Thursday, July 14, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 16

முடிவு எடுக்கணுமாம். என்னன்னு எடுக்கறது? மிருகங்கறதாலே சுலபமா சரின்னு சொல்லிரலாமா?
இதுவே மனுஷனா இருந்தா? யோசிச்சுச் சொல்லச் சொன்னாங்க. இதுலே யோசிக்க என்ன இருக்கு?
'சட்'னு முடிவு எடுத்துட்டேன்.



சொல்லமுடியாதுதான் எவ்வளவு நாள் இப்படியேன்னு. பணம் செலவாகுமாம்.அதுவும் சரிதான். ஆனா அதுக்காக
என்னாலே கொடுமை செய்ய முடியாது.எல்லாம் கடவுள் விட்ட வழி. இருக்கும்வரை இருக்கட்டும்.

மொதல்லே வாராவாரம் வந்துக்கிட்டிருந்த 'சுகக்கேடு' கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுடுச்சு. நாலைஞ்சு
நாளுக்கொருதடவை 'வெட்'கிட்டே கொண்டு போகவேண்டியிருந்தது. மருந்து கொடுத்து ஒரு ஊசியும்
போடுவாங்க. சிலநாள் ஒண்ணுமே சாப்புடறதில்லை. ஓடு உடனே 'வெட்'டுக்கு.

உடம்பு இளைக்க ஆரம்பிச்சு, அப்படியே துரும்பாப் போச்சு. இந்த நோயோடு போராடுற மனுஷங்க
நிலையும் இப்படித்தானே இருக்கும்? அதுலேயும் ச்சின்னப் பசங்களை நினைச்சா மனசுக்கு ரொம்பவே
வேதனையாப் போயிரும். ஒரு தப்பும் செய்யாத பிஞ்சுங்க...

எல்லாத்துக்கும் ஒரு முடிவு வருமில்லே, அப்படியே வரவும் செஞ்சது. மூணுநாளா சாப்பாடு செல்லலை.
ஷானும் சொல்லிட்டார், 'இனியும் தள்ளிப் போடறது நல்லதில்லை. அது வேதனையிலே துடிக்குது'ன்னு.
மனசைக் கல்லாக்கிக்கிட்டு தலையை ஆட்டுனேன். 'இன்னிக்கு ஒருநாள் வீட்டுலே வச்சுக்கறேன்'னு
சொன்னேன். அன்னைக்கு ராத்திரி ஒரு மணிவரை நானும், எங்க இவரும் 'ஷிவா'கூடவே இருந்தோம்.
எங்க இவரு, பூனை நாய் வேணாமுன்னு கத்துவாரே தவிர, மனசுக்குள்ளே ரொம்ப இரக்க சுபாவம்.
இல்லேன்னா இத்தனை மிருகங்களை வளர்த்திருக்க முடியுமா?
நாம ச்சும்மா இருந்தாக்கூட, வாசல்லே ஒரு 'ஹெட்ஜ்ஹாக்'கைப் பார்த்தா, 'அவன் வந்துருக்கான், எதாவது
சாப்பாடு போட்டுவுடு'ன்னு சொல்வார். மறுநாள் காலையிலே வேலைக்குப் போறதுக்கு முந்தி, 'ஷிவா'வைக் கொஞ்ச
நேரம் தூக்கி வச்சுக்கிட்டே உக்காந்திருந்தார்.

அன்னைக்கு 'ஷிவா'வைச் சாமியறையிலே கொண்டுபோய் வச்சேன். அப்படியே உக்காந்து இருந்தது ஒரு அஞ்சு நிமிஷம்.
'சாமியைக் கும்பிட்டுக்கோ. அடுத்த ஜென்மம் நல்லதா இருக்கும்'னு சொன்னேன்.

ஷான் சொன்னார்,'நீங்க விட்டுட்டுப் போறதா இருந்தா போங்க. நான் ஊசியைப் போட்டுடுவேன்'ன்னு.
கடைசிநிமிஷம் அதை அநாதையா விட்டுட்டுப் போக முடியாம நெஞ்சு அடைச்சமாதிரி இருந்துச்சு.
'இல்லே, நானும் கூடவே இருக்கேன்'ன்னு சொன்னேன். நல்லா இருந்தவரைக்கும் கொஞ்சிட்டு, கஷ்டம்
வந்தா அப்படியே விட்டுட்டு ஓடிரணுமா?

ஊசியைத் தயார் செஞ்சு கொண்டுவந்தாங்க. அடிக்கடி ஊசி போட்டுக்கிட்டுப் பழகிட்டதாலே
'ஷிவா' தானே முன்கையை நீட்டுச்சு. ஊசிக்காக அதோட முன்கையிலே ரோமத்தை ஏற்கெனவே
ஒரு இடத்துலே நீக்கியிருந்தாங்க.

