Monday, June 24, 2013

கல்லா கட்டும் புனிதப் பாம்பு? (பாலி பயணத்தொடர் 5 )

சொன்னால் நம்பமாட்டீங்க...... இந்தோனேஷியா நாட்டில்  சின்னதும் பெருசுமா பதினேழாயிரத்து  ஐநூற்று எட்டு தீவுகள் (17,508 ) அடங்கி இருக்கு.  ஐயோடா..... இவுங்க ரூபாயைப் போலவே இதுக்கும் ஏராளமான எண்கள்!  இதுலே  ஒரு குட்டித்தீவுதான் நம்ம பாலி! நாட்டின் மொத்த ஜனத்தொகை 237.4 மில்லியன்ஸ்,2011 சென்சஸ் படி. இதுலே பாலி மட்டும் 4.2 மில்லியன். அட! எங்க நியூஸியின் மக்கள்தொகையேதான்!!!!   ஆனால் பரப்பளவில்  நியூஸியில்  46 இல் 1 . குறுக்கும் நெடுக்குமாப் பார்த்தால்  வடக்குலே இருந்து  தெற்கு 112 கி மீ, கிழக்குலே இருந்து மேற்கு 152 கிமீ.


சுமார் ஒரு மணி நேரப்பயணத்தில்  டனா லாட் வந்துருந்தோம்.  உள்ளெ நுழையவே கட்டணம் உண்டு. ஆளுக்கு  முப்பதாயிரம். கார் பார்க்கிங் அஞ்சாயிரம். பெரிய அலங்கார வாயில் முகப்பு. பாலி நடனமங்கையர் சிலை ஒன்று கொள்ளை அழகு!  ஒரு கோபுரம்போல இருக்கும்  டிஸைனை நட்ட நடுவில் செங்குத்தா  கோடு  வரைஞ்சு  கட் பண்ண மாதிரிதான்  வாசல்கள் இருக்கு. Candi bentar வகையாம்.  வீடுகளுக்குக்கூட இப்படித்தான்.ஆனால் சின்ன உயரம்.

ஏழெட்டுப் படிகளேறி  இன்னொரு அழகான  வாசல் (Paduraksa style) வழியா உள்ளே போனோம். கொஞ்ச தூரத்துலே இருந்த மேஜைக்கருகில் இருந்த நபர் இங்கே வாங்கன்னு  கை அசைச்சுக் கூப்பிட்டு டிக்கெட் கிழிச்சுக் கொடுத்தார்.  நடுவில் பாதைக்கு இடம் விட்டு இடமும் வலமுமா  சின்னதாத் தெருக்கள்.  ரெண்டு பக்கமும் கடைகளே கடைகள். பாதையின்  ஆரம்பத்தில் ஒரு பக்கம் சின்னதா ஒரு கோவிலும் இருக்கு. அங்கே பூஜை செஞ்சுட்டு கூடையை நம்ம பக்கம் கிராமத்து ஆட்கள் தலையிலே வச்சுக்கிட்டு கை வீசி நடப்பது போல்  ஒருத்தர்  நடந்து போனாங்க.  ஆனால் சும்மாடு ஒன்னும் இல்லை கேட்டோ!!!!

மார்கெட் வழியா நடந்து போறோம். புல்லாங்குழல்   வாசிச்சுக்கிட்டு இருக்கார் ஒரு கலைஞர்.  அடுத்து வெள்ளைப் பாம்பை மடியில்போட்டுத் தாலாட்டிக்கிட்டு இருக்கார் இன்னொருத்தர். தீனிகள், துணிமணிகள் கைவினைப்பொருட்கள் இப்படி எல்லாத்தையும் ஒரு கண்ணால் பார்த்தபடியே கோவில் என்று அம்பு போட்டுக் காட்டிய பாதையில் நடக்கறோம்.

Tanah டனா = நிலம்
Lot லாட் = கடல்.
Pura  புரா  =  கோவில்
கடலோர நிலம் என்றே பொருள் சொல்றாங்க.  கடலோரக்குன்றுன்னு சொல்லப்டாதோ?

