Friday, May 15, 2015

அஞ்சு மூர்த்தி க்ஷேத்ரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 50)

கேரள திருப்பதி வெங்கிக்கு  பைபை சொல்லிட்டு  இன்னுமொரு 32 கிமீ பயணத்தில்   திருமிற்றக்கோடு (Thirumittacode திருமிட்டக்கோட்)  வந்திருந்தோம். ஒருமணி நேரம் ஆச்சு. 108 திவ்ய தேசக்கோவில்கள் லிஸ்ட்டில் இருக்கும் கோவில் இது.  கேரளத்தில் இதன் புராணப்பெயர்தான் புழக்கத்தில் இன்னும் இருக்கு.  நம்ம  தமிழ் பட்டியலில் இதுக்கு திருவித்துவக்கோடு என்ற பெயர்!  நம்ம குலசேகராழ்வார்  வித்துவக் கோட்டம்மானே என்றுதான் சொல்லி இருக்கார்.


பஞ்ச பாண்டவர்கள்  கட்டிய வெவ்வேற கோவில்களை இந்தப் பயணத்தில் பார்த்து தரிசனம் செஞ்சுக்கிட்டே வந்தோம் பாருங்க.....   இப்ப நாம் தரிசிக்கப்போவது  பாண்டவர் ஐவரும்  ஒரே  இடத்தில் கட்டிய கோவில்(கள்).

 ஆளாளுக்கு ஒரு சந்நிதியைக் கட்டி வச்சுருக்காங்க. அதுதான் அஞ்சு மூர்த்தி!
பெரிய  மரம் ஒன்னு மேடையுடன்!  அதைக்கடந்து  போனால் காம்பவுண்டு சுவரில்  ஒரு  வழி.  வெளியில் ஒரு கவுண்ட்டர் (பொட்டிக்கடை ஸ்டைலில்) ஆள் யாரும் இல்லை! கடந்ததும்  கண்ணுக்கு  நேரெதிராஒரு சந்நிதி.  அஞ்சடுக்குக் கல்விளக்கும் அஞ்சு படிகள் ஏறிப்போகும்  வகையில்.   கணபதியும், தக்ஷிணாமூர்த்திக்குமாக!

அங்கங்கே தனித்தனியாக இருக்கும் சந்நிதிகளை அப்புறம் பார்க்கலாம். முதலில் மூலவர் தரிசனம் வேணுமுன்னு உள்ளே போனால்  பாரதப்புழாவைப் பார்த்தாப்படி சந்நிதி  வாசல். போச்சுடா.... எப்படி ஏறிக்குதிப்பதுன்னு  கவலை:(   மூணடி தாண்டிக் குதிக்கணுமோ!   மெள்ள   கல்சுவரின்மேல் உக்கார்ந்து காலைத் திருப்பி உள்ளே கொண்டு போய் இறங்கணும். கோபாலின் டைரக்‌ஷன்.

கொஞ்சம் அநியாயமாத் தோணுச்சு எனக்கு:(  வீல்ச்சேர் மக்கள் என்ன செய்வாங்க?

கோபால் சொன்னதைச் செஞ்சால் நேர் எதிரில் சிவன்!  லிங்க ரூபத்தில் ஏழு பிறைகள் அடுக்குகளாய் ஜொலிக்க   அரை இருட்டில் இருக்கார்!
எப்ப இவர் வந்தார், எப்படி வந்தார் என்ற கேள்விகளுக்குக் கதை கிடைச்சது!
ஒரு   ரெண்டாயிரம் வருசங்களுக்கு முன்னே கேரளத்தில் இருந்து ஒரு முனிவர்  காசிக்குப்போய் அங்கேயே தங்கி விச்சுவை ஆராதிச்சுக்கிட்டு இருந்தார்.

திடீர்னு முனிவருடைய தாயாருக்கு உடம்பு  சரி இல்லாமல் ரொம்ப மோசமாப் போயிருச்சு. தகவல்  கிடைச்சதும் முனிவர் புறப்பட்டு வர்றார்.  அன்புடன் தன்னை வணங்கிய  பக்தரைப் பிரிய மனமில்லாத விஸ்வநாதர் , முனிவரின் குடைக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு கூடவே வந்துருக்கார்.  பாரதப்புழையின் கரையில் இந்தக் கோவிலைப் பார்த்தவுடன்  பெருமாளை ஸேவிச்சுட்டுப் போகலாமேன்னு முனிவர் ஒரு  பலிபீடத்துமேலே அப்படியே குடையை (தாழங்குடையாக இருக்கணும்!) வச்சுட்டு ஆற்றில் இறங்கி குளிச்சுட்டு வர்றார்.

