Wednesday, July 20, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 18

வீடு மாறணுமா வேண்டாமான்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சதுதான் மிச்சம். நிக்கியோட
'எபிசோட்' நினைவிருக்குல்லே? வீடு மாறிட்டுப் பசங்க காணாமப் போயிருச்சுன்னா? ஐய்யய்யோ,
என்னாலே முடியாது. அதுவும் இங்கிலீஷ் கூடத் தெரியாதே. தமிழ்ப் பூனைங்களாச்சே.


வேற வீடு மாறாம இருக்கறதே ஒரு 'க்ரைம்'போலத்தான் இங்கே ஆளுங்க கேக்கறது. 'இன்னும் அதே
வீட்டுலெயா இருக்கீங்க?' ஆமாம். இருந்தா என்ன தப்பு? நல்ல வீடுதானே?எல்லாத்துக்கும்
வசதியாத்தானே இருக்கு. பசங்களுக்குப் பழகுன இடம். அதுலேயும் கப்பு பிறந்ததுலேயிருந்து இங்கெ
இருக்கு. இப்ப வீடு மாறுனா பயந்துறாதா?

இப்ப இங்கேயும் முந்தி மாதிரி இல்லெ. இந்த அஞ்சாறு வருசமா புதுசா வீடுங்க நிறைய வர ஆரம்பிச்சிருச்சு.
ஜனத்தொகை கூடுதில்லையா? நகரமும் விரிஞ்சுக்கிட்டே போகுது. ஆப்பிள் தோட்டங்க இப்ப புது சப்டிவிஷன்.
புது வீடா இருந்தா அவ்வளவா குளுராது. நம்ம இஷ்டப்படியும் கட்டிக்கலாம் அது இதுன்னு சொல்லி என்
மனசைக் கரைச்சுட்டாரு இவரு.

வீடும் கட்ட ஆரம்பிசாச்சு. எனக்கோ மனசுலே ஒரே 'திக்திக்' வீடு மாறினா என்னென்ன ஏற்பாடு
பூனைங்களுக்குச் செய்யணுமுன்னு 'ஷான்'கிட்டே கேட்டேன். 'வீட்டுக்குள்ளேயே ஒரு மாசம் போல
வச்சிருங்க. பழகிடும். 'கீப் யுவர் ஃபிங்கர்ஸ் க்ராஸ்டு' ம்க்கூம் விரல்லே சுளுக்குதான் புடிச்சுக்கும்.

லைப்ரரிக்குப் படையெடுத்து இது சம்பந்தமான புத்தகங்களா வாரிக்கிட்டு வந்தேன்.அக்கம் பக்கம்
தெரிஞ்சவுங்க, சமீபத்துலே வீடு மாறுனவுங்க இவுங்ககிட்டேயெல்லாம் 'பேட்டி' எடுத்தேன்.நம்ம தோழி
ஒருத்தரோட பொண்ணு அப்பத்தான் கடைசிவருசம் வெட்டினரி சயன்ஸ் படிச்சுக்கிட்டு இருந்தங்க. இன்னும் ரெண்டே
வாரம்தான் இருந்தது தேர்வுக்கு. ரொம்ப ஸ்மார்ட் பொண்ணு. அதுகிட்டேயும் தொண தொணன்னு ஆயிரம்
கேள்விங்க கேட்டுக்கிட்டே இருந்தேன். அதுக்கும் பரீட்சைக்கு'ரிவிஷன்' செஞ்சாப்புலே ஆயிருக்கும்:-)

புது வீடும் ரொம்பதூரமில்லை. இங்கெருந்து 2 கிலோ மீட்டர்தான். ஆனா மெயின் ரோடு இல்லை. எப்பவும்
அமைதியா இருக்கு அந்தத் தெரு. நம்ம வீட்டுக்கு ரெண்டுபக்கமும் இருக்கற வீடுங்களிலே ரெண்டுரெண்டு
பூனைங்க இருக்குதுங்க. எதிர்வீட்டுலே மூணு. வலதுகைப் பக்கம் இருக்கற வீட்டுலே ரெண்டு பூனைங்க
மட்டுமில்லே , ஒரு நாயும் இருக்கு. சாயந்திரமாப் பாத்தா அநேகமா எல்லார் வீட்டு முன்னாலெயும்
பூனைங்க குந்திக்கிட்டு இருக்குதுங்க. ஏதோ கிராமத்துலே இருக்கறமாதிரி இருக்கு இங்கே.

