குளியலறை ட்ராஃபிக் வழக்கத்தைவிட படு பிஸியாக் கிடக்கு. பாதி பஸ் இங்கேயே தங்கிருச்சோ........ கோபால் வேற காலையில் எழுந்து படுக்கை அறைக் கதவைத் திறக்கறதும் மூடறதும் படுக்கையில் மறுபடி வந்து விழறதும். அஞ்சாறு நிமிசத்தில் திரும்ப எழுந்து போய்க் கதவைத் திறக்கறதும்னு ரகளையா இருக்கு. பாத்ரூம் காலியா இருக்கான்னு பார்க்கறாராம்.
என்னன்னு போய்ப் பார்த்தேன். குழந்தைகள் உட்பட எல்லாரும் குளிச்சு ரெடி ஆகிக்கிட்டு இருக்காங்க. லேடீஸ் எல்லாம் எங்கே? இப்பத்தான் சமையல் வேலைகளை முடிச்சுக்கிட்டு வந்தாங்களாம். ட்ரெஸ் சேஞ்ச் நடக்குதாம். ஆண்கள் இப்பப் பாத்ரூமைப் பிடிச்சுக்கிட்டாங்க. மாடியிலும் ரெண்டு குளியலறை இருக்கு. எல்லாமே ஃபுல்.
'ராத்திரி எத்தனை மணிக்கு கல்யாண மண்டபத்தில் இருந்து கிளம்புனீங்க?' பன்னெண்டு மணி ஆயிருச்சாம். பொண்ணும் வந்துருக்குமே. மாமியார் வீட்டுலே இருக்கா? இல்லை. இங்கேதான் மாடியில் இருக்கு. அலங்காரம் நடக்குது. பத்தரைக்குப் பூஜை இருக்கு.
தடாபுடான்னு குளிச்சு ரெடியானேன். இன்னிக்குத் திங்கக்கிழமை. வேலைநாள். உள்ளூர் ஆட்கள் மட்டும் அரைநாள் வேலைக்குப் போயிருக்காங்களாம். பிள்ளைங்க யாரும் பள்ளிக்கூடம் போகலை. கோபாலும் கைத் தொலைபேசியில் மெயில் பார்க்கறதும், டொக்டொக்குன்னு பதில் அனுப்பறதுமா இருக்கார். அதை முடிச்சுட்டு, சார்ஜர்லே போட்டா.....அது வேலை செய்யலை. ஒரு கோணத்துலே புடிச்சுக்கிட்டு இருந்தாப் பச்சை விளக்கு வருது. அப்படியே சூட்கேஸ் மேலே வச்சா விளக்கு போயிருது.
லீவு எடுத்துருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே தவிர வேலை எல்லாம் நெட் மூலமா நடந்துக்கிட்டு இருக்கு. மடிக்கணினி வேற தகராறு. ஒயர்லெஸ் வேலையே செய்யலை.
இதுக்குள்ளே உடைமாத்திக்கிட்டு ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்துக்கிட்டாங்க. பொண்ணு நல்லா அழகா கைநிறைய வளையல்களும், மெஹந்தியுமா இருக்கு. மத்த லேடீஸ் முகம் கொஞ்சம் வாட்டம். உபவாசமாம். போதாதகுறைக்கு யாருமே தூங்கலையாம். ராத்திரி வந்து அலங்காரத்தையெல்லாம் கலைச்சப்பவே ரெண்டு மணியாம். மூணு மணிக்கு அடுத்த செஷனுக்கான சமையல் ஆரம்பிக்கணுமேன்னு ச்சும்மா கொஞ்சநேரம் பேசிக்கிட்டே ரெஸ்ட் எடுத்த்துதானாம். தூங்கலாமுன்னு படுத்தா ....அப்படியே கண் இழுத்துக்கிட்டுப் போயிருச்சுன்னா?
