Monday, September 19, 2016

கோதண்டராமர் கோவில்! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 88)

பொழுது ரொம்பவே இனிமையாக விடிஞ்சதா நினைவு. யானையின் ஸ்பெஷல் நாள் இன்றைக்கு! சீக்கிரம் தயாராகிக் கீழே போய்  ஹொட்டேல் தரும் பஃபே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு உடனே கிளம்பினோம். சுமாராத்தான் இருந்தது.  ரெண்டு இட்லி வடைக்கு மேல்  என்னன்னு சாப்புடறது ?

இன்றைக்கு தனுஷ்கோடிவரை போய் வர ஒரு திட்டம்.  நேரா கோவிலுக்குப் போகும்  சாலையில் போய்  மேற்கு கோபுரவாசலில் ரைட் எடுக்கணும்.
நம்ம ஹொட்டேலை விட்டுக் கிளம்புனா....   கொஞ்ச தூரத்துலேயே  ஒரு அழகான சிற்பம் இருக்கும் கட்டடம் , வா வான்னு கூப்டது. ஆனால்  ஏதோ பழுதுபார்க்கும் வேலை (பெயிண்டிங்?) நடக்குது. ஸ்ரீக்ருஷ்ணப்ரணாமி மங்கள் மந்திர். ப்ரைவேட் கோவில்னு கோபாலுக்கு எண்ணம்.
தேவர்களும் அசுரர்களுமா மந்தாரமலையை மத்தாக வச்சு பாற்கடலைக் கடையறாங்க.  வாசுகிக்கும் அஞ்சு தலை இருக்கு!  பாற்கடலில்  தோன்றிய செல்வங்கள் எல்லாம்  கூட  இருக்கு. வெள்ளையானையான  ஐராவதம் அழகோ அழகு! காமதேனு,  லக்ஷ்மி,  தன்வந்த்ரி, உச்சைசிரவஸ் என்னும்   வெள்ளைக்குதிரை, மலையின் மீது ரொம்பவே அழகான சிவனின் திருமுகம் எல்லாம்  பார்க்கப்பார்க்க அருமைதான்!  இவ்ளோ அழகான கட்டிடத்தின் தலையில் மூணு  சிவலிங்கங்கள்  ஓவர்ஹெட் டேங்க் என்னும் பெயரில்:-(
வலம் பிரிந்து போன நாம்  முகுந்தராயர்சத்திரம் என்ற ஊருக்குப் போகணும்.  ஆனால் போகும் வழியிலேயே ஒரு பத்து கிமீ தூரத்தில் இடதுபக்கம் பிரிஞ்சு போகும் ரோடுக்குள் போறோம்.  அந்தக் கடைசியில் ஒரு கோவில் இருக்கு. ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில். ராமர் கோவில்தானே? அப்படி என்ன விசேஷமுன்னால்....  இங்கேதான் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செஞ்சு வச்சுருக்கார் ராமர்!
எனக்குத் தெரிஞ்ச ராமாயணக்கதைப்படி  அண்ணன் ராவணன், சீதையைக் கவர்ந்து வந்தது அடாத செயல்னு சொன்ன தம்பி விபீஷணனை காலால் எட்டி உதைச்சு இழிவு படுத்தறான் .  விபீஷ்ணன்,  இலங்கையில் இருந்து கிளம்பி  ராமனைத் தேடிவந்து  சரணாகதி பண்ணினதும்,  இலங்கை மன்னன் ராவணனுக்கு  தன் கையால் மரணம் என்பதை நிச்சயித்துவிட்ட ராமன்,   இப்பவே உன்னை இலங்கைக்கு அரசன் ஆக்குக்கிறேன்னு  பட்டாபிஷேகம் செய்தான்னு கதை.
ஆனால் கோவிலில் வச்சுருக்கும் தகவல் பலகை,  ராவணன் அழிஞ்சு  போர் முடிஞ்சதும்  விபீஷணனுக்கு ராமர் பட்டாபிஷேகம் செய்த இடமுன்னு சொல்லுது. போர் இலங்கையில் முடிஞ்சதும், அங்கே வச்சு  புது அரசனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணாமல் இவ்வளவு தூரம் வருவாங்களா என்ன?

ரொம்பப்பெரிய கோவில் இல்லை. ஒரு கட்டடம்தான். பனிரெண்டு படிகள் ஏறிப்போகும் உயரத்தில் கட்டி இருக்காங்க. கடலில் தண்ணீர் அதிகம் வரும் சமயம் கோவிலுக்குள் நீர் புகாமல் இருக்கத்தான் இவ்ளோ உயரம்.  இப்போ நாம் வந்த  சாலை கூட சமீபத்துலே போட்டதுதானாம்.  முந்தியெல்லாம் வந்து போகக் கொஞ்சம் சிரமம்தானாம். பட்டர்ஸ்வாமிகள் சொன்னார்.
கோவில் முகப்பில் ராமலக்ஷ்மண சீதை ஆஞ்சியுடன் விபீஷணனும் இருக்கார். அறுவரானோம் என்பது  இவரைச் சேர்த்துத்தானே?
நடுவில் பெரிய ஹால். சுத்தி வெளிப்புறம் அகலமான வெராந்தா! வளைவு வளைவா டிசைன் செஞ்ச வெராந்தா சுவர் தனி அழகு!  மேலே  பழைய படத்தில் இந்த  அழகு தெரியும்.  இப்பப் படிக்கட்டுகளுக்கு மேல் தகரக்கூரை போட்டு  பார்க்கவே வங்கரபங்கரயாக் கிடக்கு   :-(

