Friday, May 08, 2015

கேபிள் கார் ம்யூஸியம் (தலைநகரத்தில் ! பகுதி 4)எங்க நாட்டு டேலைட் ஸேவிங்க்ஸ்  நேத்து இரவு 3 மணிக்கு முடிஞ்சது.  மூணுமணியானதும் அதை ரெண்டு மணியா மாத்திக்கணும்.  யார் மூணு மணிக்கு வேலைமெனெக்கட எழுந்து கடிகாரத்தைத் திருப்ப?  அதனால் இரவு படுக்கைக்குப் போகுபோது மணியை மாத்தி வச்சுக்குவோம்.  அப்படித்தான் செய்யணுமுன்னு  ரெண்டு நாளா டிவியில் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஒருமணி நேரம் கூடுதல் தூக்கம் கிடைக்கும் நாள்.  ஆனாப் பாருங்க.....  எனக்கு   லீவு நாளில்தான் சீக்கிரம் முழிப்பு வந்துரும்.

நிதானமா கிளம்பினோம். இன்றைக்கு ஈஸ்ட்டர் பண்டிகை(!) வேற. ஒரு கடையும்  திறந்துருக்காது. கையோடு கொண்டு போயிருந்த  பழங்கள், பிஸ்கெட் வகைகளோடு,  அறையிலேயே  டீ தயாரிச்சு ப்ரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கிட்டு கீழே தெருவுக்குப் போனோம்.

கடைவீதி ஜிலோன்னு கிடக்கு. இன்றைய திட்டம் பா(ப்)பாவைப் பார்ப்பது.  அவுங்களும்காலை 10 மணிக்குத்தான் திறப்பாங்க. பொடிநடையா நடந்தப்ப, கேபிள்கார் ஸ்டேஷன் அறிவிப்பு  கண்ணில் பட்டது. அதையும் இப்பவே முடிச்சுக்கலாமே!


ஒன்பது மணிக்குத்  திறப்பாங்க.  இன்னும் காமணி இருக்கு. அதுவரை விண்டோ ஷாப்பிங்.  கோபாலுக்கு ரொம்பப் பிடிக்கும் வகை இது:-)  எதுவும் வாங்காம இருப்பேன்  பாருங்க!  சில பொருட்கள்   சூப்பரா இருந்துச்சுதான்.  ஆனால் கடை மூடிக்கிடக்கே! திரும்ப வந்தால் கவுண்ட்டர் முன்னே நல்ல கூட்டம்!
ஆளுக்கு ரிட்டர்ன் டிக்கெட்  ஏழரை டாலர்.  சிங்கிள்  ட்ரிப் நாலு டாலர்.  போனவன்  வராமலா போயிருவான்?

நம்ம அறையில்  வெலிங்டனில் பத்து  இலவசங்கள் பட்டியல் ஒன்னு வச்சுருக்காங்க.  அதில்  கேபிள்கார் டிக்கெட்  ரெண்டரை டாலர்னு போட்டுருக்கு. அங்கிருந்து இங்கெ வர்றதுக்குள்ளே  ஒன்னரை டாலர் விலை ஏறிப்போயிருக்கே!

 ஒவ்வொரு பத்து நிமிசத்துக்கும் 'வண்டி' கிளம்புது!  ஒரு ஆறேழு நிமிசப் பயணம்தான். அஞ்சு ஸ்டேஷன். மூணு டன்னல், மூணு viaducts  கடந்து போறோம்.  நடுவிலே ஒரு லூப் லைன். மேலே இருந்து வரும் வண்டிக்கு ஒதுங்கி நின்னு  வழி விடறதுக்கு!முதலில்  ஒரு இடத்தில் நின்னப்போ....  நம்ம எடையை இழுக்க முடியாமத் திணறுதுன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தால்  என் ஜன்னலுக்கு எதிர் ஜன்னலாண்டை ஒரு ஸ்டேஷன் தெரிஞ்சது. ஒரு ஆள் இறங்கிப் போனார். மலைக்கு நடுவில் இருக்கும் வீடுகளில் வசிப்பவராக இருக்கணும்.  அடுத்த முறை என் பக்கமே ஸ்டேஷன்!  கீழிறிங்கிப் போக  படிகள் இருக்கு. ஆமாம்....  இங்கே குடி இருப்பவர்கள்  கடை கண்ணிகளுக்குப்போக ஒருமுறை இறங்கி ஏறணுமுன்னா  ஏழரை அதிகம் இல்லையோ?


