Tuesday, November 08, 2005

நியூஸிலாந்து பகுதி 22



நியூஸிலாந்து பகுதி 22

மவோரி கதைகள் # 7


வைஆட்டா WAIATA


இது என்ன புதுசாங்கறீங்களா? இதுக்கு அர்த்தம் பாட்டு.இவுங்க வாழ்வுலே நிகழ்ந்த பலநிகழ்ச்சிகளை அப்படியே பாட்டாப் பாடுறது இவுங்க வழக்கம். சில பாட்டுங்க, இவுங்கஜனங்களுக்குள்ளே வேற வேற க்ரூப்புக்கு நடந்த சண்டைங்களையும், சிலது மத்த புகழ்பெற்ற நிகழ்ச்சிகளையும், சிலதுகாதல் சம்பவங்களையும், தாலாட்டு போன்ற பாட்டுக்களையும், சிலது இறந்துபோன முன்னோர்களையும்ன்னு பலவிதமா இருக்கு.


அதேபோல சில இடங்களோட பேர்களும், வானத்திலே இருக்கற சில நட்சத்திரங்கள் பேரையும் அடையாளங்களையும்,சிலது குடும்பப் பெயர்களையும், அந்தக் குடும்பத்துலே வழிவழியா வந்தவங்க பெயர்களையும் கொண்டும் பாடிவச்சிருக்காங்க.



இந்தப் பாட்டுக்களைவச்சே ஜனங்களை வாழ்த்தயும் செய்யலாம், பழிக்கவும் செய்யலாமாம். பாட்டுங்களை இயற்றிப்பாடறதுக்குக் காரணமே தேவையில்லை. எதை வேணுமானாலும் பாடலாம்.


ஒரு மனுஷன் மீன் பிடிக்கப்போனப்ப அவனோட தூண்டில் தண்ணியிலே விழுந்து காணாமப் போயிருது. அதுக்கும்ஒரு பாட்டு வந்துருச்சு. அதே மாதிரி, ஒரு பொண்ணு சாப்புட்ட அற்புதமான விருந்து சாப்பாட்டைப் பத்தியும் பாட்டுலேபாடி வச்சுருக்காங்க.



இவ்வளவு என்னத்துக்கு? ஒரு மவோரி கிராமத்துலே ஒரு பன்றி இருந்துச்சாம். அந்தக் காலக் கட்டத்துலே இங்கேபன்றி இனமே இல்லையாம். வெள்ளைக்காரகள்தான் முதல்முதலா பன்றிங்களை இங்கே கொண்டுவந்து, இங்கே இருக்கறபொருட்களுக்குப் பண்டமாற்று செய்தாங்க. அப்படிக் கிடைச்ச ஒரு பன்றியை அந்த கிராமமே அதிசயமா நினைச்சுக்காப்பாத்தி வந்திருக்காங்க. அது ஒரு நாள் செத்துப்போச்சு. அதோட அருமை பெருமைகளையும் ஒரு பாட்டாப் புனைந்துபாடி வச்சிருக்காங்க.


எங்கும் பாட்டு, எதிலும் பாட்டு, எதற்கும் பாட்டு.


( எனக்கு என்னமோ தேவையில்லாம நம்ம கொல்லங்குடி கருப்பாயி ஞாபகம் வருதே!)


மேலே இருக்கற படம் 'டயமண்ட் ஹார்பர்'
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday, November 07, 2005

நியூஸிலாந்து பகுதி 21



மவோரி கதைகள் # 6


சில பழக்க வழக்கங்கள்.


நாம கைகூப்பி வணக்கம் சொல்றது, வெள்ளைகாரங்க கைகுலுக்கி ஹலோ, ஹை ன்னு சொல்றது போலமவோரிங்க வணக்கம் சொல்றதுக்கு வேற ஒரு ஸ்டைல் இருக்கு. அதுதான் மூக்கோட மூக்கை தொடறது.மூக்கோட நுனிங்க உரசிக்கிறது. அதேசமயம் ரெண்டு பேரோட நெத்தியும் லேசாத் தொடும்.


இதன் பேரு ஹொங்கி. இதுக்கு என்ன அர்த்தமுன்னா இப்படிச் சொல்லலாம்.


உன் மூக்கும் என் மூக்கும் தொட்டுக்கிட்டு இருக்கறப்ப நம்ம ரெண்டு பேரோட மூச்சுக்காத்தும் ஒண்ணாக் கலந்துருது.


உன் நெத்தியும் என் நெத்தியும் ஒண்ணையொண்ணு தொடும்போது நம்ம ரெண்டு பேரோட எண்ணங்களையும்,உணர்வுகளையும் பகிர்ந்துக்கறோம்.


இப்படி இவுங்க மூணுமுறை செய்வாங்க. முதல்தடவை வாழ்த்துச் சொல்றதுக்கு,. ரெண்டாம்தடவை அவுங்க முன்னோர்களைநினைச்சு அவுங்களை மரியாதை செய்யறதுக்கு. மூணாவது தடவை இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும்கவுரவிக்கறதுக்கு.


