Friday, June 21, 2013

விடியல் பொழுதில் ஒரு ப்ரஹஸ்பதி (பாலி பயணத்தொடர் 4 )

பொழுது இன்னும் சரியாப் புலராத ஒரு  காலையில்  கடற்கரையை நோக்கிப்போய்க்கிட்டு இருக்கோம். நேத்து நம்மை ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்ட மேடி  நம்ம தெருவுக்குள் நுழையுமுன் இடதுபக்கம் கை நீட்டி அங்கே பத்மா பீச் இருக்குன்னு சொல்லி இருந்தார். பத்மா ரிஸ்ஸார்ட் இருப்பதால் இதை பத்மா பீச்ன்னு சொல்றாங்களே தவிர இந்தப் பகுதிக்கு  Legian என்றே பெயர்.



இங்கே  இந்தப்பகுதியில் சாலை முழுசுமே கல்பாவி இருக்கு!  அதை கூட்டிப்பெருக்கிச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்த பணியாளர்களிடம் பீச் ? என்று கேட்டதற்கு  நாம் போகும்திசையையே கைநீட்டிக் காமிச்சாங்க.    சாலைக்கு ரெண்டு பக்கமும் பச்சைப்பசேலுன்னு மரங்களும் செடிகொடிகளும். ராத்திரி இருட்டுலே சரியாத் தெரியலை!


நாயை வாக்கிங்  கூட்டிப்போறார் ஒரு உள்ளுர் வாசி!

அஞ்சாறு நிமிச  நடை. கடற்கரையில்   இங்கொன்னும் அங்கொன்னுமா சிலர்.  தண்ணீரில் போய் நின்னு பார்த்த கோபால் நல்லா வார்மா இருக்குன்னார். கொஞ்சதூரம் மணலில் நடந்துபோய்  கால் வலிச்சதும்   அமர்ந்தோம்.

இதேபோல் தைரியமா  நம்ம மெரீனாவில்  அமர முடியாது. ஏகப்பட்டபேர் 'உட்கார்ந்த தடயம்' மண்ணுக்குள் இருக்கும் அபாயமுண்டு  அங்கே:(

ஜப்பான் மங்கை ஒருவர் நீச்சலுடையுடன்  தண்ணீரில்  நின்னு போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தார். காலண்டர் ஷூட்டிங்கோ என்னவோ!


""  நம்மூரிலும்தான் அழகான கடற்கரை இருக்கு. ஒருநாளாவது அதிகாலையில் போனோமா?"

"  இங்கே மாதிரியா? குளிர் கொன்னுருமே... "

"  பரவாயில்லைன்னு  கிளம்பிப்போய்  வண்டியிலேயே  இருந்து சூரியோதயம் ஒரு நாள் பார்க்கணும். என்ன ஒரு நாள்  கிளம்பலாமா? "

"  சம்மர் வரட்டும் பார்க்கலாம். "

 " ஐயோ... அப்ப நாலுமணிக்கே எழுந்து கிளம்புனால்தான் உண்டு. அஞ்சுமணிக்கு சூரியன் வந்துருவானே! "

போகாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு இருந்தோம்:-)


மணலில் மூன்று நாய்கள் எஜமானை இழுத்துக்கிட்டு  போகுதுகள்;-)

வானத்தில்  உதயகால வெளிச்சங்கள் ! சூரியன் வருதான்னு கண்ணை நட்டபோதுதான்   மனசில் ஒரு விஷயம் புலனாச்சு. நமக்கு மேற்காலே கடல். அப்போ சூரியன் ?  சடார்னு திரும்பி  கிழக்கே பார்த்தால்  வரிசை கட்டி நிற்கும் ரிஸார்ட்டுகளின் பின்னால் மரக்கிளைகளுக்கிடையில்  இருக்கான்.

கடற்கரை மணலில் வரிசையாக் குடைகள். சர்ஃப் போர்டுகள்  ப்ளாஸ்டிக் நாற்காலிகள். சன்பாத் எடுக்கத்  தோதான படுக்கை நாற்காலிகள்  இப்படி ......   இன்னும் கொஞ்சம் நேரமானதும் எண்ணெய் மஸாஜ், ச்சில் பீர், தீனிகள் என்று இந்த இடமே சுறுசுறுப்பாகிவிடும் அடையாளம் பளிச்சுன்னு தெரியுது.




