Wednesday, July 10, 2019

மேலே இருந்து சாமி பார்த்துக்கிட்டே இருக்கார் !!!!(பயணத்தொடர், பகுதி 115 )

கண்ணைத் திறந்ததும் முதல் தரிசனம் கண்டி ஏரிதான். நாப்பத்தியேழு  ஏக்கர் பரப்பளவு.  இந்த ஏரியின் நிர்மாணம் (!) கண்டி அரசர் ஸ்ரீ விக்ரமராஜசிங்கன் ஆட்சிகாலத்தில்!
சின்னக்குளமும், சுத்திவர வயல்வெளியுமா இருந்த இடத்தில்தான் செயற்கை ஏரி ஒன்னு உண்டாக்க முடிவு செஞ்சு அஞ்சு வருஷத்தில் (கிபி 1807 முதல் 1812 வரை) வேலை முடிஞ்சுருக்கு. மாவேலி (மகாவலி ) கங்கை நதியின் தண்ணீர் வந்து ரொம்பி ஏரி அழகா இருக்கு!  மீன்பிடிக்கத் தடை போட்டுருப்பதால்  படு சுத்தம்!
இந்தக் கண்டி ஏரிக்கு இன்னொரு பெயர் பாற்கடல் !  பெருமாள் இருக்காரோ?  நடுவில் ஒரு  தோட்டம் இருக்கு இப்போ!. இது அரசகுல மங்கையர் வந்து நீராடும் இடமுன்னும், இங்கே வர ஒரு சுரங்கப்பாதை தலதாமாளிகையில் இருக்குன்னும் ஒரு  சேதி. வதந்தியாக இருக்கணும்.
இவ்ளோ சீரும் சிறப்புமா இருந்த அரசரை (மதுரை நாயகர் வம்சம்) ப்ரிட்டிஷார் கண்டியைப் பிடிச்சுக்கிட்ட சமயம் (கிபி 1816) கைது செஞ்சு அவரையும் குடும்பத்தினரையும் வேலூர் கோட்டைக்குக் கொண்டு வந்துட்டாங்க.  சிறையிலேயே இருந்து  சீரழிஞ்சு போச்சுக் குடும்பம். கடைசிவரை  அவுங்க தங்களோட ராஜ்ஜியத்துக்குத் திரும்பவே இல்லை.    இந்தமன்னர்தான் கண்டியின் கடைசி அரசர்.  மன்னரும் மன்னரின் மகன், பேரன்னு  இங்கேயே இருந்து இறந்தும் போயிட்டாங்க.  மன்னரின் பேரன் ஒருவர்  ப்ருத்விராஜ் என்பவர்  பிறந்து கொஞ்சநாளில் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைச்சதும் சிறைவாசத்திலிருந்து வெளியே அனுப்பியிருக்காங்க.

சாதாரண மக்களோடு மக்களா இவர் குடும்பமும் இருந்து வறுமையில் வாடி இப்போ ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால்தான் (2014)  ப்ருத்விராஜ் இறந்தும் போயிட்டார். ப்ச்.... இலங்கை அரசும் சரி, இந்திய அரசும் சரி.... இவுங்களைக் கண்டுக்கவே இல்லை பாருங்க....  :-(

கொஞ்சம் விவரம் இந்தச் சுட்டியில்.....
http://puttalamonline.com/2014-01-18/puttalam-puttalam-news/51709/

குளிச்சு முடிச்சு ரெடியாகிக் கீழே ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போறோம். போறதுக்கு முந்தி இங்கே நம்ம தளத்துலேயே  இந்தாண்டை இருக்கும்  படிகளில் ஏறிப்போய்  ரூஃப்டாப்பில் இருக்கும் 'பொம்மு பார்' பார்த்துட்டு வந்தோம்.   நீச்சல்குளமும் இங்கெதான் இருக்கு.

ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கிட்டு செக்கவுட் செஞ்சாச்சு.  நேராப் போனது  நேத்து ராத்ரி தோசைக்கடை வாசலில் இருந்து பார்த்த புத்தர் கோவிலுக்குத்தான்.
இந்த  நாலைஞ்சுநாட்களில் நான் கவனிச்சது என்னன்னா.... புத்தர் கோவில்களுக்குன்னே தனியா ஒரு டிஸைனில் மதில்சுவர்  கட்டி இருக்காங்க. நம்ம ஹிந்துக்கோவில்களுக்கு வெள்ளையும் காவியுமா  பட்டைபட்டையா கலர் அடிக்கிறதைப்போல.... பல வண்ணங்கள் இல்லாம வெள்ளை நிறம் மட்டுமே!  சைத்யாக்களுக்கும்  (கவிழ்த்துவச்ச பூஜை மணி டிஸைன்) வெள்ளை நிறமே!  கோவிலுக்கு வர்ற மக்களும் பொதுவாக வெள்ளை நிற உடையில்தான் !

