Monday, June 25, 2012

அஸ்ட்ராலியாவில் ஆரம்பிச்சு அமெரிக்கா போயிட்டேனே.....(ப்ரிஸ்பேன் பயணம் 7)

திருக்கை மீன் செஞ்ச அக்கிரமத்தாலே போன உயிர், மீண்டும் வரவா போகுது? வழியெல்லாம் இதே நினைப்புதான். ப்ரிஸ்பேன் நகரில் இருந்து வடக்கே இருக்கும் சன்ஷன் கோஸ்ட்க்குப் போகும் வழியில் போறோம்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வடக்கே போகும் வழியில் உள்ள 24 ட்ராஃபிக் லைட்ஸ் உள்ள சிக்னலில் நின்னு நின்னு போகாம ஜிர்ன்னு பாய்ஞ்சு போகவும் ப்ரிஸ்பேன் ஆறைக்கடந்து போக வச்சுருக்கும் 18 பாலங்களை ஒரேடியா ஜம்ப் பண்ணிக்கவும் தோதா ஒரு சுரங்கப்பாதை அமைச்சாங்க. இதுக்கு க்லென் ஜோன்ஸ் டன்னல் Clem Jones Tunnel என்று பெயர். 2006 செப்டம்பர் ஆரம்பிச்ச வேலையைச் சரியா மூணரை வருசங்களில் முடிச்சாங்க. 4.8 கிலோமீட்டர் நீளச் சுரங்கம். ப்ரிஸ்பேன் நதிக்கு 200 அடிக்குக் கீழே தோண்டி எடுத்துப்போட்டச் சுரங்கப்பாதை. முன்பக்கம் ஒரு கிலோ மீட்டர் பின்பக்கம் ஒரு கிலோமீட்டர்ன்னு உள்ளே போய் வெளியே வந்து சேரன்னு மொத்தம் 6.8 கிலோமீட்டர் தூரம். இதுலே போனால் பயண நேரம் 15 நிமிசம் லாபம்.

போக ரெண்டு வர ரெண்டுன்னு நாலு லேன். நடுவிலே மேற்கூரை வரை தடுப்புச்சுவர். 80 கிலோமீட்டர் வேகம் மட்டுமே அனுமதி. போற வேகத்துலே இடதுபக்கம் இருந்து ஒரு லேன் வந்து வந்துசேருதேன்னு முதலில் கொஞ்சம் பயந்துட்டேன். ஒவ்வொரு 120 மீட்டருக்கும் அவசரம் ஆபத்துக்குன்னு ஒதுங்க 41 க்ராஸ் பேஸேஜ் வச்சுக் கட்டி இருக்காங்க. 


உள்ளே காற்றோட்டத்துக்காக ஜெட் ஃபேன் 100. எமெர்ஜன்ஸிக்கான ஃபோன்கள் 165. ஓவர்ஸ்பீடு போகும் ஆட்களைப்பிடிக்க ஸ்பீட் கேமெரா எட்டு. டன்னல் முழுசையும் கண்காணிக்க 250 கேமெராக்கள், இடைவிடாமல் கண்காணிப்பு செய்யும் கண்ட்ரோல் செண்டரில் 50 பணியாட்கள் இப்படி எல்லாமே பெரிய அளவில்! அட்டகாசமா இருக்கு!

இது டோல் ரோடு. ஆனால் எங்கே போய்க் கட்டணுமுன்னு தெரியலை. உள்ளே நுழையறதுக்கு முன்னேயே மூணுநாள் இருக்கு டோல் கட்டன்னு மின்சாரவிளக்கு அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கு. ஒருவேளை கடந்து போகும் வண்டிகளின் கார் நம்பர்களை வச்சு மொத்தமா வசூலிப்பாங்களோ என்னவோ!

சுரங்கப்பாதை முடிஞ்சு வெளியே வந்தோம். எந்தப்பேட்டைன்னு தெரியலை. ஆனா..... ஒரு டிப்பிக்கல் க்வீன்ஸ்லேண்ட் வீடு கண்ணில் பட்டது. எல்லாம் மரம் வச்சுக் கட்டுனக் கட்டிடம். சாலை ப்ரூஸ் ஹைவேயில் வந்து சேர்ந்துச்சு. இங்கே மோட்டர்வே முழுசுக்கும் இடப்புறம் நல்ல மறைப்பு போல ஃபென்ஸ் போட்டு வச்சுருக்காங்க. எங்க ஊர்ப்பக்கங்களில் ஒரு கம்பிவேலி கூட இருக்காது!


