Monday, June 17, 2019

இனி நீரே, இலங்கை மன்னர் ! (பயணத்தொடர், பகுதி 105 )

பதிமூணு கிமீ தூரம்தான் என்றாலும் கூட.... போக்குவரத்து நெரிசலால் சுமார் ஒருமணி நேரம் பயணப்பட வேண்டியதாப் போயிருச்சு!
கார்பார்க் முழுசும் தாமரையோ தாமரை மொட்டுகள் ! நிஜப்பூக்கள்தான்!!!
ஒரு முப்பது படிகள் ஏறிப்போகணும், இந்த கெலனிய ராஜ மஹா விஹார் என்னும் புத்தர் கோவிலுக்கு! பிரமாண்டமான வளாகம்!
படிகள் முடிஞ்சதும் முதலில் கண்ணுக்குப்பட்ட சிற்பம்....
 'அட ! '
விபீணன்  பட்டாபிஷேகம்!  இலங்கைப்போர் முடிஞ்சதும்  சீதையுடன் கிளம்பும் சமயம், ராமனின் பதினாலு  வருஷ காட்டு வாழ்க்கை முடியும் நாளா இருக்கு.  நின்னு நிதானமாக் கிளம்ப நேரமில்லை....   அங்கே பரதன் தீயில் விழுந்து சாகப்போறேன்னு ரெடியா இருக்கான்.  பாதுகை வாங்கிப்போகும் போதே சொல்லிட்டுப் போனதுதான்.               " அண்ணே ... நீ மட்டும் பதினாலு வருசம் முடிஞ்ச அடுத்த நொடியில் என்னைப் பார்க்கலைன்னா....  நான் தீ  மூட்டி அதுக்குள்ளே விழுந்து உயிரை விட்டுருவேன்..."

புஷ்பக விமானத்தில் கிளம்பிப்போயிட்டாங்க.  இங்கே அரசனில்லா நாட்டை அப்படியே விடமுடியுமோ?  ராமனுக்குப் பதிலா, லக்ஷ்மணன் இருந்து செய்ய வேண்டிய கடமைகளை முடிச்சுட்டுக் கிளம்பியிருக்கார்!

 "இனி நீரே இலங்கை மன்னர்!"

அன்னமும், குழந்தைப்புள்ளையும், யானையுமா.... வரிசை அட்டகாசம்.  இது என்ன பகுதின்னு அப்ப எனக்குக் கவனிக்கத் தோணலை.  வலப்பக்கம் நிறைய கூட்டம். விளக்கு போட்டுக்கிட்டு இருக்காங்க....   ஆனால்  கோவிலுன்னு வந்தால் வலம் போகணும்னு நான் இடப்பக்கமா (எனக்கிடப்பக்கம்)போறேன்.
நிறைய மரங்கள். கொழுந்து இலைகள் அழகான பிங்க் நிறத்தில்.....   என்ன மரமோ? அசோகமா இருக்குமோ?

மரத்தையொட்டி வளாகத்துக்குக் காம்பவுண்டு சுவர் போல இடுப்புயரத்தில் இருக்கும்  நூத்துக்கணக்கான  சேஷன்கள் !
இவர்களுக்கு அடுத்தாப்லெ ஒரு சந்நிதி. சாமி யாருன்னு தெரியலை....  நாகதேவன்....    ஆதிசேஷனா இருக்கணும். மலர்கள் வழிபாடு  அழகு. நம்மூர் ஒத்தை நந்தியாவட்டைப் பூக்கள்தான் ப்ரதானமா இருக்கு!!


