Tuesday, August 05, 2008

Tui Tai & Beachcomber island ................(ஃபிஜிப் பயணம் பகுதி 7)

ஒரு வாரம் தங்கப்போறேமே இதுலே ஒரு நாள் பீச் கோம்பர் தீவுக்குப் போய்வரலாமுன்னு மகள் கிட்டே சொல்லி இருந்தேன். ஆனா, இப்படி நேரமே கிடைக்காமப் போகப்போகுதுன்னு கண்டேனா என்ன? எட்டுமணிக்குக் கிளம்பும் படகுலே போனால் போய்ச்சேரவே பத்தரை ஆகும். மாலையில் 4 மணிக்கு அங்கே கிளம்புனா வந்து சேர ஆறு ஆறரை. எல்லாம் காத்து நமக்குச் சாதகமா வீசினால்...... இது பாய்மரக் கப்பல். அந்தப் பாய்(??)களை ஏத்துவதும் காத்துக்கு வாகாத் திருப்புவதும், இறக்குவதும்கூட பார்க்கறதுக்கு ஒரு விநோதமான அனுபவம்தான். படகுத்துறைக்குக் காரில் போக ஒரு மணி நேரப்பயணம் இருக்கு. இதே லௌடோகா நகரில் இருந்து கிளம்பிக்கிட்டு இருந்தது படகு. இது ஒரு எக்ஸ்கர்ஷன் ட்ரிப்.

இப்ப என்னன்னா ஏர்ப்போர்ட் தாண்டி நா(ன்)டி நகருக்கருகில் புதுசா படகுத்துறை கட்டிவிட்டுருக்காங்களாம். அங்கே இருந்துதான் போக்குவரத்து எல்லாமும்.

பசங்களை ஏமாத்த வேணாமுன்னு அவுங்களுக்கு மட்டும் டிக்கெட் ஏற்பாடு செஞ்சு கொடுத்துட்டோம். அந்தந்த ரிஸார்ட்களில் இருந்து பிக்கப் செய்து
நா(ன்)டி அருகில் ஒரு ஹோட்டலில் கொண்டு போய் விடுவாங்களாம். அப்புறம் படகுக்காரர்களே அங்கிருந்து எல்லோரையும் கூட்டிப்போய் படகில் ஏத்திக்குவாங்களாம். வரும்போதும் இதேபோல் கொண்டுவந்து அந்த ஹோட்டலில் விட்டுட்டால், பிக்கப் ஏற்பாட்டின்படி ரூமுக்குப் போயிறலாமாம். எல்லாம் பணம் பண்ணத் தெரிஞ்சுக்கிட்டாங்க.



படகின் பெயர் தூயி தாய் Tui Tai.

(அன்று)

முந்தியெல்லாம் நாமே படகுத்துறைக்குப் போயிருவோம். படகுக்குக்குக் கட்டணம் கட்டினால் போதும். உள்ளூர் ஆட்களுக்கு 50% கழிவு இருந்தது.
பீச் கோம்பர் ஒரு சின்னத் தீவு. கரைக்கு ரொம்பக்கிட்டே போகாமல் கொஞ்ச தூரத்தில் கப்பலை நிறுத்துவாங்க. ஆழம் அதிகமில்லாத இடமாச்சே...தரை தட்டிருச்சுனா? அங்கே ஒரு ரிஸார்ட் ஹோட்டேல் மட்டும்தான். அங்கிருந்து ஒரு சின்னப் படகு வந்து நம்மைக் கூட்டிக்கிட்டுப்போய் தரையில் விடும். பொடி நடையாக அந்தத் தீவை அரைமணி நேரத்தில் ஒரு சுத்து சுத்திவந்துறலாம். ஒரு பக்கம் தங்கும் விருந்தினருக்குக் குடில்கள்.

நாம் கட்டும் கட்டணத்திலேயே பகல் சாப்பாடும் உண்டு. தாகசாந்திக்கு மட்டும் பாரில் வாங்கிக்கணும்.


கொஞ்சமும் அலை அடிக்காதப் பளிங்குத் தண்ணீர். கடல்தரையில் இருக்கும் செடிகளும் மீன்களும் பார்த்துக்கிட்டே இருக்கச் சொல்லும். அப்படியேக் குப்புறப்படுத்து மிதந்துக்கிட்டேப் பார்க்கலாம். ஐயோ கண்ணுலே மூக்குலே உப்புத்தண்ணீர் போயிருமே.... போகாது. மூச்சடைச்சுப்போனா? போகவே போகாது. அதுக்குத்தான் ஸ்நோர்க்கேல்Snorkel கருவி இருக்குல்லே!!! ஃப்லிப்பர்ஸ், கண் மாஸ்க், மூச்சுவிடும் காத்துக்குழாய்.