கட்டுமானப் பணியை அவசரப்படுத்தாம இருந்தேன். எவ்வளவு நாள் தள்ளிப் போகுதோ அவ்வளவு நல்லது.
ஒரு வழியா அந்த நாள் வந்தெ வந்துருச்சு. சாமான்களை எடுத்து வண்டியிலே ஏத்தறதை வேடிக்கைப்
பார்த்துக்கிட்டே குறுக்கும் நெடுக்குமா வந்துக்கிட்டு இருக்கு ஜி.கே. கப்புதான் வீரனாச்சே, தோட்டத்துலே
ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்.

மொதல்லே நாம அங்கே போய் செட்டில் செஞ்சுட்டப்புறம் இதுங்களைக் கூட்டிட்டுப் போகலாமுன்னு
ஏற்பாடு. ஒரு ரெண்டு வாரத்துக்கு இங்கேயே இருக்கட்டும்.வந்துவந்து பார்த்துக்கலாம்.

படுக்கை அறை ஃபர்னிச்சர், விரிப்பு இது எதையும் மாத்தக்கூடாது. பழைய வாசனை அப்படியே இருக்கணும்.
அப்பத்தான் இதுங்க பயப்படாம இருக்கும். மகள் நல்ல மேட்சிங் படுக்கை விரிப்புங்களை அன்பளிப்பாத்
தந்தாள். ஆனா அதுக்கு பொருத்தமான நேரம் இப்ப இல்லே.

தினமும் ஏழெட்டு முறை அங்கே ஓடுவேன். காலியான வீட்டுலே பயந்த பார்வையோடு கப்பு அதோட
படுக்கையிலே படுத்திருக்கும். ஜி.கே எதையும் கண்டுக்காம இருக்கும். அதுக்கும் பழைய துள்ளல்
கிடையாது. சுகமில்லாத பூனையாயிருச்சு. சர்க்கரை வியாதி. கண்டு பிடிச்சு ஒரு வருசமாகுது. மொடாக்
குடியனாட்டம் தண்ணி குடிக்கறதைப் பாத்துட்டு ஷான் கிட்டே கொண்டு போனேன்.சர்க்கரை வியாதி
உறுதியாயிருச்சு. இன்சுலின் போதுமான அளவு சுரக்காததாலே சாப்புடறதெல்லாம் ரத்தத்துலே சேராதாம்.
அடுத்த 'எண்டு'லே சீக்கிரமா வெளிவந்துரும். உடம்புலே சக்தி இருக்காதாம். ரொம்பப் பசிக்குமாம்.
அகோரப் பசி. எப்பவும் சோர்வு வேற. தினமும் ஊசி போடறீங்களா? எப்படின்னு உங்களுக்கு 'ட்ரெயினிங்'
கொடுக்கறோமுன்னு கேட்டார். அதெல்லாம் முடியாது. மருந்து மாத்திரை கொடுக்கறேன்னு சொல்லிட்டேன்.

ஜி.கே. மருந்து சாப்புடறதுலே ச்செல்லம். இஞ்செக்ஷன் சிருஞ்சி போல இருக்கறதுலே வர்ற மருந்தை பின்னாலே
தள்ளுனா அப்படியே வந்து நக்கிடும். ரெண்டுவேளை மருந்து. கப்புவுக்கு மருந்து கொடுக்கறதுக்குள்ளே நம்மளை
ஒரு வழி பண்ணிடும். ச்சின்ன மாத்திரைதான். அதை சாப்பாட்டுலே ஒளிச்சு வச்சாலும் கரெக்ட்டா அதை விட்டுட்டு
சாப்புடும். நினைச்சுக்கிட்டா அந்த வீட்டுக்கு ஓடிருவேன். நேரங்காலமெல்லாம் கிடையாது. எப்படி இருக்குதுங்களோன்னு
மனசுலே சதா எண்ண ஓட்டம்.