வலம் தொடர்ந்தால் வலப்பக்கம் பெரிய ஸ்தூபா ! அதுக்கு  முன்னால் கல்வெட்டு ஒன்னு. அதுலே  மலர்ந்த தாமரை ! சிங்களத்துலே என்னமோ எழுதி இருக்கு.  சனம் அங்கே உக்கார்ந்து கும்பிடறாங்க. புத்தரின் பொன்மொழியா இருக்குமோ?
மணல் பரப்பிய வெளிமுற்றத்தின் மூலையில்  நெடுநெடுன்னு அவலோகிதேஸ்வர் சிலை! பதினெட்டடி உயரமாம். மேடையில் ஏறி நிக்கறார்.
எதிர் மூலையில்  இதே மாதிரி  இன்னொரு சிலை, அதே உயர பீடத்தின் மேலே....  மைத்ரேயா.

இந்தப்பக்கம் ஸ்தூபாவில் ஒரு வாசல் மாடம்! உள்ளே மேடையில்  புத்தர் சிலைகள்.

ஸ்தூபாவைச் சுற்றி மணல்வெளியில்  கூட்டங்கூட்டமா சனம்.  ஒவ்வொரு கூட்டத்துக்கும் தலைமையா ஒரு பிக்ஷூ இருக்கார் போல!
சாமி கும்பிடப் பெரிய குழுவாக வரும் சிங்களவர் பெரும்பாலும் வெள்ளை உடைகளில் இருக்காங்க. தனியாக வரும் பக்தர்கள், கையோடு கொண்டுவரும் ஒரு துணி விரிப்பில்  ஸ்தூபாவைப் பார்த்து உக்கார்ந்து கும்பிடுறாங்க.




\


காணிக்கையாகக் கொண்டுவரும் பொருட்களை அங்கங்கே உள்ள பூத்தொட்டி போன்ற அமைப்பில் வச்சுட்டுப் போறாங்க போல!  ஒரு மஹாலக்ஷ்மி கூட அங்கே இருந்தாள்.

ஒரு கண்ணாடிப்பெட்டியில் கைகூப்பிய நிலையில் அழகான தங்கச்சிலை!  கோவிலைக்கட்டிய  ராணியாக இருக்கணும்.

ராணியம்மா கும்பிடுவது எதிரில் இருக்கும் கோவிலைப்பார்த்து!

பக்கத்தில் இருக்கும் ஸ்தூபா ?  இங்கே புத்தர் வருகை புரிந்த சமயம், ரெண்டு சிற்றரசர்கள்   பொன்னும் ரத்தினக்கல்லுமா இழைச்ச  ஒரு சிம்மாசனத்துக்கு  உரிமை கோரி சண்டை ஆரம்பிக்கத் தயாரா இருந்துருக்காங்க. புத்தர் இவுங்க ரெண்டுபேரையும் சமாதானப்படுத்திச் சண்டையை நிறுத்தி இருக்கார். உடனே ரெண்டு அரசர்களும் உனக்கும் வேணாம் எனக்கும் வேணாமுன்னு அந்த  சிம்மாசனத்தைப் புத்தருக்கே கொடுத்துட்டாங்க. அதில் உக்கார்ந்துதான்  தர்மத்தை உபதேசிச்சாராம். போதி மரத்தடியில் ஞானம் கண்டடைந்த எட்டாம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்னு சொல்றாங்க.  அந்தக் கணக்கில் பார்த்தால் ஏசு பிறக்க ஒரு ஐநூத்துச் சொச்சம் வருஷங்களுக்கு முன்பாக இருந்திருக்க வேணும்! ( 543 BC )

இந்த சிம்மாசனம்தான், இந்த ஸ்தூபாவுக்கு உள்ளே இருக்குன்னும்  கோவில் சரித்திரம் சொல்லுது.

இந்த ஸ்தூபாவுக்குத் தொட்டடுத்துப் பக்கத்துலேயே இருக்கும் புத்தர் கோவில்  பார்க்கவே ரொம்பப் பழசாவும், அழகாவும் இருக்கு! இதுக்கு நேர் எதிரே ஒரு தடாகம்/ நீரூற்று போல ஒரு அமைப்பு. ஆனால் தண்ணீர் இல்லை.  இதுக்கு அந்தாண்டை ரெண்டு தோரணவாயில்கள்.  இதுவழியாப் பார்த்தால் படிக்கட்டு வரிசை!

