வீடுன்னா யாராவது விருந்தாளிங்க, ச்சும்மா விஸிட் செய்யறவங்கன்னு வராம இருப்பாங்களா?
யாரு வந்தாலும் முதல்லே மூக்கை நீட்டிக்கிட்டு நடுவுலே வந்து உக்காந்துக்கணும். வர்றவங்களும்
'அட, அழகா இருக்கே. நாங்க மொதல்லே நாய்ன்னு நினைச்சோம்'னு சொல்வாங்க. நாங்களும்
கெளரவமா, 'இதோட பேரு கோபால கிருஷ்ணன்'னு சொல்வோம். கூடவே சுருக்கமா 'ஜிகே'ன்னு
கூப்புடுவோமுன்னும் சொல்வோம்.
இவன் எங்க இவர் கோபாலோட செல்லம். பழைய 007 படங்களிலே வில்லன் புசுபுசுன்னு வைர நெக்லஸ்
போட்ட வெள்ளைப்பூனையை வச்சுக்கிட்டிருந்தது யாருக்காவது ஞாபகம் இருக்கா? அதே அதே அதே.
என்ன, இவன் கருப்பு. விருந்தாளிங்க முன்னாலே இவனைத் தூக்கி மடியிலே வச்சுக்கிட்டுத்
தடவிக் கொடுத்துக்கிட்டே பேசிக்கிட்டிருக்கும் இவரைப் பார்த்தா எனக்கு 007 வில்லன் ஞாபகம்
வந்துரும். சிரிப்பை அடக்கிக்கிட்டே நைஸா அவுங்களுக்கு காஃபி, டீ கொண்டுவர்ற சாக்குலே
உள்ளெ போயிருவேன்.
இவனும் பசியிலே வயிறு காஞ்சுக்கிட்டு வந்தவந்தான். ஒரு ச்சின்ன நாய் சைஸுலே இருந்தான்.
கண்ணுலே 'பசி' தெரியுது. பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்க முடியுமா? இவர் வர்றதுக்குள்ளே
சாப்பாடு போட்டு அனுப்பிரணுமுன்னு ஒரு டின்னைத் திறந்து போட்டா, ஆவலா லபக் லபக்குன்னு
விழுங்கறான். பாவம், எத்தனை நாள் பசியோ? முழுசும் தீர்த்துட்டு இன்னும் தட்டை நக்கிக்கிட்டே இருக்கான்.
அதுக்குள்ளே இவர் வந்துட்டாரு. துரத்தறமாதிரி கையைத் தூக்கிக்கிட்டே இவர் வந்ததும் பயந்து ஓடிருமுன்னு
நினைச்சேன். ஆனா.....ஏதோ ரொம்ப நாளாப் பழகின மாதிரி இவர் கால்கிட்டேபோய் நின்னான். இவருக்கு
என்ன ஆச்சோ... ஒண்ணும் சொல்லாம வீட்டுக்குள்ளே போயிட்டார். இவனும் கூடவே போயி இவர் பக்கத்திலே
நிக்கறான். நல்ல நீளமான ரோமம். மெதுவா அவனைத் தடவிக் கொடுத்தாரா, அடுத்த விநாடி 'டக்'ன்னு
அவர் மடிமேலே ஏறி உக்காந்துக்கிட்டு இருக்கான். இதுவரைக்கும் நம்ம வீட்டுக்கு வந்த/இருந்த பூனைகளிலே
எதுவுமே இவர் மடிமேலே உக்காந்ததே இல்லை. நம்ம கப்புவுமே ஒரு அஞ்சு நொடி தடவிக்குமே தவிர, இவர்
தூக்கப்போனா ஓடிரும். மடிமேல உக்கார்ற பிஸினஸ் எல்லாம் கிடையாது.
ரொம்பப் பெருமிதமான முகத்தோட கேக்கறார்,'இவன் எங்கிருந்து வந்தான்?'ன்னு. யாருக்குத் தெரியும்?
உடம்புல்லாம் பெரிய பெரிய கட்டியாக் கறுப்பாத் தொங்குது.அதுலே இவர் கை பட்டவுடனே கொஞ்சம்
முறைச்சுப் பாத்துட்டுக் கையைத் தட்டி விட்டான்.என்னவா இருக்கும்? யாரோடது? இவ்வளவு
அழகாவும், சிநேகமாவும் இருக்கற இவனை விட்டுட்டுப் போக யாருக்கு மனசு வந்தது? ஒண்ணுமே புரியலை.
