Wednesday, May 05, 2010

தேரடி வீதியில் தேவன் இருக்கார்.......

ரஜதபீடபுரத்தின் கதையைக் கேக்க வாங்க எல்லோரும். த்ரேதா யுகத்துலே ராம போஜர்ன்னு ஒரு ராஜா இருந்தார். அவருக்கு அஸ்வமேத யாகம் செய்ய ஆசை வந்துச்சு. சாயாத்ரி மலைத்தொடருக்கும் அரபிதக் கடலுக்கும் இடைப்பட்ட நாடு அவருது. இதுதான் நம்ம பரசுராமர் கோடாலியை வீசி கடலில் இருந்து மீண்டெடுத்த நிலப்பகுதி.

யாகத்துக்காக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சுத்தம் செய்ய நிலத்தை உழுதப்ப, கலப்பையில் கீழ் மாட்டிக்கிட்ட ஒரு ராஜநாகம் செத்துப்போச்சு. ப்ச்.......நாகத்தைக் கொன்னதால் ஸர்ப்பதோஷம் வந்துருமேன்னு ராஜாவுக்குப் ப்யங்கர கவலை. பரசுராமர் நேரில்வந்து ராஜாவுக்கு ஆறுதல் சொல்றார். ( அட! க்ஷத்ரிய த்வேஷம் எல்லாம் தீர்ந்து போச்சு போல இருக்கு!)
'ராஜன், கவலைப்படாதே. அது உண்மையான ராஜநாகம் இல்லை. ஒரு அரக்கன் உன்னுடைய யாகத்தைக் கலைக்க அந்த நாக உருவெடுத்து வந்துருந்தான். அவனை நீ கொன்னதால் பழி பாவம் உனக்கு வராது'ன்னு சொன்னார். ராமபோஜருக்கு மனசு என்னமோ சமாதானம் ஆகலை!

:"சரி. உனக்குப் பரிகாரம் சொல்றேன், கேட்டுக்கோ. வெள்ளியால் நாலு ஆஸனங்கள் செஞ்சு யாகவேதியின் நாலு மூலைகளிலும் வச்சு அதுலே நாகர்களை ப்ரதிஷ்டை பண்ணிரு. ஒன்னுக்கு நாலாச் செஞ்சால் ஆச்சு!"

அதேபோல் வெள்ளி பீடங்களை நாலுமூலையிலும் நிர்மாணிச்சார் ராஜா. அதன்மேல் ஒவ்வொரு நாகர் வச்சு வழிபாடு நடத்தினார். யாகத்துக்கான வேலைகள் ஜரூரா நடந்து பரசுராமரே முன்னின்று யாகத்தை நல்லமுறையில் நடத்திக்கொடுத்தார். சிவனுக்கு மனசு குளிர்ந்துபோச்சு. இங்கேயே லிங்கரூபத்தில் நான் இருப்பேன்னு வாக்குக் கொடுத்து, இந்த ஊருக்கு இனி ரஜதபீடபுரம்ன்னு பெயர் வச்சுறலாமுன்னு சொல்லிட்டார். அப்படியே ஆச்சு.

கொஞ்ச வருசங்களுக்குப் பிறகு அந்த ஏரியாவில் இருந்த ஒருத்தர் பிள்ளைவரம் வேண்டி மகாவிஷ்ணுவைத் தியானிச்சுக்கிட்டே இருக்கார். ஒருநாள் அவருடைய கனவில்(?) அனந்தாசனா போஸில், ஆதிசேஷன் மேல் உட்கார்ந்த நிலையில் மகாவிஷ்ணு வர்றார். "நீ ரஜதபீடபுரத்துக்கு நடந்துபோய் (நாலு மைல் தூரம்) அங்கே இருக்கும் சிவலிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யணும். உனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்"

"ஏஞ்சாமி. அது சிவனாச்சே. நான் உங்களையல்லவா கும்பிடறேன்"

"இதுக்குப்போய் ஏன் கவலைப்படறே? சிவனும் விஷ்ணுபக்தர்தான். என் தாமரைத் திருவடிகளில் இருந்து புறப்பட்ட கங்கையைத் தன் தலையில் தாங்கிக்கிட்டு இருக்காரே. அதுவுமில்லாமல் அவர் என்னோட மச்சான்தானே? எங்களுக்குள் வேறுபாடு நாங்கள் பாராட்டுறதில்லை. நானும் அனந்தசயனத்தில் இருக்கும்போது(ம்) மானசீகமா சிவனை வழிபடுவேன். (வேணுமுன்னா அடையாறு ஸ்ரீ அநந்தபத்மநாபன் கோவிலில் போய் மூலவரைப்பார்..வலதுகையால். கீழே இருக்கும் சிவனை வழிபடறேனே!) நான் அந்த லிங்கத்தில் அந்தர்யாமியாக யார் கண்ணுக்கும் புலப்படாமல் வியாபித்து இருப்பேன். கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சமாதிரி சிவன் உடம்பில் விஷ்ணு."

