Friday, July 05, 2019

பற்கோவில் ஆஃப் கண்டி (பயணத்தொடர், பகுதி 113 )

கரண்டு கம்பிமேலே கழைக்கூத்தாடிகள்.....  போறபோக்கில் பார்த்ததுதான். இன்றையப் பயணத்தில்  இன்னும் ஒரு  57  கிமீ பாக்கி இருக்கு! நுவரா எலியாவுக்கு வந்த அதே பாதையில் திரும்பிப்போறோம். றம்பொட சுரங்கத்தில் இன்னொருக்கா நுழைஞ்சாச்சு. இதே பாதையில் கம்பொல வரை போயிட்டு அங்கிருந்து  ரைட் எடுக்கணும்.

டீ எஸ்டேட்டுகளையும் சின்னச் சின்ன ஊர்களையும் தாண்டிப்போய்க்கிட்டே இருக்கோம்.

ராஜபக்ஷே கடை வச்சுருக்கார் :-)

கம்பொல நெருங்கும்போது  சாலையில் கொஞ்சம் அதிகப்படியான  வண்டிகள்.

நம்மூர் புள்ளையார் கோவில்கள் போல   ஊர்களில்  அங்கங்கே   மேடையில் புத்தர் சந்நிதி, சின்ன  சைத்யா அதைச்சுத்திக் கொடிகள்னு கண்ணுலே பட்டுக்கிட்டேதான் இருந்தது.
பேராதனியா (பேராதனை) என்ற ஊருக்கு வரும்போது ஒரு பெரிய பொட்டானிகல் கார்டன் இருக்கு.  ஆசையா இருந்தாலும் உள்ளே போகலை. ஜஸ்ட் எட்டிப் பார்க்கலாமான்னா பார்க்கிங் கிடைக்காது போல... செமக்கூட்டம். உள்ளே  ஒரு கோவில்கூட இருக்கு....


இந்தத் தோட்டம் 147 ஏக்கர் அளவில் இருக்கு.  எங்க ஊர் பொட்டானிக்கல் தோட்டம் இதைவிடப்பெருசா 165 ஏக்கர் என்றாலும் கூட, எங்கூரில் இல்லாத வெப்பமண்டலச் செடிகொடிமரங்களை இங்கே பார்க்கலாம் என்ற ஆசை நிறைவேறலை..... ப்ச்....

சாலை ஓரத்துலே துணிகளைக் காயவைக்கிறார் சலவைத்தொழிலாளி !

சம்ப்ரதாயமாக் கல்யாணப் படங்கள் எடுத்துக்கலாமாம்!  வாவ்...
அடுத்த ஏழெட்டு கிமீ பயணத்தில்  கண்டி நகர் போய்ச் சேர்ந்தோம்.  வாங்கன்னு சொல்றதைப்போல் புத்தர் இருந்து வரவேற்றார்!  ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து போகும்போது இதுவரை பார்த்திராத வகையில் வித்தியாசமான கூரைகளுடன் சில கட்டடங்கள். இங்கத்து அரசர்கள் காலத்து ஸ்டைலாக இருக்கலாம்.  மணி கூண்டு கூட வேற மாதிரி!


மணி இப்பவே மதியம் ஒன்னு ஆகப்போகுது என்பதால்  முதலில் சாப்பாட்டை முடிச்சுக்கணும் என்றார் 'நம்மவர்'.

எல்லாப் பெரிய நகரங்களைப்போலவே இங்கேயும் பார்க்கிங் கிடைப்பது கஷ்டமாம்.  எதோ ஒரு  பெரிய கட்டடத்து பேஸ்மென்ட்லே பார்க்கிங் லாட் இருப்பதாச் சொல்லி, அங்கே போய் வண்டியை நிறுத்தினார் மஞ்சு. கண்டி முனிசிபல் கார் பார்க் இது. சிடி சென்ட்டர் என்பதால்  கடைகளுடன் கலகலன்னு இருக்கு இந்தத் தெரு.

