Wednesday, June 26, 2013

யப்பா... என்னெவிட்டுப் போகாதேப்பா........... (பாலி பயணத்தொடர் 6 )

கோபாலின் காலைக் கட்டிப்புடிச்சுக்கிட்ட சின்னது  இப்படித்தான் நினைச்சு இருக்கும்!


அதுக்குள்ளே இன்னொன்னு ஓடி வந்து  எனக்கு என்னாப்பா வாங்கியாந்தேன்னு  ஷார்ட்ஸ் பாக்கெட்டைக் குடையுது:-)


ஒன்னும் இல்லை செல்லங்களான்னு கையை விரிச்சுக் காமிக்கிறார் இவர்.

இது எதையுமே எதிர்பாராத நான்  கேமெராவைக் கிளிக்கவும் விநாடி நேரம்  மறந்து போனேன் என்பதே உண்மை.


கூடவே வந்த கைடு மேடி (இங்கேயும் மேடிதான்!) அங்கெ பாருன்னு  கண் உயர்த்திக் காமிச்சதும் அதிசயமாத்தான் போச்சு.  தலைக்குமேல் ஒன்னு !

அப்புறம் அது தோளில் இறங்கி நிக்குது.  சடார்னு க்ளிக்கிட்டேன். (வீடு திரும்பி,  மகளிடம் காமிச்சபோதுதான்  'பாப்பா இருக்கு' என்று  சொன்னாள்.)

கணினியில் படங்களை லோடு செஞ்சு பெருசாக்கிப் பார்த்தால் முத்துப்போல் கண்  முழிச்சுப் பார்க்குது பேபி!!!!


என்னைவிட்டு ஓடிப்போகமுடியுமா  நாம் இருவரல்ல மூவர் என்று தெரியுமா?

டனாலாட்டிலிருந்து  Alas Kedaton  என்ற இடத்துக்குப் போயிருக்கோம். இதையும் தேடிபார்த்து வச்சுக்கிட்டுச் சொன்னவர்  நம்ம கோபால்தான். வெறும்18 கிமீ பயணதூரம்.  அவ்வளவாக் கூட்டமில்லாத சாலை. காமணியில் வந்து சேர்ந்துருந்தோம்.

நுழைவுக் கட்டணம் இங்கே ஆளுக்குப் பதினைஞ்சாயிரம் ரூபாய். பார்க்கிங் சார்ஜ்  இல்லை.

இங்கே பாலியில்  நுழைவுக் கட்டணம் செலுத்த தனிக் கட்டிடத்தில்  கவுண்ட்டர்கள்  முகப்பிலேயே வச்சுருக்காங்க.  அதை வாங்கிக்கிட்டுக் கொஞ்சதூரம் போனதும்தான் டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கும்  இடம் வருது.

இது   ரொம்பவே ' ஸ்நேகமுள்ள  குரங்கன்'மாரின் காடு.  Friendly Monkey Forest .  மொத்தம்  கிட்டத்தட்ட  முப்பது ஏக்கர்கள். நுழைவு வாசலில்  டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கும்போதே  நமக்கான ஒரு  கைடும்  கிடைக்கறாங்க. கையில் ஒரு நீளமான குச்சி. சும்மா ஒரு இதுக்குத்தானாம். கோலெடுத்தால் குரங்கு ஆடாதோ?

வாசலைக் கடந்து போகும் பாதையின் ரெண்டு பக்கமும் சின்னச்சின்ன கடைகள்.  கடைகளின் வெராந்தாவில்   நண்பர்களின்  நடமாட்டம். நமக்கு அவ்வளவா பரிச்சயமில்லாத முகங்கள். இவுங்கெல்லாம் macaque வகையினர்.

நொறுக்குத்தீனி வாங்கிப்போடுவீங்களான்னு  மேடி கேட்டதுக்கு  இருபதினாயிரம் எடுத்துக்கொடுத்தார் கோபால். ஆனால்.... அவுங்க ரெண்டேரெண்டு சின்னப்பொதி வெறும் நாலாயிரத்துக்கு வாங்கி வந்துட்டு மீதிக் காசைக் கையில்  கொடுத்தாங்க. (ஐ மீன் நம்ம கையில் !)


பொதியைப் பிரிச்சதும் நண்பர்கள் ஓடி வந்து கையில் இருந்து எடுத்துக்க ஆன நேரம்  ஒரு விநாடிக்கும் குறைவுதான்!


