Wednesday, May 27, 2015

பதிவர் குடும்பத்துடன் ஒரு மணி நேரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 53)


திருப்பூர் என்றதும் உங்களுக்கெல்லாம் சட்னு என்ன நினைவுக்கு வருது?  எனக்கு ஒரு காலத்தில் பனியன் என்றுதான் வரும். கடந்த அஞ்சாறு  ஆண்டுகளா நம்ம ஜோதிஜி  வர்றார்!  பெயர் வச்சுக்கறதிலேயே   ஒரு திறமை இருக்கு பாருங்க!  'ஜி' என்பதை  பற்றி ஒரு சினிமாவில் (ஹிந்திப்படம். Bollywood Calling என்று நினைவு) வசனம் ஒன்னு வரும்.  அந்த 'ஜி'யை நாம் சம்பாரிக்கணும் என்பார்  ஹீரோ!  அவ்ளோ மரியாதை கொடுக்கக்கூடிய கனம் வாய்ந்த  சொல்லாம்  'Ji' !  ஹாஞ்ஜி ஹாஞ்ஜி!

நம்ம ஜோதிகணேசனுக்கு  இயல்பாகவே அது அமைஞ்சு போச்சு.  அந்த மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளும் பண்பும் இயல்பாகவே வாய்த்திருக்கு அவருக்கு! பதிவுலகில் அவர் கால் வச்சது  மே மாசம் 2009 இல்.  சரியா இப்போ ஆறு வருசம்(தான்) ஆகி இருக்கு!  எடுத்து வச்ச கால் இப்ப பதிஞ்சு தடம் ஆகிப்போய்   டாலர் நகரம் என்ற புத்தகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பட்ட எழுத்தாளராக இருக்கார்!  இது தவிர ஏழு மின்னூல்கள்!கோபாலின்  கல்யாணத்துக்கு(!) 2012 செப்டம்பர்  நேரில் வந்து வாழ்த்தியபோதுதான் அவரை நேரில் முதல்முதலாக சந்திச்சோமே தவிர  அவருடைய எழுத்துகளாலும், தனிமடல்களாலும் பலவருசப் பழக்கம் எனக்குண்டு.  வலை உலக டீச்சர் மாணவர் என்றதைக் கடந்து  பதிவர் குடும்ப உறவில் அக்கா, தம்பி என்ற  ஒன்றும் உருவாகி இருந்தது என் மனதில். நம்ம   உ பி ச:-)

தம்பி வீட்டுக்குப்போகும் குஷியை விட பிள்ளைகளையும்  தம்பியின் தங்க்ஸையும் பார்க்கும் ஆர்வமே அதிகமா இருந்துச்சுன்னு  சொன்னா.... நீங்க நம்பணும். அன்றைக்கு சனிக்கிழமையா வேற  இருந்ததால்.... நிதானமா சந்திச்சுப் பேசலாமேன்னு எண்ணம்.

மரத்தடியில் நின்னவர்கள் பக்கத்தில்  ஒரு கார் வந்து  நின்னதும்  இறங்கி ஓடி வந்த  ஜோதிஜியின் முகத்தில்  மகிழ்ச்சி . அவர் முன்னால் போக அவருடைய காரை நாங்கள் பின் தொடர்ந்தோம். இப்ப கேட்டீங்கன்னா... என்னால் வழி சொல்லமுடியாது:-)

வீட்டு வாசலில்  இறங்கி உள்ளே போனதும்  என் தம்பிமனைவி  ஓடிவந்து வரவேற்றார்கள். என் கண்கள் பிள்ளைகளைத் தேடுச்சு.  பள்ளிக்கூடம் போயிருக்காங்களாம்.  சனிக்கிழமை கூடவா?  கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்துச்சு. பிள்ளைங்க படத்தை  க்ளிக்கிக்கிட்டேன்.