ரெண்டு கட்டடம் தள்ளி ஒரு ஃபுட்கோர்ட்டுக்குப் போனோம். வாசலில் நின்ன யானைக்குடும்பத்தைப் பார்த்ததும்  'திஸ் இஸ் த ரைட் ப்ளேஸ்'னு மனசு சொல்லுச்சு :-)




நமக்கு வேண்டியதைக் காமிச்சால் தட்டில் எடுத்துப்போட்டு நிரப்பித்தர்றாங்க.  நாங்க வெஜ் சாப்பாடும், மஞ்சு எதோ நான்வெஜ்ஜும் வாங்கிக்கிட்டோம்.  மஞ்சுவின் சாப்பாட்டை வாழை இலையில் பொதிஞ்சு சூடாக்கித் தந்தாங்க. டிஸ்ஸட்ர்ட் செக்‌ஷன் பார்க்கவே நல்லா இருந்தது.  கண்ணால் தின்னேன் :-)
நாம் இந்த ஊருக்கு வந்தது ரெண்டு காரணங்களுக்காக.  அதுலே ஒன்னு  தலதா மாளிகை என்ற  புத்தர் கோவில். 'தலதா மாளிகவா' வில் விசேஷம் என்னன்னா....  புத்தரின் 'பல்' இருக்கு.
எதிரில் இருக்கும்  கடைத்தொகுதியைக் கடந்து அந்தாண்டை போனால் கோவில். ஒரு ஆறேழு நிமிட் நடைதான்.
ப்ரமாண்டமான வளாகம்.  மெயின் கேட்டில் இருந்து  அரைக்கிலோ மீட்டர் நடக்கணும். ரெண்டு பக்கமும் புல்வெளிகளும் நடுவில் பாதையுமா இருக்கு.   பாதையின் நடுவில் அங்கங்கே கொடிமரம்/ விளக்கு ஸ்தம்பம் போல அமைப்புகள். புல்வெளியில் ரெண்டு மூணு சிலைகள்.....
கோவில் வெளிமுற்றத்தில் பாதைக்கு  ஒரு நுழைவு வாசல். அதைக் கடந்து போனால் கண்ணுக்கு நேரா, உப்பரிகை போல ஒரு கட்டடம்.  கல்பாவிய முற்றத்தில்  குழாய் மூலம் தண்ணீர்போய்க்கிட்டு இருக்கு! சூடு தாக்காமல் இருக்கன்னு நினைக்கறேன்.
வெளிநாட்டுக்காரர்கள்  இந்தக் கோவிலுக்குள் போய்ப் பார்க்க ஒரு கட்டணம் உண்டு. ஆளுக்கு ஆயிரம் ரூபாய். உள்ளூர் மக்களுக்கு இலவசமா இருக்கும் போல !
காலணிகளை விட்டுட்டுப்போக  வெளிநாட்டவருக்குத் தனி இடம் !

உண்மையில் பார்த்தால் இது கோவில் இல்லை. அரண்மனை. அதுதான் பெயரிலேயே சொல்லிட்டாங்களே.... மாளிகைன்னு!
அரண்மனையையே  கோவிலாக்கி, அதில்  ஒரு இடத்தை கருவறையாக்கி அங்கே தங்கப்பெட்டிக்குள்ளே புத்தரின் பல்லை வச்சுருக்காங்க(ளாம்)தினமும் கோவிலின் முக்கிய பிக்ஷூ பூஜை செய்வார்.  வருஷத்துக்கு ஒருமுறை இந்தத் தங்கப்பேழையை யானைமேல் ஏற்றி ஊர்வலமாக் கொண்டு போய் கொண்டு வருவாங்களாம். மிகப்பெரிய முக்கியமான திருவிழா இது!

பதினொரு நாள் கொண்டாட்டம். இதுலே எனக்கு என்ன வியப்புன்னா இதெல்லாம் தெரியாமலேயே  நாம் திருவிழாவின் கடைசி நாளில் இந்தக் கோவிலுக்குப் போயிருக்கோம்! ஜூலை 18 முதல் 28 தேதி வரை! (நாம் இந்தப் பயணம் போனது  போனவருஷம் 2018. இப்பதான் ஆடி அசைஞ்சு எழுதிக்கிட்டு இருக்கேன்...)