கவனமா கால் வச்சு நடக்கவேண்டி இருக்கு.  சொரசொரன்னு கல்லும் குழியுமா சமமில்லாத நிலப்பகுதி. வலது பக்கம் கொஞ்சம் உசரமான மேட்டில் ஒரு கோவில். பூசாரி உள்ளே இருக்கார். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

இடப்பக்கமும்  ஒரு குன்றும் கோவிலும். அதைத்தாண்டி  கொஞ்ச தூரத்தில்  கடலுக்குள் முளைச்சு நிற்கும் இன்னொரு  குன்று ! அதன்  உச்சியில் ஒரு கோவில் . அலைகள் ஆவேசமா வந்து பாறைகளின் மேல் மோதும் இரைச்சல்கள்.  இத்தனைக்கும்  டைட் குறைவான சமயம் இது. Low tide.

முழங்காலளவு  தண்ணீரில் நடந்துபோய்  கடலுக்குள் இருக்கும் குன்றின் பின்பகுதியில் நிற்கும் சிறு கூட்டத்தில்  கலக்கும் மனிதர்கள்.
உள்ளூர் மனிதர்கள் முக்கியமா  கோவில்சம்பந்தப்பட்ட ஆண்கள் அனைவரும் தலையில் சின்னதா ஒரு தலைப்பாவும் கட்டம்போட்ட சாமித்துணியில் முழங்காலுக்கு மேலே வரும் அரைவேட்டியுமா இருக்காங்க.
நம்மூர் தலைப்பாக்கட்டு மக்களில் ஒரு பகுதி, ஆதிகாலத்துலே இங்கே வந்துட்டாங்க போல இருக்குன்னார் கோபால்.


புனிதப் பாம்புன்னு எழுதுன   ஒரு அட்டை  என் முதுகுப்பக்கம்  வரும் குன்றின் சுவரில் !   இந்தக் குன்றே பாம்பு வடிவத்தில் இருக்கோ...  பரந்தாமன் பள்ளி கொண்ட சேஷன்?  அட்டைத் தகவலுக்கு அடியில் குன்றினடியில்  குகை.  அங்கே ஒரு சிறு பாறைக்கு  முன்புறம் ஒருவரும் பாறைக்குப் பின்புறம் ஒருவரும் ஸ்டூல் போட்டு உக்கார்ந்துருக்காங்க. முன்னவர் முன்னே  இன்னொரு ஸ்டூலில்  ஒரு தாம்பாளம்.  பூஜைச் சாமான்கள்  ஊதுவத்தி  புகையுது.




என்னன்னு கிட்டே போய்ப் பார்த்தோம். தாம்பாளத்தில் இருந்த பணத்தைப் பார்த்ததும்   எதோ விக்கறாங்களோன்னு நினைச்சேன்.  ஹோலி ஸ்நேக்ன்னு  சொல்லி தட்டைக் காமிச்சார் முன்னவர். ஆயிரம் ரூபாயை(இதுதான் ஆகக் குறைஞ்ச சில்லறை!) போட்டதும் பாறையின் பின்பக்கம் கை காமிச்சார்.
நம்மை ஏறிட்டுப்பார்த்த பின்னவர் டார்ச் அடிச்சு பாறையில் இருந்த சின்ன பொந்தைக் காமிச்சார்.  கூடவே 'ஓம் நமச்வாயா. ஓம் நமச்வாயா'ன்னு  சொல்லி அங்கே  மூச்சு விடாமத் தலையும் வாலும் தெரியாமச்  சுருண்டு படுத்திருந்த  பாம்பைத் தொட்டுத் தடவிக் கொடுத்தார். ஹோலி ஸ்நேக்.  தொட்டுப்பார் தொட்டுப்பார்னும் சொல்றார்.


வெளிறிய சாம்பல் நிறத்தில் கறுப்பு டிசைன் போட்ட தோலுள்ள பாம்பு நாகமா இருக்குமான்னே எனக்கொரு சந்தேகம்!  கடலுக்குள் நீண்டுபோகும்  குன்றின் மேல் இருக்கும் கோவிலைக் காமிச்சு       ' இந்த ஹோலி ஸ்நேக் தினமும் இரவில்  கோவிலுக்குப்போய் சாமி கும்பிடும்' என்றார். கோவிலில் என்ன  சாமி ? ன்னு கேட்டேன்.  சிவன்!

