Friday, May 22, 2015

கோபாலின் கொசுவத்தி :-) C I T ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 52)

நிதானமா எழுந்து  குளிச்சு முடிச்சு, பொட்டிகளை அடுக்கி மூடி வச்சுட்டு,  கீழே சாப்பிடப் போனோம். பெரிய நீண்ட காரிடார்களோடு ஜிலோன்னு இருக்கு  இங்கே. ஓனர் லாம்ப்ரெட்டா ப்ரியர் போல!  எல்லா தளத்திலும் ஒவ்வொன்னு நிக்குது. ஷோ கேஸ் ஐட்டம்!

 ரெஸ்ட்டாரண்டுக்குப் பெயர் 'டாட் யம்'.  பின்பக்க முற்றம் தாண்டிப் போகணும்.
நிறைய பாத்திரங்களா அடுக்கி வச்சுருக்காங்க. நமக்கு வேண்டியது கிடைச்சது. ஒரு இனிப்பு போண்டா கூட இருந்துச்சு. சக்கரைப்பொங்கல், ஸ்வீட் ரைஸாம்!




ஒன்பது மணிக்கு  செக்கவுட் செஞ்சு கிளம்பிட்டோம்.  கோபால் பரபரன்னு இருக்கார்.  அவர் அஞ்சு வருசம் இருந்த ஜெயிலுக்கு இப்போ போறோம். அவினாஷி ரோடு!   போகும் வழியில் ஏகப்பட்ட மாற்றங்கள்  இந்த  42 வருசங்களில்.  ஸி ஐ டி. கட்டிட முகப்பு அப்படியே இருக்குன்னு சொல்லி பூரிச்சுப் போயிட்டார்.




ஒவ்வொரு இடத்தையும் பார்த்து அப்படியே இருக்கு அப்படியே இருக்குன்னு சொல்லிக்கிட்டே வந்தவர்  ஒரு வகுப்பறையில் போய் உக்கார்ந்துக்கிட்டார். க்ளிக்:-)))



அடுத்த பகுதிக்குப் போனோம். மாணவர்கள் அங்கங்கே   இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகும்  தேர்வுக்குப் புத்தகமும் கையுமா!



டென்னிஸ் கோர்ட்,  ப்ளே க்ரௌண்ட் எல்லாம் பராமரிப்பு ஒன்னுமே இல்லாமல் பாழடைஞ்சு புல்முளைச்சுக் கிடக்கு. நன்றியுள்ள ஜீவன்கள் மட்டும் அங்கங்கே...நல்ல உறக்கத்தில்.




ஹாஸ்டல் பகுதிக்கு வந்திருந்தோம்.  கீழ்தளம் முழுசும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு.  குட்டியூண்டு அறை. பங்க் பெட்.




இன்னொரு ப்ளே க்ரவுண்டில்  வரிசையா பாட்டில்கள் மாணவர்களின் முன்னேற்றத்தைச் சொல்லும் விதமாக:(  அவருடைய காலத்தில் இதெல்லாமில்லாமப் போச்சே... த்ஸ் ...த்ஸ்.....




விளையாட்டை சுத்தமா மறந்துட்டாங்க போல!  ஆரோக்கியம் வேணாமுன்னு ஆகிப்போச்சு:(


ஹாஸ்டல் ஸ்டோர் நிலைமை.....  அவலம்!  அழுக்கு.  (இதெல்லாம் எனக்குத்தான். இவர் அதொன்னையும் கண்டுக்காத பரவசத்தில் இருந்தார்!  பாவம்....)

ஜெண்ட்ஸ் டைனிங் ஹாலாம்!!!!   ஹா.............


ஹாஸ்டல் மெஸ் பக்கம் போனோம்.  உள்ளே கொண்டு காமிச்சார்.  OMG!


ஹாஸ்டல் சாப்பாட்டையும் அமைப்பையும்  ரொம்பவே புகழ்ந்து சொல்லிக்கிட்டு இருப்பார்.  நாம்தான் சரியா சமைக்கலையோன்னு தோணும். கடைசியில் இதுதானா?  மகளுக்குக் காமிக்கணுமுன்னே  க்ளிக்ஸ் நிறைய:-)

புதுசா சில கட்டிடங்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா. ஐடி ப்ளாக், கம்ப்யூட்டர்  லேப் இப்படி.... 42 வருசத்துக்கு முன்னால் இப்படி ஒரு படிப்பு வரப்போகுதுன்னாவது  யாருக்காவது தெரியுமோ?