இடையில் ஒரு இடத்தில் எதிர்ப்புறம் வரும் போக்குவரத்து அப்படியே நின்னு போய் வண்டிகள் வரிசையா ஒரு நாலைஞ்சு கிலோமீட்டர்வரை நின்னுக்கிட்டு இருக்கு. ஏதோ விபத்து நடந்திருக்கு. கோபாலுக்கு. என்ன ஏதுன்னு தலையைத் திருப்பிப் பார்க்க முடியாது நம்ம வண்டிக்குப்பின்னால் சீறிவரும் மற்ற வண்டிகளின் வேகம் பார்த்தால் பயமாத்தானே இருக்கு! நாம் எதுக்கு இருக்கோம்? ரன்னிங் காமெண்டரி கொடுத்துக்கிட்டே க்ளிக்கி வச்சேன் அவருக்காக:-)

நகர் மையத்தில் இருந்து ஒரு அம்பத்தியிரண்டு கிலோமீட்டர் வந்திருந்தோம். ஹைவேயில் இடது பக்கம் பிரியும் சாலைக்குள் போகணும். இது ஒரு முப்பது, முப்பத்தியஞ்சு கிலோமீட்டர் தூரம் போய் மீண்டும் இதே ப்ரூஸ் ஹைவே (சன்ஷன் கோஸ்ட் போகும் ரோடு) யில் சேர்ந்துருது. இந்த சாலைக்கு ஸ்டீவ் இர்வின் வே ன்னு பெயர் வச்சுருக்காங்க.

இவர் யாருன்னு சாலை முகப்பில் வரும் அடையாளம் சொல்லிரும். முதலை வேட்டைக்காரர். உண்மையில் பார்த்தால் இவர் முதலை வேட்டையாடுபவரே இல்லை. முதலைக்காதலர் என்றுதான் சொல்லணும். முதலைகளைப்பிடித்து வளர்க்கிறவர். இயற்கையும் விலங்குகளையும் நேசிப்பவர்.

இவருடைய பெற்றோர் முதலைப்ரேமிகள். 1970 ஆம் ஆண்டு சில விலங்குகளை வச்சுப் பராமரிக்க ஏற்படுத்தினதுதான் பீர்வா ரெப்டைல் பார்க். வெறும் நாலு ஏக்கர் நிலம். அப்பா Bob Irwin ஒரு ப்ளம்பர். கொஞ்சம் வீடு கட்டும் திறமையும் இருந்துச்சு. தானாய் டிஸைன் செஞ்சு இந்த பார்க்கை அமைத்தார். ஸ்டீவுக்கு அப்போ வயசு எட்டு எங்க அம்மா லின் ஊர்வனவைகளுக்கும் வனவிலங்குகளுக்கும் ஒரு மதர் திரேஸான்னு சொல்லிக்கிட்டு இருப்பார் '. அவருடைய ஆறாவது பொறந்த நாளுக்கு அப்பா அம்மா Bob Irwin & Lyn Irwin கொடுத்த பரிசு என்னன்னு கேட்டா மலைச்சுப் போவீங்க. 12 அடி நீளமான மலைப்பாம்பு..

அடிபட்ட பறவைகள், விலங்குகள், தாயை இழந்து அநாதையா நிற்கும் குழந்தைகள் குறிப்பா கங்காரு, கோஆலா இதுகளை வீட்டுக்குள்ளே வச்சுக் காப்பாத்தும் லின் உண்மையில் ஒரு பிள்ளைப்பேற்றில் உதவும் மருத்துவத் தாதி. மனுசனுக்குள்ள சிகிச்சை மிருகங்களுக்கும் கொடுத்தால் போச்சு. வீடு முழுசும் ஆஸ்பத்திரி வார்டு போலவே இருந்துருக்கு