எதுக்கும் கொஞ்ச நாள் பாக்கலாம்.அதுவரை கராஜ் லே இருந்துக்கட்டுமுன்னு இருந்தேன்.
ஆனா.. இவனோட ஐடியாவே வேறா இருந்துச்சு. கராஜ்லே கொண்டுபோய்விட்டாலும், இவரோட கார்
மேலே ஏறிப் படுத்துக்குவான். மகளொடதையும் என்னோடதையும் சட்டையே செய்ய மாட்டான். காலையிலே
பாக்கறப்ப இவர் வண்டிமேலே பூனைப் பாதம் பாதமா கால்தடம் அழகாப் பதிஞ்சிருக்கும். விண்ட்ஷீல்ட் லேயும் கூட.
கிருஷ்ண ஜெயந்திக்குக் பாதம் பாதமாக் கோலம் போடுவோமே, அப்படி. இதாலதான் கிருஷ்ணன்னு பேரு வச்சேன்.
அப்புறம் இவன் கோபாலோட ச்செல்லமாயிட்டதாலே கோபாலகிருஷ்ணனாயிட்டான்.
ஒரு வாரம் ஆச்சு, எங்கேயும் போற அடையாளம் இல்லே. கப்புவோட 'கேட் டோர்' இருக்கறதைக் கண்டு
பிடிச்சு ரொம்ப உரிமையோட அதுக்குள்ளே வர்றதும் போறதுமா இருக்கான்.
நம் வழக்கப்படி 'ஷான்'கிட்டே கொண்டு போனோம். இந்த முறை இவரும் வந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம்.
என்ன ஆச்சு இவருக்கு? இதெல்லாம் எப்பவுமே என் டிபார்ட்மெண்ட் வேலையாச்சே.
'பெர்ஷியன் லாங் ஹேர்டு கேட். ரொம்ப நல்ல ப்ரீடு. வயசு அநேகமா எட்டு இருக்கும். இவன் ஒரு
ஆண். இவனை ஏற்கெனவே ஃபிக்ஸ் செஞ்சிருக்காங்க' ஷான் சொல்லச் சொல்ல நான் 'ஆ'ன்னு வாயைத்
திறந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.
'ஆண்' பூனையா? ஆணுக்குரிய 'அடையாளம்' இல்லாம இருக்கானே?( நம்ம வீட்டுலே எல்லோருமே
ஏண்டா தான்.ஆணானாலும் பொண்ணானாலும் சரி. 'ஹீ ஈஸ் அ ஷீ. பட் வீ கால் ஹெர் ஹீ')
'எங்கெருந்து வாங்குனீங்க?'ன்னு கேட்டார். வாங்கெல்லாம் இல்லை. வழக்கமா வர்றது போல
வந்துச்சுன்னு சொன்னேன். " உங்களைப் பத்தி பூனைகள் உலகத்துலே நியூஸ் பரவிடுச்சு போல.
அதான் கரெக்ட்டா உங்க வீட்டுக்கு வந்து சேர்ந்துடறாங்க'ன்னு சொல்லிச் சிரிக்கிறார்.
'ஏன் சிரிக்க மாட்டீங்க? உங்களுக்கு வருமானம் ஆச்சே'ன்னு சொல்ல வாய்வரைக்கும் வந்துச்சு.
ஆனா கேக்கலை.
உடம்புலே இருக்கறது கட்டி இல்லையாம். நீள ரோமம் அங்கங்கே ச்சிக்குப் பிடிச்சுச் சுருண்டு
கட்டி கட்டி இருக்காம். இமயமலையிலே இருக்கற 'ஜடா முடி சாமியார்' போலெ ஆயிருச்சு.