மூணுமணிக்கு எல்லாரும் குளிச்சுட்டு, மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருக்காங்க. எதிர் தெருதான். ரெண்டு நிமிச நடையிலே போயிறலாம். ஆனாலும் கார்லேதான் போக்குவரத்து. இன்னிக்கு மா(த்)தா பூஜை. அதுக்காக ரொம்ப விசேஷமான சமையல். போளி செஞ்சுருக்காங்க. ஒம்போது வகையான கறிகள். நம்முர் ஆப்பம் போல ஒன்னு. போண்டா, சக்கரைப்பொங்கல் மாதிரி ஒன்னு, அப்புறம் வழக்கமான ரொட்லி, தால், பப்படம் இப்படி. இன்னும்கூட என்னவோ இருந்துச்சு. இப்ப நினைவுக்கு வரலை(-:
பத்தரைக்கு அங்கே ஆஜரானோம். நம்ம பக்கத்துலே தலைவலிக்குப் பத்துப் போட்டுக்குவாங்க பாருங்க அப்படி அந்த வேசத்தில் நெத்தியில் சிகப்பாக் குங்குமத்துலே பத்துப் போட்டுக்கிட்டு சில பெண்கள் உக்காந்துருந்தாங்க. உபவாசமிருக்கும் 'ஒன்பது' பேருக்கும் இப்படிப் 'பத்து.'
பூஜை செய்யும் இடத்தில் சுவத்துலே ஒரு வெள்ளைப் பலகை (ஒயிட் போர்டு) வச்சு அதுலே நாலு மூலையிலும் ரெண்டு ஜோடி குங்குமத்தில், ரெண்டு ஜோடி மஞ்சளில் தோய்ச்செடுத்த உள்ளங்கைகள் பதிஞ்சு இருக்கு. நடுவில் கோலம் வரைஞ்சு அதில் ஒரு கார்ட்டூன் சித்திரம் கைகோர்த்துக்கிட்டு இருப்பதுபோல். கீழே தரையில் நாலுநாள் முன்னே வரைஞ்சு வச்ச எட்டுப் பானைகள். ரெவ்வெண்டா நாலு வரிசை. ரெண்டு பக்கத்திலும் மும்மூணா இன்னொரு செட் பானைகள், பிரிமணை மேலே உக்கார்ந்துருக்கு. தலையில் ஒவ்வொன்னுக்கும் குடுமியோடு ஒரு தேங்காய்.(நியூஸியில் மொட்டைத் தேங்காய்தான் கிடைக்கும்)
அதுக்கு முன்னால் மணை போட்டு நடுவில் புள்ளையார், விளக்கு தேங்காய், பழம், பூக்கள். என்னைக் கவர்ந்தது என்னவோ அதுக்கும் கீழே ஒரு பலகையில் இருந்த ரெண்டு கருப்பு உருவங்களும், ரெண்டு கூடைகளில் விதைச்சு, முளைச்சிருந்த தானியங்களும்.
சரிதான். இது நம்ம பக்கத்து முளைப்பாரி! அப்ப அந்த உருவம்? கூர்ந்து பார்த்தால் எதோ மிருகத்தின்மேல் சவாரி செய்யும் தொப்பி வச்ச மனிதன். 'வழக்கம்போல்' நான் கேட்ட கேள்விக்கு 'வழக்கத்துக்கு மாறா'ப் பதில் வந்தது. 'குதிரையும் அதன்மேல் சவாரி செய்யும் மா(த்)தாவும். குதிரையின் ரெண்டு பக்கமும் கடிவாளம், மா(த்)தாவின் கையில் இணைந்திருக்கு, நல்லாப் பார்'
ஓஹோ..... குதிரை வாகனமா?
இன்னிக்குக் குலதெய்வத்தைப் பூஜிக்கும் நாளாம். குலம் விளங்கணுமுல்லே?