போச்சுடா.....   உண்மையில் இதுதான் கோவிலுக்கான நுழைவுவாசல்.  நாம் கார்பார்க்கில் இருந்து பின்னம்பக்க வழியில் உள்ளே வந்துருக்கோம்.  இடும்பின்றது சரியாப் போச்சு. எல்லோருக்கும் உள்ள வழி நமக்கில்லை பாருங்க :-)

இந்த வழியா உள்ளே நுழைஞ்சால்  கண்ணெதிரே கோவில். இடப்பக்கம்  கோவில் மணிக்கூண்டு.   கோவில் மணிக்கூண்டுலே பெரிய மணி ஒன்னு !  இதுக்குமே கொஞ்சம் படிகள் ஏறித்தான் போகணும். செல்லம் ஒன்னு படிகளில் படுத்துருந்தது.

கோவில் வாசலுக்கு ஒரு பக்கம் ஸ்தூபா!  இன்னொருபக்கம்  போதிமரம் ! ப்ரமாண்டமாய் வளர்ந்து நிக்குது! சங்கமித்திரை கொண்டுவந்த  கிளையில் வளர்ந்து மரமாகி, அதிலிருந்து கொண்டு வந்த கிளை இது(வாம்! )

கோவில் மரத்தடியைச் சும்மா விட்டு வைக்காமல்  உயர்த்திக் கட்டிச் சுத்திவர  ரெய்லிங் போட்டு  ரொம்பவே அழகா வச்சுருக்காங்க புத்தர் கோவில்களில். நாம் நம்ம காசிப்பயணத்தில்  சாரநாத் போனப்ப, ரொம்பவே ப்ரமாண்டமான போதி மரத்தைப் பார்த்தோமே.... நினைவிருக்கோ? நாமும்  சிங்கை, மலேசியா, சீனா, பாலி, கம்போடியான்னு பல இடங்களில் புத்தர் கோவில்களைப் பார்த்திருந்தாலும், இந்த போதிமர (புனித)சமாச்சாரம் இந்தியாவிலும் இலங்கையிலும்  மட்டும்தான் முக்கியமானதா இருக்குன்னு தோணுது.

(எங்கூர்லேயும் மூணு புத்தர் கோவில்கள் இருக்கு, தெரியுமோ?  ஆனால் நோ போதி மரம்! இந்தக்குளிரில் வளராது... கேட்டோ....  ஆனால் அசப்பில் இந்த மரத்தின் இலை போல ஒன்னு இருக்கும் மரம்  இந்த ஊர்  தோட்டங்களில் உண்டு.) 
எதிரில் இருக்கும் போதிமர மேடையைச் சுத்தி  வண்ணவண்ண ப்ரேயர் கொடிகளைக் கோர்த்துத் தொங்கவிட்டுருக்காங்க. சாமிக்கு நைவேத்யங்களும் சின்னக்குடங்களில் தீர்த்தமும், பூக்களுமாய் வச்சுக் கும்பிடறாங்க.
இந்த கெலனிய புத்தர் கோவிலே  இதுதான். ஆமாம்.... இது கெலனியவா இல்லை கெளனியவா? Kelaniya  Dagoba, Kelaniya Raja Maha Viharaya

சரி, வாங்க கோவிலுக்குள் போகலாம்.....வாசலில் நின்னுக்கிட்டே என்ன பேச்சு இம்மாந்நேரம்....
படிகட்டில் ஏறும்போதே படிகளின் ரெண்டு ஓரங்களிலும் கஜசிம்ஹங்கள் !

