சாப்பாட்டுத்தட்டை ஒருகையிலும் ஏதாவது ஒரு புத்தகத்தை ஒருகையிலுமாத்தான் டைனிங் ஹாலுக்குப் போற
பழக்கம். எதுக்கா? தொட்டுக்கத்தான்!!!!இது ஒரு வழக்கமா மாறுனதே எங்க ஹாஸ்டல் சாப்பாட்டு 'ருசி'யாலேதான்!
இதுவரை படிக்காத புத்தகமா இருந்தா விசேஷம். ஏற்கெனவே படிச்சதுதான் கையிலே இருக்கா? பரவாயில்லை,
இப்ப என்ன பாழாப் போச்சு! நேத்து ரசம் ஊத்திச் சாப்பிட்டாலும், இன்னைக்கும் ரசம் ஊத்திக்கறதில்லையா?
சாப்பாட்டோட ருசி நாக்குக்கு(மனசுக்குத்) தெரியக்கூடாது. ஆனாலும் சாப்பிட்டே
ஆகணும்( எல்லாம் உயிர் வாழத்தான்!)
இந்தப் பழக்கம் அப்படியே வாழ்க்கையிலே தொத்திக்கிச்சு! வீட்டுலேயும் சில நாளு இப்படித்தான்! ஆனா
பாட்டி இருக்கறப்ப 'மூச்!'
'கோட்டி வித்தலு கூட்டுக்குறக்கு'ன்னு சொல்வாங்க. தெலுங்குங்க!!! அதாவது மனுஷன் எத்தனையோ
சாகசங்கள் செய்து சம்பாரிக்கறது எல்லாம் சாப்பிடத்தானாம்!!!! அன்னம் லட்சுமியாம்! அதான் அன்னலட்சுமின்னு
பேருகூட இருக்கே!!! சாப்பாட்டுக்கு மரியாதை செய்யணுமாம்! அதான் பழைய காலங்களிலே ராஜாக்கள் கூட,
சாப்பாட்டை ஒரு ச்சின்ன பீடத்துமேலே வச்சு, அவுங்களும் மணையிலே உக்காந்து சாப்புடறது.
இதெல்லாம் எனக்கெப்படித் தெரிஞ்சுதா? ஏன்? நீங்க அம்புலி மாமா வெல்லாம் படிச்சதில்லையா? அதுலேகூட
எனக்குக் கதைங்களைவிட அதுலே போட்டுருக்கற படங்கள் ரொம்பப் பிடிக்கும்.
நல்ல அழகான தூணுங்க, விசாலமான கூடம், வெளிப்புறம் ரெண்டுபக்கமும் திண்ணைங்க வச்சுக் கட்டின வீடுங்க,
வரிசை வரிசையா அடுக்குன ஓட்டுக் கூரைன்னு பலதையும் சொல்லிக்கிட்டே போகலாம்!!!
பாட்டிகிட்டே இன்னோரு விஷயம். ' நீ சோத்தைப் போடு. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்'ன்னு இப்பெல்லாம்
சாதாரணமாச் சொல்றமே, அது நடக்காது! நாம போய் தட்டு முன்னாலே உக்காந்தபிறகுதான் பரிமாறுவாங்க.
அன்னம் நமக்காகக் காத்திருக்கக்கூடாதாம்! நாமதான் அதுக்காகக் காத்திருந்து, உரிய மரியாதை செஞ்சு
சாப்பிடணுமாம்! இப்ப வயசான பிறகு நினைச்சுப் பாக்கறப்பத்தான் இது எவ்வளவு நியாயமான விஷயம்னு
புரியுது!
இங்கே கடைகளிலே 'ஃபுட் ஆன் த ரன்' போர்டைப் பாக்கறப்பெல்லாம் பாட்டி ஞாபகம்தான்! இப்படி ஓடிக்கிட்டே
சாப்பிடறதைப் பாட்டி பார்க்கணும்! அவ்வளொதான், தொலைஞ்சேன் !!!!