ஒன்பது தாம்பாளத்தில், போளி & இன்னபிற நைவேத்தியங்களைப் படைச்சாங்க. நடுவில் ஒரு அகலில் நெய்விளக்கு. பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து சாமி கும்பிட்டாங்க. ஒரு ரிப்பன் வச்சு ரெண்டுபேருக்கும் கனெக்ஷன் கொடுத்துருந்துச்சு:-)
அந்த ஒன்பது தேவியருக்கும் கழுத்தில் பூமாலை போட்டு உக்கார்த்தி வச்சாங்க. அவுங்களையும் விழுந்து கும்பிட்டுட்டு, மனி மாமி தலைமையில் எல்லோருமாச் சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து முடிச்சதும், அந்த ஒன்பது பேருக்கும் ஆளுக்கொரு தட்டா வச்சுச் சாப்பாடு பரிமாறினாங்க. நவதேவியர் வந்து சாப்பிட்டுப் போனதா ஐதீகமாம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு குலதெய்வம், பூஜை முறைகள் எல்லாம் வெவ்வேறாம். நம்ம கல்யாண வீட்டுக்காரர்களுடைய குல தெய்வம் சாமுண்டீஸ்வரி. எந்த சாமுண்டி? சாக்ஷாத் நம்ம மைசூர் சாமுண்டி ஹில்ஸ் சாமிதாங்க. அட!!!!எப்படி இப்படின்னு கொஞ்சம் ஆராய்ஞ்சதுலே(?????எல்லாம் இவுங்க சர் நேமை வச்சுத்தான்) இவுங்க க்ஷத்ரியர்களில் அக்னிவம்சப் பிரிவு (Clan agnuvanshi) பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த சாளுக்கிய மன்னர்கள் வழிவந்த வம்சமாம். (அடக் கடவுளே! அப்ப இது ராசா வூட்டுக் கலியாணமா?) இவுங்களோட தேசம்தான் இப்பக் கர்நாடகா மாநிலம். இதெல்லாம் இவுங்களுக்கே தெரியுமான்னு தெரியலை:-))))
மெல்லமெல்லத் தென்னாட்டுக்காரரா ஆகி இருக்காங்களோ? இருக்கட்டும். நமக்கும் நல்லாத்தானே இருக்கு:-)
சாப்பாடு ஆனதும் அரைமணி கூட ஓய்வெடுக்காமல் மாலையில் நடக்கப்போகும் ரிஸெப்ஷனுக்கு ஒரு புதுவிதமான பூரி செய்ய ஆரம்பிச்சாங்க. ஈஸ்ட், சீரகம், எண்ணெய் எல்லாம் போட்டுப் பிசைஞ்ச மாவில் பூரி. ஆனா மெயின் அயிட்டம் சமைக்கப்போவது ஆண்கள்தானாம்.
ஆத்துலே போட்டாலும் இப்படித்தான் அளந்து போடணும்:-))))
Goat Meat கறிக் குழம்பு. பதினோரு ஆடுகளைப் பொலி போட்டு எல்லாம் தயாரா வச்சுருக்காங்களாம். ஆஹா.... 44 கால்கள். அப்ப இதுதானா விஷயம், ஒரு நாள் வீட்டுவிருந்தில் பாயா செஞ்சு விளம்பியதுக்கு!! இன்னிக்கு 600 பேருக்கான சமையல். கத்ரி ஹாலில் வச்சே சமைச்சுருவாங்களாம். ரெண்டு மணிக்கு ஆரம்பம் ஆண்கள் ஒன்லி சமையல். 'இன்றைக்குச் சமையல் செய்யப்போவதால் அரைநாள் விடுப்பு தரும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்' :-) அரைநாள் மட்டும் வேலைக்குப்போய் வரும் காரணம் இதுதானா? இன்னிக்கு அவுங்க சமூகம் மட்டுமில்லாமல், உள்ளூரில் இந்தக் கல்யாணத்துக்கு அழைப்புவச்சுக் கூப்புட்டவங்க எல்லாரும் வரப்போறாங்க. பொண்ணு வீட்டு சைடுலே இருந்தும் நெருங்கிய சொந்தம் வருவாங்களாம்.
