் சொல்லலை... ஒரு பேக்கட் பாப்கார்ன் வாங்கி உலகத்தை மறந்துட்டு 'என்ஜாய்' அப்படீங்குறார்.. :-)))

said...

பட விமர்சனம் நல்லாதான் இருக்கு!
//குருத்தக்கேடு// //மாகாணி //
முதலில் இதுக்கு கொஞ்சம் அருஞ்ச்சொற்பொருள் சொல்லுங்கம்மா

said...

வாங்க வல்லி.

ஐஸ் அப்படியே இருக்குமா? உருகிடாது?

நம்மாட்கள்தான் என்றும் 16 ஆக 'அவுங்க' இருக்கணுமுன்னு நினைக்கறோம்,இல்லை?:-)

said...

வாங்க மங்கை.

பாப்கார்ன் எல்லாம் வாங்கிக்கலை. மொதல்லேயே இதைச் சொல்லி இருக்கக்கூடாது?

டிக்கெட்டின் விலையில் பாதி அழணும் இங்கே இந்த பாப்கார்னுக்கு(-:

ஆங்கிலப் பாப்க்கு ஹிந்தி பாப் போட்டுக்குங்க.

said...

வாங்க தமிழ் பிரியன்.

குருத்தக்கேடு = குழப்பம், கலவரம்
(மலையாளத்திலே சொல்லிட்டேன் உணர்ச்சிவசப்பட்டு)

மாகாணி= இது பதினாறில் ஒரு பாகம்
( இது தூயத் தமிழ்ச் சொல்தாங்க)

said...

உள்ளேன் ரீச்சர்!

said...

//இவரோட கைகளைக் குளோஸ் அப் காமிக்கும்போதெல்லாம் அந்த ஆறாவது விரல் தெரியுதான்னு பார்ப்பது ஒரு பழக்கமாப் போச்சு//

ஆஹா..நானும் இப்படித்தான்..

படம் பார்க்கும் போது உங்கள் விமர்சனம் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கப் போகிறது..

said...

\\\மொத்தம் 106 இருக்கை இருக்கும் தியேட்டரில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்\\\

\\குழந்தை ஓடியாட நிறைய இடம் இருக்கு. போங்கன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே வீடு வந்தோம். \\

;))))

நல்ல விமர்சனம் டீச்சர் ;)

said...

சூப்பரு டீச்சர்!!
நல்ல விமர்சனம்!

அப்போ படம் பாக்கலாம்னு சொல்றீங்க?? :-)

said...

//சின்னவயசுப் பாடப்புத்தகத்தில் குண்டு முகத்துடன் கையிலொரு பூவை வச்சிருக்கும் அக்பர் படம் மனசில் பதிஞ்சதால் இந்த ஒல்லி அக்பரை மனசு ஏத்துக்கலை. சரி. வயசானதும் கொஞ்சம் சதை போட்டுருப்பார்னு சமாதானப் படுத்திக்கிட்டேன். (இவரோட கைகளைக் குளோஸ் அப் காமிக்கும்போதெல்லாம் அந்த ஆறாவது விரல் தெரியுதான்னு பார்ப்பது ஒரு பழக்கமாப் போச்சு)//

அக்கா... அவ்வ்வ்வ்... அக்பர் கொழு கொழுன்னு இருக்கறத எல்லாம் எதிர்பார்த்திங்களா?..அவ்வ்வ்வ்வ்....
இதுல ஆறாம் விரல் வேற\.. இதுக்குத்தான் அதிகமா படிக்கப்டாதுன்னு சொல்லற்து..ஹிஹி..

உங்க விமர்சனமே அருமையா இருக்கு...
நமக்கு படம் பாக்குற அளவு அம்புட்டு பொறுமையெல்லாம் இல்லைங்க அக்கா...அதான் நீங்க பாத்துட்டு கதை சொல்லுவிங்களே..ஹிஹி

said...

மேடம்,

படத்தோட பினாமி தயாரிப்பாளர் ஒரு வெளிநாடுவாழ் இந்தியரான சரித்திர ஆசிரியர்னு ஒரு தகவல் நடமாடுதே; அது நீங்க தானா?

