Wednesday, February 27, 2008

மலர்களே மலர்களே............

ஆரம்பப்பள்ளிக்கூடக் குழந்தைகளின் பிக்னிக் டே. குழந்தைகளைக் கட்டி மேய்க்கறது லேசுப்பட்டக் காரியமா? அதனால் 'பேரண்ட் ஹெல்பர்ஸ்' என்ற பெயரில் ஆறு குழந்தைக்கு ஒரு அம்மாவோ இல்லை அப்பாவோன்னு கூடவே போறது இங்கே வழக்கம். நம்ம வீட்டுலேதான் அப்பாவுக்கு ஆஃபீஸே கதியாச்சே. ஆன்னா ஊன்னா, இல்லே வேற எதுன்னாலும் அம்மாதான் பள்ளிக்கூடத்துலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழிச்சுக்கிட்டு இருந்தேனே......





அருகாமையில் இருக்கும் ஒரு தோட்டத்திற்குப் போயிருந்தோம். ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிஞ்சு மதியச் சாப்பாடும் ஆச்சு. அந்தத் தோட்டம் பூராவும் (Rhododendron) ரோடோடெண்ட்ரன் செடிகள் நிறைஞ்சுருக்கு. பூக்கும் சீஸன் வேற.சொல்லணுமா? இந்தப்பூ நம்ம நேபாள நாட்டின் தேசிய மலராம்.
பலவித நிறங்களில் கீழே உதிர்ந்துகிடந்த பூக்களுடன், புதரின் அருகே உட்கார்ந்திருந்தோம்.


பக்கத்தில் எதோ நார் போல ஒண்ணு கைக்கு அகப்பட்டது. ச்சும்மா இல்லாமல் அந்தப் பூக்களைத் தொடுக்க ஆரம்பிச்சேன். அது நீளமா சரமாகிறதைப் பார்த்த குழந்தைகளுக்குக் குஷி தாங்கலை. எனக்கு எனக்குன்னு கேட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. அக்கம்பக்கத்துச் செடிகளில் இருந்து உதிர்ந்து கிடந்த குவியலைப் பொறுக்கிட்டு வந்தாங்க. நானும் விடாமத் தொடுத்து ஆளுக்கு ஒரு மாலையாக் கழுத்தில் போட்டுக் கொடுத்தேன். ஊசி இல்லாம எப்படி அந்தப் பூவைக் கோர்க்கிறேன்னு அங்கே இருந்த எல்லாருக்கும் (பெரியவர்களுக்குத்தான்)ஒரே ஆச்சரியம். கிடைச்ச சான்ஸை விட்டுறாம, நம்மூரில் எப்படி பூக்களைக் கட்டி அதை ஒரு வியாபாரமாச் செய்யறாங்க, பெண்கள் எப்படி பூக்களைத் தலையில் சூட்டிக்கொள்ள விரும்புறாங்க, கோயில்களுக்கருகில் பூக்கடைகள் இல்லாமலே இருக்காதுன்னு ஒரு லெக்சர் அடிச்சுவிட்டேன்.





இது நடந்ததுக்கு ரெண்டு வாரம் கழிச்சு, நம்மூர் சிட்டிக் கவுன்ஸிலில் இருந்து ஒரு கடிதம் வந்துச்சு. அடுத்து வரப்போகும் ப்ளவர் ஷோவுக்கு உதவி செய்ய முடியுமான்னு........கேட்டுருந்தாங்க. செஞ்சாப்போச்சு......... இது என்ன பிரமாதமுன்னு அவுங்க சொன்ன எண்ணில் கூப்பிட்டுப் பேசினேன். இந்த வருஷம் உலகநாடுகளின் திருமண அலங்காரங்கள் என்று அலங்கரிக்கப் போறோம். உங்க நாட்டு அலங்காரங்களைச் செய்ய உதவணும்னு சொன்னாங்க. நம்மூர்லே ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரியான அலங்காரம், சாஸ்த்திரம் சம்பிரதாயம் எல்லாம் இருக்குன்னு ஒரு லெக்சர் கொடுத்துட்டு, பொதுவாத் தமிழ்நாட்டுலே மணமகள் அலங்காரத்துக்கு உதவி செய்யறேன்னு சொல்லி செஞ்சு கொடுத்தேன். அட்டையில் ஜடை அலங்காரம் காகிதப்பூக்களால் செஞ்சு இன்னும் தேவையான ஆக்ஸெஸரீஸ் எல்லாம் கொண்டுபோய் ஜமாய்ச்சாச்சு. இங்கத்து டவுன் ஹாலில் இது நடந்து ஒரு 18 வருசமாச்சு.