இதுக்கும் ஒரு கதை இருக்கு. பரசுராமர் சிறுவனா இருந்த காலத்தில் மகா ருத்ரர்தான் அவருக்கு சாஸ்த்ர அப்யாஸங்களையும் வில்வித்தைகளையும் கற்றுக் கொடுத்த குரு. பயிற்சிகள் முடிஞ்சு நிபுணரானதும், குருவைப் பயபக்தியுடன் வணங்கி, 'குருதட்சிணையாக என்ன கொடுக்கணுமுன்னு சொல்லுங்க'ன்னு கேட்டார் பரசு. சிறந்த மாணவனைப் பெற்றதைவிட உண்மையான குருவுக்கு வேறெது மகிழ்ச்சியைத் தரமுடியும்? மனம் பூராவும் மகிழ்ச்சி ததும்பிய நிலையில் மஹா ருத்ரர் சொன்னாராம், 'நீ என் கூடவே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேணும்'ன்னு. அப்படியே ஆக இது ஒரு சந்தர்ப்பமா அமைஞ்சது. பரசுராமர், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராச்சே!

கோவிலுக்கு யாரோ வரைஞ்சு கொடுத்த பென்ஸில் ட்ராயிங்

அரசர் மயூரவர்மாவின் காலத்தில் இந்தக் கோவிலுக்குப் பூஜைகள் செய்ய, அஹிச்சத்ரபுரம் என்ற ஊரில் இருந்து சில அந்தணர்களைக் கூப்பிட்டு வந்து அவ்ர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார்களாம். வெள்ளி பீடத்தில் (பெள்ளி பீடா, கன்னடத்தில்) இருக்கும் சிவனை அர்ச்சித்து வந்ததால் இவுங்களுக்கு (ஷிவா + பெள்ளி) ஷிவால்லி அந்தணர்கள்ன்னு பெயர் வந்துருச்சு. இப்பவும் இந்தப்பகுதிகளில் கொவில்களில் எல்லாம் இந்தப் பரம்பரையில் வந்தவர்கள்தான் அர்ச்சகர்களாக இருக்காங்க. உடுபிக்கு அருகில் ஷிவால்லின்னு ஒரு ஊரே இருக்கு.

அனந்தேஸ்வரர் கோவிலுக்குள் நுழைஞ்சோம். பெரிய பிரகாரங்களோடு வித்தியாசமா இருக்கு. வெளியே தேரடிவீதியில் இருந்து பார்க்கும்போது உள்ளெ இவ்வளவு விஸ்தாரமா இருக்கும் என்ற எண்ணமே வரலை. இந்தக்கோவிலை அரசர் ராம போஜர், த்ரேதா யுகத்தில் கட்டினாருன்னு சொன்னாலும் இப்போ இருக்கும் இந்த அமைப்பு பஞ்சபாண்டவர்களால் த்வாபர யுகத்தில் புனரமைப்பு செய்யப்பட்டதுன்னு தலப்புராணம் அடிச்சுச் சொல்லுது! கோவிலில் இருக்கும் பெரிய ஸ்தம்பத்துக்கு மானஸ்தம்பமுன்னு பெயர். இது சமணக்கோவில்களின் கட்டிடக் கலையையொட்டிக் கட்டப்பட்டுருக்குன்னு சொல்றாங்க.
கருவறையில் மீசையுள்ள தங்க முகமூடியுடன் மூலவர் பெரியலிங்க ரூபத்தில் இருக்கார், பிரகாரம் சுற்றிவரும்போது ஒருமூலையில் நாகதேவதை, அஞ்சுதலைகளுடன் தங்கமா நிக்கிறாள். அடுத்து ஸ்ரீ தர்மஸாஸ்த்ராவுக்கு சின்னதா ஒரு சந்நிதி.. மஹாகணபதிக்கு, ராமர் & கோ (லக்ஷ்மணர், சீதா, ஹனுமன்)வுக்குன்னு சந்நிதிகள் இருக்கு. இந்தக் கோவிலுக்கு ஆதிகாலத்தில் ஒரு கோட்டையைப்போல் ஏழு ப்ரகாரமாம். இப்போ கொஞ்சம் சுருங்கித்தான் போயிருக்கு.
கருவறைக்கூரைகள் பெரிய காங்க்ரீட் ஸ்லாப் எடுத்து அடுக்கிவச்சதைப்போல் இருக்கு. பாண்டவர் காலத்துலே காங்க்ரீட் ஏதப்பா? கருங்கல் பாளங்களாத்தான் இருக்கணும். இவ்வளவு கனத்தைத் தாங்கணுமுன்னா அதுக்கு எப்பேர்ப்பட்ட அஸ்திவாரமும் தூண்களும் அமைச்சுருப்பாங்க? பார்க்கக் கவர்ச்சியா இல்லாத கட்டிடமுன்னாலும் யோசிச்சுப் பார்த்தால் இது கட்டிடக்கலையில் ஒரு அற்புதம் என்றுதான் சொல்லணும். வாயைப் பொளந்துக்கிட்டே ப்ரகாரம் சுத்துனதை யாரும் பார்த்துருக்கமாட்டாங்கன்னு நம்பறேன்:-)