 1890 வது வருசம் வெலிங்டன் பகுதி ரொம்ப பெரிய ஊரா ஆகும் வாய்ப்பு இருக்குன்னு புரிஞ்சுக்கிட்ட  ரெண்டு பேர்  ஒரேபோல சிந்திச்சு இருக்காங்க.  ஒருத்தர்  இந்த விக்டோரியா மலையின் மேற்பகுதிகளில் வீடுகள் கட்டும்படி சீரமைச்சால் நல்ல வருமானம் வருமேன்னு நினைக்க, இன்னொருத்தர் மலை அடிவாரத்தை சீரமைக்கலாமுன்னு திட்டம் போட்டுருக்கார்.

மலைக்கு  மேல் போக வர சாலைகள் போடலாம்தான். அது சுத்திச் சுத்தி போகணும். செலவும் ஏராளமா ஆகும். இப்போதைக்கு  மேலேயும் கீழேயுமாப் போகும் கேபிள்கார்  இருந்தா அது  மக்களுக்குக் கவர்ச்சிகரமானதா இருக்குமேன்னு  நினைச்சாங்க. அந்தக் காலக்கட்டங்களில் ட்ராம் வண்டி  உலகின் மற்ற பாகங்களில் ஓடிக்கிட்டு இருந்துச்சே!  அதையே கயிறு போட்டு மேலே இழுத்தால் ஆச்சு, இல்லையோ!


மலையின் உச்சிக்குப்பக்கம் நிலத்தைக் கொஞ்சம் சமமாக்கி புது ஏரியாவா ஆக்கி அதுக்கு கெல்பர்ன் ( Kelburn)  என்று நாமகரணம் ஆச்சு.  கீழே Lambton Quay (நம்ம ஹொட்டேல் இருக்கும் தெரு)வில் ஆரம்பிச்சு கெல்பர்ன் வரை போகும்.   க்ளிஃப்டன், டலவெரா, சலமாங்க்கா (Clifton, Talavera, Salamanca )நடுவிலே  மூணு ஸ்டேஷன். சலமாங்க்காதான் வெலிங்டன்  யூனி இருக்குமிடம். கடைசியில் கெல்பர்ன் லுக்கவுட்!

திட்டங்கள் சரியானதும் 1899 லே வேலை ஆரம்பிச்சது.  காலநிலை சரி இல்லாததால்  வேலைசட்னு முடியலை. இத்தனைக்கும் 50 பேர் ஒரு ஷிஃப்ட்க்கு வேலை செஞ்சுருக்காங்க. சும்மாச் சொல்லக்கூடாது.... கடுமையான உடல் உழைப்புதான்.  இப்பப் பாருங்க எல்லாத்துக்கும் மெஷீன்ஸ் வந்துருச்சு!


 சுரங்கப்பாதைகள் கட்டத் தேவையான செங்கற்களை செய்வதில் மட்டும் சிறைச்சாலைக் கைதிகளைக் கொஞ்சம் பயன்படுத்தினாங்களாம்.  1902 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 22 தேதிக்கு  பொதுமக்களுடைய பயன்பாட்டுக்கு வந்துச்சு கேபிள்கார்.
அங்கிருந்து பார்த்தால் துறைமுகம், சென்ட்ரல் சிட்டி எல்லாம் தெரியும் என்பதால்  அதைப் பார்க்கன்னே  முதல் வீக் எண்டில் 4000 பேர்  இதில் போயிருக்காங்க!

அப்புறம் ரெண்டு வருசம் கழிச்சு, கூட்டத்தைச் சமாளிக்கறதுக்காக ட்ரெய்லர் இணைச்சுக்கிட்டாங்களாம். இதுக்குள்ளே மலை முகட்டில்  ஒரு  டீ ஹவுஸ் வந்துருச்சு. காஃபி டீ குடிச்சுக்கிட்டே  வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் இருக்குதே!

