ஜனங்க வாழ்வுலே இந்த 'சினிமா'ன்றது எவ்வளவு தூரம் கலந்துருச்சுன்னு நினைக்கறப்ப ஒரே ஆச்சரியமா இருக்கு.
இனிமே சினிமாவையும், மனுஷங்களையும் பிரிச்சே பார்க்க முடியாது போல. போதாக்'குரை'க்குப் பொன்னி வந்தாளாம்னு
சொல்றதுபோல, இப்பப் புதுசா என்னவொ சொல்றாங்க நாய், பூனைங்கெல்லாம் டி.வி. போட்டாப் பாக்குதாம்!!!!!
இதைப் பத்திக் கொஞ்சநேரம் யோசிச்சப்ப இது நிஜமோன்னு ஒரு 'டவுட்டு' வருது! நம்ம வீட்டுலே தமிழ்ப் படம்
பாக்கறப்ப 'க்ரூப் டான்ஸ்' வர்றபோது, நம்ம பூனை டி.வி.யை முறைச்சுப் பார்க்கும்! கூட்டமா ஆளுங்க கலர்கலரா
ஆடறதும், டக்டக்குன்னு காட்சி மாறரதும்கண்ணை இழுக்குதோ? ஒண்ணும் புரியலையேப்பா!!!!
இந்தப் பதிவுலே போட்டிருக்கரது, நான் முதல்முதலா எழுதுனது.( நம்ம தமிழ்ச் சங்க மலருங்களிலே ஏற்கெனவே எழுதுனதை
எல்லாம் கணக்குலே சேத்துக்கலே!) மரத்தடி மக்கள் இதைப் படிச்சிருப்பாங்க. இது ஏற்கெனவே 'படிக்காத' வங்களுக்காக
( இதைத்தான் பொதுமக்களின் வேண்டுகோளை முன்னிட்டு.....னு சொல்றதோ)
என்னுடைய மலரும் நினைவுகளிலே 'வத்தலகுண்டு'ன்ற ஊர் பதிஞ்சு போனதாலே 'கதைக் களன்' அநேகமா அதைச்
சுத்திதான் இருக்கும். அதையே 'வத்தலகுண்டு விஷயங்கள்'ன்னு ஒண்ணொண்ணா எடுத்து இங்கெ போடலாமுன்னு
இருக்கேன். ( இதுவும் பொ.வே.மு)
********************************************************************
மக்களே,
இப்படி தியேட்டரைப் பத்தி எழுதினத படிச்சு, எனக்கு மறந்திருந்தது எல்லாம் ஞாபகம் வந்திருச்சு.
' ஹா, நான் எங்கே இருக்கேன்? நீங்கெல்லாம் யாரு?'
" நாங்க சினிமாவுக்குப் போறோம்."
நினைவுலே முதல்ல வருது, 'வத்தலகுண்டு'ல் இருந்த(?) சந்திரா டாக்கீஸ். ஓனர் இஸ்லாமியர்.
இராவுத்தர் குடும்பம். எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.
சாயந்திரம் முதல்பாட்டு 'வாராய், நீ வாராய்' போட்டவுடனே சினிமாவுக்குப் போற திட்டம் இருக்கற
நாளா இருந்தா, ஒரு வேகம் வரும் பாருங்க, என்னுடைய 'டீன் ஏஜ்'( கல்யாணத்துக்குப் பாத்துகிட்டிருந்தாங்க)
அக்காங்களுக்கு !
சினிமாத் திட்டத்தை முதல் நாளே அம்மா சொல்லிடுவாங்க. அப்பத்தான், மறுநாள் பொழுது விடிஞ்சதிலிருந்து
என்ன உடுத்தறது,சுலபமான, ராத்ரி சமையல் (சினிமா விட்டுவந்து, நான் தூங்கிகிட்டே சாப்பிடுறதுக்கு)
எது தோதுப்படும் அப்படி, இப்படின்னு பல விதமான ஆலோசனைகள் நடக்கும்.
ஒரு மூணு, மூணரை மணி ஆச்சுன்னா, போச்சு. பூக்களை, வேகம் வேகமா பறிக்கறதும், கட்டறதும்,
சலவையிலிருந்து வந்திருக்கும் புடவைகளில், கஞ்சி போட்ட நல்ல மொற மொறப்பான சேலைகளையும்,
அதுக்கு 'மேச்சிங் ப்ளவுஸ்' தேடறதும் நடக்கும். அதுக்குள்ளே, நான் ஸ்கூல்ல இருந்து வந்துருவேன்.