பகல் உணவு முடிஞ்சதும் ஸ்நோர்க்கேல் Snorkeling
செய்ய விருப்பம் இருந்தா அதையெடுத்துப் பொருத்திக்கிட்டு மீன்களைக் கிட்டப் பார்க்கலாம். அப்படியும் முடியாதா?. மாத்து உடுப்பு கொண்டுபோகலையா? ஆனால் தண்ணிக்கடியில் என்னென்ன இருக்குன்னு பார்த்தே ஆகணுமா? கண்ணாடித்தரைப் படகு சவாரி செய்யலாம். சின்னப் படகு. ஒரு பத்துப்பேர்வரை போகலாம். இந்தத் தீவுக் கரையைச் சுத்திப் பவழப்பாறைகள் எக்கச் சக்கமா இருக்கு. அங்கே கொண்டுபோய் படகை நிறுத்துவாங்க. உக்கார்ந்த இடத்தில் இருந்தே அந்தக் கண்ணாடித்தரை வழியா நோகாம, நனையாம எல்லாத்தையும் பார்த்துட்டு வரலாம்.


தனியா இதுக்கெல்லாம் காசு கட்டத் தேவை இல்லை. நம்ம டிக்கெட்டு இதுக்கெல்லாம் சேர்த்துதான். நமக்குப் போர் அடிக்காமப் பார்த்துக்கும் கடமை ஒன்னு அவுங்களுக்கும் இருக்கில்லையா? :-))))

அப்ப நாங்க போய் வந்த மறுநாள்தான் முதல் ராணுவப்புரட்சி வெடித்தது. 1987 மே மாசம். அப்புறம் அதே வருசம் செப்டம்பர் மாசம் இன்னொரு புரட்சி. கிறிஸ்த்துவ நாடா இருக்கணுமுன்னு அறிக்கைவிட்டு, ஞாயித்துகிழமைகளில் சர்ச்சுக்குப் போகும் மக்களைத்தவிர, வேற பொழுதுபோக்குக்காக யாரும் வெளியே வரக்கூடாதுன்னு அபத்தமா ஒரு சட்டம் வந்தது அப்போது.



மகள் போய்வந்துட்டுப் படங்கள் கொடுத்தாள். தீவைத்தவிர மற்ற எல்லாமே மாறிப்போய் இருக்காம். பாய்மரக் கப்பல் இப்ப ரொம்ப ஆடம்பரமான விஷயமாப் போயிருச்சாம். சாதாரண ரெண்டடுக்குள்ள க்ரூயிஸ் படகுலேதான் கொண்டு போனாங்களாம். மீன்வகைகள் கூட புதுவிதமா இருக்காம்.



அன்றும் இன்றும்!





ராணுவப்புரட்சி நடந்தபிறகு, நாட்டின் பொருளாதாரம் ரொம்பவும் கீழ் நோக்கிப் போக ஆரம்பிச்சதும் மற்ற வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அடிச்சது ப்ரைஸ். அவுங்களுக்கு அனுமதி கொடுத்து எல்லாத்தையும் மாடர்னா செஞ்சு வச்சுருக்காங்க. ஆனால் இந்த நாட்டுக்குன்னு இருந்த தனித்துவம் போயிருச்சு.
இந்தியர்களுக்குக் கரும்பு நிலத்தைக் கொடுத்துருந்தா...... இந்த கதிகேடு வந்துருக்குமா? இப்ப இது ஒரு ஈகோ பிரச்சனையா ஆகி இருக்கோ என்னவோ?



இன்னிக்கு மாலையில்தான் கல்யாணம் நடக்கப்போகுது. மாப்பிள்ளைவீட்டுக் கூட்டத்தோடு நாங்கள் சேர்ந்து வரப்போறதில்லை. மகளும் நண்பரும் கல்யாணத்துக்கு வர்றாங்க. முன்னரே செஞ்சுக்கிட்ட ஏற்பாட்டின்படி ஒரு மணிக்கு மகளையும் நண்பரையும் கூட்டிக்கிட்டு நா(ன்)டி போறோம். ஒன்னரைக்குத் தோழி வீட்டில் சாப்பாடு. அங்கே இருந்து மாலையில் உடை மாற்றிக்கிட்டுக் கல்யாண மண்டபத்துக்குப் போகணும்.

காலையில் பத்துமணிக்குக் கிளம்பிட்டோம். சுகர் சிட்டிக்கு வந்து கொஞ்சநேரம் சுத்துனோம். துறைமுகத்தையொட்டி இருக்கும் இடத்தையெல்லாம் பூச்செடிகள் வச்சு அழகுபடுத்தி இருக்காங்க. காங்க்ரீட் நடைபாதை, கட்டைச்சுவர் எல்லாம் கட்டி இருக்கு. அடுத்தபக்கம் ஏதோ பெரிய குளத்தின் கரையில் இருப்பதுபோல இருக்கு. கடல்தான் இப்படி ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியா கிடக்கு.
உள்ளூர் ஆள் ஒருத்தர் தூண்டிலில் சின்ன வலைப்பையைக் கட்டி இரால் பிடிச்சுக்கிட்டு இருந்தார்.