ஒன்பது வயசு ஸ்டீவ், முதல்முறையா தன் தகப்பனோட மேற்பார்வையில் முதலைகளை எப்படிக் கையாளுவதுன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சார். விலங்குப்பராமரிப்பில் கில்லாடியா ஆனதும் ஸ்டீவின் 21 வது வயசில் ரெப்டைல் பார்க் நிர்வாகம் கைக்கு வந்துச்சு. அஸ்ட்ராலியா ஜூ என்ற பெயர் வச்சு ( என்ன ஒரு கஷ்டம் பாருங்க... இந்த Zoo என்ற சொல்லை எழுதும்போது ஜூன்னு சொல்ல வேண்டி இருக்கு. விஜயகாந்த் ஜூம் பண்ணுன்னு சொல்வது போல) கொஞ்சம் கொஞ்சமா விரிவு செய்து இப்போ 100 ஏக்கர் பரப்பளவில் இயங்குது.

ஆறுவருசத்துக்கு முன் கடலுக்குள் ஒரு படப்பிடிப்பில் இருந்தப்ப திருக்கை மீன் ஸ்டீவின் மார்பில் தன் வாலால் குத்திருச்சு. நேரடியா இதயத்துக்குள் செருகுன அரம்/கத்தி போல இருக்கும் முள் வால். உடனடி மரணம். அப்போ ஸ்டீவுக்கு வயசு 44. அஸ்ட்ராலியாவையே உலுக்கிப்போட்ட சம்பவம்.

இவர் மனைவி டெர்ரியும் குழந்தைகள் பிண்டி, பாப் ( தகப்பன் இறந்த சமயம் வெறும் 3 வயசுக்குழந்தை) தொடர்ந்து இந்த நிறுவனத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க. இது தனியார் நிர்வகிக்கும் நிறுவனம். நுழைவுக்கட்டணம் கொஞ்சம் அதிகமுன்னு முதலில் தோணினாலும்..... இத்தனை அழகாவும் பொறுப்பாவும் செய்ஞ்சுக்கிட்டு இருப்பதைக் கவனிச்சபிறகு நியாயமானதேன்னு பட்டுச்சு. மகளிடம் இருந்த டிஸ்கவுண்ட் கூப்பான் மூலம் எங்களுக்கு 15 சதம் கழிவும் கிடைச்சது.வனவிலங்குகளுக்கான மருத்துவமனை தனியா இருக்கு. அதைப்பார்க்க 2$ கட்டணம். அதுக்கும் சீட்டு வாங்கிக்கிட்டோம்.


பொதுவா இங்கே உள்ளே நுழைஞ்சதும் எல்லாச் சமாச்சாரங்களையும் வரைபட விளக்கத்துடன் கொடுத்துடறாங்க. அதில் முக்கியமா நாம் கவனிக்க வேண்டியது ஸ்பெஷல் ஷோ நடக்கும் நேரங்கள். அரைமணி, கால்மணி நேரம் இருக்கும் காட்சிகள். ஒரே நேரத்துலே வெவ்வேற ஷோக்கள் நடக்கும்போது எதைப் பார்ப்பது எதை விடறதுன்னு நமக்குக் குழப்பமே வரும். சிலது ஒரு நாளைக்கு ரெண்டு முறைன்னு இருப்பதைக் கவனிச்சு வச்சுக்கிட்டு நேரத்தை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

இப்படித்தான் ஒரு முறை ஸான் டியாகோ போயிருந்தபோது. அங்கே (San Diego Sea World) ஸீ வொர்ல்டில் ஏகப்பட்ட ஷோக்கள் ஒரே நேரத்துலே. அது ஒவ்வொன்னும் ஒரு மூலையில் என்பதால் கையில் வரை படத்தோட ஓடி ஓடி கால்கள் களைச்சுப்போச்சு. முக்கியமா நாம் பார்க்கப்போனது ஷாமு ஷோ. ஷாமு ஒரு திமிங்கிலம். நாம் போன நேரம் இன்னொரு திமிங்கிலத்துக்குப் பிரசவம் நடக்குது. ஹைய்யோ ......... அபூர்வமாக் காணக்கிடைச்சதை இப்படி ஒருக்கா எழுதி இருந்தேன்.
திமிங்கிலத் தாய். 


