Wednesday, November 23, 2016

யானை வாகனம், சாஸ்தாவுக்கு ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 100)

கொள்ளிடம் பாலம் கடந்து  சமயபுரம் போகும் பாதையில் ஒரு டோல் ரோடு வழியாப் போறோம். சமயபுரம் போகும் பக்தர்கள் குழு ஒன்னு மஞ்சள் யூனிஃபா(ர்)மை நேஷனல் ஹைவேயில் காயவச்சுக்கிட்டு இருக்காங்க. சிறுகனூர்  என்ற ஊரில் இருந்து இன்னும் அஞ்சு கிமீ போகணுமாம், திருப்பட்டூருக்கு!
கோவில் மதில் தெரிஞ்சதும் வண்டியை அங்கே திருப்பினார் சீனிவாசன்.

அய்யனார் கோவிலாம். இவ்ளோ பெருசா?  உள்ளே போனால்   மாலையும்  உடலுமா  நம்ம யானை! அந்தாண்டை  திரும்பி நின்னு  பலகணி வழியாப் பார்த்துக்கிட்டு இருக்கு!  ஞான உலா சாஸ்தா மூலஸ்தானம்........ பொதுவா ஐய்யப்பன் கோவிலைத்தான் சாஸ்தா கோவில் சொல்லுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால்....  இவர் மாசாத்தனாராம்!
இந்தப்பெயரை வேறெங்கோ கேட்டுருக்கமேன்னு,  (இருக்கும்)  கொஞ்சம் மூளையைக் கசக்கினால்.....  மாசாத்துவன் என்ற பெயர்  மனசில் வந்தது.  இவர்  கோவலனுடைய தந்தையார் இல்லையோ?  இப்படித்தான் ஒன்னு பார்க்கும்போது இன்னொன்னு  ஞாபகத்துக்கு வருது.....   போகட்டும்....  அவர் சாத்துவன். இவர் சாத்தனார் !
சின்னதா  மூணுநிலை ராஜகோபுரம்! வாசலில் பூஜைப் பொருட்கள் விற்கும் கடை.  தேங்காய் உடைக்கணும்,  விளக்குப் போடணும் இதெல்லாம்தான் இங்கே விசேஷம். செக்குலே ஆட்டுன  தேங்காய் எண்ணெய் இங்கே கிடைக்கும் என்றெல்லாம்  அங்கே உக்கார்ந்திருந்தவர் ( சிவாச்சாரியார் ?) சொன்னார்.  பொதுவாப் பயணங்களில் தேங்காய் உடைக்கறதில்லை.  சாமிப் பிரசாதம் என்ற வகையில்  வண்டிக்குள்ளேயே இருந்து  பலசமயம் மறந்துபோய் கெட்டுப்போயிருது.  ஆனால் செக்குலே  ஆட்டுன தேங்காய் எண்ணெய் என்றதும் பேலியோ நினைவுக்கு வந்தது உண்மை.
அதென்ன கோவில் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை என்ற புதிருக்கு விடை கோவிலுக்குள் கிடைச்சது. அய்யனாருக்கு வேண்டிக்கிட்டு அம்பத்தியொன்னு, நூத்தியொன்னுன்னு  ஏராளமான தேங்காய்களை மக்கள்ஸ் உடைக்கிறாங்களாம்.  அதையெல்லாம்  சேகரிச்சு, சிரட்டையில் இருந்து தேங்காய்ச்சில்லைப் பெயர்த்தெடுத்துப் பாயில் காயவச்சுக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர். நல்லா காய்ஞ்சதும்  செக்குலே ஆட்டி எண்ணெய் எடுக்கறாங்களாம்.  கோவிலுக்கு ஒரு கூடுதல் வருமானம் ஆச்சு!


 "ரொம்பப்பழைய கோயில், மூவாயிரம்   வருசம் இருக்கும்,  அந்தக் காலத்துலே மண்சுவர் வச்சுக் கட்டுன கோயில்தான் அப்புறம் சோழமன்னர் இதை  இப்ப இருக்கும் நிலையில் கட்டுனார்!"  காலை ஆகாரம் சாப்பிட்டுக்கிட்டு இருந்தவர்  சொன்னார்.
கடையில் தலவரலாறு புத்தகம் இருந்ததைக் கவனிச்ச நம்மவர் உடனே வாங்கினார்.  எனக்கு மேட்டர் தேத்தித்தரும் ஆர்வம்தான் :-)  ராம்ஜி என்பவர் எழுதியது.

