Friday, May 01, 2015

ஒரே கூரையின்கீழ் மூணு வாசகர்களும் ஏகப்பட்ட சாமிகளும் (தலைநகரத்தில் ! பகுதி 4)

கதவைத் தட்டிட்டு காத்திருக்கும் ஒரு நிமிஷமே போதும்போல, காத்து தூக்கிக்கிட்டுப் போக!  கதவைத்திறந்த  கிவியனின்  'அக்கா' 'வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போச்சு'ன்னாங்க:-)

ஸோ, துளசிதளம் எல்லாம் அப்டுடேட்!  வீட்டுக்குள்ளேபோய்  கிவியனின் பெற்றோர்கள், அக்காவின் மகள் அனைவரையும் பார்த்ததும் பேச ஆரம்பிச்சாச்சு. அறிமுகம் எதுக்கு நமக்கெல்லாம்:-)

எப்படி சம்பவங்களை எல்லாம் ஒன்னு விடாம நினைவில் வச்சுக்கிட்டு எழுதறீங்கன்னு ரெண்டு மூணுதரம் கேட்டுட்டாங்க.  நமக்கு எப்பவுமுள்ள ஒரே பதிலைத்தான் சொல்லவேண்டியதாப் போச்சு.  'யானை' !

அக்கா, அம்மா, அப்பான்னு ஒரே கூரையின் கீழ் மூணு வாசகர்கள் எனக்கு! இப்ப கோபாலையும் சேர்த்துக்கிட்டால் அங்கே நாலுபேர்!  எனக்குமே புது அனுபவம்! கோபால் இப்போ சிலவருசங்களா என் தீவிர வாசகரா இருக்கார்! ப்ரிவ்யூ காட்டச்சொல்லி தினமும் தொந்திரவு. என்னமோ  ஆசையாக் கேக்கறாரேன்னு முந்தி ஒரு சமயம் ரெண்டு மூணு ப்ரிவ்யூ காட்டப்போய் அவருடைய கமெண்ட்(எல்லாம் இதை ஏன் எழுதறே, அதை ஏன்சொல்றேன்னு குற்றப்பத்திரிகை) சொல்ல ஆரம்பிச்சதும்  ப்ரிவ்யூ தியேட்டரை இழுத்து மூடிட்டேன். 'எதாக இருந்தாலும் இனி  (கணினி) திரையில் காண்க'தான்:-)

  அம்மா, இப்பெல்லாம் கோவில் வேலைகளில்  முழுகிப்போயிட்டாங்க(ளாம்). அவுங்க இல்லாமக் கோவிலில்  வேலையே நடக்காது!  அன்றைக்கு  பௌர்ணமி பூஜை இருப்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே போகப்போறாங்க. அவுங்களைக் கோவிலுக்குக்  கூட்டிப்போக நண்பர்களும் வந்துட்டாங்கன்னு  எனக்கு  மஞ்சள் குங்குமம் சில பரிசுப்பொருட்கள் எல்லாம் 'வச்சுக்கொடுத்துட்டு'க் கோவிலில் பார்க்கலாமுன்னு கிளம்பிப் போனாங்க.

எங்களுக்கு காஃபி & ஸ்நாக்ஸ் வந்தது.  உள்ளே தள்ளிக்கிட்டே விட்ட பேச்சைத் தொடர்ந்தோம். விட்டுருந்தா....  அது இழுத்துக்கிட்டே போயிருக்கும் அபாயத்தை உணர்ந்த கோபால் சாட்டையைச் சுழற்றினார்.  "அஞ்சு மணிக்குக் கோவிலில் விஷ்ணுசகஸ்ரநாமம் இருக்கே, கிளம்பலையா?"