இலங்கை விமானத்தில் வரும்போது அங்கே வச்சுருந்த புத்தகத்தில் கொஞ்சம் இதைப்பற்றிப் போட்டுருந்ததை வாசிச்சேன். யானைக்கே  சீரியல் லைட்ஸ் அலங்காரம் பண்ணி ஊர்வலத்தில் கொண்டு போறாங்க.

பௌர்ணமி தினத்தைப் போயான்னு சொல்றாங்களே.... இதுலே வருசத்துக்கு வர்ற பனிரெண்டு பௌர்ணமிக்கும் வெவ்வேற பேர் இருக்கு!

சித்திரை April – Bak Poya
வைகாசி May – Vesak Poya
ஆனி June – Poson Poya
ஆடி  July – Esala Poya
ஆவணி August – Nikini Poya
புரட்டாசி September – Binara Poya
ஐப்பசி October – Vap Poya
கார்த்திகை November – Il Poya
மார்கழி December – Unduvap Poya
 தை January – Duruthu Poya
மாசி February – Navam Poya
பங்குனி March – Medin Poya

இந்தக் கணக்கில் புத்தர் பல் திருவிழா எஸலா போயா !  ஆடிப் பவுர்ணமி.

அடடா.... நேத்துதானே  இந்த எஸலா. வந்துருந்தால் யானை ஊர்வலம் பார்த்துருக்கலாம் இல்லே?   கோட்டை விட்டுட்டோமே.....

வைகாசி மாசப்பவுர்ணமிதான் வெஸாக் போயா ! (நம்ம முருகனுடைய வைகாசி விசாகம்! )

இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம்..... இலங்கையில்  வருஷத்துக்கு 28 நாள் அரசு விடுமுறை !  வாவ்....... வேறெந்த நாட்டிலாவது இத்தனைநாள் லீவ் உண்டா என்ன?
சரி சரி வாங்க.... கோவிலுக்குள் போகலாம்!

இந்த வாசலைத்தான்  1998 லே ஈழப்போராளிகள்  குண்டு வச்சுத் தகர்த்துட்டாங்களாம். அப்புறம் இலங்கையின் தலைசிறந்த கட்டடக்கலைஞர்களைக் கொண்டு மீண்டும் சரி செய்ய ஒன்னரை வருஷம் எடுத்துருக்கு  ! இந்த சம்பவத்துக்குப்பின்தான் 'இயக்கத்தை' தடை செஞ்சதாக  இப்போதைய சரித்திரம் சொல்லுது.

அரசர்கள் ஆண்ட பழைய சரித்திரத்தைக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால்.... அங்கேயும் ரத்தக்களரிதான்.  வெவ்வேற நாடுகள் நைஸா நுழைஞ்சு அதிகாரத்தைப் பிடிச்சுக்கிட்டு ஆட்டி வச்சுருக்கு. ப்ச்....

படியேறி மேல் தளத்துக்குப் போகும் போதே  அரைவட்டக்கூரையின் விதானத்தில் வரைஞ்சு வச்சுருக்கும் சித்திரங்களில் ராஜபவனி. சிம்பிள் அண்ட் ஸ்வீட் !  யானை இருக்கே :-)
அரண்மனைக்குரிய கம்பீரமான ஹாலுக்கான நுழைவு வாசல்  போல இல்லாமல் படிக்கட்டில் ஏறி அந்தாண்டை இறங்கின்னு  போகுது.   ஒரு இடத்தில் ஓரமா ஒரு சைத்யா.   நல்ல கூட்டம் இருப்பதால் நாங்களும் அப்படியே போனவங்களைத் தொடர்ந்து , மாடியில் ஒரு பெரிய  நீளமான ஹாலுக்குள் வந்துருந்தோம்.  மரப்பலகைச் சுவர்கள்தான். அதுலே காலை நீட்டிச்  சாய்ஞ்சு உக்கார்ந்துருக்கு சனம். முக்கால்வாசிப்பேர்  வயதுபோனவர்கள்தான். இன்னொருபக்கம் நீண்ட மேஜை  போன்ற அமைப்பில் பூக்களோ பூக்கள்.! தாமரைகளே பெரும்பாலும். பல நிறத்தில் பார்க்கவே அருமை. கூடவே தட்டுகளில் அந்த ஒத்தை நந்தியார்வட்டை ! கடவுளுக்குச் சார்த்தக் கொண்டுவந்த மலர்க் காணிக்கைகள்!


