Friday, July 01, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 13

சுத்தமுன்னா சுத்தம்! அப்படியொரு சுத்தம்!!! மனுசங்க ஆஸ்பத்திரியைவிட அட்டகாசமா இருக்கு!!!
அங்கெயிருக்கற வசதியான நாற்காலிகளிலெ, நாற்கால் ஜீவன்களொடு உக்காந்திருக்கற ஆளுங்ககிட்டே
முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்!!!! அந்த ஜோதியிலே நாங்களும் அப்படியே ஐக்கியமாயிட்டோம்!!!!வலைபெட்டிக்குள்ளே நம்ம 'ஆளு' இருக்கார், அப்பப்ப தீனமா ஒரு குரல் கொடுத்துக்கிட்டு!!!
நாய்ங்களோட வந்திருக்கறவங்க மட்டும், (ஸ்டைலா ஒரு 'லீஷ்' போட்டது!) கூடையில்லாம இருக்கறாங்க!
நாய்ங்க வேற இந்தப் பூனைக்கூடைங்களைக் கட்டாயம் மோந்து பாக்கவேண்டிய நிர்பந்தந்துலே
இருக்கறமாதிரி, ச்சும்மாச்சும்மா பூனைக்கூடைகிட்டே வர்றதும், பூனைங்க எல்லாம் தீனமாக் குரல்
கொடுக்கறதும், நாயோட 'அம்மாங்க' ஹை ஜாக்கி, ஜிம்மி( எதாவது ஒரு பேரு போட்டுக்குங்க.. ஆனா
பேரு மட்டும் வெள்ளைக்காரப் பேரா இருக்கட்டும்!!)ன்னு அதுங்களை அடக்குறமாதிரி 'பாவ்லா' காட்டறதுமா
இருந்துச்சு! சுவத்துலே இருக்கற அலமாரிகள்லே விதவிதமான பிஸ்கெட், சாப்பாடு, இன்னும் நான்
'சூப்பர் மார்கெட்'லே பார்த்த அத்தனைவகை விளையாட்டுச் சாமான்களும் அலங்காரமா இருக்கு.
ப்ராண்ட் பேருங்கதான் வேற, ஆனா பாக்குறதுக்கு அதேதான்!!! விலையும் 'தீ பிடிச்ச' விலை!!!!

நம்ம கப்பு ஆரோக்கியமா இருக்கான்னு செக் செஞ்சுக்கறதுக்கும், தடுப்பூசி போட்டுக்கவும் வந்திருந்தோம்.
வெட்னரி டாக்டரைப் பார்த்தோம். 'பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர்டு டொமெஸ்டிக் கேட்'ன்ற ஜாதியாம் நம்ம
கப்பு! பயந்த பார்வையோட ஒரு ச்சின்ன நடுக்கமும் இருந்துச்சு! அப்பப்ப அழுகை வேற!!!
பரிசோதனை முடிஞ்சு, வீட்டுக்குக் கொண்டுவந்து கூண்டைத் திறந்ததும் விட்டுச்சு சவாரி!!!
ஒரே ஓட்டம்!

நம்ம வீட்டுக்கு எதிர்வரிசையிலே ரெண்டு வீடுதள்ளிதான் இருக்கு இந்த வெட் க்ளினிக். ரோடை
குறுக்காலெ கடந்தா ஆச்சு. ஆனா, கூடையிலே பிடிச்சுப் போடறதுமுதல், திரும்ப வர்றதுவரைக்கும்
'அய்யோ, அம்மா'ன்னு விடாம அழுதுக்கிட்டு இருக்கறதாலே கார்லேதான் கொண்டு போவோம்!!!!
இல்லேன்னா, ரோடெல்லாம் கூப்பாடு போட்டுக்கிட்டு, போறவர்றவங்கெல்லாம் நம்மையே
பாக்கறமாதிரி ஒரு பிரமை நமக்கு உண்டாக்கிரும்!!!