'உயிர் போறப்ப வலிக்குமா?'ன்னு கேட்டேன். 'வலியே இருக்காது. தூக்கம் வந்துரும்,அப்படியே தூங்கிடும்.
அவ்வளவுதான்'ன்னு ஷான் சொன்னார்.

ஆச்சு. ஏழு மாசம் கஷ்டப்பட்ட ஆத்மாவுக்கு இன்னைக்கு விடுதலை. கையை நீட்டிக்கிட்டு என்னையே
பார்த்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் பார்வை......

என்னாலே அழுகையை அடக்கவே முடியலை. தலையைத் தடவிக்கிட்டே இருந்தேன்.அப்படியே
மெதுவாக் கண்ணை மூடிக்கிச்சு. அஞ்சுநிமிஷம் கூட இல்லே, உடம்புலே சூடு கொஞ்சம் கொஞ்சமாக்
குறைஞ்சுக்கிட்டே வந்து 'ஜில்'ன்னு ஆயிருச்சு. பரிசோதிச்சுப் பார்த்த ஷான், 'முடிஞ்சிருச்சு'ன்னு
சொல்லிட்டு அறைக்கதவை மூடிக்கிட்டு வெளியே போயிட்டார். அழுதுமுடிச்சு ஆசுவாசப் படுத்திக்க
அரைமணிநேரத்துக்கு மேலே ஆயிருச்சு. மெதுவாக் கதவைத் தட்டிட்டு ஷான் உள்ளே வந்து எனக்கு
ஆறுதல் சொல்லிட்டு, 'டிஸ்போஸல்' எப்படி? நாங்களே அனுப்பவா?'ன்னு கேட்டார். என்ன செய்வீங்கன்னு
கேட்டதுக்கு, அப்படியே சிடிக்கவுன்சில் 'டம்ப்'க்குப் போயிரும். இல்லேன்னா, இப்ப புதுசா 'பெட் செமென்ட்ரி'
ஆரம்பிச்சிருக்காங்க. அங்கேயே புதைக்கலாம்'னார். கிரிமேஷன் கூடச் செய்யறாங்களாம்.

'கிரிமேஷன் செஞ்சுருங்க'ன்னு சொன்னேன். 'அஸ்தி வேணுமானாலும் கிடைக்கும். ச்சின்ன 'அர்ன்'லே
போட்டுத்தராங்க,ன்னார். நான் வேணாமுன்னு சொல்லிட்டேன்.
'இன்னும் கொஞ்சநேரம் கூடஇருக்கணுமுன்னாலும் இருங்க'ன்னுட்டு சொன்னார். சவச்சடங்குக்கு
உண்டானக் காசைக் கொடுத்துட்டு, காலிக் கூடையை எடுத்துக்கிட்டுக் கனத்தமனசோட வீட்டுக்கு
வந்தேன்.

வழக்கமில்லாத வழக்கமா 'கப்பு' ஓடிவந்து கூடையை மோந்து பார்த்துச்சு. கப்புவைக் கட்டிப்புடிச்சுக்கிட்டு
இன்னும் ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன். பகல் சாப்பாட்டுக்கு வந்த எங்க இவர்,'அழுதானா'ன்னு கேட்டார்.
மகளும் 'யூனி'லேருந்து வந்தவுடனே ரொம்ப ஆறுதலாப் பேசுனா. மெச்சூரான பேச்சு. 'இட் இஸ் ஒக்கே மாம்.
ஃப்ரீ ஃப்ரம் த பெய்ன்'.... ச்சின்னப் பொண்ணுக்கு இதெல்லாம் தெரியுதேன்னு எனக்குஆச்சரியமாவும்
இருந்துச்சு. மறுநாள் 'ஷிவா'வோட 'டெத் சர்ட்டிஃபிகேட், க்ரிமேஷன் ரிப்போர்ட் ' ரெண்டையும்
க்ரெமெடோரியத்திலிருந்து ஒருத்தர் கொண்டுவந்து வீட்டுலே கொடுத்துட்டு ஆறுதலா கொஞ்சம்
பேசிட்டுப் போனார். நம்ம ஷானும் ஒரு இரங்கல் அட்டை தபாலில் அனுப்பினார். அதுலே நம்ம 'வெட்
க்ளினிக் ஸ்டாஃப்' எல்லோரும் கையெழுத்துப் போட்டிருந்தாங்க.

எனக்குத்தான் நினைக்க நினைக்க துக்கம் பொத்துக்கிட்டு வந்துச்சு. இப்பக்கூட இதை எழுதறப்ப
'ஷிவாவோட கடைசிப் பார்வை' அப்படியே கண்ணுமுன்னாலே வருது. இப்பவும் கொஞ்சம் அழுது முடிச்சிட்டுத்தான்
மறுபடி எழுதறேன்.