ஒருமணி நேரம் போனதே தெரியலை.  இடையில் பலமுறை என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்கார். தங்க்ஸ் உள்ளே போய்  பகோடா செய்யறேன்னு ஆரம்பிச்சாங்க. எனக்கு  மனம் நிறைஞ்சு இருந்ததால் பசி ஒன்னும் இல்லை.  இப்பெல்லாம் அதிகமா டீ, காபி குடிப்பதையும் நிறுத்தியாச்சு. பயணங்களில்  காலை  ப்ரேக்ஃபாஸ்ட்டில்  ஒரு காஃபி/டீ மட்டுமே  என்றாலும்  தம்பியின் தங்ஸ் மனம் நோகவேண்டாமேன்னு  அவர்கள் அன்போடு கொடுத்த  ஏலக்காய் டீயைக் குடிச்சுட்டுக் கிளம்பினோம். பகல் இருந்து சாப்பிட்டுவிட்டுப்போகணும் என்று உபசரிச்சாலும்,  எனக்கு ஏற்கெனவே ரங்கனின்  அழைப்பு இருக்கே....

வாசல்வரை தம்பதிகள் வந்து  வழி அனுப்பினாங்க. கேட்ட கேள்விக்கு  பதில் என்றதைத் தவிர  தம்பி மனைவி அதிகமா ஒரு வார்த்தை பேசலை.  டீச்சரென்ற பயமோ:-)))))   ஊஹூம்... இருக்காது.  முகம் முழுக்க மலர்ச்சி இருந்துச்சே!

திரும்பி வரும்போதுதான்  நொய்யல் ஆற்றின் அவல நிலை கண்ணில் பட்டது.  தமிழ் தினசரிகளில் பலமுறை  செய்திகளைப் பார்த்திருந்தாலும்.....  இவ்ளோஅழுக்கா ஒரு ஆறு இருக்குமுன்னே என்னால்  நினைச்சும் பார்க்கமுடியலை:(  வெள்ளியங்கரி மலையில் உற்பத்தியாகிப் பெருகிவரும் இந்த நொய்யலை முழுக்கமுழுக்க அசிங்கப்படுத்தியது இந்த திருப்பூர்தான்:(


ஏகப்பட்ட சாயப்பட்டறைகள்,  பின்னலாடை உற்பத்தியில் முதலிடம் எல்லாம் சேர்ந்து  வந்தோரை வாழவைக்கும் நகரம், உள்ளூர் ஆற்றை நரகமா  ஆக்கி வச்சுருக்கே:-(  நோய்களின் பிறப்பிடமா இருக்கும்தானே?  இல்லை... மக்களெல்லாம்  இம்யூன்   ஆகி  பலமா இருக்காங்களா?நொய்யல் மனசை நோக வச்சது உண்மை! கூவத்துக்குத் தங்கை!  விடிவு காலம் எப்போ?

எல்லா அநியாயத்துக்கும் இந்த ஓணானே சாட்சி!

சர்ச் இருக்குமிடம் சுத்தம் கொஞ்சம் பரவாயில்லை.  இப்படியே ஊர் முழுக்க இருக்கப்டாதா?


கங்கயம் வழி கரூர் வந்து சேர்ந்தோம்.  அவதார ஸ்தலம்.  பகல் ஒன்னரை ஆகி இருந்துச்சு.  வெறும் 90 கிமீ தூரத்தைக் கடக்க ரெண்டு மணி நேரம். மாரியம்மன்  கோவில் இந்நேரம் மூடித்தான் கிடக்கும் என்பதால்  ஊருக்குள் போகலை.  ஒரு காலத்துலே ஆட்டம் போட்டுருக்கேன் இங்கே!

அதுவும் சித்திரை மாசத் திருவிழா சமயங்களில்....... கூட்டம்கூட்டமாத்  தீச்சட்டி எடுக்கும்  பக்தர்களை இங்கெ பார்க்கமுடியும். என்னதான் வேப்பிலைக்கொத்தை  சட்டிக்கு அடியில் வச்சாலும் கை பொள்ளாமலா இருக்கும்!

