Friday, July 26, 2019

காதலே.... வா..... வா..... (பயணத்தொடர், பகுதி 122 )

பழைய கோவில் வாசலில் இருந்து  நுழைவு வாயில் பார்த்தால்.... வளாகம் பெருசாவும் அழகாவும் இருக்கு!  அடுத்து வலப்பக்கம் இருக்கும் புதுக்கோவிலுக்குள் நுழைஞ்சோம்.....
ஹைய்யோ..........
ஒரே கிடப்பு ! அழகு, சாந்தம்!  ஆனாலும் மனசுலே கவலை இருக்கோ......


குடவரைக்கோவில்தான். முகப்புலே மட்டும் கட்டடமாத் தெரிஞ்சது!  நின்றும் இருந்தும் கிடந்தும் ஸேவை சாதிக்கும் புத்தர்கள்,  விதானம் உட்பட விதவிதமான சித்திரங்களில் புத்தர் வாழ்க்கைக் கதைகள்,  அப்போது  இங்கே ஆட்சி செய்த அரசர்கள், அவர்களின் குடும்பங்கள், நாட்டு மக்கள்னு எல்லோரையும்  வரைஞ்சு தள்ளி இருக்காங்க!
சிலைகளின் வண்ணங்கள் எல்லாம் புதுக்கருக்கு மங்காமல் பளபளன்னு இருக்கே தவிர  சுவர்ச்சித்திரங்கள் எல்லாம் வண்ணம் குலைஞ்சு, கொஞ்சம் பொலிவிழந்துதான் இருக்கு.  (இனி சரி செய்வாங்களா இருக்கும்...)

புதுக்கோவில்னு சொல்றாங்களே தவிர இதுவும் பழைய கோவிலாத்தான் இருக்கும். நேத்துக்கட்டுனாங்களா என்ன?  இப்போ கொஞ்சம் முன்னால் பார்த்த கோவிலைவிட இது புதுசு என்ற கணக்குதான்.....

கதவைத்தட்டணுமுனா....   மீன்ஸ்.... கைப்பிடி !
'பாண்டியர் ஆண்டபோது'ன்னுடுவாங்களோ....
கொஞ்சம் கூட்டம் இருக்கு இப்போ.....  மக்கள் ஓய்வெடுக்க ஒரு எண்கோண அமைப்பு. அதுக்கு அந்தாண்டை ம்யூஸியம்.
கார்பார்க் வாசலில் பார்த்த காதலர் இங்கேதான் இருக்காங்க.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லையாம்.    வழக்கமா, சீரமைப்பு செய்யும் போது, தரையைத் தோண்டுனபோது கிடைத்தவை என்ற சமாச்சாரங்கள்  ம்யூஸியத்தில் இருந்தாலும், முக்கிய சிற்பமானக் காதலரை க்ளிக்க முடியாமப் போச்சேன்னு..........    எதுக்கும் கேட்டுப் பார்க்கலாமுன்னு  அங்கே ட்யூட்டியில் இருந்தவரிடம் 'காதலர் மட்டும்' என்று கேட்டதும், விநாடி தாமதிச்சவர் சரின்னுட்டார். உங்களுக்கு அதிர்ஷ்டம்தான் போங்க :-)  ரெண்டே ரெண்டு க்ளிக்ஸ்.  நன்றி சொன்னேன்.
துட்டகமுனு மன்னரின் மகன் சாலியனும் அவனுடைய காதலி அசோகமாலாவும்தானாம்.  அவள் கீழ்சாதிப்பெண்ணாம். திரும்பத்திரும்ப அதையேதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

இலங்கைத்தீவின் ஆதிகால அரசன் துட்டகமுனுவுக்கு ஒரே ஒரு மகன்  சாலிய(ன்)பட்டத்து இளவரசன். மிகவும் புத்திசாலி, வீரம் நிறைந்தவன் இப்படி சகலபராக்ரமங்களுக்கும் சேர்ந்த அழகிய இளைஞன்!

சாலியன்  ஒரு முறை  காட்டில் பூப்பறிக்கும் பெண்ணைப் பார்க்கிறான்.  கண்டதும் காதல் ! அவள் அசோகமாலா!
அப்புறம்தான் தெரிஞ்சது அசோகமாலா , கீழ்சாதிப்பெண் என்ற சமாச்சாரம்.  உண்மையான  காதலுக்கு சாதியாவது.... மதமாவது......