முதலில், என்னை ரெடி பண்ணிடுவாங்க. நான் ரொம்ப தொல்லையாம். கவுனை அழுக்குப் பண்ணாம
இருக்கணும்னு உத்தரவு வேற. சரின்னு உக்காந்திருப்பேன். அப்பல்லாம் டி.வி.வரலை. நீங்கல்லாம்
பிறந்துகூட இருக்கமாட்டீங்க.
ரெண்டு அக்காங்களும் ட்ரெஸ் மாத்தப் போவாங்க. அவ்வளவுதான்.டெய்லர், சரியான அளவுலே 'ப்ளவுஸ்'
தைக்காததும், புடவைக்குக் கஞ்சி சரியாகப் போடாததும், அப்படிப் போட்டிருந்தாலும், சரியாக 'இஸ்திரி'
போடாததும் கண்டுபிடிக்கப்படும். பீரோவுலே, இருக்கற அத்தனை புடவைகளும் வெளியே வந்துவிழும்.
அது சரியில்லே, இது சரியில்லே...அப்பாடா...ஒருவழியா புடவை மாத்தியாச்சுன்னா, அடுத்து இருக்கு
இன்னொரு கண்டம். பவுடர் பூசி, பொட்டு வைக்கிறது. பவுடர் O.K. பொட்டுதான் தகராறு. இப்ப மாதிரி
ஸ்டிக்கர் பொட்டு அப்ப கிடையாது. தரம் நல்லா இருக்காதுன்னு குப்பில வர்ற சாந்து வாங்கறது இல்ல.
வீட்டிலேயே கரும் சாந்து செய்து, ஒரு கிண்ணத்திலே இருக்கும். நல்லா காஞ்சு, கெட்டியா இருக்கும்.
அதுலே, இரண்டுதுளி தண்ணீர்விட்டு, குழைக்கணும்.( இப்ப அதுமாதிரி எங்கேயாவது செய்றாங்களான்னு
தெரியாது) நாசுக்காய் குழைக்க முடியாது. அதை ஒரு விளக்குமாத்துக்குச்சிலே எடுத்து, திலகமா வைச்சுக்
கணும். அண்ணைக்கின்னுப் பாத்து,கோண கோணயா வரும்.அதை அழிக்கறதுக்காக, இன்னொரு தடவை
முகம் கழுவி, பவுடர், பொட்டு இத்தியாதி. திரும்ப கோணப் பொட்டு, திரும்ப முகம் கழுவல்....
இப்படியே 3 அல்லது 4 தடவ ஆகும்.
இப்ப அம்மா ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் முடிச்சு வருவாங்க. நமக்கு எப்பவும் ஹாஸ்பிடல் காம்பெளண்ட்-லதான்
வீடு இருக்கும். எவ்வளவு நேரம்தான் நான் சும்மா உக்காந்திருக்க முடியும்? கொஞ்ச நேரம் விளையாடலாம்னு
தெருவுக்குப் போயிருப்பேன். அம்மாவப் பாத்தவுடன் ஓடி வருவேன். அம்மா உள்ளேபோய், அக்காங்களைக்
கேப்பாங்க," துளசிக்கு ஒரு நல்ல கவுனாப் போட்டு, தலைசீவி விடக்கூடாதா? " அவ்வளவுதான். எனக்கு மண்டகப்படி
ஆரம்பிக்கும்.
இதுக்குள்ளே, நல்லா இருட்டிடும். 'வாராயோ வெண்ணிலாவே'ன்னு ஒரு பாட்டுக் கேக்கும். படம் போடப்
போறான். சீக்கிரம் நடங்கன்னு சொல்லி, எல்லோரும் ஓட்டமும், நடையுமா ( அப்ப ஏது ஆட்டோவும்
டாக்ஸியும் ? அதுவும் வத்தலகுண்டுலே ?)போய் சேரும்போது, வழக்கம்போல படம் ஆரம்பிச்சு, ஒரு
20 நிமிஷமாவது ஆகியிருக்கும்.வேர்வை வழிஞ்சு பொட்டெல்லாம் கரைய ஆரம்பிச்சிருக்கும்.
இதுலே எங்களுக்குன்னு தனியா பெஞ்சுங்களுக்குப் பின்னாலே 'சேர்'போட்டு வச்சிருப்பாங்க
தியேட்டருலே.