கொட்டு மேளத்தோட அக்கினிச் சட்டி ஊர்வலம் வரும்போது, அவுங்க காலுக்கு ஊத்தறதுக்காக அரைச்ச மஞ்சள் கலக்கின தண்ணி அண்டா அண்டாவா வச்சிருப்போம்!

கோயிலுக்கு உள்ளே நிறைய புது மண் சட்டிங்களை அடுக்கி வச்சிருப்பாங்க. அந்தச் சட்டிங்களிலே, வாய்க்குக் கொஞ்சம் கீழே சின்னச் சின்னதா முக்கோண வடிவுலே ஓட்டைங்க . குட்டிக் குட்டி ஜன்னல்போல இருக்கும் .அதன் மேலும் கீழும் காவியாலும், சுண்ணாம்பாலும் கோலம் போட்டிருக்கும். பார்க்க ரொம்பவெ அழகாக இருக்கும்.அந்த ஓட்டைங்க வழியாகப் போற காத்து, அதில் உள்ள தீ அணைஞ்சிராமல் எரிய உதவுமாம்! ஒரு சின்ன விஷயத்தையும் விடாமல் வடிவமைச்சிருக்காங்க பாத்தீங்களா?

கோயிலுக்கு உள்ளே இந்தச் சட்டிகளுக்கு அருகிலெ, இன்னொரு சுவாரசியமான பொருள் குவிச்சு வச்சிருப்பாங்க! அது மண்ணால் செஞ்ச பொம்மைங்க! பலவிதமான உருவத்துலே பொம்மைங்க இருக்கும். தலையிலிருந்து,தொடைவரை உள்ள ரூபம்தான்.தலையில் மேலெ மண் மூடாம சின்னதா திறந்திருக்கும். அடிப்பக்கமும் திறந்தே இருக்கும். போலீஸ், கள்ளன், பொண்ணு, பையன், சாமியார், கிழவன், கிழவின்னு பல தினுசா இருக்கும். இதெல்லாம் என்ன?

பொங்கப் பானைக்கு பக்கத்திலே, மாவிளக்குத் தட்டுலே, அம்மனுக்குப் படையல் வைக்கற இடத்துலென்னு பல இடங்களில் இதைவச்சு, தலைமேலெ இருக்கற ஓட்டையிலெ வேப்பிலையை சொருகி வைக்கற 'ஸ்டாண்டு!' 

திருவிழா சமயத்துலெ எல்லா வேப்பமரமும் மொட்டையா நிக்கும். ஆளுங்கதான் எல்லாக் கொப்புங்களையும் உடைச்சு, கோயில் உள்ளெ போட்டு வச்சிருவாங்கல்லே!

என் கொசுவத்தி பத்திக்கிட்டுப் புகைய ஆரம்பிச்சது.  


ஆமாம்... உங்களுக்குத் தெரியுமோ....   ஒரு குழுமத்தில் இப்படிப்போட்டுருந்ததை வாசிச்சதும் மனசு ஜிவ்ன்னு பறந்தது உண்மை!  சங்க இலக்கியமும், சங்ககாலக் கல்வெட்டுகளும், தொல்லியலும் இன்றைய கொங்குக் கரூர் தான் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என நிரூபித்துவிட்டன.பார்க்கக் கொஞ்சம் நீட்டா இருந்த ஹொட்டேல் என் டி எஸ் பேலஸில் இருக்கும் பச்சைமிளகாய் ரெஸ்ட்டாரண்டில் பகல் உணவு.  சோறு, பருப்பு, லஸ்ஸி.  கோபாலுக்கு மட்டும் ஒரு கறி வாங்குனதா நினைவு. நாட் பேட்!


கூடுமான வரையில்  நம்ம சீனிவாசன் மட்டும் தப்பிச்சுக்கறார்! 