அட!  கண்ணை ஓட்டினால்  மலையேறிப் போகும் படிகளில் ஓரிடத்தில் ரெண்டு பக்கமும் சாமித்துணி   ஸ்கார்ஃப் கட்டிய நந்திகள்.

Danghyang Nirartha என்ற பெயரில்  ஜாவாத் தீவுக்கார சாமியார்  ஒருவர் கட்டுன கோவில் இது. இவர் சைவ மதக்காரர்.  காலம் பதினைஞ்சாம் நூற்றாண்டு.  இவருக்கு டைம்பாஸே கோவில் கட்டுவதுதான். கடலோரப்பகுதிகளில் பொருத்தமா இடம் கிடைச்சால் கோவில் ஒன்னு கட்டிட்டுத்தான் மறு வேலை!  இவருடைய சிலை ஒன்னு இங்கே!

இவர் கட்டுன கோவில்களில் எல்லாம் padmasana architecture வகைகளே.  நம்ம பத்மாசனம்போட்டுக்  கால் மடக்கி உக்கார்ந்துருக்கும்  சாமிச்சிலைகள் உள்ளே இருக்கான்னு பார்க்க எனக்கு ஆவல். ஆனாலும் கோவில்களை எல்லாம் மூடி வச்சுட்டு வெளிப்புறத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்குக் காமிக்கிறாங்க.  அதிலும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்குபோது   எட்டிப்பார்க்கவும் அனுமதி இல்லை. அங்கங்கே  தகவல் பலகையில்  'தடா' சமாச்சாரம் எழுதிப் போட்டுருக்கு.

இந்தக் கோவில் பழுதடைஞ்சு  அபாய நிலைக்குப் போய்  இருக்கு. ஜப்பான் அரசு இதை பழுது பார்க்க 800 பில்லியன் ரூபாய்களை தானம்  வழங்கிப் புண்ணியம் கட்டிக்கிச்சு. பழுது பார்த்து (2003 வருசம் )  சரியாப் பத்து வருசம் ஆகி இருக்கு.  இந்தோனேசியாவின்  அப்போதைய  ஜனாதிபதி மேகாவதி சோகர்னோபுத்ரி   திறந்து வச்சுருக்காங்க.

தண்ணீருக்குள் நடக்கவேணாமுன்னு தோணுச்சு எனக்கு. கோபால் மட்டும் செருப்பை  என் காலருகே விட்டுட்டு  எதிர்க்குன்றுக்குப் போனார்.  வரும்போது  நெற்றியில்  திருநீறும் கையில் ஒரு பாதிரிப்பூவுமா வந்தார். வணங்கி தட்சிணை போட்டதும் மூங்கில் குழாய் வச்சு பாறை வழியாக வரும் ஊற்று நீர் தீர்த்தம் தர்றாராம் பூசாரி. கூடவே  விபூதியும் மலரும்.  காதில் பூ ஆண்களுக்கு!   தைரியம் இல்லாத கோபால்,  பூவை எனக்குக் கொடுத்துட்டார். குன்றின் மீதுள்ள கோவிலுக்குப்போக அனுமதி இல்லை. உள்ளூர்க்காரர்கள் மட்டும் போகலாம். அதுவும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே!

Low tide ன்னு  சொன்னாலும் அலைகள் வந்து கற்பாறைகளில் மோதும் வேகம்  பயங்கர அழகா இருக்கு. ஓயாத   அலைகளும் அவற்றின் இரைச்சலும்!  இப்பவே இப்படின்னா.... டைடு அதிகமாகும்போது எப்படி இருக்கும்!!!! இதுலே பாம்பார் எப்படி நீந்திப்போய் சாமி கும்பிட்டு வருவார்?  அலை அப்படியே அடிச்சுக்கிட்டுப் போயிடாதோ?

நான் ஆ....ன்னு வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே இந்தப்பக்கம் திரும்பினா கோபால் செருப்புகளில் ஒன்னு காணோம்!  கண்ணை ஓட்டினால் சின்ன அலை தூக்கிக்கிட்டுப் போகுது! ஓடிப்போய் மீட்டு வந்தேன். கால் நனைய வேணாமுன்னு பார்த்தால்.....  இப்படி ஆச்சு:)




பாம்பு குகைக்கு மேல் பாறையில் தட்டுத் தடுமாறி ஏறிப்போனால் அங்கே ஒரு புரா! பூட்டிய வாசல். ஜஸ்ட் க்ளிக்கிட்டு எதிர்ப்பக்கம் நடந்தால் சுலபமா கீழே இறங்கிப் போகும்  வழி. அடடா.... முழங்கால்வலிக்க அபாயமான பாதையிலே  ஏறி வந்தோமேன்னு.........