இங்கே இருந்து ஒரு ரெண்டரை கிமீ தூரம்தான்.  காமணியில் நுழைவு வாசலாண்டைப் போய்ச் சேர்ந்தோம்.  உள்ளே போக ஒரு கட்டணம் உண்டு. ஆளுக்கு 250 ரூபாய். இந்த டிக்கெட் வாங்கவே ஒரு பதிமூணு படிகள் ஏறிப்போய்த்தான் வாங்கணும்.

அதுக்குப்பிறகு வளாகத்துக்குள்ளே நுழைஞ்சு வலப்பக்கம் இருக்கும்  ஒரு முப்பதுபடிகள் ஏறி மேலே போனால்  முகப்புக் கட்டடம். இதுலேதான் கோவில்.
 குன்றின்மேல் இருக்கும் இந்தக் கோவிலுக்கு மேலே புத்தர் உக்கார்ந்துருக்கார். சமாதிநிலையில் இருக்கும் புத்தர். கண், மூக்கு, வாய் எல்லாம் திருத்தமா இருக்கு!  சாந்தமான முகம்!  கண்டியைக் கண்காணிக்கும் பஹிரவகன்டர், 88 அடி உயரம் !

பஹிரவகன்ட விஹார என்னும் இந்தக் கோவிலுக்குள்ளே போறோம். சின்ன மேடையில் தங்கபுத்தர் ஜொலிக்கிறார். கண்ணாடிக்குப்பின்னே இருந்துதான் ஸேவை சாதிக்கிறார். (அசல் தங்கம்தான் போல! )அவருக்கு ரெண்டு பக்கமும் மும்மூணு புத்தர் சிலைகளின் படங்கள் பெரிய சைஸிலே போஸ்ட்டர் போல வச்சுருக்காங்க.

இந்த ஆறு புத்தர் சிலைகளில் இப்ப நாம் இருக்கும் பஹிரவகன்ட விஹார புத்தர் ரெண்டாம் இடத்தில் இருக்கார்.  முதல்வர் நூறு அடி உயரம்.  இவர்  88 அடி உயரமாம்!
 கோவிலுக்கு வயசு  நாப்பத்தியெட்டு.  ஆரம்பகாலத்தில் சின்னதா குடிசை மாதிரி ஆரம்பம். கோவிலுக்கான இடம் கேட்டு, அது கிடைக்கறதுக்குள்ளே பத்து வருஷம் ஓடிப்போச்சு.  அந்தக் கணக்கில் இப்போ நாம் பார்க்கும் இந்தக் கோவில் கட்டடத்துக்கு வயசு  முப்பத்தியெட்டு!
ஆனால் பெரிய புத்தரைச் செஞ்சு முடிக்க வருஷம் பனிரெண்டு ஆகி இருக்கு.  1980 இல் ஆரம்பிச்ச வேலை 1992 முடிஞ்சது. 1993, ஜனவரி முதல்தேதி  சிலை திறப்புவிழா .  25 வருஷமா அவர்  கண்டியைக் 'கண்டுக்கிட்டே' உக்கார்ந்துருக்கார்!!

சந்நிதிக்கு இந்தாண்டை சின்னப்பிள்ளைகள் ஒரு ஆறேழுபேர் உக்கார்ந்து என்னமோ படிக்கிறாங்க. டீச்சர் போல ஒருத்தர் சொல்லிக்கொடுக்கறாங்க.  சண்டே ஸ்கூல்! புத்தமதப் படிப்பு ! இந்த பௌத்தமதத்தில் ஒரே சாமியைக் கும்பிட்டாலும் தேராவாதம், மஹாயானம், வச்ராயானம் என்ற  மூணு  பிரிவுகள் இருக்கு.  இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, பர்மா இங்கெல்லாம் தேராவாதம்தான். சீனா, ஹாங்காங், ஜப்பான் நாடுகளில் மஹாயானம். திபெத், நேபாள் நாடுகளில் வச்ராயானம்.

(இந்தக் கணக்கில் இந்த மூணு பிரிவு கோவில்களுக்கும் நாம் போயிருக்கோம் இல்லே!  )

வளாகத்தில் போதிமரம்!  மரத்தைச் சுத்தி இருக்கும் அழகான கம்பித்தடுப்புகள் ! மரத்தையொட்டிய மேடைப்பகுதியிலேயே  ஏழு புத்தர்கள் வரிசை!  யானை, சிங்கம் இப்படி.....
 சாமிகும்பிட வந்துருந்த ஒரு குடும்பக் குழந்தைகள் நம்ம கெமெராவுக்குப் போஸ் கொடுத்தாங்க.

இந்தாண்டை கோவில்கட்டடடத்துக்குப் பின்பக்கம் மாடிப்படி . அதுலே ஏறிப்போனோம்.  கலையழகோடு எல்லாம் இல்லை. எதோ வீட்டு மாடிப்படியில் ஏறிப்போறதுமாதிரிதான். பாதி வழி திருப்பத்தில் போதியைத் தொட்டுப்பார்க்கும்படி.... கிளைகள் பரவி இருக்கு!  நல்ல பெரிய மரம்தான்!