(படத்தைப் பத்தி ஆளாளுக்கு ஒண்ணு சொன்னா என் பங்குக்கு நான் ஏதாவது கிளப்பி விட வேணாமா?)

உங்கள் விமர்சன எழுத்தின் பலம் எனக்குத் தெரியும். ஏற்கெனவே அந்த மாதிரி மூணு படத்தை நான் என் போக்கில் பார்க்கவிடாமக் கெடுத்திட்டீங்க. அதனால இதில் நான் படங்களையும் மற்ற விவரங்களையும் மட்டும் படித்துக் கொண்டேன். படம் பார்த்த பிறகுதான் உங்க விமர்சனத்தைப் படிக்கப் போறேன்.

Anonymous said...

//உள்ளேன் ரீச்சர்// Repeeteei

said...

//என்னவோ மிஸ்ஸிங். வயசு தெரிய ஆரம்பிச்சுருக்கோ?//

ஜோதாபாய்-அக்பருக்கும் 22 வயது (தான்) வித்தியாசமாமே... அதனாலயோ...

//ப்ரீவியூலே படம் முடிஞ்சதும், கையைப் பிசைந்துகொண்டு நிக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன், மெயின் டிஸ்ட்ரிப்யூட்டர் எல்லார்கிட்டேயும் 'படம் ரொம்ப நல்லா இருக்கு'ன்னு ஆறுதலாச் சொல்லலாமுன்னா அங்கே யாரையும் காணோம்.
//

படத்தைவிட .. இந்தமாதிரி வரிகள்.... ம்ம்ம்.. இரசித்தேன்...!

என்னது 2 பேருதான.... ஐஸ்வர்யா (ராய்)பச்சனுக்கே இந்த நிலைமையா...?!

said...

நானும் படத்தப் பாத்துட்டேன் டீச்சர். இங்க ஆம்ஸ்டர்டாம்ல ஒரு தேட்டர்ல படத்த வெளியிட்டிருக்காங்க. ஒரே இந்தியக் கூட்டந்தான். கொஞ்ச டச்சுக்காரங்களும் வந்தாங்க. ஆனா தேட்டர் நெறைஞ்சிருச்சு.

படம் நல்ல படம்னும் சொல்ல முடியாது. கெட்ட படம்னும் சொல்ல முடியாது. ஒரு வாட்டி கண்டிப்பாப் பாக்கலாம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படம். அந்த சுஃபி பாட்டு நல்லாருந்துச்சு. மத்ததெல்லாம் சுமார்தான். சுஃபி பாட்டு கூட ஏற்கனவே ரகுமான் பயன்படுத்திய இசைக்கோர்வைகள்தான்.

படத்துல சொல்ற மாதிரிதான் உண்மையிலேயே நடந்திருக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா பாக்க நல்லாருந்தது. செட்டிங்ஸ் எல்லாம் நல்லாப் போட்டிருந்தாங்க.

ஹ்ரித்திக் பொருத்தமாத்தான் இருந்தாரு. நம்ம புத்தகத்துல பாத்ததெல்லாம் வயசான அக்பர்தானே. சின்ன வயசுல ஒல்லியா இருப்பார்னே நெனச்சிக்கிருவோம். நல்லாவும் நடிச்சிருக்காரு.

ஐஸ்வர்யாராய் பச்சன் நல்லா நடிச்சிருந்தாலும்....என்னவோ நெருடல். ஏதோ...ஏதோ...ம்ம்ம்ம்

அந்த சூது...என்னவோ பேர் சொன்னீங்களே. அவரு சந்திரமுகில வில்லனா வந்து அடிவாங்குறவரு. அதாங்க ஷீலாவோட அடியாளா கூடவே வருவாரே...அவருதான்.

படத்துல பொதுவாகவே நடிகர் நடிகையர் தேர்வு நல்லாயிருந்தது. ஜலாலுதீன் அம்மாவா வர்ரவங்க...பார்க்க பெர்ஷீயன் மாதிரியே இருந்தாங்க. ஒருவேளை பெர்ஷியனாக்கூட இருக்கலாம். பாபரே பெர்ஷியால இருந்துதான வந்தாரு.

ஆனா ஒன்னு...வசனம் ஒன்னும் புரியலை. அங்கங்க புரிஞ்சது. பக்கத்துல உக்காந்திருந்தவன் கிட்ட கேட்டுக்கிட்டிருந்தேன்.

said...