எதிர்வாடையிலே  நாம் பார்த்தபோது அழகான  தோட்டம்.  மக்கள் எல்லா இடத்திலும் ஏறிப்போய் பார்த்துக்கிட்டு இருக்காங்க.  கூட்டத்தில் நாமும்:-)  கொஞ்சம் சமதரையான இடத்துலே  இன்னொரு  கோவில். நோ எண்ட்ரி நமக்கு!

அதைக்கடந்து கொஞ்சம் ஏற்றமாப் போகும் பாதையில் நடந்தோம். எங்கே பார்த்தாலும் பசுமையும் பளிச்சும்!   கல் பாவிய நடைபாதை. கண்ணெதிரே கொஞ்ச தூரத்தில் கடலுக்குள் நீட்டி இருக்கும்  குன்றும் அதன் மேல் இன்னொரு கோவிலும்.  தடுக்கி விழுந்தால் புராவில் விழுவோம் பாலியில்.  இருபதாயிரம் கோவில்கள் இருக்காம்!

கடலில் மூக்கு நீட்டி இருக்கும்  டைனோஸார்  போல் இருக்கு அந்தக்குன்று. அடியில் ஒரு  பெரிய  துளை. அதன்வழியா அலை அடிச்சு வரும்போது பார்க்கவே அழகா இருக்கு!



அங்கங்கே  சின்னக்கூரைகளுடன் உக்கார்ந்து ஓய்வெடுக்க ஒரு அமைப்பு. மரக்கட்டில் போல! பேசாம படுத்தே ஓய்வெடுத்துக்கலாம்:-) கழிப்பறை வசதிகளும் ஒரு கட்டிடத்துக்குள்ளே!  நல்ல விஷயம்!

அருமையா லொகேஷன் என்பதால்  கல்யாணப்பொண்ணு முதல் கமர்ஸியல்  ஷூட்டிங் வரை படம் புடிச்சுக்கன்னே வர்றாங்க.

கடைவீதி வழியாகவேதான்  திரும்பி வெளியே வரணும்.  கைவினைப்பொருட்கள் ஏராளம்.   குறிப்பா மரச்சிற்பங்கள் அலங்கார பேனல்கள் அபாரம். குரங்குகள்  ஒரு குட்டி பூதத்தை(??!!)  உண்டு இல்லைன்னு பண்ணும் மரச்சித்திரம்  சூப்பர். ஆசையோடு பார்த்த என்னிடம்  மரச்சாமான்களை நம்ம நாட்டில் அனுமதிக்க மாட்டாங்கன்னு  ஓதினார் நம்மவர். என்ன ஒரு முன் ஜாக்கிரதை!



ஆளுக்கொரு இளநீரை  வாங்கிக் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.  என்ன இளநீரோ........  அரைத்தேங்காய்ன்னு சொல்லணும். அதையும்  நீரெல்லாம்  வெளியே   வழியும்  வகையில் கிட்டத்தட்ட  அரையாகப்  பாதியில் வெட்டிக் கொடுக்கறாங்க.  நம்மூர் போல நாசுக்கா மேல்பக்கம் சீவுவது இல்லை. பெரிய அரிவாளால் போடுபோடுன்னு போட்டால் வேற எப்படி வரும்?  அந்தத் தேங்காயை எடுக்கக் கூடவே ஒரு டேபிள் ஸ்பூன். கடைசியில் ஸ்பூன் வளைஞ்சதுதான் மிச்சம்:-)

டனா லாட்டில் சூரிய அஸ்தமனம் பார்க்க பெரும் கூட்டமா மக்கள்  வருவாங்களாம்.  சன்செட் பாய்ண்ட் இது.  அஞ்சுமணிக்கு  கூட்டம் அம்முமாம். நாம்தான் ரெண்டுக்கெட்டான் நேரமா வந்துருக்கோம் போல!



