Wednesday, July 27, 2005

திருவிழா!!!!

ஊரெல்லாம் திருவிழா. எங்கே பார்த்தாலும் 'ஜல் ஜல் ஜல்'. வயசு வித்தியாசமில்லாம குழந்தை முதல் கிழவன்/கிழவி
எல்லோரும் பங்கெடுத்துக்கறாங்க. வருசாவருசம் நடக்குறதுதான்னாலும், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தாத்தான் கலந்துக்க
முடியும். எனக்கு ஒரு ஏழெட்டு வருசமா இதுலே கலந்துக்க முடியாமப் போச்சு. இந்த வருசம் என் பேரு குலுக்கல்லே
வந்துருச்சு. ரொம்ப நாளுக்குப்பிறகு வந்ததாலே, வர்றப்பவே முழு வீச்சுதான். வேகம் தாங்கமுடியாம 'தொபுக்கடீர்'னு
விழுந்தேன்.


இப்ப நடக்குறது பனிக்காலம். திருவிழாவுக்குப் பேரு 'ஃப்ளூ'! ஜோதிகா சலங்கையைக் கட்டிக்கிட்டு 'லகலகலகலக'ன்னு
குரலும் எழுப்பிக்கிட்டு, என் தொண்டைக்குள்ளே வந்து நின்னுக்கிட்டு ஒரே ஆட்டம். இருமி இருமி நெஞ்செல்லாம்
வலி. நீலகிரித்தைலம், ஜண்டு பாம், டைகர் பாம், அமிர்தாஞ்சனம்னு இந்திய ஸ்டைலில் ஆரம்பிச்சு, சுடாஃபெட்,
பெனெட்ரில், ஸ்ட்ரெப்சில்ன்னு வேற வேற ஐட்டம் வந்துக்கிட்டே இருக்கு. ''எத்தைத் தின்னாப் பித்தம் தெளியுமு'ன்னு
ஒண்ணுவிடாம உள்ளே தள்ளறதை உள்ளேயும், வெளியே பூசுறதை வெளியேயுமா லயம் தப்பாம நடக்குது. அது பாட்டுக்கு அது,
இதுபாட்டுக்கு இது.

இந்தமாதிரி சமயத்துலே ரொம்ப வேலை செய்யமுடியாம படுக்கையிலே ஓய்வு எடுக்கணுமாமே? ஆஹா, எடுத்தாப் போச்சு!
துணைக்குன்னு கூடவே வர்றது என்னான்னு பார்த்தா, அது சினிமாதான். புத்தகம் படிக்கலாம்தான். ஆனா தலைவலி,
கண்ணுலே இருந்து தண்ணி வடியுது. தூக்கமும் வரலை. அப்படியும் நம்ம தமிழ்ச் சங்கத்துலே நடத்தற தமிழ்ப்
பள்ளிக்காக வரவழைச்சதுலே இருந்து சிலதைத் தூக்கிக்கிட்டு வந்தேன். ஈஸி ரீடிங். பரமார்த்தகுரு கதைகள்,
தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்.

ச்சின்னப் புள்ளையா இருக்கறப்ப படிச்சுட்டு, சிரியோ சிரின்னு சிரிச்சதை நினைச்சுக்கிட்டேன். தளர்ந்த மனசுக்குத் தெம்பு
வரட்டுமுன்னு படிக்க ஆரம்பிச்சேன். பரமார்த்தகுரு முடிச்சேன். சிரிப்பு வரலை. தெனாலிராமன? அதுவும்தான். ஊஹூம்.
சிரிப்பெங்கே ? காணமே! பத்தாக்குறைக்கு தெனாலிராமன் மேலே கோபமா வந்துச்சு. இரக்கமே இல்லாத, சுயநலவாதி.
பூனை, குதிரை யெல்லாம் 'பட்டினி போட்டு வளர்த்தான்'னு படிச்சப்போ எரிச்சல்தான் வந்துச்சு. அடப்பாவி. தெனாலிராமன் பாம்பு கடிச்சுத்தான்
செத்திருக்கான். இது எனக்குப் புது நியூஸ்.

புக் ஷெல்ஃப் வேணாம். சினிமா ஷெல்ஃப் போதுமுன்னு அந்தப் பக்கம் படையெடுத்தேன். பன்னெண்டு வருஷக் கலெக்ஷன்.
ஒவ்வொண்ணும் ஒவ்வொருகாலத்துக்கு பிடிச்சதா இருந்துருக்கு. அதைப் பத்திக்கூடத் தனியா ஒரு பதிவே போடலாம். போடணும்.
'சபாஷ்' கிடைச்சது. மத்தியானம் ஓய்வா அதைப் பார்த்து முடிச்சேன். பார்த்திபனோட நடிப்பு நல்லாத்தான் இருந்தது.
ரஞ்சித் முகமே வில்லன் முகமோ?