திங்கறதுக்கு மட்டுமில்லே, தூங்கறதுக்கும் புத்தகம் வேணும்:-)
பெரியக்காவுக்கு கதைப் புத்தகமுன்னா உயிரு! அவுங்க வீட்டுக்காரர் ஆசிரியரா இருந்தாரா, அவர் ஸ்கூல் லைப்ரரியிலே
இருந்து புத்தகங்களாக் கொண்டுவந்து போடுவாரு. அப்ப அவுங்க இருந்த வீட்டுக்கு மின்சாரம் வரலை. அதனாலே
மண்ணெண்ணெய் விளக்குதான்!
இந்த மண்ணெண்ணெய் விளக்கு வச்சிருக்கற வீடுங்களிலே நித்தியப்படிக்கு ஒரு சாங்கியம் இருக்கு! சாயந்திரம்,
பட்டாட்டம் இருக்கற அடுப்புச் சாம்பலை எடுத்து, எல்லாக் கண்ணாடிச் சிம்னியையும் தேய்க்கணும். அப்புறம் ஒரு
மிருதுவான துணி( எல்லாம் கிழிஞ்ச சீலைத்துணிதான்) வச்சு, கண்ணாடி உடையாம அழுத்தமாத் துடைக்கணும்.
அப்புறம் கண்ணுக்கு நேரா வச்சுப் பார்த்தா, கரி, தூசி இல்லாம பளபளப்பா இருக்கணும்! இதுவரைக்கும் சரி.
அடுத்ததுதான் ஒரு கண்டம்! விளக்கை ஒரு ஆட்டு ஆட்டிப்பாத்து, மண்ணெண்ணெய் அளவு தெரிஞ்சுக்கிட்டு,
போதலைன்னா பாட்டில்லே இருக்கறதை விளக்குலே ஊத்தணும்! அதுவும் பொட்டுக் கீழெ சிந்தாம! என்னதான்
கவனமா ஊத்துனாலும், கொஞ்சம் கீழே சிந்திரும்தான். அதுக்குத்தான் ஒரு வரட்டியை கீழே வச்சுக்கறது!
அக்கா வீட்டுக்கு விஸிட் போறப்ப இது என்னோட 'ட்யூட்டி'தான்! துன்பத்துலேயும் ஒரு இன்பம்ன்றது போல
அவுங்க வீட்டுலே தரையும் சாணி போட்டு மெழுகுன மண் தரைதான். அதனாலெ கீழே ஊத்துன மண்ணெண்ணெயை
மறைக்கறது சுலபம். 'டக்'குனு தரையிலே இஞ்சிரும். துளி சாணி எடுத்து அதும்மேலே 'எச்சில் இடறது போல'
பூசிடுவேன்! பாத்தா வித்தியாசமெ தெரியாது. ஆனாலும், அக்கா கண்டுபிடிச்சுடுவாங்க, 'எமகாதகி'க்கு மூக்கு நீளம்!
ஒரு நாள், இப்படித்தான் தலை மாட்டுலே ச்சின்ன ச்சிம்னி விளக்கை வச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டே படிச்சிருக்காங்க.
வழக்கமா வச்சுக்கற 'அரிக்கேன் விளக்கு' அன்னைக்கு இல்லை. எல்லாம் நேரம்!!! அப்படியெ கொஞ்சம் கண்ணமந்து
போயிருக்கு போல. புத்தகம் விளக்கு மேலெ விழுந்து பத்திக்கிச்சு! எல்லாம் ஒரு ரெண்டு நொடிதான்னு அக்கா
அடிச்சுச் சொல்லியும் மாமா அதை நம்பத்தயாரா இல்லே! புத்தகம் ஒரு சைடுலே கரிஞ்சு போச்சு!
