Tuesday, February 26, 2008

ஏம்பா...பொண்ணை விட்டுட்டுப் போயிருக்கலாம்லெ......

சாகற வயசா இது? வெறும் இருபத்தியாறுதான். இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு. போனவருசம் ஷாங்காயில் நடந்த ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்லே இந்த நாட்டின் பிரதிநிதிகளாய்ப் போன டீம் மெம்பரில் ஒருத்தர் ஸேரா ஜேன். பவர் லிஃப்டிங்லே நியூஸியில் நாலாவது ரேங்க். போனவருஷமுன்னு நீட்டி முழக்கறேனே, இது ஒரு நாலு மாசம் முந்திதான்.


தெற்குத்தீவின் கடைசிப்பகுதியில் இருக்கும் விசேஷ கவனிப்பு வேண்டியுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் படிப்பு. கற்பதில் கொஞ்சம் தாமதம். மூளை வளர்ச்சிக் கொஞ்சம் குறைவாம். தனியாக விடமுடியாது. எப்போதும் யாராவது கூடவே இருக்கணும். மிருகங்கள் மேல் அளவில்லாத பாசம். அனிமல் ஷெல்ட்டர்க்குப் போய் வாரம் ஒரு நாள் வாலண்டியர் வேலை செய்வது வழக்கம். உள்ளூரில் ஒரு சிகை அலங்கார நிறுவனத்தில் உதவியாளரா வேலை செய்ய ஆரம்பிச்சுச் சில வருசங்கள் ஆகுது. தனக்கே தனக்குன்னு ஒரு செல்ல நாயும் இருக்கு.


அழகான அருமையான குடும்பம். ரெண்டு அண்ணன்மார். நல்லாப் படிச்சுப் பெரிய வேலையில் இருக்காங்க. ஒரு அண்ணன் உள்நாட்டில், ஒரு முப்பது நிமிஷ கார்ப் பயணத்தூரத்தில். மூத்த அண்ணன் இங்கிலாந்தில் இஞ்சிநீயர்.
அம்மா மருத்துவத் துறையில் உள்ளூர் மருத்துவரின் கன்ஸல்டிங்கில் க்ளினிக்கல் நர்ஸ். சவுத் ஐலண்ட் ஸ்பெஷல் ஒலிம்பிக் கமிட்டீயின் தற்போதைய சேர் பர்ஸன்.


அப்பா...........பண்ணை அதிபர். பண்ணையில் ஐந்தாயிரம் ஆடுகள். இவரோட கட்டளைக்குக் காத்திருக்கும் மூன்று ஷீப் டாக்ஸ்( sheep dogs). இது தவிரக் குறைந்த எண்ணிக்கையில் பசுக்கள் கூட்டம் ஒண்ணு. இது தவிர வழக்கமான பண்ணையில் உள்ள பறவைகளாகக் கோழிகள் முதலானவை. பவுலிங் விளையாடுவதில் ஆர்வம். மகள் படிக்கும்/படித்த பள்ளியில் பேரண்ட் & டீச்சர்ஸ் அசோஸியேஷன் தலவரா பல ஆண்டுகள் இருந்துருக்கார். பவுலிங் க்ளப்பின் தற்போதைய ப்ரெஸிடெண்ட்.


அக்கம்பக்கம் பதினெட்டுப் பட்டியிலும் பேர் கேட்ட குடும்பம். நாற்பத்தி அஞ்சு வருசம் இங்கேயே இதே இடத்தில் இருக்குறாங்க.


ஒன்பதுநாள் நிகழ்வாக அப்பாவும் அம்மாவும் ஷாங்காய் போனார்கள். அப்பா, தன் மகளுக்கு மட்டுமில்லாமல் அந்தக் குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருந்துருக்கார். எல்லாருக்கும்தான் எதாவது உதவி வேண்டித்தானே இருக்கு. நிகழ்வுகள் முடியும் நாளில் அவருக்கு நெஞ்சுவலி. மருத்துவமனையில் சேர்த்து, முதல் சிகிச்சைக்குப்பின் அவரை ஹாங்காங் மருத்துவ மனைக்கு மாற்றி இருக்கிறார்கள். சேதியறிஞ்ச மூத்த மகன் லண்டனில் இருந்து ஹாங்காங் வந்து மருத்துவ மனையிலிருந்து அவர் வெளிவரும்வரை துணையாக இருந்து உதவி செஞ்சுட்டு, அப்பா அம்மாவை நியூஸிக்கு விமானத்தில் அனுப்பிவிட்டு, அவர் திரும்பிப் போனார்.