வந்து பார்த்தால் அந்த குடை வச்சுட்டுப்போன பலிபீடம் வெடித்துச் சிதறிப்போய் அதுக்குள்ளே இருந்து ஒரு சிவலிங்கம் எட்டிப் பார்க்குது!  பெருமாள் இருக்குமிடத்துக்கு சிவனே வந்துட்டார்!  உடனே அவரை அங்கேயே ப்ரதிஷ்டை செஞ்சுட்டாங்க. அவர்தான் இவர்!

அதனால் நாமும் முதலில் சிவனை வணங்கிய பின்னே,  பின்னால்  உள்பிரகாரம் போய்  அங்கே கருவறையில் இருக்கும் பெருமாளை வணங்கும்  நடைமுறை வந்திருக்கு!


பெருமாள் பெயர் உய்யவந்த பெருமாள்.  தாயார்  வித்துவக்கோட்டு வல்லி! நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். துளசி இலைகள் ப்ரஸாதமாக் கிடைச்சது!  ஏகாந்த ஸேவையும்  லபிச்சது.

மூலவராக இருக்கும்  இவரை இங்கே பிரதிஷ்டை செஞ்சது அர்ஜுனன்!
மறுபடி ஹை ஜம்ப் பண்ணித்தான் வெளியே வரணும். ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.அதுக்காகக் குதிச்சு ஏறக்கூடாது. தலை உச்சி  மேலே நிலைப்படியில் மோதும் அபாயம் உள்ளது.

எதிரில் பாரதப்புழாவில் துணி துவைச்சுக்கிட்டு இருக்காங்க  சிலர்.  படிகள் இருந்தாலும் கீழே இறங்கிப்போகலை.

வெளிப்ரகாரம் சுத்திவரலாமுன்னு போனோம்.  தனியா வரிசையில் இல்லாமல் அங்கே  இங்கேன்னு  கோவில் வளாகத்துக்குள்ளே சந்நிதிகள்.

கோவிலில் தரிசன நேரம் காலை 5.30 முதல்  10.30 வரையும்  மாலை  5 முதல்  7.15 வரை மட்டுமே!  ரொம்ப இருட்டிப் போனால்  வெளிப்ரகாரம்  சுத்தி வருவது சிரமம்தான். 1132 ஆம் ஆண்டு   சிங்க ராசிக்காரர்களுக்காக கலசம் வச்சு பூஜை நடத்துனதா ஒரு கல்வெட்டு. க்ருஷ்ணன்குட்டி நாயர் சொல்றார்.  முழுவிவரம் சரியாத் தெரியலை:(

பீமன் பிரதிஷ்டை செய்த விஷ்ணு, தருமர் பிரதிஷ்டைசெய்த விஷ்ணு,


நகுலசகாதேவன் பிரதிஷ்டை செய்த விஷ்ணுன்னு ஆளாளுக்கு  அங்கங்கே !

பகவதிக்கும், ஐய்யப்பனுக்கும்  திறந்த மண்டபம் போல் சந்நிதிகள்.

  ஒரு பக்கம்  சர்ப்பக்காவு  இருக்கு!





வெளியே காம்பவுண்டு சுவரில் அறிவிப்பு ஒன்னு இருந்தது.  ' பலியிடான் வருந்நவர்   கோவில் மதிலுக்குள்ளில் ப்ரவேஸிக்கரது'ன்னு தந்த்ரி  சொல்றாராம்.    பலின்னு வச்சால்... இங்கே  ஆடுமாடு பலி கொடுப்பாங்கன்னு  நினைக்கப்டாது.   பித்ருபிண்டம்  கொடுப்பதுதான் பலியிடுன்னதுன்றது.
பாரதப்புழாவின் கரையில்  குடும்ப முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும்,  யாத்திரை செய்து வரும்போது பிண்டம் கொடுப்பதும்  இங்கே வழக்கமாம்.  அதனால்  இந்த விஷயமாக வரும் பக்தர்கள்  தீட்டு என்பதால் கோவிலுக்குள் வரவேணாமுன்னு  கோவில் தந்த்ரி சொல்றார்.  அப்போ முதலில் அல்லது முதல் நாளில் கோவிலில் தரிசனம் முடிச்சுக்கிட்டு மற்ற சம்ப்ரதாயங்களைச் செய்யலாமோ என்னவோ?

