Wednesday, January 22, 2025

இருபது வயசு............... ஆச்சு !

பாலத்து ஜோஸியன் சொன்னதுபோலவே கிரஹம் படுத்திக்கிட்டு இருக்கு ! பேசாம விட்டுடலாமான்னாலும் மனசு வரலை......
முக்கியமானவைன்னு எனக்குத் தோணியிருக்கும் சமாச்சாரங்களை  மேலோட்டமா கொஞ்சூண்டு  சொல்லிவச்சால் மனசு அடங்குமான்னு பார்க்கணும்.

நம்ம துளசிதளத்தின் பொறந்தநாள் ஓசைப்படாம செப்டம்பர் 24 இல் வந்து போச்சு. உங்களையெல்லாம் எழுத்து என்ற வகையில் படுத்த ஆரம்பிச்சு 20 வருஷங்கள் கடந்து போயிருக்கு !  மைல்ஸ்டோன் பர்த்டேன்னு.......  அதே   தினம்தான், தளத்தின் புரவலர் பிறந்தநாளும் என்பதால் குட்டியூண்டுக் கொண்டாட்டம் ஆச்சு. அம்பதுவருஷமா சேர்ந்து கொண்டாடறோம் !   
 (பாவம்.... அம்பது வருஷப்படுத்தலைத் தாங்கிக்கொண்டிருக்கும் இரும்பு இதயம் ! ) 
அன்றைக்குச் செவ்வாய். ஒரு ஒன்னரை வருஷமாக   நம்ம வீட்டில் செவ்வாய்க்கிழமைக்கு ஒரு முக்கியத்வம்  வந்துருக்கு !  தாத்தா வீட்டுக்குப் பேரன் வரும்நாள் !  அவன்கூடச்சேர்ந்து கொண்டாடுவது இதுதான் முதல்முறை !  காலையில்  மூடநெய்பெய்து ஒரு  அக்காரவடிசில் செஞ்சு நம்ம வீட்டுப்பெருமாள் & தாயாருக்கு  பூஜை.  
பதினொரு மணிக்கு மகளும் பேரனும் வந்தாங்க.  எல்லோருமாக் கிளம்பி நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போனோம். 

இப்பெல்லாம் கோவிலை பகல் ஒருமணிவரை தரிசனத்துக்குத் திறந்து வைப்பதால் கொஞ்சம் வசதியாகத்தான் இருக்கு நமக்கு.  வழக்கம்போல் நமக்கு ஏகாந்த தரிசனமே!  பண்டிட் மட்டும்  இருந்தார்.  
அங்கிருந்து கிளம்பி 29 ஸ்வீட்ஸ்னு இங்கே இருக்கும் இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் போனோம். பர்த்டே லஞ்ச் அங்கே!  அவரவர் விருப்பத்துக்கு ஆச்சு. தாலி மீல்ஸ்,  புதுசா ஆரம்பிச்சுருக்கு. மெனுவில் தினம் வெவ்வேற ஐட்டமாம். இருக்கட்டும்  வேற ஒருநாளைக்கு வந்தால் ஆச்சு.



பிறந்தநாட்கள் பரிசாகப் பேரனுக்கு ஒரு விளையாட்டுச்சாமான் ! அஞ்சு வயசுவரை பயன்படுத்தலாமாம்!  ஆகட்டும்...... அவுங்க வீட்டுப்புழக்கடையில்  செட் பண்ணிக்கொடுத்தாச்சு !
மறுநாள் புதன்கிழமை, நம்ம யோகா வகுப்பில்  கடைசி பத்து நிமிட்,  நம்ம வகையில் Food Yoga !  யாருக்காவது, பொறந்தநாள், கல்யாணநாள்னு தனிப்பட்ட விசேஷ நாட்கள் வரும்போது, அதை கொஞ்சம் சின்ன அளவில்  நம்ம யோகா வகுப்பில் கொண்டாடிக்குவோம். 
நம்ம வகையில் மோதிச்சூர் லட்டு & சீடையும், இன்னொரு அங்கத்தின் பொறந்தநாள் ஒரு நாள் முந்தித் திங்கட்கிழமையில் வந்ததால், அவர்கள் வகையில்  சாக்லெட் பர்ஃபியுமா , அருமை !
நமக்கு எல்லா புதனும் புள்ளையார் கோவில் விஸிட் இருக்கு. யோகா வகுப்புநடக்கும் அதே வளாகத்தில்தான் கோவில் !  கும்பாபிஷேகம் முடிஞ்சு  மண்டலபூஜை நடப்பதால்  ஒரு மண்டலம் வரைக் கோவிலைக் காலை நேரத்திலும் (காலை  எட்டரை முதல் பத்துமணிவரை ) திறந்து வைக்கிறோம்.  