அவர் காலத்துலே மெடிக்கல், எஞ்சிநீயரிங் படிப்புன்னா   தமிழ்நாட்டைப் பொறுத்தவரை   மெட்ராஸ் யுனிவர்ஸிட்டியின் கீழ்  குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும்தான் படிக்க முடியும். அதுவும் உள்ளூர் ஆட்களா இருந்தால் அவுங்களுக்கு வெளியூரில்தான்   இடம் ஒதுக்குவாங்க. மொத்தத்தில் வீட்டில் இருந்து  ரொம்ப தூரத்தில் இருக்கணும் ! அந்தக் கணக்கில்தான் இவர் போடிநாயக்கனூரில் இருந்து கோயமுத்தூருக்கு வந்ததாக  வரலாறு!

இப்பப் பார்த்தீங்களா, ஊருக்கு ஒரு யூனியும், தெருவுக்கு ஒரு  எஞ்சினியரிங் காலேஜுமால்லெ இருக்கு! பண அறுவடை செய்யும் நிலங்களா இவை இருக்கு என்பதையும் சொல்லணும்தான்.  அப்ப அப்போ?  மெரிட் அடிப்படையில்தான் படிக்க இடம்.  குறைஞ்ச  செலவில் படிக்க முடிஞ்சது.



புதுசா முளைச்சதுலே ஒரு புள்ளையார் கோவிலும்  உண்டு!  ஸ்ரீ மகா கணபதி ஆலயம் !   பரிட்சைக்கு  தேங்காய் உடைக்க  வெளியே போக வேணாம் பாருங்க.  கோவிலில் போய் சாமி கும்பிடும்போது முப்பதுகளில் ஒரு பெண் வந்தாங்க. என்ன ஏதுன்னு சின்ன விசாரிப்பு. ஓல்ட் ஸ்டூடண்ட் என்றதும்  அவுங்களுக்கு சுவாரசியமா இருந்துருக்கணும்:-)  இங்கே  அலுவலகத்தில் வேலை செய்யறாங்களாம்.



எல்லாம் அப்படியே இருக்குன்னு சொன்னாலும் ஒரு மாறுதல் வந்திருப்பதைக் கவனிச்சேன்.  ஒரு காலத்தில்  ஆண்களுக்கு மட்டுமேயான இந்த இடம்,  இப்போது பெண்களும்  படிக்கும் இடமாகியிருக்கு.  அத்தி பூத்தாபோல அங்கங்கே ஒன்னு ரெண்டு மகளிர் நடமாட்டம்.

காய்ஞ்சு போன கண்களுக்குக் கலர் விருந்து  அளித்த  உங்க பாலைவனச் சோலை  எங்கேன்னு  கேட்டேன். எதுத்தாப்லெ கொஞ்சதூரத்துலேன்னார்.

1956 இல் ஆரம்பிச்ச   இந்தக் கல்வி நிறுவனம் இன்னும் நல்லாவே நடந்துக்கிட்டு இருக்கு. மிகப்பெரிய வளாகம். அறுபத்திநாலே முக்கால் ஏக்கர் நிலம்!  (அம்மாடியோவ்!) மாணவர்களுக்குத் தேவையான சகல வசதிகளுடனும்தான் கட்டி விட்டுருக்காங்க.  நிறைய மரங்களுடன்  கொஞ்சம் பசுமையாக இருந்தாலுமே  சரியான பராமரிப்பு இல்லாமல் ஒரு ரன்டௌன் ஸ்டேட்தான்:(  முக்கியமாக  ஹாஸ்ட்டல் பகுதிகள்  அவ்வளவா  நல்லா இல்லை என்பதே  என் எண்ணம்.  இன்னும்  சுத்தம்  தேவை.

ஆனால்  கற்றுக்கொடுக்கும் கல்வியைப் பற்றி யாரும் குறை சொல்லவே முடியாது!  எடுத்துக்காட்டா நம்ம கோபால் இருக்கார் பாருங்க:-) சிறந்த எஞ்சிநீயரிங்  கல்விக்கான விருது  போன வருசமும் கிடைச்சுருக்கு!

தமிழ்நாடு முழுக்க  பளபளன்னு கண்ணாடிக் கட்டிடங்களும் புது மோஸ்தர்  வகுப்பறைகளும், லெக்ச்சர் ஹாலும் வந்து விட்ட நிலையில்   இங்கே  வந்து படிக்க ஆசைப்பட்ட  மாணவர்களுக்கு  மனோ தைரியம் அதிகமாத்தான் இருக்கணும்!   கோல்ட் இஸ் ஓல்ட்!

அதானே...பேக்கேஜ்  மட்டும் அழகா இருந்து என்ன பயன்?  உள்ளே இருக்கும் சரக்கு சுத்தமா இருக்கணுமுல்லெ!

யாரையாவது  விட்டு நம்மை  க்ளிக்கச் சொல்லலாமுன்னு  பார்த்தால் ஓட்டமும் நடையுமா வந்துக்கிட்டு இருந்த  மாணவர்,  'ஸார்,  எக்ஸாமுக்கு பெல் அடிச்சுருச்சு'ன்னு  ஓடறார்!   நம்ம ஃபொட்டாக்ராஃபர்  காரை  எங்கியோ கொண்டு நிறுத்திட்டு   அந்தப் பக்கம் சுத்திக்கிட்டு  இருந்துருக்கார்.