ஸ்ரீ மாத்வர் இந்தப் பூவுலகைவிட்டு 'மறைஞ்சு' போனதும் இந்தக் கோவிலில்தான்னு சொல்றாங்க. ஒருநாள் சிஷ்யர்களுக்கு இங்கே பாடம் நடத்திக்கொண்டிருந்தப்ப, திடீர்னு மாத்வர் மேல் பூமாரி பொழிஞ்சு அவரை அப்படியே மூடிருச்சாம். பூவையெல்லாம் ஒதுக்கி அவரை வெளியில் டீச்சரைக் காணோ(மா)ம். இது நடந்தது 1317 வருசம்
முன்னூறு வருசத்துக்கு முதல் 'புட்டிகே' மடத்துலே அப்போ அதிபதியா இருந்த ஸ்ரீ புவனேந்திர தீர்த்தா ஸ்வாமிகள், நம்ம மாத்வருக்கு இங்கே அனந்தேஸ்வரா கோவிலில் ஒரு சந்நிதி வைக்கணுமுன்னு ஏற்பாடுகள் செஞ்சுட்டார். அப்போ ஒரு நாள் ஸ்ரீ மாத்வர் அவர் கனவில் வந்து, 'என் தலைமேல் எந்தக்கல்லையும் வைக்காதே. நானே இங்கேதான் இருக்கேன்'ன்னாராம். அப்புறம் அந்தச் சந்நிதி அப்படியே காலியாவே நின்னு போயிருச்சு. அந்த நிலைப்படிக்கு மேல் ரொம்பச்சின்னதா சிலை ஒன்னை சுவத்துலே பதிச்சுவச்சுட்டாங்க.
நாலு மாடவீதிகளில் அனந்தேஸ்வரனுக்கு நேர் எதிரா இருக்கு ஸ்ரீசந்த்ரமௌலீச்வரருக்கு ஒரு கோவில் இருக்கு. நேரம் அதிகமா ஆயிருச்சுன்னு வெளியில் நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டுக் கிளம்பினோம்.
கோவிலைச்சுற்றியுள்ள மாடவீதிகளில் நடக்கும்போது மடங்கள் அங்கங்கே கண்ணில் பட்டது. ஸ்ரீமாத்வர் சரோவருக்கு அருகில் தேர்போல் ஒன்னு. அதுமுழுக்க விறகுக் கட்டைகள் அடுக்கி வச்சுருக்கு. திருக்குளத்தில் நித்ய அனுஷடானங்கள் செய்துகொண்டு சிலர்.
கட்டை மேட்டர் கொஞ்சம் சுவையானதுதான். இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்லவா?


கொசுறுத்தகவல்: கட்டைன்னதும் சந்தனக்கட்டை நினைவுக்கு வருது. உடுபி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வருசம் நாலு டன் சந்தனம் தேவைப்படுது. இந்த்த் தேவையை நிறைவேற்றித் தருவது கர்னாடகா அரசுதான்.

-------------------------------------------------------------------------------------
கிருஷ்ணன் கொடுத்த கமுகுப்பூச் சரம் !

Tuesday, May 04, 2010

தகதக ஜிலுஜிலு பளபள.......