பாவம் அக்கா! அதோடு போச்சு, லைப்ரரியிலே இருந்து புத்தகம் வர்றது! ஆனாலும் பொட்டலம் கட்டிவர்ற காகிதங்களைக்
கூட விடாமப் படிப்பாங்க. கொஞ்சம் பெரிய காகிதமுன்னா அதை எடுத்துக் கூரையிலே சொருகிவச்சுட்டு, அதையெ
'தூங்கறதுக்கும்' வச்சுக்குவாங்க! ஏழு புள்ளைகுட்டிங்களோட நாள் பூராவும் வேலை வேலைன்னு செத்துக்கிட்டு
இருந்தாலும் இந்தப் படிக்கற பழக்கம் மட்டும் போகவேயில்லை!
அக்காங்களுக்குக் கல்யாணம் ஆவறதுக்கு முன்னாலே, 'எங்க வீட்டுலே' ஆனந்த விகடனும், கல்கியும் வாங்குவாங்க.
'குமுதம்' வாங்க மாட்டாங்க. அது ஏதோ 'அடல்ட்ஸ் ஒன்லி ரேஞ்சு'லே இருக்குதுன்னு ஒரு எண்ணம்!
பேப்பர் பையன் கொண்டுவந்து போட்டவுடனே, நான் படிக்க(!) எடுத்துக்குவேன். எழுத்துக்கூட்டி 'ஜோக்'கையெல்லாம்
படிச்சு முடிக்கவே நேரமாயிரும். அக்காங்க கெஞ்சுவாங்க, 'தொடர்கதை' மட்டும் படிச்சுட்டுக் கொடுத்துடறேன்னு!
நான் இதுக்கெல்லாம் மசியுற ஆளா? ஒண்ணுவிடாமப் படமெல்லாம் பார்த்துட்டுத்தான் தருவேன்!
மூணாவது வீட்டுலே ஒரு அக்கா இருந்தாங்க. அவுங்களுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருந்துச்சு. மாப்பிள்ளை
சொந்தத்துலேதான். அவரு மதுரையிலே இருந்து வர்றப்பெல்லாம் 'பேசும் படம்'ன்னு ஒண்ணு வாங்கிக்கிட்டு
வருவார். அதுலே சினிமா நடிகைகள் 'ஆடையும் அலங்காரமும்' ( அப்படின்னுதான் நினைவு)ன்னு விதவிதமான
புடவை, நகை நட்டு, ஹேர்ஸ்டைல்னு நல்ல வழவழப்பான காகிதத்துலே ஃபோட்டோஸ் வரும். நாந்தான் அதை
அங்கிருந்து 'கடன்' வாங்கிக்கிட்டு வந்து நம்ம அக்காங்களுக்குத் தருவேன்.
எங்க வீட்டுலே ஒரு கண்டிப்பான வழக்கம் இருந்துச்சு! சாயந்திரம் விளக்கு வச்சவுடனெ, கைகாலெல்லாம் கழுவிட்டு
சாமி கும்பிடணும். அதுக்கு முன்னால் பெரியக்கா சாமி விளக்கேத்திருவாங்க. நாந்தான் காக்கா போல, ஸ்கூல்விட்டு
வந்ததிலெ இருந்து விளையாடிக்கிட்டு இருப்பேன். அதுக்கப்புறம் ஒரு ஏழுலே இருந்து எட்டுவரைக்கும் எல்லோரும்
உக்காந்து படிக்கணும்! ஸ்கூல் படிக்கிறவங்க பாடம் படிக்கணும். மத்தவங்களுக்கு அது கதைப் புத்தகமா இருந்தாலும்
பரவாயில்லை. அம்மா ஏதாவது ஆஸ்பத்திரி விஷயமா 'பேப்பர் வொர்க்' செய்வாங்க. சிலோன் ரேடியோதான் ஏழு
மணிக்கு முடிஞ்சுருமே. அதுலே கேட்டு மனப்பாடம் பண்ண பாட்டுங்களையெல்லாம் எழுதிவச்சுக்கிட்டும், சினிமாப்
பாட்டுப் புத்தகத்தைவச்சு 'கம்பேர்'பண்ணிக்கிட்டும் இருப்பாங்க இந்த அக்காங்க!!!