தொடரும்..........:-)






31 comments:

Anonymous said...

படங்களும் பகிர்வும் மிக அருமை, பாழித் தீவும் இந்தியா போன்றே உள்ளதே. :)

said...

அழகு கொஞ்சும் இடம். நடுவில இந்த பா சார் எங்க வந்தார்.
ஏம்பா நந்தி படங்களைக் காணோம்.

தெமேன்னு கோபால் பூ கொண்டு வந்தா அட என் அர்ஜுனமஹராஜான்னு சொல்லணும் தெரிஞ்சுதா:)

said...

பாலி நடனமங்கையர் வெகு அழகு. உடுப்பின் மடிப்புகள் கூட நேர்த்தி. படங்களைப் பார்க்கையில் நேரில் சென்றுவந்த உணர்வு. நன்றி டீச்சர். கடலில் மூக்கு நீட்டிப் படுத்திருப்பதான குன்றின் வர்ணனை சூப்பர்.

said...

என்னவொரு அழகான இடம்... படங்கள் அற்புதம்... வியக்க வைக்கும் தகவல்கள் உட்பட அனைத்தும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

said...

உலகம் சுற்றும் ‘வாலிபர்கள்’ இருவருக்கும் நன்னி ...

said...

டானா லாட் நல்லா நினைவிருக்கு. நானும் கோபால்சார் போல காதுல பூ வெச்சுக்கிட்டு வந்தேன். :)

ஆனா அந்த பாம்புக் குகையை கவனிக்கலை. தொட்டுப் பாத்திங்களா?

கோயிலுக்குப் போற வழியில் நிறைய கடைகள். அங்க ஒரு பெயிண்டிங் கடை இருந்தது. அதுல ஒரு பெயிண்டிங் ரொம்பவே பிடிச்சிருந்தது. கூட வந்த நண்பர்களின் சதியால் அந்தப் படத்தை வாங்க முடியல.

தொடர்ந்து எழுதுங்க டீச்சர். உங்க பதிவைப் படிக்கிறப்போ அங்க போன நினைவெல்லாம் அப்படியே கொசுவத்தி சுத்துது :)

பாலியில் வீட்டுக்கு(குடும்பத்துக்கு) ஒரு கோயில் இருக்கும். அதில் அவங்களே தினமும் சடங்குகள் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். முக்கியமான சடங்குகள் நடக்குறப்போ மொத்தக் குடும்பமும் ஒன்னாக் கூடுமாம். நம்மூர் மாதிரியே இருக்கு. ஆனா நம்மூர்ல இப்பல்லாம் கொறஞ்சு போச்சு.

said...

சிற்பங்கள் வெகு அழகு.

said...

//வெளிறிய சாம்பல் நிறத்தில் கறுப்பு டிசைன் போட்ட தோலுள்ள பாம்பு//

அட!!.. பாம்பும் சாமித்துணி போட்டிருக்கே :-))

said...

படங்கள் அனைத்தும் அருமை அம்மா!

said...

எங்கே பார்த்தாலும் பசுமையும் பளிச்சும்!
அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

said...

மிக அருமையான பதிவு டீச்சர். நானும் கூடவே வருவது போலவே உள்ளது.

said...

அப்படியே பார்த்துக்கிட்டே நின்னுடலாம் போல தோணிச்சு!

படங்களும் விளக்கங்களும் மிக அருமை டீச்சர்.

தொடரட்டும் பயணப் பகிர்வுகள்.

said...

இயற்கை எழில் கொஞ்சுவதோடு கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வெகுவாகு ஈர்க்கிறது. அற்புதமான படங்கள். நன்றி.

said...

//கடலில் மூக்கு நீட்டி இருக்கும் டைனோஸார் போல் இருக்கு அந்தக்குன்று. அடியில் ஒரு பெரிய துளை. அதன்வழியா அலை அடிச்சு வரும்போது பார்க்கவே அழகா இருக்கு! //

அந்த துளை manmade அல்லது இயற்கையாக அமைந்ததா . மிகவும் அருமை .ரொம்ப வித்தியாசமான architecture
ரொம்ப அழகான கடற்கரை , வித்தியாசமான கலாச்சாரம் , (இது பற்றி விவரமான ஒரு கட்டுரை நீங்க எழுதுனா நல்ல இருக்கும் . அப்போ தான் சின்ன சின்ன details கிடைக்கும் ) , அருமையான போட்டோஸ் . ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பகிர்ந்ததற்கு .

said...

