Monday, April 23, 2007

காணக் கிடைத்ததே.............

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 16 )

குதிரைக்குக் கண்பட்டை கட்டுனது போல நானுண்டு என் ச்சீனு உண்டுன்னு இருந்ததை இன்னிக்கு மாத்திக்கலாமுன்னு நானும் என் கண்பட்டையைக் கழட்டுனேன். கோயிலுக்கு இடது பக்கம் கொஞ்சம் ஒரு 200 மீட்டர் போனா ஒரு காளியம்மன் கோயில்இருக்கு. முதல்முறையா அங்கே நுழைஞ்சோம். ஸ்ரீ வடபத்ர காளியம்மன். பாருங்க, பேருலேயே 'வ(டை) ட' இருக்கு!ஆனாலும் எப்படி இத்தனை வருஷம் விட்டு வச்சேன்? சிராங்கூன் ரோடு ஆரம்பத்துலே இருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலின் அதே செட்டப்தான் இங்கேயும். ஆனா அங்கே இருக்கறது மாதிரி அவ்வளவாக் கூட்டம் இல்லை. அதான் போன பதிவில் சொன்னதுபோல மக்கள்ஸ் முஸ்தாஃபாவோட நின்னுடறாங்க.


நடுவில் சந்நிதிகளில் அம்மன், வலது பக்கம் விநாயகர், இடதுபக்கம் முருகர்னு இருக்காங்க. மண்டபத்தின் இடது பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தோதா ஒரு அரங்க அமைப்பு. அதுலே புள்ளையார்கள் இசைக்கருவிகளை வாசிக்க,நர்த்தன விநாயகர் நடுவிலே ஆடறார். அம்மன் சந்நிதிக்கு எதிர்ப்புறம் மஹா விஷ்ணுவின் வர்ணச் சிலை. அதுக்கு முன்னாலே பிரமாண்டமான ஒரு உண்டியல். அப்புறம் 'பெருமாளும், தாயாரும், ஆண்டாளும் அனுமாரும்'னு மூர்த்தங்கள். வெள்ளிக் கவசங்களும், தங்கக் கிரீடங்களுமா ஜொலிப்பு. ச்சும்மாச் சொல்லக்கூடாது.......
சிங்கையில் நம்ம சாமிகளும் வளமாவே இருக்கு. கோயிலுக்கு கொடுக்கற மனசு இருக்கும் மக்கள். கோயிலும் கிடைக்கும் வருமானத்தைப் பலவிதங்களில் நல்லவிதமாகவே செலவு செய்யுது. கோயில் சொத்தைக் கொள்ளையடிக்கும் புத்தி இல்லைன்றதே ஒரு சந்தோஷமான செய்திதானே?

உள்ளூர் குடும்பம் ஒண்ணு எதோ விசேஷ பூஜைக்கு அங்கே ஆயுத்தமா இருந்துச்சு. பூசாரி ஒருத்தர் சின்னதாஒரு ரெடிமேட் அக்னிகுண்டத்தில் தீ வளர்த்துக்கிட்டு இருந்தார். மடியில் இருந்த குழந்தைக்குப் பிறந்தநாள் போல.

இந்தக்கோயிலில் வெளியில் காலணிகளை விட அருமையான இடம் அமைச்சு இருந்தாங்க. மத்த கோயில்களில் அப்படியப்படியே வாசலில் விட்டுட்டுப் போறதுதான்(-: இங்கேயும் கோயில் பராமரிப்பு ரொம்ப நல்லா இருக்கு.

அப்படியே அராப் தெருவரை போய்வரலாமுன்னு அங்கிருந்து கிளம்பி, ஒரு ச்சேஞ்சா இருக்கட்டுமுன்னு சரவணபவன்( சிங்கைக்கிளை Belilios street)லே காலை உணவை முடிச்சுக்கிட்டுப் போனோம்.'லிட்டில் இண்டியா'ன்னுபேரு வச்சுக்கிட்டு இருக்கும் இந்தப் பகுதிகளில் , ரொம்ப நீளமாப் போகும் சிராங்கூன் ரோடுக்கு ஆதி, அந்தமுன்னு( ச்சும்மா அந்தமுன்னு சொல்லி வச்சுருக்கேன். இந்த ரோடு நிஜமாவே ரொம்ப நீளம். அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு, நாட்டின் எல்லை வரை) ரெண்டு பக்கமும் காவல் தெய்வங்களா நிக்குறாங்க நம்ம வீரமா காளியும் வடபத்ர காளியும். இதுலே வீரமா காளியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வரும் குறுகிய தெருவிலேதான் சரவண பவன்.