கொஞ்ச தூரத்தில் ரெண்டு பெரிய, பயணிகள் வரும் க்ரூயிஸ் கப்பல்கள் நின்னுக்கிட்டு இருந்துச்சு. போட் வரும் தினங்களில் கடைக்காரர்களுக்கு முந்தியெல்லாம் நல்ல வியாபாரம் இருக்கும். ட்யூட்டி ஃப்ரீ போர்ட்தான். இப்ப விலைவாசி எல்லாம் ஏகத்தும் எகிறிப்போனதால் அந்தந்த நாட்டுக்குள்ளேயே வாங்கிக்கறதுதான் மலிவா இருக்கு. குறைஞ்சபட்சம் வாரண்டியாவது இருக்குமே.

விசேஷத்துக்குத் தலைமைதாங்கி நடத்திக்கொடுங்கன்னு பெருந்தலைவர்களைக் கேட்பது போல கர்னல் ரம்பூக்காவை, ராணுவப்புரட்சி நடத்திக் கொடுங்கன்னு அழைப்பு வருதாம். "எனக்கு வேற வேலை இல்லையா? அப்ப நாடு சீர்குலையுற மாதிரி இருந்துச்சேன்னு நான் நடவடிக்கை எடுக்கும்படி ஆச்சு. இப்ப ஓரளவு முன்னேற்றம் ஃபிஜியன்களுக்கு ஏற்பட்டு இருக்கு"ன்னு Coup Leader Col. Rambuka தன்னுடைய 20 வருட நினைவுகளைப் 'பிஜி டைம்ஸ்' என்ற உள்ளூர் தினசரியில் சொல்லி இருக்கார். கொசுவத்தி அவருக்கு மட்டும் இருக்காதா என்ன?

இந்தியர்கள் மெஜாரிட்டியா இருக்கும் மந்திரிசபை, (இத்தனைக்கும் பிரதமர் ஒரு ஃபிஜியந்தான்) அமைஞ்சவுடன் நாடு சீர்குலைய ஆரம்பிச்சதாமா? அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கார். மகேந்திரச் சௌத்தரி பிரதமர் ஆனதும் இப்ப சில வருசங்களுக்கு முன்னே ஜார்ஜ் ஸ்பைட் ஒரு புரட்சி நடத்துனது அநேகமா உங்களில் சிலருக்குத் தெரியும்தானே? அப்ப வீட்டுக் காவலில் வச்சுக் கொடுமை செஞ்சாங்கன்னு சொன்ன சௌத்தரி, இன்னிக்கு இங்கே இருக்கும்,அவருடைய 'எதிரிகள்' அமைத்த தாற்காலிக அரசாங்கத்துலே நிதி அமைச்சரா இருக்கார். 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' ன்னு சொல்லிக்கலாம். இந்தியர்களைக் காப்பாத்த நிதி ஏதும் ஒதுக்கீடு செஞ்சாரான்னு தெரியலை.

போற வழியில் ஹரே கிருஷ்ணாவில் அஞ்சு நிமிசம் புகுந்து புறப்பட்டோம்.

தோழிக்குப் படிச்சுப்படிச்சுச் சொல்லி இருந்தேன், சாதாரணச் சமையலா இருக்கணுமுன்னு. ஒரு பருப்பு சாதம் போதுமே. தினம் கல்யாண வீட்டுச் சாப்பாடு ஹெவியா இருக்கே. கேட்டுருவாங்களே!!!! தோழி வீட்டில் பால்பாயஸத்தோடு விருந்து.

சாப்பாடு ஆனதும் பசங்களை ஊர்சுத்த அனுப்புனோம். டூரிஸ்ட் கப்பல் வந்துருக்குன்னு பல கடைகள் இன்னிக்குத் திறந்து இருக்கும். தோழியின் கடை திறக்கலை. எங்களுக்காக லீவு விட்டாச்சு. எல்லாம் சும்மா வந்து பார்த்துக்கிட்டுப் போறாங்களே தவிர, ஒன்னும் வாங்கறது இல்லையாம். குட்டியேட்டனும், கோபாலும் பேசறமாதிரி நடிச்சுட்டு தூக்கம் போட ஆரம்பிச்சாங்க. நானும் தோழியும் விட்ட இடத்தில் இருந்து பழங்கதை பேசத் தொடங்கினோம்.

பசங்கள் திரும்பிவந்தப்ப எனக்காக ஒரு போட்டோ எடுத்துவந்தாங்க.


டவுனில் கூட்டம் ரொம்ப இல்லையாம். நாலரைக்கு ஒரு சாயா குடிச்சுட்டு கல்யாணத்துக்கு உடை மாற்ற ஆரம்பிச்சோம். எனக்கு ஒரு அஞ்சு நிமிசம். மகளுக்கு ஒரு அம்பது நிமிசம்.