சந்நிதியில் தங்கச் சுவர்கள், உள்ளே தங்கப்பேழை, அதுக்குள்ளே புத்தர்பிரானின்  பல். வருஷத்துக்கொருக்கா இந்தப் பேழையோடு யானைமேல் பவனி.  மற்றபடி எப்பவும் இதே கருவறையில்தான் வாசம்.
கருவறைக்கு முன்னால்  தடுப்பெல்லாம் வச்சு ஒரு மண்டபம். இதுக்குள்ளே வர இங்கே  பூஜை செய்யும் பிக்ஷுக்களுக்கு மட்டுமே அனுமதி. தினம் மூணு காலப் பூஜை!  பல்லுக்கு அபிஷேகம் செஞ்சு அதைத் தீர்த்தமாக் கொடுப்பாங்களாம். மண்டபத்துக்கு இந்தாண்டைதான் அந்தப் பூக்கள் உள்ள நீண்ட மேஜை. அப்புறம் சனம் போக கொஞ்சம் இடைவெளிவிட்டுட்டு அந்தாண்டை  கருவறையைப் பார்த்தபடி உக்கார்ந்து  இருக்கும் மக்கள். யாரும் யாரையும் போ போன்னு விரட்டலை.  நாமும் நின்னு நிதானமாப் பார்த்துக்கிட்டே போகலாம்.

மாடியில் இருந்து இறங்கும்வழியில் போனால் கீழ் தளத்தில் ஒரு புத்தர்.
கீழ்மாடி விஹாரான்னு இருக்கும் இடம் மூடி இருந்தது. விதானத்தில் உள்ள டிஸைன்களைப் பார்த்ததும் சட்னு  பத்மநாபபுரம் அரண்மனை நினைவுக்கு வந்தது உண்மை.
இலங்கை வந்ததில் இருந்தே.... அநேகமா எல்லா இடங்களிலும் கேரளா நினைவு வர்றதைத் தடுக்க முடியலை. அதேபோல காலநிலை மரஞ்செடிகொடிகள் எல்லாம் இருப்பதால் இருக்கலாம்.
சந்நிதிகள் எங்கேயும் சாமிக்கு முதுகு காமிக்கப்டாது. கவனமா இருந்துக்கணும்.

உள்முற்றம் வந்தால் தங்கயானைகள்! பொதுவான கோவில் மண்டபத்தூண்கள் போலவே இங்கே. சுவர், விதானம் எல்லாம் சித்திர டிஸைன்களா வரைஞ்சு தள்ளி இருக்காங்க.
இந்த உள்முற்றம் கடந்து அந்தாண்டை படிகள் ஏறினால் இன்னொரு கூடம். புத்தர் ஜொலிக்கிறார்!  இங்கேயும் விதானம் எல்லாம் மின்னுது!
கூடத்தின் எதிர்ப்பக்கம் ரெண்டு வரிசைகளாக  இருந்த நிலை புத்தர்கள் வச்சு,  புத்தருடைய வாழ்க்கைச் சம்பவங்களை ஓவியமா வரைஞ்சு வச்சு விளக்கமும் பொறிச்சுப்போட்டுருக்காங்க. இது சிங்களத்திலும், இங்லிஷிலும் மட்டுமே!  இது சிங்களவர் கோவில் என்பதால் தமிழில் எழுதிப்போடத் தேவையில்லைன்னு அவுங்க நினைச்சுருக்கலாம். (ஆனால் நம்ம  ஹிந்துக்கோவில்களில் தமிழ், சிங்களம், இங்லிஷ் என்று  மூணு மொழிகளில் எழுதிப்போட்டுருப்பது எனக்கு ரொம்பவே  பிடிச்சுப்போச்சு. ) மொத்தம் இருபது புத்தர்களும் (வெவ்வேற முத்திரைகளைக் கையில் காண்பிக்கும் புத்தர்கள்), இருபது ஓவியங்களுமாக.!

