Monday, November 28, 2016

எனக்கும் புது வாழ்வு. தேடிவந்தால் உமக்கும் புதுவாழ்வு ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 101)

மூணே நிமிசத்தில்  பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். திருப்பட்டூர் ஸ்ரீப்ரம்மபுரீஸ்வரர். சிவன் கோவில்தான். ஆனால் ப்ரம்மாவுக்குத் தனியாக ஒரு சந்நிதியே இருக்கு!  ப்ரம்மன் வந்து சிவனை வழிபட்ட தலம்!   கைலாயத்தை விட்டுட்டு எதுக்கு ப்ரம்மன் பூலோகத்துக்கு வந்து சிவனைக் கும்பிட்டுத் தவம் செய்யணுமாம்?
ஆதிகாலத்தில், சிவனைப்போல்  ப்ரம்மனுக்கும் அஞ்சு தலை!  ஸேம் ஸேமா இருப்பதால் தானும் சிவனும் ஒன்னு போலன்னு கொஞ்சம் ஆணவம் வந்துருச்சு ப்ரம்மனுக்கு.  மேலும்  ரெண்டு பேர் அஞ்சு தலையோடு உலாவினால் நம்ம பார்வதிக்கும் சின்ன கன்ஃப்யூஷன் வந்துருக்காதோ?

கர்வம் வந்தவுடன், மட்டு மரியாதை இல்லாம  நடத்தை மாற ஆரம்பிச்சதும், சிவனுக்கு எரிச்சல். சட்னு   கை விரல் நகங்களால்  ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார்.  கையோடு வந்த தலையைத் தூக்கிப் போடலாமேன்னு  கையை உதறினால்.........   தலை விழுந்ததோ? ஊஹூம்.... விரலோடு ஒட்டிப் பிடிச்சுக்கிட்டு அப்படியே இருக்கு.   கையை எங்கே போய் ஒளிச்சு வக்கிறது?  போதாததுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் வேற பிடிச்சுக்கிட்டது அவரை.

அந்தத் தலையோடு  எங்கே போனால்  தோஷம் நிவர்த்தியாகுமுன்னு  ஊர் ஊரா அலைஞ்சுக்கிட்டு, கோவில் கோவிலாப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டு இருக்கார் சிவன்.  நாளாக ஆக ஆக  கையில் ஒட்டுன தலை  அப்படியே தோலெல்லாம் சுருங்கி விழுந்து  வெறும் மண்டை ஓடு ஆச்சே தவிர கையை விட்டுப் போகலை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றபடி  அதையே பிக்ஷை  பாத்திரமா வச்சுக்கிட்டு இரந்துண்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கார்.

ஒரு சமயம் புருஷோத்தமப் பெருமாள் கோவிலுக்கு  வர்றார்.  இந்தக் கோவில்தான் திருச்சிக்குப் பக்கம் இருக்கும் பிக்ஷாண்டவர் கோவில் என்ற உத்தமர் கோவில்!  இங்கே மகாலக்ஷ்மித் தாயார்,  கபாலப் பாத்திரத்தில் பிக்ஷை இடவும்,  கபாலம் சட்னு  விரலை விட்டு கழண்டு வெளியே விழுந்துருச்சு. பெருமாளின் கருணையை நினைச்சு  தாயாரையும் பெருமாளையும் வணக்குனதும் ப்ரம்மஹத்தி தோஷமும் போயிருச்சுன்னு  புராணக் கதை சொல்லுது.

இது இப்படி இருக்க, ப்ரம்மனின் தலையைக் கிள்ளின கையோடு, 'இவ்ளோ கர்வமா உமக்கு? இனி உம்மை  படைக்கும் தொழிலில்  இருந்து  சஸ்பெண்ட் செய்யறேன்'னு  வேற சொல்லியதால்... ப்ரம்மனுக்கு வேலையும் போச்சு :-(

அடடா....  இப்படி  ஆணவத்தோடு நடந்துக்கிட்டேனேன்னு மனம் வருந்தியும்,    போன உத்யோகம் திரும்பக்கிடைக்கணும் என்பதற்காகவும், பூலோகத்தில் வந்து  தவம் செய்யறார் ப்ரம்மா. இப்போ நாம் திருப்பட்டூர்னு சொல்லும் திவ்ய பூமியில்  பனிரெண்டு  லிங்கங்களைத் தானே தன் கையால் பிரதிஷ்டை செய்தும், பதினாறு பட்டையுடன் கூடிய ஷோடசலிங்கத்தையும் ஸ்தாபிச்சு தவத்தில் உக்கார்ந்துட்டார்.  பூஜை , அபிஷேகம் எல்லாம் செய்ய தண்ணீர் வேணாமா? ஒரு சின்ன குளத்தையும் நிர்மாணிச்சுட்டார். இதுதான் ப்ரம்ம தீர்த்தம்.

  பொதுவாப் பெண்களுக்கு ரொம்பவே இளகிய மனசு!!!  அம்பாள்  தவம் இருக்கும் ப்ரம்மனைப் பார்த்து மனம் இளகி,  சிவபெருமானிடம் , 'இரக்கம் காட்டுங்கோ'ன்னு  பரிந்துரைக்கவும்,  'மனைவி சொல்லுக்கு மரியாதை'ன்னு   சிவபெருமான் அங்கே ப்ரம்மனுக்குத் தரிசனம் கொடுத்துட்டு, சஸ்பென்ஷன் ஆர்டரை வாபஸ் வாங்கினதோடு,  'உமக்கு விதியை மாற்றி எழுதும் பவர் ஒன்னு கூடுதலாக் கொடுக்கறேன். நல்லவங்களாவும், பாபக் கணக்கு  கொஞ்சூண்டு இருந்து,  அதை நினைச்சு வருந்துபவர்களாகவும், தெய்வபக்தி உடையவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய தலையெழுத்தை மாற்றி எழுதிக்கலாம். ஆனால் இந்த  பவரை மிஸ் யூஸ் பண்ணாம கவனமாப் பார்த்து உம் வேலையைச் செய்யும்' என்றும் சொன்னார்.

தனக்குக் கிடைச்ச புது வாழ்வு அடுத்தவங்களுக்கும் கிடைக்கட்டுமே! ப்ரம்மாவுக்கு மகிழ்ச்சி!

'வேறெங்கேயும் போக வேண்டாம். இங்கேயே என் பக்கத்தில் இருந்து உம் பணியைத் தொடங்கலாம்'னும்  சொல்லிட்டார்.  அங்கேயே ப்ரம்மனுக்கு அருள் புரிந்த  ப்ரம்மபுரீஸ்வரரும், ப்ரம்மனுக்கு மீண்டும் பதவி கிடைக்கக் காரணமாக இருந்த  அம்பாள்  ப்ரம்மசம்பத்து கௌரி என்னும் ப்ரம்மநாயகியும் கோவில் கொண்டாங்க. கூடவே ப்ரம்மனும் பக்கத்துலேயே தனி சந்நிதியில் அமர்ந்து தன்னுடைய பணியை மீண்டும் தொடங்கிட்டார்னு தலவரலாறு!

'அன்றெழுதின எழுத்தை அவனே வந்தாலும் திருப்பி எழுத முடியாது'ன்னு  எங்க அம்மா சொல்லிக்கிட்டு இருந்தது இப்போ எனக்கு நினைவுக்கு வருது. அடடா.... இதைச் சொல்லிக் கொடுத்தவங்க,  இந்தக் கோவில் விவரம் சொல்லலை பாருங்கன்னு......  ப்ச்.... அவுங்களுக்குத் தெரிஞ்சுருக்காது...  இல்லைன்னா  இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரிஞ்சா யார் சும்மா இருப்பாங்க?
அழகான அஞ்சு நிலை ராஜகோபுரத்துக்கு முன்னால் ஒரு வெளி மண்டபமும் அதுக்கொரு நுழைவு வாசலுமா இருக்கு இந்தக் கோவில். மண்டபம் கடந்து உள்ளே போறோம்.  கொடிமரம், பலிபீடம் அடுத்து  மூலவரைப் பார்த்தபடி நந்தி. அவருக்கு ருத்ராட்சக் குடை !


கோவில் விவரங்கள் எல்லாம் அறநிலையத் துறையினர் வச்ச தகவல் பலகையில் இருக்கு!

கோவில் அலுவலகத்தில் கேட்டதும்   படம் எடுத்துக்க அனுமதி கொடுத்தாங்க.
கொஞ்சம் பெரிய  கோவிலாகத்தான் இருக்கு! முன்மண்டபங்களும், வாகன மண்டபங்களும் ரொம்பவே  பெருசுதான்!




முதலில் ஸ்ரீப்ரம்மபுரீஸ்வரரை வணங்கிட்டு, ப்ரம்மா சந்நிதிக்குப் போனோம். கூட்டமெல்லாம் இங்கேதான். நல்ல பெரிய திருவுருவம்.  அஞ்சடிக்குக்  குறையாது!    நாலு தலைகளுடன்  மஞ்சள் காப்பில் இருக்கார். கையில் கமண்டலமும் அட்சமாலையும் உண்டு.  தாமரையில் அமர்ந்த திருக்கோலம்!
  மேலே :   கோவிலில் வாங்கிய படம்.

நவகிரகங்களில் குரு பகவானுடைய தேவதை ப்ரம்மா என்பதால்  மஞ்சள் காப்பு, மஞ்சள் வஸ்த்திரம் எல்லாம் பிரதானமாம்.  மஞ்சள்தான் ப்ரசாதமாக் கொடுக்கறாங்க. அதை  வாங்குன கையோடு  நெத்தியில் வச்சது போக பாக்கி இருப்பதை சனம் சுவரில் தடவிட்டுப் போகுதேன்னு கையைத் துடைக்க ஒரு துணியை வச்சுருந்தாலும்..... சுவரில் தடவுவதே விசேஷமுன்னு  சனம் நினைக்குது :-(


இங்கே மட்டும் சந்நிதிக்கு நேரெதிரா நின்னு கும்பிடுவது விசேஷமாம். அப்பதானே ப்ரம்மாவின் கண்பார்வையில் நாம் படுவோம் என்று காரணம் சொன்னாங்க. அப்ப பக்கவாட்டில் இருக்கும் முகங்கள்?
நமக்கிடது பக்கம் ஒரு மண்டபம் ரெண்டுமூணு படி ஏறிப்போகும் உயரத்தில் இருக்கு. இது பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி இருக்கும் இடமாம்.  பதஞ்சலி  முனிவர் படம் ஒன்னு!  எலும்பும் தோலுமா இருக்கார்! தரையில் ஒரு இடத்தில் விளக்கு வச்சுருந்தாங்க.  அந்த மண்டபத்துலே சுத்திவர வெவ்வேற முனிவர்களின் சித்திரங்கள். பொதுவா நான் ஃப்ளாஷ் பயன்படுத்துவதில்லை. அதிலும் கோவில், நிகழ்ச்சிகள் என்றால்  வர்ற அளவு வரட்டும் என்றுதான் இருப்பேன்.  முகத்தில் வெளிச்சம் பாய்வது எனக்கு சம்மதமில்லை என்பதே காரணம். அதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் படங்கள் கொஞ்சம் மசமசன்னு வந்துருக்கு.



ஒரு பத்து நிமிட் போல அங்கே உக்கார்ந்து தியானம் செய்ய முயன்றேன். மக்கள்ஸ் குறுக்கும் நெடுக்குமா நடந்து போவதுடன், சின்னப்பசங்க ஓடி விளையாடிக்கிட்டு இருந்ததால்...   மனம் ஒருமுகப்படலை :-(

அதே மண்டபத்தின் ஒரு பக்கம் சப்தமாதாக்கள்!
மயில்வாகனத்தில் சுப்ரமணியர், ரெண்டு பக்கங்களிலும் தெய்வானை வள்ளியுடன்!  முருகனே வந்து  சிவனை வணங்கிய கோவிலாம்!
பாதாள ஈஸ்வரர்ன்னு ஒரு சந்நிதி!

காலபைரவருக்கு தனியா ஒருசந்நிதி.  இவர் ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்!  தூக்கத்தில் பயந்து அழும் குழந்தைகளை இங்கே கொண்டுவந்து இவருக்கு ஒரு  விளக்கு வச்சு நமஸ்கரித்தால் போதும்.  இதுதான் ஃபீஸ். குழந்தைக்கு சரி ஆகிருதாம்!  நம்பணும். நம்புனால்தான் சாமி!

அடுத்தாப்லே பக்த நந்தியார்! மனைவியுடன்  இருக்கார்! சாமுண்டி, சன்டிகேஸ்வரர்ன்னு  அங்கங்கே!

அம்பாள்  ப்ரம்மசம்பத் கௌரிக்குத் தனியா ஒரு பெரிய சந்நிதி  இருக்கு. தனிக்கோவில்னு சொல்லலாம்.

வளாகத்துலே ஒரு கம்பி கேட் போட்ட வாசலுக்குள் போறோம். கோவில் நந்தவனமா இருக்குமுன்னு நினைச்சேன்.  ஆனால் துவாதச லிங்கங்களில் (12 லிங்கங்கள்) தச லிங்கங்கள்  தனித்தனி சந்நிதிகளா இருக்கு இங்கே!  பாக்கி ரெண்டு லிங்கங்கள்  கோவிலுக்குள்ளேயே    மூலவராகவும், பாதாள லிங்கேஸ்வரருமா இருக்காங்க.





கோவில் தீர்த்தமான  ப்ரம்ம தீர்த்தம், இறங்கிப்போக படிகளுடன்   இங்கே!  கரையில் நான்முகர் இருக்கார்.  கோவில் தலவிருட்சமான மகிழமரத்து நிழலில் பக்தர்கள் உக்கார்ந்துருந்தாங்க. பிக்னிக் வந்துருக்கும் மூட்! எல்லா சந்நிதிகளிலும் போய் வந்துக்கிட்டே இருக்காங்க.




மொத்த சந்நிதிகளிலும் கைலாசநாதர் சந்நிதி....   (கோவில் என்றே சொல்லலாம்!) அழகோ அழகு!  நம்ம மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் டிஸைனேதான். எதிரில் கொஞ்சம் பெரிய நந்தி!  பல்லவர்கள் கட்டியதாம்!
இங்கே உள்ளே பழுது பார்க்கும் வேலை நடக்குது. பக்தர்கள் வெளியே நின்னு கும்பிட்டுக்குங்கன்னு நிர்வாகம் சொல்லுது....  நம்ம மக்கள்ஸ் உடனே கேட்டுருவாங்களாக்கும்................ :-(

நாகர்புத்துலே வேண்டுதல்கள் ஏராளம்!

சொல்ல மறந்துட்டேனே.... இங்கேயும் தீபம் ஏற்றுதல் முக்கிய வழிபாடாக இருக்கு. எண்ணிக்கை, குறைஞ்ச அளவில்  36 தீபங்கள் !  27 நட்சத்திரங்களும் 9 கிரகங்களுக்கும் சேர்த்து இந்தக் கணக்காம்!
மீன்!       ஐ மீன்....        பாண்டியர்கள் கட்டுன கோவிலோ?

 இந்தக் கோவிலுக்குத் தொட்டடுத்து இன்னொரு கோவில் இருக்கு. வாங்க அங்கே போகலாம்!

தொடரும்..........  :-)


13 comments:

said...

திருப்பட்டூர் - இன்னும் இக்கோவிலுக்குச் செல்ல வில்லை. அடுத்த பயணத்தில் செல்ல வேண்டும்....

said...

போக வேண்டும் என்று நினைத்த கோவில்.
இன்று உங்கள் தளம் மூலம் நன்கு தரிசனம் செய்து விட்டேன்.
இனி அவர் அழைக்கும் போது.

என் அம்மாவும் அடிக்கடி உங்கம்மா போல் சொல்வது ”அன்று எழுதிய எழுத்தை அழிச்சு எழுத முடியாது “ என்று, ஆனால் இந்த கோவிலுக்கு போனால் தலையெழுத்தை மாற்றலாம் என்பது தான்.

said...

நாங்க ஒரு மூணு வருசம் முன்னால போனோம்.

I updated the details in my blog but not in so detail like yours.
Pl see : http://viswanathvrao.blogspot.in/search/label/Thirupattur

said...

அழகிய படங்கள் (வெளிச்சம் போதாமல் எடுத்த படங்கள் எல்லாம் நான் எடுக்கும் படங்கள் போல இருந்தன!) சுவாரஸ்ய விவரங்கள். அது சரி, ஸ்வாமிக்கு ஒரு பிரச்னை வந்தால் ஏன் கோவில் கோவிலாக ஏறி இறங்கணும்? பக்கத்து பக்கத்து ரூம்ல இருக்கும் மற்ற ஸ்வாமிகளை அங்கேயே பார்த்து விடலாமே!!

:))

said...

திருப்பட்டூர்---அருமை..

said...


108 திவ்விய க்ஷேத்திரங்கள் முடிந்தாயிற்றா

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அட! இன்னும் போகலையா!!!! நீங்க சொல்லிதான் நாங்க அங்கே போனோம்!

ஒரு அரைநாள் போதும். நாலைஞ்சு கோவில் அந்த ஏரியாவில் தரிசிக்கலாம்.

ரொம்ப புராதனக் கோவில்தான்.

உங்களுக்குதான் நன்றி சொல்லணும், நாங்கள். நன்றீஸ்.

said...

வாங்க கோமதி அரசு.

அதென்னவோ உண்மைதான். ஒரு இடத்துக்குப் போகணுமுன்னால் அதுக்கும் விதி இருக்கணும், இல்லை!

said...

வாங்க விஸ்வநாத்.

சுட்டியில் ரெண்டு படங்கள். அவ்ளோதானா?

said...

வாங்க ஸ்ரீராம்.

பக்கத்து ரூமில் போய்ப்பார்த்தால் என்ன சுவாரஸ்யம்?

பூலோகத்தில் வந்து கோவில் கோவிலாகப் போகணும் என்பதுதான் பனீஷ்மெண்ட்! அப்பவும் அப்படித்தான் இருந்துருக்கு, பாருங்க :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வருகைக்கு நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பெருமாளின் அருளால் 108 திவ்ய தேசக்கோவில்களையும் தரிசித்தோம். கடைசிக் கோவிலாக அமைந்தது ஷோளிங்கர் யோகநரசிம்மர் திருக்கோவில்! தீபாவளிக்கு முதல்நாள் அங்கிருந்தோம்!

said...

திவ்ய தரிசனம்.