திருநாவாய  க்ஷேத்ரத்தில் இது சம்பந்தமா வரும் பக்தர்களுக்கு  தங்குமிடம் இருப்பதைப் போல் இங்கு ஏற்பாடுகள் ஒன்று இல்லை. வேறெங்காவது தங்கிக்கணும்.  ஒரு மணி நேரத்தில் திருநாவாய போயிடலாம்!  இதே பாரதப்புழாதானே இங்கிருந்து அங்கே போகுது! இல்லேன்னா குருவாயூர் இருக்கவே இருக்கு!

கோவிலை விட்டு வெளிவரும் சமயம்  ஒரு நாலுபேர் (ரெண்டு தம்பதிகள்)  கோவில் வாசலில் நின்னுக்கிட்டு இருந்தாங்க.  நான் நிதானமா அங்கே இங்கேன்னு க்ளிக்கும் சமயம் உள்ளே போயிருப்பாங்க போல!

அதில் ஒருவர்  ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சூருக்கு வேலை மாற்றத்தில் வந்தவர். வருமானவரி துறை!  அஞ்சு வருசம் ஸ்ரீரங்கத்தில்  இருந்தாராம். இன்னொரு ஜோடி   அவருடைய தங்கையும் கணவரும். கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டுப் புறப்பட்டோம்.

இந்த திருமிற்றக்கோடு பாலக்காட்டு  வட்டம் என்பதால் நிறைய இடங்களில் தமிழிலும் எழுதித்தான் வச்சுருக்காங்க.

ஆச்சு. நம்ம மலைநாட்டு திவ்யதேசங்களை முடிச்சுட்டோம்.  மொத்தம்  13  க்ஷேத்ரங்கள்.  அதுலே  திருவண்பரிசாரம் இப்போ (நாகர்கோவில் பக்கம்) தமிழ்நாட்டுத் திருப்பதிகளில் வந்துருச்சு. ஆக பனிரெண்டுதான் சேர நாட்டில்.  திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களை கன்யாகுமரிப் பயணத்தில் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டதால் மீதி இருந்த பத்து திவ்ய தேசங்களை இப்போ தரிசனம் முடிச்சுருக்கோம். இதுலேகூடப் பாருங்க செங்கண்ணூரில் மட்டும்  அஞ்சு திவ்ய தேசக்கோவில்கள்!

கணக்கு சரியா இருக்கான்னு இப்பவே பார்த்துக்குங்க.  அப்புறம்  ரெண்டாம்  வாய்ப்பாடு தெரியலைன்னு ,  நீ  ஜட்ஜ்  ஆகத்தான் லாயக்குன்னு கூவக்கூடாது :-)))

இவை இல்லாமல் அம்பலப்புழா, குருவாயூர் க்ருஷ்ணன்கள்,  செங்கண்ணூர் மஹாதேவர், பகவதி, கேரளத் திருப்பதி எல்லாம்  நமக்குக் கிடைச்ச போனஸ்!


இங்கிருந்து இப்போ நேரா கோவைதான். பாலக்காடு ஷோரனூர், வாளையார் கடந்து  போகணும்.

இதோ.... கிளம்பியாச்சு வாங்க.

தொடரும்.....:-)

PINகுறிப்பு:  இந்தப் பயணக் கட்டுரை (நான்கு வாரங்களில் மூன்று மாநிலங்கள்)தொகுதியில்ல்   இது ஐம்பதாவது இடுகை . இதுவரை கூடவே வந்த அனைவருக்கும் நம் நன்றிகள். அம்பதோடு போச்சுன்னு யாரும்  மகிழ வேணாம்.  இனி தமிழ்நாட்டுக்குள்ளே போறோம். அங்கே.....