காலையில் கண் தொறக்கும்போதே கண்ணனின் நினைவு. சட்னு தயாராகிக் கோவிலுக்குப் போய்வந்து ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்பலாம். கீழே வந்தோம். ப்ரஷாந்த் குளிப்பதாக தகவல் சொன்னார் அடுத்து நின்ன வண்டியின் ட்ரைவர். எதிர்வரிசையில் ஒரு ஆட்டோ சாமான்களை இறக்குது. அதுலே போகலாமுன்னு எதிர்வரிசைக்குப் போனால், 'கோவிலுக்குப் போக ஆட்டோ எதுக்கு? நாலைஞ்சு நிமிச நடைதான். நேரேபோய் வலது பக்கம் திரும்புனா கோவில்'. அட! தெரியாமப்போச்சே!
நாங்க இருந்த தெரு ஹனுமன் வீதி. வலது பக்கம் திரும்புனா கனகதாஸா தெரு. பெயரைப் பார்த்ததும் மனசுலே ஜன்னல் கூடவே வருது. .உடுபி ஸ்ரீ க்ருஷ்ணனை நாம் தரிசிக்கும் ஜன்னலுக்குப் பெயர் நவக்ரஹ ஜன்னல். ஏன் சாமியை ஜன்னலில் எட்டிப்பார்க்கணுமாம்?
தாழ்த்தப்பட்ட மக்களினம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத காலக் கட்டம்.
க்ருஷ்ணன்மீது அடங்காத அன்பும் பக்தியும் கொண்ட கனகதாசர் தினமும் கோவிலுக்கு வெளியில் மேற்குப் பார்த்தஒரு ஜன்னல் பக்கம் நின்னு 'அவனை' மனதில் வணங்கி எப்படித்தான் இருப்பான்னு தெரியலையே நமக்கு அவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காதான்னு ஏங்கறார். பக்தன் குறையைத் தீர்க்க ஒரு நாள் 'சட்'னு திரும்பி நின்னுட்டானாம் க்ருஷ்ணன்.



அதுலே இருந்து பழையபடி கிழக்கு நோக்கி அவன் திரும்பவே இல்லை(யாம்). அப்போதான் கனகதாஸரின் பக்தியைப் பற்றித் தெரியவந்துச்சு. அன்று முதல் எல்லோருக்குமே மேற்கு பார்த்த தரிசனம் மட்டுமில்லாம எல்லோருமே இனி ஜன்னல்மூலமாத்தான் அவனைப் பார்க்கணுமுன்னு தீர்மானிச்சு அங்கே ஒரு ஜன்னலைப் பண்ணி வச்சுட்டாங்க. இந்த ஜன்னல் ஒன்பது துவாரங்களைக் கொண்ட நவகிரக ஜன்னல். இதுக்கு தங்கமுலாம் பூசி வச்சு இருக்காங்க. (ஒருவேளை அசல் தங்கமோ என்னவோ? பக்தர்கள் தொட்டுத்தொட்டு முலாம் எல்லாம் காணாமப் போயிருக்கணுமே! ஆனால் பளிச்ன்னு அழகா இருக்கே!)24 விதமான கண்ணனின் உருவங்கள் இதுலே இருக்கு. ஒவ்வொன்னும் அழகு அற்புதம்தான் என்றாலும், உள்ளே அவன் இருக்கும்போது கண் வெளியே ஆராய்ச்சி செய்ய மறுக்குதே.

கனகதாஸா தெருவின் கடைசியில் எலெக்ட்ரானிக் கேட் ஒன்னு வச்சு அதன்வழியா உள்ளே போகவும் வரணுமுன்னு இருக்கு. பாதுகாப்புக் காரணம். காவலாளி எவரும் இல்லை அங்கே.. விசேஷநாட்களுன்னா இருப்பாங்க போல. தெருமுனையில் இருந்த பூக்கடையில் வெள்ளையா ஒரு பூ வாழைஇலையில் பொதிஞ்சு வச்சுருந்தாங்க. பார்க்க நூல்திரிகளாட்டம் இருக்கு. கனகாம்பரம் விலை ரொம்பவே மலிவு. முழம் அஞ்சே ரூபாய்.


