Friday, June 28, 2019

ஓம் பூர் புவஸ்வஹ..... (பயணத்தொடர், பகுதி 110 )

உண்மையில் இங்கே போகணும் என்ற திட்டமே இல்லை. இன்னும் சொன்னால்..... இப்படி ஒரு இடம் இருக்குமுன்னு கூடத் தெரியாது. நம்ம முத்துமாரியம்மன் தரிசனம் முடியும்போது மணி ஏறக்கொறைய பத்தேமுக்கால்.  இவ்ளோ சீக்கிரமா அறைக்குப் போவானேன்? கொஞ்சம் ஊர் சுத்திப் பார்க்கலாமேன்னு மஞ்சுவிடம் சொன்னதுக்கு  'டீ ஃபேக்டரி  போகலாமா'ன்னார்.  வேணாம். இப்போதானே மூணார்லே போய் வந்தோம். சும்மாத் தோட்டத்துப்பக்கமும் ஊருக்குள்ளும் சுத்தலாமுன்னதும் சரின்னு ஒரு பாதையில் போறார்.  எண்ணி ஏழாம் நிமிட், ஒரு பெரிய சிவலிங்கம் துணி போர்த்திக்கிட்டு ஒரு மண்டபத்தின் தலையில் உக்கார்ந்துருக்கு.
ஸ்டாப்........

கொஞ்சம் முன்னால்  ஸ்ரீலங்காதீஸ்வரர் கோவில்னு பார்த்ததும் இறங்கிட்டோம். மஞ்சு இங்கே போய்ப் பார்த்ததில்லையாம். அதனால் தகவல் ஒன்னும் தெரியாது.
காயத்ரி சித்தர் பீடம்.

 நுழைவுவாசலுக்குள் போனால் இடமும் வலமுமா படிகள் கீழே போகுது.  ஊரே மலையில் இருப்பதால்  அங்கங்கே சாலையை விட்டுக் கீழே போனால்தான் வீடு வாசல் கோவில் எல்லாமே...

வலப்பக்கம் படிகளில் இறங்கிப்போனோம்.  ஒரு மண்டபத்தில் எக்கச்சக்கமான ஆவுடையார்கள்! நேரா அந்தாண்டை போனால் கோமாதா ஒன்னு!  இப்பதான் பூஜை முடிஞ்ச நிலையில் மாலையும் கழுத்துமா !
பெரிய முற்றம் போல இருக்கேன்னு கண்ணைச் சுழட்டினால்.... வலப்பக்கம் ஒரு கட்டிடம், எனக்கிடப்பக்கம் ஒன்னு. இடப்பக்கம் இருப்பதின் தலையில் பெருமாள்!

சலோன்னு அதுக்குள்ளே போனால்  நம்ம பெருமாள்,  நிம்மதியா நிக்கறார்.  ஏகாந்தம்.  உலோகச் சிலைதான் ! விக்ரஹம் :-)


இவருடைய சைஸுக்கு ஏத்தாப்லெ  ஒரு பெருமாள் குடை ஒரு மூலையில் :-)

ஸ்ரீலங்காவில் குத்துவிளக்குகள் வேற மாடலில் இருக்கு. தலையில் பொதுவா நம்மூரில் இருக்கும் அன்னப்பட்சிகள்  காணோம். நிறைய இடங்களில்  சேவல் பார்த்தேன்.  இங்கே பெருமாள் முன்னே  மயில்!
பெருமாளைக் கும்பிட்டதும், இந்தாண்டை கட்டடத்துக்குள் போனால் உள்ளே பெரிய ஹால்! சுத்திவர சந்நிதிகள் . நல்ல கூட்டம் வேற ....  சாமி புறப்பாடு நடக்குது!  உள்ளேயே  வலம் வர்றாங்க. காயத்ரி மந்திரம்  ஒலிக்குது. சிடி போட்டுருக்காங்க போல!


ஆனால் புறப்பாடு காயத்ரிக்கு இல்லைன்னு தோணுச்சு.  முகம் அப்படி இல்லையே.....  இல்லே காயத்ரிதானோ?
காயத்ரி சந்நிதிக்கு மேலே  தமிழ், சிங்களம், இங்லிஷ்னு மூணு மொழிகளில் நியான் லைட்டில் மந்திரம் எழுத்துகளில் ஓடிக்கிட்டு இருக்கு!





