Tuesday, May 10, 2005

மாயா மாளவ.....

புத்தகமும் பழக்கமும்!!!! பகுதி 2

கதையிலே மனசு அப்படியே ஒன்றிப்போய் படிச்சுக்கிட்டே, தற்செயலாத் தலையைத்
திருப்பி ஜன்னல் வழியாப் பாக்கறேன். எதிரே ஓடற(!) காட்சிகளில் ஏதோ வித்தியாசம்
தெரியுது!


ஆஹா, இறங்க வேண்டிய ஸ்டேஷனைக் கோட்டை விட்டுட்டோம். அடுத்து வர்றதுலே
இறங்கிடணும்! அக்கம்பக்கத்துலே ரொம்ப மிதப்பா உக்காந்து வர்றவங்களுக்கு என் பதைபதைப்பைத்
தெரியாம மறைக்கறதுலேயே இப்ப என் கவனமெல்லாம் போயிருச்சு! குய்யோ முறையோன்னு
கத்த முடியுமா? முதல் வகுப்பாச்சே! ஆண்கள் எக்கச்சக்கமா இருக்காங்க. எப்பவுமே சில
பெண்கள்தான் இருப்போம்!

அது ஒண்ணுமில்லை, லேடீஸ் கம்பார்ட்மெண்ட்லே எப்பவும் ஒரே கூட்டம். இந்த வியாபாரிகளும்,
கொத்தவால்சாவடி ( அப்ப ஃபோர்ட் ஸ்டேஷன்லே இறங்கிப் போகணும்) போற வர்ற கூடைக்காரப்
பெண்களும், சாப்பாட்டுக்கூடை கொண்டு போற பெண்களுமா ஜகஜகன்னு இருக்கும். அதுலேயும்
தப்பித்தவறி யாராவது அவுங்க காலை, வண்டி ஆடற ஆட்டத்துலே மிதிச்சிட்டாங்கன்னா போச்சு!
சரமாரியான திட்டு. 'செருப்பு போட்டுட்டுவந்தது'க்கும் திட்டு! அப்பெல்லாம் நான் நினைச்சுக்குவேன்
'நல்லவேளை மனுஷனுக்கு வால் இல்லே. அப்படி இருந்திருந்தா வாலை மிதிச்சதுக்கும் சேர்த்துப்
பாட்டுக் கேக்கவேண்டியிருக்கும்'னு!!! கூட்டத்துலே நீந்தி வெளியே இறங்கிப் பார்த்தா, ஒருமணிநேரம்
பாத்துப் பாத்து ப்ளீட்ஸ் வச்சுக் கட்டின கஞ்சி போட்ட காட்டன் புடவை கேவலமாக் கசங்கிக் கிடக்கும்!
இதனாலேதான் கொஞ்சம் காசு கூடன்னாலும், பீடை ஒழிஞ்சது போன்னு இந்த ஃபர்ஸ்ட் க்ளாஸ் வாங்கிக்கறது!

வண்டி நின்னதும் ரொம்பக் கேஷுவலா, என்னமோ அதுதான் நான் இறங்கவேண்டிய இடம்ன்ற
பாவனையோட இறங்கி, எதிர்வரிசைக்குப் போனேன். சீஸன் டிக்கெட்டுதான், ஆனாலும் இந்த ஸ்டேஷன்
வரைக்கும் இல்லை! மூணு ஸ்டேஷனை தாண்டியிருக்கேன்! மனசு 'திக்திக்'னு அடிச்சுக்குது. இப்ப நினைச்சுப் பாத்தா,
போய் ஒரு சிங்கிள் டிக்கெட் வாங்கியிருக்கலாம் இல்லே? அப்பத் தோணலையே!!!

படிச்சுக்கிட்டு இருந்தது 'ஜாவர் சீதாராமன் எழுதுன மின்னல்,மழை, மோஹினி' மல்லிகைபூ வாசமும், பேயை
ஓட்டப் பூண்டு எடுத்து வச்சிக்கறதுமா இருந்த கதை! ஆ.வி, குமுதம், கல்கி, கலைமகள் எப்பவாவது மஞ்சரி
இந்த ரேஞ்சுலதான் வாசிப்பு இருந்துச்சு! அப்ப வேற தமிழ்ப் பத்திரிக்கைகள் வந்ததா நினைவில்லே.ஆங்...
கல்கண்டுன்னு ஒண்ணு வந்துக்கிட்டிருந்தது!