செல்லில் அவரைக் கூப்பிட்டு வந்தவுடன் கிளம்பிட்டோம்.   வளாகத்தை விட்டு வெளியே வந்து அவினாஷி   சாலையில்   வலது பக்கம் திரும்பிப்போகும்  வழியில்    ராமலக்ஷ்மி மஹால் கல்யாண மண்டபம் கண்ணில்பட்டது.  அட! நம்ம ராமலக்ஷ்மின்னு ஒரு க்ளிக்!

அடுத்த ஒருமணி நேரப்பயணத்தில் 47.6 கிமீ வந்திருந்தோம். ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்திட்டு, வந்த விவரம் செல்லில் சொன்னதும்,  இடத்தைக் கேட்டவருக்குத் தலையைத் திருப்பிப் பார்த்த நான் 'காதிபண்டார் 'என்றேன்.

ரைட் ப்ளேஸ்!

 இதோ வந்துட்டேன்  என்றார்  .....  நண்பர்:-)

தொடரும்.........:-)

PIN குறிப்பு:  படங்கள் கூடுதலா இருக்கும். கண்டுக்காதீங்க!


இந்த இடுகை  ஸி ஐ டி பழைய மாணவர்களுக்கு சமர்ப்பணம்!

25 comments:

said...

என்ன நீங்க கோயமுத்தூருக்கு வருவதைப்பற்றிச் சொல்லவேயில்லையே? சொல்லியிருந்தால் ஒரு ஆளுயர மாலை, தாரை தப்பட்டையுடன் வரவேற்பு கொடுத்திருப்பேனே?

said...

துளசிதளம்: கோபாலின் கொசுவத்தி :-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 52) = கோவை ஸி ஐ டி C I T பழைய மாணவர்களுக்கு சமர்ப்பணம்! =1956 இல் ஆரம்பிச்ச இந்தக் கல்வி நிறுவனம் இன்னும் நல்லாவே நடந்துக்கிட்டு இருக்கு. மிகப்பெரிய வளாகம். அறுபத்திநாலே முக்கால் ஏக்கர் நிலம்! (அம்மாடியோவ்!) மாணவர்களுக்குத் தேவையான சகல வசதிகளுடனும்தான் கட்டி விட்டுருக்காங்க. நிறைய மரங்களுடன் கொஞ்சம் பசுமையாக இருந்தாலுமே சரியான பராமரிப்பு இல்லாமல் ஒரு ரன்டௌன் ஸ்டேட்தான்:( முக்கியமாக ஹாஸ்ட்டல் பகுதிகள் அவ்வளவா நல்லா இல்லை என்பதே என் எண்ணம். இன்னும் சுத்தம் தேவை = எங்கள் இளைய மகன் Prakash Rathnavel இங்கு தான் படித்தார். நாங்கள் CIT கல்லூரிக்கு சென்றதில்லை. உங்கள் பதிவால் நாங்களும் பார்த்துக் கொண்டோம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.

said...

அன்று படிப்பையும் விளையாட்டாக படித்தோம்... ம்...

'க்ளிக்'கள் அனைத்தும் அருமை அம்மா...

said...

தலைவர் வாழ்ந்த இடங்களில் குளுமை குறைந்திருந்தாலும் நீங்க கொடுத்த தகவல் மூலம் குளு குளு கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான்.

கடைசி வரியைப் படித்தவுடன் சிரித்து விட்டேன்.

said...

CIT முன்னால் கோபாலின் முகம் எவ்வளவு பிரகாசம்? நன்றி உள்ள ஜீவன்கள் மட்டும் அங்கும் இங்கும் ..அதுவும் மாறவில்லையோ.?

said...

படித்த இடம் சென்று பார்ப்பது எவ்வளவு பெரிய சந்தோசம் . கோபால் அவர்களின் சந்தோஷத்தைஉங்களின் படங்கள் மூலம் நாங்களும் அடைந்தோம் .

said...

இது சி.ஐ.டி மாணவர்களுக்கு மட்டுமல்ல. என்னைப்போன்ற ஹாஸ்டலில் தங்கிப்படித்த ஜீவன்'களுக்கும்தான். எனக்கு இன்றைக்கும் சேவியர் விடுதிகள் உணவு (பாளையங்கோட்டை) நினைவில் நிற்கும் விதமாகத்தான் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஹாஸ்டலில் மெஸ் ஹாலைக் குழந்தைகளுடன் பார்த்தபோது காலம் புரட்டிப்போட்டதுதான் நினைவுக்கு வந்தது. இப்போ உள்ள மெஸ் ஹாலைவைத்து டீச்சர்..'நீங்கள் அந்தக்கால உணவை எடைபோடாதீர்கள்.

said...