துளசி மேடம்...முதலில் இந்தப் படத்தை பார்க்கும் எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நீங்கள் எழுதியதை படித்தவுடன் படம் பார்க்கும் எண்ணம் வந்துவிட்டது. விரிவான,அருமையான எழுத்து!

said...

//மனசு ஏத்துக்கலை...... சமாதானப் படுத்திக்கிட்டேன் //
ரிஜக்ஷன்...ரிகன்ஸிலியேஷன்.
//அந்தம்மா முகமே வில்லத்தனமா இருக்கு. என் மனம் சொன்னது சரியாப்போச்சு//
ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் ....நெவர் கெட்ஸ் ஃபால்ஸிஃபைட்.
//முதல்முறை மனைவியைச் சந்திக்கும்போது ஒரு மாகாணி விநாடி முகத்தில் வரும் புன்னகை சூப்பர்
//
ரிகலெக்ஷன் ( ஆஃப் கோபால் ? )
//அழகு காணாமப் போயிருக்கு. நளினம் நாசூக்கு எல்லாம் அப்படியே இருக்கு. ஆனாலும்..//.
ஃப்ரஸ்ட்ரேஷன் (ஆஃப் திங்க்ஸ் டிஸப்பியர்ட் ) ? ஃபாலோட் பை அக்ஸ்ப்டென்ஸ் ட்ரூ ஃஃபார் எவரி ஒன்.
எல்லோருமே ஒரு நாளைக்கு மன்சுக்குள்ளே சொல்ற சமாதானம்.
//என்னவோ மிஸ்ஸிங்//
அன்னோன் டிஸப்பாயின்ட்மென்ட் ...அடிக்கடி வந்தா டிப்ரஷன் ஆயிடும்.
//முரட்டு யானைகளை அடக்கிப் பழக்குவதாம்! //
நாம் ட்வென்டி ஃபோர் அவர்ஸும் இத செஞ்சிட்டுதானே இருக்கோம் !
//இதுபோல ஒண்ணைக் கனவிலாவது கட்ட முடியுமா?//
ஒய் நாட் ? முடியும். டியும். யும். ம்.
யு பிகம் வாட் யூ பிலீவ்.
//ஆக்ரா கோட்டையில் ராணியின் படுக்கையறைன்னு ஒண்ணு காமிக்கிறாங்க.//
// அட்டகாசம்//
//அது ஒரு பெரிய பொய்.//.
அது தான் லைஃப்.

'//போதும் பார்த்தது எழுந்து வா'ன்னு கத்திக்கிட்டு இருக்கார்.//
பொய்யையும் கனவு உலகத்தையும் எத்தனை நேரம் ஜீரணிக்க முடியும் ? நான் கோபால் கட்சி.
//உண்மையான சரித்திரம் அடங்கிய படமுன்னு சொல்லாம, சரித்திர நாயகனை வச்சுப் பின்னப்பட்டக் கற்பனைக் கதைன்னு சொல்லி இருக்கலாம். //
கன்க்லூஷன். இன் ஃபாக்ட் இதையே கோபால் நினைச்சிருக்கார். அது சரி..
மண்ணு இல்லாம சிமென்ட மட்டும் வெச்சு ஒரு கட்டடம் கட்ட முடியுமா? சொல்லுங்க !

//கொஞ்ச தூரத்தில் ஒரு இந்திய இளம் ஜோடிகள் கையில் ஒரு குழந்தையோடு ...//.
இளமை என்றுமே இனிமை ‍ = அதை நினைத்து
ஏங்குதோ இந்த முதுமை ?

//மூணுமணிக்கு ஆரம்பிச்ச படம் (நடுவில் ஒரு 10 நிமிச இடைவெளி) முடியும்போது சரியா ஏழடிக்க ஏழு நிமிசம் //
எப்படி கரெக்டா இருக்கு ? உங்க விமர்சனைத்தைப் படிப்பதற்கும் சரியா 3 நிமிஷம்.53 வினாடிகள்.

படம் பார்த்த திருப்தியே எனக்கும். கங்க்ராட்ஸ்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பதிவுகள் பற்றிய எனது கணிப்புகள் வாரம் தோறும் வருவது
http://arthamullaValaipathivugal.blogspot.com

said...