அடிக்கடி ரகசியமாக சந்திக்கறாங்க இளம் காதலர்கள்.  அரசருக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு.  மகனாண்டை கோச்சுக்கறார்.  இது இப்படி இருக்க.....

அரசப்ரதானிகள் எல்லோரும் அரசகுமாரன், கீழ்சாதிப்பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கக்கூடாதுன்னு சொல்றாங்க.  அரசகுடும்பத்துக்கு சில நியமங்கள்,  நியாயங்கள், சட்டங்கள் எல்லாம் இருக்குல்லே?

அரசகுமாரனுக்கு மிரட்டல் வருது.  குடும்பமானத்துக்கு எதிரா 'அவளைக் கல்யாணம் கட்டுனா.... என் சொத்துலே சல்லிக்காசு உனக்கில்லை'   கேள்விப்பட்டுருக்கோமா இல்லையா....

அதேதான்.....  அவளைக் கட்டினால்.... நீ அரசனாக முடியாது. ராஜ்ஜியத்தை ஆளும் தகுதி நீக்கம் ஆகிரும்.

பரவாயில்லை. ஐ டோன்ட் கேர்  (எப்படி எட்டாம் எட்வர்ட் வாலிஸ் சிம்ஸனுக்காக  அரச பதவி வேணாமுன்னாரே அப்படியா? )

"நான் அசோகமாலாவை விட இந்த அரசர் பதவியைப் பெருசா நினைக்கலை. எனக்கு வேணாம்...."

அரசருக்கு ஒரு நிமிட் என்ன செய்யறதுன்னே தெரியலை. ஆனால் கட்டுப்பாடு, நியமம் என்பதையெல்லாம் மீறமுடியுமா?

தன்னுடைய தம்பியைக் கூப்பிட்டார்.... 'இனி நீயே  பட்டத்து இளவரசன். எனக்குப்பின் இந்த ராஜ்ஜியம் உனதே '
பரம்பரை அரசர் பதவி, இப்படித்தான் தம்பி குடும்பவாரிசுகளுக்குப் போயிருச்சு!

சாலியனும் அசோகமாலாவும் ஊரைவிட்டுப்போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டு எங்கேயோ சந்தோஷமாக வாழ்ந்தார்கள்...... இப்படித்தானே கதை முடியணும்?
என்னைப்போல் 'கொஞ்சம் மஸாலா' சேர்க்கும் குணம்  இன்னொருவருக்கு இருந்துருக்கு....... அவர் என்ன சொல்றாருன்னா....

அரசர் துட்டகமுனுக்குப் பிள்ளையின் காதல் சமாச்சாரம் தெரிஞ்சுபோய், கடுமையான கோபத்தில் இருக்கார்.  ஒரு நாள் அவர் சாப்பிட உக்காரும்போது, புதுமாதிரியான ஒரு பதார்த்தம்  பரிமாற வர்றாங்க ,  விருந்து உபசரிக்கும் பணியாளர்கள்.

என்ன ஏதுன்னு விசாரிக்கிறார் அரசர்.   ரத்தம்பல என்னும் அபூர்வ மூலிகையில் சமைச்சதுன்னதும் , பேஷ் பேஷ் அருமையான வாசனைன்னு சிலாகிச்சவர்,  யார் கொண்டு வந்ததுன்னு கேட்க,  அசோகமாலான்னு பதில் சொல்றார் பணியாளர்.

அவ்ளோதான்.... அரசருக்குத் தாங்கமுடியாத கோபம்.   கையில் எடுத்த பதார்த்தக் கிண்ணத்தை   வீசி எறிய, அது எதிரில் இருந்த சுவத்துலே போய்  நச்ன்னு சிதறி விழுந்தது.

அப்புறம் ஒருநாள் அரசருக்குக் காலில் எதோ சின்னக் கட்டி மாதிரி வந்து அது புண்ணாகிருது. அரண்மனை வைத்தியர் என்னென்னவோ மருந்துக்கலவைகளைப் பூசிப்பார்த்தும் குணமாகலை. அப்பதான் அவர் சொல்றார், ' அரசே....   ரத்தம்பல என்னும் அபூர்வ மூலிகையால் இதைக் குணப்படுத்த முடியும். அதைத்தேடிக் கொண்டுவர ஆட்களை அனுப்பி இருக்கேன்'னு!