நாமும் புத்தரை வணங்கிட்டு அடுத்த கட்டடமான ம்யூஸியத்துக்குப் போறோம். காலை ஏழு முதல் மாலை ஏழரை வரை திறந்து வைக்கிறாங்களாம்.   உலகெங்கும் புத்தமதத்துக்காகவே உள்ள ம்யூஸியங்கள் பதினேழு நாடுகளில் இருக்காம். லிஸ்ட் போட்டு வச்சுருந்தாங்க.
மாளிகையின் பின்பக்கம் வந்துருக்கோம். பெரிய  மண்டபங்கள் போல கூரை போட்ட அமைப்புகள். திரும்பத்திரும்பக் கேரளக் கோவில்களின் நினைவுதான்....
புத்தருக்கு விளக்கேத்தி வைக்க  தனியா இங்கே ஒரு அமைப்பு. சிதறு தேங்காய் போடக்கூட ஒரு  அமைப்பு வச்சுருக்காங்க.


பொதுவா  ம்யூஸியங்களில்  அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிலைகள், கல்வெட்டுகள்னு வச்சுருக்கறதைப்போலத்தான் இங்கும். ஆனால்  'ராஜா' இருந்தான்!  அம்பதுவருஷம் தலாதா மாளிகையில்  வாழ்ந்து சேவை செஞ்சவனை கௌரவிக்கும்விதம்,  சாமிகிட்டே போன உயிரை விட்டுட்டு, உடம்பை பாடம் பண்ணி இருந்தாங்க. கேசவன் நினைவு வரலைன்னு நான் சொன்னால் அது பொய்.
இந்த அரண்மனையை கண்டி மன்னர் முதலாம்  விமலதர்மசூர்யா 1594 இல் கட்டி முடிச்சார்னு ஒரு குறிப்பு இருக்கு.  இவர் ஆட்சிக்கு வந்தது 1591 இல்.  அவருக்குப்பிறகு வந்த அரசர்கள் அவுங்கவுங்க காலத்துலே இன்னும் விரிவாக்கி அவரவருக்கு ஏத்தாற்போலக் கட்டி இருக்கணும்.  மாளிகையைச் சுத்தி மூணுபுறமும் அகழி மாதிரி ஒன்னு இருக்கு!
கண்டி  ராஜவம்சத்தின் கடைசி அரசர் (நம்ம) மதுரையில் பிறந்த விக்ரமராஜசிங்கா. அவர் இறந்ததுகூட (நம்ம) வேலூர் கோட்டையில்தானாம்.  மதுரை நாயகர்கள் ஆட்சிகாலத்தில் கண்டி மன்னர்கள், திருமணத்தொடர்பில் இருந்துருக்காங்க!  இவருக்குப்பின் பிரிட்டிஷார் கைவசம் எல்லாமே போயிருச்சு.  ரொம்ப சுவாரசியமா இருக்கு இலங்கை சரித்திரம்.  கொஞ்சம் உள்ளே நுழைஞ்சு வாசிக்கணுமுன்னு இப்பத் தோணுது எனக்கு. பார்க்கலாம்....

புத்தர்கோவில்களுக்கான  தலவிருக்ஷம் 'போதி' இங்கேயும் இருக்கு. எல்லாக் கோவில்களிலும் போதிமரத்தைச் சுத்திக் கம்பித்தடுப்பெல்லாம் வச்சு நல்லாவே பராமரிக்கறாங்க.
இன்னொரு கட்டடத்திலும் கோவில் என்று போனால்  கிடந்த நிலையில் புத்தர்!
நல்ல கூட்டம்தான்  வளாகம் முழுசுமே!  கோவில் என்ற வகையிலே பார்த்தால் இது ஒன்னும் அவ்ளோ பெரிய கோவில் இல்லை. அரண்மனைக்குள் இருக்கு என்பதும்,  அதைவிட முக்கியமா புத்தரின் பல் இருக்கும் மஹா புனித இடம் என்பதும்தான் ப்ரதானம்!

பொற்கோவில் போல இது பற்கோவில் !

மாளிகையைச் சுத்துனது போதும், போகலாமான்னார் 'நம்மவர்'! சரின்னு கிளம்பினோம். போய் காலணிகளை எடுத்துக்கணும்.

உப்பரிகைக்கு முன்னால் இருக்கும் வழியா வெளியே போறோம். இந்த எண்கோண உப்பரிகை கூட, மன்னர் மக்களைச் சந்திக்கக் கட்டுனதாக இருக்குமோ?