கேட்டைக் கடந்தால் மாடவீதி. மடங்கள் அங்கங்கே இருக்கு. வாசல் கதவுக்கு எதிரா அந்தந்த மடத்துக்குரிய க்ருஷ்ணரின் உருவங்கள் வச்சு பூஜிக்கிறாங்க. வேடிக்கை பார்த்துக்கிட்டே நடந்தோம். கூடையில் பச்சை மட்டைகள். இதுதான் ஒருவேளை அந்தத் திரிப்பூக்கள் மூலமோ? சந்தேகம் உடனே தெளிஞ்சது. இது கமுகுப்பூக்கள். அச்சச்சோ...... பூக்களை வெட்டிட்டால் பயிர்? போகட்டும் அதான் எக்கச்சக்கமா விளைஞ்சு நிக்குதே. ஒருவேளை பூக்களுக்குன்னே வளர்க்கும் மரங்கள் இருக்கலாமே!

இன்னும் உடுபிக்கு கண் தெளியலை. காலைநேரம். எல்லாம் நிச்சலனமா இருக்கு. தேர்கள் ஓசைப்படாமல் நிக்குது. வேற ஏதோ வழியில் வந்திருக்கோமுன்னு புரியுது. கணெதிரே ஒரு கோபுரவாசல். அதுக்கு நேர் எதிரா ஸ்ரீமாத்வர் உருவச்சிலை கம்பிக்கூண்டில்.
கோபுர வாசலில் சிலர் உள்ளே போய் வர்றதைப் பார்த்து அங்கே போனால் அங்கே ஒரு மூணு பட்டை ஜன்னல். அதுக்குள்ளே எட்டிப்பார்த்து நமஸ்கரிச்சுட்டுப் போகுது சனம். நாமும் எட்டிப் பார்த்தால்............. ஹை ! இதுதான் ஒரிஜனல் கனகதாஸா ஜன்னல். இங்கிருந்து பார்த்தால் அந்த நவக்ரஹ ஜன்னல் தெரியுது. ரெண்டுக்கும் நடுவிலே அந்த மண்டபம். நேத்து எப்படி இதைக் கவனிக்காமல் விட்டேன் உள்ளே இருந்தப்ப? நவக்ரஹ ஜன்னல்கிட்டே யாரும் இல்லைன்னா....... இங்கிருந்தே அவனைப் பார்க்கலாம்,அதிர்ஷ்டம் இருந்தால்!

தேருக்குப் பக்கம் போய் பார்த்தால்..... அட்டகாசமான மரவேலைப்பாடுகள். ராமலக்ஷ்மணர்சீதை அனுமன்கூட இருக்காங்க. கோவில் முகப்புக்கு வந்தால் சுவரில் அற்புதமான சித்திரங்கள். ஜடாயு ராவணனுடன் சண்டைபோட்டு இறகுகள் வெட்டப்படுதல், ஐயோ ன்னு சீதை அலறி வாயை மூடி அழறாள். குசலவர்கள் வில்வித்தை பயிற்சி செய்யும்போது தாய் சீதை கூடவே இருந்து பார்க்கிறாள். ராமனும் சீதையும் அவர்கள் பின்னே லக்குவனுமாக வனவாசத்தில் ஒரு காட்சி. இன்னும் மேலே உத்தரத்துக்கு அருகில் பள்ளிகொண்ட பரந்தாமன், விஷ்ணு துர்கை, ஆஞ்சநேயர், கண்ணனும் ராதையும், குழந்தைக் கண்ணன் தொட்டிலில் இப்படி ஏராளம்.
க்ரீம் நிற கோபுரத்தில் டெர்ரகோட்டா சிற்பங்கள் அங்கங்கே க்ரீமும் ப்ரிக்ரெட்டுமா காண்ட்ராஸ்ட்டா அது ஒரு அழகு. நேத்து இருட்டுலே சரியாத் தெரியலை இந்த அழகெல்லாம்!!!!