இப்ப வந்த படங்கள் எல்லாமே பார்த்துட்டதாலே, ராத்திரி ஒரு பழையபடம் பார்க்கலாமுன்னு எங்க இவர் போய்
அவர் பங்குக்கு ஒரு படம் தேடியெடுத்துக்கிட்டு வந்தார். 'ஹவுஸ்ஃபுல்'. இதுவும் பார்த்திபனோடதுதான். பரவாயில்லேன்னு
பார்த்தேன். நல்ல அருமையான நடிப்பு. பாட்டு, ஃபைட்டுன்னு ஒண்ணுமே இல்லே. கவனிச்சுப் பார்த்தப்ப நாலு
பாட்டுக்கும் மூணு ஃபைட்டுக்கும் இடம் இருக்கே. எங்கெங்கே பாட்டைப் போட்டிருக்கலாம், எங்கெங்கே சண்டைன்னு
நினைச்சுப் பார்த்தா பொருத்தமாத்தான் வருது. அட! இப்படிக் கோட்டை விட்டுட்டாங்களே!

இப்பத்தான் இந்தப் படத்தைச் சரியாப் பாக்கறேன் போல, சுவலட்சுமிக்கு ஜோடி யார் தெரியுமா? நம்ம 'அந்நியன்'.
வடிவேலுவோட 'காமெடி'யும் நல்லாத்தான் இருக்கு. இது நேத்துக் கணக்கு.

இன்னைக்கு? மலையாளப் படம்தான். பிஜுமேனோன், சம்யுக்தா வர்மா நடிச்சது. 'மதுர நொம்பரக் காற்று'

சொல்லமறந்துட்டேனே, எங்க ஊருலே நிஜமாவே இப்ப 'ஆர்ட் ஃபெஸ்டிவல்' நடக்குதுங்க. அடுத்தவாரம் ஒரு பரதநாட்டிய
நிகழ்ச்சிகூட இருக்கு. ஆடுபவர் வெல்லிங்டன் என்ற ஊருலே இருந்துவரார். அவர் பேரு 'விவேக் கின்ரா' அங்கே பரத
நாட்டியப் பள்ளி நடத்திக்கிட்டு இருக்கார். இதுவரைக்கும் அஞ்சு முறை( இந்த 18 வருசத்துலே) இங்கே எங்க ஊருக்கு வந்து
நிகழ்ச்சி நடத்தி இருக்கார். இவர் கலாக்ஷேத்ராவோட மாணவர். நல்லவேளை இப்பவே இந்த ஃப்ளூ வந்துட்டது. அடுத்தவாரம்
ஃப்ரெஷ்ஷா இந்த நிகழ்ச்சிக்குப் போகலாம்.

கொசுறுச் செய்தி: இவர் 'அமலா' வோட க்ளாஸ்மேட்!20 comments:

said...

சிக்கன் சுப் நல்லது. உடம்பைக் கவனிச்சுக் கொள்ளுங்க.
எனக்கு அலுவலகத்திற்குப் போக மாய்ச்சலாக இருக்கிறது! 2 கிலோ Flu தபாலில் அனுப்பி விடவும். :o)

said...

2 கிலோ போதுமா?

said...

இப்போதைக்கு போதும். தேவையானால் பிறகு கேட்கிறேன். ;o)

said...

Hi Sis:
fast for fever, feast for cold :D

Cheers
Draj

said...

அக்கா,
மொளகு ரசம் நல்லா சுருக்குன்னு வச்சி சாப்பிடுங்க.சீக்கிரம் குணமாயிடுவீங்க.

//இப்பத்தான் இந்தப் படத்தைச் சரியாப் பாக்கறேன் போல, சுவலட்சுமிக்கு ஜோடி யார் தெரியுமா? நம்ம 'அந்நியன்'.வடிவேலுவோட 'காமெடி'யும் நல்லாத்தான் இருக்கு.//
இந்தப் படத்துக்கு முதல்ல பார்த்திபன் செஞ்ச ரோல்ல நடிக்க அக்கினேனி நாகேஸ்வரராவக் கேட்டாராம் பார்த்திபன்.அவர் நடிக்க முடியாத பட்சத்தில தான் அவரே அந்த ரோல் ஏத்து நடிச்சாராம்.

அதிகம் பேசாத பார்த்திபன்,DTS இசையிலயே மிரட்டியிருக்கும் ராசா,"இந்த வாரம் கைகள் வாரம்"வடிவேலு...படம் நல்லாத்தேன் இருக்கும்...

சுதர்சன்.கோபால்

said...

துளசியக்கா,
ஷ்ரேயா, சுதர்சன், டி ராஜ் எல்லோரும் சொன்ன டிப்ஸ் படி செய்து, விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

திருவிழா : நல்ல தலைப்பு.. உங்க பதிவை படிச்சது ஒரு திருவிழா போயிட்டுவந்த மாதிரி இருக்கு !