இதுக்கிடையில்  புரட்டாசி மாசத்துக்கான மாவிளக்கு, ஒரு சனிக்கிழமை நம்ம வீட்டில்.  
நவராத்ரி விழா சமீபிக்கிறது. புது பொம்மை ஒன்னு சாஸ்த்திரத்துக்காக வாங்கவேணும் என்ற நியதியை 'நியாயப்படுத்தி',  யோகா செய்யும் தவளையும், யானை சவாரி செய்யும் குரங்கன்மாரையும் நம்ம வீட்டுக் கொலுவுக்காக  வாங்கினேன் !

இந்த  வருஷ நவராத்ரிக்கு , இந்தியாவில் இருப்போம் என்ற பயணத்திட்டம் கடைசியில்  கைவிடப்பட்டதால்..... கொலுவுக்கு மனத்தளவில் தயாராக இல்லை.  இனிமேல்தான் ஏதாவது யோசிச்சுச் செயல்படுத்தணும். 
ஆன்லைனில் ஆர்டர் கொடுத்த கோவில் வந்துருக்கு !!!!

Wednesday, January 15, 2025

முக்கிய அறிவிப்பு.

நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


நம்முடைய  மடிக்கணினி,  கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறது .  துளசிதளத்திற்கான பதிவுகளை Notepad இல் எழுதி ஸேவ் செய்துவிட்டுப் பதிவு வெளியிடுவதே பழக்கம். வீட்டு வேலைகளுக்கிடையில்   கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது ஒரு பத்திருவது வரிகள் எழுதி வைப்பேன்.
திங்களன்று  இப்படி எழுதிவைக்க நோட்பேட் திறந்தால்..... வேலை செய்யவில்லை. Office 365 போட்டு வைத்துதான் இருக்கோம்.  அது என்ன சொல்லுதுன்னா.....   உன் 5 Gb is full. இனி காசைக்கட்டுனால்தான்  வேலை.  

ஐய்யோ.... அந்த 5 ஜிபியில் என்னென்ன, எங்கெங்கே இருக்குன்னும் தெரியலை.   இந்த Cloud, One Drive எல்லாம் நான் பயன்படுத்தறதே இல்லையே..... என்னதான் ஆகி இருக்கும் ?

திரும்ப ஆஃபீஸ் 365 install செஞ்சாலும்  அஞ்சு நாளைக்குள்  காசு கட்டுன்னுது....

இந்தக் குழப்பம் தீரும்வரை துளசிதளத்தில் புதுப்பதிவுகள் எழுத இயலாது. மன்னிக்கவும்.

வருந்துகிறேன்.



Saturday, January 11, 2025

உள்ளூர் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான நாள் !

கும்பாபிஷேகத்தை நடத்திக்கொடுக்க அஞ்சு பண்டிட்டுகளைக் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. ஆக்லாந்து, வெலிங்டன், ஹேமில்டன் என்ற ஊர்களில் இருந்து வந்த மூவருடன், உள்ளூர் பண்டிட்டுகள் இருவரும் (நம்ம கோவில் பண்டிட்டுகள்தான்) இவர்களில் வெலிங்டன்  ஸ்ரீ பத்மன் ஐயர்,  நாம் கோவில்  கட்டும் எண்ணத்தோடு சத்சங்கம் தொடங்கின காலத்திலிருந்து நம்மோடு இருக்கிறார்.  முக்கிய விழாக்களை இவர், வெலிங்டனில் இருந்து வந்து நடத்திக்கொடுப்பது வழக்கம்.
மற்ற  சத்சங்கப் பூஜைகளுக்கு  உள்ளுரில் இருக்கும் நேபாள நாட்டு பண்டிட் வந்து நடத்திக்கொடுப்பார். நம்முடைய தென்னிந்திய முறைப்படி பூஜைகள் செய்ய ஓரளவு பழக்கப்படுத்திக்கொண்ட  அருமையான  மனிதர். சத்சங்க காலம் முடிஞ்சு, இப்ப கோவிலுக்காக ஒரு  இடம் வாங்கி கோவிலை நடத்த ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகுது. இப்போ சமீபத்தில் இவருடைய மைத்துனர் நம்மூருக்கு வந்திருப்பதால் அவரும் கோவில் பண்ட்டிட்டாக செயல்படுகிறார். 


