Wednesday, June 19, 2019

மனசு பூராவும் மகிழ்ச்சியே...... (பயணத்தொடர், பகுதி 106 )

என்  (ஒரு ) கனவு நிறைவேறும் நாள் இது என்பதால் வழக்கத்தைவிட சீக்கிரமாவே எழுந்து குளிச்சு தயாராகிட்டேன். இந்த  கெஸ்ட் ஹௌஸ் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்க்கணும்.  சுத்திவரக் காடு மாதிரி பச்சைப்பசேல்னு  காட்சி!
கொஞ்சதூரத்தில் ஒரு ஆறு.... ?  அதுக்கு அந்தாண்டை நகரத்தின் அடையாளமா உசந்து நிக்கும் கட்டடங்கள் !

ப்ரேக்ஃபாஸ்ட் ரெடின்னு வந்து சொன்னார் கெஸ்ட் ஹௌஸ் உதவியாளர். 'ரொம்ப மெனெக்கெட வேணாம். ப்ரெட் போதும், சீக்கிரம் கிளம்பணுமு'ன்னு சொல்லி இருந்தோமே.....
ஏழேகாலுக்குக் கீழே டைனிங் ரூம் போனால்  வடை காத்திருக்கு!  அட!   வெளியில் இருந்து வாங்கி வந்தாங்களாம். இடியப்பமும் மற்ற கறிகளும் கூட இருந்தன.   எனக்கு ப்ரெட் டோஸ்ட், வடை, ஒரு ப்ளெய்ன் இடியப்பம் தாராளம்!
மஞ்சுவும்  ஏழு மணிக்கே வந்துருந்தார்.  எல்லோருமா சாப்பிட்டு முடிச்சு,  அறையைக் காலி செஞ்சு, மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டோம்.  உதவியாளர்களைக் க்ளிக்க மறக்கலை!

கிட்டத்தட்ட நூறு கிமீ பயணம். மூணு மணி நேரம் ஆகுமாம். அதேதான் ஆச்சு. பின்னவல யானைகள் அநாதாலயம் வந்துருக்கோம்.


தாய்மாரை இழந்து அநாதைகளா நின்ன அஞ்சு யானைக்குட்டிகளைப் பராமரிக்கன்னு ஆரம்பிச்சதாம் இது. விஜயா, நீலா, கதிரா, மத்தாலி, குமாரின்னு பெயர் வச்சுருக்காங்க.   அமைச்சர் கலுகல்ல என்பவரின் முயற்சியால் 1975 ஃபிப்ரவரி 16 ஆம் தேதி  காட்டிலாக்காவினர் (conservation) தொடங்கி இருக்காங்க. இப்போ 93 யானைகள் !  இங்கேயே பிறந்த பிள்ளைகள் எழுபதாம்!  வாவ்.....
இவுங்களைக் கவனிச்சுக்க ஒரு  ஐம்பது பாகர்கள் வேலை செய்யறாங்க. இவுங்களைத்தவிர தன்னார்வலர்கள்,  வேலை கத்துக்க வரும் மாணவர்கள்னு பலரும் எதாவது ஒரு விதத்தில் உதவி செய்யறாங்க.

ஏராளமான தென்னைமரங்களும் இதர மரங்களுமா இருக்கும் பரந்த இடம்.  25 ஏக்கர் !   பக்கத்துலேயே  மஹா ஓயா (Maha oya) என்ற  ஆறு ஒன்னு!  எங்கேயோ காட்டுக்குள்ளே இருந்த பின்னவல, இப்போக் கொஞ்சம் கொஞ்சமா உலகப்புகழ் அடைஞ்சுருக்கு.
யானைகளுக்காகவே ஏராளமான வெளிநாட்டினர் வர்றாங்க.
காலை எட்டரை முதல்  மாலை அஞ்சரை வரை பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.  உள்நாட்டினருக்கு  நூறு ரூபாயும்,   வெளிநாட்டினருக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் கட்டணமா வசூலிக்கிறாங்க.

யானைகளுக்கு நாமே பழங்கள் ஊட்டி விடலாம், புட்டிப்பால் ஊட்டலாம். இதுக்கெல்லாம் தனித்தனிக் கட்டணம் உண்டு.  நாங்க பால் ஊட்ட ஒரு டிக்கெட் ( முன்னூத்தி அம்பது ரூ )  வாங்கினோம்.


சின்னச் சின்னக் குழுக்களாப் பிரிச்சு யானைகளைக் குளிக்கறதுக்குக் கூட்டிப்போறாங்க.  இந்த  தோட்டத்துக்கு எதிர்ப்புறம் இருக்கும் தெரு வழியாகப் போகணும். நாம் போன நேரமும் ஒரு குழு குளிக்கப் போயிருக்காம்.  இன்னொன்னு ரெடியா நிக்குது. முதல்லே ஆத்தங்கரைக்குப் போயிடலாமுன்னு போறோம். தெரு முழுக்க  பயணிகளுக்கான பொருட்கள் விற்கும் கடைகள். யானை பொம்மை, யானைச் சொக்கான்னு கண்ணு நிறைஞ்சு வழிய வழிய யானைகளே!
நாம் நடந்து போகும்போதே நமக்கு முன்னால் கடைத்தெருவில்  வாசலாண்டை வச்சுருந்த விற்பனைப் பொருட்கள் அடங்கிய ஷெல்ஃபுகளைச் சட்னு தூக்கி எடுத்து அந்தாண்டை வைக்கிறாங்களேன்னு பார்த்தால்  யானைகள் நடந்துவரப்போகுதாம். நாமும் சட்னு ஓரங்கட்டுனோம். 'யானை வருது வழிவிடு'ன்னு சொல்லிக்கிட்டே முன்னால் ஒருத்தர் கட்டியக்காரர் போல  வர்றார்.

ஒரு  குழுவில் மூணு இல்லே நாலுபேர் கம்பீரமா நடந்து வர்றாங்க. கூடவே ஒரு நாலைஞ்சு உதவியாளர்கள் கையில்  அங்குசம் ஏந்திப்பிடிச்சுக்கிட்டு......
பாம்பு வச்சுருந்தவர் சட்னு கூடைக்குள் போட்டுட்டுப் பம்முனார். யானைகள் கடந்தவுடன்  உள்ளே எடுத்து வச்சக் கடைப்பொருட்கள்  வாசலுக்கு  வந்து இடம்பிடிச்சுருது.
ஆத்தங்கரைக்குப் போனால்.....  கூட்டமான கூட்டம்.  யானைகள் எல்லாம் தண்ணீரில்.  மற்ற கூட்டமெல்லாம்  கரையில் கையில் கெமெராவோடு இங்கேயும் அங்கேயுமா ஓடறாங்க. நாமும் ஜோதியில் கலந்தோம்.......



பார்த்த விழி பார்த்தபடி......  கை மட்டும் க்ளிக்கிக்கிட்டே இருக்கு! (ஏழு நூறு க்ளிக்ஸ்,  சிலபல வீடியோ க்ளிப்ஸ் உட்பட)





ஒரு உயரமான  இடத்தில்  பெரிய ஹோஸ்பைப் வச்சுக்கிட்டு  யானைகளுக்கு ஷவர் கொடுக்க ஆரம்பிச்சார் ஒருவர். இதுக்காக ஒரு அமைப்பு வச்சுருக்காங்க ! எல்லா யானைகளும் தண்ணீரில் நிக்குதுகன்னாலும்  ஷவர் குளியலுக்கு ஓடி வருதுங்க!  இதுக்குப் பக்கத்துலேயே கரை ஏறும் பாதை. குளிச்சு முடிச்சவங்க கிளம்பணும் இப்போ.
மெகஃபோன் வச்சுக்கிட்டு இருந்தவர், 'யானை வருது வழி விடு'ன்னு சொல்லிக்கிட்டே வர்றார். வாகான இடம் தேடி சனம் இங்கும் அங்குமா அலைபாயுது. இதுலேயும் மெத்தனமா இருக்கறவங்களும் உண்டு.....   நாம் உயரமான இடத்துக்குப் போனோம். மஞ்சு இடம் பிடிச்சு வச்சுருந்தார் :-)
பாதை க்ளியர் ஆறவரைக்கும் பாதுகாவலர்  காவல் இருக்க.....

முதலில் தலைவர். கொஞ்சம் இடைவெளிவிட்டு  ஒரு சின்னக்கூட்டம்....
ஏத்தமா இருப்பதால் மெல்ல மெல்ல அடிவைச்சுக் கவனமாப் போறாங்க....     அப்படி முக்கி முனகி ஏறும்போது 'அபகடம் பற்றியால்'  அள்ளி எடுத்துப்போக சிலர் பின்னாலேயே ....
நல்லது. இல்லைன்னா இத்தனை யானைகள் நடமாடும் இடம் நாறிப்போயிடாது?
ஒரு செட் போனதும்  கொஞ்சநேர இடைவெளி. நாங்களும்  கிளம்பிட்டோம். போற வழியில்  ஆளுக்கொரு செவ்விளநி.
காலை பத்துமுதல் பனிரெண்டுமணி,  மதியம் ரெண்டு முதல் நாலு மணின்னு குளிக்கும் நேரம் வச்சுருக்காங்க.
இனி தோட்டத்துக்குள்ளே போய் மற்ற இடங்களைப் பார்க்கணும்.
ஒன்னேகாலில் இருந்து ஒன்னே முக்கால்வரை பால் ஊட்டும் நேரம். அதுக்குள்ளே  முடிஞ்ச அளவு சுத்திப் பார்த்துக்கலாம்.
அங்கங்கே சிலபல யானைகள் தனியாகவும், ரெண்டுமூணு பேரோடு பேசிக்கிட்டும் இருந்தாங்க. நிறைய செடிகளும் மரங்களுமா இருந்தாலும்  தாங்க முடியாத சூடும்,  வேர்த்து ஊத்தும்  உடலுமா அந்தச் செம்மண் பூமியில் சுத்திக்கிட்டு இருந்தோம்.
பழங்கள் ஊட்டுமிடத்தில் தர்பூசணி, அன்னாசி, வாழைப்பழம் எல்லாம்  வெட்டி நறுக்கித் தட்டுகளில் வச்சுருக்காங்க. டிக்கெட் வாங்குனவங்களுக்கு ஒரு தட்டு கிடைக்கும். ஊட்டிவிடலாம்! இதுகூட இப்ப ஒரு ஏழெட்டு வருஷமாத்தான் !  சரணாலயத்தின் வருமானத்தைப் பெருக்கித்தான் ஆகணும். இத்தனை வயிறுகள் இருக்கே!


ஒரு மணி ஆனதும்,  பாலூட்டும் இடம் தேடிப்போனோம். அதுக்குள்ளே அங்கேயும் ஒரு கூட்டம் சேர்ந்துபோயிருக்கு!

குட்டிப்பாப்பா வருமுன்னு ஆசையோடு பார்த்தா....  கொஞ்சம் வளர்ந்தவைகள்தான் ஒவ்வொன்னா வருது. அஞ்சு வயசுவரை தாய்ப்பால் குடிக்குமாம்.  ஒரு ஏழெட்டு வயசுள்ளவைகள்தான் இப்போதைக்கு.....

எல்லாம் 2010 இல் பிறந்தவை. அதுக்குப் பிறகு 2015 இல் தான் ஒரு குழந்தை பிறந்துருக்கு. பையன்!  சாந்தியும் வஸாபவும் தான்  பெற்றோர். ஜூலை 2, 2015.  (நாம் போனப்பக் குழந்தைக்கு மூணு வயசு! )

தாய்க்கும் சேய்க்கும் தனி இடம் ஒதுக்கி, பத்திய சாப்பாடெல்லாம் போட்டு, நல்ல நாள் பார்த்து  ஆகஸ்ட் 6 ஆம்தேதி  'அன்ராத' என்ற பெயர் சூட்டி இருக்காங்க. அதுக்குப்பிறகு மற்ற மந்தையோடு இவுங்களைச் சேர்த்தப்ப, அனுராதனின் அத்தை மீனா,  முன்னாலே வந்து அழைச்சுக்கிட்டுப்போச்சாம்.  கூட்டத்துக்கு நடுவில் போனதும் மற்ற யானைகள் எல்லாம் தும்பிக்கையை உயர்த்தி பிளிறி ஆரவாரம் செஞ்சு ஒரு வரவேற்பாம் ! திருஷ்டி சுத்திப் போடணும். எவ்ளோ அன்பு பார்த்தீங்களா உறவுகளுடன்!
முதலில் ஒருத்தனைக் கூட்டிவந்து எப்படி பால்பாட்டிலில் இருந்து பாலை  ஊட்டணுமுன்னு  செஞ்சு காமிச்சார் ஒரு பாகர். பாட்டிலுக்கு ரப்பர் எல்லாம் இல்லை.  'ஆ காட்டு'ன்னுட்டு அப்படியே வாயில் ஊத்தி விடறதுதான்.
டிக்கெட் வாங்குனவங்க வரிசையில் போய் பாலூட்டறாங்க. நம்ம முறை வந்தப்ப நான் போனேன். நம்மவர் எனக்கு விட்டுக்கொடுத்துட்டார். அவராண்டை கெமெராவைக் கொடுத்தேன்.

செல்லம் ஒரு அஞ்சு விநாடியில் பாட்டில் பாலை முழுங்கிருச்சு!  நம்மவர் க்ளிக்கினாரா இல்லை கோட்டை விட்டுட்டாரான்னு  என் கவலை எனக்கு :-) ரீவைண்ட் செஞ்சு பார்த்ததும்தான் நிம்மதி ஆச்சு !


மணி ஒன்னே முக்கால். இங்கேயே  எங்கியாவது சாப்பிட்டுட்டுப் போகலாமுன்னு தேடுனதில்  சரணாலயத்துக்கு நேரெதிரில் இருக்கும் 'ஹொட்டேல் எலஃபென்ட்  லாபி'  கண்ணில் பட்டது.  இங்கே எட்டிப் பார்த்தால் கூட்டமே இல்லை. அக்கம்பக்கம் கடைகளில் நிறையக்கூட்டம் இருந்ததைப் பார்த்தேன்.

பஃபே ரெடியாம். என்னால் அவ்வளவு சாப்பிட முடியாது.  சிம்பிளா எதாவது வேணுமுன்னதும் பாஸ்த்தா இருக்குன்னாங்க. நாங்க ரெண்டுபேரும் வெஜிடேரியன் பாஸ்த்தா. மஞ்சு வேற டேபிளில் போய் உக்கார்ந்து வேறென்னவோ சாப்பிட்டார் :-)

நிறைய யானைகளைப் பார்த்த மனத்திருப்தியோடு பின்னவலயை விட்டுக்கிளம்பினோம்.
நம்ம அடுத்த இலக்கு இன்னும் நூறு கிமி தூரத்தில்!

சமீபத்துக்கணக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முழுசும் சேர்த்து 5500  யானைகள் இருக்காம் !!!!!! 

ஹைய்யோ !!

தொடரும்........ :-)


12 comments:

said...

யானைகளைப் பார்த்ததில் சந்தோஷம்.

யானைகளின் லத்தி வெறும் தாவரப் பொருட்கள் என்பதால் அது வாசனை வருவதில்லை. ஏதோ ஒரு நோய்க்கு (கால் சம்பந்தமான), புதிய லத்தியில் கால்களை வைக்கச் சொல்வார்கள்.

தொடர்கிறேன்

said...

எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி இத்தனை யானைகளை பார்த்ததுக்கு ..

சமீபத்துக்கணக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முழுசும் சேர்த்து 5500 யானைகள் இருக்காம் !!!!!! -- இதை கேக்கவே உண்மையிலே "மனசு பூராவும் மகிழ்ச்சியே"

said...

மிக அருமை. நன்றி.

said...

யானைகளை இயற்கையான சூழலில் கண்டதில் மகிழ்ச்சி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இந்த லத்தி சமாச்சாரம் நானும் கேள்விப்பட்டுருக்கேன்.

said...

வாங்க செந்தில்பிரசாத்.

பசங்களைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியேதான்! ஒரு விநாடி சும்மா நிக்குதுங்களா ? :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

தொடர் வருகைக்கு நன்றி !

said...

இலங்கையில் எங்கோ யானை லத்தியிலிருந்து காகிதம் உருவாக்குறார்கள். (பின்னவல என்றுதான் நினைத்திருந்தேன். உங்கள் கண்ணில் படாததால் வேறு இடமாகவும் இருக்கலாம். இங்கு வெளியாகும் ஸ்கூல் ஜர்னல் ஒன்றில் இதைப் பற்றி ஒரு கட்டுரை இருந்தது.) இந்தக் காகிதத்தினால் தயாராகும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருமானம் யானைகளின் பராமரிப்புக்குச் செலவாகிறதாம்.

சரணாலயத்தை விட உங்க ட்ரான்ஸ்லேஷன் பொருத்தமா இருக்கு. ;) 5500 ஒரு நாட்டில்! போதாது இல்லையா! அவற்றின் கர்ப்பகால வட்டம், குழந்தை வளர எடுக்கும் காலம் எல்லாம் பார்க்கும் போது இறப்பு வீதம் அதிகம்.

said...

அசோ அசோ யானை ...இவங்களை பார்க்கும் போதும் படிக்கும் போதும் நாமும் குழந்தைகள் ஆக்கிடறோம் மா ...

இந்த இடம் ரொம்ப அருமையா இருக்கு ...

அப்புறம் மூத்த யானை அனுஷ வாம் இளைய யானை அனுராத வாம் ...எங்க பார்த்தாலும் அனு ன்னு பேர் . ...நம்ம பேர் படிக்கும் போதும் ஒரே happy தான்..


இங்க பொள்ளாச்சி TOPSLIP ல இது போல முகாம் இருக்கு இந்த வருட கோடையில் அங்க போனோம் ...இதே போல நல்ல பராமரிப்பில் யானைகள் 2௦க்கும் மேல இருக்கும் ...இப்படி ஆறு எல்லாம் இல்ல ஆனாலும் பசுமையான மலையில் அவர்களின் வாசம் ...

said...

உங்க பேவரிட் ஆட்களாச்சே. இந்த இடத்துக்கு போகாமல் வருவீங்களா... யானை என்றால் எனக்கும் ரெம்ப பிடிக்கும். சின்ன வயத்தில் யானை வளர்க்க ஆசை பட்டு அப்பாவிடம் அடம் பிடித்து அழுவேன் என சொல்வார்கள் வீட்டில்.. பின் எங்க வீட்டினருகில் ஒருவர் (என் விருப்பம் தெரிந்ததோ என கிண்டல் செய்வாங்க வீட்டில்)யானை வளர்த்தார். அங்கு போய் பார்த்துக்கொள்வேன்..
அழகான படங்கள், அருமையான உங்க பதிவு டீச்சர்.

said...

அருமையான இடம். நாங்கள் இரண்டு நாட்கள் தங்கி நின்று பார்த்தோம்.

பின்னவலை மிருககாட்சி சாலை சிறுத்தை இருக்கிறது பார்கவில்லையா?

யானைபடம் போட்ட கைப்பைகள் இருக்கின்றன பலடிசைன்களில்.நான்கைபைஒன்றும்,யானை தலை கழுத்து செயின் கறுப்பு நூலில் கோர்த்தது வாங்கினேன்.