இளமைக்கான நினைவுகள். மனதில் அப்படியே இருக்கும் இல்லையா.
கோபாலின் முகமே சாட்சி.. என்ன சந்தோஷம்பா.
நல்ல வேலை செய்தீர்கள் துளசிமா.

said...

கோபாலோடு சங்கரையும் கூட்டிட்டுப் போயிருக்கல்லம்...துள்சிம்மா! ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.

said...

பாடங்கள் பத்திநினைவிருக்கோ இல்லையோ..கான்டீனும் சாப்பாடும் மறக்கவே மாட்டார். அப்போதைய நிலவரம் அப்படி.

said...

மலரும் நினைவுகள் அருமை. அது தான் கோபால் சார் முகம் பளிச்!

said...

அப்படியே கோபால்சார் கிட்ட .. அந்தக்கால ” சைக்கிள் புரொபசர்” பெரியசாமி ... பி.எஸ்.எல்.வி ந்னு சாக்பீஸ்ல எழுதியிருந்த மொட்டை காய்ஞ்ச பனைமரங்கள்... மேத்ஸ் மேடம் லாம் ஞாபகம் வருதான்னு கேளுங்க ! ;-)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இப்படியெல்லாம் செஞ்சுறப் போறீங்களேன்னுதான் சொல்லாமக் கொள்ளாம வந்தேன்:-))))

said...

வாங்க ரத்னவேல்.

இளைய மகன் என்ன சொன்னார்? கொடுத்த விவரங்கள் சரிதானாமா?

பகிர்தலுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அப்பெல்லாம் மாலை முழுதும் விளையாட்டு என்பதை வழக்கத்தில் வைத்திருந்தோமே!

இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே... அது ஏன் ஏன் நண்பனே?

said...

வாங்க ஜோதிஜி.

அப்ப இன்னும் பசுமையாகவும் நல்ல பராமரிப்புடனும் இருந்ததாக கோபால் சொல்லி இருந்தார்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இளமைக்கால நினைவுகளில் முங்கியதும் முகத்தில் புதிய ஒளி வந்துருக்கு!!!!

said...

வாங்க சசி கலா.

உங்க சந்தோஷமே என் சந்தோஷம்தான்!

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

அப்போவெல்லாம் ஹாஸ்டல் சாப்பாடுகள் நல்லாவே இருந்துச்சுதான். நானும் அனுபவித்து இருக்கேன்.

உணவை எடை போடலை. மெஸ் ஹாலை இன்னும் நல்லா மாடர்னா வச்சுருக்கலாம்தானே?

நீங்கள் சேவியரா? கோபால் செயின்ட் ஜான்ஸ். பாளையங்கோட்டைதான். பியூசி அங்கே!

said...

வாங்க வல்லி.

தனிமனிதரின் ஆசையை நிறைவேற்றியதால் ஜகம் அழியாமல் பார்த்துக்கிட்டேன்.

உண்மையாவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தார்ப்பா!!!

said...

வாங்க நானானி.

சங்கரை அன்றைக்கு நினைச்சுக்கிட்டோம்தான். அப்புறம் உங்க வீட்டுக்கு வந்தபோதுகூட ஸி ஐ டி படங்களைக் காமிச்சு சங்கரிடம் புலம்பிக்கிட்டே இருந்தாரே!

said...

வாங்க கீதா.

உண்மைதான். நல்லாவே பத்திக்கிச்சு கொசுவத்தி:-)

said...

வாங்க ஓசை செல்லா.

உங்க பின்னூட்டம் பார்த்து கொஞ்சநேரம் மூளையைக் கசக்கியதும், சைக்கிள் ப்ரொஃபஸர் நினைவு இருக்குன்னார். இன்னொருத்தர் கணக்கு வகுப்பெடுக்க வருவாராம். ரொம்ப ஜீனியஸ். பார்த்தால் அக்கறை இல்லாமல் உடை உடுத்தி கொஞ்சம் அழுக்குச்சட்டையோடு வருவார் என்றார்.

அப்பெல்லாம் மேடம் எல்லாம் கிடையாதாம். ஆச்சே 43 வருசம்!

said...

Very much emotion nostalgic narration in Auzgu Tamilil ..

HATS UP OUR SUPER SENIOR AND The Women behind his Success Mrs THULASI

LOUIS (1983 TO 1987 EEE)

said...

வாழைப்பழத்தில் ஊசி....கோவை குசும்பு.... வஞ்சி புகழ்ச்சி.... எனக்கு இவ்வளவுதான் தமிழ் தெரியுமுங்க....கொண்ணுடீங்க போங்க...