இதோ உங்களுக்காக வீரமா காளியம்மன் கோவில் முகப்பு.

கோமளவிலாஸை இன்னும்விடலைன்னாலும், இப்ப வரவர அங்கே தரம் கொஞ்சம் இப்படியப்படின்னு இருக்கோன்னு தோணுது. இந்த 23 வருஷத்துலே அங்கே ருசியில் ஏகப்பட்ட மாற்றங்கள் மெல்ல வரத்தொடங்கி இருக்கு. மாறாதது இப்பவுமங்கே குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்து மேஜையில் வைக்கும் (சீன)பெரியவர். இந்த ருசி மாற்றம்கூட நாங்கள் உணரத் தொடங்குனது இப்ப சமீபத்துலே. பொதுவா இங்கே இருந்து போகும்போது, கா.மா.க.விழுந்த கதைதான்:-)))) இப்ப ஒரு ஒன்னரை மாசம் ச்சென்னைச் சாப்பாட்டுக்கு நாக்கை வளர்த்து வச்சுக்கிட்டதாலெ வந்த வினை.

அராப் தெருக் கடைகளில் சில. வரப்போகும் ச்சீனப்புத்தாண்டுக்கான அலங்காரங்கள் கொட்டிக்கிடக்கு.

ஒரு கடையில் நம்ம 'ஆள்' இருக்கார்.


அராப் தெருக் கடைகளில் புகுந்து புறப்பட்டுக்கிட்டு இருந்தப்ப ஒலி பெருக்கியில் மக்களை தொழுகைக்குக்கூப்புடும் அழைப்பு. மஸ்கட் தெருவில் இருக்கும் சுல்தான் மசூதியின் கிண்ணக்கூரை உண்மையிலேயே தங்க நிறத்தில் பளபளன்னு ஜொலிக்குது, சிங்கப்பூரின் நட்டநடுப்பகல் வெயிலில். ரொம்ப அழகான கட்டிடம்.

சிங்கப்பூர் பிரிட்டிஷார் வசம் இருந்த காலக்கட்டத்தில் ஜோஹுர் சுல்தானுக்கு இங்கே ஒரு இடம் ஒதுக்கப்பட்டுச்சாம்.அங்கே அவர் ஒரு அரண்மனை கட்டி இருந்துருக்கார். அப்புறம் அதுக்குப் பக்கத்துலேயே, வழிபாட்டுக்குன்னு ஒரு மசூதி கட்டிக்கலாம்னு கட்டி இருக்கார். 1824 லே ஆரம்பிச்சு 1826 லே கட்டி முடிச்சுட்டாங்க. கிழக்கிந்தியாக் கம்பெனி சிங்கப்பூர்லே யாவாரம் பண்ணிக்க அனுமதி கொடுக்கறதாலே அவுங்க சுல்தானுக்குக்காசு ( கப்பமோ?)கட்டணும்னு ஒரு ஒப்பந்தம் ஆச்சு. அந்த ட்ரீட்டியிலே இவர்தான் கையெழுத்துப் போட்டாராம். கம்பெனி இவருக்கு மூணாயிரம் டாலர் கொடுத்துச்சாம். அதைத்தான் வச்சு இந்த மசூதி கட்டுனாராம்.

இந்த மசூதிக்கு நூறு வயசுவரை இங்கேதான் வழிபாடு நடந்துச்சு. அதுக்கப்புறம்தான் கட்டடம் ரொம்ப பழசாப் போச்சு,பழுது பார்க்கணுமுன்னா ஏகப்பட்ட செலவு, இடமும் பத்தலை, இன்னும் கொஞ்சம் பெருசாக் கட்டலாமுன்னு இப்ப இருக்கறதைக் கட்டி இருக்காங்க. 1928லே கட்டி முடிச்சது இப்பவும் பிரமாண்டமா வசீகரிக்குது. அறுபதுகளுக்கு நடுவுலே கொஞ்சம் மராமத்து பார்த்துருக்காங்க.