அஞ்சரைக்குத் தோழியிடம் பிரியாவிடை பெற்று, செவ்வாய் ஊருக்குத் திரும்பும்தினம் நேரம் கிடைச்சால் ஒரு எட்டு வந்து போறோமுன்னு சொல்லிட்டுக் கல்யாணமண்டபம் வந்தோம். அந்த நிகழ்ச்சிகள் தனிப்பதிவா வருது.

தொடரும்...............:-)

Monday, August 04, 2008

" நாங்க சினிமாவுக்குப் போறோம்." (மரத்தடி நினைவுகள்.)

மரத்தடி நினைவுகள்.

நண்பர் ஒருவருக்காக சில சுட்டிக்களைத் தரலாமுன்னு மரத்தடிக்குப் போனேன். நரியைக் கேட்டதும், 'This site may harm your computer'
அபாயச்சங்கு ஊதுச்சு. விட்டுற முடியுங்களா? வேற வழியில் நைஸாப் போய் நான் தேடும் பகுதியைப் பார்த்தால்....... பயங்கரக் காத்து வீசியிருக்கும்போல! ( புயல்நிவாரண நிதி வேண்டுகோள் அங்கே இருக்கு) அரையும் கொறையுமா, குற்றுயிரும் கொலையுயிருமாக் கிடக்கு நம்ம படைப்புகள்(-:

எங்கியாவது சேமிப்புன்னு மட்டுமில்லை.... புதிதாக வலையில் வலம்வரும் நட்புகளுக்கு எங்கே இவை கிடைக்காமல் போயிருமோ என்ற
'நல்' எண்ணத்துடன் இங்கே நம்ம தளத்தில் வாரம் ஒன்னு போட்டு வைக்கப்போறேன்.

ஏற்கெனவே நம் கைவண்ணம் கண்ட நண்பர்கள் கடந்து போயிறலாம். பிரச்சனை (இப்போதைக்கு) இல்லை:-)))))

*********************************************************************************
நாங்க சினிமாவுக்குப் போறோம்



மக்களே,

இப்படி தியேட்டரைப் பத்தி எழுதினத படிச்சு, எனக்கு மறந்திருந்தது எல்லாம் ஞாபகம் வந்திருச்சு.
' ஹா, நான் எங்கே இருக்கேன்? நீங்கெல்லாம் யாரு?'


நினைவுலே முதல்ல வருது, 'வத்தலகுண்டு'ல் இருந்த(?) சந்திரா டாக்கீஸ். ஓனர் இஸ்லாமியர். இராவுத்தர் குடும்பம். எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.
சாயந்திரம் முதல்பாட்டு 'வாராய், நீ வாராய்' போட்டவுடனே சினிமாவுக்குப் போற திட்டம் இருக்கற நாளா இருந்தா, ஒரு வேகம் வரும் பாருங்க, என்னுடைய 'டீன் ஏஜ்'( கல்யாணத்துக்குப் பாத்துகிட்டிருந்தாங்க) அக்காங்களுக்கு !

சினிமாத் திட்டத்தை முதல் நாளே அம்மா சொல்லிடுவாங்க. அப்பத்தான், மறுநாள் பொழுது விடிஞ்சதிலிருந்து
என்ன உடுத்தறது,சுலபமான, ராத்திரி சமையல் (சினிமா விட்டுவந்து, நான் தூங்கிகிட்டே சாப்பிடுறதுக்கு)
எது தோதுப்படும் அப்படி, இப்படின்னு பல விதமான ஆலோசனைகள் நடக்கும்.
ஒரு மூணு, மூணரை மணி ஆச்சுன்னா, போச்சு. பூக்களை, வேகம் வேகமா பறிக்கறதும், கட்டறதும்,
சலவையிலிருந்து வந்திருக்கும் புடவைகளில், கஞ்சி போட்ட நல்ல மொற மொறப்பான சேலைகளையும்,
அதுக்கு 'மேச்சிங் ப்ளவுஸ்' தேடறதும் நடக்கும். அதுக்குள்ளே, நான் ஸ்கூல்ல இருந்து வந்துருவேன்.
முதலில், என்னை ரெடி பண்ணிடுவாங்க. நான் ரொம்ப தொல்லையாம். கவுனை அழுக்குப் பண்ணாம
இருக்கணும்னு உத்தரவு வேற. சரின்னு உக்காந்திருப்பேன். அப்பல்லாம் டி.வி.வரலை. நீங்கல்லாம் பிறந்துகூட இருக்கமாட்டீங்க.