நம்ம கப்பு ஒரு 'கிட்டன் நாப்பர்' ஆயிடுச்சு! ஒருநாள் மழையான மழை. கப்புவைக் காணாம். கூப்பிட்டுக்
கூப்பிட்டுப் பார்த்தாச்சு! அப்ப எங்கோ கிணத்துக்குள்ளெ இருந்து கேக்குற மாதிரி ஹீனமா ஒரு 'மியாவ்'
சத்தம் கேட்டது! தோட்டத்துலே தேடிக்கிட்டே போறேன். ஒரு புதருக்குள்ளே இருந்து சத்தம் வருது.
உள்ளே பார்த்தா..... கப்பு பதுங்கிப் படுத்திருக்கு! மெதுவாத் தூக்குனா, கூடவே வெள்ளையா ஒரு பொட்டலம்
வருது. அய்யய்யோ... அது பொட்டலமில்லே! ஒரு பூனைக்குட்டி!!! பிறந்து ஒருநாளோ ரெண்டுநாளொதான்
ஆகியிருக்கும்போலெ!!! துவண்டு கிடக்குது பாவம்!!!! அக்கம்பக்கத்து வீடுங்களிலே விசாரிச்சாச்சு.
யாரோடதும் இல்லையாம்! எங்கே இருந்து வந்துச்சுன்னு தெரியலை!!!! வாயிலே சொட்டுப் பாலைவிட்டாக்
குடிக்கக்கூடத் தெம்பில்லாம இருக்கு! அப்புறம், நம்ம நண்பர் ஒருத்தர் வீட்டுலே பூனை, குட்டி போட்ட
விவரம் ஞாபகம் வந்து அவுங்க வீட்டுலே கொண்டுபோய்க் கொடுத்தோம்,எப்படியாவது அந்தப் பூனை
இதுக்கும் பாலூட்டிக் காப்பாத்திடும் என்ற நம்பிக்கையில்!! ஹூம்.. அதும் விதி முடிஞ்சது....

இப்ப நம்ம கப்புவுக்கு ஏறக்குறைய ஒரு வயசு! ஒருநாள் திடீர்னு பார்த்தா, வயிறு கொஞ்சம் பெருசா
இருக்கு! அட! புள்ளைத்தாய்ச்சி!! ஈராக் போர் ஆரம்பிச்ச நாள்!!! எங்கே பாத்தாலும் 'சதாம் ஹுசேன்'
பேச்சுதான்! அன்னைக்குக் கப்புவுக்கு 'குழந்தை' பொறந்துச்சு! சொன்னா நம்ப மாட்டீங்க!!! ஒரே
ஒரு குட்டி!!!! அதுக்கு 'சதாம்'னே பேரு வச்சாச்சு. அடுத்தவாரம் 'வெட்' கிட்டே கொண்டுபோனப்பதான் அது
பொண்ணுன்ற விவரம் தெரியுது:-) உடனே பேரை மாத்தணுமா இல்லையா? இனிமே அது 'மணி' !!

மகளோட பள்ளிக்கூடம், பாலே க்ளாஸ், பியானோ ட்யூஷன்னு எங்கெ போனாலும் மணியைத் தூக்கிக்கிட்டுப்
போவேன். அதுபாட்டுக்கு முன் சீட்டுலே படுத்துக்கிட்டு இருக்கும்! அங்கெ வர்ற புள்ளைங்களும் நம்மளைப்
பார்த்ததுமே ஒடிவரும்,'மணி'யைக் கொஞ்ச!!!!! மணி படு அழகு!!!!

கப்பு ஒரு கண்டிப்பான 'அம்மா'!!! அப்பப்ப 'மணி'க்கு ஒரு ச்சின்ன அடி வைக்கும்! என்னடா, இது 'ஃபிஸிகல்
அப்யூஸ்'ன்னு கிண்டல் செய்வோம்! இங்கே நம்ம புள்ளைங்களைக்கூட நாம் ஒரு அடி அடிச்சுடக்கூடாது!
அரசாங்கம் நம்மை 'உள்ளே'தூக்கிப் போட்டுரும்!!! சரி, சும்மா வாய்வார்த்தையா திட்டலாமுன்னாலும் முடியாது.
அது 'வெர்பல் அப்யூஸ்'ஸாம்!!!! கப்பு, கொடுத்துவச்சது. அதுக்கு இந்தக் கண்டிஷன் எல்லாம் இல்லை!

மணி , பொண்ணுன்னு தெரிஞ்சது முதல் எங்க வீட்டுலே இவரோட புலம்பல் அதிகமாயிடுச்சு!! 'கொஞ்ச நாள்லெ
அது பெருசாயிரும். இதுங்க ரெண்டும் மாறிமாறிக் குட்டி போட்டா, பக்கத்து வீட்டு ஃபியோனாவோட
கதிதான் உனக்கும்'னு சொல்லி ஒரே ரகளை!!!! 'இப்ப இது ச்சின்னதா இருக்கறதாலே யாராவது
வளர்க்கக் கொண்டு போயிடுவாங்க. பெரிய பூனை ஆச்சுன்னா யாருக்கும் வேணாம். அதனாலே இப்பவே
இதை 'ஆர்.எஸ்.பி.சி.ஏ' கொடுத்துரணும்'

நான் எவ்வளவோ போராடிப் பார்த்தாச்சு. ஊஹூம், கேக்கற ஆளா? 'நான் கப்புவையும், மணியையும்கொண்டு
போய் விடத்தான் போறேன்'னு ஒரு நாள் நிஜமாவே கிளம்பிட்டாரு. கப்புவைப் பிடிக்கப்போனா அது ஓடிப்போய்
ஒளிஞ்சுக்கிச்சு! மணி பாவம்தானே? எப்பவும் என்கூடக் கார்லே வந்துக்கிட்டு இருந்ததுதானே?
அது பேசாம இருந்துச்சு. இவர் ஆங்காரமாக் கொண்டுபோயிட்டாரு!!