கோவில் முன்பக்கத்து வியூவை இதுக்கு மேல் அசிங்கம் பண்ண முடியாது :-(

இதுக்கு மற்ற கோவில்களில் போட்டு வைக்கும்  சாதாரணக் கூரையே மேல் !
 இல்லைன்னா  லேசா ரெண்டு பக்கமும்  வளைவு இருக்கும்  பெரிய கூரை பந்தல் போல போட்டுருக்கலாம்.


 கோவில் முன்வாசலில் கடல்.  தலையைத் திருப்பி இடப்பக்கம்  (மேற்குநோக்கி) பார்த்தால்  ராமேஸ்வரம் கோவில் தெரியுது.


1964 இல் ஒரு பெரும் புயல் அடிச்சதுலே தனுஷ்கோடி பூராவும் அழிஞ்சு போச்சு. அப்போ இந்தக் கோவிலும் பாழாகிருச்சாம்.  அப்புறம் திரும்பக்  கட்டி இருக்காங்க.  அப்போதான் இப்படிக் கொஞ்சம் உயர்த்திக் கட்டி இருக்கணும். 1978 இல் தமிழ்நாட்டு கவர்னரா இருந்த திரு. ப்ரபுதாஸ் பட்வாரி அவர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்துருக்குன்னு  கல்வெட்டு சொல்லுது.
காலையில் 7 மணிக்குக்  கோவில் திறந்தால்... சாயங்காலம் 6 மணிக்கு சாயரக்ஷை பூஜை முடிஞ்சு கோவிலை மூடிட்டு பட்டர்  வீட்டுக்குப் போயிடறார்.  ராமேஸ்வரம் யாத்திரை வரும் பக்தர்கள் தனுஷ்கோடிக்குப் போகும் வழியில் ஏராளமாவந்து போன காலம் உண்டுன்னார். புயல் அழிவுக்கு அப்புறம்  ராமேஸ்வரம்   வரும் பக்தர்கள்  தேடிக்கிட்டு வந்தால்தான் உண்டு.   அது  இவருடைய தகப்பனார் சொல்லி  இருக்கணும்.  ஆச்சு  52 வருசம். பட்டர்  சின்ன  வயசுக்காரர். முப்பது கூட ஆகி இருக்காது.  சட்னு ஆரத்தியைக் காமிச்சு சடாரி தீர்த்தம்  முடிச்சுட்டு, நாம் உள்ளே நுழையும்போது  விட்டு வச்ச பேச்சை செல்லில் தொடர்ந்தார். தனியா விட்டுவிட்டுன்னு போரடிச்சுக்  கிடக்கறார் போல..........

கருவறையில்  கோதண்டம் ஏந்திய ராமர்,   வில்லுடன் லக்ஷ்மணர், சீதை, அனுமன்  இருக்காங்க.  ராமரை வணங்கியபடி விபீஷணனும் கூடவே!   நம்ம ஆஞ்சிக்கு இங்கே 'பரிந்துரைத்த  ஆஞ்சநேயர்'  என்றுபெயர்.  விபீஷணன், இலங்கையை விட்டுக் கிளம்பி ராமலக்ஷ்மணரைத் தேடிக்கிட்டு  வர்றான்.  அங்கிருந்த சுக்ரீவன் மற்றும் அவனுடைய படையினர் அனைவருக்கும், இவன் எதிரியின் கோட்டையில் இருந்த  வந்த  ஒற்றனோன்னு ஒரு சந்தேகம். அப்ப நம்ம ஆஞ்சிதான், ' இல்லை. இவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர்.  ராவணன் சபையில் கூட ,  தைரியமா எழுந்து, சீதையை கவர்ந்து வந்தது  சரி இல்லை. கொண்டு போய் ராமனிடம் விட்டுடணுமுன்னு  சொன்னவர். தாராளமா இவரை   நம்பலாமு'ன்னு பரிந்து உரைத்தாராம்!
வாசலில் போர்டுலே  போருக்குப்பின் பட்டாபிஷேகம் என்று சொன்னதை நியாயப்படுத்தும் வகையில்   கருவறையில் சீதையும் இருக்காங்க.   ஆனால்....    விபீஷணனுக்கு  இங்கே  ஏற்கெனவே பட்டாபிஷேகம்  செஞ்சப்ப சீதை  இங்கிருக்க வாய்ப்பில்லை தானே? சீதை  பிற்காலத்தில் இங்கே  பிரதிஷ்டை செய்யப்பட்டுருக்கலாம்.  என் நியாயமுன்னு ஒன்னு இருக்குல்லே :-)

கோவிலுக்கு முன்னால் இருக்கும் கடலில் கற்களை அடுக்கி வச்சாப்போல ரெண்டு  சாமிகள்.   சிந்தூரம் பூசி இருப்பது ஆஞ்சி. அப்ப இன்னொன்னு...........   ராமனோ?  ராமன் எப்போ ஒற்றைக்கு இருந்தான்? சதாசர்வகாலமும் லக்ஷ்மணன் கூடவே  இருப்பதுதானே வழக்கம்? ராமனும் லக்ஷ்மணனும்னு நினைச்சுக்க வேண்டியதுதான் !  கடல் நுரைச்சுக்கிட்டு இருக்கு இங்கே.