ராமாயணத்துலே வாசிச்சது நினைவு வந்துச்சு.'ராமனும், லக்ஷ்மணனும் காட்டுக்குப் போனாங்கல்லே,
அப்ப ஆலமரத்துலே இருந்து வர்ற பால், பிசினு எடுத்துத் தங்கள் முடியிலே தடவி சுருட்டிவிட்டுச்
சடைமுடியா செஞ்சுக்கிட்டாங்களாம். அப்புறம் இப்ப இந்த நாட்டுலே 'க்ரீன் பார்ட்டி'யைச் சேர்ந்த
பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் இருக்கார். அவரோட பேர் 'நந்தோர்'. நீளமான முடியை இப்படித்தான்
சடைசடையா உருட்டிவிட்டுக்கிட்டு இருப்பார். அதென்ன 'ஸ்டைலோ'ன்னு இருக்கும்,அவரைப் பாக்கறப்பெல்லாம்
'இமயமலை சாமியார்' மனசுலெ வந்துருவார்.
'ஆமா, பூனைங்க ரொம்ப சுத்தமான மிருகங்களாச்சே. எப்பவும் தன்னை நக்கி நக்கி க்ளீன் செஞ்சுக்குமே'ன்னு
கேட்டேன்.
'இவன் சோம்பேறி'ன்னு சொல்லிட்டு சிரிக்கிறார் இந்த ஷான்.தோலோட சேர்த்து இழுக்கறதாலே
தொட்டாலெ வலிக்குமாம்.
'பசி வந்தாப் பத்தும் பறந்திருமுன்னு ஒரு பழஞ்சொல் இருக்கே. கும்பி காயறப்ப அலங்காரம் செஞ்சுக்க
முடியுமா? நியாயம்தானே?'ன்னு நினைச்சுக்கிட்டு, இப்ப என்ன செய்யணுமுன்னு கேட்டேன்.
'பெட் க்ரூம்' சர்வீஸும் இருக்காம். ஆனா அது பொதுவா நாய்ங்களுக்குத்தானாம். பூனை பிறாண்டிருமில்லே.
ஆனா நாங்களே, 'மயக்க மருந்து கொடுத்துட்டு நல்லா க்ளீன் செஞ்சு க்ரூம் பண்ணிவிடறோம். அதுக்குத்
தனி 'சார்ஜு'ன்னார். அதானே பார்த்தேன். இப்படிப் போகுதா விஷயம்?
எவ்வளவு ஆகும்ன்னு கேட்டேன்.எழுவது டாலராம்.
'நானே பத்து டாலருக்கு இருக்கற கடையாத்தான் தேடிப் போய் முடி வெட்டிக்கறேன்'ன்னு எங்க இவர்
சொன்னார். இவனுக்கு ஏழு மடங்கா?
இன்னிக்கு இங்கேயே விட்டுட்டுப் போங்க. நாளைக்குக் காலையிலே வந்து கூட்டிக்கிட்டுப் போகலாமுன்னு
சொன்னதாலே அங்கேயே விட்டுட்டு வந்தோம்.
மறுநாள் ஃபோன் போட்டுக் கேட்டப்ப, வேலை முடிஞ்சது. இன்னும் மயக்கம் தெளியலே. தெளிஞ்சவுடனே
உங்களுக்கு ஃபோன் போடறோமுன்னு பதில் வந்துச்சு.
இவர் பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப அப்படியே அங்கேயும் போனாராம். எதிர்வரிசைதானே?
அதேதான் சொன்னாங்களாம். மயக்கம் தெளியுது. ஆனா நிக்கறதுக்குக் கால் 'ஸ்டெடி'யா இல்லே. இன்னும்
கொஞ்ச நேரம் ஆகட்டும். வெட் வந்து செக் செஞ்சவுடனே வீட்டுக்குப் ஃபோன் போடறேன்'
அன்னைக்குப் பகல் மூணுமணிக்கு ஃபோன் வந்துச்சு. போய்க் கூட்டிட்டு வந்தேன். இவனா அவன்?
ரொம்ப புசுபுசுன்னு ரோமத்தோட பளிச்சுன்னு அழகா இருக்கான். உடம்பு பட்டுப் போல இருக்கு.
மயக்கத்துலே இருந்தப்பவே 'டெண்டல் செக்கப்'பும் செஞ்சாங்களாம். எல்லாம் நல்லா ஆரோக்கியமா
இருக்காம்.
தினமும் சாயந்திரம் இவர் வேலையை விட்டு வந்தவுடனே கால்கிட்டேயே சுத்திக்கிட்டு இருப்பான்.