தேடிப்போன மூலிகை காலில் அகப்பட்டதோ? ஊஹூம்.... இல்லவே இல்லை.... காடெல்லாம் தேடிப்பார்த்துட்டுக் கிடைக்கலைன்னு ஆட்கள் வந்து சொல்றாங்க. அப்போ அங்கே  வந்த அரண்மனை சமையல் பணியாளர், 'ரத்தம்பல' என்ற பெயரைக் கேட்டதும்  டைனிங் ரூமுக்கு ஓடிப்போய் பார்க்கிறார்.  சுவத்துலே  படிஞ்சு காய்ஞ்சுப்போய்க்கிடந்த  பதார்த்தத்தைச் சுரண்டி எடுத்துவந்து வைத்தியரிடம் ஓசைப்படாமல் கொடுக்க, அதை மன்னரின் கால் ரணத்தில் தடவினார்  மருத்துவர்.

கால் புண்  குணமாகிருது.  அரசருக்கோ ஆச்சரியம்.  மூலிகை கிடைக்கலைன்னு சொன்னீரே....   இப்போ என்ன மருந்து போட்டீர் வைத்தியரே.....ன்னதும்  தயங்கித்தயங்கி உண்மையைச் சொல்லிடறார்.

அரசருக்கு  அசோகமாலா மேல் அன்பும்  மரியாதையும் வந்துருது. மகனைக் கூப்பிட்டார்.....  உனக்கும் அசோகமாலாவுக்கும்  நாளையே கல்யாணம்னு சொல்லி  கல்யாணம் ஜாம்ஜாம்னு நடந்தது.  மருமகளுக்கு தங்க நெக்லெஸ் எல்லாம் அன்பளிப்பாத் தர்றார் அரசர் துட்டகமுனு!

எல்லாஞ்சரி, ஆனால் அரசபதவி மட்டும் இல்லை. நீங்க  வேறொரு ஊரில் போய்  வாழ்க்கை நடத்துங்கன்னுட்டார்.  அவுங்களும் 'இனி எல்லாம் சுகமே'ன்னு தனிக்குடித்தனம் போயிடறாங்க.

இந்தக் காதல் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்ததுக்கு என்ன காரணமுன்னா....  போன பிறவியிலும் இவுங்க கணவன் மனைவிதானாம். இந்தப்பிறவியில்தான்  வெவ்வேற மாதிரி பிறக்கும்படி  ஆகிருச்சு.  ....  அடடா....  சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்.... முடிவே இல்லாதது...

'இந்த தெய்வீகக் காதலர்கள் சிற்பம்தான்  இது'ன்றதுக்குச் சொல்லப்படும் கதை நல்லா இருந்ததா?

இன்னொரு  ஆராய்ச்சியாளர், இந்தக் கதையை சட்டையே செய்யலை.... சிவனும் பார்வதியும்தான் இதுன்னு சொல்லிட்டுப்போயிட்டார்!

இது எப்படி இருக்கு?

சரி  இது தெய்வீகக்காதலோ இல்லை தெய்வக்காதலோ....   இருக்கட்டும்.... நாமும் ஒன்னு சொல்லிட்டுப்போகலாமா.....    ஆஹா...  இது ரதியும் மன்மதனும் இல்லையோ ! காதல்தெய்வங்களின் சிற்பம்!

இங்கெயே நின்னால் எப்படி..... வாங்க அந்தாண்டை போய்ப் பார்க்கலாம்.   கற்பாறைக்குள் நடுவில் போக குகை மாதிரி ஒரு வழி இருக்கு.  அந்தக்காலத்துலே பிக்ஷுக்கள்  இதுக்குள்ளே  தங்கி இருந்துருப்பாங்க போல....


பக்கத்துக்குன்றுக்கு மேலே போக ஒரு படிகள் அமைப்பு.  இங்கே காலணி அணிஞ்சு போகக்கூடாது. (அதான் ஏற்கெனவே நாம் காலணிகளை வெளியில் விட்டுட்டுத்தானே வந்தோம்? )


அங்கே போனால் இன்னொரு   குன்று!  வியூ பாய்ன்ட் போல....   ஏறிவந்து பார்க்கும் மக்களுக்காக இருக்கட்டுமேன்னு அங்கொரு புத்தரின் காலடிகள். வந்ததுக்குக் கும்பிட்டு, சுத்திவர  வியூ பார்த்துட்டு இறங்கலாம்.