மகளும் நானுமா, டிஸ்னி லேண்ட் பார்க்கறதுக்குன்னு லாஸ் ஏஞ்சலீஸ்க்குப் போய்க்கிட்டு இருக்கோம். போனோம் வந்தோமுன்னு ஒரே ஒரு வாரம். எனக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிஞ்சு அஞ்சுவாரம்தான் ஆகி இருந்துச்சு. கோபால் இங்கிலாந்துக்குப் போயிருந்தார். அங்கே இருந்து கிளம்பி வந்து எங்களை எல்.ஏ. ஏர்போர்ட்லே சந்திக்கிறதா ஒரு ஏற்பாடு. எல்லாரையும் போல எல்.ஏ. சுத்துனது இருக்கட்டும். இப்பச் சொல்லவந்தது, அங்கிருந்து San Diego வுக்கு ஒரு நாள்போய் வந்தது. 


திமிங்கிலத்தைப் பார்க்கப்போறோமுன்னு குஷியில் இருக்கேன். 'ஸீ வொர்ல்ட்' உள்ளே பலவிதமான ஷோ நடக்கறதாலே,சரியாத் திட்டம் போட்டோமுன்னா ஏறக்குறைய எல்லாத்தையுமே பார்த்துறலாம். ஒவ்வொண்ணுக்கும் இடைவெளி ஒரு 10 நிமிஷம், கூடிப்போனா 15 நிமிஷமுன்னு இருக்கு. ஒரு கோடியில் ஒண்ணைப் பார்த்துட்டு, அதுக்குள்ளே மறு கோடியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஓடணும். கையில் அட்டவணையும், மேப்பும் கொடுத்துடறாங்க.


திமிங்கிலக் குளத்தைத் தாண்டும்போது, என்னமோ ப்ளாஸ்டிக்லே செஞ்ச ராட்சஸ பொம்மை மாதிரி வழுவழுன்னு ஒரு மினுங்கலோடு, ஒரு திமிங்கிலம் நிக்காம படபடன்னு சுத்திச் சுத்தி வந்து தண்ணீரை வாலாலே அடிச்சுக்கிட்டு இருக்கு.ஒரு அஞ்சாறு பேரைத்தவிர அங்கே அப்ப யாரும் இல்லை. அந்தக் குளத்தோட பக்கச்சுவர் எல்லாமே கண்ணாடிச்சுவர் .தண்ணீர் ஒரு கலங்குன அழுக்காத் தெரியுதேன்னு கவனிச்சா............. அந்தத் திமிங்கிலம் குட்டி ஈனப்போகுது. 


அதோட அடிவயித்துப் பகுதியிலே இருந்து ரெண்டு/ மூணடி நீளத்துலே குட்டியின் உடல் பகுதி வெளியே வந்து அப்படியே நீட்டிக்கிட்டு இருக்கு. பிரசவ வேதனையில் துடிக்குதுபோல அந்த அம்மா. வலி பொறுக்கமாட்டாமத்தான் வலைத் தூக்கித்தூக்கி அடிச்சுக்கிட்டு இருக்கு. பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு. நேரமாக ஆக குளத்துத் தண்ணீர் முழுசும் ரத்தச்சிகப்பா ஆயிருச்சு. அதுக்குள்ளே நிகழ்ச்சிக்கு நேரமாச்சு இவுங்க அவசரப்படுத்துனதுலே,மனசில்லா மனசோடு அங்கிருந்து ஓட வேண்டியதாப் போச்சு. 


ரெண்டு மணி நேரத்துக்குப்பிறகு 'ஷாமு' வின் ஷோ பார்க்க அதே இடத்துக்கு வந்தோம். அதுக்குள்ளே, அங்கே எதுவுமே நடக்காதது போல பளிச்சுன்னு சுத்தம் செஞ்சு,புதுத் தண்ணீர நிரப்பி வச்சுருக்காங்க. வெள்ளையும் கருநீலமும் 'பேட்ச்' போட்டமாதிரி Blue whale ரெண்டு நீந்தி விளையாடிக்கிட்டு இருந்துச்சுங்க. விசாரிச்சதுலே தெரிஞ்சுக்கிட்டது, அம்மாவையும் குழந்தையையும் வேற குளத்துக்கு மாத்திட்டாங்களாம். இருவரும் நலமாம். அப்பாடான்னு இருந்துச்சு. 