ஒரு வாரமே ஏதோ ஒரு யுகம் ஆனாப்புலே இருந்துச்சு. 'கேட் லிட்டர்' வாங்கிவந்து ஒரு பெரிய அட்டைப் பெட்டியை
வெட்டி 'ட் ரே' செஞ்சு அதுலே நிரப்பியாச்சு. வீட்டுலே எல்லாருக்கும் 'இன்ஸ்ட்ரெக்ஷன்' கொடுத்தாச்சு. யாரும் ஜன்னலையோ,
கதவையோ திறந்து வைக்கக்கூடாது. வாசக் கதவுக்கு கவனம் வேணும். ஃபோயர் கதவை மூடுனபிறகுதான் வாசக்கதவைத்
திறக்கவேணும் இத்யாதி இத்யாதி........

மொதல்லே கப்புவைக் கொண்டுவந்துரலாம். அவன் இடம் பழகட்டும். ஜி.கே. அப்புறம். அவன் பிரச்சனை இல்லாதவன்.
அங்கே போய் பிடிச்சுக் கூண்டுலே வைக்கறதுக்கு ஒரு போராட்டம். அதுலே ஜெயிச்சுட்டோம். கொண்டு வர்ற வழியெல்லாம்
'ஐய்யோ, அம்மா'ன்னு வழக்கம் போல கத்திக்கிட்டு வர்றான். வீட்டுக்குள்ளே கொண்டுவந்து கூண்டைத்
திறந்தாச்சு. இப்படியும் அப்படியுமா பாய்ஞ்சு ஓடறான். ஏதாவது கதவு திறந்திருக்கான்னு பாக்கறான்.
ஊஹூம். மூச்! அன்னைக்கு ராத்திரி பூராவும் அட்டகாசம். யாருமே சரியாத் தூங்க முடியலை. வேற வழி இல்லேன்னதும்
கொஞ்சம் அடங்கிட்டான். 'லிட்டர் ட் ரே'யையும் உபயோகிச்சிருக்கான். பேஷ் பேஷ். நல்ல அறிவு இருக்கு. இந்த அட்டாச்சுடு
பாத்ரூம் சர்வீஸ் எல்லாம் கப்புவுக்குத்தான். ஜி.கே வெளியே, கொல்லைப்புறம்தான் போகணும்.

மறுநாள் காலையிலே போய் ஜி.கே.வைக் கொண்டு வந்தோம். இவன் வேற மாதிரி. எல்லாமே 'டோண்ட் கேர்'தான்.
சாப்பாடு கொடுத்தாப் போதும். பழைய வீட்டுலே இருந்த அதே வழக்கத்தை மாத்தாம அடுக்களையிலே
நட்ட நடுவிலே படுத்துக்கிட்டான். நாந்தான் அவனைச் சுத்தி சுத்திவந்து வேலை செய்யணும். என்னைக்குக் கால் தடுமாறி
விழப்போறேனோ?

கப்புவே ஒரு அறையைத் தேர்ந்தெடுத்துக் கட்டிலின் கீழே இருக்க ஆரம்பிச்சான். ஜி.கே.வும் ஏதோ போட்டி போடறது போல
இன்னொரு அறையைப் புடிச்சு வச்சுக்கிட்டான். இப்ப இந்த அறைங்களுக்குப் பேரே கப்பு ரூம், ஜிக்கு ரூம்னு ஆகிருச்சு.

மூணுவாரம் ஆனது.ஒரு நாள் கப்புவை மெதுவாத் தோட்டத்துக்குக் கொண்டு போனேன். தோட்டம் இன்னும் போட ஆரம்பிக்கலை.
ரெண்டு நிமிஷம் இருந்துட்டு உடனே பயந்து வீட்டுக்குள்ளே ஓடிவந்துட்டான். இன்னும் ரெண்டு வாரம் போனது. இப்ப 'கேட் டோரை'த்
திறந்து வச்சோம். வரப்போகப் பழகிட்டான். ஆனாலும் ஒரு நாளுக்கு ஒரு புத்தின்னு இருந்தான்/இருக்கான்.