17 comments:

said...

உள்ளே செல்வதே வித்தியாசமாகத் தான் இருக்கு...!

பயணத்தை தொடர்கிறோம் அம்மா...

said...

1132 ஆம் ஆண்டு சிங்க ராசிக்காரர்களுக்காக கலசம் வச்சு பூஜை நடத்துனதா ஒரு கல்வெட்டு. க்ருஷ்ணன்குட்டி நாயர் சொல்றார். முழுவிவரம் சரியாத் தெரியலை:
---
Kalasham - means Kumbham - Kumbabhishekam was done on Kolla Varsham 1132 Edava (Vaikasi) month 17th day during Simha Lagnam

said...

ஜட்ஜ்களைப்பத்தி இப்படியா அபிப்பிராயம் வச்சிருக்கீங்க? போட்டுக் கொடுக்கிறேன் பாருங்க.

said...

கேரள திவ்விய க்ஷேத்திரங்களில் ஆழ்வார்களின் பாடல்கள் ஏதாவது எழுதி இருக்கிறதா. அக்கோவில்கள் திவ்விய க்ஷேத்திரங்களின் கணக்குகளில் வருமென்று கேரள மக்களுக்குத் தெரியுமா?

said...

கோவிலின் தூய்மையும் அமைதியுமே பாதி மன நிறைவை கொடுத்துடுது. மீதி இறை தரிசனம் கொடுக்கும் இல்லையா துளசி . பதிவு , படங்கள் மூலம் நீங்கள் அனுபவித்ததை எங்களுக்கும் pass on பண்ணி எங்களுக்கும் மன நிறைவை ஏற் படுத்துடறீங்க. படங்கள பார்க்கும்போதே அவ்வளவு நிறைவாய் இருக்கு . . நன்றி நன்றி !!!!!

said...

ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துகள். எதையாவது மிஸ்
செய்திருப்பேனோ என்னவோ. அந்தக் கிருஷ்ணனுக்கே வெளிச்சம்..

வித்துவக்கோட்டம்மானே நீ வேண்டாயே ஆயிடுனும்
மற்றாரும் பற்றிலேன் என்றவனைத் தாள் நயந்த
கொற்றவேல் தானைக் குலசேகரன் சொன்ன
நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே.

நன்றி நன்றி நன்றி துளசிமா. கண்ணாரப் பெருமாள் க்ஷேத்திர தரிசனம்
செய்து வைக்கிறீர்கள்.இந்தப் பத்துப் பாசுரங்களில்தான்
அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் பாசுரமும் வரும்.மஹா புண்ணிய ஸ்தலம்.

said...

அண்ணன் தம்பி அஞ்சு பேர் ஒரு வீட்டுல இருக்குறதே பெரிய காரியம். இதுல அஞ்சு பேரும் சேந்து ஒரே எடத்துல அஞ்சு கோயில்கள் கட்டியிருக்காங்களே.

சிவன் கோயிலுக்கு இப்படியொரு வாசலா? பொதுவாச் சிவன் கோயில்களுக்குத் தமிழில் அம்பலம்னு பேரு. பொதுவில் அம்பலத்தில் இருக்கும் கடவுள் என்பதால் கடவுள் இருக்கும் கோயிலுக்கு அம்பலம் என்று பெயர். இங்க என்னடான்னா உள்ள போக விடாம தடை வெச்சிருக்காங்களே.

ஒருவேளை பெருமாளைப் பாக்க வந்தவங்க சிவனைப் பாத்திரக்கூடாதுன்னு தடையாக்கி வெச்சிருப்பாங்களோ? ஒரு காலத்துல ரெண்டு கூட்டத்துக்கும் பகை இருந்ததும் உண்மைதானே.

இயற்கைச் சூழலில் இருக்கும் இந்தக் கோயிலும் எனக்குப் பிடிச்சிருக்கு.

said...

துளசிக்கே துளசியா?!! பிரசாதமாக!!!!. இப்போதான் நேரம் கிடைச்சுது. ரொம்ம்ம்ப பிச்சி....

நல்ல விவரணம்...அழகான படங்கள்...பரதப் புழா இல்லையோ?!