சந்நிதிக்குப் போய்ச்சேர்ந்தோம். என்ன ஆச்சு ? ஆட்கள் எல்லாம் எங்கே போனாங்க? ஏன் இப்படி நிசப்தமா இருக்கு. ஜன்னலில் யாரும் இல்லை. ஹைய்யோ!!!!! ஒட்டிப்பிடிச்சேன். உள்ளே ஜிலுஜிலுன்னு வெளிச்சம் போட்டுக்கிட்டு வைர அங்கியில் நிக்கறான்ப்பா. கண்ணே கூசுது; ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டு கோபால் போய் திண்ணையில் உக்காந்து தியானம்(?) செய்ய ஆரம்பிச்சுட்டார். அவர் தலைப்பின்னால் ஒரிஜனல் கனகதாஸா ஜன்னல் இருக்கு.
நான் நகரவேண்டி இருக்கலை. யாராவது வந்தால் வழிவிடப்போறேன். வரலையே! அஞ்சாறு நிமிசம் கழிச்சு ஒரு பக்தை. அவ்ளோதான். அப்புறம் நானே........ நான் மட்டுமே! இப்படியே அரைமணி நேரம் விலகுவதும் ஓடிவந்து இடம்பிடிப்பதுமா ஒரு ஆட்டம். எத்தனைமுறை, எவ்வளவு நேரம் என்ரதுக்குக் கணக்கே இல்லை! போகலாமுன்னு இவர் எழுந்து வர்றார். எனக்கோ.....கொதி அடங்கலை. இன்னும் இன்னும் இன்னுமுன்னு பேராசையா இருக்கு. பார்த்த திருப்தி வரலைன்னு சொன்னால்..... ஒரே ஒரு முறை பார்த்து மனசுலே வச்சுக்கணும். அது அப்படியே அங்கே நிக்கணும். அது போதும். அப்படிப் பார்ப்பதுதான் தரிசனம் உபதேசம் பொழியுது. நான் எதையும் காதுலே வாங்கும் நிலையில் இல்லை. கடைசியா இன்னொருமுறை பார்த்துட்டுத்தான் வருவேன்னு அதுக்குள்ளே வந்துருந்த அஞ்சாறுபேருக்குப்பின்னே போய் நின்னு பார்த்துட்டுத்தான் கிளம்பினேன். சரியா இன்னும் பக்குவப்படலை நான்:(

பேய்க்கு வாக்கப்பட்டுப் பரிபூரணமாப் பக்குவம் அடைஞ்சுட்டார் நம்ம இவர்!

கோவிலுக்கு முன்னே கோவிலைச் சுத்தி இருக்கும் நாலுவீதிகளும் நல்ல அகலமாப் பளிச்ன்னு இருக்கு. ஸ்ரீ மாத்வரால் நியமிக்கப்பட்ட எட்டு மடங்களும் இங்கேதான் இருக்கு.

Monday, May 03, 2010

ட்யூப் லெஸ்ஸுக்குள்ளே ஒரு ட்யூப் வந்த மாயம்!!!!

எந்தத் தொழில் செஞ்சாலும் அதுலே ஒரு நேர்மை, நியாயம் இருக்கணுமா வேண்டாமான்னு எனக்கு குழப்பம். அதுவும் அது மனித உயிர்களோடு நேரடியாச் சம்பந்தப்பட்டதா இருக்கும்போது மனசாட்சியை அப்படியே அமுக்கிக் குழிதோண்டிப் புதைச்சுட்டு பணம் மட்டுமே ஒரே நோக்கமா இருக்காங்க:(

இது ஒரு புலம்பல் பதிவுன்னு ஒரு டிஸ்கி கொடுத்துக்கறேன்.

இப்பெல்லாம் ட்யூப்லெஸ் டயர்கள்தான். பங்ச்சர் ஒட்டிக்கலாமுன்னு போனோமா....... அங்கேபோனா.....டயருக்குள்ளே ட்யூப் இருக்குன்னு தெரிஞ்சது. ஏற்கெனவே பங்ச்சர் ஆன இடத்தை ஒட்டி, (ஒரு சின்ன துண்டு டயர் பீஸ் வெட்டிவச்சு ) அடைச்சுட்டு ஒரு ட்யூபைக் காத்தடிச்சு உள்ளெ வச்சு ஒரு சமாளிப்பு நடத்தி இருக்காங்க ட்ராவல்ஸ் கம்பெனியில். அந்தச் சின்னத்துண்டு இடம் விட்டு விலகி, அதே ஓட்டையில் ஏதோ குத்தி அந்த ட்யூபைக் கிழிச்சுருக்கு.

கஸ்டமர்களை ஒழுங்காக் கொண்டு போய்ச் சேர்க்கும் எந்த உத்திரவாதமும் இவுங்களுக்கு இல்லையா? அட்லீஸ்ட் ஒரு AA இல் சேர்ந்துருந்தா உதவி வந்துருக்காதா? அதுக்குப்போய் யார் ப்ரிமியம் கட்டுறதுன்னு இருக்காங்க போல. விதிப்படி நடக்கட்டுமே என்ற பெருந்தன்மை!