கிறைஸ்ட்சர்ச்சிலிருந்து கிளம்புமுன் கோவில் நேரம் விவரம், நண்பரிடம் கேட்டுருந்தேன். நீங்க வரும்நாள் சனிக்கிழமையாக இருப்பதால்  விஷ்ணு சகஸ்ரநாமம்  அஞ்சு மணிக்குச் சொல்ல ஆரம்பிப்போம் என்றார்.  இவர் என்னுடைய மரத்தடிகால இனிய தோழி அலைகள் அருணாவின்  உறவினர்.  ஒரு கோடி காமிச்சா அப்படியே சொந்தக்காரரா ஆக்க நமக்குத்தெரியாதா:-)

இன்றைக்குப் பகல் அறை((!) கிடைச்சதும், இவருக்கும் செல்லில் சேதி சொன்னேன். இவருடைய மனைவி (இப்போ இவுங்களும் தோழிதான்!)  மாலை கோவிலுக்குக் கூட்டிப்போறேன்னு சொன்னாங்க.  வேணாங்க. நம்ம சுரேஷ் வந்து கூட்டிப்போறேன்னு சொல்லி இருக்கார் என்றதும் ஒரே வியப்பு.  என்ன... சுரேஷைத் தெரியுமா?  கிடைச்ச சான்ஸை விடமுடியுமோ?  கதையைச் சொன்னேன்.  அப்புறம் சுரேஷ் குடும்பத்துக்கு  கதையின் வேறொரு வெர்ஷனைச் சொல்லவேண்டியதாப்போச்சு.  எப்படி  எனக்கு  இந்த ரெண்டு குடும்பமும் தெரிய வந்துச்சு?

சிம்பிள்.  இரண்டு பேரின் மகர்களும் நம்ம கேண்டர்பரி யூனியில்தான் படிக்கறாங்க! பிள்ளைகளின் அப்பாக்கள்  நமக்கு உறவு:-)

அம்மா கிளம்பிப்போனபிறகுதான்  முழிச்சுக்கிட்டேன். வாசகர் சந்திப்பின் இனிமையில் கேமெராவைக் கிளிக்க மறந்துபோயிருந்தேன் :(  மற்றவர்களை மட்டும்  நாலைஞ்சு முறை க்ளிக்கினதும்,  கிவியனும் அவர் தங்கஸும் நம்மைக் கோவிலுக்குக் கூட்டிப்போனாங்க.  அக்காவும் மற்றவர்களும்  கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்துக்குவாங்க போல!

ஊரே  குறிஞ்சி நிலமாத்தான் கிடக்கு. சின்னதும் பெருசுமா குன்றுகளும் மலைகளும். முருகன் குன்றைக் கண்டால் விடமாட்டாந்தானே?  குன்றுதோறும் நின்றாடுபவன் இல்லையோ? அஞ்சு நிமிட் கூட இல்லை கோவிலுக்கு வந்திருந்தோம்.  வாசக்கதவைப்பார்த்தால் பக்ன்னு இருந்துச்சு.  சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்குப் பின்புறமாக  பெரிய ஷெட்டில் கோவில். முகப்பில்  ஒரு  படம். வேலும் மயிலும் கொண்ட முருகன்.  குறிஞ்சிக் குமரன்!   கோவில் வாசல் ஃபிஷ் & சிப்ஸ் ஷாப்பைப் பார்த்தமாதிரி!  வள்ளிக்காக இருக்கலாம்.வேடுவர்கள்  நான் வெஜிட்டேரியன்ஸ் தானே?

பக்கவாட்டுக்கதவு வழியாக உள்ளே நுழைஞ்சோம்.  மூச்சு நின்னு போச்சு!
பெரிய ஹாலின் நடுவில்  மூன்று சந்நிதிகளுடன் அம்சமான சின்ன கோவில்.  நடுவில் வள்ளிதேவஸேனா சமேதராக முருகன். அவருக்கு வலப்பக்கம் புள்ளையார். இடப்பக்கம் அரவக்குடையின் கீழ் அரன், லிங்க ரூபமாக!
அதுக்குள்ளே நண்பர் ராம் (நம்ம  சமீபத்திய சொந்தக்காரர்) மனைவியுடன் வந்துட்டார்.  கேட்ட முதல் கேள்வியே  ஃபோட்டோ எடுக்கலாமா?   அப்புறம் நலம் விசாரிச்சாலாச்சு, இல்லையோ:-))