ரெண்டு மணிக்குக் கிளம்பி மூணே காலுக்கு  திருச்சி மாநகருக்குள் நுழைஞ்சு  வழக்கமாத் தங்கும் சங்கம் போய்ச் சேர்ந்தோம். வழியில் காவேரி!  நடந்தாய் வாழி காவேரி என்று பாடியதை மெய்ப்பிக்கும் வகையில்  நதி நடந்து  போய்க்கிட்டு இருக்கு.  நாமும்  தாராளமா நடந்தே குறுக்கே போகலாம்.  முழங்கால் தண்ணீர் இருந்தால்  உங்க நல் ஊழ்!  வரிசையா மணற்கொள்ளையர்களின்  வண்டிகள்  கண்போகும் பாதையில் எல்லாம்....மாடியில்  இருக்கும் அறைக்குப் போறோம். அங்கே வெள்ளையும் சள்ளையுமா உடுத்திக்கிட்டுப் பெருங்கூட்டம். அதுக்குள் நீந்தித்தான் போகணும். நம்ம பக்கத்து அறையில் ஒரு அரசியல் வியாதி  தங்கி இருக்கார். அவரோட  காலாட்படைதான் வெளியில் குமிஞ்சிருக்குன்னு அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.  உள்ளூர் கல்யாணத்துக்கு வந்துருக்காராம்.  ஊர் முழுக்க  வரவை முரசு கொட்டி அறிவிச்சு இருக்காங்க  ஃப்ளெக்ஸ் மூலம்!

கொஞ்சநேர ஓய்வுக்குப்பின்  இதோ  ரங்கனைப் பார்க்கக் கிளம்பியாச்சு.  அது பாருங்க எப்ப இங்கே வந்தாலும்  ரங்கனைச்சுற்றி இருக்கும் மற்ற திவ்யதேசங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ரங்கனே கதின்னு  இருந்துடறேன்.  இந்தமுறையாவது  திருச்சியைச் சுற்றி இருக்கும் மற்ற ஆறையும்  தரிசித்தே ஆகணுமுன்னு ஒரு தீர்மானம்  எடுத்தாச்சு.   இரண்டு நாட்கள் இங்கே தங்கப்போறோம் என்பதால்  ரங்கனுக்குப் பிற்பகலையும்,  மற்றவர்களுக்கு  முற்பகல்களையும்  கொடுக்கலாம்.

போற வழியில் இருக்கும் கோழியூருக்கு  முன்னுரிமை கொடுத்தேன்.

தொடரும்............:-)
24 comments:

said...

Good journey.

said...

ஆஹா..! பதிவுலக ஜாம்பவான்களின் சந்திப்பு அருமை. நொய்யல் ஆறு மரணித்துப் போன ஒரு நதி என்றுதான் இயற்கை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு நாம் இயற்கையை இழந்திருக்கிறோம்.

திருப்பூரில் இருக்கும் என் நண்பர் ஒருவர் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. அமெரிக்ககாரனோ ஜெர்மன்காரனோ 100 கோடி 200 கோடி முதலீடு போட்டு இந்த கம்பெனிகளை ஆரம்பிக்க முடியாமல் இல்லை. அந்த அரசுகள் அவர்கள் நிலவளத்தை பாதுகாப்பதற்காக இப்படிப்பட்ட நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தியாவில்தான் அரசியல்வியாதிகள் (நன்றி துளசியம்மா) இருக்கிறார்களே. பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதே பணத்தை கொடுத்து சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுத்து இன்னமும் நிலத்தை சீரழிக்கிறார்கள் தொழிலதிபர்கள். இந்தியா மாற நிறைய பேரின் பணம் பண்ணும் வெறி மாற வேண்டும். அப்போதுதான் மண்ணின் வளம் காப்பற்றப் படும்.

வழக்கம் போல் பயணம் இனிமையாக இருந்தது.

said...

நொய்யல் எப்போதோ நொந்து போய் விட்டது...

இன்றைய தினத்தந்தி இதழில் "டாலர் நகரம்" புத்தக விமர்சனம் வந்திருந்தது...