எதிரே மண்டபத்துத் தூண்களைத் தலையில் தாங்கும் யானை!
மண்டபம் கடந்து உள்ளே போனால் பெரிய கூடம். கண்முன்னே  'இருந்தார் புத்தர்' இமயமலையில்!
வலப்பக்க வாசலில் போனால் 'கிடந்தார் புத்தர்' ஒருக்களித்துப் படுத்திருக்கும் நிலையில்.... ஒரு முப்பதடி இருப்பாரோ?
சாமிக்கு நைவேத்யமா கலர்கலரா ஜூஸ்!  இதுவும் நல்லாத்தான் இருக்கு!
இந்தக் கோவில் நம்ம சோமநாத் கோவில்போல எதிரிகளால் பலமுறை இடிக்கப்பட்டு, ஒவ்வொருமுறையும் மீண்டும் திருப்பிக் கட்டப்பட்ட கோவில்!

இப்ப இருக்கும் கோவிலை 1927 இல்  கட்ட ஆரம்பிச்சு 1946 இல் முடிச்சுருக்காங்க.  ஹெலனா விஜெவர்தனா என்ற அரசியின் முழு முயற்சியால்...... ( கண்ணாடிப்பெட்டிக்குள் பார்த்த  அரசியார் இவராக இருக்குமோ?) 

 மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிம்ஹா, 1967 இல் பழுதுபார்த்துப் புதுப்பிச்சாராம்.
Solius Mendis என்ற ஓவியர், சுவர்ச்சித்திரங்களை வரைஞ்சுதள்ளி இருக்கார். புத்த ஜாதகக் கதைகள்னு சொல்றாங்களே.... அதிலுள்ள கதைகளாம். நமக்குக் கதை  தெரிஞ்சுருந்தாப் படங்களைப் புரிஞ்சு ரசிக்கலாம்.  கதை  தெரியாத என்னப்போன்றவர்கள், ஓவியத்தின் அழகையும் அதில் வரைஞ்சுருக்கும் யானைகளையும் ரசிக்கலாம். ஒரு இண்டு இடுக்கு விடாம,  ஒரு இடம்பாக்கி இல்லாமத்,  தரையை மட்டும் விட்டுட்டுப் பாக்கி அஞ்சு சுவர்களிலும்  வரைஞ்சுருக்காங்க !

இதெல்லாம் கூட  பதினெட்டாம், இருபதாம்  நூற்றாண்டுகளில் வரைஞ்சவை! ஏற்கெனவே இருந்து பழுதாகிப் போனவைகளைத் திரும்பவும் சரிப்படுத்தினாங்களாம்.


சரியான லைட்டிங்ஸ் இல்லாததால் படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு....   (உபயம்: 'நம்மவர்' )

இதே கோவிலில் இன்னொரு கூடத்தில்  அலங்காரச் சம்புடம் ஒன்னு கண்ணாடிக்கூண்டில் இருக்கு. புத்தரின் கேசம் அதுக்குள்ளே இருக்காம்!  இன்னும் ரெண்டு தங்கநிற புத்தர்களும் (இருந்த நிலை) இருக்காங்க  இங்கே.

வெளியே கோவிலின் சுத்துச்சுவரில்  நம்ம கோவில்களின் கோஷ்டத்தில் இருப்பதைப்போல்  மாடங்கள் அமைப்புக்குள் சிலைகள். எல்லாம் கொஞ்சம் பெரிய அளவில்தான்.
நாம் படியேறிக் கோவில் வெளிமுற்றத்துக்குள் வந்தப்பப் பார்த்த விபீஷணனும்  இதில் ஒன்று!