அட!  முருகனுக்கு  Beer keg  என்னாத்துக்கு?  அது உண்டியல். பார்த்துக்குங்க.  ஊருக்கேத்தமாதிரி வச்சுட்டாங்க:-)
சரின்னு தலையாட்டியதும், க்ளிக்க  ஆரம்பிச்சுட்டேன்.  மணி  அஞ்சே கால்.'கொஞ்சம் லேட்டாத்தான் போச்சு,  வாங்க சகஸ்ரநாமம்  சொல்லலாமு'ன்னு  அவர் சொன்னதும்தான் பெருமாள் இருக்காரான்னு அசட்டுத்தனமா ஒரு கேள்வி . நாந்தான் வேற யாரு? அதோன்னார். பார்வையை அங்கே துரத்தினா குட்டியூண்டு சந்நிதியில் எம்பெருமாள் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.

சீக்கிரம் வாங்கோ......


அந்த சந்நிதிக்கு முன்  பந்திப்பாய்கள் போல்  மெத்தைகள் . ஏற்கெனவே சிலர்  உக்கார்ந்து ரெடியா இருக்காங்க. நாமும் அங்கே ஐக்கியமானோம். எங்கள் கைகளில் பெரிய எழுத்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம். அரைமணிக்கூறு.  எத்தனையோ முறை   நாமம் சொல்லி  இருந்தாலும்  பார்த்துத்தானே படிக்க முடியுது:(

ஊஹூம்... பக்தி   போதாது.... (பெருமாள்  சொல்றார்)  

மன்னிச்சுக்கோ.... மனசு அலையறதே... அதான்....(நான் பதில்  சொன்னேன்.) 

எனக்கு முன்வரிசையில் இருந்தவர்கள்  சொல் தப்பாமல் தபதபன்னு அருவி கொட்டறமாதிரி  மனப்பாடமாச் சொல்லிக்கிட்டே போறாங்க!

நாமம் சொல்லி முடிச்சுட்டு தீபாராதனை காமிச்சு  சடாரி ஸேவித்தோம். சந்நிதிக்குப் பொருத்தமா சின்ன விமானம். இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி, மூணாவது கையில் கதையுடன் ஒரு காலை மடிச்சு   அபயஹஸ்தம்  காண்பிக்கும் நாலாவது  கையோடு ராஜா மாதிரி சிம்மாசனத்தில் உக்கார்ந்துண்டு இருக்கார்!!  தேவிகள் இருவரும் பக்கத்துக்கொன்றாக.  எல்லாம் ஃபைபர் சிற்பங்களாம்!   ஹைய்யோ!!!!

முழுக்கோவிலுமே  ஃபைபரால் ஆனது. இந்தியாவில் செஞ்சு இங்கே கொண்டுவந்து இணைச்சுருக்காங்க.   விமானத்திலிருக்கும்  சிற்பங்கள்  எல்லாமே  மூக்கும் முழியுமா என்ன அம்சம்!

எர்த்க்வேக்  ஏரியாவா நியூஸி இருக்கே:( அதான்  ஃபைபர் என்றால்  நிலநடுக்கம் வந்தாலும் அவ்வளவாப் பிரச்சனை இல்லை என்பதே முதல் காரணம்!  எங்களுக்கும் ஃபைபர் டபுள் ஓக்கே!

மூலவர்கள் எல்லோருமே விக்கிரகங்கள்தான். பெரிய அளவில் இருப்பதால்  அழகோ அழகு!  ஐம்பொன்னாக இருக்கலாம். ஒருவேளை  வெங்கலமோ?  ஒரே பளிச் பளிச்தான்.
பெருமாளுக்கு  இடதுபக்கத்தில் இருக்கும் சுவரையொட்டிக் கூப்பிய கைகளுடன்  நம்ம ஆஞ்சி!

ஆதிசேஷ வாகனம்  இந்தாண்டை சுவருக்குப் பக்கத்தில்  'எப்போ வருவாரோ!'  ன்னு காத்துக்கொண்டிருக்கிறது:-)
 கஜபீடத்தின் மேல் கருவறைகள்!  சூப்பர்!!!!