புல்வெளியின் வலதுபக்கம்,  ஒரு புத்தபிக்ஷுவின் சிலை.   பிக்ஷூ சுபமங்களா, இடது  கையில் ப்ரிட்டிஷாரின்  கொடியைப் பிடிச்சபடி, வலதுகையை உயர்த்தி நிக்கிறார்.
ராஜ்ஜியம் பிரிட்டிஷ்காரர்கள் ஒப்பந்தப்படிக் கைமாறிய தினம், கையெழுத்துப்போடறதுக்கு முன்னேயே கண்டி தேசக்கொடியை ஒரு ப்ரிட்டிஷ்படையில் இருப்பவன், இறக்கிட்டு அங்கே யூனியன் ஜேக்கைப் பறக்க விட்டுட்டானாம். தேசபக்தியுள்ள பிக்ஷூ, உடனே பாய்ஞ்சு போய், 'இன்னும் கையெழுத்தாகலை, இப்பவும் இது கண்டி மன்னரின் நாடுதான்'னு சொல்லி, அந்தக் கொடியை இறக்கிட்டு சிங்கக்கொடியைப் பறக்க விட்டாராம். அந்த நினைவுக்காக வச்ச சிலைன்னு  அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.  எங்கே.... எல்லாமே சிங்களத்தில் மட்டும்தானே எழுதி இருக்காங்க!

ஆர்ச் வாயிலைக் கடந்து அந்தாண்டை போகும்போது  பாதையில் இன்னொரு சிறுவன் சிலை.(வரும்போது பார்த்ததுதான்) வீரச்சிறுவன்! சோகக்கதை....

கடைசி மன்னர்னு  விக்ரமராஜசிங்கா குறிப்பிட்டேன் பாருங்க.... அவர்காலத்து சமாச்சாரம். மன்னர் பட்டத்துக்கு வந்தது தன்னுடைய  பதினெட்டாம் வயசில். வாரிசு இல்லாம இறந்துபோன அரசரின் மருமகன்.  இவரை மன்னராக்கினால்,  தனக்கு அதிக அதிகாரம் கிடைக்குமுன்னு கணக்குப்போட்டுட்டார் அப்ப  இருந்த ப்ரதமமந்திரி. சின்னப்பையனை இஷ்டத்துக்கு வளைக்கலாம் என்ற அவர் எண்ணம் பலிக்கலை.  மன்னரே புத்திசாலியா இருந்துருக்கார், அப்போ! 

போட்ட கணக்கு தப்பாப் போச்சேன்னு வேற வழியில் அதிகாரம் தன் கைக்கு வர  இவர் செஞ்சுக்கிட்டு இருந்த சூழ்ச்சி அரசருக்குத் தெரிஞ்சுபோனதும் ராஜத்ரோகின்னு குற்றம் சாட்டி அவர் தலையை வெட்டிடறாங்க.

அதுக்குப்பிறகு ப்ரதம மந்திரிப் பதவிக்கு இவருடைய உறவினரையே தேர்ந்தெடுத்துருக்கார் அரசர்.(!!) என்ன கஷ்டகாலம் பாருங்க.......    பல வருஷங்கள் போனபிறகு,  இவரும் ப்ரிட்டிஷாரோடு சேர்ந்து  தனக்கு எதிரா சூழ்ச்சி செய்யறார்னு கேள்விப்பட்ட அரசருக்குப்  பயங்கரக்கோபம் வந்துருக்கு. (கொல்லப்பட்டப் பழைய ப்ரதமரின் மரணத்துக்குப் பழி வாங்க இவர் என்னவோ செய்யறாருன்னு யார் தூபம் போட்டாங்களோ.....)

இவரை சிறையில் அடைக்க உத்தரவாச்சு. இவரை இங்கே தேடினால் கிடைக்கலை.... இவருடைய குடும்பத்தைப் பிடிச்சுக்கிட்டு வந்தாங்க.(தமிழ் சினிமா போல இருக்கு. வில்லன் பிணையக் கைதியா கதாநாயகனின் அம்மா, மனைவி, காதலின்னு யாரையாவது பிடிச்சுக் கொண்டுவந்து கட்டிப்போட்டுச் சித்திரவதை செய்வான்....)