இங்கே சம்மர் சீஸன் ஃபிப்ரவரி மாசம் இறுதிவரைதான். நம்மூரோ நியூஸியின் கார்டன் சிட்டிவேற. அதனால் ஃபிப்ரவரி மாசம் வரும் காதலர் தினத்தையொட்டியே இந்த பூக்கள் கண்காட்சி நடந்துக்கிட்டு இருந்துச்சு. வருசாவருசம் எதாவது ஒரு 'தீம்' சொல்லிருவாங்க. போன வருசம் பட்டாம்பூச்சி, அதுக்கு முந்தினவருசம் வண்டு இப்படி. ஒரு வருசம் டெடிபேர் கூட இருந்துச்சு. அதுக்கேத்தபடி கார்டன் செண்டர், ஸ்கவுட் டீம், கேர்ள் கைட்ஸ், இன்னும் சிலபல வியாபார நிறுவனங்கள்ன்னு ஒவ்வொரு குழுவும் அதை அனுசரிச்சு, ஊருக்குள்ளே போகும் ஏவான் நதிக்கரையில் அலங்காரம் செஞ்சு வைப்பாங்க. சிலபேர் ஆத்துத்தண்ணியிலே சின்னப் படகுகளை வச்சு அதை அலங்கரிச்சு இருப்பாங்க. இந்த ஆத்தை ஒட்டியே இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில் மலர் அலங்காரமுன்னு நகரசபை விதவிதமாப் பூத்துக்குலுங்கும் பூச்செடிகளை நட்டு வச்சிருக்கும்.



பொதுவா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுவரைன்னு வீகெண்டையும் சேர்த்தே இருக்கும். மக்களுக்கும் ஓய்வா அதைப்போய்ப் பார்க்க நேரம் கிடைக்கும். இதுலே ஹைலைட் என்னன்னா நம்ம, நகரத்துக்கு மத்தியில் கதீட்ரல் இருக்கு பாருங்க ,அங்கே ரெண்டு வரிசை இருக்கைகளுக்கு நடுவில் இருக்கும் நடைபாதையில் மலர் அலங்காரம் செய்வாங்க. மலர்க்கம்பளம் விரிச்சிருக்கும். மொத்தம் 20 மீட்டர் நீளம். ரெண்டு மீட்டர் அகலம் வரும்.
இது இல்லாம அங்கே இருக்கும் தூண்களில் எல்லாம் மலர்க்கொத்து அலங்காரம் இருக்கும். இந்தத் திருவிழா (இப்படித்தான் சொல்ராங்க Floral Festival) நடக்கும் வாரமெல்லாம் அங்கங்கே வெவ்வேறு பூக்களுக்கான சொசைட்டிகளில் மலர் அலங்காரம், அந்தக் குறிப்பிட்டச் செடிகளை வளர்க்கும் முறைக்கான பயிற்சி வகுப்புகள், நம்ம பொட்டானிக்கல் கார்டனில் சில விரிவுரைகள்னு எதாவது இருக்கும்.




இந்த வருசம் கொஞ்சம் தாமதமாத்தான் திருவிழா ஆரம்பிச்சது, பிப்ரவரி 22 முதல் 24 வரைன்னு. நாங்களும் வழக்கம்போல் சனிக்கிழமை பகலுக்கு விக்டோரியா சதுக்கத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். வழக்கமான இடத்துலே போய்ப் பார்த்தா.......................

அங்கே ஒண்ணுமே இல்லை. எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கு. ஃபெரியர் ஃபவுண்டென்லே கொட்டும் தண்ணி கூட இல்லாம நீரூற்று மொட்டையா நிக்குது. இந்த மாதிரி தண்ணீர் இல்லாம ஒரு நாளும் பார்த்ததில்லை இந்த 20 வருசத்துலே. இது என்னடா நம்ம நகரத்துக்கு வந்த சோதனைன்னு அவசரஅவசரமா கேமெராவை எடுக்கறதுக்குள்ளே............ பக்ன்னு தண்ணீர் பீய்ச்சியடிக்க ஆரம்பிச்சது.


நதிக்கரையில் பார்வையிட ஒரு அலங்காரமமும் இல்லாததால் கூட்டமும் இல்லை. ஒரு வாத்து மட்டும் 'என்னாத்துக்கு நீ இங்கே வந்தே?'ன்னு




கேக்கறது போல ஒரு பார்வை பார்த்துச்சு. நம்மைக்கடந்து போன ஒரு ட்ராம் வண்டியில் பக்கவாட்டு ஜன்னலில் . திருவிழா இந்த வாரம்தான்ன்னு உறுதி சொல்லி நாலு பூவைக்குத்தி வச்சிருந்தாங்க.