வலம் போறோம்.  சிவன் சந்நிக்கு நேரே பின்புறம் சண்டிகேஸ்வரர்.   ஹாலின் நடுசெண்ட்டர் சந்நிதிகளுக்குப் பின்பக்கம்  இடது பக்கம் பெருமாள் என்றால்  வலது பக்கம்  த்ரிசூலம் ஏந்திய  சக்தி!  சூலத்தில்  குத்தி இருக்கும் எலுமிச்சங்காய், எனக்கென்னமோ க்ரீன்   ஆப்பிள் மாதிரியே இருந்துச்சு.  போகட்டும் ரெண்டுமே புளிதான்:-)


இந்தப்பக்கம் உற்சவர்களுக்குத் தனி மாடம்.  கூடி இருந்து  களிக்கும் இடம்!  எல்லோரும் சிரிச்ச முகங்களோடு ஜொலிச்சுக்கிட்டு இருக்காங்க.  அடுத்து  விழா மண்டபம் போல் சின்ன இடம். அந்தந்த சாமிகளுக்கான ஸ்பெஷல் தினங்களில்   அலங்காரத்தோடு அங்கே   இருந்து  மக்களை  மகிழ்விக்கலாம்.  அதுக்கடுத்து நவக்ரஹ மண்டபம்.  ரொம்பவே அழகு!சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் அம்பாள். இல்லே...தக்ஷிணாமூர்த்தியோ?  அங்கேதான் பவுர்ணமிபூஜை நடந்துக்கிட்டு இருந்தது.  இலங்கைத் தமிழ்ப்பெண்மணிகள்  முன்னின்று நடத்திக்கிட்டு இருந்தாங்க. இவர்களில் ஒருவர்  டீம் லீடர்!  அனுபவம் அதிகமுள்ளவர்.  அவரிடம்கொஞ்சம் பேசணும் என்று இருந்தேன். பூஜை  ஏற்பாடுகளில்  பிஸியாக இருந்தாங்க.  அப்புறமப்புறமுன்னு  சந்தர்ப்பம் வாய்க்கலை:(  எலுமிச்சை மாலைகள் தயாராகத் தட்டில் காத்திருக்கு!   குங்கும  அர்ச்சனைக்கு  இன்னும் சில  பெண்கள் இருந்தால் கொள்ளாம்தான். எனக்கும் ச்சான்ஸ் கிடைச்சதுன்னாலும்  பூஜைகள் எல்லாம் முடிய  எட்டரை ஒன்பது ஆகிரும் என்பதால் எஸ் ஆக வேண்டியதாப் போச்சு.முழுக்க முழுக்க வாலண்டியர்கள்  உதவியால்தான் கோவிலின்  மொத்த சமாச்சாரமும்.  வழக்கமா  வாலண்டியர்களில் ஒருவர் வந்து பூஜைகள்  செய்வார். எல்லாம் முறைபோட்டு வச்சுக்கிட்டுத்தான். இன்றைக்கு ரெண்டுபேர்  இருந்தாங்க. ரெண்டு சந்நிதிகளில் விசேஷம் இருக்கு என்பதாலோ!

நம்ம ராம்ஸ் கூட புதன்கிழமைகளில் பூஜை செய்ய வருகிறார்.  ஒரு சமயம்  பூஜை செய்ய யாரும்   கிடைக்காமல் போனதால் நம்ம கிவியன் கூட இன்ஸ்டண்ட் குருக்களா  மாற்றப்பட்டாருன்னா பாருங்க.!

கோவில் திறந்திருக்கும் நேரம் பொதுவாக   மாலை 7 முதல் 8 வரை.  சனிக்கிழமைகளில் காலை சுப்ரபாதம் சொல்ல  8 மணிக்குத் திறக்கிறார்கள்.

ஞாயிறுகளில் காலை 10 முதல் 12. பகவத் ஸேவைகள்.  கோவிலைச் சுத்தப்படுத்தும் பணி.

