பத்மாவின் பதிவைப் பார்த்தவுடன் அவர்களுக்குப் பதிலாக எழுதியது நீண்டுவிட்டதால் தனிப் பதிவாகப் போடுகின்றேன்.
இந்த ஊருக்கு வந்த ஆறுமாதத்தில் என் மகளுக்கு அஞ்சு வயசானது. இங்கே அது பள்ளியில் கட்டாயம் சேர்க்க வேண்டிய வயசானதால்
பள்ளியில் சேர்த்தும் விட்டோம். அப்போது அங்கெ இவளைப் போலவே அஞ்சுவயதான தன் மூத்தமகளைச் சேர்க்க
வந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு அப்போதுதான் விவாகரத்து நடந்திருந்தது. என்னிடம் தன்
வாழ்க்கையைச் சொல்லி அழுவார். அப்போது தன் சிறியமகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குப் போக முயல்வதாகவும்,
பெரிய பெண்ணை மட்டும் பள்ளி முடிந்தபின் ( இங்கெல்லாம் பள்ளி பகல் 3 க்கே முடிந்துவிடும்) மாலை ஐந்தரைவரை யாராவது
பார்த்துக் கொண்டால் தனக்கு நல்லது என்றும் அதற்குண்டான பணத்தையும் தருவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.
யாரும் கிடைக்கவில்லை. அப்போது இங்கே இந்த 'ஆஃப்டர் ஸ்கூல் ப்ரோக்ராம்' ஒன்றும் அறிமுகமாக இல்லை. இது நடந்தது 1988-ல்.
பாவம் என்று நினைத்தும், நம் மகள் தனியாகத்தானே விளையாடவேண்டியுள்ளது, கூடவே இன்னொரு குழந்தையும்
விளையாடட்டும் என்றும் நினைத்து நானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னேன். ஆனால் காசு வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொன்னேன்.
எனக்கென்னவோ அடுத்தவரிடம் இருந்து காசு வாங்குவது கொஞ்சம் அருவருப்பாக இருந்தது.
தினமும் பகல் பள்ளி முடிந்தவுடன் என் மகளையும் அந்தப் பொண்ணையும் வீட்டுக்குக் கூட்டிவந்து, பால், பிஸ்கெட், கேக் என்று
தின்னக் கொடுத்துவிட்டு விளையாடச் சொல்வேன். அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்வேன். அந்தப் பெண்ணும் என் பெண்ணைவிட
நன்றாக கொடுத்ததையெல்லாம் சாப்பிட்டுவிட்டு, டாய்லெட் போய் விட்டு சமர்த்தாக இருக்கும். எல்லாம் அந்த அம்மாவின் கார் கேட்டில் வரும்
வரைதான். காரைப் பார்த்ததும் சத்தமாக 'ஓ'வென்று அழுதுகொண்டே, வாசல் கதவைத் திறந்துகொண்டு ஓடும். முதல் நாள் அழுகை சத்தம்
கேட்டவுடன் நான் பயந்துவிட்டேன். என் மகள் தான் அடித்துவிட்டாளோ என்றுகூட நினைத்துவிட்டேன். என் மகளும் என்னை போலவே
பிரமித்து நின்றிருந்தாள்.
மறுநாளும் இதே கதை. என் மகளிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, தெரியாது. திடீரென்று அழுகிறாள் என்று
சொன்னாள். கவனித்துப் பார்த்தால் என் மகள் முகத்திலும் பயம் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூன்றாவது நாளும் இதே. நான் கூடவே இருந்து
பார்த்துக் கொண்டே இருந்தேன். கார் சத்தம் கேட்டவுடன் அழுகை. இதனால் என் மகளுக்குச் சொல்லத்தெரியாத ஒரு வேதனை முகத்தில்.
சரி. இது லாயக்குப் படாது. என் குழந்தையின் மனத்தில் அநாவசியமாக துக்கம் ஏற்படவேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்துவிட்டேன்.