நம்ம பக்கத்துக் கோவில்களில்  தலவிருட்சம் என்று வெவ்வேற மரங்கள் இருப்பதைப்போல் இல்லாமல் புத்தர் கோவில்களில்  தலவிருட்சம் என்றாலே போதி மரம்தான். வம்பே இல்லை. மெனெக்கெடவே வேணாம்!  இதைப் பார்த்தோ என்னவோ  இலங்கையில் நான் பார்த்தவரை ஹிந்துக்கோவில்களிலும்  போதிமரத்தையே தலவிருட்சமா வச்சுருக்காங்க. நமக்கும் வம்பில்லை. மரங்களில் நான் அரசமரமா இருக்கேன்னு கிருஷ்ணர் சொல்லி இருக்கார் !   மரங்களின் அரசன், அரசமரம்.  இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் !
பஹிரவகன்ட புத்தர் கண்டி நகரத்தைப் பார்த்தபடி உக்கார்ந்துருக்கார். அதோ தெரியுது கண்டி நகரமும்,  ஏரியும், அதுக்கு அந்தாண்டை ஸ்ரீதலதா மாளிகவாவும்! நல்ல வ்யூ பாய்ன்ட்!  இதுக்கே இந்தக் கோவிலுக்குப் போகலாம்!



தொட்டடுத்து இன்னொரு சைத்யா கட்டிக்கிட்டு இருக்காங்க. நல்ல பெரிய அளவில்தான்!

கீழே இறங்கிவரும்போது,  புத்தர் சிலைக்குக் கீழே இருக்கும் கட்டடத்தின் பின்பகுதியில் இருக்கும்  பிக்ஷுக்களின் தங்குமிடத்தில் இருந்து வெளியே வந்த பிக்ஷூவிடம் சின்னதா ஒரு உரையாடல்.
'எங்கெ இருந்து வந்துருக்கோம்? அங்கே புத்தர் கோவில் இருக்கா? என்ன ஏது'ன்னு  விசாரிச்சார். நம்மூர்லே மூணு புத்தர் கோவில்கள் இருக்குன்றதைச் சொல்லாமல் இருக்கமுடியுமோ?   தாய்லாந்து, வியட்நாம், தைவான் !

(இன்னும் ஒரு ஹிந்துக்கோவில் கட்ட முடியலை  நம்மால்....  ஹூம்.... )

கோவில் தோட்டத்தில்  நின்னு  மேலே இருக்கும் புத்தரைக் கைகூப்பி  வணங்கும் பிக்ஷூதான்  கோவிலைக் கட்டியவராம்!
கண்டியைக் கண்காணிக்கும் பஹிரவகன்டரை வணங்கிட்டுக் கிளம்பினோம்....


தொடரும்........ :-)


12 comments:

said...

இரண்டாம் பெரிய புத்தரை வணங்கித் தொடர்கிறேன்.

said...

மிக அருமை. நன்றி.

said...

'குன்றின்மேல் கோவில்" இப்பொழுதெல்லாம் மலைகளின்மேல் நாலூருக்கும் தெரிய மிகப் பிரமாண்டமாக புத்தர்கோவில்கள் அமைப்பது வழக்கமாகிவிட்டது.

ஏறக்குறைய 30ஆண்டுகளுக்கு முன் கதிர்காமத்திலுள்ள கதிரமலையில் சிறுசந்நிதியில் முருகன் இருந்தான்.இப்பொழுது அம்மலைக்கு இன்னும்மேலே அடிவாரத்திலிருந்து பார்க தெரிய புத்தர் கோவில் கொண்டுள்ளார் காலத்தின் கோலம்.புத்தர் ஆக்கிரமித்துக் கொண்டார்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

குன்றுதோறும் குமரன் என்பதுதானே சொல்வழக்கும் கூட !

சிங்களர் கதிர்காமத்தை Kataragama என்று சொல்கிறார்கள், இல்லையோ?

இப்போதும் கருவறை திரைக்குப்பின்னே தானே?

said...

வெள்ளை புத்தர் , தங்க புத்தர் இருவருமே ஜொலிக்கிறார்கள் ...

அரசர் கதை படிக்கும் போது தான் வருத்தமா போச்சு ...

said...

'கத்தரகம தெவியோ'(தெய்வம்) என்றுதான் சொல்கிறார்கள்.

திரைமறைவில் மந்திரம் எழுதிய தகடு பேழையில் இருக்கிறது அதற்குத்தான் பூசை.விழாகாலத்தில் யானையில் பேழை ஊர்வலமாக சுற்றி வரப்படும் பண்டையகாலம் தொட்டு இதுதான் வழமை.

said...

உங்க பதிவின் மூலம்தான் இன்னும் நிறைய இடங்கள் பார்க்கவேண்டியிருக்கு என தெரிகிறது டீச்சர். அழகான படங்கள்தான் ஹைலட்டே.

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !

said...

@மாதேவி,

இந்தத் தகடுப்பேழை எனக்குப் புதிய செய்தி. திரை மறைவில் சிலை இருப்பதாக நினைத்திருந்தேன்.

said...

வாங்க ப்ரியசகி,


பக்கம் பக்கமா எழுதுவதை ஒரு படம் சொல்லிரும் இல்லையா !!!!