அடுத்தாப்லே நிறையப் படிகளோடு உசரமா இருக்கும் இடத்தில் இருந்து  கொட்டுமேளம் கேட்டுச்சு. மேளமும்  ஒரு வகைக் கொட்டும். தோளில் மாட்டிக்கிட்டு  வாசிக்கறாங்க. என்னன்னு பார்க்கலாமுன்னு படிகள் ஏறிப்போனோம்.  பெரிய ஹால் மட்டும்தான்.  நிறையப்பேர் உள்ளே வரிசையா உக்கார்ந்துருந்தாங்க. சின்னதா புத்தர் சிலையோடு ஒருத்தர் நடக்க, கொட்டடிக்கும் ஆட்கள் பின்னாலேயே அடிச்சுக்கிட்டு நகர்ந்தாங்க. அநேகமா எதாவது குடும்ப விசேஷமோ, சாயரக்ஷை பூஜையோ தெரியலை.... 'நம்மவர்' படம் எடுக்காதேன்னு மிரட்டினார். சரின்னுட்டேன்.



கோவிலில் தீபமேற்ற தனி அமைப்பு.  இருட்ட ஆரம்பிச்சதால் விளக்குகள் அழகாத் தெரிஞ்சது.
நாமும் போதிமரத்தையும், மரத்தடியில் குடையுடன் இருக்கும் புத்தரையும் கும்பிட்டுக்கிட்டுக் கிளம்பிட்டோம்.  கோவிலில் நல்ல கூட்டம்தான்.   போயா தினங்களில் கூட்டம் நெரியுமாம். திருவிழாக் காலத்தில் சொல்லவே வேணாம்.
திதி பார்த்து அரசு விடுமுறை விடும் நாடு இலங்கை மட்டும்தான்னு நினைக்கிறேன். ஒவ்வொரு பவுர்ணமியும்  இங்கே அரசு விடுமுறைநாள்.  புத்தர் சம்பந்தப்பட்ட முக்கிய சமாச்சாரங்கள் எல்லாமே பவுர்ணமியில் நடந்துருக்கு. அவர் இங்கே வந்ததாகச் சொல்லப்பட்ட நாளும்  ஒரு பவுர்ணமி தினம்தான். பவுர்ணமியைத்தான் இங்கே போயா(POYA) ன்னு குறிப்பிடறாங்க.! ஒவ்வொரு பவுர்ணமி தினத்துக்கும் ஒரு தனிப்பெயரும் உண்டு!  வைகாசி மாசப் பவுர்ணமிதான்  வெஸாக்னு அவுங்க குறிப்பிடும் புத்த பூர்ணிமா !

இந்தக் கெலனிய கோவிலை, நம்மாட்கள் களனின்னு சொல்றாங்களாம் !  மஞ்சு சொன்னார்.

இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு இல்லே? பேசாம   கெஸ்ட் ஹௌஸுக்குத் திரும்பிடணும்.
நேத்துப் பார்த்த சூப்பர் மார்கெட் வந்ததும்,  பழங்கள் வாங்கிக்கணும்.  அங்கே போனதும்தான் ராச் சாப்பாட்டுக்கான ஐடியா வந்துச்சு.  ஒரு  சின்னக் கப் அரிசியும், (நூத்தியம்பது கிராம் இருந்தது) ரெண்டு தயிரும் , கொஞ்சம் பழங்களும் வாங்கினோம்.

கெஸ்ட் ஹௌஸ் வந்ததும்,  அரிசியைக் கொடுத்துச் சோறாக்கித் தரச் சொல்லிக் கேட்டதுக்கு, 'ரைஸ் குக்கரில் போடவா'ன்னார். டபுள் ஓக்கே!

ராத்திரிக்கு தச்சு மம்மு! தொட்டுக்க?  சென்னை ஏர்ப்போர்ட் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மிக்சர் இருக்கே!   (ஹாஹா... நாமும் மிக்சர் தின்றோம் )

மஞ்சுவை வீட்டுக்கு அனுப்பணும். மறுநாள்  கொஞ்சம் சீக்கிரம் வரச் சொன்னோம். கூடவே ஒரு நாலைஞ்சு நாட்களுக்கான துணிமணிகளையும் கொண்டுவரச் சொல்லியாச்சு.