ஸ்ரீ விஷ்ணு காயத்ரி, ஸ்ரீ ராம காயத்ரி, ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜெய தேவன், அகஸ்திய மஹரிஷின்னு  மாடங்களில் சிலைகளும், உற்சவமூர்த்திகளுமா  அந்த ஹாலில் சுத்திவர வச்சுருக்காங்க. கூடவே முருகேசு சித்தர், ஸ்ரீ சிவபால யோகி மஹராஜ், ஸ்ரீ ரமணர்  என்று 'மஹான்களின்' படங்களும்!
போயா தினத்தின்  அரசு  விடுமுறையை வீணாக்காமல் ஹிந்துக்களும் தமக்கான முறையில் கொண்டாடிக்கறாங்க. இதுவும் நல்லதே!



நாங்க தரிசனம் கண்டு, கிளம்பி வெளியே வரும்போது காயத்ரி சித்தர் மஹாசமாதின்ற  போர்டு  இருந்த  இன்னொருபக்கம்  படிகளில் சனம் இறங்கிப்போறதைப் பார்த்தோம். அந்தப்பக்கமும் ஒரு பெரிய கட்டடம் இருக்கவே, என்னன்னு பார்க்கப்போனால் அது ஒரு பெரிய த்யான மண்டபமா (ஹால்) இருக்கு.


ஏகப்பட்டக் கூட்டம்! ஒரு அழகான மேடை அமைப்பில் காயத்ரி தேவியின் சிலை!  புள்ளையார் விக்ரஹம்! நல்ல அலங்காரம் ! இன்னொரு மேடையில் (சமாதி) காயத்ரி சித்தரின் உருவச்சிலை !
சித்தர் சிலையைப் பார்த்ததும்  சித்தர்களைத் தேடிப்படிக்கும், அவர்கள் இருந்த இடங்களைத் தேடிப்போகும் சித்தர்ப்ரேமியான  தோழி க்ருத்திகா ஸ்ரீதரின் நினைவு வந்தது உண்மை.





இந்தக் கோவிலையும் (ஸ்ரீலங்காதீஸ்வரர் )காயத்ரி மடத்தையும் ஸ்தாபிச்சவர் காயத்ரி சித்தர் என்று பெயர் பெற்ற ஆர் கே முருகேசு என்பவர். சமீபகால சித்தர் என்றும் சொல்லலாம்.
1933 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்திருக்கார். வறுமையான குடும்ப சூழல் என்பதால் ரொம்பச் சின்ன வயசுலேயே வயல் வேலைகள் செய்ய ஆரம்பிச்சவர்.  அப்ப யாரோ ஒரு மஹான், இவருக்குக் கணபதி மந்திரத்தைச் சொல்லச்சொல்லி அதுக்கான ஸ்லோகங்கள் உள்ள புத்தகத்தைக் கொடுத்து இருக்கார். தினமும் சொல்ல ஆரம்பிச்சு அப்படியே  ஆன்மிகத்துலே லயிச்சுட்டார்.

அப்புறம் இந்தியாவுக்குப்போய் ஒரு ஆஸ்ரமத்துலே  சேர்ந்து , அங்கே  இருந்த குருவுக்குச் சிஷ்யராக இருந்து, காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்து சில புத்தகங்கள் எழுதியிருக்கார்.
அப்புறம் இலங்கைக்குத் திரும்பி வந்து இந்த ஸ்ரீ லங்காதீஸ்வரர் கோவிலை ஆரம்பிச்சு நடத்தும்போது இவருக்கு வயது நாப்பத்தியொன்னு !

கொஞ்சம் கொஞ்சமா இவரைப் பின்பற்றத் தொடங்கிய சனம் இப்போ பெரிய அளவில் இருக்காங்க. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட இவரது ஆசிகளைப் பெற்றுப்போக வந்துருக்காங்க.
ஸ்ரீ லங்காதீஸ்வரர் கோவிலுக்கான சிவலிங்கத்தை நர்மதா நதியில் இருந்து (சாளக்ராம்) கொண்டுவந்து இங்கே ப்ரதிஷ்டை செஞ்சவர் ஸ்ரீ சிவபாலயோகி மஹராஜ் அவர்கள்.
அதுக்கப்புறம் அதே நர்மதா நதியில்  ஒரு இடத்தில் நூத்தியெட்டு சிவலிங்கங்கள்  இருப்பதை ஒரு ஜெர்மனி நாட்டுக்காரர் உறுதிப்படுத்த, காயத்ரி சித்தர் அவைகளையெல்லாம் இங்கே கொண்டு வந்துருக்கார். அந்த லிங்கங்களை ப்ரதிஷ்டை செய்வது அடுத்த முயற்சி. அதற்குத்தான் நாம் உள்ளே வரும்போது பார்த்த ஆவுடையார்கள் தயாராகின்றன!  அதுவரை அந்த நூற்றியெட்டு லிங்கங்களையும் இந்த தியானமண்டபம் என்ற யக்ஞசாலையில் வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
யாகத்துக்கான சமித்துக்குவியல்கள் ஒருபுறம் இருக்கு!
நர்மதை நதியில் கிடைக்கும் லிங்கங்களைப் பாணலிங்கம் என்று சொல்கிறார்கள்.
எல்லாம் தயாராகி ப்ரதிஷ்டை செஞ்சால் மஹாசிவாலயம் ஆகும்.! இதைப் பார்க்கும் பாக்கியம்தான் காயத்ரிசித்தருக்கு இல்லாமல் போச்சு. 2007 ஆம் வருஷம், சாமிகிட்டே போயிட்டார்.  காயத்ரி சித்தரின் நேரடி சிஷ்யர்கள் பலர் இப்போ வெளிநாடுகளில் காயத்ரி பீடத்தின் கிளைகளை அமைச்சு நடத்திக்கிட்டு வர்றாங்களாம்!