பூஜாரிகள் (!) உட்பட அனைவரும் தன்னார்வலர்களே என்பதால் அனைவரும்  ஆஃபீஸ் வேலைகளை முடிச்சுட்டு, இங்கே வர்றதுக்காக டைமிங்  கொஞ்சம்   அனுசரணையாகத்தான் வச்சுருக்காங்க.

சமீபத்துலெ கும்பாபிஷேகம் நடந்துருக்கு.  அப்போ போய்க் கலந்துக்க முடியாமல் போனதுக்கு இப்போ வருந்தினேன்!

இந்தக்கோவில் ரொம்ப வருசத்துக்கு முன்னே  வெலிங்டன் சிட்டிக்குள்ளேயெ நியூடவுனில் ஒரு வாடகை வீட்டில் இருந்துச்சு.  அப்போ  பிள்ளையாரும், அம்மனும் மட்டுமே.  பூஜை செய்ய மலேசியாவில் இருந்து ஒரு குருக்களை வொர்க் பர்மிட்டில்  கூட்டிவந்துருந்தாங்க. நான் சொல்வேன் பாருங்க  விஜயா அக்கா, ரங்காமாமான்னு,  அவுங்களும் கோவில் அமைப்பதில் முக்கிய பங்கு ஏத்துக்கிட்டவங்கதான். அங்கே ஒருமுறை மகளும் நானும்  போயிருந்தப்ப  அக்காவும் மாமாவும்  கூட்டிப்போய் காமிச்சாங்க.  அதன்பின் கோவிலுக்கு ஒரு  கிருஷ்ணர் விக்கிரகம் வந்து, கோவிலில் ப்ரதிஷ்டையாகும் வரை அக்காவீட்டில்தான் இருக்குமுன்னு சொல்லி படமும் அனுப்புனாங்க.(படம் கீழே!)

இந்த விக்கிரகம் கோவிலில் இருக்கான்னு தேடிப் பார்த்தேன்.  காணோம்:(  இந்தக் கோவில்  1999லே  புதுசாக் கட்டுனது  என்பதால்.... முழுவிவரம் எனக்குத் தெரியலை.  மாமா இறந்தே 20 வருசமாச்சு. அதன் பின் அக்கா  அஸ்ட்ராலியா போயிட்டாங்க.

எங்க ஊரில் கோவில் ஒன்னு கட்டணுமுன்னு ரொம்பநாளா ஆசை ஒன்னு இருக்கு.  ஆசைப்பட்டால் மட்டும் போதுமா?  சாமிக்கு இங்கே வர அதிர்ஷ்டம் வேணாமா? கிபி 2000 வருசத்துலே கோவில்கட்டும் எண்ணம் சம்பந்தமா  ஒரு மீட்டிங் ஏற்பாடு செஞ்சு  இங்கே இருக்கும் அனைத்து  இண்டியன் கம்யூனிட்டிகளையும் , இலங்கைத் தமிழர்களையும் கூப்பிட்டிருந்தோம் நானும் கோபாலும். ஒரு பள்ளிக்கூட ஹாலில் மீட்டிங்.  நிறையப்பேர் வந்துருந்தாங்க. கோவில் வரணும் என்பதில் யாருக்கும்  மாற்றுக் கருத்து இல்லை.  எந்த சாமின்னதுக்கு  முதலில் புள்ளையார், பெருமாள் ,சிவன். அப்புறம்  ஒவ்வொரு சாமிகளா சேர்த்துக்கிட்டால் ஆச்சுன்னேன். ஆனால் என்ன மொழியில் பூஜைகள் நடக்குமுன்னு  அப்பவே ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொருத்தரும் தங்கள் மொழியே இருக்கணுமுன்னு ஆரம்பிச்சு பெரிய சண்டையாக உருமாறும் சமயம், இதெல்லாம்  உனக்குத் தேவைதானான்னு எங்க  மண்டையில் நாங்களே  குட்டிக்கிட்டு,  ஒரு மாதிரி மீட்டிங்கை முடிச்சு வைச்சோம்:(   அதுக்கப்புறம் இந்த எண்ணம் கிடப்பில் போடப்பட்டது. சாமிக்கு லக் இல்லை. அதுக்கு நானென்ன பண்ணுவது?