அண்ணன் 'ஜி'க்கு வாழ்த்துகள்...

said...


திருப்பூர் ஜோதிஜி யின் பெயர் ஜோதி கணேசன் என்று தெரிய வந்தது. நொய்யல் ஆறு மனதை நோகடிக்கிறது.

said...

அருமையான சந்திப்பு. ஜோதி ஜி அருமையான மனிதர்.
திருப்பூர் உடைகளைக் கொடுத்துவிட்டு
குளிக்க வேண்டாம் ,குடிக்க வேண்டாம் என்று சொல்லுகிறதோ என்னவோ.

said...

ஜோதிஜியின் படத்தைப் பார்த்தவுடனே வந்துவிட்டேன். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திச்சுட்டீங்க! பாராட்டுக்கள்!

தீச்சட்டி பற்றிய விளக்கமான விவரங்கள் அருமை. உங்களுடன் கூடவே கோழியூர் வர தயாராக இருக்கிறேன்.

said...

நான் கரூர் தான். சின்ன வயசில் அங்கு இருந்தீங்களா ?

said...

எழுத்துலகில் கிடைத்த அங்கீகாரத்தில் உங்கள் வருகையும் தொடர்ச்சியான வாழ்த்துகளும் எனக்கு முக்கியமானது. என்றும் மறக்க முடியாதது. இருவருக்கும் நன்றி.

said...

Super ! Kovai vandhaa avasiyam FBla msg podunga ! Noyyal photographs super !

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

கருத்துக்கு நன்றி!

said...

வாங்க செந்தில் குமார்.

வெறும் பனியன் மட்டும் வெள்ளையில் தயாரிப்பு நடந்தபோது இவ்வளவு அழிவு இல்லை. மற்ற நாட்டுக்காரர் கலர்கலரா உடுத்தணுமுன்னு எப்ப ஆசைப்பட்டாங்களோ அப்போ பிடிச்சது சனியன்.

சட்டத்தை ஏய்க்கவும், அதன் வாயை மூடவும்தான் பணம் இருக்கே:-(

ஆற்றைக்கொன்னு போட்ட பழி பாவம் பத்துத் தலைமுறைக்கு இருக்கு இப்போ! நொய்யல் இப்படி ஆனதும் அக்கம்பக்கத்து ஊர்களுக்குப்போய் சாயம் போட ஆரம்பிச்சுருக்காங்க. தெள்ளத்தெளிஞ்ச நீர் ஓடும் போடிநாயகனூர் (கோபாலின் ஊர்) ஆறு இப்போ அழிவை நோக்கி:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஜி யின் புகழ் திக்கெட்டும் தீ போல பரவுதே!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நல்லாவே பெயர் அமைஞ்சுபோச்சு அவருக்கு! அவருடைய பெற்றோரின் தீர்க்க தரிசனம்!!!

நொய்யல் பார்த்த கண்கள் நொந்துதான் போச்சு:(

said...

வாங்கவல்லி.

திருப்பூர் மட்டுமா? ஜோதிஜி கூட ஒரு பெரிய துணி மூட்டையைக் காமிச்சு மகளுக்கு வேண்டியதை எடுத்துக்குங்கன்னார். டிஸைனர் அவுட்ஃபிட்! நமக்குத்தான் மகளைப்பற்றி நல்லாவே தெரியுமே! அதனால் மறுக்க வேண்டியதாப்போச்சு. (அன்போடுதான்!)

said...

வாங்க ரஞ்ஜனி.

பெண் சிங்கத்தையும் பார்த்தேனே! சிங்கக்குட்டிகள்தான் ஜஸ்ட் மிஸ்டு:(

கோழி பாருங்கப்பா.... நம்ம யானையையே எதிர்த்து நின்னுருக்கு! அதுவும் பட்டத்து யானையை!!!!

said...

வாங்க அதியமான்.

ஜனனம் மட்டும் அங்கே! அப்புறம் 11 வயதுவரை விடுமுறையில் வர, போகன்னுதான்.