கோபாலையும் சமைக்க அனுப்பலாமுன்னா........ கம்பெனிக்குப்போய் நெட் கனெக்ஷன் எடுத்து சிலவேலைகளை முடிக்கணுமாம். எனக்கும்தான் கொஞ்சம் தபால் பார்க்கணும். போற வழியில் வீடியோக் கடைக்குப்போய் பழைய படங்களாப் பார்த்து கொஞ்சம் வாங்கிக்கிட்டோம். அஞ்சு டிவிடி வாங்குனா ஒன்னு இலவசமாம். 15 வாங்குனதுக்கு 3. இன்னொண்ணும் தாங்க. உங்களுக்கு இலவச விளம்பரம் நியூஸியில் போட்டுக்கலாம். இவருக்கு துணிகளைப் பொட்டிப்போடும்போது 'பார்க்க' பாட்டுகள் வேணும்தானே?
ராஜேஷ் கன்னாவின் பல படங்கள். மெட்ராஸில் இந்தி சினிமாவுக்கு மக்களைப் பழக்குனதில் ஆராதனாவுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கே!!! நூதன் & அமிதாபின் ,
'சௌதாகர்' கூட வாங்குனோம்.
சாயங்கால வரவேற்பு, ' இண்டோ இங்லீஷ் ஸ்டைல்'. ஹால் வாசலில் மாப்பிள்ளையின் பெற்றோர் புது மணத் தம்பதியருடன் நின்னு வர்றவங்களை வரவேற்றுக்கிட்டு இருக்காங்க. அப்பவே அறிமுகமும் ஆயிருது. உள்ளே லைவ் ம்யூஸிக். பிஜியன்கள் ரெண்டு பேர், கீ போர்டும், ப்ளூட்டும் வாசிக்க, எலக்ட்ரானிக் ட்ரம்ஸ் சகிதம் ஒரு ஜோடி, ஹிந்திப் பாட்டுக்களைப் பொளந்து கட்டுராங்க.
மாப்பிள்ளையின் அப்பா, இங்கே இறக்குமதி செஞ்சு வித்துக்கிட்டு இருக்கும் மின்விளக்கு அலங்காரங்கள் காம்பவுண்டுச் சுவரில் ஆரம்பிச்சு உள்ளே எங்கே பார்த்தாலும் ஜொலிக்குது. இது ஒரு விளம்பரமாவும் ஆகி இருக்கு. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்:-)))) என்ன ஒன்னு..... எல்லாம் கிறிஸ்மஸ் அலங்காரங்கள். வியாபாரம் பெருகினால் தீபாவளிக்குன்னே அலங்காரங்களை ஆர்டர் செஞ்சு விக்கலாம். இங்கே தீபாவளி சமயம் அநேகமாக எல்லா வீடுகளிலும் (இதில் மத வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை) மின்விளக்கு ஜோடனைகள் இருக்கும்.
நாங்கள் உக்கார்ந்திருந்த முன்பகுதிக்கு மெதுவா ஆடி அசைந்து நடந்துவந்த ஃபிஜியன் பெண்ணின் கையில் ஏதோ தீனி உள்ள தட்டு. அட! பஜ்ஜி. முதல் ரெண்டு வரிசைக்கு மட்டுமே கிடைச்சது. (நாங்க ஏழாவது வரிசைப்பா) திரும்பிப்போய் இன்னொரு முறை அதே மாதிரி ஆட்டி அசைஞ்சு கொண்டுவந்ததும் முன்னிரு வரிசைகளே வழிமறிச்சுக் கொள்ளையடிச்சுட்டாங்க. இதேபோல நாலைஞ்சுமுறை வழிப்பறி:-)
மூணாம்வரிசையில் ஆரம்பிச்சு எல்லாரும் முழிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கோம்.