இந்தக் காட்டுக்குள்ளே  மூணு பகுதிகள்  இருக்காம்.  உள்ளே  மலைப்பாம்பு, ராக்ஷஸ  சைஸ் வௌவால்கள்  எல்லாம் இருக்கு.  கடைகள் உள்ள வெளிப்பகுதியை ஒட்டியே ஒரு கோவில்.  ஹனுமன் கோவிலோ?  இந்தக் குரங்கன்மாரெல்லாம்  கோவிலுக்கான காவல்தெய்வங்களா (வும்) இருக்காங்க(ளாம்).  புனிதக்குரங்கர்!

சுமார்  24 விதமான மரக்கூட்டங்கள்,   வசிக்கும் 'மக்களுக்கு' ஏத்தமாதிரி படு செழிப்பா வளர்ந்து நிற்கும் அடர்த்தியான காடு இது.


இதைப்போல  புனிதக் குரங்குக்காடுகள்  இந்தத் தீவில் இன்னும் நாலைஞ்சு இருப்பதாகவும் கேள்வி. ஆனால்  ரொம்பவே ஸ்நேகம் என்றால் அது இங்கே மட்டுமே! மேடிக்கு இதைச் சொல்லும்போதே ஏகக்குஷி!


பாலித் தீவு ஹிந்துக்களுக்கு ஒரு வருசம் என்பது ஒன்பது மாசங்கள்தான். அதனால் ஒவ்வொரு 210 நாட்களுக்கும் ஒரு வருசப்பிறப்பு வந்துருது.  வருசப்பிறப்புக்கு இந்த  ஹனுமன் கோவிலில்  திருவிழா நடக்குதாம்.

கேட் மூடிக்கிடந்த கோவிலை உள்ளே போய்பார்க்க விருப்பமான்னு கேட்டதுக்கு  ஆமாமுன்னு சொல்றதுக்குப் பதிலா வேணாமுன்னு தலை ஆடிருச்சு:(  உள்ளேதான் சாமி இல்லையேன்னு  ஒரு எண்ணம். ப்ச்.....   போகட்டும்   .......



மேடிக்கு எதாவது  கொடுக்கணுமுன்னு  காசை வெளியில் எடுத்தால்.... எனக்கு கைடு கூலி ஒன்னு வேணாம். இங்கே நான் வச்சுருக்கும் கடையில் எதாவது வாங்கினால் போதுமுன்னு  சொல்றாங்க.  முகப்பில் நாம் பார்த்த கடைகளின் பின் வரிசைகளிலும்  ஒரு பத்துப் பதினைஞ்சு கடைகள் இருக்கும்.

கடையின்  கதவாக  இருக்கும்  ஒரு துணியை (குரங்கன்மார் துணிக்கு அடியில் நுழைஞ்சு  எளிதாப் போகலாம்)  எடுத்தவுடன் கடைப்பொருட்கள் கண்ணில் பட்டன. நினைவுப்பொருட்கள், டீ ஷர்ட்ஸ், ஸராங் இப்படி.  பத்து பாதிரிப்பூ அஞ்சு நிறங்களில் இருக்கும்  பத்து ஹேர்க்ளிப்புகள் இருக்கும் அட்டையை வாங்கினேன்.  கூடவே மரத்தால் செய்த   சின்ன சைஸ் முகங்கள் (ராமர் & சீதா)  ரெண்டு.

மரச்சாமான்கள் கொண்டு போக முடியாது என்பது மறந்து போச்சா? வேணாம் வெணாமுன்னு பதறினார் கோபால். டிக்ளேர் செஞ்சுக்கலாம்.  ட்ரீட்டட் வுட் என்பதால் விட்டுருவாங்க.அப்படி இல்லைன்னா.... போயிட்டுப் போகுது.

நாளைக்குப் போகும் ஊர்,  கலைப்பொருட்களுக்குப் பேர் போனது. அங்கே பார்க்கலாமேன்னு இழுத்தார்.  அட! அப்படியா அங்கேயும் வேறெதாவது வாங்கலாம் என்றதும் கப்சுப்:-))))

பூவுக்கு ஒரு அம்பதாயிரம், முகங்களுக்கு  பேரம் பேசி  நூற்றியம்பதை பாதியாக் கேட்டு  எழுபத்தியஞ்சு.

திரும்ப கார் பார்க் வரை கூடவே வந்து வண்டியில் ஏறும்வரை  கையில் குச்சியோடு  நின்னாங்க மேடி.  குரங்கன்ஸ் எந்த ஒரு தடையும் இல்லாம  கார்பார்க் முழுசும் ஓடித் திரியுதுங்க.