அப்புறம்........ இதோ... இந்தப் பயணத்தில் எட்டிப்பார்த்தேன். அதுவும் வெளியில் இருந்துதான்:(

said...

வாங்க ஜோதிஜி.

எழுத்துலகில் உங்க பயணம் மடமடன்னு மேலே ஏறியது வியப்புதான். அதுக்கேத்த உழைப்பு அதன் பின்னணியில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது!

இனிய பாராட்டுகள்!

said...

வாங்க ஓசை செல்லா.

கோவையில் ஜஸ்ட் ஒரு நாள்தான் தங்கினோம். எனக்கு நம்ம காசியை சந்திக்கணும் என்ற ஆவலும் இருந்தது. சரியான திட்டமிடல் இல்லாததால்..... நடக்கலை. அடுத்தமுறை அந்தப்பக்கம் வரும்போது கட்டாயம் சொல்வேன்.

நானாநானியில் தங்கிப் பார்க்கணுமே:-))))

நொய்யல் ஒரு ஸ்பாட்லே எடுத்தவையே! இன்னும் கரை ஓரம் கொஞ்சதூரம் போயிருந்தால் ஹார்ட் அட்டாக் வந்துருக்கலாம்:(

said...

கை பொள்ளாமலா - இப்போத்தான் இந்தப் பிரயோகத்தைப் பார்க்கிறேன். இது எந்தப் பகுதித் தமிழ் (கொங்கு, மதுரை போன்று)

இப்போல்லாம் தென்பகுதியில் ஆறுகளைப் பார்க்க மனது பொறுக்குதில்லை. யாரோ வெளியில் உள்ளவர் வந்து இதைச் சரி செய்வார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களது சொத்தை மற்றவர்கள் களவாட எப்படித்தான் விடுகின்றனரோ.

ஸ்ரீரங்கத்தில் ஒருதடவை டெம்பிள் டவரில் தங்கிப் பாருங்களேன். அங்க உணவு நன்றாக இருக்கிறது.

said...

ஜோதிஜி சிர்ப்போடு அழகாக போய்விடும் என்று பார்த்தால் “நொய்யல்” அதை குறைத்துவிட்டது. பரவாயில்லை அந்த கட்டிட வேலையில் சுற்றி நெட் கட்டி கொஞ்சம் பாதுகாப்பை கடைபிடிக்கிறார்கள் என்பது சந்தோஷத்தை வரவழைத்தது.

said...

பயணம் அருமை
படங்கள் அசத்தல்..
வாழ்த்துக்கள் தொடர்க.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இந்தக் கைபொள்ளி மலையாளமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அதென்னமோ தெலுகை விட எனக்கு வாயைத் திறந்தாலே மலையாளம் அதிகமா பேச்சில் வந்துருது.

நம்மதுன்னு ஒரு எண்ணமிருந்தால்தானே? நாலு சுவத்துக்குள் இருப்பது மட்டுமே நம்மது என்ற எண்ணம் ஊறிப்போய்க்கிடக்கு. பொது சொத்து எவ்ளோ வேணுமானாலும் நாசமாகிப் போகட்டுமே என்ற மனப்பக்கும் அடைஞ்சாச்சு மக்கள்ஸ்:-(

ஸ்ரீரங்கத்தில் இன்னொரு இடம் பார்த்து வச்சுருக்கேன். அடுத்தமுறை அங்கேதான்! நீங்க சொன்ன டெம்பிள் டவரையும் போய்ப் பார்க்கணும்தான். நன்றி.

said...

வாங்க குமார்.

கட்டிடமுன்னதும், இங்கே உள்ளூரில் ஒருகட்டிடம் கட்டி முடிச்ச விவரம் உங்களுக்குச் சொல்லலாமுன்னு எல்லாத்தகவல்களும் எடுத்து வச்சுருக்கேன். எழுத சரியான நேரம் அமையலை பாருங்க:(

said...

வாங்க மது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.