இப்பப் பாருங்க, பெரியக்காவுக்குப் படிக்கறதுக்கு ஒண்ணுமே கிடைக்கறதில்லை!!! இந்த விஷயத்துலே ச்சின்ன அக்கா
ரொம்ப லக்கி! அவுங்க கல்யாணம் கட்டிக்கிட்டுப் போனவுடனே கல்கியும், ஆ.வியும் தானே வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.
அவுங்க கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருந்துச்சு! எல்லாத் தொடர்கதைகளையும் தனியா எடுத்து பைண்ட் செஞ்சு
வச்சுக்குவாங்க. அப்ப 'லதா'ன்னு ஒருத்தர் படம் போடுவாரு. அழகா இருக்கும். தொடர்கதைகளை அதோட ஒரிஜனல்
படங்களோட படிக்கறது ரொம்பவே நல்லா இருக்கும். சின்ன அக்கா ரொம்பவே ஸ்மார்ட்டு! அவுங்களைப் பத்தியே
ஒரு தனிப் பதிவு போடலாம், அது அப்புறம் ஒரு நாளக்கு!
இப்ப, டி.வி. பொட்டி முன்னாலெ உக்காந்துக்கிட்டு, பேரன் பேத்திகளொட பொழுதைப் போக்கறாங்க பெரியக்கா!!
தங்கச்சி நானு டிவி ரொம்பப் பாக்கறதில்லே! செய்தியும், 'ஃபேர் கோ'ன்னு ஒண்ணு வருது, இந்த நாட்டுலே இருக்கற
'420'ங்களைப் பத்தி! அதையும் பார்ப்பேன்.
அக்காவைப் படிக்கவிடாமச் செஞ்ச மாமாவோட நண்பர் ஒரு பிரபல(!) எழுத்தாளர்!!
இன்னும் வரும்!
Monday, May 09, 2005
புத்தகமும், பழக்கமும்!!!!
Posted by துளசி கோபால் at 5/09/2005 06:14:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
// சாப்பாட்டுத்தட்டை ஒருகையிலும் ஏதாவது ஒரு புத்தகத்தை ஒருகையிலுமாத்தான் டைனிங் ஹாலுக்குப் போற பழக்கம்.//
அட நீங்க நம்மாளு. நீங்களாவது வெறும் சாப்பிடும்போது மட்டும்தான். ஆனா என் கதை வேற, டைனிங் டேபிள், டாய்லெட், பயணம் போகும்போது, வாடிக்கையாளர் அலுவலகத்தில் காத்திருக்கும் போது, சினிமா இடைவேளைகள் என்று போகுமிடமெல்லாம் ஏதேனும் ஒரு புத்தகம் கூடவே வரும்.
நன்றி நாராயணன்!
ஒருதடவை இப்படிச் செஞ்சப்ப ச்சிக்கன் எலும்பு தொண்டையிலே மாட்டிக்கிச்சு!
அப்புறம் ஹாஸ்பிடலில் போய் ஒரு இரவு தங்க வேண்டியதாப் போச்சு! ரொம்பச் சின்னதுதான்.
உணவுக்குழாயைக் கிழிச்சுடுச்சுன்னு சொல்லி அப்புறம் கிட்டத்தட்ட 3 வாரம் சாப்பிடறதுக்குக்
கஷ்டப்பட்டுட்டேன். அதாலே இப்பெல்லாம் சைவத்துக்கு மட்டும் புத்தகம்!