சினிமாவுக்குன்னுத் தனியா சிலது வந்துக்கிட்டு இருந்தது. இப்பப் பாருங்க, எல்லா தமிழ் வாரப் பத்திரிக்கைகளும்
சினிமாச் செய்திக்கு நடுவிலே கொஞ்சூஊஊஊஊண்டு கதைகள் போடுது! இதுலே அரசியல் செய்திகள் வேற!

அந்தக் காலக்கட்டத்துலேதான் மவுண்ட் ரோடுலே ஒரு லைப்ரரி ஆரம்பிச்சாங்க, (இல்லே ஏற்கெனவே ஆரம்பிச்சிருந்தாங்களா?)
அப்ப யாரோ ஒருத்தர், 'அதுலே மெம்பரா சேர்ந்துக்கறதுக்கு, கார்டுக்கு 10 ரூபாய்'ன்னு சொன்னார். அந்தக் கார்டுலே ஒரு
புத்தகம் எடுத்துக்கலாம்! நானு ரெண்டு கார்டு வாங்கிகிட்டேன்.

புத்தகம் எடுக்கறதுக்கு அங்கே போனா, அதுவே ஒரு அனுபவமா ஆயிரும்! சரியான வெளிச்சமே இருக்காது. தூசும்
தும்புமா அழுக்கா இருக்கும். இந்த அழகுலே சிலபேரு உக்காந்தவாக்குலேயே தூங்கிக்கிட்டு இருப்பாங்க! 'சைலன்ஸ்
ப்ளீஸ்'ன்னு போட்டுருக்கற போர்டு கூட அவுங்களுக்காகத்தான் இருக்கும்! சத்தமாப் பேசுனா எழுந்துக்குவாங்கல்லே!
தூங்கறவங்களை எழுப்பறது பாவமாச்சே!

அபிமான எழுத்தாளர்ன்னு யாருமில்லை. அப்படியே பாத்து எடுக்கறதுதான். ஆனா, 'சாண்டில்யன்' பிடிக்காது! பத்து
பக்கத்துக்கு வர்ணனை நாலுவரிக் கதைன்னு நகர்றதுக்குப் பொறுமை கிடையாது! மாலைச் சூரியன் வானத்தை
மஞ்சளடிக்கறதை எத்தனைதடவைதான் படிக்கறது? ஆனா, இதையே நேர்லே எத்தனைமுறை வேணுமுன்னாலும்
பாக்கலாம்ன்றது வேற விஷயம்!

பெருசா இலக்கிய ஆர்வமெல்லாம் கிடையாது. ஜஸ்ட் கதை படிக்கணும். அவ்வளவுதான்!

ஆச்சு கல்யாணம்! விசாகப்பட்டினத்துலே ஜாகை! 'ஐய்யோ, இனிமே படிக்கப் புஸ்தகம் கிடைக்காதே'ன்றதுதான்
மனசுலே தோணுச்சு! வீட்டுலே தெலுங்கு பேசறதாலே சமாளிச்சுக்கலாம். ஆனா தெலுங்கு படிக்க வராதே! அந்த
எழுத்துங்கெல்லாம் 'ஜாங்கிரி ஜாங்கிரி'யா இருக்கறதா அண்ணன் சொல்வாரு! பாட்டிக்காகத் தெலுங்குப்படம்
பார்க்கப் போவோம். அப்ப மவுண்ட்ரோடுலே சத்தியம் தியேட்டருலேதான், (சுந்தரம்?) எப்பவாவது போய்ப்பாக்கறது.
படத்தோட 'டைட்டில்' போட்டவுடனே அண்ணன் அடிக்கற கமெண்ட்தான் இது!

நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, மணின்ற ரூபத்துலே வந்தது! எங்க இவர் வேலை செய்யற இடத்துலே இருக்கற
'லீஷர் க்ளப்'க்கு எல்லா மொழிப் பத்திரிக்கைகளும் வாங்குவாங்களாம். அதுங்களை வாங்கற பொறுப்பு நம்ம
மணியோடது! இவர் அங்கே கடைநிலை ஊழியர். தமிழ்ப் பேசத்தெரிந்த, தமிழ்ப் படிக்கத்தெரியாத மூணாந்தலைமுறைத்
தமிழர்! தமிழனுக்குத் தமிழன் உதவி செய்யதாவலை? அந்த உதவியை இப்ப எங்களுக்குச் செஞ்சுக்கிட்டு இருந்தார்!