ஸ்டீம் பவர்,டீஸல் பவர் இப்படி பலவித பரிசோதனைகளுக்குப்பின் 1933 முதல்  மின்சாரம் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த வருசம் கேபிள் காருக்கு வயசு 113.  2002 ஆம் ஆண்டு  நூற்றாண்டு கொண்டாட்டம் நடந்துருக்கு!

Track  length 618 மீட்டர்   120 மீட்டர் உயரத்தை அஞ்சு நிமிசத்தில்  ஏறிக்கிட்டு இருக்கு!  மேலே ஒரு ம்யூஸியம் வச்சுருக்காங்க. இதுலே கேபிள்காரின் சரித்திரம் முழுசுமிருக்கு!  வெலிங்டன் நகரம்  ம்யூஸியங்களுக்குப்  பெயர் போனது!   எங்கெ பார்த்தாலும்  முக்கியமா இருப்பவை ம்யூஸியங்களே!  சரித்திரம் கொட்டிக்கிடக்கும் இடங்கள்.  அந்த வகையில் இந்த கேபிள்கார் ம்யூஸியம்தான் புத்தம்புதுசு இப்போதைக்கு:-)

ஒன்பதரைக்குத்தான்  ம்யூஸியம் திறக்கறாங்க. கிறிஸ்மஸ் தினம் தவிர வருசமுச்சூடும் காலை  9.30 முதல்  மாலை 5 வரை திறந்து வைக்கறாங்க.  நுழைவுக் கட்டணம் கிடையாது.  முற்றிலும் இலவசமே! ம்யூஸியம் பணியாளர் இப்பதான் பெருக்கிவாரிக்கிட்டு இருக்கார். அதுவரை வெளியே வேடிக்கை பார்க்கலாமே!

ஸ்டேஷன் கட்டிடத்தை ரொம்ப நல்லாக் கட்டி இருக்காங்க. போனவருசம்தான் உள்ளூர் மேயரம்மா வந்து  திறந்துருக்காங்க. மாடி ஏறிப்போய்  சிட்டி ,  கடல் வியூக்களை ரசிக்கலாம். வெளியே கைப்பிடிக்கான தடுப்புக்கம்பிகள் போட்டு அங்கங்கே சரித்திர முக்கியத்துவம் உள்ள சமாச்சாரங்களை எழுதிப்போட்டுருக்காங்க. மாடியில்  ஈஸ்ட்டர் முட்டை ஒன்னும் இருக்கு.  இதுவரை நாலைஞ்சு பார்த்துருக்கோம்.

வெலிங்டன் பொடானிக் கார்டன் இங்கேதான் இருக்கு. உள்ளே அருமையான ரோஜாக்கள் இருக்காம். ஆனால் எங்கூர் பார்க்கை யாரும் மிஞ்சமுடியாது.  கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி எங்க ஊர்!அதனால் உள்ளே போகலை. பார்க்கைப் பார்த்துக்கிட்டே போனால் நடையிலேயே மலையை விட்டு இறங்கிக் கீழே நகரின் இன்னொரு பாகத்துலே போய்ச் சேர்ந்துரும் வகையில் பாதை போட்டுருக்காங்க.  இங்கே வர்றதுக்கு  கேபிள்கார் வழி மட்டும் இல்லை. காரிலும் வரலாம்.  கொஞ்சம் சுத்திக்கிட்டு வரணும். அம்புட்டுதான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு அப்ஸர்வேட்டரி கூட இருக்கு. இங்கிருந்து ஒரு அஞ்சு நிமிச பஸ் பயணத்தில் மேலே போனால்  Zealandia  Eco sanctury centre  , 225 ஹெக்டேர்  பரப்பில் அமைச்சுருக்காங்க.  இலவஸ  பஸ் நம்மை அங்கே கொண்டுபோய் கொண்டு வரும். நமக்கு இன்றைக்கு வேற ஒரு திட்டம் இருப்பதால்  கேபிள் கார்  ம்யூஸியம் மட்டும் பார்த்துக்கணும்.