அட்டா! என்னங்ங்க்கா நீங்க. நான்வெஜ் சாப்பிடும் போது படிக்கிறது தான் அட்வென்சரே.அதுவும் நிறைய முள்ளு இருக்கிற மீனை சாப்பிடும் போது படிக்கனும் அதுல தான் த்ரில்லே.
ஒரு தடவை இப்படி ஆகிடுச்சின்னு மனசு தளர்ந்திரலாமா? தளராதீங்க. அடுத்த தடவே நல்ல முள்ளு இருக்கிற மீன வாங்கி சாப்பிட்டுக்கிட்டே படிங்க :-))))
அதெப்படி சிம்ணி விளக்கு, சாணம் மெழுகியதரைவீடு பற்றியும் கலக்குறீங்க, பாஸ்தா ஓரியண்டல்லயும் பிச்சு உதற்ரீங்க...!?
இதுமாதிரி இன்னும் நிறையா அசைபோடுங்க:)
இப்போது கூட நான் தெருவில் நடக்கும்போதே படித்து கொண்டே போவேன். எழுத்தாளர் க. பஞ்சாபகேசன் நங்கநல்லூரில்தான் இருக்கிறார். அவருக்கு என்னைத் தெரியும் ஆனால் பெயரோ விலாசமோ தெரியாது. தெருப் பெயர் மட்டும் தெரியும். வீட்டுப் பக்கமாக வந்தவர் அங்கே விளையாடிக்கொண்டிருந்தப் பையனிடம் என்னை அடையாளம் சொல்லி விசாரித்திருக்கிறார். அவன் உடனே "தெருவிலே படிச்சுண்டே போவாரே அந்த மாமாதானே" என்று கேட்டு அவரை என் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஜய்,
இதுதான் 'வத்தலகுண்டு' குசும்பு:-)
அன்பு,
அக்கா ஆல்ரவுண்(டர்)டு ஆச்சேப்பா!
டோண்டு,
பத்திரம். சென்னையிலே எல்லா இடத்திலும் ரோடெல்லாம் குண்டும் குழியுமா
இருக்கே! அதிலும் எனக்குத் தெரிஞ்ச மாமா ஒருத்தர் அங்கெ வோல்டாஸ் காலனியிலே
இருக்கார். அவர் விட்டுக்குப் போய்த் திரும்பறதுக்குள்ளே காரோட டயர் தேஞ்சிடுச்சுன்னு
ட்ரைவர் புகார் சொல்லிட்டே இருப்பார்!
பின்னூட்டியவர்களுக்கு நன்றி!!!
>>>அக்கா ஆல்ரவுண்(டர்)டு ஆச்சேப்பா!
சிரிப்பூ... இன்னும் அடக்க முடியல.... நல்லாருந்தா சரி.
துளசியக்கா,
அட.. நீங்களுமா?. பொட்டலம் மடித்துவரும் காகிதங்களில் இருந்து, தெருவில் கிடக்கும் துண்டுக்காகிதம் வரை எதையும் விட்டதில்லை. துணுக்கு மட்டும் நகைச்சுவை கொண்ட காகிதத்துண்டுகள் கீழேகிடக்கும் ரூபாய் நோட்டுகளைவிட சுவாரசியமானவை.
சாப்பிடும்போதும் கதைப்புத்தகம் படிக்கும்பழக்கத்தால் பல தடவை அம்மாவிடம் திட்டுவாங்கியிருக்கிறேன்.
இங்கே துண்டுக்காகிதங்கள் கிடைப்பதேயில்லை, அவற்றைப் படித்துப் பல வருடங்கள் ஆகின்றன :-(.
Hi madam,
I realy enjoyed this essay.. i felt that i am living in that small house with chimney light.. excelent.
Like this essay.. i need more from you.
M. Padmapriya
முத்துத் தம்பி,
இப்பெல்லாம் ப்ளாஸ்டிக் யுகமாயிருச்சேப்பா. பாலிதீன் பையிலே போட்டுத்தராங்களே!