மூணு வாரத்துக்குள்ளே சரணடையணுமுன்னு மன்னர் சொல்லிட்டார். அதுக்குள்ளே இவர்   ப்ரிட்டிஷாரின் கைகளில் மாட்டி  அவர்கள் வசம் இருந்துருக்கார். (கம்யூனிகேஷன் சரி இல்லைப்பா.... )

மூணுவாரம் ஆகியும் இவர் வராததால் குடும்பத்தைக் கொல்ல ஏற்பாடாகுது. அம்மாவும் நாலு குழந்தைகளும். அதுலே ரெண்டுபேர் பெண்குழந்தைகள்.  பெண்களை கழுத்து சீவும் நடைமுறை இல்லையாம்..... (அடடா  என்ன ஒரு நியாயவாதிகள் பாருங்கோ அந்தக் காலத்தில் ) அதனாலே  அவுங்களைக் கல்லைக்கட்டிக் குளத்தில் போட்டு அமுக்கிட்டாங்க.

பையன்களில் ஒன்னு பத்து வயசு ஒன்னு எட்டு வயசு.  வயசுப்ரகாரம் வெட்டணுமுன்னு பெரியவனை இழுத்தப்பக் குழந்தை பயந்து அழறான்.  அப்போ சின்னவன், என்னை வெட்டுங்கோன்னு வீரமா முன்னால் வந்துருக்கான்.  வீரத்தை மெச்சி விட்டுருக்கவேணாம்?  அதுதான் இல்லை.....

சரி, வான்னு கூட்டுப்போய் கழுத்தைச் சீவியாச்சு. அப்புறம் பெரியவனையும்.....  ப்ச்......

அந்த வீரக்குழந்தைக்குத்தான் இந்தச் சிலை.... Madduma Bandara Ehelapola என்ற பெயர் இந்தப் பிஞ்சுக்குழந்தைக்கு....
மனசு கனத்துப்போச்சு.... போங்க.....
இந்தக் குழந்தை சிலையை  இங்கே ஏன் வச்சுருக்காங்கன்னு  ஒரே யோசனை.  இலங்கை சுதந்திரத்துக்குப் பின்தான் வச்சுருப்பாங்களோ?

மன்னன் செஞ்ச கொடுமையை ஊருலகம் அறியட்டுமுன்னு சம்பவத்தை சினிமாகூட எடுத்துருக்காங்களாம். ஒரு அஞ்சாறு வருஷத்துக்குமுன் (சம்பவம் நடந்து 199 வருஷம் ஆச்சு) அந்தத் தாய்க்குச் சிலை ஒன்னு செஞ்சு கௌரவப்படுத்தி இருக்காங்க.
கொஞ்சம் கனத்த மனத்தோடு நாங்க கிளம்பி,  இன்றைக்கு நாம் தங்கபோகும் ஹொட்டேலுக்கு  வந்து சேர்ந்தோம்.
PINகுறிப்பு:  தலதா மாளிகைப் படங்களைப் பார்க்க விரும்பினால் இங்கே ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன் :-)


தொடரும்........... :-)

10 comments:

said...

எனக்கு கேரளா போனபோது கண்டிதான் ஞாபகம் வந்திச்சு. கிட்டதட்ட இங்கன மாதிரியே இருந்திச்சு. நீங்க பேராதனை பூங்காவையும் பார்த்திருக்கனும். ஆனா ஒரு நாள் வேணும் டீச்சர் சுத்தி பார்க்க. எசல பெரஹரா பெஸ்டிவலை நீங்க பார்த்திருக்கனும் ப்ச்..மிஸ் பன்னிட்டீங்க. இதில் கண்டி பாராம்பரிய நடனம் விஷேஷம். நன்ராக இருக்கும்.

/இது சிங்களத்திலும், இங்லிஷிலும் மட்டுமே! இது சிங்களவர் கோவில் என்பதால் தமிழில் எழுதிப்போடத் தேவையில்லைன்னு அவுங்க நினைச்சுருக்கலாம். //அந்த மெனு கார்ட்டில் கூட ஜவ்னா எனும் பேரே இல்லை பனை மரம் மட்டுமே போட்டிருக்காங்க. இந்த பாராபட்சங்களால்தான்பிரச்சனையே அப்போ ஆரம்பித்தது. பாராபட்சம்.