 காயத்ரி பீடமும் காயத்ரி கோவிலும் இலங்கையில் வேறெங்குமே கிடையாதாம். இங்கே மட்டும்தான் இருக்கு. அதிலும் இந்த இடத்தின் விசேஷம் என்னன்னா.....

மேஹநாதன் என்னும் இந்த்ரஜித் (ராவணனின் மகன்) போரில்  ராமனை வெல்லவேண்டி  நிகும்பல யாகம் செய்தது இதே இடத்தில்தானாம். அப்ப அந்த யாகத்தின் முடிவில் த்ரிமூர்த்திகளான  சிவனும் விஷ்ணுவும் ப்ரம்மனும் காட்சி கொடுத்தாங்கன்னு......
நம்பணும். நம்பிக்கைதான் சாமி என்று கூறிக்கொண்டு .....
நம்ம  ஹொட்டேல் அறைக்குத் திரும்பினோம்.



தொடரும்.......... :-)

PINகுறிப்பு :  எப்படி இவ்ளோ லிங்கங்களைக் கொண்டு போயிருப்பாங்க?  நதிகளில் இருக்கும்  கற்களும் (சாளக்ராம் வகைகள் ) வியாபாரிகள் வசம் போயிருச்சு இல்லே? போகட்டும்..... குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்துலே இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான் !  மனக்குரங்கின் ஆட்டங்களில் ஒன்னு..... ஆடிட்டுப்போகட்டும்.... 


8 comments:

said...

காயத்ரி சித்தர் பீடம் கேள்வி பட்டதுண்டு சென்றதில்லை. உங்கள் பகிர்வில் கண்டது மகிழ்ச்சி. நிறைய அடியார்கள் போய்வருகிறார்கள்.

said...

/மஞ்சு இங்கே போய்ப் பார்த்ததில்லையாம். அதனால் தகவல் ஒன்னும் தெரியாது./ பொதுவாக வெளியூர் நண்பர்கள் வரும்போதுதான் பலரும் சில இடங்களுக்குப் போகிறார்கள்

said...

தகவல்களும் படங்களும் சிறப்பு.

எத்தனை எத்தனை விஷயங்கள் இங்கே.... அத்தனையும் பார்க்க ஒரு பிறவி போதாது!

said...

வாங்க மாதேவி,

உண்மைதான். நல்ல கூட்டம்ப்பா அன்றைக்கு !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

உண்மைதான். அப்படியே பயணிகளைக் கொண்டுபோய் விட்டுட்டு, உள்ளே வராமல் கார்பார்க்கிலேயே இருக்கும் டிரைவர்கள்தான் அதிகம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரொம்பச் சரியாச் சொன்னீங்க..... கண்டது கடுகளவு, காணாதது உலகளவு !

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாதுதான்!!!

said...

நான் கேள்விபடவேயில்லை இவ்விடம் பற்றி. விவரமான பதிவு. புதியதகவல்கள் அறிந்தாயிற்று. பார்க்கும்போதே மிக அமைதியான ஆனந்தமான சூழல் கொண்ட இடமாக தெரிகிறது. இனி போகும்போது சுலபமா இருக்கும். படங்கள் எல்லாமே அழகு. அங்கு நிறைய இடங்கள் இன்னும் தெரியாதனவாக இருக்கு.

said...

வாங்க ப்ரியசகி,

நீங்கள் போகும்போது அந்த 108 லிங்கங்களும் பிரதிஷ்டை செஞ்சு ரொம்பவே நல்லா இருக்கப்போகுது. அப்ப எங்களுக்காக ஒரு படம் எடுத்து அனுப்புங்க.