கோவில் நடத்த ஆரம்பிச்சுட்டோமே தவிர, பூஜைகள் எல்லாம் உற்சவமூர்த்தங்கங்களுக்குத்தான். மூலவர் இன்னும் வரலை. ஒருவழியா கடந்த ஏப்ரல் மாசம் கற்சிலைமூலவர்,  மண்டபம், பெருமாள் & தாயார்கள் விக்ரஹங்கள்னு கோவிலுக்குண்டானவர்கள் வந்திறங்கினாங்க.  மற்ற ஏற்பாடுகளைச் செய்து முடிக்க நாலுமாசம் போல ஆகிருச்சு. இதோ இப்பக் கும்பாபிஷேகம்  செய்யும் நாள் வந்தாச்சு. 


பெரிய பொதிகளைப் பிரிச்சு மண்டப பாகங்களைச் சேர்த்து இணைக்கும் பணி, அபிஷேக நீரைத் தனியாக வெளியேத்தறதுக்கான ப்ளம்பிங் வேலை, ஹோமப்புகை வெளியேற எக்ஸாஸ்ட் இப்படி எல்லாத்துக்குமான ஏற்பாடுகள் பரபரன்னு நடக்க ஆரம்பிச்சது.

மூணுநாள் வைபவம். செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை ஆரம்பிச்சு 15 ஆம் தேதி ஞாயிறு பூர்த்தி.  

முதல்நாள் கணபதி ஹோமத்துடன் தொடக்கம்.  உடல்நலக்குறைவு காரணம் நாம் போகலை. 

 இரண்டாம் நாள் காலை ஹோமம் , மற்ற சாஸ்த்திர சம்ப்ரதாயங்கள் எல்லாமும்.  அன்றைக்கு  மாலை நாலுமணி வரை மூலவருக்குத் தைலம் பூசுதல். இதில் பக்தர்கள் அனைவரும் எண்ணெய் பூசலாம்.  இதைத் தவறவிடக்கூடாதுன்னு  மத்யானமாக்கிளம்பிப் போனோம். 



இந்தக் கோவில் இருக்கும் வளாகத்தில்தான் நம்ம யோகா வகுப்புகள் ஆறு வருஷமா நடக்குது. இப்போ புள்ளையாரும் வந்துட்டதால்  இது நம்ம கோவில் என்ற எண்ணம் எங்க யோகா குழுவுக்கு ஏற்பட்டுப்போச்சு.  அவுங்களும் நம்மோடு வந்து கலந்துக்கிட்டாங்க. நாந்தான் சொல்லி வச்சேனே..... இந்த எண்ணெய் பூசும் சடங்கு ஒன்ஸ் இன் அ  லைஃப் டைமுன்னு !
ஹேமில்டன் பாலாஜி கோவில் பட்டர் கிஷோர்ஜி, மூணுநாள் விழாவையும் நடத்திக்கொடுக்க  வந்துருந்தார்.  நமக்கு அவர் நல்ல நண்பர்தான்.  அவருடைய புது மனைவியும் வந்துருந்தாங்க. அவுங்களை இப்பதான் நாங்க முதல்முறையாப் பார்க்கிறோம்.  