டீச்சர்..

உங்களுக்கு வயசாயிருச்சோன்னு முன்னாடியே நாங்க கவலைப்பட்டோம். அது இப்ப உறுதியாயிருச்சு. ஐஸ் பத்தி இவ்ளோ ச்சின்னதா சொல்லிட்டீங்க.. பொழைச்சுப் போங்க..

106 சீட்ல 2 பேர் படம் பார்த்தா அது ப்ரீவியூதான் டீச்சர்..?

பார்க்கலாமா? வேண்டாமான்னு குழப்பத்துல இருந்தேன்.. நீங்க எழுதிட்டதால கண்டிப்பா பார்த்தே தீரணும்னு முடிவு பண்ணிட்டேன்..

எனக்கு 60 ரூபாய் செலவு வைக்கும் டீச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

said...

//ரெஹ்மானோட பாட்டெல்லாம் ஒயின் மாதிரி கொஞ்சம் ஊறணும் இல்லை?//

அது ஏங்க அந்த ஆளுக்கு மட்டும் இப்படி ஒரு concesscion??

said...

இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய விமர்சனம். விடாம படிச்சிட்டேன்ல... :-)

//இவர்தான் குறுக்கு நெடுக்குமா பூராத் தியேட்டர் ஹாலையும் அளந்துக்கிட்டு இருந்தாரா...... ஒரு வேலை கொடுக்கலாமுன்னு மொத்தம் எத்தனை இருக்கைன்னு எண்ணி வையுங்கன்னேன்:-)
//
உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச். பாஆஆஆஆஆவம் அவர்!

said...

வாங்க கொத்ஸ்.

வெறும் அட்டெண்டன்ஸா?

நல்லா இருங்கப்பா...நல்லா இருங்க.

said...

வாங்க பாசமலர்.

//படம் பார்க்கும் போது......//

எனக்குப் புரை ஏறட்டும். புரிஞ்சுக்குவேன்:-)

said...

வாங்க கோபி.

நல்லா இருக்கா விமரிசனம்? நன்றிப்பா:-))))

said...

வாங்க சிவிஆர்.

ஆமாம்.என்னக் கேட்டுட்டாப் படம் பார்க்கறீங்க?

சரித்திரப்படம். விட்டுறாதீங்க.

பரிட்சைக்குக் கேள்வி வரும்:-)))))

said...

வாங்க ரசிகன்.

கதையெல்லாம் முழுசாச் சொல்லமாட்டேன். நீங்களாப் பார்த்துக்கணும் படத்தை. இதுக்கே பொறுமை இல்லைன்னா எப்படி 'லைட் இயர்ஸ்' எல்லாம் கடந்து போறது? :-))))

said...

வாங்க ரத்னேஷ்(அப்பா)

நான் படம் பார்க்கவிடாமக் கெடுத்தேனா? ஏங்க இப்படி அநியாயத்துக்கு.....:-))))

இதுக்குத்தான் கொஞ்சூண்டு சொல்லிட்டு, மீதியை 'வெள்ளித்திரை'யில் காண்க ன்னு முடிக்கணும். இல்லை?

நானே படம் பார்க்குமுந்தி எந்த விமரிசனத்தையும் படிக்க மாட்டேன். பார்த்து முடிச்சதும் தேடித்தேடிப் பார்த்து, நம்மைப்போல யாராவது 'உணர்ந்தாங்களா"ன்னு படிக்கிறதுதான்:-))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

நீங்களும் நல்லா இருங்கம்மா....

said...

வாங்க ராகவன்.

நல்லவேளை...நீங்களும் படத்துக்குப் போனீங்க. எங்கேத் தனியாப் புலம்பறேனோன்னு பயமா இருந்துச்சு:-))))

அட! அந்த சூது சந்திரமுகியில் ஷீலாகூட வரும் வில்லனா? ஷீலாவைப் பார்த்த ஞாபகமே இல்லை. இப்ப இன்னொரு முறை ச.மு. பாக்கணுமா?
பாடல் செலக்ஷனில் ராராவை மட்டும் நிறையதடவைப் பார்த்தாச்சு. வினீத் தலை கீழே உருண்டதும் தகதிமி தகஜணுன்னு உடம்பு மட்டும் ஆடுவது மனசில் இருக்கு.