நாளைக்குக்  கொழும்பு நகரத்தை விட்டுக் கிளம்பி வேற இடங்களுக்குப் போய்ப் பார்க்கலாமா?

தொடரும்..... :-)

12 comments:

said...

உங்க கூட சுத்தி பார்த்த உணர்வு. அவ்வளவு அருமையா களனி புத்தர் கோவில் பற்றி எழுதியிருக்கீங்க. இங்கு பெளர்ணமி நாட்கள் விடுமுறை. வைகாசியில் வரும் வெசாக் சில வேளைகளில் புதன்கிழமை வந்தால் வியாழன் வெள்ளி லீவு நாட்களாக இருகும். பள்ளியில் படிக்கும் நாட்களில் போயா எப்போ வருமென காலண்டரில் பார்த்து வைத்துவிடுவோம். வெசாக் கூடு பிரபல்யம். படங்கள் சூப்பர் டீச்சர்.

said...

அருமை நன்றி

கொழும்பு புத்தர் கோவில்களின் ப்ரம்மாண்டத்தை பார்த்து தானே ராஜராஜனுக்கு தஞ்சை கோவிலை ப்ரம்மாண்டமாக கட்டும் ஆசை வந்ததாக பொன்னியின் செல்வன் சொல்கிறது;

said...

வாங்க ப்ரியசகி.

உள்ளூர் மக்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கவேணும் !

பயணம் முழுசும் கூடவே வாங்க. தகவல் பிழை இருப்பின் தயங்காமல் சொல்லுங்கப்பா!

said...

வாங்க விஸ்வநாத்.

கல்கி அப்படியா சொல்லி இருக்கார்? ஆயிரம் வருஷங்களுக்கு முன் இவ்ளோ பெரிய புத்தர் கோவில்கள் இருந்துருக்குமா என்ன? வேற சில இடங்களில் தொல்லியக்கத்துறையின் குறிப்பில் ஆரம்ப காலத்துலே சின்ன அளவில் இருந்தவைகளைத்தான் வெவ்வேறு காலக்கட்டத்தில் அரசர்கள் புதுப்பிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா பெருசாக்கப்பட்டதுன்னு சொல்லி இருக்காங்க.


தஞ்சப் பெரியகோவிலின் வடிவம், அமைப்பு எல்லாம் தனி வகை இல்லையோ !!!

said...

இதற்கு முன்னும் சில திருத்தங்கள் சொல்ல நினைத்து நேரமின்மையால் விடுபட்டு போய் விட்டது. இந்த முறை வரலாற்று தகவல் என்பதால் கட்டாயம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அந்த தங்க நிற பெண்ணின் சிலை களனி ராஜதானியை ஆண்ட அரசி விஹாரமஹாதேவி (205 BC - 161 BC). இவருக்கு இலங்கை வரலாற்றில் மிக பெரிய இடமுண்டு. இவரின் மகன் துட்டுகெமுனு (DUTUGEMUNU) தான் அனுராதபுரத்தில் ஆட்சி செய்த சோழ மன்னன் எல்லாளனுடன் போரிட்டு வென்று இலங்கையை வெளிநாட்டவரிடமிருந்து மீண்டும் கைப்பற்றினான். அதனால் இலங்கை வரலாற்றில் துட்டுகெமுனு மற்றும் அரசி விஹாரமஹாதேவி ஆகியோர் முக்கிய ஆட்சியாளர்களாக கருதப்படுகிறார்கள்.
அடுத்தது ஹெலெனா விஜேவர்தன, இவர் இலங்கையில் மிக பெரிய பிரபு குடும்பத்தை சேர்த்தவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அக்கால வழக்கப்படி கிறிஸ்தவ பெயர்களை சூட்டிக்கொண்டாலும் இவர்கள் பரம்பரை சிங்கள பவுத்தர்கள். சமூக சேவைகளில் ஆர்வமுள்ள இவர் களனி விகாரையை புனரமைக்க தன் சொத்துகளில் பெரும்பகுதியை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இவர் பெயரில் மிக பெரிய பெண்கள் பள்ளிகூடமொன்று களனியில் இருக்கிறது. இலங்கை அரசியலில் மிக முக்கிய புள்ளிகளான முன்னாள் அதிபர் ஜெ ஆர் ஜெயாவார்தன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் இவரின் நேரடி குடும்ப வாரிசுகள். இவரை பற்றிய ஒரு கட்டுரை இது:http://exploresrilanka.lk/2017/05/helena-wijewardene-matriarch-illustrious-family/