இப்ப இந்தக் கோவிலைப் பார்த்ததும்  மீண்டும் துளிர்விடும் ஆசைதான்.  ராம்ஸ் கிட்டே செலவு விவரம் கேட்டதும்,  யார் தயவும் வேணாம். பேசாம நாமே ஆரம்பிச்சுடலாமான்னு  தோணுச்சு.  ஆரம்பிக்கறது பெரிய விஷயமில்லை.  ஆனால் தினப்படி பூஜைகள் முடங்காமல் நடக்க நம்மாட்கள் உதவி வேணுமா இல்லையா?

முதல்லே இடம் ஒன்னு பார்க்கணும்.  முந்தியெல்லாம் இருந்த விலை, நிலநடுக்கம் ஆனபின் தாறுமாறா எகிறிக்கிடக்கு. அதுவும் ஊருக்குள் இனி இடமே இல்லை:( கொஞ்சம் வெளியே தள்ளிக்கட்டலாம். ஊரில் பாதி, இனி வீடு கட்ட லாயக்கில்லாத பூமியாப் போயிருச்சுன்னு  சிட்டி லிமிட்டுக்குச் சுத்துப்புறமெல்லாம் புதுசு புதுசா ஸப்டிவிஷன் வரத்தொடங்கி வீடுகள் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் ரெஸிடன்ஷியல் ஏரியா. அங்கே கோவில்....  ஊஹூம்... சரிப்படாது. பார்க்கிங் வசதிக்கே ஏராளமான இடம் வேணும் முதலில்.

உக்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது! யோசிக்கலாம்........
ராம்ஸின் மனைவி, வாங்க  எங்க வீட்டுக்குக் கூட்டிப்போறோம் சாப்பிடன்னாங்க.  அடடா.... மன்னிக்கணும். இன்றைக்கு  சுரேஷ் வீட்டுலே சாப்பாடு. அதுக்காக  கிடைத்த அழைப்பை மறுக்க முடியுமா? இல்லே அவுங்களும்தான்  விருந்தோம்பலை மறந்துருவாங்களா?  அப்ப  நாளைக்கு.....   அடடா....  நாளைக்கு வேற ஒரு ப்ரோக்ராம் வச்சுக்கிட்டோமே....  ஓக்கே. திங்கக்கிழமை வர்றீங்க!  அன்றைக்கு வேலை நாள் இல்லையோ?  என்னங்க இப்படி? லாங் வீகெண்ட் மறந்து போச்சா?  அடடே.... லஞ்சுக்கு வந்துடறோமுன்னு  வாக்குக் கொடுத்தேன்:-)

எங்களைக் கோவிலில் கொண்டு வந்து விட்டுட்டு  கிவியனின் தங்க்ஸ்  வீட்டுக்குத் திரும்பிப் போயிருந்தாங்க. எதாவது ஆகாதுன்னு இருக்கா என்ற கேள்விக்கு  'வெஜிடேரியன் இருந்தாப் போதும் 'என்றார் கோபால்:-)))))
அதுக்குள்ளே  'அக்கா' வந்துட்டாங்க. சாமி நமஸ்காரம் ஆனதும் கிளம்பலாமான்னு  கேட்ட  கிவியன்,  இன்றைக்குப் பூஜை முடிய  ஒன்பது மணி ஆகிடும் என்றார். அம்மா, பொதுவா பூஜை முடியும் வரை இருப்பாங்கதான்.  ஆனால் இன்றைக்கு ஸ்பெஷல் டே!  பவுர்ணமி மாசாமாசம் வரும்.  ஆனால்.... துளசி? சரின்னு அவுங்களும் கிளம்பிட்டாங்க.

எதுக்கு இப்படி  ஷெட் முகப்பு?  கோபுரம் ஒன்னு இருந்தால்  எவ்ளோஅழகா இருக்கும் என்று கேட்டதற்கு,  கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் என்பதாலென்றார் ராம்ஸ்.  லோ கீ.....  நியாயம்தான்.  கோபுரத்திலும் முகப்பு வாசலிலும் க்ராஃபிட்டி போட்டு வச்சுட்டுப் போனால் நமக்குத்தானே கஷ்டமும் நஷ்டமும், இல்லையோ?