ரெண்டு அக்காங்களும் ட்ரெஸ் மாத்தப் போவாங்க. அவ்வளவுதான்.டெய்லர், சரியான அளவுலே 'ப்ளவுஸ்'
தைக்காததும், புடவைக்குக் கஞ்சி சரியாகப் போடாததும், அப்படிப் போட்டிருந்தாலும், சரியாக 'இஸ்திரி'
போடாததும் கண்டுபிடிக்கப்படும். பீரோவுலே, இருக்கற அத்தனை புடவைகளும் வெளியே வந்துவிழும்.
அது சரியில்லே, இது சரியில்லே...அப்பாடா...ஒருவழியா புடவை மாத்தியாச்சுன்னா, அடுத்து இருக்கு
இன்னொரு கண்டம். பவுடர் பூசி, பொட்டு வைக்கிறது. பவுடர் O.K. பொட்டுதான் தகராறு. இப்ப மாதிரி
ஸ்டிக்கர் பொட்டு அப்ப கிடையாது. தரம் நல்லா இருக்காதுன்னு குப்பில வர்ற சாந்து வாங்கறது இல்ல.
வீட்டிலேயே கரும் சாந்து செய்து, ஒரு கிண்ணத்திலே இருக்கும். நல்லா காஞ்சு, கெட்டியா இருக்கும்.
அதுலே, இரண்டுதுளி தண்ணீர்விட்டு, குழைக்கணும்.( இப்ப அதுமாதிரி எங்கேயாவது செய்றாங்களான்னு
தெரியாது) நாசுக்காய் குழைக்க முடியாது. அதை ஒரு விளக்குமாத்துக்குச்சிலே எடுத்து, திலகமா வைச்சுக்
கணும். அண்ணைக்கின்னுப் பாத்து,கோண கோணயா வரும்.அதை அழிக்கறதுக்காக, இன்னொரு தடவை
முகம் கழுவி, பவுடர், பொட்டு இத்தியாதி. திரும்ப கோணப் பொட்டு, திரும்ப முகம் கழுவல்....
இப்படியே 3 அல்லது 4 தடவ ஆகும்.


இப்ப அம்மா ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் முடிச்சு வருவாங்க. நமக்கு எப்பவும் ஹாஸ்பிடல் காம்பெளண்ட்-லதான்
வீடு இருக்கும். எவ்வளவு நேரம்தான் நான் சும்மா உக்காந்திருக்க முடியும்? கொஞ்ச நேரம் விளையாடலாம்னு
தெருவுக்குப் போயிருப்பேன். அம்மாவப் பாத்தவுடன் ஓடி வருவேன். அம்மா உள்ளேபோய், அக்காங்களைக்
கேப்பாங்க," துளசிக்கு ஒரு நல்ல கவுனாப் போட்டு, தலைசீவி விடக்கூடாதா? " அவ்வளவுதான். எனக்கு மண்டகப்படி ஆரம்பிக்கும்.

இதுக்குள்ளே, நல்லா இருட்டிடும். 'வாராயோ வெண்ணிலாவே'ன்னு ஒரு பாட்டுக் கேக்கும். படம் போடப்
போறான். சீக்கிரம் நடங்கன்னு சொல்லி, எல்லோரும் ஓட்டமும், நடையுமா ( அப்ப ஏது ஆட்டோவும்
டாக்ஸியும் ? அதுவும் வத்தலகுண்டுலே ?)போய் சேரும்போது, வழக்கம்போல படம் ஆரம்பிச்சு, ஒரு
20 நிமிஷமாவது ஆகியிருக்கும்.வேர்வை வழிஞ்சு பொட்டெல்லாம் கரைய ஆரம்பிச்சிருக்கும்.
இதுலே எங்களுக்குன்னு தனியா பெஞ்சுங்களுக்குப் பின்னாலே 'சேர்'போட்டு வச்சிருப்பாங்க
தியேட்டருலே.

படம் முடியற வரைக்கும், அக்காங்களுக்கு, மனசு 'திக் திக்'னு இருக்கும். ஏன்னா, ஆசுபத்திரியிலே
அர்ஜெண்டா கேஸ், கத்திகுத்து, ஆக்ஸிடெண்ட்னு வந்திடுச்சுன்னு வச்சிக்குங்க. உடனே தியேட்டருக்கு
ஆளு வந்துரும் டாக்டரைத்தேடி. உடனே எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு வந்துடணும். கால்வாசி, அரைவாசின்னு
நிறைய படம் பாத்திருக்கோம். சொல்ல மறந்துட்டனே, இடைவேளையிலே, நான் போய் பாட்டுப் புஸ்தகம்
வேற வாங்கிட்டு வரணும்.10 காசுன்னு ஞாபகம்.

அப்பா, வேலைகாரணம் வேறு ஊரில் இருந்தார். தனியாக ஒரு பெண்பிள்ளை (அம்மாதான்) வளர்ப்பு
என்பதால், ஏதாவது பேச்சு வந்துவிடுமோன்னு,கவனமா இருப்பாங்க எப்போதும்.

படத்துக்குப் போய்வந்த மறுநாள்தான் அக்காங்களுக்கு நிறைய வேலை இருக்கும். வெளியே வாரிப்
போட்ட துணிங்களையெல்லாம், மடிச்சு, பீரோவுலே அடுக்கவேண்டாமா?


நன்றி: மரத்தடி. 24 ஜூன் 2004

Sunday, August 03, 2008

கல்யாண வீட்டு விஷயங்கள்: ஐந்தாம் நாள்.

