Monday, September 03, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 17

12/10
இன்னைக்குப் போயி அடுக்களை கேபினெட்க்கு கைப்பிடியெல்லாம் முடிவு செஞ்சாச்சு. பார்க்க ரொம்ப ப்ளெயினா, லேசா ஒரு கர்வ் இருக்கும் கைப்பிடிகள். அழுக்கு சேராது. துடைக்கறதும் சுலபம். அந்தக் கடை இருக்கறதே நமக்குத் தெரியாது! 'கிங்'தான் கூட்டிட்டுப் போனார். விதவிதமான நல்ல சாமான்கள் அங்கே இருக்கு!

பூட்டுகள் தயார்ன்னு ·போன் வந்ததாம். இவர் போய் வாங்கிகிட்டு வந்தார். அந்தம்மா 'தப்புத்தப்பா'க் கொடுத்திருக்காங்க. அதை திருப்பிட்டு வந்தோம். நல்லது வந்ததும் ஃபோன் பண்ணுவாங்களாம்! இவங்க வேற, ஏதாவது கொஞ்சம் மாத்தணும்னு சொன்னாலும் பயந்திருவாங்க!


எலக்ட்ரீஷியன் தான் பொறுப்பா வேலை செஞ்சுகிட்டு இருக்கார். இன்னும் கொஞ்சம் ஒயர் வேணுமாம். வாங்கிக் கொடுத்தாச்சு!



கதவுங்க எல்லாம் 'ஹேக்ளி'யிலேயிருந்து வந்திருச்சாம். பாத்தோம். நல்லாதான் செஞ்சிருக்காங்க. நிலைப்படியோடவே வருது! கொஞ்சம் வேலை தெரிஞ்சிருந்தா, நாம வீடு கட்டறது இங்கே சுலபம்தான்:-) அதுக்குள்ளே சில கதவைப் போட்டுட்டேன்னு பெருமையாச் சொல்லிக்கிட்டுக் கூட்டிட்டுப்போய் காமிச்சார் க்ரேக். எனக்கு ரெண்டு கைகள் போதுமா, தலையில் அடிச்சுக்க? பாருங்க, கண்ணாடிக் கதவை ரெண்டு 'பெட் ரூமுக்கு' போட்டு வச்சிருக்காரு! யாராவது, கண்ணாடிக் கதவைப் படுக்கை அறைக்குப் போடுவாங்களா? இங்கே என்ன லைவ் ஷோவா நடக்குது? :-) இந்தச் சின்ன விஷயம் கூடவா மனசுக்குத் தெரியாது? அசடு வழியறார் க்ரேக்:-)






'க்ளிண்டன்' அவனோட 'முதல் கதவு' போட்டுட்டானாம். சந்தோஷமா இருந்தான். அந்தக் கதவுகூட அவனை ஒரு ·போட்டோ எடுத்தேன். சின்னப் பையந்தானே! 17 வயசுதான். தொழில் படிப்புன்னு நம்ம வீட்டுலே அவன் 'வேலை கத்துக்கறான்.' இது பாத்ரூம் கதவு. நல்லவேளை இதையும் ஸீ த்ரூவா போடலை:-)




சாயந்திரம் போனப்ப எல்லாக் கதவுகளும் போட்டிருந்தாங்க. ஆனா, கேவிட்டி ஸ்லைடர்' கதவுகளையேக் காணோம். அப்புறம் 'பில்டருக்கு' ஃபோன் செஞ்சு மெஸ்ஸேஜ் விட்டிருக்கு!

கோட் கப்போர்டுக்கு ஒரு இடத்துலே 'பை ஃபோல்ட்' சொல்லிட்டு, இங்கே ஏற்கனவே ஆர்டர் செஞ்சதை கேன்ஸல் செய்யலே. இப்பப் பார்த்தா இது வந்திருக்கு! உடனே இன்னொரு இடத்துலே செய்யச் சொன்ன ரெண்டு கதவுலே ( பை·போல்ட்) ஒண்ணைக் கேன்ஸல் செஞ்சோம்!