அந்தாண்டை ஒரு சைத்யா இருக்கு!

கடல் போல் பரந்த ஏரி அழகோ அழகு!
ரெண்டாயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன் அரசர் தேவநம்பிய டிஸ்ஸா  ( Devanampiya Tissa ) இந்தக்கோவிலைக் கட்டி இருக்கார்! அப்போதான் நகரத்து தண்ணீர்  வசதிக்காக வெட்டுன ஏரி இந்த  டிஸ்ஸாவெவ.  நகரமுன்னா மக்கள்  வசிப்பாங்க.  அவுங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடே இருக்கக்கூடாதுன்னு அரசர்கள் யோசிச்சுத் திட்டம் போட்ட காலங்கள் அவை !

அனுராதபுரத்தைச் சுத்திப்பார்க்குமுன் மொதல்லே நாம் தங்கப்போகும் ஹொட்டேலில் செக்கின் பண்ணிட்டுக் கிளம்பலாமா?

இதோ (புதிய )நகரத்துக்குள் நுழையும் நம்மை வரவேற்பது யாருன்னு பாருங்க !
நம்ம   அரசர் துட்டகமுனு!!!!

வணக்கம் மஹாராஜா !   நல்லா இருக்கீங்களா? 

தொடரும்...... :-)14 comments:

said...

அப்போ அந்தக்காலத்திலேயே diabetes gangrene என்ற புண் அரசருக்கு வந்து அது சர்க்கரைக் கொல்லி (மலையாளம் பெயர்) என்ற மூலிகையால் குணமாகியது என்று கதை. அப்படித்தானே?
அது எப்படி ஒரு வருஷம் ஆனாலும் புகைப்படங்களைச் சரியாக கையாள்கிறீர்கள்?
Jayakumar​​

said...

பாடசாலை நாளில் டூர் அழைத்து போவாங்க.அப்படி போனதுதான் இந்த இடங்கள். ஆனா சரியாக பார்க்கமுடியல. பிரச்சனையா காலம். அழகான படங்கள். கதை திரும்ப வாசிக்க சுவாரஸ்யமா இருந்தது.

said...

அருமை நன்றி.

said...

துட்டகமனு முகம் தெரியும்படி போட்டோ எடுத்திருக்கக்கூடாதோ? யானையைப் பார்த்ததும் அதை மட்டும்தான் ஃபோகஸ் பண்ணினீங்களா? இல்லை அடுத்த புது கேமராவுக்கு அடி போடுகிறீர்களா?

அரசகுமாரன் காதன் கதை அருமையா இருக்கு. ஆமாம் அந்தப் பெண் அசோகமாலா திரும்பவும் அந்த மூலிகையைக் கொண்டுவந்திருக்க முடியாதா?

said...

விரிவாக தந்துள்ளீர்கள்.

மியூசியத்துக்கு வெளியே மாமரநிழலில் இருக்கைகள் தெரிகின்றனவே நாங்கள் சென்றநேரம் மதியம் என்றதால் சுற்றி பார்துவிட்டு ஆறஅமர்ந்திருந்தோம் வெய்யிலுக்கு இதமாக இருந்தது.மாங்காய்களும் நன்கு காய்த்திருந்தன.

said...

தொடர்கிறேன்....

said...

வாங்க ஜயக்குமார்,

நலமா? ரொம்ப நாளுக்குப்பின் உங்கள் வருகை !!!

படங்களைத் தனியாக எடுத்து வைத்துவிடுவதால் இதுவரை பிரச்சனை இல்லை.... டச் வுட் :-)

said...

வாங்க ப்ரியசகி,

நன்றிப்பா !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

வண்டி போகும் வேகத்தில் ஃபோகஸ் பண்ண ஏது நேரம். அப்படியே க்ளிக் பண்ண வேண்டியதுதான். க்ருஷ்ணார்ப்பணம் !

அசோகமாலாவுக்கு அரசர் கால் புண் விஷயம் தெரிஞ்சுருக்காதோ என்னவோ?

said...

வாங்க மாதேவி,

நாம் போனபோது மாங்காய் சீஸன் முடிஞ்சுருச்சு போல..... வேறெங்கேயும் பார்த்த நினைவில்லை....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர்வதற்கு நன்றி !

said...

வண்ண மயமான புத்தர் காட்சிகள் ...கொள்ளை அழகு

said...

அருமை