நீங்க பார்த்தப் ப்ரிண்டில் சப்டைட்டில் இல்லையா?

நான் நினைச்சதே நீங்களும் என்பது கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு.

said...

வாங்க பாபு மனோகர்.

ஒரு முறை படத்தைப் பார்க்கலாம்.

//விரிவான.....//

கொஞ்சம் நீளமாப் போச்சு, படத்தின் நீளத்துக்கு ஏற்ப:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

இப்படி வரிக்கு வரி.....விமரிசனமா? ஹைய்யோ.....


ச்சும்மா ஒரு அபிமானத்துலே என்னையும் ஏணியில் ஏத்தி வச்சுட்டீங்க. இந்த மரியாதையைக் காப்பாத்திக்க, நானும் இனிமேக் கொஞ்சம் நல்லா எழுத முயற்சிப்பேன்.

எல்லாத்துக்கும் நன்றி. பெரியவங்க சொன்னா அது பெருமாளே சொன்ன மாதிரியாச்சே!!!!


கோபாலுக்கு ஆதரவு பெருகிவருது. இதுதான் சொ.செ.சூ?:-))))))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

ஐஸுக்கே வயசாகறப்ப டீச்சருக்கு வயசாகாதா? :-)))))

படம் பார்த்துட்டு 'உங்க பார்வை'யில் ஒரு விமரிசனம் போடுங்க.
ஆனா ஒரே ஒரு கண்டிஷன்....

படத்தோட நீளத்துக்கு ஈக்யூவலா இருக்கணும் ஆமா:-))))))

(மக்கள்ஸ் அடிக்க வருமுன் விட்டேன், ஜூட்)

said...

வாங்க தருமி.

அது ஒண்ணும் கன்ஸெஷன் இல்லீங்க. மனசில் பதியாத பாட்டை, நம்ம டிவி, ரேடியோன்னு எல்லா 'சேவை நிறுவனங்களும்' நம்ம காது புளிக்கும்வரை போட்டுப்போட்டே பிடிக்க வச்சுருவாங்க. அதான்:-))))

said...

வாங்க காட்டாறு.

சும்மா போரடிக்காம இருக்கட்டுமுன்னு கோபாலுக்கு ஒரு இண்ட்ரஸ்டிங் வேலை கொடுத்தா,நீங்க அதுக்கு இப்படிக் கோச்சுக்கிட்டா எப்படிங்க?:-)))))

said...

வாங்க தென்றல்.

நம்மூர்லே கூட்டம் இல்லீங்க. அதுவுமில்லாமல் இது வெள்ளிக்கிழமை பிற்பகல் மூணுமணி காட்சி. வேலை நாள் இல்லீங்களா? அதான் இரவு 7 மணிக்குக் கூட்டம் வந்துருமுன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.

படம் போட்ட பையன் ( பெயர் ராபின் ராவ்) கிட்டேதான் கேக்கணும். போட்ட காசு தேறுச்சான்னு:-)))

said...

டீச்சர்... எனக்கும் இதுமாதிரி ஒரு அனுபவம் இருக்கு..

தியேட்டரில் "நான் மட்டும்" பார்த்தபடம்... "பிரிவோம் சந்திப்போம்"..

என்ன வித்தியாசம்..
நீங்க படத்தோட முதல்நாள் முதல் காட்சிக்கு போயிருக்கீங்க...
நான் படத்தோட கடைசிநாள் கடைசி காட்சிக்கு போயிருந்தேன்...

அந்தப்படம் பார்த்தீங்களா....
நல்ல படம்..!!

said...

வணக்கம் துளசி கோபால் அவர்களே! இன்றைக்கு தான் படம் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. நேற்று தான் உங்கள் விமர்சனம் பார்த்தேன் . உடனே படத்திற்கு புறப்பட்டோம் . எங்க ஊரில் நல்ல கூட்டம். எங்களுக்கு முதல் வரிசை சீட் தான் கிடைத்தது. கொஞ்சம் படமே எங்க முதுகு மேல தான் திரையிடப்பட்டது. நகைச்சுவை இழையோட நல்ல விமர்சனம். நாமளும் தமிழில் 50 கோடிக்கு அழகாக பொன்னியின் செல்வனோ அல்லது பார்த்திபன் கனவை மீண்டும் எடுக்கலாம்.நடக்கிற விஷயமா?

said...