அய்யனாருக்கு ரெண்டு தேவிகள். பூரணை, புஷ்கலை என்று பெயர்கள்.  சந்நிதிக்குள்ளே போனோம்.  நல்ல அழகான கம்பீரமான சிலைதான்!  நிறைய ருத்ராட்ச  மாலைகளை  கழுத்து, கை, தோள், மார்புன்னு  போட்டுருக்கார்! ஒரு கையில் ஓலைச்சுவடி ஒன்னு. இன்னொரு கையில்  என்னன்னு தெரியலை. பூச்சரம் சாத்தி இருந்தது.
வெளியே பிரகாரத்தில் வலம் வந்தோம். நிறைய தூண்களோடு  ஒரு கல்மண்டபம். இதுக்கும் உள்ளே அய்யனார் கையில் இருக்கும் ஓலைச்சுவடிக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு! உள்ளே நுழைஞ்சவுடன் யானைக்கு முன்னால் ஞான உலா சாஸ்தான்னு பார்த்தோமே...  அதுக்கான விளக்கமும் இதுலே இருக்கு!

நம்ம சுந்தரமூர்த்தி நாயனார் (அந்த நாலுபேரில் ஒருவர்!) இருக்காரே  அவரும், சேரமான் நாயனாரும் நண்பர்கள். சேரமான் நாயனார் திருக்கைலாய  ஞானஉலான்னு ஒரு புத்தகம் எழுதி இருக்கார்.  அதைப் படிச்சுப் பார்த்த  சுந்தரர் ,  ' ஹைய்யோ! எவ்ளோ நல்லா எழுதி இருக்கீர்! இதை நம்ம சிவனின் கையால் வெளியிடணும். வாங்க கைலாசத்துக்குப் போகலாம்'ன்னு  கிளம்பச் சொல்றார்.

நம்ம சுந்தரருக்கு, சிவன் பெஸ்ட் ஃப்ரண்ட் என்பதால் (இவருக்காகக் காதல் தூது போனவர் சிவன்!)  'வரட்டுமா? வரப்போறோம்' என்ற தகவல் கூட அனுப்பாமல்,  சேரமான் நாயனாருடன் கைலாயம் போய்ச் சேர்ந்தார். சிவபெருமானை வணங்கி, வந்த விஷயத்தைச் சொல்றார்.

'என்னம்மா.... இதை இங்கேயே அரங்கேற்றம் செஞ்சுடலாமா'ன்னு  தேவியைக் கேக்கறார் சிவன். ( அங்கேயும்'  மனைவியைக் கேக்காமல் தானே தலையாட்டிக்கூடாது'ன்னு  மக்களுக்கு  இப்படித் தன் செய்கையால்  ஒரு முன்மாதிரியாக இருக்கார் பாருங்க! )   'இங்கே எதுக்குங்க. புண்ணிய பூமியாம் திருப்பிடவூரில்  ( ஆதி காலத்தில் இந்தப் பெயர்தான் திருப்பட்டூருக்கு!) அரங்கேற்றலாமு'ன்னு  மனைவி சொல்றாங்க.
'அப்படியே செஞ்சால் ஆச்சு'ன்றவர், தன்னுடைய சார்பில் யாரை அனுப்பி அரங்கேற்றத்துக்குத் தலைமை வகிக்கச் சொல்லலாமுன்னு  பார்க்கிறார். பொருத்தமானவரைத் தேடும்போது சிவகணங்களுக்குள்  ஒருவர் கண்ணில் பட்டார்.  இவரை விடப் பொருத்தமானவர் வேறு யார்னு அவரிடம் ஓலைச்சுவடியைக் கொடுத்து, 'பூவுலகில் திருப்பிடவூர் சென்று  இந்த திருக்கைலாய ஞான உலாவை வெளியிட்டுவிட்டு, அங்கேயே தங்கி  என் பக்தர்களுக்கு அருள்வாயாக'ன்னு உத்திரவும் போட்டார்.  யானை மேல் ஏறி  திருப்பிடவூர் வந்து சேர்ந்தார்,   சாஸ்தா!
அந்த அரங்கேற்றம் நடந்தது இந்தக் கல்மண்டபத்தில் தானாம்!  இதையொட்டியே பிரகாரத்தின் ஒரு பக்கம் சப்தமாதாக்கள் இருக்காங்க.

அரசரும், படை வீரர்களும் சாத்தனார்  கோவிலுக்கு வந்து அவருக்குப் படையல்  போட்டு, தங்களுடைய ஆயுதங்களை இவர் காலடியில் வச்சு வணங்கிட்டுத்தான் போருக்குக் கிளம்புவாங்க. அப்பதான் போரில் வெற்றி நிச்சயம் என்றெல்லாம் சங்க காலத்துக் கல்வெட்டுகளும் பாடல்களும் சொல்லுதாம்!

கோவில் வளாகம் சுத்தமாகவே இருக்கு.  சுத்தி வரும்போது  அழகான பூக்களுடன் ஒரு மரம். என்ன மரமாக இருக்கும்?  கேட்க விட்டுப்போச்சு :-(உண்மையில் இந்தக் கோவில் இருக்கும் விவரமே நமக்குத் தெரியாது. ப்ரம்மாவுக்குக் கோவில் இருக்குன்னுதான் அதுவும் நம்ம வெங்கட் நாகராஜ் அவர்கள் பரிந்துரையின்படி  இங்கே வந்திருக்கோம்.    யானையைக் காட்டி, வாவான்னு கூப்பிட்டு நமக்கு அருள் செஞ்சுருக்கார் அய்யனார்!  அதுவும் காலை  6 மணிக்குத் திறக்கும் கோவில்  காலை 10 மணிக்கே மூடிருவாங்களாம். இது தெரியாமல் நாம் பத்து மணிக்குத்தான்  கோவிலுக்குள்ளே நுழையறோம். கோவில் மூடும் நேரம்னு விரட்டி அடிக்காமல் தரிசனம் செஞ்சு வச்ச அர்ச்சகருக்கும், அருள் செய்த அய்யனாருக்கும் மனம் உருக நன்றி சொல்லத்தான் வேணும்.

தேடிவந்த கோவிலைத் தேடி விசாரிச்சதில்  அங்கே ரொம்பப் பக்கத்துலேயே இருக்குன்ற தகவல் கிடைச்சது. அதுவுமில்லாமல்  இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு முக்கியமான கோவிலும் இருக்குன்னு சொன்னாங்க. மொத்தம் நாலு  கோவில்கள்!

தொடரும்.......  :-)


14 comments:

said...

அழகான, பழமையான கோவில்.

said...

பழமையான கோவில். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்றபடி கோவில்களும் உங்களை விடறதில்லை.

said...

Bauhinia purpurea - நீலத்திருவத்தி (ஆத்தி மரம் வகை) பூ எல்லாம் பார்த்துட்டீங்க...

உள்ளூர் வழக்கத்துல சொல்லனும்னா பீடி மரம்.
இதன் பெரிய இலைகள் (பிரசாதம்) சாப்பிட, சிறிய இலைகள் பீடி சுத்த பயன்படுத்துவாங்க.

said...

எங்க அய்யனார் பெயரும் பூர்ண புஸ்களாம்பிகா சமேத அய்யனார் தான்...அவர் இருப்பது ஸ்ரீரெங்கம் பக்கத்தில் மேலூரில்...


இவரும் அழகாக யானை யோட இருக்கார்...

said...

நன்றி.

அடுத்தது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரா ?
தொடர்ந்து அதற்கு பின்னால் இருக்கும் சிவன் கோவிலும் தானே ?

காத்திருக்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

அமைதியாகவும் இருக்கு !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.


நினைக்காத கோவில்களிலும் கூப்புட்டு தரிசனம் கொடுக்கும் கருணைதான் மனத்தை நிறைச்சுருது!

said...

வாங்க ரமேஷ்.

பீடி இலையா? அட!!!!! இப்பதான் இதுதான் அதுன்னு தெரிஞ்சது :-)

தகவலுக்கு நன்றி!

said...

வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

மேலூர் ரோடு வழியா பலமுறை போயிருக்கோமே தவிர மேலூர் போனதில்லை. பார்க்கலாம்... அடுத்த பயணத்தில் சான்ஸ் கிடைக்குமான்னு!

said...

வாங்க விஸ்வநாத்!

ஒரு கல்லில் அஞ்சு மாம்பழம் அங்கே :-)))

said...

சாத்தன் சமணப் பெயர். மாசாத்துவான் சமணச் சமயம் தான். சாத்தன் தான் சாஸ்தாவாயிருக்கு. சமண முனிவர்கள் கல்வி கற்பிச்சதால அவங்க கைல எழுத்தாணியும் ஓலையும் இருக்கும் வாய்ப்பிருக்கு.

கோயிலுக்கு வர்ர தேங்காய்கள்ள இருந்து எண்ணெய் எடுக்குறதும் நல்லதுதான். சும்மா நாலு பேரு பொறுக்கும் தேங்காயக் காய வெச்சு எண்ணெய் எடுக்குறது அருமை.

அல்சைமர் நோய் இருக்குறவங்க இயற்கையான தேங்காய் எண்ணெய்யை ரெண்டு ஸ்பூன் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டா நல்ல பலம் இருக்காம். வெள்ளக்கார டாக்டர் கண்டுபிடிச்சிருக்காங்க. நாம தான் அடிக்கடி தேங்காய்ச் சட்டினி சாப்பிடுறோமே. நமக்கெல்லாம் பிரச்சனையில்ல.

said...

அருமையான கோயில் உலா. நன்றி.

said...

கற்பனை வளம் இருந்தால் நன்றாகக் கதைக்கலாம் அய்யனார் என்பவர் தமிழகத்தில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் அய்யப்பன் சாஸ்தாவின் இன்னொரு பிம்பமே ஆனால் கதைகள் மாறும் அய்யப்பன் பிரம்மசாரி சாஸ்தா இரு மனைவிக்காரர்

said...

பழமையான கோவில்கண்டு கொள்ளக்கிடைத்தது.