கீழே உக்காந்தவுடனே மடியிலேஏறிக்கணும். இதுவே ஒரு பழக்கமா ஆயிருச்சு. நம்ம கப்புவுக்கு
இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கலே. இவனைப் பாக்குற பார்வையிலேயே ஒரு வெறுப்பு தெரியும்.
'ச்சீ போ'ன்னுட்டு எங்க ரூமுலே போய் உக்காந்துக்கும்.
ஆனா இந்த கோபாலகிருஷ்ணனும்( இனிமேப்பட்டு ஜிகே) லேசுப்பட்டதில்லை. கப்புவைப்
பின் தொடர்ந்துக்கிட்டே இருக்கும். ரெண்டுபேருக்கும் வெவ்வேறு இடத்துலேதான் சாப்பாடு வைப்போம்.
ஆனாலும் எங்கெங்கே கப்புவோட தட்டு இருக்குன்னு தேடிப் போய் அதையும் ஓசைப்படாமத் தின்னுட்டு
வந்துரும். பாவம் கப்பு.
ரெண்டு ரெண்டுதட்டுலே இருந்து முழுங்கறதை ஜீரணிக்கறதுக்காக, நம்ம தோட்டத்துலே, ஓடிப் போய் மரத்துலே
சரசரன்னு ஏறரதும், வேகமா 'ட் ரைவ் வே'லே ஓடி வாசப்பக்கம் இருக்கற செர்ரி மரத்துலே கிடுகிடுன்னு உச்சிவரை
ஏறி அங்கே இருந்து தொப்புன்னு குதிக்கரதுமா இருக்கும். அதுவும் இவர் பார்த்துக்கிட்டு நிக்கறாருன்னு தெரிஞ்சா
அவ்வªவுதான். ஒரே 'ஷோயிங் ஆஃப்'
கப்புவுக்கு உடனே கெட்ட பேர் வாங்கிவைக்கும்.'பார். எவ்வளவு நல்லா ஓடி விளையாடுறான்? உன் கப்பு
( இப்ப கப்பு என் கப்புவாயிப்போச்சு)பாரு, எப்பவும் படுக்கையிலே ஏறி உக்காந்துகிட்டு இருக்கு. வீட்டுக்கு
யாராவது வந்தாக்கூட ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிறது. பயந்தாங்கொள்ளீ. சாப்பாடு சாப்புடவும் ரொம்ப
ஃபஸ் பண்ணிக்கும். ச்சூஸி. '
அதுக்கென்ன செய்யறது? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம். இது எங்கெங்கியோ அலைஞ்சு திரிஞ்சதாலே
கஷ்டம் புரிஞ்சது. 'சோறு கிடைக்கற இடம் சொர்க்கம்'ன்னு இருக்கு. கப்பு அப்படியா? பிறந்ததுலே
இருந்து உயர்தரமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டது. 'காந்தானி' அதுமட்டுமா?
இவனைவிட மூத்ததாச்சே. பெருந்தன்மையா(!) இருக்கு.
சிலசமயத்துலே அசந்து தூங்கற கப்புவுக்குப் பக்கத்துலே ஒரு ரெண்டு இஞ்சு இடம் விட்டு ஜிகேயும்
பூனைமாதிரி படுத்துக்கிட்டு இருக்கும். கப்புவுக்கு வயசாகிக்கிட்டு இருக்கறதாலே மோப்ப சக்தியும்
குறைஞ்சுக்கிட்டு வருதுபோலெ. திடுக்குன்னு முழிச்சுக்கிச்சுன்னா, இவனைப் பாத்து 'துப்பிட்டு' ஓடிரும்.
எலியும் பூனையுமா இருக்கறது சொல்வாங்களே அதே போல பூனையும் பூனையுமா இருக்காங்க ரெண்டுபேரும்.
எலின்னதும் ஞாபகத்துக்கு வருது, இந்த ஜிகே எப்பவும் ஏதாவது எலியைப் பிடிச்சிக்கிட்டு வீட்டுக்குள்ளெ கொண்டு வந்துரும்.