படம் முடியற வரைக்கும், அக்காங்களுக்கு, மனசு 'திக் திக்'னு இருக்கும். ஏன்னா, ஆசுபத்திரியிலே
அர்ஜெண்டா கேஸ், கத்திகுத்து, ஆக்ஸிடெண்ட்னு வந்திடுச்சுன்னு வச்சிக்குங்க. உடனே தியேட்டருக்கு
ஆளு வந்துரும் டாக்டரைத்தேடி. உடனே எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு வந்துடணும். கால்வாசி, அரைவாசின்னு
நிறைய படம் பாத்திருக்கோம். சொல்ல மறந்துட்டனே, இடைவேளையிலே, நான் போய் பாட்டுப் புஸ்தகம்
வேற வாங்கிட்டு வரணும்.10 காசுன்னு ஞாபகம்.
அப்பா, வேலைகாரணம் வேறு ஊரில் இருந்தார். தனியாக ஒரு பெண்பிள்ளை (அம்மாதான்) வளர்ப்பு
என்பதால், ஏதாவது பேச்சு வந்துவிடுமோன்னு,கவனமா இருப்பாங்க எப்போதும்.
படத்துக்குப் போய்வந்த மறுநாள்தான் அக்காங்களுக்கு நிறைய வேலை இருக்கும். வெளியே வாரிப்
போட்ட துணிங்களையெல்லாம், மடிச்சு, பீரோவுலே அடுக்கவேண்டாமா?
நன்றி: மரத்தடி
23 ஜூன் 2004
************************************************************************
Friday, May 06, 2005
முதல் எழுத்து!!!!!!
Posted by துளசி கோபால் at 5/06/2005 01:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//வீட்டிலேயே கரும் சாந்து செய்து, ஒரு கிண்ணத்திலே இருக்கும். நல்லா காஞ்சு, கெட்டியா இருக்கும்.
அதுலே, இரண்டுதுளி தண்ணீர்விட்டு, குழைக்கணும்.( இப்ப அதுமாதிரி எங்கேயாவது செய்றாங்களான்னு
தெரியாது)//
குழந்தைகளுக்குப் பொட்டு வைக்கத்தான் இப்ப அதிகமா பயன்படும்..அதுவும் ஊரிலே! அல்லது விஷயம் தெரிஞ்ச அம்மா/மாமி/உறவினப் பெண் வீட்டில் இருந்தால் மட்டும்!
அட! உங்க எழுத்தை படிக்காமல், நகைச்சுவையுடன் பெண்கள் எழுதப் பதிவு போட்டுட்டனே!. தொடர்ந்து இப்படியே எழுதுங்கள்!. என்ன மேடம் சுத்தி, சுத்தி பக்கமா வர்றிங்க., எங்க அக்கா ஒருத்தங்க பெரியகுளத்தில இருக்காங்க!. பெரியகுளம், வத்தலக்குண்டு, தாண்டிக்குடிமலை வரை ஆட்டம் போட்ட ஞாபகம். கீழ இறங்கினா அப்பா ஊர் திண்டுக்கல்.
அன்புடன்.
மரம்
நீங்கள் சொல்லுற மாதிரிப் பொட்டு வைக்கிறபழக்கம் இப்பவும் எங்கட இடத்தில இருக்கு. சவ்வரிசியில செய்யிறதெண்டு நினைக்கிறன். எங்கட இடத்தில தேங்காய்ச்சிரட்டைக்க தான் காய்ச்சி ஊத்திறது. நெத்தியிலயும் வலக்கன்னத்திலயும் பெரிய வட்டமா, கறுப்பா, பொட்டு வச்சுக்கொண்டிருக்கிற குழந்தைப்படங்கள் இல்லாத வீடுகள் இல்ல. அந்தப் பெரிய பொட்டோட குழந்தைகளுக்கு தனியா அழகு வந்திடும்.
குட்டிக் குழந்தைகளுக்கு சாந்து பொட்டு வைக்கும்போது நாக்கை கீழ் வரிசைப் பற்களுக்கும் உதட்டின் உட்பகுத்திக்கும் நடுவில் வைத்து அழுத்தி "கொள கொள" என்னும் சத்தம் செய்வார்கள். அப்போதுதான் குழந்தைகள் அசையாமல் நெற்றியைக் காண்பிக்கும் என்பது ஐதீகம். நான் அவ்வாறு செய்து ஒரு குழந்தைக்கு (சமீபத்தில் 1954 - ல்) பொட்டிட முனைந்த போது குழந்தை பயந்து போய் வீல் வீல் என்று கத்த, என் அம்மா "அந்தண்டைப் போடா கடங்காரா" என்று என்னை அங்கிருந்து விரட்டினார்.