//ராஜபக்ஷே கடை வச்சுருக்கார் :-)// ஹா...ஹா..ஹா..

லீவு அதிகம்தான் மின்னாடி சொல்லிப்பேன்.. வியாழன் லீவு வந்தால் போனசா வெள்ளியும் லீவாக்கிடுவாங்க.அப்போ சனி,ஞாயிறு சேர்ந்து 4 நாட்கள் லீவு..ஹையா ஜாலின்னு இருப்போம்.
அழகான படங்களுடன் அருமையான பதிவு.

said...

மிக அருமை. நன்றி.

said...

கொஞ்சம் பெரிய பதிவு மா ..படங்களும் தகவல்களும் சுவை ..

கடைசி தகவல் கனமான வரலாறு

தலதா மாளிகை ..பிரமாண்டம் ..

said...

தலதாமாளிகை புத்தபகவானின் அழகிய கோவில் இங்குள்ளது.நன்கு ரசிக்கக் கூடிய இடம்.புத்தரின் பல் இங்குள்ளதாக நம்பப்படுகிறது.

திரு.ஞானம் பாலசந்திரன் எழுதிய "பொய்மையும் வாய்மையுரைத்து" என்னும் நூலில் முன்பு இங்கிருந்த புத்தரின் பல்லுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி அறிந்து கொள்ளலாம்.முக்கியமான நாவல். உண்மைத் தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட அருமையான நாவல். இலங்கை வரலாற்றையே திருப்பிப் போடக் கூடிய தகவல்
இந்தநாவலில்உள்ளது.புத்தகம் ஞானம் வெளியீடு.

"இலங்கை சரித்திரம் உள்ளேநுழைந்து படிக்க ஆசை" மிகவும் மகிழ்சி. சிறிய நாட்டுக்குள் பெரிய சரித்திரம்.:)


said...

நேற்றே படித்துவிட்டேன். கருத்திட மறந்துவிட்டேன்.

பல்லுக்கு அபிஷேகமா இல்லை பல் வைத்திருக்கும் பேழைக்கு அபிஷேகமா என்பது தெளிவாக இல்லை.

said...

வாங்க ப்ரியசகி,

விழாவை மிஸ் செஞ்சது வருத்தம் என்றாலும், பொதுவா விழா நடக்கும் இடங்களுக்கு அன்றைய தினம் செல்வது இல்லை. தங்க இடம் கிடைக்காது என்பதுடன் கூட்டத்தில் சுற்றுலா கஷ்டம்.

கொஞ்சநாளில் எல்லாம் சரியாகுமுன்னு நம்பிக்கையோடு இருப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை, இல்லையோ?

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

கொஞ்சம் நீளம்தான். எங்கே வெட்டுவதுன்னு தெரியாமல் போச்சு. குழந்தைத் தலையா என்ன சீவித் தள்ளறதுக்கு......

said...

வாங்க மாதேவி,

நீங்கள் சொல்லுவது முக்கிய செய்தி. பார்க்கலாம், அந்தப் புத்தகம் கிடைக்குமா என்று!

எங்க அம்முவோட பேபி பற்கள் ( நாந்தான் டூத் ஃபேரி !) எடுத்து வச்சுருக்கேன். நேத்து வேறொரு சாமான் தேடும்போது கண்ணில் பட்டது.இப்போ பார்த்தால் சின்ன்ச்சின்னக் கற்கள் போலத்தான் இருக்கு. அப்போதான் இந்த புனிதப்பல் பற்றிய எண்ணமும் வந்தது..... முப்பது வருசத்துலேயே இப்படின்னா..... மூவாயிரம் வருஷத்துலேஏன்ன ஆகி இருக்குமுன்னு தோணியது உண்மை !

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

உங்களுக்குன்னு சந்தேகம் வருது பாருங்க :-)

அநேகமா தங்கப்பேழைக்குள் இன்னொரு சின்னப்பேழை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

யாரையாவது விசாரிக்கணும்....