என்னத்தைப் படிக்கறது? அப்பல்லாம் அரைவாசி, கால்வாசிக் கதை படிச்சுட்டு அதை நாமே, நம்ம
வழியிலே முடிவை நினைச்சுக்குவமே அதெல்லாம் இப்ப இல்லையேப்பா!
பத்மப்பிரியா,
நன்றி!!! உங்களுக்காக அப்பப்ப பழசு ஒண்ணை எடுத்து வுடறேன்! இ.பொ.வே.மு
( இது பொதுமக்களின் வேண்டுகோளை முன்னிட்டு:-)
வித்தியாசமா நல்லா இருக்கு!. நம்ம வீட்டுல நாம எல்லாம் ஒரு பொண்ணு மாதிரியே வளரல!. காலைல சூரியன் சுல்லுன்னு சுட்டாத்தான் எந்திரிக்கறதே!, அதான் பள்ளிக்கூடம் போகும்போது கரெக்ட்டா எம் புள்ள எழுந்திருச்சிரும் இல்ல!அப்பிடின்னு அப்பா சப்போர்ட். எந்திருச்சுப் பாத்தா தலைக்கு பக்கத்துல பிளாஸ்க்குல காபி இருக்கும்!., 5 மணிக்கே எந்திருச்சு நம்மளத் தாண்டித், தாண்டி தலமேல நடந்துபோர தங்கச்சிகளை (2 பேர்) சத்தாய்ப்பா ஒரு பார்வ பாத்திட்டு... அடா அடா எழுதிக்கிட்டே போலாங்க! அது ஒரு காலம்!. கல்யாணமாகி போன மறுநாள், 'என் மானத்த வாங்கிறாதன்னு' அம்மா மொத நாளே அழுது இருந்ததால் 6 மணிக்கே எழுந்திருச்சுட்டேன் எப்பிடியோ! எங்க மாமியார்க்கு ஒரே சந்தோசம்!., எதோ ஒரு டப்பாவ கொண்டு வந்து கைல குடுத்து கோலம் போடுன்னாங்க!... கோ..லா..மா? எங்கம்மா வேள வெட்டியில்லாம காலைல வாசல்ல கோடுபோட்டு வச்சுருக்குதுன்னு அது மேல 'சைக்கிள் விட்டு' போவேன்! அப்புறம் மாடியில் குடி போய்ட்டதாலே எங்கம்மாவே சாக்பீஸ்லதான் எதாவது கிறுக்குவாங்க! படிப்புல பாதி வாழ்க்கை போயிருச்சு, உடனே வேலைக்கு சேர்ந்ததால், (காலைல 10 மணிக்குப்போனா மலை 7.30க்கு மேலதான் வர்றது) கல்யாணம் வரைக்கும் ஒரு வேல தெரியாது... இதுக்கும்மேல, ஒவ்வொண்ணுக்கும் செத்துச் செத்து பிழைக்க முடியதுன்னு அன்னைக்கே மாமியார்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்!. இங்க பாருங்க! என் தங்கச்சி நல்லா கோலம் போடும், நல்லா சமைக்கும், வீட்ட நல்லா பாத்துக்கும்னு... நான் என்னத் தயார் பண்றதுக்குள்ள, அவங்களே பட்டுன்னு 'உனக்கு ஒண்ணும் தெரியாதான்னங்க?' அப்பா...ன்னு மூச்சு விட்டு ஆமான்னு தலையப் பெரிசா ஆட்டிவச்சேன்!. அப்புறம் ஆரம்பிச்சுது ... அருவாவெட்டு! அவுங்க எங்க போனாலும், என்ன செஞ்சாலும் நான் பாத்து பழகிக்கனும்னு ஒரு நிமிஷம் நம்மளப் பிரியறதில்ல! நம்ம வீட்டுல இருந்து வேற போன் பண்ணி 10 நிமிஷம் ஒண்ணும் பேசாம சும்மா சிரிச்சுட்டு அம்மா, தங்கச்சியெல்லம் (நம்ம நிலைமைய அப்பிடி கொண்டாடுறங்க!) வச்சுருவாங்க! அப்புறம் அடிச்சுப்பிடிச்சு அமெரிக்கா ஓடிவந்தது தனிக்கத!