கோபால் எழுந்துபோய் எதாவது 'ஜூஸ்' கொண்டுவரேன்னு சொல்லிட்டுப்போனவர், உடனே திரும்பிவந்து என்னையும் கூடவேக் கூட்டிட்டுப்போனார். மண்டபத்தின் முன் பகுதியிலேயே 'பார் பார் ன்னு பார்'ட். இன்னும் நான் சந்திக்க வேண்டிய நண்பர்கள் கூட்டம்
பாரில் மொய்ச்சுக்கிட்டு இருக்காம். அங்கே தட்டுத்தட்டாய் மிளகாய், வெங்காயம் , உருளைன்னு விதவிதமாய்ப் பஜ்ஜிகளும், வாளு என்று சொல்லும் மீன் வறுவலும் ஏந்திய ஸுலுசாம்பா( தேசிய உடை) அணிந்த ஃபிஜிமங்கையர் விறுவிறுப்பாகக் கூட்டத்தின் இடையில் புகுந்து வர்றாங்க. 'குடி'மக்களின் தேவைகளைப் 'பார்'த்துப் 'பார்'த்துக் கவனிப்பு நடக்குது. பாவம் உள்ளே உக்கார்ந்திருக்கும் மக்கள். செவிக்கு மட்டுமே உணவு. ( நான் திரும்ப உள்ளே போகவில்லை)
ஸ்நாக்ஸ்க்கு மட்டும் தனியாக ஒருத்தருக்கு கேட்டரிங் செய்ய விட்டுருக்காங்க. அந்தக் கம்பெனி, வெளி வெராந்தாவில் ரெண்டு கேஸ் அடுப்பு வச்சு ஒரு கடாயில் பஜ்ஜியும், இன்னொன்னில் மீன் வறுவலும் செஞ்சு அனுப்பிக்கிட்டு இருக்காங்க. ஏழுமணிக்கு ஆரம்பிச்சதுக்கு, ஊஹூம்....வேகம் பத்தாது.
எட்டுமணியானதும் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம். மெயின் ஆக்டர்ஸ் வந்து மேடையை அலங்கரிச்சதும், வரவேற்பு உரை, வாழ்த்துரை ஆச்சு. புதியவர்களுக்காக..... மணமகனின் வாழ்க்கைச் சரித்திரம் !!இது ஒரு (வகையான) காதல் திருமண(மா)ம். ரெண்டரை வருசத்துக்கு முன்னே இப்படி ஒரு கல்யாண விழாவில் சந்திச்சு, இமெயிலில் வளர்ந்து இப்போ அறுவடை! கையைத் தட்டோதட்டுன்னு தட்டுனோம். சத்தம் சரியாவரலை....எண்ணெய்ப்பிசுக்கு:-) போகட்டும், ஒரே சமூகமா இருந்ததால் பிரச்சனை இல்லாம எல்லாமே நல்லபடி முடிஞ்சது.
கேக் வெட்டினாங்க. புதுமணத்தம்பதிகளுக்காக ஆர்க்கெஸ்ட்ரா பாடுன பாட்டுக்கு ஒரு சின்ன நடனம்.(கபி கபி மேரே தில் மே கயாலு ஆதா ஹை!!!
ஆஹா.... அன்று வந்ததும் இதே நிலா.....ச்சச்சச்சா.....
கீழ்தளத்தில் சாப்பாடு ஆரம்பிச்சது. ஊரே கூடிக் கொண்டாடியாச்சு.
மணமக்கள் நல்லா இருக்கணும். மனமார்ந்த ஆசிகள்.
இன்னியோடு கல்யாணக் கொண்டாட்டங்கள் நெசமாவே முடிஞ்சது.
(அப்டீன்னா நினைக்கிறீங்க?)
Thursday, August 14, 2008
கல்யாண வீட்டு விஷயங்கள்: ஏழாம் நாள்.
Posted by
துளசி கோபால்
at
8/14/2008 09:29:00 PM
36
comments
Labels: Chamundi, Gujarathi wedding rituals in Fiji, அனுபவம்
ஆமீர்
நேத்து ஒரு ஹிந்திப்படம் பார்த்தேன். சுவாரசியம் இல்லாமல் 'ச்சும்மாப் பார்த்து வைக்கலாம்' ஓசியில் கிடைச்சதைத் திருப்பிக் கொடுக்கணுமேன்னு.........