அந்தப் பெண்மணியிடம் விவரத்தைச் சொல்லி, இனிமேல் நான் பார்த்துக் கொள்ளமுடியாத நிலை என்று விளக்கினேன். அவர்களும் புரிந்து
கொண்டார்கள் போலிருக்கிறது. நல்லவேளை, நான் காசுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தால்...... அப்பப்பா இது தேவையா எனக்கு?
பாவம் அந்தக் குழந்தையும். தகப்பனைப் பிரிந்து இருப்பதால் வந்த மன அழுத்தமோ என்னவோ?
மருந்தும் விருந்தும் மட்டுமில்லை மூணுநாள்! இதுவும் கூடத்தான்!!!!
Monday, July 18, 2005
மருந்தும் விருந்தும் மூணுநாள்!
Posted by துளசி கோபால் at 7/18/2005 06:27:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த ஊருக்கு வந்த ஆறுமாதத்தில் என் மகளுக்கு அஞ்சு வயசானது.
எனக்குத்தான் இங்க வந்த எட்டு வருசத்துல 40 வருசம் போல தோணுதுன்னா அங்கயும் அப்படித்தானா!?
அந்தப் பெண்ணும் என் பெண்ணைவிட
நன்றாக கொடுத்ததையெல்லாம் சாப்பிட்டுவிட்டு, டாய்லெட் போய் விட்டு சமர்த்தாக இருக்கும்.
அக்கா கோவிச்சுக்காதீங்க...
(இதப் படிக்கறவங்களும்:)
போனது போகவேண்டிய இடத்திலா,
வெளியிலா?
வெளியில் என்றால் - சமத்து அல்ல.
உள்ளே என்றால் - அது நடக்கிறதுதானே... ஏன் இங்க சொல்லணும்!?
-----
ஒருவேளை நீண்ட பின்னூட்டமாகி தனிப்பதிவு போடுவதை தவிர்க்க இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்...
ஒரு கிவி ஜீஸ் ஃபீளீஸ்....
அய்யோ அன்பு, நான் சொல்ல நினைச்சது என்னன்னா, என் மகள்
பள்ளிக்கூடத்துலே 'போகவேண்டிய
அவசியம் இருந்தாலும் போகாம அடக்கிட்டு வர்ற டைப். அதே போல யாரு வீட்டுக்காவது 'விஸிட்' போனாலும் அவுங்க ரெஸ்ட் ரூமை உபயோகப்படுத்தாம வருவா. இப்பவும் அதே கதைதான். ஆனா அந்தப் பொண்ணு கூச்சம் பார்க்காம இயல்பா தன்னுடைய வீடு போல உரிமையா இருந்துச்சுன்னு சொல்ல வந்தேன். சரியா எழுதலே.
மாப்பு?
து. கோ அக்கா,
//என் மகள் தான் அடித்துவிட்டாளோ என்றுகூட நினைத்துவிட்டேன். என் மகளும் என்னை போலவே பிரமித்து நின்றிருந்தாள். //
வாய்க்கு ருசியா சாப்பிட்டுகிட்டு இருந்த பொண்னு, ஒரு வேளை நீங்க சமைத்த ஏதாச்சும் சாப்பிட்டு.. பாவம்.. :) சும்மா விளையாட்டுக்கு :)
// இந்த ஊருக்கு வந்த ஆறுமாதத்தில் என் மகளுக்கு அஞ்சு வயசானது //
வந்த 6 மாசத்துல 5 வயசாச்சா?? நம்ப முடியவில்லை வில்லை வில்லை.. :)
அந்த ஊர்ல, 1 நாளைக்கு 24 மணி நேரம் தானே??? :) :)
விளையாட்டுக்கு தான் கொஞ்சம் கடிச்சேன்.. தப்பா எடுத்துகாதீங்க..
அப்புறம், எப்பவாச்சும் அந்த பொண்னு ஏன் அழுததுனு விவரம் தெரிஞ்சா, ஒரு பதிவு போடுங்க.. மறக்காம
வீ எம்
வீ.எம்,
எப்பவாச்சும் என்ன? இப்பவே போடறேன். ஒண்ணும் இல்லை. அம்மாவை விட்டுட்டு
இவ்வளவு நேரம் ஆயிருச்சாம். அதுக்குத்தான் அழுவாச்சி.
Post a Comment