நல்லாயிருக்கு துளசி.
சாப்பிடும் நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் நானும் உங்கள் ரகம்தான்.
சாப்பிடும் போது வேறெங்கும் கவனம் போகக் கூடாது என்பது எனது பாட்டாவின்(அம்மாவின் அப்பா) கண்டிப்பான உத்தரவு. அது பழகி விட்டது.
//கவனமா ஊத்துனாலும், கொஞ்சம் கீழே சிந்திரும்தான். அதுக்குத்தான் ஒரு வரட்டியை கீழே வச்சுக்கறது! //
அன்புள்ள துளசிஅக்கா,
வரட்டி என்றால் என்ன ? (எனக்குத் தெரியும் :-))
/சாப்பாட்டுத்தட்டை ஒருகையிலும் ஏதாவது ஒரு புத்தகத்தை ஒருகையிலுமாத்தான் டைனிங் ஹாலுக்குப் போற
பழக்கம். எதுக்கா? தொட்டுக்கத்தான்!!!!//
எனக்குமே தொட்டுக்க புக் இல்லாட்டி சாப்பிடவே ஓடாது . என்ன திட்டு வாங்கினாலும்
படிச்சா புக்கையே எத்தன தடவ நாளும் படிப் பேன். இன்னமுமே சாப்பிட தொட்டுக்க புக் வேணும் .
உங்க சிறுவயது பதிவுகளை படிக்க படிக்க ரொம்ப நெருங்கின சிறுவயது தோழிட்ட பேசின து போல ஒரு நெகிழ்ச்சி .பழைய நினைவுகளை கிளறி விட்டுடறீங்க . கண்டிப்பா உங்கள நேர்ல பாத்து பேசனும் .
வாங்க அப்டிப்போடு, லதா, சந்திரவதனா
கொஞ்சம் லேட்டா( ஜஸ்ட் 8 வருசந்தான்)
பதில் சொல்லுவதற்கு மன்னிக்கணும்.
படிப்பு விடமாட்டேங்குதேப்பா:-)))))
வாங்க சசி கலா.
இப்ப சமீபமா நான் ரொம்பவே மாறிட்டேன். புத்தகத்தை விட்டுட்டு கணினிக்கு மாறியாச்சசு.
ஐ மீன் வாசிப்பு. சாப்பிடும்போதும்தான்:-)
சில பழக்கங்களில் நம்மை போலவே அவர்களிடமும் பழக்கங்கள் உள்ளது என்பதை அறியும் போது மனம் அடையும் மகிழ்ச்சிற்கு அளவு கிடையாது... அதே போல் இன்றும்...
இன்றைக்கு வரை சாப்பிடும் போது கையில் ஏதேனும் ஒன்றை படிக்க வேண்டும்... அப்பா அடிக்கடி திட்டுவார்... அவர்க்கு முன்னால் மட்டும் மூச்...
6 குழந்தைகளில், பெரிய அண்ணன், பெரிய அக்கா + நான் இதே ரகம்... பதிவில் சொன்ன பல நிகழ்வுகளில் எனது அக்காவிற்கும் பொருந்தும்... பல சிரமங்களை பக்குவமாக எடுத்துக் கொண்டு, இன்று சென்னை கல்பாக்கத்தில் பேரன் பேத்திகளோடு சந்தோசமாக... அம்மா மறைந்த பிறகு, நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல என பலவற்றிக்கும் எனக்கு அம்மாவாக... கண்ணீர் வருகிறது அம்மா...
Post a Comment