ட்ராவல் கம்பெனி ஓனர் தினேஷ் ராவுக்கு 'செல்'லடிச்சு விஷயத்தைச் சொல்லுன்னு ப்ரஷாந்த்கிட்டே சொன்னால்........ தேவை இல்லையாம். ஏன்னா.............. இது அவுங்க கம்பெனி வண்டி இல்லை! போச்சுரா...... அப்ப? நாம் இன்னோவாதான் வேணுமுன்னு கண்டிப்பாச் சொன்னதாலே இன்னொரு இடத்துலே அவர் புக் பண்ணி நமக்குக் கொடுத்துட்டு சார்ஜ் வாங்கிக்கிறார். இப்ப நாம் கொடுக்கும் பணத்தில் இவருக்கும் ஒரு பங்கு கிடைக்குமுல்லே? ட்ரைவரையும் வேறெங்கோ இருந்து புடிச்சுப் போட்டுருக்கு.

பங்ச்சர் ஒட்டும் இடத்துலே ரொம்பக்கஷ்டப்பட்டு வேலை நடக்குது. நம்ம இவர் 'நியூஸி'யைக் கம்பேர் பண்ணி, பத்து நிமிச வேலையை எவ்வளோ நேரம் ரெண்டு பேர் சேர்ந்து செய்யறாங்க பார்'ன்னு சொல்றார். 'அங்கே இருக்கும் தொழிலுக்கான சாமான்கள் வசதிகள் எல்லாம் ஒன்னுமே இங்கே இல்லை. பழைய டயர்கள் மட்டுமே குவிஞ்சு கிடக்கு. எல்லாமே உடலுழைப்பாலே நடக்குது. அப்படி ஒரு கராஜ் வைக்க அஞ்சாறு மில்லியன் டாலர் இங்கே யார் முதலீடு செய்வாங்க? ரெண்டு ஆட்களைக் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்கு வச்சுக்கிட்டு தொழில் நடத்தும் 'தொழிலதிபர்கள்'தான் இங்கே கூடுதல்'னு நான் வக்காலத்து வாங்கறேன்.
இதுக்கிடையில் நகர்ந்துபோன சின்னத் துண்டை'' எடுத்துட்டு ஒரு முழு 'வேட்டி'யை உள்ளெ வச்சு அடைச்சார். நான் டயரைச் சொல்றேன்::(
அப்புறம் ட்யூப்லே பங்ச்சர் ஒட்டி, அதை உள்ளெ தள்ளிக் காத்தடைச்சு.....இவ்வளவு வேலையும் செஞ்சு முடிச்சுட்டு அவுங்க கேட்ட கூலியைக் கேட்டு அப்படியே வாயைப்பிளந்து நின்னேன் முப்பது ரூபாய்.
எங்கூர் காசுலே ஒரு டாலர். மனசு கேக்காம அவுங்க ரெண்டு பேருக்கும் நன்றிக்கடனா கொஞ்சம் காசு கொடுத்துட்டுக் கிளம்பினோம்.

ஒன்பது மணிக்குக் கோவில் மூடிருவாங்க. போயிட்டுப்போகுது போன்னு மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டு ஊருக்குள் வந்து சேரும்போது சரியா எட்டரை மணி. நேராக் கோவிலுக்குப் போயிறலாம். அறை தேடுவது அப்புறம்னு நானும் கோபாலும் ஒரே சமயம் ஒரே மாதிரி நினைச்சோம். (நான் பேச நினைப்பதெல்லாம்..............நீ பேச வேண்டும்..... ஊம்ம்ம்ம்ம்...உ உம்ம்ம்........அது! )

என்னமோ காலங்காலமா இங்கே குடி இருக்காப்லெ.... மடத்துக்குள்ளெ நுழைஞ்சு திடுதிடுன்னு இவர்பாட்டுக்குப் போறார். நான் குடுகுடுன்னு பின்னாலேயே ஓடுறேன்.... கோவிலுக்குள் நுழைஞ்சு ஜன்னலை நோக்கிப் பாய்ச்சல். அட! ராமா! யாருமே இல்லை! ஏகாந்த சேவை! யாராவது வரும்வரை இடம் பிடிச்சுக்கலாமுன்னு நான் ஜன்னலோடு பசைபோட்டு ஒட்டிக்கிட்டேன். முந்தாநாள் பூக்களால் மூடி வச்சுருந்த அலங்காரம் இல்லாமல் தங்கத்துலே ட்ரெஸ் போட்டுக்கிட்டு மின்னறான் திருடன். 'திரை போட்டுத் திடீர்ன்னு மறைச்சது எவண்டா'ன்னு கத்த வாயைத் திறந்தவ . நல்ல காலம் கப்சுப் ஆனேன். என் கண்ணில்தான் நயாக்ரா. கர்ச்சீஃப் எடுத்துக் கொடுத்துட்டு கோபால் போய் மண்டபத்தில் உட்காந்தார்.