இன்றைய ஸ்பெஷல் கிரகசாந்தி பூஜையுடன் ஆரம்பம் நம்மூர் நவகிரக சாந்தி பூஜைதான்.

வீட்டு முன்னால் போட்டுருந்த பந்தலில் குண்டம் வைத்துத் தீவளர்த்து ஹோமம் நடந்தது,.மகளையும் நண்பரையும் இன்னிக்கு இங்கே கூட்டிவருவதான ஏற்பாட்டின்படிப் போய்வரவே பதினொன்னரை மணி ஆகிருச்சு. நல்லவேளையா ரொம்பவும் மிஸ் பண்ணிறலை. பூஜை நடந்துக்கிட்டு இருக்கு. அநேகமா முடியும் நேரம்.

அடுத்த நிகழ்ச்சியா முதல்நாள் அம்மா முந்தானையில் வாங்கி முடிஞ்சுவச்சத் தேங்காய் மூட்டையை ஒரு குச்சியில் மாட்டிக்கிட்டு மாப்பிள்ளை வெளியில் கிளம்புறார். அதுக்குள்ளே அவரோட 'அம்மா பக்கத்து நெருங்கிய உறவினர்கள்' கொண்டுவந்த சீர்களைத் தட்டில் ஏந்திக்கிட்டுப் பாட்டுப் பாடியவாறே வாசல் கேட்டில் இருந்து புறப்பட்டு உள்ளே வர்றாங்க. அப்ப இதுதான் காசி யாத்திரையா இருக்கும்.

மாப்பிள்ளையின் அம்மா & கோஷ்டி அவர்களை எதிர்கொண்டு அழைச்சு, எதிரும்புதிருமா நின்னு சரிக்குச்சரியாப் எதிர்ப்பாட்டுப் பாடினாங்க. அதன்பின் மாப்பிள்ளையை நாற்காலியில் உக்காரவச்சு கொண்டுவந்த சீர்செனத்திகளை ஒவ்வொருத்தரா எடுத்து அவர் கையில் தந்தாங்க. அவரது அக்காமார் பின்னால் ஒரு பெஞ்சில் உக்கார்ந்துக்கிட்டு அதையெல்லாம் வாங்கி அடுக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பவுன் எடையில் சங்கிலிகள் ஏழெட்டு வந்துச்சு. மறுநாள் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை போடப்போகும் உடுப்பு, இன்னும் பலவிதமான பரிசுப்பொருட்கள்.






சொல்ல விட்டுப்போச்சே..... முந்தா நாள் இரவு எல்லாருக்கும் மெஹந்தி போட்டுவிடறதுக்கு ஒரு பெண்மணியை ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. முதலில் கறுப்பு நிறத்தில் டிஸைன் வரைஞ்சுவிட்டாங்க. அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் ஆனதும் டிஸைனுக்குள்ளே சிகப்பு வண்ணம் வரும்வகையில் இன்னொரு மெஹந்திக் குழாயில் இருந்து 'ஃபில்லிங்' வேலை. ராத்திரி பதினொண்ணுவரை ஒருத்தர் மாத்தி ஒருத்தருன்னு கையை நீட்டிக்கிட்டு உக்கார்ந்திருந்தாங்க. சின்னக்குழந்தைகள்தான் ரெண்டு கையிலேயும் போட்டுக்கிட்டுச் சாப்பிடமுடியாமல் தவிச்சதுங்க. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். இதுவேணுமா அது வேணுமான்னு கேட்டு ஊட்டிவிட்டோம். வழக்கமாத் தின்றதைவிட அதிகமாத் தின்னுதுங்களே அம்மாக்களுக்கு ஆச்சரியம்:-)

பகல் உணவு வழக்கம்போல் ரொட்லி, ரெண்டுவிதமான காய்கறிகள், சாதம், பருப்பு, பாயசம். கூடவே செம்மீன்கள் கறி. ( இதென்னடா..... எப்பப் பார்த்தாலும் மீன்? நண்டு, இறால், அயிரை மீன் இப்படி ஒன்னுவிடாம தினம் வகைக்கு ஒன்னா ஆக்கிப்போட்டுக்கிட்டு இருக்காங்களே. ஒருவேளை பெங்காலிகளைப்போலக் கடல் உணவு, வெஜிடேரியன் வகையில் வந்துருச்சோ? )

ஒரு பக்கம் பூஜை புனஸ்காரமுன்னு இருக்கு, ஒரு பக்கம் விருந்துவகைகள் இப்படி? சாமியையும் சாப்பாட்டையும் போட்டுக் குழப்பிக்கறது இல்லை. இன்னொண்ணும் கவனிச்சேன். தாலி செண்டிமெண்ட் அறவே இல்லை. எப்போதும் ஆடைகளுக்கேற்ற ஆபரணங்கள். நம்ம பக்கம்தான் எது போட்டுக்கிட்டாலும் கழுத்துலே இருக்கும் தாலியை மட்டும் கழட்டவே கூடாதுன்னு நினைக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் கொஞ்சம் பொருந்தாமத்தான் ஆயிருது. மருத்துவமனைகளில் இருக்கும்போது மட்டும் போனாப்போகுதுன்னு ஒரு விதிவிலக்கு.