சின்னச்சின்ன காம்ப்ரமைஸ்  பண்ணிக்கத்தானே வேணும்.  அம்மாவை வீட்டில் விட்டுட்டு நாங்க கிவியன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். அஞ்சே நிமிசத்தில்  சமையல் ரெடின்னுட்டாங்க  அவர் தங்க்ஸ்.

ப்ரொக்கொல்லி  ஃப்ரை, மிக்ஸட் வெஜி குருமா(மாதிரி), (எங்கூரில் விலை மதிப்பு அதிகமுள்ள )கத்தரிக்காய் வத்தக்குழம்பு ,ரஸம், பப்படம், தயிர்,  ஊறுகாய் , சாதம் இப்படி அந்தக் குறைஞ்ச நேரத்துலே ஜமாய்ச்சுட்டாங்க! ஒரு பிடி பிடிச்சோம்.  டிஸ்ஸர்ட்டுக்கு கேஸரி மாதிரி  ஒன்னு!

உடல்கள் வேறு, உள்ளம் ஒன்று என்பதைப்போல்  ஒரே பேச்சு, எங்களுக்கு:-)

கொஞ்சநேர அரட்டைக்குப் பின் எங்களை ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து விட்டாங்க.  அவ்வளவா ட்ராஃபிக் இல்லை. 20 நிமிட் தான் ஆச்சு. மறுநாளைக்கு நாங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வோமோன்னு  அவுங்களுக்கு ஒரே கவலை.

"ஈஸ்ட்டர் என்பதால் கடைகள் ஒன்னும் இருக்காது. பகல் சாப்பாட்டுக்கு வந்துருங்க."

" என்னங்க இது?  எதாவது கிடைக்காமலா போயிரும் நோ ஒர்ரீஸ்.  "

"அப்ப இட்லி பண்ணிக்  கொடுத்தனுப்பவா?"

 "சரியாப்போச்சு.  கவலையை விடுங்க. நாங்க சமாளிச்சுப்போம். மணி பத்தாகுது. பத்திரமாத் திரும்பிப் போங்க"

கவலையோடுதான் அவுங்களை அனுப்ப வேண்டியதாப் போயிருச்சு. நமக்கும் நாளை ரொம்ப பிஸியான நாள்தான்.

படுக்கையில் விழுந்தோம்.  வாட் அ லாங் டே இட் வாஸ்!!!!

தொடரும்...........:-)

14 comments:

said...

அம்சமான பளிச் பளிச் படங்கள்... என்னா சுத்தம்...!

said...

உங்களுக்கென்ன, 32 Mbps ஸ்பீடு, புகுந்து விளையாடறீங்க, எங்களுக்கு 512 Kbps ஸ்பீடுல உங்க பதிவு டவுன்லோடு ஆகறதுக்கே ஐஞ்சு நிமிஷம் ஆகிப்போகுது. அத்தனை படங்கள். அதுவும் ஹை-டென்சிடி படங்கள். ஆனா, படங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்குது.

said...

துளசிமா. கோவில் அற்புதம். கிவியன் வீட்டு உபசாரமும்,சாப்பாடும் பிரமாதம். நூசியில் அன்புக்குக் குறைவே இல்லை. ஸ்ரீலங்கன் தமிழ்க் கோவில்களின் அழகே அழகு. வெகு பாந்தம். லண்டனில் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோவிலுக்குப் போகும்போது இதே போலத்தான் இருந்தது. நவக்கிரகங்கள் வெகு அற்புதம்பா. எல்லாம் பளிச் பளிச். மனம் நிறையப் பெருமாளைப் பார்த்தாச்சு.

said...

குன்று தோறாடும் குமரன் உங்க ஊர்க் குன்றையும் விடல போல. :)

பைபர் சிற்பங்கள் நல்லதுதான். இன்னைக்கு எங்க எப்ப நிலநடுக்கம் வருதுன்னு சொல்ல முடியுறதில்ல. அதுனால எடையில்லா பைபர் சிற்பங்கள் பொருத்தம் தான்.