பொது மக்கள் உள்ளெ போய்ப் பார்க்க அனுமதி இருக்குன்னாலும், இன்னிக்கு வெள்ளிக்கிழமை அவுங்களோட விசேஷத் தொழுகை நடக்கும்போது நாம தொந்திரவா இருக்கவேணாமுன்னு வெளியிலேயே சுத்திப் பார்த்தோம். பிறகு 'சிம் லிம்ஸ்கொயர்'க்கு நடந்து வந்தோம். வரும் வழியில் 'என்னம்மா.... என்னைக் கண்டுக்காமப் போறே?'ன்னு கேக்கற மாதிரிலூர்து மாதா தேவாலயம் நிக்குது. ரொம்பவே அழகான சர்ச். வெளியே வலது பக்கம் தனியா ஒரு மேடை அமைப்புலேமாதா நின்னுக்கிட்டு இருக்காங்க.

1888 லே கட்டுனதாம். ஜப்பான்காரங்க போட்ட ரெண்டு குண்டு இங்கே விழுந்தாலும், அற்புதமுன்னு சொல்லும்படி இந்த தேவாலயத்துக்கு ஒண்ணுமே ஆகலையாம். ரோமன் கத்தோலிக் பிரிவைச் சேர்ந்தது இது.
பாண்டிச்சேரியிலே இருந்து இங்கே வந்து தங்கிட்டத் தமிழ்க்காரங்களுக்காகவே இது கட்டப்பட்டதாம். பிரான்ஸ் நாட்டுலே இருக்கற லூர்து மாதா கோயில் டிஸைனை அப்படியே அனுசரிச்சு இதைக் கட்டுனாங்களாம். பால்வெள்ளையிலே ஒரு அன்னம்போல நிக்கும் தேவாலயம் பார்க்க ரொம்பவே அழகா இருக்கு. உள்ளே போய் அமைதியா அஞ்சு நிமிஷம் சாமி கும்பிட்டுக்கிட்டு, வெளியே வந்து லூர்து மாதாவையும் நமஸ்காரம் செஞ்சுக்கிட்டு அப்படியே நடந்து 'சிம் லிம் ஸ்கொயர்' போய்ச் சேர்ந்தோம். கட்டிடத்துக்குள்ளே போகலை. இடது பக்கம் இருக்கும்Bencoolen தெருவைக் கடந்து ஆல்பர்ட் செண்ட்டர், காம்ப்ளெக்ஸ் இருக்கு பாருங்க அதுக்குள்ளே போனோம்.

தொடரும்..........

27 comments:

said...

சிங்கையில ஆனந்த பவன்லதான் முதல்ல‌ நாங்க சாப்புட்டோம். ஒரு சீனர் நல்ல பெரிய குங்குமப்பொட்டொட நல்லா தமிழ் பேசினார். அது ஒரு அருமையான அனுபவம். அப்பறம் மார்க்கெட் போயி பாவக்கா, முருங்கைக்கா எல்லாத்தைஉம் கண்ணார பாத்துட்டு வந்திட்டோம். இங்க சம்மர்ல மட்டும் தான ஃப்ரெஷ் காய் பாக்க முடியும்.

said...

உங்க தில்லி பதிவை போல இதுவும் வெகு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது!!
வாழ்த்துக்கள்!! :-)

said...

சரவண பவனில் என்ன சாப்பிட்டீங்க? காபி நல்லா இருந்ததா? என்ன இது முக்கியமான தகவல்கள் எல்லாம் இல்லாம பதிவு? புது வழக்கமா இருக்கே.....

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இந்தக் 'காய் பார்க்கும் தொழில்(!)' இன்னும் என்னைவிட்டுப் போகலை. ஊர் ஊராய் இதே
வேலைதான்:-)))) இப்பெல்லாம் கையிலே கெமரா இருந்தால் க்ளிக் க்ளிக்தான்:-)

said...

வாங்க CVR.

வருகை & வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

ஆமா......... பழக்கம் தவறிப்போச்சு:-)))))

பேப்பர் ரோஸ்ட்டும், காஃபியும்தான். பரவாயில்லை. நல்லாவே இருந்துச்சு
( அப்படின்னு நினைக்கறேன்)

said...

வீரபத்திர காளியம்மன் கோவிலில் சில நாட்கள் அதிகமாக கூட்டம் இருக்கும்.
அந்த 'சரவண பவனைப்" பற்றி கேட்காதீர்கள்.
ஒரே ஒரு நாள் பொங்கல் தான், விடு ஜூட்,அவ்வளவு நெய், அனேகமாக நெய்யாகத்தான் இருக்கும்.

said...