 இதுக்கு கதையும் காரணமும் இன்னும் கண்டுபிடிக்கலை போல..... ராமன் சோப்புப் போட்டுக் குளிச்சதால் வந்த நுரைன்னு  சொல்லிடலாமா?

தர்ப்பணம் பண்ணிவைக்க  ஒரு சின்னக்குடிசை போட்டு வச்சுருக்காங்க.  இந்த சோத்துக்கு அங்கெ ஏராளமான  காக்கைக்கூட்டம்!
கடல்பறவைகள்  ஷாக்,  ஸீகல் ஏராளம்.  ஒரு முள்மரத்தில்  பருந்து ஒன்னு !  அழகோ அழகு!   பெரிய திருவடி!ஆனிமாசம் பட்டாபிஷேக அனிவர்ஸரிக்கு  ராமேஸ்வரம் கோவிலில் இருந்து  ராமர் அண்ட் கோ வும், விபீஷணனும் கிளம்பி இங்கே வந்து மீண்டும் பட்டர் கையால் முடி சூட்டிக்கிட்டுத் திரும்பிப் போறாங்க.
பட்டரிடம் அனுமதி கேட்டு, சுவரில் இருக்கும் சித்திரங்களையும் கருவறைக்கு வெளியேயும் கொஞ்சம் படங்களை எடுத்துக்கிட்டேன்.செல்லில் பேசும் ஜோரில், அனுமதி கேட்டவுடன் தலையை ஆட்டிட்டுப் பேச்சில் மூழ்கிட்டார்!

வாங்க, நாமும் கிளம்பி தனுஷ்கோடி போகும் சாலையில் சேர்ந்துக்கலாம்.
தொடரும்...........  :-)


6 comments:

said...

கோதண்டராமர் கோயில் சென்றுள்ளோம். நாங்கள் சென்றிருந்தபோது இந்த முகப்புக் கொட்டகை போடப்படவில்லை. கோயிலின் முகப்பழகை தற்போது ரசிக்க முடியவில்லை.

said...

இந்தக் கோவில் ராமேஸ்வரத்திலதானே இருக்கு? அல்லது அங்கேயிருந்து திரும்பியாச்சா?

"இப்பவே உன்னை இலங்கைக்கு அரசன் ஆக்குக்கிறேன்னு" - பாயிண்டைச் சரியாப் புடிச்சுட்டீங்க. "விபிஷணனோடு சேர்ந்து அறுவரானோம்னு' எங்க வருது? (குகன் மட்டும்தான் படிச்சிருக்கேன்). அதுவும்தவிர கோவில் சிற்பத்தில் மற்ற சகோதரர்கள்லாம் இல்லை (இதுல லாஜிக் இருக்கு).

said...

நாங்க போயிருக்கும்போது (நாலு வருஷம் முன்னாலே) இந்த ராமர் கோவில் பாக்கலே. மீண்டும் அழைக்கும் போது மிஸ் பண்ண மாட்டோம். பாப்போம்.

said...

எடங்கள் அழகா இருக்கு. நெய்தல் நிலத்து இயற்கைச் சூழல். கோயிலும் நல்லா துப்புரவா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி கோயிலின் முகப்பழகை மறைச்சுதான் பந்தல் போட்டிருக்காங்க. வடபழனியிலும் இப்ப அதுதான் கதை.

ஒருத்தர் கதை சொன்னா அதுக்கு ஒம்போது கதை மக்கள் சேப்பாங்கன்னு சொல்றது உண்மைதான் போல.

இராவணன் வீடணனைக் காலால எத்தி விடல. வீடணன் சொன்னது இராவணனுக்குப் பிடிக்கலை. நீ வெளிய போயிருன்னு வார்த்தையாலதான் சொல்றான். அவனும் பொறப்பட்டுப் போயிர்ரான்.

அதே மாதிரி இராமன் யாருக்கும் முடிசூட்டல. முடிசூட்டியது அத்தனையும் இலக்குவன். பதவிக்காகதான் வந்திருக்கான்னாலும் வீடணனை நம்பலாம்னு அனுமர் சொன்ன பிறகு ஒடனே பட்டாபிஷேகம் நடந்துருது. போர் முடிஞ்சபிறகு இல்லை.

கடலுக்கு அந்தப் பக்கம் இராமேசுவரம் கோயில் மிக அழகு.

said...

நல்லதோர் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள்.

நன்றி டீச்சர். தொடர்கிறேன்.

said...

நல்ல பதிவு.