(இன்னும் கூட எனக்கு ஒரு சந்தேகம்தான். இந்த திமிங்கிலங்கள் ப்ளாஸ்டிக் பொம்மைகளோன்னு) தொடரும்...............:-)

12 comments:

said...

டிஸ்கவரியில் ஸ்டீவ் இர்வினின் நிகழ்ச்சிகளை டைம் கிடைக்கிறப்பல்லாம் விரும்பிப் பார்க்கறதுண்டு. இப்படியொரு முடிவு அவருக்கு வந்துருக்க வேண்டாம். அவரோட கடைசி நிமிடங்களின் வீடியோவை நல்ல விலைக்கு ஒரு நிறுவனம் கேக்குதுன்னும் செய்திகள் சொல்லிட்டிருந்தன.

said...

ஒரே த்ரில்லிங்கா இருக்கு. அஞ்சாறு தடவை படிச்சாத்தான் புரியும் போல.

said...

கண்டுகொண்டோம். மிகுதி பார்க்க வருகின்றோம்...

said...

///இங்கே மோட்டர்வே முழுசுக்கும் இடப்புறம் நல்ல மறைப்பு போல ஃபென்ஸ் போட்டு வச்சுருக்காங்க. எங்க ஊர்ப்பக்கங்களில் ஒரு கம்பிவேலி கூட இருக்காது!//
This is sound barrier. needed for motorways/highways to reduce noise pollution.

said...

ஸ்டீவ் இர்வினின் நிகழ்ச்சிகளை டிஸ்கவரி/நேட்ஜியோவில் பார்த்ததுண்டு.....

பாவம் அவரது இறப்பு பெரிய இழப்புதான்....

அட்டகாசமான பகிர்வு... தொடருங்கள் டீச்சர்.

said...

அந்த tunnel ரொம்ப அழகா இருக்கு,என்னக்கு எப்ப tunnel ல போனாலும் டிராபிக் ஜாம் ஆச்சுன பயமாகிடும்.
Steve இர்வின் பொண்ணு பேசும் அழகே தனி,அப்புறம் நாங்க எப்ப ஷம்மு பார்க்க போனாலும் முதல் இரண்டு வரிசயில் தான் அமருவோம் ;-) நனைவதற்காக

said...

வாங்க அமைதிச்சாரல்.

அந்த இறுதி கணத்தின் வீடியோவை வெளியிடப்போறதில்லைன்னு குடும்பம் சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

இப்போ நிலை என்னன்னு தெரியலை.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அஞ்சாறு தடவையா?

அச்சச்சோ.... அப்படியா குழப்பி இருக்கேன்!!!!

said...

வாங்க மாதேவி.

மிகுதியே ரெண்டு பதிவாத்தான் வருது. ஹெவி டோஸ்:-))))

said...

வாங்க அந்நோன்!

அடடா.... அது சவுண்டு பாரியரா!!!!!

ஆஹா.... அருமையான ஐடியாவா இருக்கே!

தகவலுக்கு நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்க அங்கே புலியைத் தேடிப்போனால்..... நான் அதை இங்கே பார்த்துட்டேன்:--)

said...

வாங்க விஜி.

நாலாவது வரிசை வரைக்குமே நனைச்சுருதே ஷாமு;-))))

டன்னலில் இப்பெல்லாம் நல்ல கண்காணிப்பு இருக்கேப்பா. ட்ராஃபிக் ஜாம் ஆகாது.

எங்க பக்கம் இருக்கும் ஒரு டன்னலில் ரெண்டு பக்கமும் பனி விழுந்து வெளியேறும் வாசல்வழியை மூடிரும். அந்த அபாயத்தால் ஒரே சமயம் வண்டிகளைத் தொடர்ந்து அனுப்பமாட்டாங்க.

குளிர்காலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்குவோம்.