மூணாவது நாள்,  காலை ஆறு மணிமுதல்   உபயதாரர்களுக்கான சங்கல்ப்ப பூஜை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி நேரம் ஒதுக்கியிருந்தாங்க.  நமக்குக் காலை ஆறுமணி !  நொண்டிக்காலை வச்சுக்கிட்டு அவ்வளவு காலையில் போய் பங்கேற்க இயலாதுன்னு சொல்லவேண்டியதாகப்போச்சு.  பெருமாளுக்குத் தெரியாதா நம்ம லக்ஷணம் ?  வீட்டிலிருந்து லைவா பார்த்துக்கவேண்டியதுதான். 
அன்றைக்கு ஓணம் பண்டிகை வேற ! வாமன ஜயந்தி ! நம்ம வீட்டில் பூஜைகளை முடிச்சுட்டுத்தான் கோவிலுக்குப் போகணும்.  ஓணசத்ய ஒன்னும் சமைக்கலை.  அதான்  ரெண்டு வாரம் முந்தியே நம்ம கேரளா அசோஸியேஷனில் ஓணம் கொண்டாடி,  ஓணசத்ய அனுபவிச்சாச்சு இல்லையோ ! 


வீட்டுப் பூஜைக்குச் சக்கப்ரதமன் செஞ்சாச்சு.  பதினொன்னரை வாக்கில் கோவிலுக்குப் போனோம்.  ப்ராணப்ரதிஷ்டை கோலாகலங்கள்  அமர்க்களமா இருக்கு. 




உள்ளூர்  அரசியல் வியாதிகள் வந்துருக்காங்க.  பார்லிமென்ட் அங்கங்கள். எங்க தொகுதி எம் பி நமக்கு நல்லாவே பரிச்சயமானவர்தான்.  நம்மவர் வரவேற்பு முடிஞ்சதும்,  நம்ம பதுமன் ஐயரின்  விடாமுயற்சியைப் பற்றியும், அவரின் தூண்டுதலால்தான்  இவ்வளவு தூரம் நாம் மூலவர் ப்ரதிஷ்டை, மஹாகும்பாபிஷேகம் வரை வந்துருக்கோம் என்றும் மனதாரப் பாராட்டி  வாழ்த்தினார்.  



ச்சும்மாச் சொல்லக்கூடாது, புள்ளையார் வெள்ளிக்கவசத்தில் ஜொலிக்கிறார் !
பெருமாளுக்கும் தாயார்களுக்கும் அலங்காரம் அருமை ! பூஜைகள் எல்லாம் முடிஞ்சதும் அன்னதானம் ! பெரிய விருந்துதான் ! 
விருந்து முடிஞ்சது.இப்பவே மணி ரெண்டரை.   பண்டிட்டுகள் அனைவருக்கும் கொஞ்சநேரம் ஓய்வு. திரும்ப அஞ்சுமணிக்குப் பூஜைகள் ஆரம்பிக்கறாங்க. இடைப்பட்ட நேரத்தில்  நம்ம கிஷோர்ஜி நம்ம வீட்டுப்பெருமாளை ஸேவிக்க வந்தார்.  எப்பவும் படங்களிலே பார்த்தவரை நேரில் பார்க்கவேணாமா? ( இவர் நம்ம ஃபேஸ்புக்  ஃப்ரெண்ட்! ) 

நம்ம பெருமாளுக்கு தீபாரத்தி ஆச்சு.  நம் பெருமாள் முகத்தில் புஞ்சிரி ! சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப்ஸ் ஃபேஸ்புக்கில் போட்டுருந்தேன்.  விருப்பமானால் கீழே சுட்டிகளில்  பார்க்கலாம்.


https://www.facebook.com/1309695969/videos/1069725037838749/

https://www.facebook.com/1309695969/videos/377373012093071/

 நம்ம அத்திவரதர்,  இவருக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான். நம்மூரில்  2021 இல் நடந்த  சுதர்ஸன ஹோமத்துக்கு அத்திவரதர்தான் Chief & Special Guest அப்போ ! 

ஓணம் ஸ்பெஷல் நம்ம  சக்கப்ரதமன்  அருமையாம் !  ஒரு மணி நேரம் போல இனிமையான பேச்சு. இன்னொரு நண்பர் இவுங்களை அழைச்சுப்போக வந்தார்.  இதோ..... சக்கப்ரதமன் !