பெரிய சங்கு ,சோழிகள்  விற்பனையாளர்  அன்றைய வியாபாரத்துக்குக் கடை தொறந்துக்கிட்டு இருக்கார்.  வாங்கிக்க ஆசைதான். ஆனால்  இங்கே நியூஸிக்குக்  கொண்டுவர முடியாதே:(

மணி ஏழாகுது. அறைக்குத் திரும்பலாமுன்னு வந்தால்  கோவில்போல ஒன்னு பீச்சாண்டை கண்ணில் பட்டது. உள்ளே போய்ப்பார்த்தால் கோவிலேதான். ப்ரஹஸ்பதி மூலவர். ஆஹா.... இன்னிக்குத்தானே குருப்பெயர்ச்சி, இல்லையோ!!!!

காலையில் கோவிலைத் திறந்து(!!??)  பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து  பூஜைப் பொருட்களை  அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க ஒரு அழகான பெண்மணி. பெயர் மேடியாம். இங்கே இது முப்பாலருக்கும் பொதுவான பெயராக இருக்கோ?  அப்புறம் நம்ம கண்ணனின் பதிவில் பார்த்தது நினைவுக்கு வந்தது  ....  இந்தப்பெண்  அவுங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டாவதாப் பிறந்தவங்க.

முதல் குழந்தைக்கு 'வயான்(Wayan)', இரண்டாம் குழந்தைக்கு 'மேட்(Made), மூன்றாம் குழந்தைக்கு நியோமன்(Nyoman), நான்காம் குழந்தைக்கு கேடுட் (Kedut)'. இதன் தொடர்ச்சியில் ஐந்தாம் குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் 'அடுத்த வயான்', ஆறுக்கு 'அடுத்த மேட்', ஏழுக்கு 'அடுத்த நியூமான்', எட்டுக்கு 'அடுத்த கேடுட்'. ஒன்பதாம் குழந்தைக்கு 'கடைசி வயான்' இப்படியாக 12 குழந்தைகள் பிறக்கும் வரிசைக்கு பெயர் வைத்து அதன் படியே எந்த ஒரு குழந்தை அது ஆண் பெண் என்றாலும் வரிசைப்படி இருக்கும். பிறகு ஆண் பெண் குறித்த அடையாளம் 'I' (ஆண்) மற்றும் 'Ni' (பெண்) குறித்த அடையாளம், பிறகு சாதிப் பெயர்கள் இடம் பெறும்.

நன்றி: கோவியாரின் 'காலம்'

கோவிலில் உண்டியல் ஏதும் இல்லை!  பூஜை செய்யச் சொல்லி  இருபதாயிரம் ரூபாயை  'திடீர் அம்பானி' வழங்கினார். சின்னதா  குருத்தோலைகளால் பின்னப்பட்ட  விளிம்புள்ள   சின்னக் கூடைத் தட்டில்  பூக்கள், ஊதுபத்தி, மிட்டாய், பிஸ்கெட்,  கலர் போட்ட பிடிச்சோறு, எதாவது காய்கறிகள்    இப்படி வச்சுருக்காங்க.

'துள்ஸி, நாளைக்கு இதே டைமுக்கு வாங்க உங்களுக்கு ஸராங் கொண்டு வந்து  தரேன்' னு அன்பாச் சொன்னாங்க நம்ம மேடி! எஸ்  and நோவுக்கு மையமாத்  தலையாட்டி வச்சேன்.

காலை உணவுக்கான விலைப்பட்டியல்கள் அங்கங்கே ரெஸ்ட்டாரண்ட் வாசலில் இருக்கு.


வரும்வழியில் இருந்த கடையில் மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கிட்டோம். சைக்கிளில் ஒருவர் காலை ப்ரேக் ஃபாஸ்டுக்கான  இலையப்பம் போல உள்ள பொட்டலக் கொத்துகளுடனும் கூடவே சின்னச் சின்னப்ளாஸ்டிக் பாட்டில்களில்சட்னி, ஊறுகாய் துவையல் போன்ற சமாச்சாரங்களுடனும்  விற்பனையில்  மூழ்கி  இருந்தார்.

  எல்லா கடைகளிலும் வியாபார நிறுவனங்களிலும்  வாசலில் ஒரு சாமியை வச்சுருக்காங்க. கறுப்பு வெள்ளைன்னு பெரிய கட்டம் போட்ட துணிகள் சாமி போட்டுருக்கு. கூடவே ஒரு குடையும்! நம்ம ஹொட்டேல் வாசலில் புள்ளையார் இருக்கார். மங்களகரமான மஞ்சள் பட்டு கட்டியிருக்கார். மேட்சிங்கா மஞ்சள் குடை!