'மயான வைராக்கியம்'னு சொல்வாங்கல்லெ. அதுபோல 'இனி ஒரு மிருகமும் வேணாம்'னு இருந்துச்சு.
எண்ணி ரெண்டே நாள். சொன்னா நம்ம மாட்டீங்க. நம்ம'கராஜ்'லே ஒரு வெள்ளைப் பூனை படுத்திருக்கு.
'பசிக்குது போல இருக்கு. என்னப் பாத்துட்டு' மியாவ்'ன்னு கூப்புடுது' விவரம் சொன்னது மகள்.

கொஞ்சம் சாப்பாடு வச்சோம். ஆவலாத் தின்னுச்சு. கழுத்துலே பட்டையும் அதுலே ஒரு 'நேம்டேக்'ம்
தொங்குது. யாரோ சொந்தக்காரங்க இருக்காங்க. தொடப் போனவுடனே பின்வாங்குச்சு. பயம் தெளியட்டுமுன்னு
இருந்தோம். தினம் சாயந்திரம் ஏழுமணிக்குப் பக்கம் ஆஜராகிக்கிட்டு இருந்துச்சு. கைக்குமட்டும்
கிடைக்கலே. மகள் சொன்னா,தான் நேம்டேகைப் படிச்சுச் சொல்றதாக.

நாலஞ்சுநாள் மகளே சாப்பாட்டை வச்சிக்கிட்டு இருந்தாள். அதுவும் மெதுவா அவளைப் பழகிருச்சு.
அதோட காலர்லே இருக்கற விவரமும் கிடைச்சிருச்சு. பேரு 'நிக்கி' ஃபோன் நம்பரும் இருந்துச்சு.

அதுக்குப் ஃபோன் போட்டேன். விவரம் சொன்னதும் இப்பவே வரோம்னு சொன்னாங்க. இப்ப சாப்டுட்டுப்
போயிருச்சு. நாளைக்கு ஏழுமணிக்குத்தான் வரும். வீட்டுலேயே இருங்க. வந்தவுடனே ஃபோன் போடறேன்னு
சொல்லிவச்சேன். மூணாவது தெருதான்.
நிக்கி, நிக்கின்னு பேரைச் சொல்லிக் கூப்புட்டவுடனே கொஞ்சம் பயம் போயிருச்சு போலெ.
இதுக்குள்ளெ நம்ம லாண்டரிவரைக்கும் வரப் பழக்கியிருந்தா மகள். அன்னைக்கு வந்தவுடனே சாப்பாட்டுத்
தட்டைக் காமிச்சுக்கிட்டே லாண்டரிவரை கொண்டுவந்துட்டுக் கதவை மூடிவச்சுட்டோம். ஃபோன்
செஞ்சவுடனே வந்துட்டாங்க, ஒரு ஆளும், ஒரு பொம்பிளையும். 'ட்ரைவ் வே' லே வர்றப்பவே,'நிக்கி
நிக்கி'ன்னு கத்திக்கிட்டே வராங்க. நிக்கியும் சத்தம் கேட்டுட்டு இப்படியும் அப்படியுமா பரபரன்னு
பாக்குது.

'லாண்டரிக் கதவை மெதுவாத் திறங்க.உள்ளெ இருக்கு'ன்னு சொன்னேன். என்னமாதிரி ஒரு
ரீயூனியன்... 'நிக்கி,யூ மங்க்கி'ன்னு அந்தம்மா கூவ, நிக்கி அப்படியே 'ஜம்ப்'செஞ்சு அந்தம்மா
கிட்டே தாவுச்சு!!!! கட்டிப் புடிச்சுக்கிட்டு அந்தம்மா அழுவுது. வீடு மாத்திக்கிட்டு இங்கே
வந்தவுங்களாம். புது இடத்துலே வந்து பூனை காணாமப் போயிருச்சாம். பத்துநாளாச்சாம்.
தேடிக்கிட்டே இருந்தாங்களாம். நிக்கியை மாரோட சேர்த்து அணைச்சுக்கிட்டே விவரம்
சொன்னாங்க. ஒரு நூறுமுறை 'தேங்ஸ் தேங்ஸ்'னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

கூட வந்தவர் கையோடு கொண்டுவந்துருந்த ஒரு 'கேட் ஃபுட் டின்'னை எங்கிட்டே கொடுக்கவந்தார்.
வேணாம்.நம்ம வீட்டுலே ஏராளமா ஸ்டாக் வச்சிருக்கோம். பரவாயில்லேன்னு சொல்லிட்டேன்.
எப்படியோ குடும்பத்தோட சேர்ந்துடுச்சுன்னு சந்தோஷமா இருந்துச்சு.