அம்மாவுக்கு ஒரே யோசனை. மகன்கள் இருவரும் வெவ்வேறு தொழிலில் வேறு இடங்களில். கணவருக்கோ உடல்நிலை சரியில்லை. மகள் ஒரு பாவம். பண்ணை வேலைகளோ அதிகம். பேசாமல் பண்ணையை விற்றுவிட்டு நகரத்தில் குடியேறிவிடலாம். ஏற்கெனவே இதைப் பற்றிச் சிலவருடங்களாகவே சிந்தித்துக் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தவர்தான். இப்போது பண்ணையைப் பற்றி ஒரு முடிவு செய்யவேண்டிய தருணம். அப்பாவுக்கு ஒரு தயக்கம். பண்ணையை விட்டுப்போவதா? மண்டைக் குடைச்சல் அவருக்கும்.



மனதின் ஒரு பகுதி இதைச் சரி என்று சொன்னாலும் அடுத்த பகுதி கேட்டால்தானே? உடல்நலக் குறைவு கொஞ்சம்கொஞ்சமாகக் கூடிவருகிறது.
உள்ளூர் மருத்துவமனையில் அவ்வப்போது தங்கும் நிலமை. மன அழுத்தம் கூடுகிறது. இதற்கும் மருந்து கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை மருத்துவ மனையில் தங்க நேரிடும்போதெல்லாம் பிழைப்பாரோ மாட்டாரோ என்ற பெருங்கவலை மனைவிக்கு.

.
அப்பா அம்மா இருவரும் சேர்ந்துதான் மகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொண்டதுதான். அப்பாவுக்கு மகள் ரொம்பவே செல்லம். அவருடைய அருகாமையில் மகள் இருக்கும்போது மேனேஜ் செய்வது சுலபம். அம்மாவுக்குத் தன் ஒருத்தியால் மட்டும் மகளைப் பார்த்துக்கொள்வது சிரமம் என்று அவ்வப்போது பேச்சு வருமாம். இந்த சமயத்தில் இளைய மகனுக்குக் கல்யாணம் கூடிவந்தது. நல்லவேளையாகப் பெண் வீட்டுக்கார்களே எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டதால் அம்மாவுக்கு நேரம் கிடைத்தது கணவரையும் மகளையும் பார்த்துக்கொள்ள.


அடிக்கடி மருத்துவமனையில் இருப்பதால் மகனின் திருமணத்தில் அவரால் கலந்துகொள்ள முடியுமா என்பதும் ஒரு கூடுதல் கவலையாக இருந்ததாம்.
நல்லவேளையாக கூடுதலாக ஒன்றும் சம்பவிக்காமல் எல்லாம் நல்லமுறையிலேயே நடந்தது. அனைவரும் கலந்துகொண்ட மிகமகிழ்வான நிகழ்வு. மூத்த அண்ணனும் வந்து கலந்துகொண்டு சில நாட்கள் இருந்துவிட்டுப் போனார்.



மகனின் திருமணம் முடிந்து பனிரெண்டு நாட்களில் வந்தது காதலர் தினம். . வேலைநாளாக இருந்ததினால், அம்மா காலை 7 மணிக்கே வேலைக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். அதற்கு மறுநாள் மகளின் பிறந்தநாள். நல்ல பரிசாக ஒரு உடுப்பு வாங்கிக்கொண்டு வரணும் என்று மனதில் ஒரு திட்டம்.


அன்று மாலை ஐந்துமணி அளவில் வீடு திரும்பிய அம்மா கண்டது உயிரில்லாத கணவனையும், மகளையும். அவசர உதவியைக் கூப்பிட்டுவிட்டு,
இளைய மகனுக்கும் தொலைபேசினார். போலீஸ் உடனே பதறியடித்து வந்தது.


கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த மகளைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டிருக்கிறார் அப்பா. எல்லாம் அம்மா, பணிக்குப் போனதும் நடந்து முடிந்திருக்கிறது. பண்ணை வீடானதால் அருகில் மற்ற வீடுகள் இல்லை.
யாருக்கும் எந்த சப்தமும் கேட்கவில்லையாம்.


அங்கங்கே இதுபோன்ற மரணச்செய்திகளை அவ்வப்போது வாசிக்க நேர்ந்தாலோ, இல்லை தொலைக்காட்சிகளில் பார்த்தாலோ ஏற்படும் உணர்வை விட, மரணித்தவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் என்றால் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறதல்லவா?

மூன்று வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு திருமணப்பதிவு நினைவிருக்கின்றதா? அந்த மணமகனின் தந்தையும் சகோதரியும்தான் இந்த அப்பாவும் மகளும்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் இந்த வியாழந்தான் அவர்களது சவ அடக்கம் நடந்தது.


சவுத் ஐலண்ட் ஸ்பெஷல் ஒலிம்பிக் குழுவினரின் சிறப்பு மரியாதையோடு ஸேராவின் இறுதிச்சடங்கும், பவுலிங் க்ளப் அங்கத்தினர்களின் சிறப்பு மரியாதையோடு அப்பாவின் இறுதிச் சடங்குகளும் நடைபெற்றன.


இந்த நான்கு மாதங்களாக அவருக்கு மன அழுத்தம் கூடி இருந்ததாக மனைவி குறிப்பிட்டார். சரி.அப்பாவுக்குத்தான் வாழப்பிடிக்கவில்லை. மகளையாவது விட்டுவிட்டுப் போயிருக்கக்கூடாதா?


கணவரையும் மகளையும் இழந்து வாடும் அந்த அன்னைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கவும், இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அஞ்சலியாகவும் இதை இங்கே பதிவு செய்கின்றேன்.

14 comments:

சின்னப் பையன் said...

:-((((((((((((((

இலவசக்கொத்தனார் said...

அடப்பாவமே.. :((

Unknown said...

ஹ்ம்ம்ம்... சோகமான முடிவுதான் :(

G.Ragavan said...

முருகா.... என்ன கொடுமை இது. தெய்வமே. ஒன்னும் சொல்ல முடியலை... அவர்கள் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

கோபிநாத் said...

!!!

:(((

வடுவூர் குமார் said...

அடப்பாவமே!!
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

:(
:(

cheena (சீனா) said...

கணவரையும் மகளையும் இழந்து வாடும் அந்த அன்னைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கவும், இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அஞ்சலியாகவும் இதை இங்கே பதிவு செய்கின்றேன்.


ஆமாம் என் மறுமொழியும் இதுதான்

நித்யன் said...

நீங்கள் கொடுத்த லிங்க்கில் படித்தபின் மொத்த தகவலையும் தெரிந்து கொண்டேன்.

வருத்தமாக இருக்கிறது. :-(

Thamiz Priyan said...

மனதிற்கு மிகவும் சங்கடமாகி விட்டது.
:((

பாச மலர் / Paasa Malar said...

அவர்க்ளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

வல்லிசிம்ஹன் said...

அந்த தாப்பஅவுகு என்ன கம்பல்ஷனோ தெரியலையஏ.
பொண்ணையும் சுட வேண்டிய அவசியமென்ன.


அதுவும் இன்னோரு மகனும் இதே ஊரில இருக்கும் போது.
புரியலைப்பா:(

துளசி கோபால் said...

வருகைதந்து, என் மனவருத்தத்தில்
பங்குகொண்ட அன்புள்ளங்களுக்கு
மிகவும் நன்றி.

sury siva said...

நமக்கு நெருக்கமான ஒருவர் நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வழியில்
இறக்கும்போது நமது மன நிலை சொல்லுக்கும் அப்பால் ஒரு துயரத்தை அடைகிறது.
அண்மையில் இருப்பவரின் ஆறுதல் மொழிகளே அதற்கு துணை.
இறப்பு எனும் துயரத்தில் இருந்து படியுங்கள்
http://www.sriaurobindosociety.org.in/qstarch/qstnov99.htm

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.