திருவண்பரிசாரம் இப்போது தமிழ்நாடுதான் என்றாலும்....இன்னும் கேரள முறைபடிதான் பூஜைகள். அடுத்த முறை நேரம் கிடைக்கும் போது போய் வாருங்கள் அது கீதாவின் ஊர். பிறந்து வளர்ந்து ட்ரேயின் பார்க்காமலேயே (சும்மா கலாய்த்தல்...)எம் ஏ வரை படிச்ச ஊர்.....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எதுக்கு இப்படி வச்சுருக்காங்கன்னு தெரியலையே:(
ஒரு காலத்துலே காடா இருந்த இடத்துலே வன மிருகங்கள் உள்ளே வரக்கூடாதென்பதற்கோ?

அதுகளுக்கும் குதிக்கத்தெரியாதா என்ன?

said...

வாங்க Strada Roseville,

விளக்கத்துக்கு நன்றி.

இதுலே இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்குன்னு நினைக்கிறேன்.

கொல்ல வருஷம் 1132 ன்னா நமக்கு 1957. இடவம் மழைக்காலம். அப்பவா கும்பாபிஷேகம் வச்சுருப்பாங்க?

சிங்கம் ராசிக்கு ரெண்டு க்ஷேத்ரத்திலும் நடத்தின்னு எழுதி இருக்குல்லே?

கும்பாபிஷேகத்தைக் கலசம் என்று சொல்லணுமா? கும்பாபிஷேகம் என்றொரு சொல்லே கேரளத்தில் புழக்கத்தில் இருக்கே!



said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

மேல்முறையீடு செய்யப்போறீங்களா?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

திவ்ய தேசக்கோவில்கள் லிஸ்ட்டில் வருமென்பது கோவில் அதிகாரிகளுக்கும், பட்டர்களுக்கும் தெரிஞ்சுருக்கு. அதான் தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாப்போய் தரிசனம் செய்யறாங்களே!
அதான் 'முக்கிய சமாச்சாரங்கள்' தமிழிலும் எழுதிப்போட்டுருக்காங்க.

சில கோவில்களில் உள்ப்ரகாரத்தில் கறுப்பு சலவைக்கல்லில் பாசுரங்கள் ஒன்னு ரெண்டு பொறிச்சு வச்சுருப்பதையும் கண்டேன். உள்ப்ரகாரம் என்பதால் படம் எடுக்க முடியலை:(

said...

வாங்க சசி கலா.

மன நிறைவு தரும் பின்னூட்டத்துக்கு நன்றிப்பா.

said...

வாங்க வல்லி.

பாசுரத்தை பாதியில் நிறுத்தப்டாது:-)

தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே!'

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. என்னை எழுதுன்னு சொல்லிப்புட்டானே! எல்லாம் அவன் செயல் அன்றோ!

said...

வாங்க ஜிரா.

முதலில் சிவன். அவரைத் தாண்டித்தான் பெருமாளையே பார்க்கமுடியும், நம்ம திருக்கோஷ்டியூரில் இருப்பதைப்போல!

அமைதியான இடமா இருந்தது. ஆத்தங்கரையில் இருந்து ஓடும் தண்ணீரைப் பார்ப்பதே ஒரு சுகம்!

said...

வாங்க துளசிதரன்.

ஒருக்கா திருவண்பரிசாரம் குறளப்பனைப் பார்க்கப் போகத்தான் வேணும்.

கன்யாகுமரி பயணத்தில் கோட்டை விட்டுட்டேன்.

கீதாவின் ஊரா? பேஷ் பேஷ்!

பரதப்புழையா? மக்கள்ஸ் கொஞ்சம் நீட்டித்தான் சொல்றாங்க.

எப்ப நேரம் கிடைக்குமோ அப்போ வாசிக்கலாம் என்பதுதானே பதிவின் கவர்ச்சி:-) எங்கே ஓடிப்போகப் போகுது!

said...

//கும்பாபிஷேகத்தைக் கலசம் என்று சொல்லணுமா? கும்பாபிஷேகம் என்றொரு சொல்லே கேரளத்தில் புழக்கத்தில் இருக்கே!

The term 'Naveekarana Kaslasam' is what used mostly.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/kalasam-rites-in-progress-at-thriprayar-temple/article5961738.ece