வண்டியில் ஏறுனதும் ஆர்வ மிகுதியால்  இதுவரை க்ளிக்குன படங்களை ரீவைண்ட் செஞ்சு பார்த்தேன். இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்தியான மனசோடும்  கோபாலை  பார்த்ததா ஞாபகமே இல்லை:-))))))


வெறும் இருபது நிமிட சொர்கம்!


தொடரும்...........:-)))))






25 comments:

said...

அவங்களுக்காக சுதந்திர பூமியாத் திரிய காடுகளை விட்டு வெச்சிருக்காங்க. நம்ம நாட்ல காடுங்கள்ளாம் லென்ஸ் வெச்சு தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமைல இருக்குது. கோபால் சார் முகத்துல பயம் தெரியுதான்னு தான் நானும் முதல்ல படங்களப் பாத்ததுமே கவனிச்சேன். இல்ல.. சிரிச்சுட்டு தான் இருக்கார். ரொம்பவே ஃப்ரெண்ட்லி போல அதுங்க!

said...

எப்படி பயப்படாமல் இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்..

said...

எங்க தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா அங்க இருக்காரே, பாத்தீங்களா?

said...

சமீபத்தில் இரண்டு மூன்று இடங்களில் குரங்கு கூட்டங்களைத் தாண்டி தான் நடந்தோம். இங்கே இருந்தவை எதுவுமே Friendly வகையைச் சாராதவை.... பல்லைக் காட்டி ஒரு சத்தம் தந்தால்.... மரண பயம் தான்!

கோபால் சார் 39 வருடத்தில் கொஞ்சம் நேரமாவது சந்தோஷப் பட்டாரே! :)

மரத்தில் செய்ய்ப்பட்ட அந்த பொம்மை அருமை. ஊர் வந்து சேர்ந்ததா... இல்லை விமான நிலையத்திலேயே விட்டீர்களா....

said...

ரொம்பவே ' ஸ்நேகமுள்ள குரங்கன்'மாரின் காடு. Friendly Monkey Forest

சந்தோஷ படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...!

said...

நாடு நாடா இருக்குது. அதுனால காடு காடா இருக்குது. மனிதன் மனிதனா இருக்கிறான். குரங்கு குரங்காய் இருக்கிறது.

அந்த பாப்பாக் கொறங்கு சட்டுன்னு தெரியல. அதையும் தூக்கிக்கிட்டு அந்த அம்மாக் கொரங்கு எல்லா எடத்துலயும் ஏறி எறங்கி... அடேங்கப்பா அடேங்கப்பா

சீதையும் இராமரும் அழகு. அங்க இராமாயண நடன நாடகமே நடக்கும். நீங்க கண்டிப்பா போயிருப்பிங்க.

said...

அந்த இருபது நிமிட சொர்க்கத்திற்கு எத்தனை லட்சம் வேண்ணாலும் செலவழிக்கலாம்ன்னு அண்ணா நினைச்சிருப்பாரோ :-)))

எப்படிப் பயப்படாம இருக்காருன்னு கேக்கலாம்ன்னு நினைச்சேன்... வேணாம் :-))))))))))))))))

சீதா,ராமர் கொள்ளையழகு. யானை கிடைக்கலையா?

said...

நானாக இருந்தால் பயத்தில் அலறியிருப்பேன்:)! சூப்பர் அனுபவம்தான். பாப்பா குரங்கு அழகு.

said...

ஹப்பாடா !!! மரச்சாமான்கள் எப்படியோ வாங்கியாச்ச்சு :) .

friendly குரங்கு very sweet .ஆனாகூட கொஞ்சம்மும் பயப்பட்டா மாதிரி தெரில ரெண்டு பேரும் .

said...

இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்தியான மனசோடும் கோபாலை பார்த்ததா ஞாபகமே இல்லை:-))))))

ஆழ்மன அமைதி அரிதாகவே வெளிப்படும்.

said...

ஆஹா.. அற்புதமான படங்கள். கோபால் சாரை துளியும் பயமில்லாமல் குரங்கன்மாரோடு பார்க்கையில் வியப்பாக உள்ளது. அதிலும் அதிசயம் அவர் அவர்களின் சேட்டைகளை ரசித்து மகிழ்வது. விநாடிநேரம் கிளிக்க மறந்தாலும் கிளிக்கிய அனைத்தும் அழகோ அழகு. சேயுடன் காட்சியளிக்கும் தாயுடனான புகைப்படம் வெகு அழகு. பதிவுக்கு இட்டிருக்கும் தலைப்பு ரசனை.