என் சித்தப்பா பெண் சினிமாவுக்கு டிக்கட் கிடைக்கவில்லையென்றால் தியேட்டரிலேயே அழ ஆரம்பித்து விடுவாள். அவள் 20 வயதிலும் அந்த வழக்கத்தை விடவில்லை. அதே போல தியேட்டரில் "வருகவிலிருந்து வணக்கம்" வரை முழு படத்தையும் பார்க்க வேண்டும் அவளுக்கு.
இப்போதெல்லாம் எல்லாமே டி.வியில் பார்க்கும் போது அந்த மேஜிக்கெல்லாம் ஒரேயடியாகத் தொலைந்து போயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்ப வத்தலக்குண்டு சந்திரா டாக்கீஸை ஏன் இழுக்கிறீங்க? வத்தலக்குண்டுக்கு ஒருவாட்டி டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துருவேன் ஆமா...
ஷ்ரேயா,
//விஷயம் தெரிஞ்ச அம்மா/மாமி/உறவினப் பெண் வீட்டில் இருந்தால் மட்டும்!//
இப்ப ஜனங்க யாருமெ இதையெல்லாம் செய்யறதே இல்லையாமே!!!
வசந்தன்,
//பெரிய வட்டமா, கறுப்பா, பொட்டு வச்சுக்கொண்டிருக்கிற குழந்தைப்படங்கள்
இல்லாத வீடுகள் இல்ல. அந்தப் பெரிய பொட்டோட குழந்தைகளுக்கு தனியா
அழகு வந்திடும்.//
இது என்னவோ சத்தியமான உண்மை!!!! எங்க வீட்டுலேயும் நிறைய இருக்கு!!!
மரம்!
அப்படிப்போடு அருவாளைன்னானாம்!!!
//அப்பா ஊர் திண்டுக்கல்.//
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுலே அந்தக் காலத்துலே
மாணிக்கவாசகர் கஃபே ன்னு ஒண்ணு இருந்துச்சு. அங்கே மெதுவடை அட்டகாசமா
இருக்குமே!!!!!
டோண்டு,
//குழந்தை பயந்து போய் வீல் வீல் என்று கத்த, //
இந்த குழந்தைங்க அழற விதத்தை ஏன் நாம் எப்பவும் 'வீல்வீல்' சொல்றோம்?
இப்படித்தான் நான் என் பொண்ணுகிட்டே, ஒரு குழந்தை அழறதப் பத்திச் சொன்னப்ப
அவ கேட்டா, "ஏன் டயர் டயர்/ன்னு அழாதா?'
முதல்லே எனக்குப் புரியலை. அப்புறம்தான் அதை நினைச்சுச் சிரிச்சேன்:-)
விஜய்,
அப்படியே எனக்கும் ஒரு டிக்கெட் எடுத்துருங்க. நானும் வரேன். ஹூம்..
இப்ப எப்படி இருக்கோ நம்ம 'வத்தலகுண்டு'!!!!!
பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களே!
நன்றி நன்றி
என்றும் அன்புடன்,
துளசி.
துளசி, ஒரு பழைய ராஜேஷ் குமாரின் நாவலில் இவ்வரி வரும். "பிணத்தைப் பார்த்த பெண்கள் 'சக்கரம்' என்று ஆங்கிலத்தில் கத்தினர்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
1997 -ல் என் இரண்டாவது மகள் பிறந்தப்ப என் அம்மாவை அந்த கருப்பு சாநது பண்ணி
குடுக்கறி யாம்மான்னு தெரியாத்தனமா கேட்டுட்டேன் . ஒடம்பு முடியாத அம்மா செய்ய ஆரம்பிச்சாங்க பாருங்க ...
ஜவ்வரிசிய கடாய்ல போட்டு கருக்க வருத்த்த்த்த்த்த்க்கிட்டேஏ ஏ ஏஏ ஏ .... இருக்காங்க சாநது colour and consistency வர ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நேரம் ஆச்சு . என்ன புள்ள பெத்தவனு கிட்ட விட மாட்றாங்க பாவம் என் அக்காவும் அம்மாவும் மாத்தி மாத்தி வேர்த்து ஊத்த செஞ்சு குடுத்தாங்க .
அவ்ளோ அழகு அந்த பொட்ட வெச்சா ... போட்டோ பாக்கறப்பலாம் என் அம்மா கஷ்ட்டப்பட்டது ஞாபகம் வரும் .
Post a Comment