வீ எம்

said...

துளசிக்கா, Get Well Soooooon!!!!

said...

//இப்ப நடக்குறது பனிக்காலம். திருவிழாவுக்குப் பேரு 'ஃப்ளூ'! ஜோதிகா சலங்கையைக் கட்டிக்கிட்டு 'லகலகலகலக'ன்னு
குரலும் எழுப்பிக்கிட்டு, என் தொண்டைக்குள்ளே வந்து நின்னுக்கிட்டு ஒரே ஆட்டம். //

:-))))))))))))))))))))))

ஸ்டெரப்ஸில், பாம் எல்லாம் தூக்கி தூரப்போடுங்க. ஒரு குவார்ட்டர் பிராந்தியில நல்ல கரும் மிளகை காரத்துக்கு ஏற்ற மாதிரி போட்டு ஒரே மடக்குல அடிங்க. நீங்க பறக்குறது இல்லாம ப்ளூ, க்ளூ எல்லாம் பறந்து போயிரும்.

said...

நல்லா ஓய்வெடுங்க.. சரியாப் போயிடும்..

//ஒரு குவார்ட்டர் பிராந்தியில நல்ல கரும் மிளகை காரத்துக்கு ஏற்ற மாதிரி போட்டு ஒரே மடக்குல அடிங்க. நீங்க பறக்குறது இல்லாம ப்ளூ, க்ளூ எல்லாம் பறந்து போயிரும்.//

ஆகா! அல்வா விஜய் சொல்றது நல்ல ஐடியாவா இருக்கே.. இதுக்காவே ஃப்ளூ வரலாம் போல.. ;-)

said...

//ஒரு குவார்ட்டர் பிராந்தியில நல்ல கரும் மிளகை காரத்துக்கு ஏற்ற மாதிரி போட்டு ஒரே மடக்குல அடிங்க. நீங்க பறக்குறது இல்லாம ப்ளூ, க்ளூ எல்லாம் பறந்து போயிரும்.//


இவரென்ன இராஜ வைத்தியர் மாதிரி பேசறார்!

நீங்க உடம்பைப்பார்த்துக்கங்க!

said...

துளசி அக்கா., உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். மிளகுதான் இருமலுக்கு முதல் மருந்து.

said...

அன்புள்ள Draj,

மிகவும் நன்றி.

said...

அன்புள்ள சுதர்சன் கோபால்

//மொளகு ரசம் நல்லா சுருக்குன்னு வச்சி //

வச்சுட்டேன்.

//இந்தப் படத்துக்கு முதல்ல பார்த்திபன் செஞ்ச ரோல்ல நடிக்க அக்கினேனி நாகேஸ்வரராவக் கேட்டாராம்//

பார்த்திபனே நல்லாத்தான் செஞ்சிருக்கார். நாகேஸ்வரராவ் முகம் கொஞ்சம் முசுடா இருந்திருக்குமோ?

said...

அன்புள்ள வீ. எம்,

நன்றி. பூனா எப்படி இருக்கு? மழை கூடிப்போச்சாமெ?

said...

அன்புள்ள ரம்யா,

நன்றி. கொஞ்சம் கொஞ்சமா இந்தச் ச(னி)ளி போய்க்கிட்டு இருக்கு.

said...

அன்புள்ள விஜய்,


//ஒரு குவார்ட்டர் பிராந்தியில நல்ல கரும் மிளகை காரத்துக்கு ஏற்ற மாதிரி
போட்டு ஒரே மடக்குல அடிங்க. நீங்க பறக்குறது இல்லாம ப்ளூ, க்ளூ
எல்லாம் பறந்து போயிரும்.//

வெளிநாட்டுக்கு வந்து இந்த 24 வருசத்துலே இன்னும் கத்துக்காம விட்டது சிகெரெட் & குடி. அதையும்
ட்ரை பண்ணிரணும் போல:-))))

said...

அன்புள்ள கோபி,

நன்றி கோபி. ஓய்வுக்குத்தான் பழைய சினிமா எல்லாம் ரிபீட் அகுது.

said...

அன்புள்ள தங்கமணி,

நன்றிங்க.

//இவரென்ன இராஜ வைத்தியர் மாதிரி பேசறார்!//

இதுவாங்க ராஜ வைத்தியம்? அசுரவைத்தியம் மாதிரி இருக்கே!

said...

அன்புள்ள மரம்,

நன்றி. இனிமேப்பட்டு எங்கும் எதிலும் மிளகே மிளகு!!!

said...

யக்கா,
நான் பூனேல இருந்து வந்து 4 நாளாச்சு.. வந்துட்டேன்னு ஒரு குட்டி பதிவு, அதுக்கப்புறம் ஒரு பூனே வியாபார பதிவு போட்டுட்டேன்.. பாக்கலயா???
சீக்கரம் போயி பாருங்க!

வீ எம்