அப்படியே காலார நடந்து சதுக்கத்துக்கு வந்தோம். சதுக்கத்திலே கொட்டாய் போட்டு கொஞ்சம் பூக்கள், ஓவியங்கள், செப்புத்தகடு, கம்பிகளால் செஞ்ச மெட்டல் ஆர்ட்ஸ்னு விற்பனைக்கு இருந்துச்சு.









கதீட்ரல் உள்ளே மலர்க்கம்பளம் விரிச்சிருக்காம். வழக்கமா அங்கே ரெண்டு டாலர் வசூலிப்பாங்க தலைக்கு. அதுவும் எதோ தருமக் கைங்கர்யங்களுக்குப் போகும்.உள்ளே நுழைஞ்சதும் முன் வெராந்தாவுலே ஒரு மேசை போட்டு, நுழைவுச்சீட்டு விப்பாங்க.



இன்னிக்கு என்னன்னா..... விற்பனைச்சீட்டுக்குன்னு வெளியே சின்ன கூடாரம், கதீட்ரல் வாசலுக்கு முன்னாலே ரெண்டு பக்கமும் நாலு தொட்டியில் செடிகொடிகளைவச்சு அலங்காரம். காசேதான் கடவுளடான்னு பக்காவா வியாபாரமாக்கி வச்சுருக்காங்க. பெரியவங்களுக்கு 10 டாலர். முதியோர் இல்லத்துலே இருந்து வந்தவங்கன்னா 5 டாலர்களாம். விலைவாசி இப்படி 400 சதமானம் ஏறிடுச்சா? நாலுபேர் இருக்கும் குடும்பம் கோயிலுக்குள்ளே போய்ப் பார்க்க நாற்பது வெள்ளின்னா.................... எப்படிங்க?



போன வருசக்கடைசியில் இருந்து எங்களுக்கு புது நகரத் தந்தை வந்திருக்கார். இங்கே நகரத்தில் இருக்கும் மக்களைப் பிழிஞ்சு வரிகளை ஏறக்குறைய 25 சதமானம் ஏத்துனதோட நிக்காம, இந்த வருசம் மலர்களின் திருவிழாவை வழக்கம்போல உள்ளூர் மக்களை அனுபவிக்க விடாமல் செஞ்ச புண்ணியவான்.



கொஞ்சம்கூட இதயமில்லாமல் இப்படித் திருவிழாவில் கைவச்சுட்டாரேன்னு, இவுங்க எல்லாம் சிந்திக்கவே மாட்டாங்களான்னு நினைச்சப்பத்தான் இந்த வருசத் திருவிழாவுக்கான 'தீம்' தெரியவந்தது.



தலை, கை,& இதயமாம்.!!!!

"Head, Hand & Heart



நல்லா இருங்கப்பா. நல்லா இருங்க.


நரகமுன்னு ஒண்ணு இல்லைன்னு நாலுபேருக்குச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். உங்களை ஒரு படம் எடுத்துக்கவான்னு கேட்டப்ப, ச்சும்மாத் தோளைக் குலுக்கிட்டு போஸ் கொடுத்தார்.


வரவர நம்முலகே நரகமா ஆகப்போது..., அப்புறம் தனியா ஒண்ணு எதுக்குன்னு இருக்கோ என்னமோ?

12 comments:

Anonymous said...

நீங்க கட்டுன பூச்சரத்தையும் போட்டோ புடுச்சி போட்டிருக்கலாமே.

நான் பூ கட்ட பழகலை. பூ கட்டறவங்களைப்பாத்துட்டே இருப்பேன். அது ஒரு கலை இல்லையா டீச்சர்

said...

\\அங்கே இருந்த எல்லாருக்கும் (பெரியவர்களுக்குத்தான்)ஒரே ஆச்சரியம். கிடைச்ச சான்ஸை விட்டுறாம, நம்மூரில் எப்படி பூக்களைக் கட்டி அதை ஒரு வியாபாரமாச் செய்யறாங்க, பெண்கள் எப்படி பூக்களைத் தலையில் சூட்டிக்கொள்ள விரும்புறாங்க, கோயில்களுக்கருகில் பூக்கடைகள் இல்லாமலே இருக்காதுன்னு ஒரு லெக்சர் அடிச்சுவிட்டேன். \\

எங்க டீச்சர்ன்னா சும்மாவா!! ;))

\\ சின்ன அம்மிணி said...
நீங்க கட்டுன பூச்சரத்தையும் போட்டோ புடுச்சி போட்டிருக்கலாமே.\\

ஆமா டீச்சர் இருந்த போடுங்க..;)

said...