Te Wero டெ வீரோ அறைகூவல்


உலகத்திலே பல நாடுகளிலே இருக்கற அதிமுக்கிய மனிதர்கள் சிலசமயங்களிலே மற்ற நாடுகளுக்கு விஜயம்செய்றாங்க இல்லையா. அப்படி இங்கே வர்ற வி.ஐ.பி.ங்களை இந்த மாராயி இல்லேன்னா வேற எதாவது ஸ்பெஷல்இடத்துக்குக் கூட்டிட்டுப்போய் காமிப்பங்க. இது மாதிரி சமயங்களில் வந்தவுங்கள வரவேற்க நிறைய நிகழ்ச்சிகள்ஏற்பாடு செய்திருப்பாங்க. எல்லாம் ஒருவிதம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கறதாகவே இருக்கும்.


அதுலே முதலாவதா வர்றது டெ விரோ


விஸிட்டர்கள் எல்லாரும் ஒரு இடத்துலே நிற்கணும். அப்ப ஒரு மவோரி வீரர் பழைய பண்பாட்டின்படி உடைஅணிஞ்சுக்கிட்டுக் கையிலே விரோ (ஈட்டி) மாதிரி ஒரு தடியோடு முன்னுக்கு வருவார். இது எதுக்குன்னா, வந்திருக்கறதுநண்பனா அல்லது பகைவனான்னு பழைய வழக்கப்படித் தெரிஞ்சுக்கறதுக்கு. வந்திருக்கற விஸிட்டர்களோடஸ்டேட்டஸைப் பொறுத்து சிலசமயம் மூணு வீரர்கள் வரை வரலாம்.


பயங்கரமா சத்தம் போட்டுக்கிட்டு, முகத்தைக் கடுமையா வச்சுக்கிட்டு, கையிலே இருக்கற தடியை சுழட்டிக்கிட்டுகண்ணை உருட்டி விழிச்சுக்கிட்டு அவுங்க வி.ஐ.பி முன்னாலெ வருவாங்க. இது ஒருவிதமான எச்சரிக்கை.'நீங்க தீய எண்ணத்தோட இங்கே வந்திருந்தா எங்களைக் காப்பாத்திக்க எங்களுக்குத் தெரியும். நாங்க வீரர்கள்'னுசொல்றது.


இப்படிச் செஞ்சுக்கிட்டே முன்னேவந்து ஒரு செதுக்கிய ' டாகி' மர அம்பு( ச்சின்னதுதான்.) தரையிலே குனிஞ்சு வைப்பாங்க.இது மர அம்பாத்தான் இருக்கணுமுன்னில்லே. ஒரு செடியோட ச்சின்னக் கிளையாகவும் இருக்கலாம். ஒரு கொத்துஇலையாவும் இருக்கலாம்.


இதை வந்திருக்கற விஸிட்டர்களிலே ஒரு ஆண் ( பொண்ணுக்கு இதை எடுக்கற உரிமை இல்லை) அதைக் குனிஞ்சுஎடுத்துக்கணும். வந்திருக்கவுங்க அமைதியை விரும்பி வந்தவுங்கன்னு அர்த்தம். எடுக்காம நின்னா சண்டைக்குவந்திருக்காங்கன்னு அர்த்தம்.


இந்த டெ விரோ எப்படி ஏற்பட்டுச்சுன்னா அதுக்கும் ஒரு கதை இருக்கு.


ஆகாயத்தந்தைக்கும், பூமித்தாய்க்கும் பிறந்த மகன்தான் சண்டைக்கான கடவுள் டுமடாவெங்கா. இவர்தான் போர் வீரர்களைக்காப்பாத்துறவர். இவரைச் சுருக்கமா ( செல்லமா) டு ன்னு சொல்றது. இவருக்கு கூடப்பிறந்த தம்பி, தங்கைகள் எல்லாம்இருக்காங்க. ஒரு சமயம், இவுங்க அப்பா அம்மாவான ஆகாயமும் பூமியும் பிரிஞ்சுடறாங்க. அப்ப இவரோட தம்பிடஹிரிமடெஆ க்கு இது பிடிக்கலை. அவருக்கு அப்பாவும் அம்மாவும் சேர்ந்தே இருக்கணுமுன்னு விருப்பம்.ஆனா டு வுக்கு இது பெரிய விஷயமாப் படலை. அண்ணன் தம்பிக்குள் இதன் காரணமா மனக்கசப்பு வந்து சண்டைஉண்டாயிருது. காத்து, மழை, புயல் எல்லாம் துணைக்கு வர, தம்பி டஹிரிமடெஆ அண்ணன் டு வோட சண்டை போடறார். மத்த தம்பிங்க பிரிஞ்சுபோய் ரெண்டு பேர் பக்கமும் சேர்ந்துக்கறாங்க. டு மாத்திரமே பலசாலின்றதாலே அவர்மட்டும்ஜெயிக்கிறார். மத்த எல்லாத்தம்பிங்களும் சண்டையிலே கொல்லப்பட்டாங்க.