நெதர்லாந்துல இதே மாதிரி ஒரு ஊர்ல முருகன் கோயில் இருக்கு. ஊர் பேர் மறந்துட்டேன். ஒருவாட்டி போயிருக்கேன்.ரோர்மாண்ட். ஊர் பேர் நினைவுக்கு வந்துருச்சு. அங்கயும் இதே மாதிரி ஷெட்டுக்குள்ளதான் கோயில்.

எல்லாரும் பூஜையைப் பகிர்ந்துக்கிறாங்கன்னு சொல்றது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆண்டவனுக்கு முன்னால் எல்லாரும் சமம். இந்த நிலை இந்தியாவுக்கு வந்தே ஆகனும். ஆனா வரவிட மாட்டாங்க. திருத்தணி கோயில்ல தட்சணையப் போட்டாத்தான் திருநீறே கைல விழுது. தட்சணை போடாட்டி தட்சணை தட்சணைன்னு சொல்லிக் காட்டுறாங்க. ஒரு ஐநூறோ ஆயிரமோ எடுத்துவிட்டா கருவறைல முருகன் பக்கத்துலயே மரியாதை. முருகன் பாத்துக்கிட்டு சும்மாதான் இருக்கான். மத்தக் கோயில்கள்ளயும் இப்படித்தான். ஸ்ரீரங்கத்துல கண்கூடாப் பாத்தானே.

பக்தி பத்துச்சா பத்தலையான்னு கவலையே படாதீங்க. ஒருநாளைக்கு ரெண்டு வாட்டி கடவுளை நெனைச்ச குடியானவன் கதை ஒங்களுக்குத் தெரியுந்தானே. :)

said...

சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்

said...

அன்னியர்கள் அயல் நாடுகளில் கல்விக் கூடங்கள் அமைப்பார்கள். இந்தியர்கள் கோவில்கட்டுவார்கள் என்று சொன்னதுயாரோ? ஒரு புகைப் படத்தில் என்னைப் போலொருவர் ?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சுத்தம் = கடவுள். என்பது சரிதானே!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அடடா.... அஞ்சு நிமிசம் ஆகுதா?

நான் பெற்ற இன்பம் வகை என்பதால் படங்கள் அதிகமாப்போயிருது.

ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ்களுக்காக எழுதுவது:-)

said...

வாங்க வல்லி.

கோவில் ரொம்ப அழகா இருக்குப்பா. எனக்குத்தான் இப்படி ஒன்னு நம்மூரில் இல்லையேன்னு மனசு தவிக்குது:(

பளிங்கு சிலைகளைவிட விக்கிரகங்களா இருந்தால் கூட நம்ம ஸ்டைல் தனி அழகுதான் இல்லெ?

said...

வாங்க ஜிரா.

ஷெட்டுக்குள் போனதும், மாயாஜாலம்தான்!

நம்மூர்களில் காசுக்கு இருக்கும் மதிப்பு மனுஷனுக்கு இல்லையே:(

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

என்ன இல்லையோ அதைத்தானே அமைச்சுக்கணும்!

உங்களைப் போலுள்ளவர் கிவியனின் அப்பா. துளசிதளத்தின் வாசகர்.

said...

புகைப்படங்கள் எல்லாமே மிக அழகு! முக்கியமாய் அந்த யாளி போன்ற கலை வேலைப்பாடு மிக அழகு!

said...

கோயிலின் சுத்தம் மனத்தைக் கவருகிறது. பொதுவாக கேரளா கோவில்கள் சுத்தமாக இருக்கும். புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. பூஜையைப் பங்குபோட்டுக் கொண்டு செய்வது நல்ல யோசனை. ஆண்டவன் சந்நிதியில் எல்லோரும் சமம் என்பதை சொல் அளவில் மட்டுமே கடைப்பிடிக்கிறோம். வருத்தப்பட வேண்டிய விஷயம்.