இன்னிக்கு மாலை மறுபடி பார்ட்டி. நல்லவேளையா மழை ஓய்ஞ்சது. கத்ரி ஹாலில் இவுங்க சமூகம் முழுசும் வந்து கூடுனாங்க. மறுநாள் கல்யாணத்துக்காக வந்து சேரவேண்டிய உறவினர் கூட்டமும் உள்நாட்டின் மத்த பகுதிகளில் இருந்து கடைகளைப் பூட்டிட்டு வந்துசேர்ந்துட்டாங்க. நானூறுபேருக்கு இருக்கும். இவுங்க கல்யாணங்கள் எல்லாம் எப்பவும் ஞாயிறுகளில் மட்டுமே வச்சுக்கறாங்க. அப்பத்தானே எல்லாரும் கலந்துக்க முடியும்.

பேய் மழையா இருந்ததால் கூட்டமே இருக்காதுன்னு (தப்பா) நினைச்சுட்டேன். கல்யாண மாப்பிள்ளை, சின்ன வயசுலே சமையலுக்கு ஊறவச்ச அரிசியை நிறையத் தின்னூட்டாரோ? அதான் கல்யாண சமயம் மழை வந்துருக்கு! நம்ம பக்கத்தில் இப்படி ஒரு சொலவடை இருக்குன்னு 'அண்ணியிடம்' சொன்னப்ப அவுங்களும் சிரிச்சுக்கிட்டே......' சமைக்கும் பாத்திரத்தில் இருந்து தட்டுலே எடுத்து வச்சுக்காமல் பசங்க அப்படியே ( 'ஹண்டி மேஸே காயேகேத்தோ') பாத்திரத்தில் கைவிட்டுத் தின்னால் இப்படிக் கல்யாணத்துக்கு மழை வருமுன்னு சொல்வாங்க'ன்னாங்க. பாருங்க இப்படி வெவ்வேற இடமுன்னாலும் சிலதெல்லாம் ஒன்னுபோலவே இருக்கு!!!!

அங்கே விருந்தில் சாமன்கோட் எனப்படும் மீன்கள்தான் பிரதானமா இருந்துச்சு. என்னைப்போல் இருந்த சில வெஜிடேரியன்களுக்கு மட்டும்
அருமையான ஸ்ரீகண்ட். பந்தி விசாரிச்சுக்கிட்டு வரும்போதே மீன் இல்லாத தட்டுக்கு (மட்டும்) இனிப்பு. எல்லாத்துலேயும் ஒரு கணக்குதான். 'குடி'களுக்கும் குறைவே இல்லை. அது பாட்டுக்கு அது இதுபாட்டுக்கு இது.

கணக்குன்னதும் இன்னொண்ணும் சொல்லணும். சமையலிலும் நம்மைப்போல் கண்ணளவு, கை அளவு என்ற பிஸினெஸெல்லாம் இல்லையாக்கும். சமையலை ஆரம்பிக்கணுமா? எடு அந்த கிச்சன் ஸ்கேலை......ஆத்துலே போட்டாலும் அளந்துதான் போடுவாங்க. ஆஹா.... அதுதானா ஒவ்வொரு முறையும் அதே ருசியில் அமையும் ரகசியம்!!!




கல்யாண வீடுகளிலாகட்டும், இன்னும் வேற விசேஷமா நிகழ்வுகள் ஏதும் இருக்கும் வீடாகட்டும் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கும் ஒருத்தர் கட்டாயம் இருப்பாங்க இல்லையா? கண்ணுக்குப் புலப்படாத வகையில் கையில் சாட்டை வச்சுக்கிட்டு:-))))




இங்கே கமாண்டர் இன் சீஃப் நம்ம மனி மாமிதான். இவுங்களைப் பத்திச் சொல்லலைன்னா அது நியாயம் ஆகாது. இவுங்களை நான் இந்த நாட்டுக்கு முதல்முதலா (அது ஆச்சு 26 வருசம்) வந்து இறங்கிய முதல் நாளின் முதல் மணியிலேயே சந்திச்சேன். அன்னிக்கு அவுங்க வீட்டுலே கல்யாணம். 'ரத்தன்ஜி' குடும்பம். அண்ணனும் தம்பியுமானக் கூட்டுக்குடும்பத்தில் தம்பி மகளுக்குக் கல்யாணம். அழையாத விருந்தாளி? ஊஹூம். இல்லவே இல்லை. எங்க கம்பெனி பங்குதாரர்களுக்கு அழைப்பு இருக்கே. நாங்களும் இப்பக் கம்பெனி ஆட்கள் இல்லையோ? இன்னும் சொல்லப்போனால் இவர்கள் உறவினர்கள் வேற. ஊர் நிலவரப்படி எல்லாருக்கும் சாப்பாடு அங்கேதான். அதனால் மொத்த ஊரையும் வந்த அன்னிக்கே சந்திக்கும் வாய்ப்பு.