அதைக் கொல்லவும் கொல்லாது. எலியை வாயிலே இருந்து கீழே வீசிட்டு அதுமுன்னாலேயே உக்காந்திருக்கும்.
கொலைகாரன் முன்னாலே இருக்கறதாலே பயந்து நடுங்கற எலியை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர விடாது.
நகர ஆரம்பிச்சா, வாலைப் பிடிச்சு இழுத்து வைக்கும். எமனைப் பாத்த பயத்துலேயே அது செத்துப் போகும்.
ஒரே சித்திரவதைதான். போன ஜென்மத்துலே இவந்தான் 'ஹிட்லர்'போல.
ஏண்டா, இந்தப் பாவத்தைக் கொட்டிக்கிறே?
இன்னும் வரும்.
Saturday, July 16, 2005
என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 17
Posted by துளசி கோபால் at 7/16/2005 12:38:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
// போன ஜென்மத்துலே இவந்தான் 'ஹிட்லர்'போல. ஏண்டா, இந்தப் பாவத்தைக் கொட்டிக்கிறே?//
:o)
எனக்கு இவரைப்(ஜி கே) பத்தி முன்னமே தெரியுமே!!! (பாத்தீங்களா துளசி..பெருமையடிப்பேன் என்று சொன்னேன் தானே!!) ;o)
சொன்னதைச் செஞ்சாச்சு;-))))
பூனை expert-கிட்டதான் கேக்கணும் பூனையைப்பத்தி- துளசி, நாய்களை நாமளே தேடி சேத்துக்கணும்; பூனைகள் நம்மைத் தேடி சேந்துக்கும் அப்டீங்கராங்களே, உண்மைதானுங்களா?
ஆனா ஷான் சொல்றது மாதிரி எப்படி இவ்வளவு செல்லங்கள் சரியாக உங்ககிட்டயே வருதுகள் (வருகிறார்கள்)?
உண்மைதாங்க தருமி.
அதுங்களுக்குக்கூடத் தெரிஞ்சிருக்கு 'ஏமாளி' யாருன்னு:-)
அவ்வளவு வெளிப்படையாவா இருக்கேன்? மாத்திக்கணும். இப்படி இருக்கறது ஆபத்து இல்லே?
துளசி.
நான் பூனை வளர்த்த காலங்களை நினைவு படுத்தி விட்டீர்கள்!!!
செம nostalgic-a போச்சு!!!
சில நாட்கள் எவ்வளவு முயன்றாலும் திரும்பி வராதவை!!இப்பொழுது ஒரு பூனை வளர்த்தாலும் அப்பொழுது இருந்ததை போன்ற feel வராது!!
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வாங்க CVR.
உங்க பின்னூட்டம் வந்தபிறகு நான் ஒரு முறை இந்தப் பகுதியைப் படிச்சேன்.
ஆச்சரியம்தான். நேத்து நியூஸியில் போட்ட 'நந்தோர்' பத்தி இதுலேயும் எழுதி இருக்கேன்!
அந்தந்தக் காலகட்டங்களில் வரும் உணர்வுகள் அபூர்வம்தான். திருப்பி அதே போல உணருவது
அநேகமா நடக்கரதில்லை.
என்னிடம் கூட பிரியா என்ற பூனை இருந்தது. நல்லா எழுதி இருக்கீங்க, பூனைக்கு கோபால கிருஷ்ணன் என்ற பெயரை இப்போ தான் கேள்விப்படறேன் :) ;)
உங்க வீடு பூனைகளின் சரணாலயமா டீச்சர்?
வாங்க க.ஜூ.
நான்கூடத்தான் பூனைக்கு 'பிரியா' என்ற பெயரை முதல்முதலாக் கேள்விப்படறேன்:-)))))
//எலியும் பூனையுமா இருக்கறது சொல்வாங்களே அதே போல பூனையும் பூனையுமா இருக்காங்க ரெண்டுபேரும்//
:)! சரி, கப்பு படமும் இருக்கா?
ஆனையிலிருந்த பூனை வரை எல்லாமே நிஜமாவே உங்க செல்ல(செல்வ)ங்கள்தான்.
வாங்க ராமலக்ஷ்மி.
தமிழ்மணம் நட்சத்திர ப்ரொஃபைலில் கப்புதாங்க இருக்கான்:-)
Post a Comment