அறைக்குப்போய் குளிச்சுட்டு வந்து  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாமுன்னா  மூணுமாடி ஏறி இறங்கணுமே என்ற பயத்தில் கையோடு சாப்பிட்டுட்டுப் போயிடலாமுன்னு சொன்னது நாந்தான்.உண்மையில் இது மூணுமாடின்னாலும் தரைதளம் ஒன்னாவது மாடியாம்.  அப்படியும் நாலுமுறை படியேறி இறங்க  முழங்கால் மறுக்குதே :(

அறை வாடகையில் காலை உணவும் சேர்த்தி.  சூப் முதற்கொண்டு ஏராளமான வகைகள் இருக்கு.   ப்ரேக்ஃபாஸ்டுக்கு  எதுக்கு சூப்?  நமக்குண்டான ஸாலடோ, சாண்ட்விச்சோ நாமேகூட செஞ்சுக்கலாம்.  பேக்கரி ஐட்டங்களும்  அட்டகாசம்!

சாப்பாடை முடிச்ச கையோடு ஊர் சுத்திப் பார்க்கஒரு வண்டிக்கு ஏற்பாடு செஞ்சுக்கலாமேன்னு வரவேற்பில் கேட்டதுக்கு,  'நீங்கள் எங்கே போகணும் என்ன ஏதுன்ற விவரங்களைச் சொல்லி பேரம் பேசிக்குங்கோ'ன்னுட்டு,  ஒரே விநாடியில்  ஹொட்டேல் வாசலில் இருந்து ஒருத்தரை வரவழைச்சார். நம்முடைய ஒரே கண்டிஷன்  ட்ரைவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிஞ்சுருக்கணும் என்பதே.

வந்த இளைஞர்  Nyoman Urip Suryawan.  காலையில் சில இடங்களைப் பார்த்துட்டு அறைக்குத் திரும்பிட்டு  கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் மாலையில் சில இடங்களைப் பார்த்துக்கலாமுன்னு முடிவாச்சு. ஏழு லட்சம் கேட்டு, அஞ்சு லட்சத்துக்கு ஒத்துண்டார். முழுநாள் என்பதால் சரின்னு நினைச்சோம்.  இப்ப மணி எட்டேகால். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பலாமுன்னு சொல்லி அறைக்கு வந்து குளிச்சு தயாரானோம்.

ஏராளமான கோவில்கள் இருந்தாலும் முதலில்  Tanah Lot என்ற கோவிலுக்குப் போறோம்.  சுமார்  21 KM வடக்கே கடற்கரையோரமா இருக்கு.  கூட்டா ஏரியாவை விட்டு வெளிவர  ஒருவழிப்பாதைதான். போறவழியில் கடைத்தெருக்களையெல்லாம் கடந்து போகணும்.  ஊரைவிட்டு வெளிவந்துட்டால்.....   வழியெல்லாம் சிற்பங்களே!  ஏராளமான புத்தர்களும் புள்ளையாருமாத்தான் இருக்காங்க. காங்க்ரீட் சிற்பங்கள். கூடவே என்னென்னமோ சாமிச்சிலைகள். பார்க்க த்வாரபாலகர் மாதிரியே இருக்கு.  எல்லா சின்ன பெரிய கோவில்களில் எல்லாம் வாசலில் ரெண்டு பக்கம் கட்டம்போட்ட துணி கட்டிக்கிட்டு நிற்கறாங்க.


வீட்டுத் தோட்டங்களில் வைக்கும் அலங்காரச் சிலைகள்,  அலங்கார விளக்குகள். மரச்சாமான்கள் இப்படி கடைகள்  வரிசையாக் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு. பேசாம சிலவற்றை வாங்கிக் கப்பலில் அனுப்பிக்கலாமான்னு ஆசை வந்தது நிஜம்.

பசுமையோ பசுமைன்னு கண்ணுக்குக் குளிர்ச்சியான நெல்வயல்களும் மரஞ்செடி கொடிகளும். அலங்காரச் செடிகள் விற்கும் நர்ஸரிகள்  அடுத்தடுத்து சாலைகள் ஓரமாக ஏராளம். வழியில் தென்பட்ட வீடுகளின் முற்றத்தில் முதலில் இருப்பவை எல்லாம்  குடும்பக் கோவில்களே.  நல்லா அழகா ஓரம் கத்திரிச்ச வைக்கோல் கூரைகளுடன்  சின்னதும் பெருசுமா வரிசைவரிசையா காம்பவுண்டு சுவருக்குள்ளில் இருந்து தலை உயர்த்திப் பார்க்குது.