வாங்க நிரஞ்சன் தம்பி.

பாலி இன்னும் பாழாகாமல் இருக்கு!

உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

நந்தி...படம் 14 இல் மூணு இருக்கு.

அர்ஜுனன் கொண்டு வந்தது பாரிஜாதமில்லையோ?

அடுத்தமுறை கொண்டு வந்தாச் சொல்றேன்ப்பா:-)))

said...

வாங்க கீதமஞ்சரி.

இத்தனைக்கும் அது காங்க்ரீட் சிற்பம்தான். நேர்த்தியா செஞ்சுருக்காங்க.

தூரத்தில் இருந்து பார்த்தபோது தலையை நீட்டிப் படுத்து தண்ணீர் குடிக்கும் மிருகம்போல்தான் இருந்தது.

நம்ம கோவியாரும் இப்படியே குறிப்பிட்டுள்ளார்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இன்னும் இயற்கை அழகை சேதப்படுத்தத் தெரிஞ்சுக்காத மக்கள்ஸ்.

தீவின் பெரும்பங்கு வருமானமே சுற்றுலாப் பயணிகளால்தான் என்பதைப் புரிஞ்சு வச்சுருக்காங்க.

அதான் அழகு கொட்டிக்கிடக்கு!

said...

வாங்க தருமி.
60+ ஆன பிறகும் உலகத்தை கொஞ்சமாவது சுற்றிப்பார்க்கத்தானே வேணும்.

நாளைக்கு மேலே போனதும் பூவுலகில் என்னென்ன பார்த்தோமுன்னு கணக்குக் கேட்டால் பே பேன்னு முழிக்கலாமோ?

said...

வாங்க ஜிரா.

பிரமாதமான ஓவியங்கள். ஆனால் சைஸ் ரொம்பப்பெரூசு. கொண்டு வரக் கஷ்டம்தான்.

நம்ம காரோட்டி இளைஞரும் அதான் சொல்றார். வீட்டுலே செரிமனி நடக்கும்போது கண்டிப்பா போயிருவாராம். ஊர்த்திருவிழாவான்னு முக்கிய பண்டிகையான்னு கேட்டதுக்கு,

அதுக்கெல்லாம் போகணுமுன்னு இல்லை. ஆனால் வீட்டு வருசாந்திர விழாக்களுக்குப் போயே ஆகணுமுன்னு சொல்றார்.

said...

மட்டையோட உள்ள இளநீரை பீங்கான் ப்ளேட்டில் வைத்த படம் டாப் டக்கர்...!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அட! பாம்பு(ம்) சாமிச் சட்டை போட்டுருக்கா:-))))))

எடுத்துக் கொடுத்ததுக்கு டாங்கீஸ்ப்பா.

said...

வாங்க ராஜி.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசனைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்.

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்.

எங்கே ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்.

பாம்பார் இழுத்தாந்தார்:-)))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றீஸ்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கலை அழகை ஆராதிக்கத் தெரிஞ்சதோடு அதையே பிழைக்கும் வழியாகவும் வச்சுக்கத் தெரிஞ்ச மக்கள்ஸ்.

சின்னத்தீவுக்கு உலகப் பயணிகளை இழுக்கும் கலை அழகே ஒரு தனி அழகு!


said...

பெரிய அலங்கார வாயில் முகப்பு. பாலி நடனமங்கையர் சிலை ஒன்று கொள்ளை அழகு! //

ஆம், கொள்ளை அழகாய் தான் இருக்கிறது.

பயணக்கட்டுரை அருமை. படங்கள் எல்லாம் வெகு அழகு.

said...

வாங்க நம்பள்கி.

பயணத்தில் தினம் மூணுமுறை உங்களை நினைச்சோம்:-)

said...

வாங்க கோமதி அரசு.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்.

said...

நமக்கு இன்றுதான் காண நேரம் கிடைத்தது.

பாலிமங்கை சிலைகள் அழகு.

இடம் ரொம்ப நன்றாக இருக்கிறது.