இன்னும் பார்த்துக்கிட்டே இருக்கேன். யாரும் வரலை. கொஞ்சநேரத்துலே ஒரு மூணுநாலு பேர் வந்து நின்னாங்க. இடம் விட்டு விலகிப்போய் அவுங்களுக்கு பின்னால் வரிசையில் நின்னேன். அவுங்க போனதும் மறுபடி ஜன்னலில் ஒட்டுன பல்லியாக (சரி.... பெருச்சாளியாக) நான். இப்படியே நாலுமுறை. போதும் போதும் என்ற அளவுக்குப் பார்த்தாச்சு. கோவிலை அடைக்கும் நேரம் ஆகுதுன்னு கிளம்பினோம். அர்த்தஜாமப்பூஜை இருக்கான்னு தெரியலை. இன்னும் ஹொட்டேலை வேறத் தேடணும்.........
"உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே "
ஸ்ரீமாத்வ ஸரோவர்




ஸ்ரீ மாத்வ ஸரோவர்க்குப் பக்கம் வெளியில் வந்தோம். (இந்தக் குளத்தில்தான் கெட்டிமண்ணுக்குள் இருந்த கிருஷ்ணனைக் கழுவி வெளியே எடுத்தாராம் மாத்வர்) மடத்துக்குழந்தைகள் (ஐயோ..... எல்லாம் பால்வடியும் முகங்களோடு பிஞ்சுகள்) வரிசையா வந்துக்கிட்டு இருக்காங்க. கோவில் முன்னால் ஆரவாரம், கூட்டம் ஒன்னுமில்லாமல் ரெண்டு தேர்கள் அமைதியா நிக்குது.

பூனை தூங்கும் அடுப்பு? ஊஹூம்.... பெரிய நாயே தூங்கலாம்!!!!


திரும்ப உள்ளே போனோம். ரெண்டுநாளைக்குமுன்னே ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைச்சுப்போட்ட அடுப்புகளும் பாத்திரங்களும் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில். கழுவிக் கமர்த்திட்டாங்க.

மடத்துக்குள்ளே ஒருசிலர் மட்டுமே அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. யாத்ரீகர்கள்.

யானைக் கொட்டடியை முதல்முறை வந்தப்பக் கவனிக்கலை. அதான் எங்கே பார்த்தாலும் மனிதவெள்ளமா இருந்ததே! அரை இருட்டில் நிற்கும் க்ருஷ்ணனைப் பார்த்தேன். மறுபடி கண்ணுலே தண்ணீர். ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியாமல் வெறும் ஒன்னரை அடிச் சங்கிலி. பாவம். குழந்தை. துதிக்கையை ஆட்டிக் கூப்பிட்டது.
அஞ்சாறு நிமிஷ ட்ரைவில் ஸ்வதேஷ் ஹெரிட்டேஜ் ஹொட்டேல் வந்தோம். ப்ரஷாந்தின் ரெகமெண்டேஷன். 500 ரூபாயில் இருந்து அறைகள் இருக்காம். இருப்பதில் த வெரி பெஸ்ட் ஸ்யூட் கூட ரொம்ப மலிவு. எதுக்கும் கண்ணால் பார்த்து முடிவு செய்யணுமே. ஸிட்டிங் ரூம், பெட் ரூம்ன்னு ரெண்டு அறைகள். நல்ல அருமையான பாத்ரூம். யாரும் அதிகம் புழங்காத அறை. எல்லாமே பளிச்சுன்னு புதுசா இருக்கு. ட்ரைவர்களுக்காக ஒரு டார்மிட்டரி கூட இருக்காம். நல்லதாப் போச்சு. இன்னிக்காவது காலைக் கையை நீட்டித் தூங்கட்டும் ப்ரஷாந்த்.

சாப்பாட்டைத் தேடுதல் அடுத்த வேலை. இங்கேயே கீழே பேஸ்மெண்டில் ஒரு உடுப்பி ரெஸ்டாரண்ட் இருக்காம். 'தாலி' மீல்ஸ். வெறும் முப்பதே ரூபாய்