வாரம் ஒரு நாள் சாயந்திரமாக் கடைவீதிக்குப் போய் ஏற்கெனவே சொல்லிவச்சிருக்கற பத்திரிக்கைகளை ஏஜண்ட்
கிட்டே இருந்து வாங்கிட்டு வந்துருவாராம். மறுநாள் காலையிலே அதை ஆஃபீஸ்க்குக் கொண்டுபோய் சேர்த்துடுவாராம்.
ராத்திரி முழுசும் அவுங்க வீட்டுலே ச்சும்மாத்தானே கிடக்கு. அதையெல்லாம் அங்கே வச்சுக்கறதுக்குப் பதிலா
நம்ம வீட்டுலே வச்சுக்கலாமுன்னு ஐடியாக் கொடுத்தேன்! தமிழனுக்குத் தமிழன் உதவி செய்யதாவலை? சரின்னுட்டார்.

புதன்கிழமைன்னு நினைவு. ஏதோ எக்ஸாமுக்குப் படிக்கறமாதிரி, நாங்க வேகவேகமாப் படிச்சுக்கிட்டு இருப்போம்.
நானு, இவர், இவரோடு வேலை செய்யற இன்னொரு தமிழ்க்காரர். எங்ககூடத்தான் தங்கியிருந்தார். அவரும் இவரும்
இன்டர்வ்யூக்கு ஒண்ணா வந்தாங்களாம். ஒரே நாளுலே வேலையிலே சேர்ந்து, வீடு வேட்டை நடத்தி இந்த வீட்டைப்
பிடிச்சாங்களாம். மொதல்லே தொடர்கதைங்க, எல்லாப் புத்தகத்துலேயும் !!! இதை முடிச்ச பிறகு மத்த பகுதிகள்
சிறுகதை, ஜோக்ஸ்ன்னு படிப்படியா. மாத்தி மாத்திப் படிச்சு முடிக்க சில நாளு பன்னெண்டு, ஒண்ணு ஆயிரும்.
'பட் ஹூ கேர்ஸ்?'

ஒரே ஒரு கண்டிஷன்தான், புத்தகங்களைக் கசக்காமப் புது மெருகு குலையாமப் படிக்கணும்! கிளப்புலே இருந்து
நமக்கும் ஒரு நாளைக்கு வீட்டுக்குக் கொண்டுவருவார்தான். ஆனா, ச்சுடச்சுடப் படிக்கறதுக்கு ஈடாகுமா?


6 comments:

said...

துளசி,

அது உடல், பொருள், ஆவி! ஜாவர் சீதாராமன் எழுதியது. எங்க வீட்டுல எங்க வீட்டுல அம்மா பைண்ட் செஞ்சி வெச்சிருந்தாங்க.எனக்கு கூட சாண்டியல் கதைகள் பிடிக்காது. கடல் புறாவும், மஞ்ச்ள் நிலா மட்டும் படிச்சதாய் ஞாபகம்
உஷா
*********************************
நல்லவேளை. நான் தப்பான பேரை எழுதிட்டேன்!!!

நன்றி உஷா

said...

"உடல், பொருள், ஆவி, ஆனந்தி" என்பது முழுப்பெயர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

"டோண்டு சார், அது உடல், பொருள், ஆனந்தி அது."
உண்மை. அதைத் திருத்தத்தான் ஓடி வந்தேன். அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டீர்கள். அது இருக்கட்டும், பணம் பெண் பாசம் படித்திருக்கிறீர்களா? சினிமா சொதப்பல், சின்னத்திரை ச்சிரியல் நன்றாக இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ராகவன்
நான் இரண்டும் படித்திருக்கிறேன்.பழைய நினைவுகள்

said...

மின்னல் மழை மோகினியும்,
புரபஸர் மித்ரா என்று ஒரு சைக்கோலோஜி கதை .... குமுதம் அப்ப நல்லாவே இருந்தது?
'அபாய நோயாளி' ஞாபகம் வருதா ...?
கல்க்கண்டில் தமிழ்வாணனின் பேய் பேய்தான் -உம் ......
அருள்

said...

பத்மா & அருள்

நன்றி!!!!!