13/10
இன்னைக்கும் எலக்ட்ரீஷியன் தான் வேலை செய்யறார். இன்னும் ஒயர் வேணுமாம். வலைப்பின்னல் மாதிரி ஒயருங்க கண்டமேனிக்கு இழுத்துருக்கு. இதுலே வீடு முழுக்க பாட்டு கேக்கலாமுன்ற ஆசையில் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர்ன்னு வேற ஏற்பாடு. இப்பவே ஒயர் இழுத்து வச்சுட்டா, வேணுங்கறபோது சுலபமாப் போட்டுக்கலாமாம். எல்லா அறைகளிலும் ரெவ்வெண்டு டெலிபோன் ஜாக், டிவி ஆண்டெனா, நாலு சுவத்துக்கும் ப்ளக் பாய்ண்ட்ஸ்ன்னு களேபரமா இருக்கு. மத்தியானம் மூணேமுக்காலுக்கு ஜன்னல் வருதாம். நான் போகணும்! ஒரு நாலேமுக்காலுக்குப் போனா, ஜன்னல் வந்து அதை சரியான இடத்தில் வச்சிருந்தாங்க! வாசக்கதவும் வந்து அதையும் பொருத்தியாச்சு.ஆனா, ஜன்னலுங்க எல்லாம் தப்பான டிசைன்!




ஒரு படுக்கை அறையோட ஜன்னல், முதல்லே பெருசா செஞ்சுட்டு திருப்பி எடுத்துகிட்டுப் போனது வந்திருச்சு, ஆனா அதையும் சரியாச் செய்யலெ! எத்தனைதடவைதான் திருப்பித் திருப்பி எடுத்துகிட்டுப் போவாங்களோ?
நாளைக்கு காலையிலே 11 மணிக்கு வராங்களாம். தப்பான ஜன்னலுங்களை என்ன செய்யலாம்னு யோசிக்கறதுக்கு! இந்தக் கம்பெனியைப் பத்தி ஒரு தகவல் இப்ப சொல்லப்போறேன் உங்களுக்கு.



இந்தக் கம்பெனிக்கு முதல் முதல்லே போனப்ப, நமக்குக் கொடேஷன் கொடுத்து நம்ம வேலைக்குப் பொறுப்பு எடுத்துக்கிட்டார் ஒருத்தர். தேவைக்கு ஆறுவாரம் இருக்கும்போது ரிமைண்டர் கொடுக்கலாமுன்னு இருந்தோம். இதுக்கு அடுத்தவாரமே இந்தக் கம்பெனியை மூடப்போறாங்கன்னு பேப்பரில் செய்தி வந்துச்சு. சரி, அப்ப இன்னொரு இடத்துலே கொடேஷன் வாங்கலாமுன்னு இருந்தோம். அப்ப இந்தப் பொண்ணு 'லிஸா', ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்து, 'எங்கப்பாவோட கம்பெனிதான் இது. பார்ட்னர்ஸ் கூடத் தகராறு ஆகிப் போய்த்தான் மூடும்படியான நிலை வந்துருச்சு. இப்ப தகராறை ஒருமாதிரி சரி செஞ்சுட்டோம். இனிமே நாந்தான் இந்த பிஸினெஸைப் பார்த்துக்கப் போறேன். நான் பொறுப்பு எடுத்துக்கிட்டதும் செய்யப்போற முதல் வேலை உங்களுதுதான். எனக்கு நீங்க சப்போர்ட் செய்யுங்க. நல்லபடியா ஜன்னல்களைச் செஞ்சுதரேன்'னு சொன்னாங்க. எங்க வேலைப் பொறுப்பை ஏத்துக்கிட்டவர் இப்ப வேலையை விட்டுட்டுப் போயிட்டாராம். அவுங்கத் தொழிற்சாலைக்கு நேர் எதிரா இருக்கும் இன்னொரு இடத்துக்குத்தான் போயிருக்கார். எதாவது வெரிஃபை பண்ணணுமுன்னா நாங்க அவர்கிட்டேக் கேட்டுக்கிட்டுச் சரியா செஞ்சு தரோமுன்னு சொன்னாங்க.