சீனாக்காரர் ஒருவர்  தன் குழுவினருடன்  அங்கங்கே நின்னு  செல்ஃபீ எடுத்துக்கிட்டு இருக்கார். அவர் வளைஞ்சு நெளிஞ்சு டைரக்‌ஷன் செஞ்சுக்கிட்டு  படம் எடுத்துக்கறது வேடிக்கையான பொழுது போக்காக எங்களுக்கு இருந்துச்சு.  பேசாம நாமும் ஒரு செல்ஃபீ ஸ்டிக் வாங்கிக்கணும்தான்! இடைக்கிடை குழுவினரில் செல்லில் அவுங்களுக்குப் படம் எடுத்தும் கொடுத்துக்கிட்டு ஆளு பயங்கர பிஸி!

ஒன்பதரைக்குக் கதவு திறந்ததும் முதல் ஆளா வலது காலை உள்ளே  எடுத்து வச்சேன்:-) ஆரம்பகாலத்து  வண்டிகள் ரெண்டு  காட்சிக்கு வச்சுருக்காங்க.  உள்ளே இடம் இல்லைன்னா வெளியே ரெண்டு பக்கமும் உக்கார்ந்துக்கிட்டு வரலாம்.

ஸீட் பெல்ட் தோள்வழியா வருது. அதைக் கையால் கெட்டியாப் பிடிச்சுக்கணும்.  மேலே போக ரெண்டு பென்ஸ், கீழே போக ஒரு பென்னி டிக்கெட்!

டெக்னிக்கலா பல சமாச்சாரங்கள் படங்களுடன் இருக்கு.  அதெல்லாம் ஒருவேளை (!) கோபாலுக்குப் புரிஞ்சு இருக்கலாம்.  எனக்கு.........  ஓரளவு புரிஞ்சது:-)  சின்னதா ஒரு கூகுள் ஆல்பம் போட்டு வைக்கலாம் என்று தோணுது.  யாருக்காவது பயன்படுமானால் மகிழ்ச்சியே!

ரெண்டு இடங்களில் வீடியோ மூலம் விளக்கம் வருது.  ஒரு பத்துப்பதினைஞ்சு  இருக்கைகளும் போட்டு வச்சுருக்காங்க.

பழைய காலத்து (எல்லாம்  150 வருசப்பழைய காலம்தான்!)  பொருட்கள் அங்கங்கே கண்ணாடிப்பெட்டிகளில் விளக்கத்துடன்.
கீழ்தளத்தில் அந்தக் கால  கேபிள் கார் ஆப்பரேட்டிங் மெஷீன்கள் வச்சுருக்கங்க. எம்மாம் பெரிய  சக்கரம்!
இப்படி ஒன்னு!  என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்!


இன்னொரு காரையும் சீர்ப்படுத்தி காட்சிக்கு வச்சுருக்காங்க.  இது கொஞ்சம் மாடர்னா இருக்கு!


பத்துமணி வண்டியைப் பிடிச்சுக் கீழே இறங்கினோம்.  டன்னல்களைக் கீழே போகும்போது நல்லாவே பார்க்க முடிஞ்சது.

அறைக்குப்போகும் வழியில் இருக்கும் ஸ்டார்பக் திறந்திருக்கவே....  ஆளுக்கொரு மஃப்பின் வாங்கி அறைக்குக் கொண்டுபோய் தின்னுட்டு,  வீட்டில் இருந்து கொண்டு போன மலேசியன் காபியை கொதிக்கும் நீர் போட்டுக் குடிச்சுட்டு இதோ கிளம்பியாச்சு, பா(ப்)பா பார்க்க:-)

தொடரும்.........:-)
PIN குறிப்பு:  ஒரு ஆல்பம் கூகுள்+ இல் போட்டுருக்கேன்.  சரித்திரம் பார்க்க விரும்புவர்களுக்கு:-)  சுட்டி கீழே!
https://plus.google.com/u/0/photos/106551900495801732302/albums/6146317465384177105/6146317510356348802?pid=6146317510356348802&oid=10655190049

13 comments:

said...