'பிரிவோம் சந்திப்போம்' பார்த்தேன். அதைப்பத்திக்கூடக் கொஞ்சம் சொல்லணுமுன்னு இருக்கு. பேசாம இயக்குனருக்கு ஒருமடல்னு போட்டுறலாமா?:-))))

said...

வாங்க பிரேம்ஜி.

வணக்கம்.

பஞ்ச் டயலாக் பேசாத அருள்மொழிவர்மனுக்கு நாமெங்கே போவோம்?

நடிகர்கள் சொந்த ஈகோவை விட்டுட்டு, நடிப்பில் மட்டுமே கவனமா இருப்போமுன்னு சொல்லி முன்வந்தால் செல்வனையோ, கனவையோ எடுக்கலாம்.

இது நடக்குமுன்னே இன்னும் ஒரு ஏழு பிறவி எடுத்து முடிச்சுட்டுவந்து , அந்தப் படத்தின் விமரிசனத்துக்குப் பதிவு போடுவேன்:-))))

said...

ஏழு பிற‌விக்க‌ப்புற‌ம் இன்னொரு வ‌லைப்ப‌திவா?!! ஆவ் !!! ஆமாம்.. எந்த‌ வ‌ருஷ‌ம்னு க‌ரைக்ட்ன்னு
சொல்லாம‌ பொத்தாம் போக்கா ஏழு பிற‌வின்னு சொன்னா எப்ப‌டி ? ச‌ரியா 2808 வ‌ருஷ‌ம், ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 14 ந்தேதி புதிய‌ த‌மிழ் வ‌ருட‌ப் புத்தாண்டு பொங்க‌ல் அன்னிக்கு ஆஜ‌ராயிடுங்க‌ன்னு சொல்லிட்டா, நல்லதுன்னு நினைக்கிறேன். எல்லா சிஷ‌ய‌ கோடிக‌ளும், அதான்..
கானா பிர‌பா, காட்டாறு, ஜீவா, சின்ன‌ சொக்க‌ன், ம‌ங்கை, ப்ரேம்ஜீ, தென்ற‌ல், ர‌சிக‌ன்,
கோபி, குசும்ப‌ன், உண்மைத்த‌மிழ‌ன்,பாபு ம‌னோக‌ர், சின்ன‌ அம்மணி, வ‌டுவூர் குமார்,
ர‌த்னேஷ், ர‌சிக‌ன், சிவிஆர்,பாச‌ம‌ல‌ர், இல‌வ‌ச‌ கொத்த‌னார், நானானி, சீனா, சீத‌ர், வ‌ல்லிசிம்ஹ‌ன், டெல்பின், த‌மிழ்ப்பிரிய‌ன், பாச‌ ம‌லர், இந்த லிஸ்ட்லே விட்டுப்போன, எனக்குத்தெரியாதவங்க எல்லாரும் இன்னும் ஏழோ, எட்டோ, பத்தோ பிறவியெடுத்து அந்த டயத்துக்குத் தயாரா வ‌ர‌ணும்ல‌.. முக்கிய‌மா கோபால் வேற‌ கொஞ்ச‌ம் 2,3 வ‌ருச‌ம் முன்னாடியே பிற‌க்க‌ணும்..

கொஞ்ச‌ம் ட்ரை ப‌ண்ணி பிரும்மாவை செல் ஃபோன் லே கூப்பிட்டு க‌ரைக்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிடுங்க‌ மேட‌ம் !

மேன‌கா சுப்புர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.

பி.கு: எதற்கும் எல்லாரையும் இன்னிலேந்து ப்ரே பண்ணச்சொல்லிடுங்க.இந்த நேரத்துக்கு இந்த இடத்திலே இந்த மொழி பேசற இடத்துலே புறக்குணும்னா அது அந்த ஈசனால் தான் சாத்தியம்.
http://pureaanmeekam.blogspot.com

said...