எனக்கும் ஒரு கடை நடத்தி( மூடு)ன அனுபவம் இருந்ததாலே, 'பாவம். ச்சின்னப் பொண்ணு'. (என் மகளைவிட ரெண்டு மூணு வயசுதான் அதிகம் இருக்கும்.) அழமாட்டாக் குறையாக் கேக்குது. ஒரு ச்சான்ஸ் கொடுக்கலாமுன்னு கொஞ்சம் இரங்கிட்டேன். பெண் என்றால் பேயும் இரங்குமாமே............ இந்த விஷயத்தி (லும்)ல் கோபாலைப் பேசவே விடலை(-:



பொய்டு ஃபோன் செஞ்சாரு. க்ளாஸ் ப்ரிக் விஷயம் சொன்னேன். 'அது சரியான அளவு இடம்தான் விட்டுருந்தேன் ப்ளானில். நான் 'பில்டர்'கிட்டே பேசறேன்'னு சொன்னாரு!


செங்கல் வைக்கப்போற ஆளு ஃபோன் செஞ்சு, நாளைக்கு கொஞ்சம் அட்வான்ஸ் வேணும்னு சொன்னாரு!. என்னவோ எல்லாம் ஒரே குழறுபடியா இருக்கு.
பிங்க்பேட்ஸ் வந்து இறங்கியிருக்கு. சனிக்கிழமை போடறாங்களாம்!

14/10
காலையிலே 11 மணிக்கு லிஸா & க்ரூப் 'டாண்'ணு வந்துட்டாங்க! நம்ம 'ப்ளான்'லே இருக்கறதும் அவுங்க சப்ளை செஞ்சதும் வேற வேற டிஸைன்! மன்னிப்பெல்லாம் கேட்டாங்க. அதையெல்லாம் சரி செஞ்சு தரேன்னு சொன்னாங்க. ஆனா ரெண்டு வாரம் ஆகுமாம்! கண்ணாடி போடற ஜன்னலுங்களையெல்லாம் கணக்கெடுத்துக்கிட்டுப் போனாங்க! '

லிஸா'கிட்டே 'நான் உங்க கம்பெனியை மத்தவுங்களுக்கு ரெகமண்ட் செய்யமாட்டேன்னு சொல்லிட்டேன். அவுங்க எல்லாம் போன பிறகு, 'நீ என்னாத்துக்கு இப்படி முகத்துக்கெதிராச் சொன்னே? உன் மனசுலே போட்டு வச்சுருக்கலாமுல்லே'ன்னு இவர்தான் கத்துனார். உண்மையைச் சொன்னாத் தப்புங்களா?


15/10இன்னைக்கும் எலக்ட்ரீஷியன்தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தார்! சில அறைகளில் பிங்க் பேட்ஸ் போட ஆரம்பிச்சாச்சு! கராஜ்லே அடுக்கி இருக்கற பேட்ஸ்ங்களை வேற இடத்துக்கு மாத்தச் சொன்னோம். கராஜ்லேதான் மழைத் தண்ணி வந்திருதே. பில்லர்ங்க வந்து இறங்கியிருக்கு. பாலிகட் ஆளுங்க வந்து மறுபடியும் பாத்துட்டுப் போனாங்க!





16/10
காலையிலே கோயிலுக்குப் போறமுந்திப் போனோம். ரெண்டு பசங்க, நம்ம க்ளிண்டனும், அவன் ஃப்ரெண்ட் ஃப்லிப்பும் பிங்க் பேட்ஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க! கிரேக் கதவுங்களையெல்லாம் சரியாப் போட்டுக்கிட்டு இருந்தார். 'ஸ்லைடிங் கதவு' நல்லா சுலபமா சாத்துது! கொஞ்சம் பிரவுண் பேப்பர் கொண்டுபோய் முன்கதவு கண்ணாடி வரப்போற இடத்துலே ஒட்டுனோம்!