ஆரம்பத்துல டு சண்டையைத் துவக்குனதாலேதான் இப்பவும் இந்த உலகத்துலே ஜனங்க சணடை போட்டுக்கறதுக்கு காரணம்ன்னு இந்த மவோரி மக்கள் நம்புறாங்க.


மவோரியிலே எப்படி வரவேற்கணுமுன்னு தெரிஞ்சுக்கறதுக்குப் படம் போட்டிருக்குப் பாருங்க. இன்னிக்கு சேர்ந்த புது அட்மிஷன்பைய(ர்)ன் சித்தனுக்கு அதே மாதிரி வரவேற்பு கொடுங்க, பார்க்கலாம்:-)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Sunday, November 06, 2005

விருச்சிகப் பிள்ளையார்.




















பிள்ளையார் என்னைத்தேடி வீட்டுக்கு வந்திருக்கார். அதுவும் சாதாரணப்பிள்ளையார் இல்லை. விருச்சிகப் பிள்ளையார். அதென்ன ஸ்பெஷல்? இருக்கு. சொல்றேன்.


ஒரு அஞ்சாறு மாசக் குழந்தை தரையிலே உக்கார்ந்திருக்கும்போது கவனிச்சிருக்கீங்களா? ரெண்டு பாதமும்ஒண்ணையொண்ணு தொடறமாதிரி எதிரும் புதிருமா இருக்கும். பெரியவங்களான பின்னே இப்படி உக்கார்றதுபயங்கரக் கஷ்டம். அதே வயசுக் குழந்தை சைஸுலேயும் போஸ்லேயும். இதுக்கு எதாவது பேர் இருக்கும் யோகாஸனத்துலே,இல்லே?.....???? ஆஸனம்.( ஐய்யோ, உக்கார்ந்து பார்த்தா தொடையெல்லாம் வலி(-: முழங்கால் முட்டிகூடத் தரையைத் தொடமாட்டேங்குதே)



கைகள் மட்டும் நாலு. சாமி இல்லையா? ரெண்டு கைகளிலும் மோதகம் போல ஒரு உருண்டை.மற்ற ரெண்டுகைகளிலே வழக்கம்போல சில பொருட்கள். கண்ணுங்க ரெண்டுன்னாலும் சாதாரணமா இல்லாம நெத்தியை நோக்கிப் போறமாதிரி வெர்ட்டிக்கலா இருக்கு! கொஞ்சம் மிரட்டற பார்வைதான்!


இப்பத் தும்பிக்கை. இதுவும் வலம்புரிதான். விசேஷமும் இதுலேதான் இருக்கு. அச்சு அசலா ஒரு தேள் வலப்பக்கம்வாலைச் சுருட்டிக்கிட்டு தும்பிக்கையா இருக்கு. அதோட கால்கை எல்லாம் அப்படியே முகத்திலே ரெண்டு கன்னத்துலேயும்படர்ந்திருக்கு.



பின்னெழிலும் ஜோர்தான். பஞ்சக்கச்சம் செருகியிருக்கரதும், பூணூல் தோள் வழியாச் சரிஞ்சு முதுகுலே படர்ந்துவர்றதும், கட்டியிருக்கும் வேஷ்டியின் டிஸைனும் கூட அட்டகாசம்.( ச்சீனாக்காரன் கில்லாடிப்பா!)



இங்கே ஒரு கடையில் கிடைச்சதுன்னு மகள் வாங்கிவந்தாள், எனக்குத் தீபாவளிப் பரிசாக. ச்சீனாக்காரகள் செஞ்சது.ஹேண்ட்மேட்னு எழுதியிருக்கு. பாக்கறதுக்குக்(!) கற்சிலை. ஆனா நல்ல டெர்ரக்கோட்டா நிறம் உள்புறத்துலே.
கொஞ்சம் வித்தியாசமான பிள்ளையார்தான். பேர் வச்சதுமட்டும்தான் நான். பேர் வைக்கறதுலே நான் பெரிய ஆள்னு கோபால்எப்பவும் சொல்வார். இல்லையா பின்னே?


இங்கே எங்க ஊர்லே கடற்கரையிலே நான் 'கண்டு பிடிச்ச' பிள்ளையாருக்கு பேர் என்ன தெரியுமா?


பேவாட்ச் (BAYWATCH)பிள்ளையார்.


ரெண்டுவாரமா தீபாவளி, ரமலான்னு பண்டிகைக் காலமாப் போயிருச்சு.
இப்பப் பாருங்க நம்ம சரித்திரவகுப்பு அப்படியே நிக்குதுல்லே?

விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு, நாளைமுதல் வகுப்புக்கு ஒழுங்கா வந்துசேருங்க எல்லாரும்.