இவர் வீட்டுக்கு வந்ததும், நானும் மகளும் மூஞ்சைத் தூக்கிக்கிட்டு இருந்தோம். இப்ப எங்க புலம்பல்
ஆரம்பிச்சுடுச்சு!!! அன்னைக்கெல்லாம் விடாம அழுகையும், ஆங்காரமுமாப் போச்சு! கப்புவைக் காணோம்!

மறுநாள் காலையிலே கப்பு உள்ளெ வந்து, மணியைத் தேடுது!!!! ச்சின்னதா அழுது! சத்தமாக் கூப்புடுது!!!
எனக்குப் பாக்க சகிக்கலை! இவருக்கும்தான்!!! அப்புறம் மெதுவாச் சொல்றாரு, 'நீ ஃபோன் போட்டுக்
கேளு. திருப்பித் தருவாங்களா'ன்னு!! உடனே ஃபோன் போட்டேன். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க. நேத்தே
இவர், விட்டுட்டு இப்படி வந்ததும்,உடனே பூனை வாங்க ஒரு குடும்பம் வந்தாங்களாம். மணியோட
அழகைப் பார்த்துட்டு உடனே கொண்டு போயிட்டாங்களாம்!! ஒரு மணி நேரம்கூட இல்லையாம்!!!
மணி ஒரு நல்ல வீட்டுக்குப் போயிருச்சு'ன்னு சொன்னாங்க!

கப்புவை சமாதானம் செய்யறது பெரிய பாடாப் போச்சு!! ஒரு மாசம் ஆனதும், இனி கப்புவை இப்படியே
விட்டா மறுபடி குடும்பம் பெருகி, பழையபடி போர்க்களம் போகவேண்டியிருக்குமேன்னு கவலை வந்துச்சு!
இங்கே 'கேட்ஸ் ப்ரொட்டெக்ஷன் லீக்'னு ஒரு அமைப்பு இருக்கு. அவுங்ககிட்டே என்ன செய்யலாமுன்னு
ஒரு யோசனை கேட்டேன். அவுங்க சொன்னாங்க 'ஃபிக்ஸ்' செஞ்சுரலாமுன்னு!!!!!

இன்னும் வரும்!!!!!


5 comments:

said...

//'ஃபிக்ஸ்' செஞ்சுரலாமுன்னு//

அடப்பாவமே!
அதுசரி.. ஏற்கெனவே உங்க ஊர்ல மனுஷன விட மிருகம் தான் அதிகமா இருக்கு (அது என்ன விகிதம்..30 கால்நடைக்கு ஒரு மனுசனா?..மறந்து போச்!). :o)

பூனை தொகை தானே குறையும்..பரவால்ல!

said...

எங்களுக்கெல்லாம் ஆளுக்கு 32 ஆடுங்க இருக்கே:-))))))

இது இல்லாம மாடு, நாய், பூனைன்னு இன்னும் பலவகை!

உங்க வசதி எப்படி? ஆளுக்கொரு 'முதலை'யா?

துளசி.

said...

ஆளுக்கொரு முதலயை விட ஆளுக்கொரு சிலந்தி தான் பொருத்தமா இருக்கும் என்று நினைக்கிறேன்.

நினைத்தாலே "கம்பளிப்பூச்சி ஊருற மாதிரி இருக்கு!"

ஒரு பெரிய ஹன்ட்ஸ்மன் சிலந்தியோட நான் போட்ட போராட்டமே போதும் வாழ்க்கை முழுக்க அருவருக்க!! :o\

said...

துளசி !! எனக்கும் மீன் வளர்க்க வேண்டுமென்று ஆசை. எங்கப்பாவும் சரியென்று சொன்னார்கள். அம்மாவிற்கு இதெல்லாம் பிடிக்காது. ரெண்டு நாள் ஒழுங்கா செய்வேன் மூணாவது நாளிலிருந்து அவங்கதான் பார்க்க வேண்டியிருக்கும். அதனால் இது போன்ற வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் போய்விட்டன. உங்களை நினைத்தால் கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது

said...

ஆமாம் கணேஷ்,

'பெட்' வச்சுக்கறது ஒரு பெரிய 'கமிட்மெண்ட்'
அதோட வாழ்நாள் முழுசும் பாத்துக்கற பொறுமை வேணும்!

என்றும் அன்புடன்,
துளசி.