தூண் கராஜ் பக்கம் வர்றதை ஒருத்தர் வந்து 'செட்' பண்ணிக்கிட்டு இருந்தார். அடி வட்டத்தை நல்லா மழ மழன்னு ஆக்கி அதும்மேலே ரெண்டு பாகமா வர்ற தூணை ஒருவிதமான பசை போட்டு ஒட்டினார்.



நம்ம மஹா விஷ்ணு 'நரசிம்ம அவதாரம்' எடுத்தப்ப, ஹிரண்யனைக் கொல்ல தூணை ரெண்டாப் பிளந்துகிட்டு வந்ததாச் சொல்வாங்க பாருங்க. இப்போ அப்படி வந்தார்னா சரி பாதியா பிளக்கலாம்!




மத்தியானமா மறுபடிப் போய்ப் பார்த்தோம். வேலை நடந்துகிட்டு இருந்துச்சு! கராஜ் முன்பக்கம் ரெண்டு தூணையும் வச்சாச்சு. பசை ஒட்டிக்கறதுக்காகக் கயிறுபோட்டு கட்டி இருந்தாங்க!



அப்பப் பாத்து, நம்ம மலேசிய நண்பர்கள் ரேச்சலும் விஜயனும் வந்தாங்க. அவுங்களுக்குச் சுத்திக் காமிச்சோம்!
இன்னைக்கு ராத்திரி தமிழ்ச் சங்க நவராத்திரி விழா முடிஞ்சு வெளியே வந்து பாத்தா, பயங்கர மழை பேய்ஞ்சிருக்கு. வீட்டுக்கு வரும்போதேமணி 10 ஆயிருச்சு. வீட்டுலே ஏதாவது ஒழுகி இருக்குமோன்னு ஒரே கவலையா இருக்கு.



சங்க நிகழ்ச்சிங்கவேற ரொம்ப நல்லா அமைஞ்சுடுச்சு! அதுலே என் மனசுக்கு ரொம்பத் திருப்தி. நாந்தானே கலை & கலாச்சார ஒருங்கிணைப்பாளர். மனசு நிறைஞ்சதாலேயும், வீட்டுக் கவலையாலேயும் சரியாத் தூக்கமே வரலை!



தொடரும்................

Sunday, September 02, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 16

7/10
இன்னைக்கும் வொயரிங் நடந்திருக்கு! 'க்ரேக்' வந்து பாக்கி வச்சிருந்த 'பாலீஸ்டைரீன் போர்டு' களை அளவா வெட்டி, கராஜ் சுவத்துக்கு லைனிங் போட ஆரம்பிச்சிருக்கார்.
இன்னும் கூரை சரியாகலே. மழைத்தண்ணி உள்ளெ இறங்கியிருக்கு.


8/10
ஜன்னல்கள் எல்லாம் இன்னைக்கு வருதுன்னு சொன்னாங்க! வந்துடுச்சுன்னு நியூஸ் வந்தது. மத்தியானமாப் போனேன். அதுக்குள்ளே பாத்ரூம், லவுஞ், மாஸ்டர் பெட்ரூம்லே வர்ற ரெண்டு சின்னது எல்லாம் போட்டுட்டாங்க! கார்னர் விண்டோ ஒரு பெட் ரூம்லே சரியா இருக்கு. இன்னொண்ணுலே அளவு சரியில்லே, பெருசா இருக்கு. 'கேட் டோர்' பார்த்தா ரொம்பச் சின்னதா இருக்கு. நம்ம ஜி.கே அதுலே நுழைஞ்சிருவாரான்னு தெரியலே. கப்புவுக்குச் சரியா இருக்கும். அது ஒல்லிக்குச்சி உடம்புக்காரி. லிவிங் ஏரியாவில் வெளிச்சத்துக்காகத் தரையில் இருந்து சுவர் உயரத்துக்குப் பெரிய ரெண்டு மீட்டர் அகல ஜன்னல் வந்துருக்கு.





அப்புறம் ரெண்டாவது பாத் ரூம்லே வர்றதும் ரொம்பப் பெருசா இருக்கு. ஸ்டடின்னு போட்டு ஒரு ஃப்ரேமும், கதவும் இருக்கு. நாம் 'சாலிட் டிம்பர் டோர்' தானே ஸ்டடிக்குச் சொல்லியிருக்கோம்? இன்னும் 5 ஜன்னலுங்க வேற வரலையாம்!





எதா இருந்தாலும், 'க்ரேக்' ஜன்னல் (ரைலாக் Rylock) காரங்களுக்கு சொல்லியாச்சாம். அவுங்க வந்து சிலதையெல்லாம் திருப்பிக் கொண்டுபோய்ச் சரி செஞ்சு கொண்டு வரணுமாம்! ரைலாக் கம்பெனி அவுங்க விளம்பரத்தை மட்டும் ஊருக்கு முன்னாலே கொண்டு வந்து மாட்டியிருக்கு.





இவுங்க கிட்டேயும் நம்ம வீட்டோட 'ட்ராயிங்' இருக்கு.( இன்னும் ஹெலன் க்ளார்க், நம்ம பிரதம மந்திரிகிட்டதான் கொடுக்கலே) மேலும் ஒருநாள் வந்து எல்லாத்தையும் அளவு எடுத்துக்கிட்டு வேற போனாங்க.அப்ப எப்படி தப்பா செஞ்சிருவாங்க?





நாளைக்கு வீக் எண்ட் வேற. திங்கட்கிழமை கதவுங்க வரப்போகுது. என்ன ஆகுமோ? ஜன்னல் எல்லாம் ஒரே நாளிலே வச்சிருவாங்களாமே!

9/10
மத்தியானம் போனா அங்கே ஒரு கூட்டமே இருக்கு! எலக்ட்ரீஷியன் குடும்பம் பூராவும் வேலை செய்யறாங்க! சரி, வேலை முடியட்டும்னு இருக்கோம்.





10/10
கிச்சன் கிங் வந்தாருன்னு எல்லோரும் அங்கெ போனோம். அடுக்களையிலே ரேஞ்ச் ஹூட்க்கு அவுட்லெட் எங்க வைக்கணும்னு சொன்னாரு.அப்படியே ஒரு புது வீட்டு 'ஓப்பன் ஹோம்' போய் வார்ட் ரோப் எப்படி வைக்கணும்னு பாத்துட்டு வந்தோம். இன்னைக்கு ஒரு 'பில்டிங் சாமான் விக்கற இடம் 'ரிஸீவர்ஷிப்'லே போயிருச்சு. அதனாலெ சேல் இருக்குன்னு போனோம். நமக்கு அங்கெ ஒண்ணும் பெருசா இல்லே. வீடு மராமத்து / ரினொவேஷன் பண்ணுறவங்களுக்கு சாமான்கள் இருந்தது!


இன்னும், என் மனசை சுத்திகிட்டே இருக்கற ஒரு விஷயத்தைச் சொல்றேன்.
இங்கே நம்ம நண்பர்கள் (!) சிலர், எங்களைப் பாத்தவுடனே கேக்கறது இப்படி.


" வீடு எப்படி வந்துருக்கு? முடிச்சிட்டாங்களா?"

" இல்லே. அப்படி முடிஞ்சிடுமா? இன்னும் பல வேலைங்க பாக்கி இருக்கு"

" எந்த ஸ்டேஜ்லே இருக்கீங்க?"

" இப்பத்தான், எலக்ட்ரிகல் வேலை நடக்குது. இன்னும் ஜிப் போடணும் எக்ஸட்ரா எக்ஸட்ரா...."

" உங்களுக்கு நல்ல பொறுமை இருக்கு. எங்களாலே இப்படி முடியாது. நமக்கெல்லாம் சட்டுன்னு வேலை முடியணும்..."

இப்பத்தான் என் சந்தேகம் இன்னும் 'ஸ்ட்ராங்கா' ஆகுது! ஆமா தெரியாமத்தான் கேக்குறேன்!


இவுங்க வீடு கட்டறதுன்னா, சாமான்களைப் பாக்காம, விலை எல்லாம் விசாரிக்காம அப்படியே போய் வாங்கிடுவாங்களா? ஒரு கத்தரிக்கா வாங்க நாலு கடை போறவுங்க இவுங்க. நம்ம கிட்டே கேக்கறது இப்படி, அதுவும் ஒரு காய்கறிக் கடையிலே எங்களைப் பார்த்திட்டு!


இவரு சொல்றாரு, 'இதை எல்லாம் நான் கண்டுக்கறதே இல்லை. இந்தக் காதுலே வாங்கி அந்தக் காதுலே விட்டுருவேன்'ன்னு!


எனக்குத்தான் இவுங்க இப்படிச் சொல்றப்ப எரிச்சலா வருது! அடப் போங்கப்பா..........


11/10
இன்னைக்குப் பொழுது விடிஞ்சதுலே இருந்து ஒரே ஓட்டம்தான்! இவரு ரெண்டு நாளைக்கு லீவு போட்டிருக்கார். காலையிலே 'க்ளாஸ் ப்ரிக்' பார்க்கப் போனோம். ப்ளான்படி 15 அங்குலம் இடம். ஆனா இப்ப அளந்தா வர்றது 14 அங்குலம் அகலம், உயரம் 2 மீட்டர். இதுபோல ஒரு கதவுக்கு 2 பக்கமும் வருது! க்ளாஸ் ப்ரிக்கோட அளவு 7.5 " சதுரம். 2 வைக்கணும்னா 15 அங்குலமிடம் வேணும். அதான் இப்ப ஒரு அங்குலம் காணாமே. சின்ன இடத்துக்கு அரை ப்ரிக் இருக்குன்னாங்க. பாத்தாஅது வெறும் வெள்ளைக்கலர் ( கலர் லெஸ்) அதுகூடப் பாருங்க முழுசு 7.70 $ அரை 6.60 $. ஒண்ணொண்ணும்! அதுக்கு ஃப்ரேம் தனிக்காசு. தொலையட்டும்னு பார்த்தா வெறும் கலர் இல்லாம வைக்கணும். கிழக்கு பார்த்த இடம், வானவில் போல வர்ணம் வீட்டுக்குள்ளெ வரும் என்ற கற்பனையெல்லாம் போச்சே. எனக்கு மனசே சரியில்லே. ஹூம்......என்னதான் இது தான் 'காம்ப்ரமைஸ்' வீடானாலும் அதுக்காக இப்படியா?



அந்தக் காசை 'ஷோ கேஸ்' வைக்க செலவு செய்யலாம்னு நினைச்சுகிட்டேன். அதுவும்கூட ·ப்ரீ ஸ்டேண்டிங்தான். சுவத்துலே பதிச்சது இல்லே! இன்னும் கேபிள் வேணும்னு கேரி சொன்னதாலே அங்கெ போனோம். க்ரேக் & க்ளிண்டன் வந்தாங்க! டாய்லெட் வைக்கும் இடம் ரொம்பச் சின்னதுன்னு அங்கே வரும் கட்டைச் சுவரைக் கொஞ்சம் நகர்த்தச் சொல்லி செஞ்சாச்சு!


அப்படியே 'ப்ளேஸ் மேக்கர்' போய் 'மெல்டிக்கா'ப் பலகை விலை விசாரிச்சுகிட்டு வந்தோம். வார்டு ரோப்க்கு பலகை போடணுமே!
சாப்பிட்டுட்டு, எலக்ட்ரிகல் வேலைக்கு சில சாமான்கள் வாங்கிக் கொடுத்தோம். மத்தியானம் 'செக்யூரிட்டி அலாரம்' போடற ஆளு வந்தார். நம்ம கடையிலே இருந்ததைக் கழட்டி வச்சிருந்தோம்லே அதையே போடலாம்னு முடிவாச்சு. அப்புறம் இன்னும் 4 சென்ஸர் போட்டுடலாம்னு! இந்த சென்ஸர் எல்லாம் பூனை பிடிக்காததா இருக்கணும். நம்ம வீட்டுலே பூனைகள்தான் எஜமானர்கள். முன்னுரிமை எல்லாம் அவுங்களுக்குத்தான். இதுங்க வீடு முழுக்கக் கண்டபடி ஓடியாடும். அலாரம் போட்டுட்டு நாம் வெளியே போனா, அது இவுங்க நடமாட்டத்தை உணர்ந்து மணி அடிக்க ஆரம்பிச்சுரும். அதனால் நடமாடுறது மனுஷனா, இல்லை ச்செல்லங்களான்னுப் பார்த்துட்டு, அப்புறமாக் கத்தும் சென்ஸர் வேணும் நமக்கு. அலாரம் அடிச்சா என்னன்னு பார்க்கறதுக்கு, செக்யூரிட்டி ஆளுங்க வந்தா, ஒவ்வொரு விசிட்டுக்கும் 25 டாலர் வேற சார்ஜ் பண்ணிருவாங்க. நான் திருடனுக்குப் பயப்படுவேனா இல்லை பூனைக்குப் பயப்படுவேனா? அலாரம் ஆளு,எல்லாம் பார்த்து விவரம் கேட்டுக்கிட்டுப் போயாச்சு. செக்யூரிட்டி அலாரம் போட்டா வீட்டுப்பொருள்கள் காப்புரிமைக்கு ஒரு நல்ல தள்ளுபடியும் கிடைக்கும். பூனை சைஸுலே திருடன் இருப்பானா? ஒருவேளை இருப்பானோ? நைட் வாட்ச் இல்லாததாலே மாஸ்டர் பெட் ரூமுக்குள்ளேயும் ஒரு கீ பேட் வைக்கணும்.


தப்பாப் பண்ண கதவு, ஜன்னல் எல்லாம் ரைலாக் கம்பெனி ஆளுங்க வந்து கொண்டுபோயாச்சு.



கராஜ்க்கு மேலெ வர்ற பாலீஸ்டைரீன் செய்யும் கம்பெனி ஆளுங்களுடன் 'ட்ரெவர்' வந்தார். அளந்தாங்க. அது செய்யறதுலெ ஏதோ குழப்பமாம். அளவு ரொம்பப் பெருசாம். ஆறு மீட்டர் அகலம் வருது. நாளைக்கு 'பொய்டு'கிட்டே பேசணும்.


கிச்சன் டைல்ஸ் தேர்வுக்கு reptiles கடையில் போய்ப் பார்த்தோம். ஒண்ணுதான் கொஞ்சம் நல்லா இருக்கு. அதை ஒரு சாம்பிள் வாங்கி வந்தாச்சு. இங்கெல்லாம் டைல்ஸ், கார்பெட் சரியா வருமான்னு பார்க்க சாம்பிள் பீஸ் தருவாங்க. அவைகளைக் கொண்டுவந்து வச்சுப் பார்த்துட்டு அப்புறம் வேண்டிய அளவுக்கு ஆர்டர் கொடுக்கலாம். எல்லாம் நோ ஆப்ளிகேஷந்தான். நம்ம சுவர் வர்ணத்துக்கும் பொருத்தமா இருக்கணும். கூடவே அது சேலிலும் இருக்கணும்னா எப்படி? அவ்வாவும் காவால, புவ்வாவும் காவால :-)


தொடரும்...................


மை டியர் பதிவுலக அப்பாக்களே,

இன்னைக்குத் தந்தையர்கள் தினமாம்.

நட்பு வட்டத்தில் இருக்கும் பதிவுலக அப்பாக்களுக்கும்,அப்பாக்களின் அப்பாக்களுக்கும், அப்பா ஆகப்போகும் நண்பர்களுக்கும், அப்பா ஆகும் கனவுகளில் மிதக்கும் அன்பர்களுக்கும்


தந்தையர் தின வாழ்த்து(க்)கள்.



இப்படிக்கு(எல்லாம் அம்மா சொன்னபடிக் கேட்டு எழுதுனது)
கோபால கிருஷ்ணன்.



படத்தில் இருப்பது ஒரு அப்பாவும் மகனும்.





இது நம் வீட்டில் நேற்றலர்ந்த பூ.

நேத்து முதல் நமக்கு வசந்த காலமாம்.