அக்கம் பக்கத்து வீட்டு வேலியோரம் போய்ப் பதுங்கி இருப்பதும், ராத்திரி இருட்டுனபிறகு சாப்பிட வர்றதுமா இருக்கான். இந்த அஞ்சு
மாசமும் இதே போராட்டம். அங்கே பழைய வீட்டுலே அவனுக்குச் செடி, புதர்கள் எல்லாம் பதுங்குற இடமா இருந்துச்சுல்லே. இங்கே இன்னும்
அதெல்லாம் இல்லையே. இப்ப சமீபத்துலே மூணுவாரமா, பகலிலும் சாப்பாட்டுக்கு மட்டும் வர்றதும், சாப்பிட்டு முடிச்சவுடனே ஓடுறதுமா
இருக்கான். நாங்கெல்லாம் ச்சின்னப் புள்ளைங்களா இருந்தப்ப இப்படித்தான் அக்கம்பக்கத்துலே விளையாட்டோ விளையாட்டுன்னு
இருப்போம். வீட்டுலே இருந்து சாப்பாட்டுக்குக் கூப்பிட ஆளு வந்து சொன்னதும், இதோ போனேன்,இதோ வந்தேன்னு தின்னு முடிச்சுக்
கைகழுவுனவுடனே அந்த ஈரம்கூட காஞ்சிருக்காது அப்படியே ஓடுவோம் விளையாட. அந்த ஞாபகம் வருது.

ஆனா நான் பயந்து செத்தமாதிரி, காணாமப் போகலை. 'தேங்க் காட்'

எங்களுக்கும் வயசாக்கிட்டு வருதில்லையா. இப்படியே ஓட்டுறதும் இனிமேப்பட்டுக் கஷ்டம்தானே?
இனிமே நம்ம வாழ்க்கையிலே புதுசா மிருகங்களுக்கு இடம் இல்லை. இப்ப இருக்குற ரெண்டும் இருந்துட்டுப் போகட்டும்.
கப்புவுக்கு இப்பவயசு 15 வருசம் 8 மாசம். ஜி.கே.வுக்கு 12 வயசாச்சு. நம்மகிட்டே வந்தே வருசம் நாலாச்சே. பூனையோட ஒரு வயசு மனுஷனோட
6 வயசாம். கணக்குப் போட்டுக்குங்க. கப்பு 94, ஜி.கே 72. சீனியர் சிட்டிசன்ங்க. கடவுளோட கணக்கு
என்னன்னு தெரியாது.

ஆனா ஒண்ணு சொல்றேன். வளர்ப்பு மிருகங்களை வச்சுக்கறது ஒரு பெரிய கமிட்மெண்ட். சிலபேர்
மீன்களைத் தொட்டியிலே வளர்ப்பாங்க. இதுங்களை 'வாக்' கொண்டு போகவேணாமே தவிர இதுவும்
வேலைதான். ஆனா பூனை, நாய் போல அவ்வளவு வேலை இல்லை. மகள் ஆசைப் பட்டாள்ன்னு சில வருசங்களுக்கு
முன்னே ஒரு மீன் தொட்டியும் வாங்கி மீன்கள் வளர்த்தோம்.ஆனா அடிக்கடி மீன் செத்துரும். கொஞ்ச நாள் பார்த்துட்டு
எல்லாம் போனதும், தொட்டியை இன்னொரு நண்பருக்குக் கொடுத்துட்டோம். அங்கே அவர் மீன் வாங்கிப் போட்டு
நல்லாத்தான் இருந்துக்கிட்டு இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி போல. நமக்குப் பூனை.

எனக்கென்னமோ ஃபேவரிட் அனிமல்ன்னு பார்த்தா அது நாய்தான்! போன வாரம் ஒருநாள் வெளியே
போனப்ப ஒரு முதியோர் விடுதியைத் தாண்டிப் போக வேண்டியிருந்துச்சு. இப்ப நடக்கறது குளுர் காலமுன்னாலும்
அன்னைக்குக் கொஞ்சம் வெய்யில் வந்துச்சு. அதை வீணாக்க மனசில்லாம அங்கே இருக்கற தாத்தா
பாட்டிங்க வெளியே 'வாக்' போய்க்கிட்டு இருந்தாங்க. கூடவே அவுங்க வளக்கற நாய்ங்களும் குளிருக்கு
அடக்கமா, பாந்தமாச் சட்டைபோட்டுக்கிட்டுக் கூடப் போகுதுங்க. 'ஹை, நாய்ங்கெல்லாம் சொக்காப் போட்டுக்கிட்டுப்
போகுதுங்க'ன்ன சொன்னதுக்கு எங்க இவர் சிரிச்சார். ' ஆமாம் நாய்ங்கெல்லாம் சொக்காதான்
போட்டுக்கிட்டுப் போகுது'ன்னு சொல்லிட்டு தன்னுடைய சட்டையைக் காமிச்சார்.