//'பிரிவோம் சந்திப்போம்' பார்த்தேன். அதைப்பத்திக்கூடக் கொஞ்சம் சொல்லணுமுன்னு இருக்கு. பேசாம இயக்குனருக்கு ஒருமடல்னு போட்டுறலாமா?:-))))
//

நீங்க சொல்றத பாத்தா ஏதோ வில்லங்கமா இருக்கே....;(

said...

வாங்க மேனகா.

அதெல்லாம் தினம் தவறாம ப்ரே பண்ணிக்கரதுதான். வலை உலகத்தைக் காப்பாத்துன்னு:-)

said...

என்னங்க தென்றல்,

வில்லங்கம் ஒண்ணுமில்லை. கொஞ்சம் மாத்தி யோசிக்கரதுதான்:-))))

said...

ஓஹோ ஓஹோ இந்து பொண்ணை முஸ்லீம் அரசன் பெண்டாளுறதுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமையா...தெரியாம போச்சே...அக்பர் நாமா படிச்சிருக்கீங்களா...வாழ்க்கையில் தான் இந்துக்களை கொடுமைப்படுத்தி மதமாற்றியதாகவும் அது தவறு அப்படீன்னு தெரிஞ்சிகிட்டதாகவும் பிற்கால அக்பர் உருகியிருப்பாரே அதை பத்தி ஏதாவது காண்பிச்சிருந்தா படத்துல இந்து-முஸ்லீம் ஒற்றுமையை குறித்து ஏதாவது சொல்றதாக ஃபீல் பண்ணலாம். அல்லது குஜராத்தில் இரண்டு இசை சகோதரிகளை பெண்டாள நினைச்சு அந்த இசை சமுதாயத்தையே படையெடுத்து அழிச்சு அதுக்குப்பிறகு அந்த இரண்டு பெண்களும் ஜோஹர் செய்த இடத்தில் சாம்பலிடம் அக்பர் மன்னிப்பு கேட்ட காட்சியை காட்டியிருந்தா அதைக் கூட ஓரளவு இந்து முஸ்லீம் ஒற்றுமைஅப்படின்னு சொல்லலாம் (இதெல்லாம் நான் சொல்லலை அக்பர் நாமா சொல்லுது) பிறகு அக்பர் மன அமைதிக்காக தினமும் காலைல சூரியனுக்கு தண்ணீர் அர்ப்பணம் செய்து தான் செய்த பாவத்துக்கெல்லாம் கழுவாய் தேடிக்கிறதை காட்டியிருந்திருக்கலாம். ஏன் ராணா பிரதாப் சிங் அப்படீன்னு ஒரு சிங்கம் இந்த மொகலாய சாம்ராஜ்ஜிய வாதியை அடியா அடிச்சு ஓட வச்சுதே அவருகூட இன்னைக்கு ஷெல்யூட் டிரைப் ஆகவும் வெள்ளைக்கார கிறிஸ்தவ வெறியர்களால் கிரிமினல் டிரைப்ஸ் ஆகவும் கொடுமைப்படுத்தப்பட்ட மலைவாசி மக்கள் அக்பருக்கு எதிரா காவிக்கொடிக்கு கீழே போராடுனதை காட்டியிருக்காங்களா? அதெல்லாம் இல்லையா,,,அதுசரி மொகலாய பெட் ரூம்ல இந்து பெண்கள் சிறை யெடுக்கப்பட்டு பெண்டாளப்பட்டதை இப்படி கோடி கோடி யா செலவழிச்சு சொல்றதுக்கும் அதை ரசிச்சு வழிய நம்மளும் இருக்கிறப்ப...பாரதி சொன்னதுதான் நினைவுக்கு வருது. ஆனா அந்த வரியை இங்கே சொன்னா அந்த விசுவாச பிராணிக்குத்தான் அவமானம்.

said...

வாங்க அரவிந்தன் நீலகண்டன்.

வணக்கம். நலமா?

முதல் முறையா வந்துருக்கீங்க போல!

அக்பர் நாமாவைப் படிச்சதில்லீங்க.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சினிமான்னாவே கற்பனை கலந்ததுதானே? இல்லீங்களா?

said...