மனி மாமியின் மைத்துனரின் இன்னொரு மகள் அட்டகாசமா பரத நாட்டியம் குச்சிப்புடி நடனம் ஆடுவாள். வயசு ஒரு ஏழு இல்லை எட்டு இருக்கும். ஒலிநாடாவில் வரும் பாட்டுகள். இங்கே எந்த விழா நடந்தாலும் (கோயில், Bula Festival, பள்ளிக்கூட விழாக்கள் இப்படி ) இந்தக் குட்டிப்பெண்ணின் நடனம் கண்டிப்பாக இருக்கும். எங்கே, யார்கிட்டே கத்துக்கிட்டதுன்னு விவரம் கேட்டப்ப ஆச்சரியமா ஆகிப்போச்சு. இவள் ஒரு ஏகலைவி:-) துரோணர் யாராம்? வீடியோக்கள்தானாம். அந்தப்பொண்ணு அமெரிக்கா, இங்கிலாந்துன்னு பல இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கு.

இப்படித் தன்குடும்பத்துலேயும் கலை வளர்த்ததில் மாமியின் பங்கு அதிகம். இவுங்க சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் ஆர்வமாப் பங்கெடுத்துக்குவாங்க. எதையும் விட்டுக்கொடுக்கறதில்லை. வீட்டுலே விசேஷமா? கூப்புடு மனி பெ(ஹ)ன்னை:-) போனவருசம் மும்பைக்குப்போய் ரெண்டு முழங்கால் முட்டிகளிலும் அறுவை சிகிச்சை செஞ்சுக்கிட்டாங்களாம். ஆனாலும் இந்தக் கல்யாணத்துலேயும் கர்பா, தாண்டியான்னு அசராம ஆடியும் பாடியும் ஜமாய்ச்சது இவுங்கதான். மாமியின் கணவர் இறந்து இப்ப ஒரு 18 வருசமாச்சு.

இன்னொன்னு பாருங்க. இங்கே இவர்கள் சமூகத்தில் விதவைகளை நல்லமுறையில் நடத்தறாங்க. கணவனுக்கு விதி முடிஞ்சு அவர் போயிட்டார். அதுக்காக மனைவியை ஓரங்கட்டணுமா? நியூஸியில் எனக்குத் தெரிஞ்சத் தமிழ் பெண்மணி ஒருத்தர், கணவனை இழந்தவர். அவர் மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனபோது அதைப் பார்க்கக்கூட அனுமதி இல்லைன்னு சொல்லி அழுதார். இப்ப இளைய மகனுக்கும் பெண்பார்த்துக்கிட்டு இருக்கோம். என் நிலை இப்படி ஆச்சேன்னு மனப் பிரயாசம்.

அப்ப நான் சொன்னது என்னன்னா...... ' உங்களுக்குத்தான் உண்மையில் மகன் கல்யாணம் பார்க்க உரிமை இருக்கு. மகன் நல்லா இருக்கணுமுன்னு மனப்பூர்வமா நினைக்கறது அவருடைய தாய் தகப்பந்தானே. ச்சும்மா வந்து கூட்டத்தில் சாப்புட்டுட்டுக் கொண்டாடிட்டு போறவங்களை விட உங்க ஆசீர்வாதம்தான் அவருக்கு முக்கியம்.'


(நீலப் புடவையில் மனி மாமி.)

நானும் மனி மாமிக்கு நீங்கதான் இங்கே கமாண்டர் இன் சீஃப்னு பட்டம் கொடுத்துப் பாராட்டுனேன். "ஆப் நைத்தோ இதர் இத்னா மஜா ஆயேகா நஹி. சப் ஸே ஆகே ஆப். பஹூத் அச்சா லகா."

தொடரும்.........:-))

பின்குறிப்பு:

நம்ம சிவிஆர் சொற்படிப் படங்களைப் பெருசாக்கலாமுன்னு நெருப்புநரி மூலம் போட்டுப் பார்த்ததில் சரியாத்தான் வந்துச்சு. ஆனால் அதுகளை நமக்கு வேண்டிய இடத்துக்கு இழுத்துக்கிட்டு வர முடியலை.

பரிசோதனைக்காகப் பப்ளிஷ் செஞ்சு பார்த்துட்டு டிலீட் செஞ்சேன். ஆனா.... கூகுள் ரீடரில் உக்கார்ந்துக்கிட்டு போகமாட்டேன்னு ஒரே அடம். அது அன் எடிட்டட் வர்ஷன் வேற.

இப்ப எக்ஸ்ப்ளோரரில் போய் இழுத்துவந்து வச்சுருக்கேன். சோதனையாப் போயிருக்கு இந்தப் பதிவு(-: