Monday, November 14, 2016

காலைப்பொழுதில் ஒரு கோவில் உலா (இந்தியப் பயணத்தொடர். பகுதி 96)

அதிகாலையில் பொழுது புலரும் நேரம் கோவிலுக்குப் போகணும். அதுவும் ஹாய்யா நடந்து போகணும் என்ற ஆசை பலவருசங்களா இருக்கு. கண்டிப்பா ஒருக்கா நிறைவேத்திக்கணும்னு முடிவு செஞ்சு  நம்மவரிடம் சொன்னேன். "நாளைக்காலையில் நான் பாட்டுக்கு எழுந்து ரெடியாகி கோவிலுக்குப் போகப்போறேன்.  நீங்க  வரலைன்னாலும் ஓக்கே"

அஞ்சு மணிக்கு எழுந்து குளிக்கப்போனால்.... குழாயில் வெந்நீர் வரலை.  ஹொட்டேல் ரிஸப்ஷனில் சொன்னால், குழாயைத் திறந்து விட்டுருங்க. கொஞ்சநேரத்தில் வந்துரும் என்று பதில். அந்தக் கொஞ்சநேரம்  என்பது 20 நிமிசம். வீணாகக் கொட்டும் தண்ணீர் மனசுக்குக் கஷ்டமா இருந்தது உண்மை.

நான் குளியலறையில் இருந்து வெளியே வந்ததும் நம்மவர் குளிக்கப்போனார்.  நான் உடை மாற்றி தயாராகும்போது  இவரும் ரெடி!  அட! இடுப்பில் சரிகை வேட்டி!
மெதுநடையில் ராஜகோபுரம் நோக்கிப்போறோம். இந்த காரணத்துக்காகத்தான் ஹயக்ரீவாவில் அறை எடுத்தது.   ஒன்னுரெண்டு வண்டிகளின் நடமாட்டம். ஆனால் மனுஷ நடமாட்டம் கொஞ்சம் அதிகம்தான். கடைகள் மூடி இருப்பதால்  கால்வீசி நடக்க இடம் இருக்கு. ராஜகோபுரத்தை சமீபிக்கும் சமயம் ஒரு கடையில் கூட்டம் அம்முது.  முரளி காஃபிக் கடை.    கோவில் போய் வந்து ப்ரேக்ஃபாஸ்ட் எடுக்கலாம் என்ற  எண்ணம். அதுக்காக 'பெட் காஃபி'  வேணாங்குதா  மனசு?   ஜோதியில் கலந்தோம் :-)

தெற்குவாசல் ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்து சித்திரைவீதி கோபுரவாசலுக்கு நடக்கும்போது  கண்ணெதிரில் வந்தாள் ஒரு செல்லக்குட்டி!  இந்தப் பயணத்தில் ஒருத்தரைக்கூடப் பார்க்கலையேன்னு  தேடித்தேடி அலைஞ்ச கண்ணுக்கு  கொஞ்சம் ஆறுதலாக இருக்கட்டுமுன்னு பெருமாளே அனுப்பி வச்சுருக்கான்!  கோவில் யானைகள் எல்லாம் கேம்புக்குல்லே போயிருக்காங்க! இன்னும் நாலைஞ்சு நாளில் வந்துருவாங்களாம் என்ற உபரித்தகவல் கிடைச்சது.

'பார்த்தாச்சா.....  சரி போ'ன்னுட்டு பக்கத்துத் தெருவில் நுழைஞ்சுட்டாள் செல்லம்!

நாங்க நேராப்போய் கட்டை கோபுரத்தைத் தாண்டி ரங்கா ரங்கா கோபுரத்தாண்டை போனோம். காலணிக் காப்பகத்தில்  காலணிகளை விட்டுட்டு, கோபுரவாசலுக்குள் நுழைஞ்சு  எலக்ட்ரானிக் கேட் கடந்து  திருவந்திக் காப்பு  மண்டபத்தைக் கிளிக்கிட்டு  ரெங்கவிலாஸ் மண்டபத்தின் முகப்பையும் க்ளிக்கினேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சிற்பங்களின் வரிசை!  என்ன அழகான முகங்களுடன் பெருமாள்!  நின்றும் இருந்தும் கிடந்துமா ..... ஹைய்யோ!

மண்டபத்தில் ஆட்கள் அவ்வளவாக இல்லை. கடந்து வெளியே போய்  ஆஞ்சியை வணங்கிட்டு, கார்த்திகை கோபுரத்துக்குள் நுழையணும். இடைப்பட்ட அகலங்கன் திருவீதியில் நமக்கிடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி.  அந்தப்பக்கம் பார்த்து ஒரு  கும்பிடு. யானை இல்லேன்னா என்ன ? பூனை நான் இருக்கேன்னு கால்களை வீசிப்போட்டு நடக்கிறார்  ஒரு  மீசைக்கார ம்யாவ்.  அப்புறம்  பார்த்தால் கோவில் பூனைகள்  ஏராளம் !  பெரிய கோவில் இல்லையா? அதான் கோவிலின் அளவுக்கேத்த எண்ணிக்கையில்!
 பெரியவரை தரிசிக்கப் பெருங்கூட்டம்  மூணு வரிசையில் நிக்கறாங்க. விஸ்வரூபம் முடிஞ்சு  கருட மண்டபத்தில் நல்ல கூட்டம். வழக்கம்போல் கண்கள் ஜொலிக்க  பிரமாண்டமாய் உக்கார்ந்துருக்கார் பெரிய திருவடி! 25 அடி உசரம். இவருக்கு சாத்தும் வஸ்த்ரம் முப்பது மீட்டர் நீளம்!
கொடிமரம் ஸேவிச்சுட்டு  அப்படியே போய் அன்னமூர்த்திக்கு  ஒரு கும்பிடு!  மறுபடி வெளியே வந்து  சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குப்போய்  தீபாரதனையைக் கண்களில் ஒத்தி, கருவறையை வலம் வந்தபின் தாயார் சந்நிதி நோக்கி, நந்தவனம்  வழியாக நடை. எதிரே திருமஞ்சனத்துக்கான நீரை ஒருவர் சுமந்து வந்தார்! ஒல்லி உடம்புக்குக் குடம் ரொம்பவே பெருசு :-(
இந்த வழியில் ஒரு வசந்தமண்டபம் இருக்கு. ஆனால்  நாம் அந்த வழியே போகும்போதெல்லாம் பூட்டியே இருக்கும். இன்றைக்கு அதிசயமாகத் திறந்து இருந்தது. உள்ளே போய்ப் பார்த்தோம்!


ரொம்பவே அழகான மண்டபம். கீழே அகழியில் நீர் நிரம்பிக்கிடந்தால் இன்னும்  அழகாக இருக்கும்தான்......  ஆனால்  களைகள்  முளைச்சுத் தளதளன்னு  வளர்ந்து கிடந்தது.  சுத்தம் செய்ய இன்னும் வேளை வரலை போல!  இப்பதான் எனக்கு லேசா ஒரு தலை சுத்தல். என்னன்னு யோசிக்கும் முன்பே  'மயக்கமா  இருக்கே'ன்னு  சட்னு  மண்டபத்துத் திண்ணையில் உக்கார்ந்துட்டேன். பதறிப்போன நம்மவர், காலையில் மருந்து  சாப்பிட்டேயான்னு  கேள்வி.  இல்லைதான். அதுக்காக இப்படி தலை சுத்தல் வரணுமா என்ன?  எப்பவும் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்ச கையோடுதான் மருந்து எடுத்துக்கறது வழக்கம்..........  பத்து நிமிட் போல  கண்ணை மூடி உக்கார்ந்து,  மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டதும்............  (இது யோகாவோ?)  கொஞ்சம் சரியாச்சு.
'வா, அறைக்குத் திரும்பிடலாம். சீனிவாசனுக்கு ஃபோன் செஞ்சு வண்டியைக் கொண்டுவரச் சொல்றேன்'னார் நம்மவர். இப்ப  வேணாம். வந்தது வந்தாச்சு.  இதோ தாயார் சந்நிதிக்குப் போயிட்டுக் கிளம்பலாம் என்று மெது நடையில் தாயார் சந்நிதிக்குப் போனோம்.
இதோ  எதிரில்  லக்ஷ்மிநாராயணர் சந்நிதிக்கு எதிரேதான் அந்த அஞ்சுகுழி  மூணு வாசல் இருக்கு!  உடம்பு முறுக்கிக்காமல் அஞ்சு குழி 'ஒரு வாசல்' பார்த்துட்டுத் தாயார் சந்நிதிக்குள் நுழைஞ்சோம். கூட்டம் இல்லை. சட்னு தாயாரை ஸேவிக்க முடிஞ்சது!  ரங்கநாயகி, மஹாலக்ஷ்மி என்னவொரு  கம்பீரம்!  பெரிய உருவம்தான்!  ரெண்டு தாயார் இருக்காங்க. உற்சவரோடு சேர்த்தால் மூணு பேர். நல்லாப் பார்த்துக்கோங்கோன்னு இவரிடம் ஞாபகப்படுத்தினேன்:-)

தனிக்கோவில் தாயாரை வலம் வர்றோம். ஊஞ்சல் ஸேவைக்கான மண்டபம், அங்கிருக்கும் தூண்களில் சிற்பங்கள் எல்லாம் ரசித்துப் பார்த்து வலம் தொடர்ந்தால் தாயாரின் வசந்த மண்டபம் இருக்கு.   நம்ம தாயார் படிதாண்டாப் பத்தினி, தெரியுமோ? அதான் தேவையானதெல்லாம் இங்கேயே!  சேர்த்தி சேவைக்குத்தான் நம்பெருமாள் இங்கே வருவார். அவர் வர்ற நாளில், வந்துட்டாரான்னு எட்டிப் பார்க்கும்போது  கை விரல்கள் ஊன்றின இடம்தான் அந்த அஞ்சு குழி மூணு வாசல். போனபதிவில் நம்ம ரோஷ்ணியம்மாகூட சொல்லி இருந்தாங்களே!

இங்கே வர்றதுக்கும், தாயார்  தன் சந்நிதி முன்மண்டபம் தாண்டி,  எதிர்ப்புறமா பத்தெட்டு நடந்துதான்   இந்த வாசலுக்குள் நுழைய வேணும். அப்புறம் எப்படி 'படி தாண்டா பத்தினி' ஆனாள்னு தெரியலை.........

 தாயாரின் வசந்த மண்டபம் கடந்து பிரகாரத்தின் வெளிப்புறம் வந்தால்  தாயார் கோவிலுக்கான தலவிருட்சம்  வில்வமரம்  காய்களோடு இருக்கு!  சாய்ஞ்சு வளர்ந்துக்கிட்டுப்போகும் மரத்தைச் சீரமைக்கிறோமுன்னு  ஒரு கிளையைத் தரிச்சு அங்கேயே போட்டு  வச்சுருக்காங்க. தொட்டடுத்து துளசிமாடம்! அளவில் பெருசு. அதில் 'நான்' புதுசு ! சின்னக்குழந்தையா இருந்தேன் :-)
எதிரில் இருந்த மண்டபத் திண்ணையில் கொஞ்ச நேரம் உக்கார்ந்து, பக்தர்கள் கூட்டத்தையும் மண்டபத் தூண்களின் சிற்பங்களையும்  பார்த்துக்கிட்டு இருந்தேன்.  'இப்ப எப்படி இருக்கு?'ன்னு நம்மவர் அடிக்கொருமுறை கேட்டுக்கிட்டே  இருந்தார்.
வெளியே வந்து எதிரில் இருக்கும் கம்பர் மண்டபத்தையும்,  எனக்கு வலது பக்கம் உக்ர நரசிம்மரையும்,  இந்தாண்டை  இடது பக்கம் இருக்கும் கோபுரத்தையும் க்ளிக்கின கையோடு எதிரில் பார்த்தால் ஸ்ரீ கிருஷ்ணர் ராதாருக்மணி சந்நிதி.  திறந்தும் இருந்தது!  இங்கே இந்தக் கோவிலில் மட்டும்  ஏகப்பட்ட சந்நிதிகள். எண்ணிப்பார்த்தால் நாப்பத்துக்கு மேலே!  இதுலே எல்லாமும் ஒரே நேரத்துலே திறந்துருக்காது.  பட்டர்கள் எண்ணிக்கை போறலையோ என்னமோ?  'புகழ்' பெற்ற சந்நிதிகளில் மட்டும் சில சமயம் ஏழெட்டு பட்டர்கள் இருப்பதையும் கவனிச்சு இருக்கேன்.

ஒன்னுவிடாமல் பார்த்துருக்கேனான்னா.....  இல்லைன்னுதான் சொல்லணும். அதனால் நாம் போகும் சமயம் திறந்துருக்கும் சந்நிதிகளில், நாம் அதுவரை தரிசிக்காதவைகளை சட்னு போய்  சேவிச்சுக்கணும். இங்கேயும் ஆச்சு.  அதென்ன ராதா ருக்மணி?  பாமா ருக்மிணி இல்லையோ?  ராதை எப்படி வந்தாள்?

யோசனையுடன்  நேரா வடக்கு நோக்கி நடக்கும்போது பெரிய யானை ஒன்னு!  புதுசு!  பூமிக்குள் இருந்ததை வெளியே கொணர்ந்தாச்சு.  ஆயிரங்கால் மண்டபத்து ஓரத்துலே இருக்கு!  போனமுறை பார்க்கவே இல்லையே! இன்னும் எத்தனை ரகசியங்கள் கோவிலில் புதைஞ்சுருக்கோ.... பெருமாளே....

நகையும் நட்டுமாப் போட்டு அலங்கரிச்சு இருக்கும் போர் யானையை....  ஒரு படுபாவி   ஈட்டியால் குத்தறான்....  அவனை.............   பல்லைக் கடிச்சேன்....

மணல் வெளியும் வெள்ளைக்கோபுரமும்  அழகோ அழகுன்னாலும்...  மனதுக்கு ரொம்பவே நெருக்கமா இருக்கே,  இந்த சேஷராயர் மண்டபம். எத்தனை முறை பார்த்தாலும், ரசித்தாலும், க்ளிக்கினாலும்.... இன்னும் இன்னும்னு  ராட்சஸப் பசி என் மூன்று கண்களுக்கும்!  நெத்திக்கண்ணா?  ஊஹும்...  கேமெராக் கண் :-)

மயக்கமெல்லாம் போன இடம் தெரியலை..... 'போதும்மா....  எவ்ளோதான் எடுப்பே..... போகலாம்'னு  நம்மவர் கதறும்வரை   கைகள் ஓயலையே....  :-) நூத்தி இருபத்தியஞ்சோடு நிறுத்தினேன்.

வலம் தொடர்ந்து அன்னதானக்கூடம், அதுக்கான அடுக்களை ( கொஞ்சம் சுத்தமாக வைக்கக்கூடாதோ?) தாண்டி வந்தால்    அதிசயமாக, பிள்ளை லோகாச்சாரியார் சந்நிதி திறந்துருந்தது.  ஓடிப்போய் ஒரு  கும்பிடு.

ஸ்ரீ ராமானுஜருக்கு குருவணக்கம் சொல்லிட்டு  திரும்பி கார்த்திகை கோபுர வாசலுக்கு வந்து சேர்ந்தப்ப, கோவிலுக்குள் நல்ல கூட்டம் வந்தாச்சு. ரெங்கவிலாஸ் மண்டபத்து வெளியில் கோயில்கடைகள் திறந்து ஜெஜென்னு இருக்கு!  நானும் சும்மா எட்டிப் பார்த்தேன்....  நாம் ராமேஸ்வரத்தில் வாங்குன மரச்சொப்புகள் நிறைஞ்ச ஓலைப்பொட்டி இங்கேயும்!


கோவிலுக்குள்ளேயும் திருடன் இருக்கானாம் :-( கவனமா இருக்கச் சொல்றாங்க !

ரங்கா கோபுரம் தாண்டி வெளியே வந்தோம். தெற்கு உத்திரவீதி  கலகலன்னு இருக்கு! இதுக்கு திரு விக்ரமன் திரு வீதின்னும் ஒரு பெயர் இருக்காமே!
ஹயக்ரீவாவுக்கு நடந்து போனால் முக்கால் கிமீ கூட இருக்காது. ஆனால் நடந்து போறமாதிரியா இருக்கு அங்கிருக்கும் நெரிசல்?  காரில் போனால் பாதி ஊரைச் சுத்தித்தான் போகணும். வேற வழி?
பெரிய மதில்சுவர்களும் அதையொட்டிய தென்னைகளையும் பார்க்கும்போது  ஒரு புகழ்பெற்ற பதிவர், நம் மரத்தடி காலத் தோழி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் நினைவுக்கு  வரலைன்னு சொன்னால்....  அது ஒரு பொய் :-)

இதே மரத்தடி காலத் தோழி  மைசூர்பாகு புகழ் ஷைலஜா நாராயணன் (நம்ம ஷைலூ!) வெளி ஆண்டாள் சந்நிதிக்குப் போயிட்டு வாங்கன்னு  சொல்லி இருந்தாங்க.

( இவுங்க ரெண்டு பேரும்    சீரங்கத்து பூமி புத்ரிகள்!  )

வெளி ஆண்டாளையும் கண்டுக்கலாமேன்னு   மேற்கு அடையவளைஞ்சான் தெருவுக்குள் போனோம். எதுக்கு இங்கே கோவிலாம்?  ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து  பெருமாளைக் கல்யாணம் பண்ணிக்க  அப்பாவும் பொண்ணுமா புறப்பட்டு வந்தாங்க பாருங்க.....  அப்போ வந்து இறங்குனது இந்த இடத்தில்தானாம்!  நம்ம நம்பெருமாள் வீதியுலா போகும்போது  இந்தப் பக்கம் வந்தால்  உடனே நின்னு ஆண்டாளுடன் மாலை மாத்திக்கிட்டுத்தான் கிளம்பறாராமே!  ஹைய்யோ..... எப்ப என் கண்களுக்குக் கொடுப்பினை  இருக்கோ!
கோவில் கேட் மூடி இருக்கேன்னு  ஒரு  விநாடி தயங்கும்போதே....   டுவீலரில் ஒருத்தர் வந்திறங்கி கேட்டைத் திறந்துக்கிட்டு உள்ளே போனார். நாங்களும் கூடவே நுழைஞ்சோம். வெளிப்ரகாரம் எல்லாம் சரியான பராமரிப்பு இல்லாம  களைகள் ஏராளமா வளர்ந்து கிடக்கு :-(  காம்பவுண்டில்  குடி இருக்காங்க போல.....  கோவில் ஆட்களா இருக்கலாம்.....

கம்பீரமா உக்கார்ந்து இருக்கும்  ஆண்டாளை வணங்கி, தூமணிமாடம் பாடிட்டு,  ஹயக்ரீவா வந்து சேர்ந்தோம்.  கீழே  இருக்கும் பாலாஜி பவனில்  இட்லி வடை காஃபி ஆச்சு.


மொட்டை மாடியில் இருந்து  ராஜகோபுரம் தெரியுதுன்னு சீனிவாசன் சொன்னாரேன்னு போய்ப் பார்த்தால்   அருமையோ அருமை!  இங்கே இருக்கும்  அறைதான் ஓட்டுவர்களுக்கு!  என்ன கொடுப்பினை பாருங்க!!!


மணி இப்போ ஒன்பதரை.  பத்துமணிக்கு வேறொரு கோவிலுக்குப் போகலாம். அதுவரை கொஞ்சம் ஓய்வு உங்களுக்கு :-)

தொடரும்........  :-)


22 comments:

said...

கோவில் படங்கள் எப்பவுமே அழகு. அதிலும் அந்த யானைச் சிற்பம்..

said...

ஆனைச் சிற்பம் அற்புதம். நன்றி டீச்சர்.

said...

//மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டதும்............ (இது யோகாவோ?) //
கண்டிப்பா. மூச்சுப்பயிற்சி இரத்தஓட்டத்தச் சீராக்கும் (ன்னு நினைக்குறே);

said...

முன்னால் தெரிவது உற்சவ நாச்சியார். உற்சவ நாச்சியாருக்குப் பின்னால் ஏற்கெனவே இருந்த மூலவர் ரங்கநாயகி கிடைக்காமல் இருந்தப்போப் பிரதிஷ்டை செய்த புதிய ரங்கநாயகி. பழைய ரங்கநாயகி ஊரெல்லாம் சுத்திட்டு அழகியமணவாளர் என்னும் நம்பெருமாள் திரும்பியாச்சுனு தகவல் கிடைச்சதும் நீங்க பார்த்த வில்வமரத்தடியிலே இருந்து வெளிப்பட்டாள். இப்போ உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே அவள் தான் குடி இருக்காள். புதுசாப் பார்க்கிறவங்க சிலர் ஶ்ரீதேவி, பூதேவி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீரங்கம் கோயிலொழுகும், அதைச் சார்ந்த வரலாற்றையும் படிச்சால் புரியும். :)))

said...

சுநாமிலே ஒண்ணும் பாதிப்பில்லைனு நினைக்கிறேன். எங்கள் பிரார்த்தனைகள்.

said...

படங்களோடு....அருமையான பகிர்வு...

நாங்களும் இந்த யானை சிற்பம் பார்த்து மகிழ்த்தோம்...நாங்கள் இரவில் பார்த்ததோம் ..so படம் எடுக்கவில்லை ...

said...

திருவரங்கம் - எத்தனை முறை பார்த்தாலும் படித்தாலும் அலுப்பதில்லை. கீதா அவர்களின் விளக்கம் நன்று.

said...

படங்கள் சூப்பர் அழகு , பார்த்ததும் பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன

said...

நாங்களெல்லாம் கோவிலுக்குப் போனோமா முக்கிய மூர்த்தியை தரிசித்தோமா என்றுதான் வழக்கம் இத்தனை டிடெயில்களை எங்கிருந்து சேகரிக்கிறீர்கள்

said...

பார்த்த கோயில்தான். இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் மனதுக்கு நிறைவினைத் தரும் கோயில். உங்களது பதிவு மூலம் மனதில் பதியும் புகைப்படங்களுடன் அருமையாக தரிசித்தோம் அரங்கனை.

said...

இந்த எடமெல்லாம் பாத்ததேயில்ல. நீங்க சொன்ன மாதிரி கதவு போனப்பல்லாம் மூடியிருந்திருக்கும்னு நெனைக்கிறேன்.

மொட்டை மாடியிலிருந்து கோபுர தரிசனம் மிக அருமை. இதே மாதிரி பழனிமலைய காலைல எந்திரிச்சிப் பாத்தது நினைவுக்கு வருது.

அந்த யானைச் சிற்பம் பிரம்மாண்டம். போன வாட்டி போனப்போ நானும் அந்த யானை ரொம்ப நின்னு ரசிச்சேன்.

said...

Hope you are fine. Read about the earthquake in Christchurch.

said...

வாங்க ஸ்ரீராம்.

வருகைக்கு நன்றி.

என்ன ஒரு கம்பீரம் அந்த யானைக்கு!

said...

வாங்க விஸ்வநாத்.

அருமை அழகு அட்டகாசம்...... அந்த யா.......னை!

said...

வாங்க கீதா.

ரொம்பச்சரி.

போன 2013 இல் எழுதுனது.... இருவரைப்பற்றி :-)

//ஒளிச்சு வைக்கப்பட்ட அழகியமணாளனை ஒரு வழியா பெரிய கோவிலுக்குக் கொண்டு வந்துடறாங்க. இங்கிருந்து போனவன் , திரும்பிவர அறுவது ஆண்டுகளாச்சாம். இதுக்கிடையில் கொஞ்ச நாளுக்கு முன்னாலே பூமிக்கடியில் ஒளிச்சு வைக்கப்பட்ட ரங்கநாயகித் தாயாரின் திருவுருவம், தானே கிளம்பி மேலே வந்துருக்கு! தாயார் சிலை எங்கிருக்குன்னு தெரியாமல் அல்லாடிய அன்பர்களும் அரசனும் வேற ஒரு சிலை செய்து மூலவராக்கிட்டாங்க. இப்ப ஒன்னு மண்ணில் இருந்து கிளம்பியதும் என்ன செய்யறதுன்னு யோசிச்சு, இவர்தான் ஒரிஜினல்னு புரிஞ்சுபோனதால் இவரை மறுபடியும் தாயார் சந்நிதிக்குள்ளேயே ஸ்தாபனம் செஞ்சாங்க. அதுவரை மூலவரா ஆக்ட் கொடுத்தவரை அப்படியே ஒதுக்கித் தள்ளிட முடியுமா? அதனால் தாயார் சந்நிதியில் இப்போ ரெண்டு மூலவர்களும் இருக்காங்க...//

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வருகைக்கு நன்றி.

எல்லார் கண்ணும் யானைமேல்தான்:-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்

உண்மைதான்! அலுப்பதும் இல்லை. முழுசாப் பார்த்த மாதிரி தோணுவதும் இல்லை.... இன்னும் இன்னும் தான்....

said...

வாங்க அபயா அருணா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கிடைக்கும் இடங்களில் ஒரு தலப்புராணம் வாங்குவது. கைடு சர்வீஸ் கிடைக்கும்போது ஒரு கைடு ஏற்பாடு பண்ணிக்குவேன். அப்புறம் வாய் விசாரிப்புதான். உள்ளூர்காரர்கள் யாராவது அதிலும் ஓரளவு முதியவர்களா இருந்தால் ஏகப்பட்ட தகவல்கள் கிடைச்சுரும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

மூலவர், தாயார் போன்ற முக்கிய சந்நிதிகள் மட்டும் திறந்து வச்சுடறாங்க. பல சின்னச்சின்ன சந்நிதிகள் விட்டுப்போகுது. இந்த முறை இன்னும் சில சந்நிதிகளைக் காமிச்சுக்கொடுத்தார் பெருமாள். இந்தப் பயணம் எழுதும்போது சொல்வேன்.

போன பயணம் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. முடிச்சுட்டுத்தான் அடுத்ததைத் தொடங்கணும்.

said...

வாங்க PVS.

இறைவன் அருளால் நலமே!

விசாரிப்புக்கு நன்றி.