'கப்பு, இனிமே நீமட்டும்தாண்டா நம்ம வீட்டுலே'ன்னு உறுதிமொழியெல்லாம் கொடுத்துட்டோம்.

ஆனா, நாமொன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்குமாமே?


இன்னும் வரும்.

17 comments:

said...

போங்க!...துளசி, மனசே சரியில்ல. :o(

said...

ஆமாம் ஷ்ரேயா,

வளர்த்ததை விடமுடியாம பட்ட கஷ்டம் இருக்கே. அப்பப்பா....

said...

நான் இந்தப் பதிவுக்கு இப்போது பின்னூட்டமிடவில்லை. பின்னூட்டமிட்டால் என்னைப்பற்றி தெரிந்துகொள்வீர்கள். வேண்டாம்.

said...

துக்கம் வேண்டாமே ....

said...

என்னங்க தருமி,

உங்களைப் பத்தின ரகசியம் எதாவது இருக்கா?

said...

நன்றி கணேஷ்.

இது ஆச்சு 4 வருசத்துக்கு முன்னே. ஆனாலும் நினைக்கிறப்ப மனசு கனத்துப் போகுதுங்க.

said...

அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும் அதோட கஷ்டம்னு சொல்லுவாங்க... எங்க வீட்டுல ஜிம்மி, அவளோட 2 குழந்தைக, சிறகு முளைச்சவுடன் பறக்க விடணும்னே வாங்கி வந்த ரெண்டு பச்சைகிளிகள் எல்லாம் இருந்தாங்க... நாய்னு நினைக்க முடியாத அளவு அறிவு ஜிம்மிக்கு. அவ இறந்தவுடனே முடிவு பண்ணிட்டோம், இனி நம்ம வீட்டுல ஒரு வளர்ப்பு கிடையாதுன்னு...

said...

சரியாச் சொன்னீங்க முகமூடி!

said...

எனக்கு விளங்கிட்டுது! தருமி தன்னுடைய இளகிய மனதை வெளிக்காட்ட விரும்பவில்லை. :o)

அவர் பாணியிலேயே:

செல்ல(செல்வ)ங்கள் வளர்ப்புக்கு? துளசி

இளகிய மனதுக்கு? தருமி!!!!

தருமி என்னைத் தேட முதல் ஓடிர்றேன்.(இந்த மேலதிகாரிகள் எதுக்கு அலுவலகம் வர்றாங்களோ..ஒரு வலைப்பதிவுலயும் நிம்மதியா பின்னூட்டம் போட முடியல்ல!) :o(

said...

ஷ்ரேயா,

//.(இந்த மேலதிகாரிகள் எதுக்கு அலுவலகம் வர்றாங்களோ..
ஒரு வலைப்பதிவுலயும் நிம்மதியா பின்னூட்டம் போட முடியல்ல!) :o(//

இது நல்லாருக்கே!! ச்சும்மா சொல்லக்கூடாது எஞ்சாய்.....

said...

// எஞ்சாய்.....//

ஏன் சொல்ல மாட்டீங்க? உங்களுக்கு செல்ல(செல்வ)ங்களோட சந்தோசமா நேரம் போகுது!! நான் என்ன செய்றதாம்? :o(

said...

வேணுமுன்னா சொல்லுங்க. இப்ப இருக்கறதுலே ஒண்ணை அனுப்பறேன் :-)

said...

நீங்க?? செல்லத்துல ஒன்றை அனுப்புறீங்க?

(அப்படியே நீங்க ஒன்றைத்தந்தாலும் அது அநேகமாக அடுத்த 5 மணித்தியாலத்துக்குள் உங்களிடம் திரும்பி வந்து விடும். (எங்க வீட்டில் நாய் பூனையெல்லாம் "தீவிரவாதி" மாதிரித்தான் பார்க்கப்படும். மீன் வாங்கி வளர்க்கவே 3 வருசமா கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்...நீங்க வேறே! )

குடுத்து வைச்ச துளசி!
ஹ்ம்ம்ம்!!! ..பெருமூச்சுத்தான்.. வேறென்ன!! :o(

said...

துளசி,
சொல்லிவைங்க உங்க தோழிகிட்ட. என்னைப்பற்றி இல்லாதது, பொல்லாதது சொல்லிக்கிட்டு இருக்காங்க. இது ஒண்ணும் சரியில்லை; ஆமா.

said...

"உங்களைப் பத்தின ரகசியம் எதாவது இருக்கா? "
- கொஞ்சமா, நஞ்சமா? அது இருக்கு நிறைய...

வெளியதான் சொல்லமுடியலை.

said...

அதையெல்லாம் கதைகளா எழுதிற வேண்டியதுதானே?

சிலசமயம் உண்மையே கற்பனைகளைவிடவும் அதிசயமாக இருக்கும்!

துளசி

said...

போன பின்னூட்டம் தருமிக்கு.