இந்தப் பயணப்பதிவில்  நாட்டைபற்றியோ, அங்குள்ள மக்களின் மனோபாவங்களைப்பற்றியோ  அதிகமா ஒன்னும் எழுதப்போறதில்லை. நம்ம கோவி.கண்ணன்  அவருடைய 'காலம்' பதிவில் ரொம்பவே விலாவரியா  இந்துத் தீவுன்னு 10 பகுதிகளில் அருமையான தொடர் எழுதி இருக்கார். அதை ஒரு எட்டு போய் பாருங்க.  படிக்காதவர்கள்  இந்தச் சுட்டியில் இருந்து நூல் பிடிச்சுப்போகலாம்.



http://govikannan.blogspot.co.nz/2012/02/1.html


தீவில் கிட்டத்தட்ட 85 சதவீதம் ஹிந்து மதம் சார்ந்த மக்களே இருக்காங்க. இந்தோனேஷியாவில் ஏராளமான தீவுகள் இருந்தாலும்  இந்த பாலித்தீவில் மட்டும்  ஹிந்துக்கள் எப்படி வந்துருப்பார்கள்? அநேகமாகப் புதியவரைச் சந்திக்கும்போது 'பேச்சுவாக்கில் ஹிந்துவா' ன்னு கேக்கறாங்க. ஆமாம்னு சொன்னதும் பெருமிதம் கலந்த குரலோடும் புன்னகையோடும் நானும் ஹிந்துன்னு சொல்லும்போது பார்க்கணுமே!

தொடரும்........:-)







31 comments:

said...

ப்ரஹஸ்பதின்னு தலைப்ப பாத்ததும் யாரோ ஒரு ஆசாமியைப் பத்தி சொல்றீங்களோன்னு பாத்தா... சாமியப் பத்தி சொல்லியிருக்கீங்க. ரெண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்த கல் பாவிய அந்தப் பாதையும், பீச்சில் நீங்க எடுத்த படங்களும் மனசைப் பறிச்சுடுச்சு. அதென்ன... பீச் ஈரத் தண்ணில யோகா மாதிரி போஸ் குடுக்குது ஜப்பான் மினியேச்சர் பொண்ணு? நிச்சயம் காலண்டர் ஷுட்டாத்தான் இருக்கும்!

said...

கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமையான படங்கள்... இணைப்பிற்கும் நன்றி...

said...

நூலைப்பிடிச்சு காலத்தை பாக்கறேன்.

குறிப்புகள் எடுத்துக்கிட்டதை மறக்காம சொல்லிடறேன். :))

said...

அஹ்ஹா சோழி,சங்கு,சிற்பங்கள், பச்சைப் பசேல்,சுத்தமான கடற்கரை.
இன்னும் என்னப்பா வேணும். போயிரலாமா அங்கே.
அத்தனை படங்களிலும் பேர் போட்டுக் கொண்டது சமத்து.

அதுசும் துளசிகோபால்னு பேர் போட்ட இடத்தில் கோபால் நுழைவது அருமையோ அருமை.

என்ன சிக்னு இருக்குப்பா அந்த யோகா பொண்ணு!!

said...

அருமையாய் சூர்யோதயம் ...

said...

படங்களுடன் பகிர்வு அருமை தொடர வாழ்த்துக்கள்

said...

படங்களெல்லாம் அள்ளுது.

said...

பகிர்வு அருமை. தொடருங்கள்.

said...

nice !!

said...

படங்கள் எல்லாம் அழகு.
பகிர்வு அருமை.

said...

படங்கள் எல்லாம் அழகு.
பகிர்வு அருமை.

said...

இயற்கை சார்ந்த படங்களை மட்டும் ஒரு ஆல்பமாக போட்டு இணைப்பு கொடுக்கலாமே?

said...

படங்கள் கவர்கின்றன.

கடற்கரை,தோட்ட அலங்காரப் பொருட்கள், என அனைத்தும் அழகாக இருக்கிறது.

said...

நாம சென்று வந்த இடத்திற்கு தெரிந்தவரும் சென்றுவந்து அவருடை அனுவத்தையும் படிக்கும் பொழுது அதற்கு தனிப்பட்ட பரவசமே கிடைக்கிறது. நீங்க பாலி சென்று வந்து அதுபற்றி எழுதனும் என்பது எனது ஒன்றை ஆண்டு அவா, ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. சுவாரிசியம் குன்றாமல், தகவல் குறையாமல் எழுதியுள்ளீர்கள்.