கற்பனை என்று சத்ரபதி சிவாஜியை ஒரு முஸ்லீம் பெண் காதலித்து திருமணம் செய்வதாக எடுத்தால் என்ன ஆகும்? அதெப்படி பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் சில அறிவுசீவி இயக்குநர்கள் கற்பனை எப்போதும் இந்த மாதிரியே இருக்கிறது? வரலாற்று படம் எடுக்கிறேன் என்று வரலாற்றை திரிப்பது ரொம்பவும், அயோக்கியத்தனமான விசயம். அதன் பிறகு ஏதோ இந்திய முஸ்லீம்கள் குறித்து படத்தில் பிரஸ்தாபம் வருவதாக சொல்லுகிறீர்களே...அவுரங்கசீப் முதல் முகமது அலி வரை இந்திய உள்நாட்டு சண்டைக்கு மதரீதியில் வெளிநாட்டு இஸ்லாமிய படை பல ஆதரவை எதிர்பார்த்தவர்கள்தான். வரலாறு என்பது கடுமையான ஒரு ஆசான். பாலிவுட்டின் சில்லுண்டித்தனமான இடுப்பசைவு ரொமாண்டிசத்துக்கு அதனை ஒத்தூத சொல்லுவது கேனத்தனமான ஒன்று. உண்மையில் வரலாற்றின் பாடங்களை படிக்க அம்பேத்கரின் Thoughts on Pakistan' படிக்கவும். நெட்டிலேயே கிடைக்கும்.

said...

விவரங்களுக்கு நன்றி அரவிந்தன் நீலகண்டன்.

//உண்மையில் வரலாற்றின் பாடங்களை படிக்க அம்பேத்கரின் Thoughts on Pakistan' படிக்கவும். நெட்டிலேயே கிடைக்கும்.//

படிப்பேன்.

said...

நாங்களும் ப்ரிவ்யூ பார்த்த நிறைவு. இங்கே போன வார இறுதியில வெளியாச்சு. போன வாரமே பாக்குறதுன்னா $13 - $15 குடுக்கணும். நாலைஞ்சு வாரம் போனா $3க்கு பார்க்கலாம்ன்னு மனைவியார் சொன்னதால பாக்காம இருக்கோம். ஓம் சாந்தி ஓம் இப்படி தான் $3க்கு ரெண்டு வார இறுதி எல்லாக் காட்சிகளும்ன்னு ஓடிச்சு. அப்படியே இதுக்கும் இருக்கும்ன்னு நம்பிக்கிட்டு இருக்கோம். இந்த வார இறுதி போகலாம்ன்னு சொன்னா எங்க ஃபைனான்ஸ் மினிஸ்டர் கேக்க மாட்டேங்கறாங்க. அப்படியே படத்தைத் தூக்கிட்டாலும் இணையத்துல இருந்து இறக்கி பெரிய தொலைக்காட்சியில பாக்கலாம்ன்னு சொல்றாங்க. ஹ்ரித்திக் மேல கோபம் இருக்காதுன்னு நினைக்கிறேன்; ஹ்ரித்திக் இருந்தாலும் ஐஸ் இருக்கிறதால நான் பாக்கக் கூடாதுன்னு சதி பண்றாங்களோன்னு ஒரு ஐயம்.

ஓவரா புலம்பிட்டேனா? என்னங்க பண்றது? என் வயித்தெரிச்சல் எனக்கு. நீங்க சொல்றதை வேற பாத்தா படத்தை இந்த வார இறுதியிலேயே ஓட்டுறாங்களா இல்லையான்னு தெரியலையே.

said...

வாங்க குமரன்.

இது புது நியூஸா இருக்கேப்பா......

வார இறுதியில் மூணு டாலருக்குப் படம்!!!!

இங்கே இன்னும் இப்படியெல்லாம் வரலை. ஆங்கிலப்படத்துக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை பகல் காட்சிக்கு ரெண்டு டாலர் குறைச்சல்.

ஹிந்திப் படம் ஓட்டுவதே ரெண்டு மூணு நாளைக்குத்தான். சில படங்கள் ஒரே ஒரு காட்சி மட்டுமே. முந்தி நாங்களும் ஒரு மூணு படம் போட்டுக் கையைச் சுட்டுக்கிட்டோம். கூட்டம் இல்லாத ஊர் ஆகிப்போச்சே!