அங்கே ஒரு அணையா விளக்கு இருக்கிறது பார்க்கவில்லையா? அப்படியே அதன் பக்கத்திலிருக்கும் படிக்கட்டில் இறங்கி வந்தால் விஹாரையின் பின்பக்க எல்லையில் களனி கங்கை அமைதியாக ஓடுகிறது. மாலை நேரத்தில் இந்த இடம் அத்தனை அற்புதமாக இருக்கும். தவற விட்டு விட்டீர்களோ?

பெரும்பாலும் இலங்கையில் விகாரைகள் அனைத்தும் மிக அமைதியாக இருக்கும். மனதிற்கு அமைதி வேண்டும் என்பவர்கள் சற்று நேரம் இங்கே உக்காந்திருந்தாலே போதும், அமைதி கிட்டும்.

said...

அலுப்பு தட்டாத வகையில் அருமையான பயணம். நீங்கள் தரும் விளக்கங்களும் நன்று. தொடர்ந்து புத்தரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

said...

கி.மு. கட்டப்பட்ட ருவான்வெலிசாயா போன்ற பிரமாண்ட ஸ்தூபிகள் (புத்தர் கோயில்கள்) இலங்கையில் உண்டு. இலங்கைக்கு குறிப்பாக அநுராதபுரத்திக்கு வந்த சோழர்கள் இவைகளை நிச்சசயம் பார்த்திருப்பார்கள்.

said...

வாங்க ராஜ்ஸ்ரீ,

முதல் வருகைக்கு நன்றி. இப்படி யாராவது வந்து விவரம், தகவல்கள் சொல்ல மாட்டார்களான்னு காத்துக்கொண்டிருந்தேன்.

மனம் நிறைந்த நன்றி !

தயைகூர்ந்து, சிரமம் பார்க்காமல் பதிவுகளில் வரும் தகவல்பிழைகளை தெரியப்படுத்துங்கள்.

அந்த அணையா விளக்கைப் பார்க்கவில்லையே.... பின்பக்கம் ஆறு ஓடுகிறதென்று தெரியும். ஆனாலும் இருட்டுமுன் விடுதிக்குத் திரும்பி வரவேணுமென்று சீக்கிரமே கிளம்பினோம். ஆனாலும் அன்றைக்கு நிறையக் கூட்டம்தான் கோவிலில் !

அநுராதபுரம் பதிவுகள் இனி வரும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர்வருகைக்கு நன்றி ! இனி கொஞ்சநாளைக்குப் புத்தரைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கப்போகிறீர்கள் !

said...

இடுகை நீளமாக நிறைய படங்களோடு இருந்தாலும் நிறைய தெரிந்துகொண்டேன்.

தச்சு மம்மம்...அட... நல்ல ஐடியா.

தொடர்கிறேன்

said...

'கிடந்தார் புத்தர்'...

விபீணன் பட்டாபிஷேகம்...படங்கள் என்னை அதிகம் கவர்ந்தன ..

வழக்கம் போல அட்டகாச படங்களும், தகவல்களும் ...அருமை மா

said...

களனி விகாரையும் இன்னும் செல்லவில்லை.

தகவல்கள்,படங்கள் அருமை.

அந்த சிவப்பு குருத்து இலைமரம் யூகலிப்ஸ் எனதெரிகிறது.