இனி ஒரே முடிவுதான். 'நோ மோர் நியூ பெட்ஸ்'

கொஞ்சம் இருங்க. பக்கத்து வீட்டுலே இருந்து நம்ம வேலி ஓரமா ஒரு ச்சின்ன நாய்க்குட்டியோட
சத்தம் கேக்குது. குரலைக் கேட்டா ஒரு அஞ்சு வாரக் குட்டியாத்தான் இருக்கவேணும். எதுக்கும்போய்
ஒரு 'ஹாய்' சொல்லிட்டு என்ன ப்ரீடு, என்ன கலர்னு பார்த்துட்டு வரணும். அவுங்க வீட்டுலே ஏற்கெனவே ஒரு வயசான
நாய் இருக்கே, இது என்ன புதுசா? எப்ப வாங்குனாங்களாம்?



முடிவுரை:

தொடர் எழுதுனா அதுக்கு ஒரு முடிவுரை எழுதணும்ன்றது சம்பிரதாயமாச்சே, அதனாலே. இதுவரை
பொறுமையாப் படிச்ச ஜனங்களுக்கும், பின்னூட்டங்கள் மூலமா ஊக்கம் கொடுத்த மகா ஜனங்களுக்கும்
நன்றி. இதுதான் கடைசிப் பகுதியான்னு எனக்கே தெரியாது. ஒருவேளை கட்டக் கடைசியா எப்பவாவது
எழுதுவேனோ? எதா இருந்தாலும் இப்போதைக்கு இது கடைசி.

அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

என்றும் அன்புடன்,
துளசி கோபால்.





8 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

//..ஆமாம் நாய்ங்கெல்லாம் சொக்காதான்
போட்டுக்கிட்டுப் போகுது'ன்னு சொல்லிட்டு தன்னுடைய சட்டையைக் காமிச்சார்.//

எல்லா இடத்துலேயும் இந்தக்கதைதான் போல!! :oD

அது என்ன "சொக்கா"? எங்களுக்கு "சொக்கா" = சொக்லேட்!

said...

அது 'சொக்காய்' !! அப்படின்னா சட்டைன்னு அர்த்தம்.

said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்...

இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... தயவு செய்து இந்த ஒரு முறை பொருத்துக்கோங்க...

said...

ஊஹூம். எனக்கு நம்பிக்கை இல்ல இதுதான் இந்த 'செல்லங்கள்' பகுதிக்குக் கடைசியா இருக்கும்னு. இங்க பாருங்களேன் -

"கொஞ்சம் இருங்க. பக்கத்து வீட்டுலே இருந்து நம்ம வேலி ஓரமா ஒரு ச்சின்ன நாய்க்குட்டியோட
சத்தம் கேக்குது. " - இப்படி சொல்ற ஆளு செல்லங்கள் இல்லாம் இருக்கிறதாவது; அட போங்கம்மா?

அது என்ன, எங்களை - ச்சீ - என்னை மாதிரி ஆளை வச்சுக்கிட்டு 'வயசு ஆயிப்போச்சா...' அது இதுன்னு பேசறதுமாதிரி கேக்குது. சரியா இல்லீங்க.

said...

நன்றி தருமி.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்...... பாட்டுக் கேட்டதில்லையா?
நாம விரும்பாவிட்டாலும் வயசாகுதே தருமி. என்னா செய்யறது?

said...

சின்ன வயசிலே நேரம் மெதுவாப் போன மாதிரியும் , இப்ப மிக விரைவாப் போற மாதிரியும் எனக்குப் படுகிறது. :o(

உங்களுக்கு அப்பிடி தோன்றியிருக்கா?

said...

அப்ப நமக்கு 'பொறுப்பு' கிடையாது. விளையாட்டும் படிப்பும்தான் வாழ்க்கையா இருந்துச்சு. பாடப் புத்தகத்தைக் கையிலே எடுத்தாலே நேரம்
நத்தைபோலத் தானே ஊரும்.

எங்க ஹாஸ்டலிலே 'ஸ்டடி டைம்' ஒருமணி நேரம்தான். கடிகாரம் நின்னுபோனாப்புலே தெரியும்ம்:-))))
கொயட் டைம் ஆச்சே. பேச முடியாதுல்லே:-)))
இப்ப ஆயிரத்தெட்டு வேலை, கவலை ........ நேரம் ஓடத்தானே செய்யும்?