சீதாராமன் மனம் கொள்ளைகொண்டார்கள். பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

said...

வாங்க பால க்ணேஷ்.

முப்பத்தியொன்பதுலே அநியாயத்துக்குப் பயம் விட்டுப் போயிருக்கு!

குடும்பத்துக்கு குரங்கு எவ்வளவோ மேலுன்னு.......:-))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எனக்குத்தான் கொஞ்சம் பயம் இருந்துச்சு..... எங்கே கண்ணாடியைக் குறி வச்சுருமோன்னு!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஆமாங்க பார்த்தேன். உங்களை ரொம்ப விசாரிச்சதாச் சொல்லச் சொன்னார். நான் தான் இங்கே எழுத மறந்துட்டேன்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஹரித்வாரில் சண்டி தரிசனம் போனபோது பெரியபெரிய குரங்கன்ஸ் ரொம்பவே பயமுறுத்திட்டாங்க.

இங்கே பரவாயில்லை. அதுவும் இந்தக் காடுதான் ஃப்ரெண்ட்லி.

முகங்கள் ரெண்டும் வீட்டுக்கு வந்துருச்சு:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மகிழ்ச்சியைப் பகிர்ந்ததில் அது இரட்டிப்பாச்சு!!!

said...

வாங்க ஜிரா.

அம்மா குழந்தையைத் தாங்கிப்பிடிப்பதே இல்லை. குட்டிதான் கெட்டியாப் புடிச்சுக்கணும். விட்டால் போச்சு.

வைணவத்தில் கூட குரங்கு பூனை ன்னு ரெண்டு வழி இருக்கு.

சாமியை நாம் குரங்குக்குட்டி போல கெட்டியாப் புடிச்சுக்கும் வகை ஒன்னு.

பூனையம்மா குட்டியைத் தானே கவ்விக்கொண்டுபோய் காப்பாத்துவது போல் சாமியே நம்மைக் காப்பாத்தட்டும் என்பது இன்னொன்னு.

ராமாயணம் பார்த்தேன். வரப்போகும் இடுகைகளில் இடம் பிடிக்கப்போகுது.

said...

வாங்க அமைதிச்சாரல்.


உங்க அண்ணன் 'கோடீ'ஸ்வரன்! அதான் சிரிச்ச முகம்:-))))

யானை கிடைச்சது. ஆனால் கூட்டிவரமுடியலை:-(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எங்கே ஞானக் கண்ணில் பார்க்க வச்சுருவாங்களோன்னு கொஞ்சம் உதறல் எனக்கிருந்துச்சு.தப்பிச்சோம்:-))))

said...

வாங்க சசி கலா.

பயமா?

நம்ம வீரம் இப்போ புரிஞ்சுருக்குமே!!!!!

said...

வாங்க ஜோதிஜி.

//ஆழ்மன அமைதி அரிதாகவே வெளிப்படும்.//


ஆஹா.... அந்த அபூர்வ கணத்தை தவறவிடலை!!!!

said...

வாங்க கீதமஞ்சரி.

குழந்தைப் புள்ளையாட்டம் காலைப் பிடிச்சதும் எனக்கு தலைப்பு கிடைச்சுருச்சு:-))))

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

இதுவரை க்ளிக்குன படங்களை ரீவைண்ட் செஞ்சு பார்த்தேன். இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்தியான மனசோடும் கோபாலை பார்த்ததா ஞாபகமே இல்லை:-))))))//

நீங்கள் இப்படி சொன்னதை படித்தவுடன் மறுபடியும் அந்த படத்தைப்பார்த்தேன்.
குட்டியுடன் குரங்காரர் கோபால் அவர்களின் தோளில் எவ்வளவு வாஞ்சையுடன் அமர்ந்து இருக்கு!
அதுதான் இவ்வளவு மகிழ்ச்சி சாருக்கு..

said...

இன்றுதான் முதல் முதல் வந்தேன் உன்கள் பக்கத்துக்கு என நினைக்கிறேன். படங்கள் சுப்பர். உங்கள் எழுத்துநடை சுவார்சியப்படுத்துது. ஆர்வமாக படித்தேன். சாரின் சிரிப்பு உண்மையில் நீங்கள் சொன்னது போல் ஆழகாததான் இருக்கு.

said...

அனுமன்ஜி நன்றாகவே தோளில் உட்கார்ந்துவிட்டார்.

சீதா ராமர் அழகு.