படங்கள் சூப்பர் டீச்சர். சிங்கையில் இருக்கும் போது பார்த்தது. சிங்கை விட்டு வந்து 5 வருடங்களுக்கு பிறகு இந்த படங்களை பார்த்தவுடன், மலரும் நினைவுகள்தான். நன்றி.

நான் அங்கிருக்கும் போது வடபத்திர காளி கோவிலில் பணிகள் நடந்துகொண்டிருந்தது. இப்போ சூப்பரா கட்டிட்டாங்க போலிருக்கே.

said...

துளசி,
எல்லாக் கோவிலும் நல்லா நடத்தராங்க இல்லை.?
வர்ணம் எல்லாம் கலையாமல் புதுசா இருக்கு.
நிறைய முயற்சி எடுத்து
நம்ம ஊரை அப்படியே கொண்டு வந்த மாதிரி இருக்கு,.
ஒரு படத்தில கோலம் போட்ட மதிரி கூடத் தெரியுது.
நிழலா கோலமானு தெரியலை.

said...

படங்கள் அருமை.

சரவணபவன் உணவை ஏன் டவுட்டோ சொல்லுறீங்க...

குமார் அண்ணன் வேற மாதிரி சொல்லுறார். என்ன ஆச்சு. ச.ப.னுக்கு?

said...

எம்மதமும் சம்மதம்ன்னு கலக்கிட்டீங்களே யக்கோவ்! மாதா கோவில் படம் ஏன் சரிஞ்சிப் போய் இருக்குது?

பின்குறிப்பு:
உள்குத்து நிச்சயமாக இல்லை. ;-)

said...

வாங்க குமார்.

//வீரபத்திர காளியம்மன் கோவிலில் சில நாட்கள் //

பரவாயில்லை 'ரெண்டு காளி' யும் ஒண்ணுதான்னு இப்படிச்
சொல்லாமச் சொல்லிட்டீங்களா?:-)))))

நல்லவேளை. நான் ச.ப.பொங்கல் வாங்கிக்கலை:-)))))

said...

வாங்க ப்ரசன்னா.

மலரும் நினைவுகளா? வெரி குட்.

'லிட்டில் இண்டியாப் பகுதி' அவ்வளவா மாறல்லை. நானும் 23 வருஷமாப்
பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.

said...

வாங்க வல்லி.

கோலத்துக்கென்ன குறைச்சல்? பிரமாதமாப் பெரிய பெரிய கோலங்கள்
கோவிலில் போட்டுருக்காங்க.

அருமையா இருக்கு ஒவ்வொண்ணும்.

said...

வாங்க புலி.

ச்சென்னையில் மட்டும் எல்லா ச.ப.வும் அநேகமா ஒரே ருசியோட இருக்கு.
ஒருவேளை ஒரே இடத்தில் சமையல் செஞ்சு கிளைகளுக்கு சப்ளை பண்ணறதாலேன்னு
நினைக்கறென்.

said...

அது ஒண்ணுமில்லை காட்டாறு. அங்கே அடிக்கிற வெயிலுக்கு மயக்கமா
வருதுன்னு கீழே சாயப்போனப்ப ( நான் இல்லைப்பா நம்ம கோபால்தான்)
எடுத்தபடம்னு சொல்லிக்கவா? :-)))))

உ.கு. இல்லைன்னு நம்பிட்டேன்:-)

said...

டீச்சர்

பிள்ளையார் டீம் அருமை.
அந்த யானைப் படம் போட்ட துணி விரிப்பு வாங்கியிருப்பீங்களே, (பேரம் பேசி) :-)))

//எதிர்ப்புறம் மஹா விஷ்ணுவின் வர்ணச் சிலை. அதுக்கு முன்னாலே பிரமாண்டமான ஒரு உண்டியல்//

அட, அது என்ன ஆனாஊன்னா, பெருமாள் முன்னாடி மட்டும் உண்டியல் வச்சிடுறாங்க?

//இப்ப ஒரு ஒன்னரை மாசம் ச்சென்னைச் சாப்பாட்டுக்கு நாக்கை வளர்த்து வச்சுக்கிட்டதாலெ வந்த வினை.//

டீச்சர்...நம்ம நிலைமையும் இங்கே அதே போலத் தான்! பரவாயில்ல கம்பெனிக்கு நீங்க இருக்கீங்கனு ஒரு ஆறுதல்.

said...