வாங்க சின்ன அம்மிணி.

நான் எங்க பாட்டிகிட்டேதான் பூ கட்டக் கத்துக்கிட்டேன். நம்ம வீட்டுலே ஒத்தை நந்தியாவட்டம் நிறைய பூக்கும்.

நூலை இறுக்கிட்டா பூவின் கம்பெல்லாம் அறுந்து விழுந்துரும். லூசாக் கட்டுனா பூவே விழுந்துரும்.

இப்படியே 'அறுத்து அறுத்தே' இந்தக் கலையைக் கத்துக்கிட்டேன்:-)))

said...

வாங்க கோபி.

படமா? ஏது?

அப்ப இப்படி ப்ளொக் எழுதப்போறேன்னு தெரியாது பாருங்க:-))))

இந்தப் பதிவுலேயும் மலர்க்கம்பளத்தைப் போட மறந்துட்டு, இப்ப அதைச் சேர்த்திருக்கேன்.

said...

ஆஹா!! மலர் கண்காட்சி நடக்கலைன்னு சொல்ல ஒரு பதிவு. அதுக்கு இம்புட்டு பில்டப்பு!! ரீச்சர், நீங்க எங்கயோப் போயிட்டீங்க!!

said...

துளசி மத்த பூவெல்லாம் இருக்கட்டும்.

இப்ப நீங்க என்ன பண்றீங்கன்னா,
உடனடியா வீட்டில பூ வெல்லாம் கட்டி, துளசீஸ் ஃப்ளவர் ஷோனு வைக்கணும்.

அதுதான் நமக்கு ஏற்கும். சரிய்யா.
மத்த படமெல்லாம் பிரமாதமா இருக்கு.

said...

வாங்க கொத்ஸ்.

//மலர் கண்காட்சி நடக்கலைன்னு சொல்ல ஒரு பதிவு//

என்னப்பா இது அக்கிரமம். பதிவைப் படிக்காம பின்னூட்டம் போட 'யார் கிட்டெயோ' இருந்து கத்துக்கிட்டீங்களா?

மலர் கண்காட்சி எப்படி நடந்ததுன்னுதான் பதிவே:-)))

said...

வாங்க வல்லி.

நம் வீட்டுலே இருக்கும் கருப்புப்பூ தான் மெயின் அட்ராக்ஷன்.

அதுவும் நெற்றிக் கண்ணோடு இருக்கு.

பூ கட்டத்தெரியாத ச்சின்ன அம்மிணிக்குத்தான் ஒரு ஒன் டு ஒன் வகுப்பு எடுக்கலாமுன்னு ஒரு ஐடியா இருக்கு:-)

said...

ஹையா!!! லீடர் மாட்டிக்கிட்டார். :-)
நல்ல படங்கள்,அதுவும் அந்த மேஜை மேல் அலங்கரிக்கப்பட்ட பூக்கள்.

said...

வாங்க குமார்.

லீடர்ன்னாலும் பாடத்தைப் படிக்கணுமா இல்லையா?

அதான்.....:-)))))

ஆமாம். இதுலே உங்களுக்கென்ன அவ்வளவு சந்தோஷம்?

said...

துளசி அக்கா,

உங்க ஊருல கோடைக்காலம் முடியுதா? இங்கே அடுத்த மாசத்துல இருந்து குளிர் குறையும்ன்னு நினைக்கிறேன். எப்படான்னு காத்துக்கிட்டு இருக்கேன். அப்புறம் நாங்களும் இலை, பூ, கனின்னு பாக்கலாமே.

said...

வாங்க குமரன்.

இந்த 'காலங்களுக்கு' எப்படித்தான் தெரியுதுன்னு விளங்கலை. இந்தவருசம் லீப் வருசமுன்னுக்கூடத் தெரிஞ்சிருக்கு அதுக்கு.

ஃபிப் 29 முடிஞ்சதும் மார்ச் 1 முதல் குளிர் ஆரம்பமாயிருச்சு. ஆட்டமுன்னு சொன்னாலும், குளிர், வசந்தமுன்னு சொன்னாலும் அடுத்த டிசம்பர்வரை குளிரோ குளிர்தான்.

வேணுமுன்னா ஆட்டம் குளிர், குளிர் குளிர்,வசந்தக்குளிர்னு சேர்த்தே சொல்லிக்கலாம்.

உங்கூர்மாதிரி உறைபனி இல்லாட்டியும், அண்டார்ட்டிக் குளிர் காத்துதான் ரொம்ப வேதனை.