இப்ப்டியும் ஒரு அருங்காட்சியகமா? அருமையான புகைப்படங்கள், கிடைத்தற்கரிய செய்திகளுடன்.

said...

இப்படியுமா...? வியப்பு தான்... நன்றாக சுற்றிக் காண்பித்தீர்கள் அம்மா...

said...

https://plus.google.com/u/0/photos/106551900495801732302/albums/6146317465384177105/6146317510356348802?pid=6146317510356348802&oid=10655190049

இது ஆல்பத்தின் சுட்டி.

said...

வெகு அழகு துளசி. அப்படியே இந்த ஊரைப் பார்ப்பது போல இருக்கு. எஞ்சினீயரிங்க் பொன்னான காலங்கள் மலை நாடுகளில் கழிந்திருக்கின்றன. அதென்ன பாப்பா பாபா. ரெண்டு பேரையும் பார்த்தீங்களா.

said...

அருமை !!!அருமை !!

said...


ஒரு ஒப்பீட்டுக்காக இந்தக் கேள்வி. பழனி மலைக்குப் போகும் வின்ச் மாதிரியா. இல்லை ஹர்த்வாரில் உயரே போகும் கேபிள் கார் போலவா?

said...

அது எலெக்ட்ரிக் பெல்லா? கேபிள் கார் புறப்படுவதற்கு சிக்னல் கொடுக்க? வெளினாட்டில் எவ்வளவு அழகாகவும் பொறுப்பாகவும் வைத்துள்ளார்கள். நம் நாட்டில் 1000 வருடப் பழமையானவைகள் ஏராளமாக இருந்தும் ஒன்றையும் நாம் சரியாக வைத்துக்கொள்வதில்லை. கோல்கண்டா கோட்டையைப் பார்த்தால், ஏகப்பட்ட கிறுக்கல்கள். இவர்கள் திருப்பதி மலை ஏறும் பாதையைக் கூட (திருப்பதி கியூ வரிசையக் கூட) விட்டுவைக்காமல் ஜோடிகளின் பெயர் எழுதிவைத்திருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பெயர்களை டிராமிலோ கேபிள் காரிலோ பொறித்து தமிழனின் பெயரை நிலைனாட்டினீர்களா இல்லையா?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தங்கள் ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கைடு வேலைக்கு தேறிடுவேனா?:-))))

said...

வாங்க வல்லி.

இப்போது உள்ள மெஷினரி சிஸ்டம் ஸ்விஸ் டிசைன்தான் :-)

பா(ப்)பா ஒரு பொக்கிஷம்! வெள்ளிக்கிழமை சொல்றேன்.ஓக்கே!

said...

வாங்க சசி கலா.

ரசனைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இது பழனி விஞ்ச் போலதான். தண்டவாளத்தின் மேல்தான் போகுது!

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

இந்த நாடுகளில் சரித்திரம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கு. அரசைச் சார்ந்தவர்கள் எழுதுவதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் எல்லா விவரங்களும் பக்கா:-)

அதுவும் ஒரு 180 வருசங்களுக்குள் நடந்தவைகளைத் தெளிவா அந்தந்த நிகழ்வில் இருந்த பொது மக்களே எழுதி வச்சுருக்காங்க.

பொய்புரட்டுகளை எழுதி டைம் கேப்ஸ்யூலில் வச்சுப் புதைப்பதெல்லாம் இல்லையாக்கும்!

நான் இங்கே தமிழன் என்று நிரூபிக்கக் கிறுக்கவேணாம். முகத்தைப் பார்த்தால் தெரிஞ்சுடாதா?

அது எலக்ட்ரிக் பெல் இல்லை.
தீக்குச்சி பத்த வைக்க அதில் உரசணுமாம். ட்ராமில் போகும் மக்கள் புகை பிடிக்க நெருப்பு வேணாமா:-)))))

இந்தப் புதிருக்கு பதில் கொடுத்தவர் நீங்கள் ஒருவர் மட்டுமே! நன்றிகள் பல.