எப்படி, எப்போ, இப்படி ஆழ்ந்து போனேன்னு தெரியலை. லண்டனில் இருந்து மும்பை வரும் ஏர் இந்தியா விமானத்தில் ஆரம்பிக்கும் முதல் காட்சி.
சரியாச் சொன்னால், வந்து இறங்கிய ஆறு மணிநேரத்தில் நாயகனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள்.........
தெரிஞ்ச முகமுன்னு ஒன்னுமே கிடையாது. படம் பூராவும் மும்பை நகரில் எடுத்துருக்காங்க போல. 'செட்'ன்னு எதையும் கவனிச்சதாத் தோணலை.
தன் வீட்டில் இருந்துக்கிட்டே...... விதவிதமான சாப்பாட்டுடன், குழந்தையைக் கொஞ்சிக்கிட்டு 'அலைபேசி'யிலேயே நாயகனை விலைபேசும் ஆள். வில்லன்னு சொல்லலாமோ? இல்லே தலைவனா?
எப்படிப்பட்ட 'நெட் ஒர்க்' என்ற வியப்பு இன்னும் மாறலை!!!!!
அபத்தமான பாடல் காட்சிகள், வலிந்து வைக்கப்பட்ட ஆட்டங்கள், நடனம் என்ற பெயரில் கைகால் வலிப்புகள் இப்படி ஒன்னுமே இல்லைப்பா. ஆனா பாட்டு இருக்கு. எங்கியோ மெல்லிசா, ஒலிச்சும் ஒலிக்காமலும்.
படம் முடிஞ்சு டைட்டில் ஓடும்போதுதான் அட! இத்தனைப் பாட்டு எங்கே இருந்துச்சு? ஆங்கிலப்படங்களில்தான் இப்படி வந்துக்கிட்டு இருக்கும்.
விமரிசனம் எழுதப்போறேன்னு சொன்னதும் ...............
வழக்கம்போல் 'அஸ்து' கேட்டது.. ஆனாலும் முடியலை.
ஒரு பக்கத்தை மட்டும் சொல்லுதோன்னு நினைக்க வைக்கும் கதை. 'அடுத்த பக்கம்' ஒருவேளை இன்னொரு படம் எடுக்கலாம்.
இந்தியாவில் வெளியிட்டாங்களான்னு தெரியலை.
படம் கிடைச்சாக் கண்டிப்பாப் பாருங்க. சின்னப் படம்தான். அதான் அஞ்சு டூயட்டும் ஆறு ஃபைட்டும் வைக்கலையே.
ஆமீர்ன்னா என்ன அர்த்தம்? தலைவன்.
இயக்கம் & எழுத்து ராஜ் குமார் குப்தா
கதை நாயகன்... ராஜீவ் கண்டேல்வால்
தயாரிப்பு ..... ரோனி ஸ்க்ரூவாலா
இசை....அமீத் த்ரிவேதி
Posted by
துளசி கோபால்
at
8/14/2008 09:40:00 AM
22
comments
Labels: திரைப்படம் விமரிசனம் சினிமா
Tuesday, August 12, 2008
PIT க்கு நான் எடுத்த பிட்டு:-)
மனிதனுக்குக் காத்திருக்கும் மலையும், குதிரைக்குக் காத்திருக்கும் மைதானமும்
முதல் படம் பிட்டுக்கு:-)))))
====================================================================
இதெல்லாம் ச்சும்மா உங்க பார்வைக்கு.
வீடு விட்டு வெளியில் மெயின் ரோடு வந்தவுடன்.....
தொப்பி இங்கே.............தலை எங்கே?
போருக்குப் போகப் போறேன். இங்கே போரான போர்:-)
வசந்தம் வரப்போகுது.....
பந்தயம் போடலாமா?
எங்கள் முன்னழகும்
எங்கள் பின்னழகும்
இன்னும் குளுரு விட்டபாடில்லையே.....
மாடல் அழகி நயன(ம்)தாரா!!
Posted by
துளசி கோபால்
at
8/12/2008 04:00:00 PM
37
comments