மிக்க நன்றி.

//கோவிலில் உண்டியல் ஏதும் இல்லை! பூஜை செய்யச் சொல்லி இருபதாயிரம் ரூபாயை 'திடீர் அம்பானி' வழங்கினார். சின்னதா குருத்தோலைகளால் பின்னப்பட்ட விளிம்புள்ள சின்னக் கூடைத் தட்டில் பூக்கள், ஊதுபத்தி, மிட்டாய், பிஸ்கெட், கலர் போட்ட பிடிச்சோறு, எதாவது காய்கறிகள் இப்படி வச்சுருக்காங்க.//

கூடவே கருவாடும் இருக்கும்.
:)

said...

பாலித்தீவு மட்டும் இந்துத்தீவு ஆனதுக்குக் காரணம் இருக்கு. வரலாறு சொல்லுதே. இஸ்லாமியர்கள் வரவுக்கு முன்னால் மொத்த இந்தோனேஷியாவும் இந்து நேஷனாத்தான் இருந்தது. இஸ்லாமியர்களின் வரவுக்குப் பின் நிலமை மாறிடுச்சு. நாட்டுல அங்கங்க இருந்த இந்துக்கள் எல்லாம் பாதுகாப்புக்காக பாலிக்கு வந்துட்டாங்க. அதுனால பாலி மட்டும் தன்னுடைய அடையாளங்களை மறக்காம இருக்கு.

பாலியின் இந்து மதத்துக்கும் இந்தியாவின் இன்றைய இந்து மதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

நீங்க குடுத்திருக்கும் படத்தைப் பாத்தா பிரகஸ்பதி கோயிலுக்கு நானும் போயிருக்கேன்னு நெனைக்கிறேன்.

said...

வாங்க பால கணேஷ்.

பாருங்களேன் அவ்ளோ நீள பீச்சில் சரியா நாம் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேரெதிரா இந்த ஷூட் நடக்கணுமா!!!!

நல்ல வேடிக்கை:-)))

படங்களை ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றீஸ்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நூல் பிடியுங்க. காலத்தில் அருமையா விளக்கமா எழுதி இருக்கார்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

சின்ன உடம்பு, சிக்குன்னு இருக்குப்பா.

பேர் போட்டுக்கறது படாபேஜாரா இருக்குப்பா. வேற வழி இருக்கான்னு பார்க்கணும்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ரமணி.

தொடர்ந்து நீங்களும் வருவீர்கள்தானே?

நன்றீஸ்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கேமெராவுக்குக் கண்ணில் கோளாறு இல்லை:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றீஸ்.

said...

வாங்க சசி கலா.

தேங்க்ஸ்.

said...

வாங்க கோமதி அரசு.

உங்க ரசிப்புக்கு ரெட்டை மகிழ்ச்சி.

நன்றீஸ்.

said...

வாங்க ஜோதிஜி.

நல்ல ஐடியா!

இன்னும் ரெண்டொரு வாரத்தில் செஞ்சுடலாம்.

நன்றீஸ்.

said...

வாங்க மாதேவி.

ரசனைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க கோவியாரே.

நானும்தான் சென்று வந்த இடங்களைப் பற்றி வேறு யாராவது எழுதினால் ஆர்வமாக வாசிப்பேன், எதையாவது கவனிக்காமல் விட்டுவிட்டோமோன்னு!

இந்த கருவாடை கவனிக்கலையே:(

said...

வாங்க ஜிரா.

உண்மைதான். மதத்தைக் காப்பாற்ற ஏராளமானவர்கள் உயிரைக் கொடுத்துருக்காங்க!

இந்துமதம் என்றாலும் அவுங்க பழக்கவழக்கங்கள் வேறாகவே இருக்கு.

குருவருள் கிடைச்சால் நல்லதுதானே!!!!

said...

பாலிக்கு சுற்றுலா செல்லமுன்பு நிச்சயம் இத்தொடரை மீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும்.

said...

வாங்க அரவிந்தன்.

ஒரு ஆறுநாட்கள் இருந்தால் முழுத்தீவையும் சுற்றி வந்துறலாம்.

நாம்தான் இரவு நேரம் போய்ச் செர்ந்தும்,திரும்பி வரும்நாள் பகல் லைட் எடுத்தும் நேரம் வீணாக்கிட்டோம்:(

சைலன்ஸ் டே என்னிக்கு வருதுன்னு பார்த்துக்குங்க.