//மஸ்கட் தெருவில் இருக்கும் சுல்தான் மசூதியின் கிண்ணக்கூரை உண்மையிலேயே தங்க நிறத்தில் பளபளன்னு ஜொலிக்குது//

அருமை!
தங்கக் கூரைகள் கொண்ட மசூதிகள் துபாயில் பார்த்துள்ளேன்...
சிங்கையிலுமா? இந்தியாவில் உள்ளதா?

said...

கடைத் தெருவே எத்தன அழகா இருக்கு..சினிமா செட் மாதிரி

said...

தில்லி ட்ரிப் மாதிரியே சிங்கை ட்ரிப் ரிப்போர்ட்டும் சூப்பர்..

லூர்து மாதா கோவில் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் ஃபேமஸ்தான்..

said...

வாங்க KRS

உண்டியலும் பெருமாளும் இணைபிரியாதவை:-))))

//அந்த யானைப் படம் போட்ட துணி விரிப்பு
வாங்கியிருப்பீங்களே, (பேரம் பேசி) :-)))//

ஊஹூம்..... இங்கே வாங்கலை. இந்த பேரத்தைப் பேசி
இந்தியாவுலெயே வாங்கிட்டேன்:-)))))டெல்லி ஜமா மசூதியிலும் தங்கத்தகடு வேய்ஞ்சிருக்காங்க. வழிப்பாடு ஸ்தலங்களில்
தங்கம் போடறது எல்லா மதத்துக்குமே பொதுவா இருக்கு. மனுஷமனம் எல்லாம்
ஒண்ணுதாம்ப்பா. சாமிக்கு 'நல்லதா' இருக்கறதைக் கொடுக்கணுமுன்னு நமக்கு
ஒரு எண்ணம் .

said...

வாங்க மங்கை.

சினிமா செட்டே 'நிஜத்தைப் பார்த்து'
அப்படியே போடறதுதானே? :-))))))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

பெரம்பூர்லே கூட ஒரு லூர்து மாதா கோயில் கட்டி இருக்காங்களாமே.

பிரான்ஸ் போனப்ப இங்கே போகணுமுன்னு நினைச்சுப் போக முடியாமப்போச்சு. அதுக்குத்தான்
சிங்கையிலே வந்து பாருன்னுட்டாங்க மாதா.

said...

ஆகா...டீச்சர் இப்பிடி மதவேறுபாடுக இல்லாம கோயிலுக்குப் போயிட்டு வந்தது ரொம்பச் சந்தோசம். எங்கப்பன் முருகன் கோயிலுக்குப் போகலையே டீச்சர் நீங்க. லிட்டில் இண்டியா செராங்கூன்னே சுத்தியிருக்கீங்களே!

காளியம்மன் கோயிலுக்கு நான் போனப்ப கூட்டம் தாங்கலை. நிக்ககூட எடமில்லை. வெள்ளக்காரங்க வந்து வீடியோ எடுத்துத் தள்ளிக்கிட்டிருந்தாங்க.

said...

வாங்க ராகவன்.

ஆம்ஸ்டெர்டாம் எப்படி இருக்கு? பிக்பாக்கெட் அங்கே அதிகம். கவனமா இருங்க.

சிங்கையில் இந்த முறை இருந்தது சரியாச் சொன்னா ரெண்டரை நாள்தான்.
அதான் தண்டபாணி கோயில், சிங்கை மாரியம்மன் பக்கமெல்லாம் போகலை.
இன்னும் ச்சாங்கி ராமர் வேற பாக்கி இருக்கார். முந்தியே முருகனைப் பார்த்திருக்கோம்.
அதெல்லாம் ப்ளொக் காலத்துக்கு ரொம்ப முன்னே.

நண்பர்கள் வீடு, வலைப்பதிவர் சந்திப்பு,கோபாலுக்கு டெண்ட்டல் அப்பாய்ண்ட்மெண்ட்ன்னு நேரம்
பறந்துருச்சு. ஷாப்பிங் ஒண்ணுமே செய்யலை. (நம்புறீங்கதானே?)

said...

அக்கா,
பதிவ இன்னும் படிக்கலை....

//Your Ad Here//

பார்த்தேன்...

http://valaippadhivu.blogspot.com

கொடுத்தேன்..

said...

வாங்க ராம்ஸ்.

பக்கத்தூட்டுக்காரங்க ஜெயிச்சுட்டங்கப்பா. இனிமே நிம்மதியாப் பதிவுகளைப்
படிக்கலாம்:-))))